கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/ஆள் தாண்டி ஓடும் போட்டி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

79. ஆள் தாண்டி ஒடும் போட்டி
(பச்சைக் குதிரை)

சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஓடத் தொடங்கும் கோடு ஒன்றைக் குறித்து, அதன்மேல் அவர்களை நான்கு வரிசையாக நிறுத்தி வைத்திருக்கவேண்டும். (ஆட்டம் 77ல் உள்ளது போல்)

நன்றாக இடைவெளிவிட்டு, நான்கு குழுக்களும் முன்பின் வரிசையாக நிற்க வேண்டும்.

ஒரு குழுவில் உள்ளவர்கள், 2 அல்லது 3 அடி இடை வெளிவிட்டு முதலில் நிற்கவேண்டும். பிறகு, குழுவில் உள்ள முதல் ஆட்டக்காரர் குனிந்து, முதுகை சமமாக வைத்து, கணுக்கால்களிரண்டையும் கைகளால் பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும்.

அவர் பின்னே நிற்கும் இரண்டாமவர், மூன்றாமவர், நான்காமவர் இன்னும் எல்லா ஆட்டக்காரர்களும் முதலாம் ஆட்டக்காரர் போலவே, இரண்டு மூன்று அடிகள் தள்ளித் தள்ளிக் குனிந்து (குதிரைபோல) நிறக வேண்டும்.

ஒடுங்கள் என்ற ஆணைக்குப் பிறகு, குழுவின் கடைசி ஆட்டக்காரர்கள், குனிந்து நிற்கின்ற தங்கள் குழுவினரின் முதுகில் கைவைத்துத் தாண்டித் தாண்டிச் சென்று முடிவெல்லைக் கோட்டைக் கடந்து, அங்கிருந்து திரும்பி ஓடிவந்து, முதலாம் ஆட்டக்காரர் குனிந்து நின்ற இடத்தில் நிற்க வேண்டும்

உடனே, முதலாட்டக்காரர் 2, 3 அடி பின்னால் நகர்ந்து கொள்ள, அதேபோல எல்லோரும் தங்கள் பின்னால் நகர்ந்து சரி செய்து, மீண்டும் குனிந்து நிற்க வேண்டும். உடனே குழுவில் கடைசி ஆட்டக்காரராக இப்பொழுது இருப்பவர், முன்னவர் போல் ஆள் மேல் தாண்டித் தாண்டிச் சென்று, எல்லைக் கோடு வரை சென்று திரும்பி வந்து ஓடத் தொடங்கும் கோட்டருகில் நிற்க, எல்லோரும் பின்னால் முன்போலவே நகர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு எல்லோரும் குனிந்து நிற்கும் தங்கள் குழுவினரின் முதுகின் மேல் கைவைத்துத்தாண்டி, முடிவெல்லைக்கோட்டைக் கடந்து வந்து தங்களுக்குரிய இடத்தில் நின்ற பிறகு, அதாவது முதலாவது ஆட்டக்காரர் முன் விளக்கியது போல, தாண்டிக் குதித்து வந்து தன் இடத்தில் நிற்கும் போதுதான், ஆட்டம் முடிவு பெறுகிறது.

முதலாவதாக ஆள் தாண்டிக் குதித்து குதித்து ஓடி ஒடித் தங்கள் இடத்தில் வந்து நிற்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.