கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/தொட்டால் அடிப்பேன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9. தொட்டால் அடிப்பேன்

அமைப்பு:

ஒரு நீண்ட கோட்டை, கிழக்கு மேற்காக அல்லது வடக்குத் தெற்காக இருப்பது போல் கிழித்து, அந்தக் கோட்டிற்கு இணையாக இருப்பது போல, இரு பக்கங்களிலும் 10 அடி தூரத்தில் ஒவ்வொரு நேர்க்கோட்டைக் குறித்திருக்க வேண்டும்.

குறிக்கப்பட்ட ஒவ்வொரு கோட்டின் மேலும் (நடுக்கோட்டில் அல்ல) இரு சம எண்ணிக்கையில் பிரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு குழுவும் நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன், அந்தந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 1-லிருந்து ஒரு எண்ணைத் தந்திருக்கவும் வேண்டும்.

மையக் கோட்டின் மத்தியில், இரு பந்துகளை வைத்திருப்பதுடன், நடுவர் அவற்றின் அருகே நிற்க வேண்டும்.

ஆட்டத்தின் நோக்கம்: விளையாட்டை நடத்த இருப்பவர் ஒரு எண்ணைக் குறிப்பிட்டு அழைத்தவுடன், (சான்றாக 6 என்று அழைத்தால், 6 என்ற எண்ணுள்ள இரு குழுவில் இருக்கும் இரண்டு பேரும்) அந்தக் குறிப்பிட்ட எண்ணுக்குரியவர்கள் பந்துகளை நோக்கி ஓடிவர வேண்டும்.

ஆட்டத்தின் நோக்கமானது, அந்த பந்துகளில் ஒன்றை எப்படியாவது கவர்ந்து கொண்டு, திரும்பித் தனது இடத்திற்கு ஓடி வந்து விடுவதுதான்.

ஆடும் முறை:

எதிர்க் குழுவினைச் சேர்ந்த இருவரும். பந்துகளைச் சுற்றி சுற்றி வந்து கொண்டேயிருக்க, இருவரில் ஒருவர் ஏமாந்திருக்கும் சமயம் பார்த்து, பந்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடி வருவார். அப்பொழுது ஏமாந்துபோன இன்னொருவர், மீதியுள்ள பந்தை எடுத்து, பின்னால் ஓடிச் சென்று, பந்துடன் ஓடுபவரைப் பந்தால் அடிக்க வேண்டும்.

வீசிய பந்து அவர்மீது பட்டுவிட்டால், அடிபட்டவர் தோற்றவராகிறார். அடிபடாவிட்டால் பந்தெடுத்து வந்தவரே வெற்றி பெறுகின்றார். வெற்றி பெற்றவர் குழு ஒரு வெற்றி எண்ணை (Point) பெறுகிறது.

ஆட்ட இறுதியில் அதிக வெற்றி எண்களைப் பெறுகின்ற குழுவே வெற்றி பெறும்.

முன்னர் விவரித்தது போலவே, எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்குமாறு, எண்களைக் கூவியழைத்து ஆடச் செய்யவேண்டும்.

குறிப்பு:

இருந்த இடத்தில் நின்றுகொண்டே, பந்தை வீசியெறிந்து, பந்துடன் போவோரை அடிக்கலாம். அல்லது அவர் கூடவே பந்துடன் ஓடி, குறிபார்த்து அடிக்கலாம். ஆனால், பந்தில்லாமல், ஓடுவோரைத் தொட்டால் தவறு, அவர் பந்துடன் ஒடும்பொழுதுதானும் ஒரு பந்தை (பிறகு) எடுத்துக்கொண்டு, தன்னிடத்திற்கு ஓடி வருவதும் தவறு; அது ஆடும் முறையுமல்ல.