கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/மேலாளரும் மெய்க்காப்பாளரும்

விக்கிமூலம் இலிருந்து

I. பந்தோடு விளையாட்டுக்கள்


1. மேலாளரும் மெய்க்காப்பாளரும்

அமைப்பு:

விளையாட்டில் கலந்து கொள்ள வந்திருப்போர் அனைவரும் (குறைந்தது 30 பேரிலிருந்து 40 பேர்கள் வரை இருந்து ஆடுவது சிறந்தது) வட்டமாகக் கைகோர்த்து முதலில் நின்று, பிறகு கைகளை விடுவித்துக் கொண்டு, தனித்தனியாக அவரவர் இடத்தில் நின்று கொண்டிருக்க வேண்டும். வட்டத்தின் மத்தியில் ஒரு முக்காலியோ அல்லது ஒரு நாற்காலி போன்ற உயர்ந்த பகுதியோ வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வைக்கப்பட்டிருக்கும் முக்காலி அல்லது உயர்ந்த இடத்தில் ஒருவரை ஏற்றி நிறுத்த வேண்டும். மேலே நிற்கும் அவருக்கு ஒரு மெய்க் காப்பாளர், அவரின் பக்கத்தில் தரையில் நின்று கொண்டிருக்க வேண்டும். வட்டத்தில் நிற்பவர் ஒருவரின் கையில் பந்திருக்கும்.

ஆட்டத்தின் நோக்கம்:

வட்டத்தில் நிற்பவர்களின் நோக்கமானது, முக்காலியின் மேலேறி நிற்கும் மேலாளரைப் பார்த்து, (இடுப்பிற்குக் கீழ்) அடிக்க வேண்டும், அங்கு நிற்கும் மெய்க் காப்பாளரின் பணி என்னவென்றால், தனது மேலாளர் மீது பந்து படாதவாறு தடுத்துவிட வேண்டியதுதான்.

மெய்க்காப்பாளர், குறிபார்த்து எறியப்படுகின்ற பந்தைத்தன் மேலாளரைக் காக்கும் பொருட்டுத் தடுக்கலாம், தட்டலாம்; ஆனால், பந்தைக் கைகளால் பிடிக்கக் கூடாது. அதே சமயத்தில் கீழே விழுந்த பந்தை எடுக்கும் வட்டத்தில் நிற்பவர்கள். தமது இடத்தைவிட்டு, உட்புறமாக வந்து எடுத்து அங்கிருந்தே ஆடக்கூடாது.

ஆடும் முறை:

பந்து மேலாளர் மீது படாத வரையில் ஆட்டம் தொடரும். மேலே கூறியுள்ள முறைப்படி பந்து மேலாளர்மீது பட்டு விட்டால். ஆட்டம் நின்றுவிடும், மெய்க்காப்பாளராக ஆடியவர் மேலாளராகி நிற்க, மேலாளர் வட்டத்தில் போய் நிற்க, வட்டத்திலிருந்து ஒருவர் மெய்க் காப்பாளராகிவிட, ஆட்டம் முன்போலவே மீண்டும் தொடரும். மேலாளரும் தடுத்துக் கொள்ளலாம்.