கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/தொட்டால் ஒட்டி
26. தொட்டால் ஒட்டி
அமைப்பு:
எல்லா ஆட்டங்களையும் விட, இதற்கு கொஞ்சம் அதிக அளவு பரப்பமைந்த ஆடுகளம் இருந்தால் வசதியாக இருக்கும்.
ஆடுவதற்கென்று தேவையான அளவு ஓர் ஆடுகள எல்லையை அமைத்துக் கொள்ளவும். எல்லைக்குள்ளே ஆடுதற்கு வந்தவர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்க, எல்லைக்கு வெளியே ஒருவர் தனியே நின்றுகொண்டிருப்பார்.
ஆடும் முறை:
வெளியிலே நிற்பவர், ஆடலாம் என்ற சைகை கிடைத்தவுடன், உள்ளே நிற்பவர்களை ஓடிவந்து தொட முயற்சிக்க வேண்டும்.
அவரது முயற்சியில் அவர் வெற்றி பெற்று, யாராவது தொடப்பட்டு, சிக்கிக் கொண்டால். முன்கூறியுள்ள ஆட்டங்களைப் போல, தொடப்பட்டவர் வெளியில் போய் விடவேண்டுமென்பது அவசியமில்லை.
தொட்டவரும், தொடப்பட்டவரும், அதே இடத்தில் நின்று, ஒன்று சேர்ந்து கைகளைக் கோர்த்துக்கொண்டு, அங்கிருந்தே இணைபிரியாமல், இருவராக ஓடி மற்றவர்களைத் தொடவேண்டும்.
அந்த இரட்டையர் யாரையாவது தொட்டுவிட்டால், அவரும் இவர்களோடு சேர்ந்து மற்றவர்களைத் தொட முயல வேண்டும். இவ்வாறு தொட்டால் ஒட்டிக் கொள்பவர்களாக, எல்லோரும் கூடி, தொடப்படாதவர்களைத் துரத்தி இறுதிவரை ஆடிவர வேண்டும்.
குறிப்பு:
சேர்ந்துகொண்டு, விரட்டுபவர்கள், கைகள் பிரிந்துவிட்டபோது யாரையாவது தொட்டால், அது தவறான ஆட்டமாகும். மீண்டும் கைகளைக் கோர்த்தபடியேதான் விரட்ட முயல வேண்டும்.