கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/தலைவரும் தொண்டரும்
7. தலைவரும் தொண்டரும்
அமைப்பு:
ஆடுவோர் முப்பது நாற்பது பேர்களுக்குள் இருந்தால், 30 அடி சுற்றளவுள்ள ஒரு பெரிய வட்டம் ஒன்று சுண்ணாம்புக் கோட்டின மூலம் குறித்திருக்க வேண்டும். வட்டத்தின் மையத்தில் 5 பேர் அங்குமிங்கும் அப்படி இப்படி நகர்ந்து இயங்குவதற்கு ஏதுவாக ஒரு சிறிய வட்டமும் போட்டிருக்க வேண்டும்.
ஆட்டத்தின் நோக்கம்:
உள்ளே நிற்கும் 5 பேர்களில் ஒருவர் தலைவராகவும், மற்ற நான்கு பேர்கள் தொண்டர்களாகவும் அந்த வட்டத்திற்குள் ஆடுவோராக இருப்பார்கள். வட்டத்திற்கு வெளியே நிற்பவர்கள், பந்தினால், தொண்டர்களாகிய அந்த நான்கு பேரையும் அடித்தாட முயல வேண்டும். தொண்டர்கள் மேல் பந்து பட்டுவிடாமல், தலைவர் முன்னே வந்து, நின்று, பந்தைத் தடுத்து விடுவார்.
ஆடும் முறை:
தலைவர் மீது பந்துபட்டால், அவர் வெளி யேற்றப்பட மாட்டார். அதே நேரத்தில், தொண்டர்களில் ஒருவர் மேல் பந்து பட்டால் அவர் உடனே வட்டத்தை விட்டு வெளியேறி விட வேண்டும். தலைவரும், வரும் பந்தைத் தடுக்கலாமே ஒழிய, பிடிக்கக் கூடாது.
தொண்டர்கள் நால்வரும் வெளியேற்றப்படும் வரை ஆட்டம் வளரும், பிறகு தலைவர் மட்டுமே இருப்பதால், அவரையும் வெளியே அனுப்பி மற்ற 5 பேர்களை அழைத்து முன்போலவே தலைவர், தொண்டர்களாகப் பிரிந்தாடச் செய்ய வேண்டும்.