கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கோழியும் குஞ்சும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5. கோழியும் குஞ்சும்

அமைப்பு:

முன் ஆட்டம் போலவே, விளையாட இருப்பவர்கள் எல்லோரும் வட்டமாக நின்று கொண்டிருக்க வேண்டும். வட்டத்திற்குள்ளே 5 பேர் மட்டும் ஒருவர் இடுப்பை ஒருவர் (குழந்தைகள் ரயில் விளையாட்டு ஆடுவது போல) சங்கிலி கோர்த்தது போல பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். வட்டத்தில் நிற்பவர்களுள் ஒருவரிடம் பந்து இருக்க வேண்டும்.

ஆட்டத்தின் நோக்கம்:

பந்தை வைத்திருப்பவர், சங்கிலி கோர்த்துள்ளது போல் நிற்கும் ஐவரில், கடைசியாக நிற்பவரைக் குறிபார்த்து சரியாக (இடுப்பின் கீழ் பகுதிகளில்) அடிக்க முயல வேண்டும். வரிசையின் முன்னால் நிற்பவரோ வளைந்து வளைந்து ஓடி, பின்னால் உள்ளவரை பந்து தாக்காதவாறு தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஆடும் முறை:

பின்னால் நிற்பவரும் முன்னால் ஓடுபவர்களுக்கு ஏற்ப நெளிந்தும் வளைந்தும் தப்பித்துக் கொள்ளலாம். பந்து கடைசி ஆளின் மீது பட்டுவிட்டால் அவர் வெளியேற்றப்படுவார். அவர் வெளியேறி வட்டத்தில் நிற்பவராக மாறி ஆட வட்டத்திலிருந்து ஒருவர் தடுத்தாடும் தலைமை ஆளாகவும், தடுத்தாடியவர் இரண்டாம் ஆளாக மாற நான்காவது ஆளாக இருந்தவர் பந்தடி படும் கடைசி ஆளாக மாற, இவ்வாறு ஆட்டம் மீண்டும் தொடரும்.

எக்காரணத்தை முன்னிட்டும், சங்கிலித் தொடர்பு அறுபடக்கூடாது. அறுபடுவதற்கு யார் காரணமாக இருந்தாலும், அவர் ஆடும் ஆட்டத்தின் வாய்ப்பையிழந்து, வட்டத்தில் நிற்கும் ஒருவராகப் போய்விட, மீண்டும் அதிலிருந்து ஒருவர் வட்டத்திற்குள் ஆடும் ஒருவராக வர ஆட்டம் தொடங்கும், தொடரும்.

(கோழி, பருந்திடம் தன் குஞ்சுகளைப் பாதுகாக்கப் போராடுவது போல் இந்த ஆட்டம் இருப்பதால்தான், கோழியும் குஞ்சும் என்று பெயர் பெறலாயிற்று)