கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நேருக்கு நேர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8. நேருக்கு நேர்

அமைப்பு:

10 அல்லது 15 அடி ஆரமுள்ள இரண்டு வட்டங்கள் எதிரெதிரே அமைந்திருப்பது போல, சுண்ணாம்புக் கோட்டினால் முதலில் குறிக்க வேண்டும். அல்லது வட்டத்திற்கு பதிலாக அதே சம அளவுள்ள இரண்டு சதுரங்களையாவது ஆடுகளமாக அமைந்திருக்க வேண்டும். இரண்டு பகுதிகளுக்கும் நடுவில் ஒரு நேர்க்கோடு இருந்து பிரிப்பது போல அமைந்திருப்பதாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து, ஆட வந்திருப்பவர்களை சம எண்ணிக்கை யுள்ள இரு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு வட்டம் அல்லது சதுரத்திற்குள் நிற்க வைக்க வேண்டும். ஆட்டத்திற்குள் பயன்படும் பந்தை, ஏதாவது ஒரு குழு வைத்திருக்கலாம்.

ஆட்டத்தின் நோக்கம்:

பந்தை வைத்திருக்கின்ற குழுவானது, தமது எதிரிலுள்ள வட்டத்துள் இருக்கும் ஆட்டக்காரர்களைப் பார்த்து பந்தை தூக்கியெறிந்து, அவர்கள் மேல் படும்படியாக ஆடுவார்கள். பந்து தொட்ட அனைவருமே ஆடும் வட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

பிறகு, அந்த குழு அங்கிருந்தே அடுத்த வட்டத்திலுள்ள ஆட்டக்காரர்களைப் பார்த்து, பந்தால் அடிக்கத் தொடங்கும் இவ்வாறு மாறிமாறி, மாற்றி மாற்றி, பந்தைத் தூக்கியெறிந்து தாக்கியடித்து எந்தக் குழு எதிர்க் குழுவிலுள்ள அனைவரையும் விளையாட்டிலிருந்து. வெளியேற்றி விடுகிறதோ அந்த குழுவே இறுதியில் வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும்.

ஆடும் முறை:

ஒருமுறை தாக்குவதற்காகத் தூக்கி வீசி எறியப்பட்ட பந்தானது, எத்தனை பேர்கள் மேல் பட்டாலும் பந்துபட்ட அனைவருமே வெளியேறிவிடவேண்டும். பந்து அவர்கள் மேல் பட்டாலும், படாவிட்டாலும், முதலில் எறிந்த குழுவினருக்கு எதிர்த்தாற்போல உள்ள் குழுவிற்கே அடுத்ததாக எறியும் வாய்ப்பு போய் சேரும்.

யார் மேலும் பந்து படாது போனால், அதிக தூரம் சென்றுவிடுமல்லவா! அதை எடுத்து வந்து ஆட்டத்தைத் தொடங்க, அதிக நேரமும் ஆகிவிடுமே! அதனால் ஆட்டத்தில் கிடைக்கும் விறுவிறுப்பும் வேடிக்கையும் குறைந்து போகுமே!

அதற்காகவே, வெளியேற்றப்பட்ட அந்தந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள், தங்கள் குழுவுக்குப் பின்னால் நின்று கொண்டு, யார் மேலும் படாமல் வெளியே வருகின்ற பந்தைப் பிடித்துத் தங்கள் குழுவினரிடம் தந்து, அடித்தாடச் செய்யவேண்டும்.

பந்திடமிருந்து தப்புவதற்காக, வட்டத்தை விட்டு வெளியே செல்கின்றவர் கூட, ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள்.