கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/ஆள் பந்தாட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

18. ஆள் பந்தாட்டம்

அமைப்பு:

ஆட இருப்பவர்களை இரு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். ஒரு நேர்க்கோடு கிழிக்கப்பட்டிருக்க, ஒரு குழு கோட்டிற்கு இந்தப் பக்கமும், மறுகுழு கோட்டிற்கு அந்தப் பக்கமும் என்றவாறு நின்றுகொண்டு, தாங்கள் நிற்கின்ற பகுதியே தங்கள் பகுதி என்று தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குழு, எதிர்க்குழுவின் பகுதியில், கடைசி இடத்தில் ஒரு நாற்காலி அல்லது ஒரு முக்காலியை நிறுத்தி வைத்து தனது ஆள் ஒருவரை அதன் மேல் நிற்க வைக்க வேண்டும். அதே போல் இன்னொரு குழுவும் செய்து கொள்ள வேண்டும்.

ஆடும் முறை:

இப்பொழுது, நடுவில் உள்ள கோட்டில் இருந்து. ஒரு குழு, தனது குழுவினருக்குள்ளேயே பந்தினைக் கைமாற்றிக் கொண்டு, முன்னேறி எதிர்க்குழு பகுதியில் உள்ள தன் ஆளைப் பார்த்து, பந்தை எறிந்து விடவேண்டும். எறியப்பெற்ற பந்தை, ஏறிநிற்கும் அந்த ஆள் பிடித்துக்கொண்டால் பிடித்த குழுவுக்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும்.

குறிப்பு:

பந்தைத் தரையில் போடாமல் தான் குழுவினர் பந்தைக் கைமாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

பந்தைத் தங்களுக்குள் வழங்கலாம். ஆனால் பந்தை எடுத்துக்கொண்டு ஓடக்கூடாது.

பந்தைப் பிடித்த உடனேயே, தன் குழுவினருக்கு வழங்கிவிட வேண்டும். பந்தைப் பிடித்துக் கொண்டு நடப்பதோ, ஓடுவதோ, தரையில் தட்டுவதோ கூடாது.

எதிர்க்குழுவினர் பந்தைத் தடுக்கலாம். கையிலே வைத்திருந்தால், பிடுங்கவும் முயற்சிக்கலாம். ஆனால் குத்த முயற்சிக்கக் கூடாது.

ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் யார் அதிக வெற்றி எண்களை எடுக்கிறாரோ, அக் குழுவினரே வெற்றி பெற்றவராவார்.