கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/எறிப் பிடி போட்டி

விக்கிமூலம் இலிருந்து

88. எறிப் பிடி போட்டி

எட்டு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாக ஆட்டக்காரர்களைப் பிரிக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு குழுவையும் 1,2,3,4,5,6,7,8 என்று குறிக்க வேண்டும்.

பிரித்த குழு அங்கத்தினர்களை எதிரெதிராக மூன்று அடி தூரத்தில் முன்புறமாக நிற்கச் செய்ய வேண்டும்.

அதாவது, 1வது குழுவுக்கு முன்னால் 5வது குழு 2–6, 3-7, 4–8 என்றவாறு குழுக்கள் நிறுத்தப்படவேண்டும்.

முதலாவது குழுவில் உள்ள முதலாட்டக்காரர், எதிரில் நிற்கும் 5-ம் குழுவிலுள்ள முதலாட்டக்காரருக்குப் பந்தை எறிந்து, எறிந்ததும் உட்கார்ந்து கொள்ளவேண்டும். பந்தைப் பிடித்தவர் 1-ம் குழுவிலுள்ள இரண்டாவது ஆட்டக்காரருக்கு பந்தை எறிந்து, எறிந்ததும் உட்கார்ந்து விடவேண்டும்.

பந்தைப் பிடிப்பவர் 5-ம் குழுவிலுள்ள 2-ம் ஆட்டக்காரருக்கு இப்பொழுது பந்தை எறிந்து, எறிந்ததும் அமர்ந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு, பந்தைப் பிடித்துக் கொண்டு, எறிந்தவர் உட்கார்ந்து கொள்ள, கடைசியாக நின்று கொண்டு பந்தைப் பிடித்திருக்கும் 5-ம் குழு ஆட்டக்காரர் நின்று கொண்டே பந்தைப் பிடித்ததும், உட்கார்ந்திருக்கும் 1-ம் குழுவின் கடைசி ஆட்டக்காரருக்கு எறிய, அவர் எழுந்து நின்று பந்தைப் பிடித்துக் கொண்டு, 5-ம் குழுவில் கடைசி ஆட்டக் காரருக்கு முன் னால் உட்கார்ந்திருப்பவருக்கு எறிய, அவர் எழுந்து நின்று பந்தைப் பிடித்துக்கொண்டு, நிற்க, இப்படியாக எந்தக் குழு ஒருமுறை பந்தைப் பிடித்து உட்கார்ந்து, மீண்டும் ஒரு முறை பந்தைப் பிடித்து எழுந்து நிற்கிறதோ, அந்தக்குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு: பிடிக்கும் பொழுது பந்தைத் தவற விடுபவரே ஓடிப்போய் பந்தை எடுத்து வரவேண்டும். எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைத்து, முதலில் வந்தால்தான் போட்டியில் ஒரு முழு வெற்றி பெறமுடியும்.