உள்ளடக்கத்துக்குச் செல்

கெடிலக் கரை நாகரிகம்/ஆறுகளின் தோற்றமும் நீளமும்

விக்கிமூலம் இலிருந்து
2. ஆறுகளின் தோற்றமும் நீளமும்


மலைப்பகுதியில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் உருகுவதாலும், கீழிருந்து ஊற்று நீர் மேலெழுவதாலும், பெருமழை பெய்வதாலும் ஆங்காங்கே ஆறுகள் தோற்றம் எடுத்து, சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் சிறியனவும் பெரியனவுமாகிக் கடலை நோக்கி ஓடுகின்றன.

பெரும்பாலும், ஆங்காங்கே பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து ஆறுகளின் அகலமும் நீளமும் அமையும். அடுத்தபடியாக, தம்மொடு வந்து கலக்கும் அருவிகள், கால்வாய்கள், ஓடைகள், துணையாறுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும் உருவத்தையும் பொறுத்தும் ஆறுகளின் அகல நீளங்கள் அமைவதுண்டு.

ஓரிடத்திலிருந்து கடலை நோக்கிச் செல்லச் செல்ல தரை சரிவாயிருக்கும். அதனாலேயே கடலை நோக்கி ஆறுகள் ஓடுகின்றன. ‘பள்ளத்தைக் கண்ட வெள்ளம் போல....’ என்பது பழமொழியன்றோ? எனவே, கடலுக்கு அண்மையில் தோன்றும் ஆறுகள் நீளத்தில் குறைவாயிருப்பதும், கடலுக்கு மேலே வெகு தொலைவில் தோன்றும் ஆறுகள் நீளமாயிருப்பதும் இயல்பு ஐக்கிய அமெரிக்காவில் ஓடும் ‘மிசிசிப்பி’ என்னும் ஆறு [1] 4240) கல் நீளம் உள்ளது. உலகிலேயே மிகவும் நீளமான ஆறு இதுதான். இந்தியாவில் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் பொருநை என அழைக்கப்படும் தாமிரவருணி ஆறு 75 கல் நீளமே உடையது. இவ்விரண்டு ஆறுகளின் நீளத்திலும் இவ்வளவு வேறுபாடு இருப்பதற்குக் காரணம் என்ன?

மிசிசிப்பி ஆறு அமெரிக்காவின் வடமேற்கில் ராக்கி மலைப் பகுதியிலிருந்து தோன்றி, தென் கிழக்கில் மெக்சிகோ வளைகுடாவில் வந்து விழுகிறது. அது தோன்றும் இடத்திற்கும் முடியும் இடத்திற்கும் இடையே உள்ள பகுதி மிகமிக நீளமானது. அவ்விடைப் பகுதியிலே ஐக்கிய அமெரிக்காவின் பல நாடுகள் உள்ளன. எனவே, மிசிசிப்பி ஆறு அனுமார் வால்போல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தியாவிலோ, வடக்கேயிருந்து, தெற்கே வரவர நிலப்பகுதியின் அகலம் சுருக்கிக்கொண்டே வருகிறது, இந்தியாவின் தெற்குக் கோடி தமிழ்நாடு, கேரளம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தரைப்பகுதி கீழ்கடலை நோக்கிச் சரிவாயுள்ளது. கேரளத்தின் தரைப்பகுதி மேல்கடலை நோக்கிச் சரிந்துள்ளது. இரு கடல்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியின் நீளம் மிகக் குறைவு, ஒன்றோடொன்று மிக நெருங்கி வந்து கொண்டிருக்கின்ற இரு கடல்களுக்கிடையே, தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியாகிய திருநெல்வேலி மாவட்டத்திற்கும் கேரள நாட்டிற்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது. அம்மலையின் மேற்கே தோன்றும் ஆறு மேல் கடலை நோக்கி மலையாள நாட்டிலும், அம்மலைக்குக் கிழக்கே தோன்றும் ஆறு கீழ்கடலை நோக்கித் தமிழ் நாட்டிலும் பாய்வது இயல்பு, அந்த முறையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த பெரிய பொதிகை என்னும் அகத்தியர் மலையில் தோற்றங் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடி, கிழக்கே மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. ஒரு நாட்டின் ஒரு மாவட்டத்திற்குள்ளேயே தோன்றி முடியும் ஓர் ஆற்றின் நீளம் மிசிசிப்பியைப்போல் எவ்வாறு நீளமாயிருக்கமுடியும்?

இதுகாறும் கூறியவற்றால், நிலப்பகுதி வரவரச் சுருங்கிக்கொண்டுபோகும் தமிழகத்தின் ஆறுகள், உலக ஆறுகள் பலவற்றைப்போல் மிகமிக நீளமாயிருக்க முடியாது என்பது தெளிவாகும். எனவே, தமிழ்மக்கள், ஆறுகளைப் பொறுத்தமட்டில், ‘நாம் உலகினரோடு போட்டி போட முடியவில்லையே’ என்று ஏங்கவேண்டியதில்லை.

தமிழக ஆறுகளுள் கெடிலம்

தமிழகத்தில் ஓடும் ஆறுகளுக்குள்ளேயே 75 கல் தொலைவு ஓடும் தாமிரவருணியைவிட 165 கல் தொலைவு ஓடும் வையை ஆறு நீளமானது; அதனினும், 230 கல் தொலைவு ஓடும் பாலாறு நீளமானது; அதைவிட, 250 கல் தொலைவு ஓடும் தென்பெண்ணையாறு நீளமானது; அதைக்காட்டிலும், 480 கல் தொலைவு ஓடும் காவிரியாறு நீளமானது. இவ்வேறுபாடுகட்குக் காரணம் என்ன?

தாமிரவருணியும் வையையும் தமிழ்நாட்டிலேயே தோன்றித் தமிழ் நாட்டிலேயே முடிபவை. பாலாறும் தென்பெண்ணையும் தமிழ்நாட்டுக்கு அண்மையில் மைசூர் நாட்டுக் ‘கோலார்' வட்டத்தில் தோன்றித் தமிழ்நாட்டில் வந்து முடிபவை; எனவே, இவையிரண்டும் முன்னைய இரண்டினும் நீளமாயுள்ளன. காவிரியோ, குடகுநாட்டில் தோன்றி மைசூர்நாட்டுள் புகுந்து கடந்து தமிழ்நாட்டில் வந்து முடிகிறது; எனவே, இது, முன்னைய நான்கினும் மிகவும் நீளமாயுள்ளது.

தாமிரவருணி, வையை என்னும் ஈராறுகளை மட்டும் எடுத்துக்கொள்ளினும், இரண்டுமே மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றினாலுங்கூட, வையையாறு மதுரை மாவட்டத்தில் தோன்றி இராமநாதபுர மாவட்டத்தில் முடிகிறது. தாமிரவருணியோ, திருநெல்வேலி மாவட்டத்தில் தோன்றி அதே மாவட்டத்திலேயே முடிந்து விடுகிறது. அதனால்தான், வையையினும் தாமிரவருணி நீளத்தில் குறைவாயுள்ளது.

இதிலிருந்து, இந்தியப் பெருநிலத்திலேயே, அகன்ற வடபகுதியில் உள்ள ஆறுகளினும் குறுகிய தென்பகுதியில் உள்ள ஆறுகளின் நீளம் குறைவு என்பதும், தென் பகுதியிலும் பல மாநிலங்களில் ஓடும் ஆறுகளினும் ஒரு மாநிலத்தில் மட்டும் ஓடும் ஆறுகள் நீளக் குறைவானவை என்பதும், ஒரு மாநிலத்திற்குள்ளும் பல மாவட்டங்களில் ஓடும் ஆறுகளைவிட ஒரு மாவட்டத்தில் மட்டும் ஓடும் ஆறுகளின் நீளம் குறைவு என்பதும் புலப்படும். புலப்படவே, ஒரு மாவட்டத்தின் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக்கோடிவரையும் ஓடிக் கடலில் கலக்கும் தாமிரவருணி போன்ற ஆற்றைக் காட்டிலும், ஒரு மாவட்டத்தின் நடுப்பகுதியில் தோன்றிக் கடலில் கலக்கும் ஓர் ஆறு மிகச் சிறியதாய்த்தான் இருக்கமுடியும் என்பதும் உடன் புலனாகும். அப்படி உள்ள ஓர் ஆறுதான் ‘கெடிலம்’ என்னும் ஆறு.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

[2]'உடல் சிறியர் என்றிருக்கவேண்டா’ என்பது ஔவைமொழி. [3]உருவுகண்டு எள்ளாமை வேண்டும்’ என்பது வள்ளுவர் வாய்மொழி. இம்மொழிகள் கெடில ஆற்றிற்கு மிகவும் பொருந்தும். ‘மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது, என்றபடி, கெடிலம் உருவத்தில் - நீளத்தில் - சிறியதாயிருப்பினும், நீர்ப்பாசனப் பெருமை, அணைக்கட்டுப் பெருமை, துறைமுகப் பெருமை, போக்குவரவுப் பெருமை, வாணிகப் பெருமை, மண்வளப் பெருமை, பண்ணைப் பெருமை, தொழில் பெருமை, ஊர்ப் பெருமை, தலைநகர்ப் பெருமை, மலைப் பெருமை, கடல் பெருமை, மக்கள் பெருமை, அரசியல் பெருமை, ஆட்சிப் பெருமை, கோயில் பெருமை, நீராடல் பெருமை, பாடல் பெருமை, இலக்கியப் பெருமை, கல்விப் பெருமை, கலைப் பெருமை, வரலாற்றுப் பெருமை, நாகரிகப் பெருமை முதலிய அனைத்துப் பெருமைகளும் பெற்று மிளிரும் ஓர் உயிர்ப்பு உள்ள (சீவநதி) ஆறு ஆகும்.

மிசிசிப்பி ஆற்றையும் நைல் ஆற்றையும் உலகத்தார்க்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. கங்கையைப் பற்றியோ, பிரம்மபுத்திராவைப் பற்றியோ இந்தியர்க்கு எடுத்துரைக்க வேண்டியதில்லை. காவிரியையோ பெண்ணையாற்றையோ தமிழ்மக்கட்கு அறிமுகம் செய்யவேண்டியதில்லை இவ்வாறுகள் எல்லாம் பரவலாக விளம்பரம் பெற்றிருப்பவை, ஆனால், பல்வகைச் சிறப்புக்கள் நிறைந்தும் இருக்குமிடம் தெரியாமல் அடக்கமாய்த் தன்பணியை ஆற்றிக்கொண்டிருக்கிற கெடிலம் ஆற்றைத் தமிழ்மக்கட்கு - உலகினர்க்கு விரிவாக அறிமுகம் செய்யாதிருப்பது தவறாகும். எனவே, தமிழக ஆறுகட்கிடையே கெடிலத்தின் நிலையை ஆய்ந்து கண்ட நாம், உலக ஆறுகட்கிடையே கெடிலத்தின் நிலையையும் ஆய்ந்து அதன் தகுதியைக் கணித்து மதிப்பிட வேண்டும்.

உலக ஆறுகளுள் கெடிலம்

குறுகிய தொலைவே ஓடும் கெடிலம், ஏறக்குறைய 70கல் (112கி.மீ.) நீளமே உடையது. உலக ஆறுகளை நோக்கக் கெடிலத்தின் நீளமும் நீர்வசதியும் மிகமிகக்குறைவு என்பது பின் வரும் அட்டவணையால் புலனாகும். அட்டவணையில் முதலில் ஆறுகளின் பெயர்களும், அடுத்து அவற்றின் நீளமும் (மைல் கணக்கில்), பின்னர் அவை பாயும் வடிகால் நிலங்களின் பரப்பும் (சதுரமைல் கணக்கிலும் ஏக்கர் கணக்கிலும்), இறுதியாக அவற்றின் சராசரி ஒழுக்கும் முறையே கொடுக்கப்படும். அட்டவணையைத் தொடர்ந்து, கெடிலத்தின் பெருமையை நிலைநாட்டு முகத்தான் ஒருசிறிய ஆராய்ச்சியும் செய்யப்படும். இனி, ஆறுகளின் அட்டவணை வருமாறு:

ஆறுகள் மைல் நீளம் வடிநிலப் பரப்பு (000) ச.மைல் சராசரி ஒழுக்கு (000-ச.அடி செக)
அமேசான் (தென் ஆப்பிரிக்கா) 4000 2368 3300
காங்கோ (ஆப்பிரிக்கா) 2900 1430 4500
பரானா (அர்சன்டைனா) 2200 1100 970
யாங்சீ (சைபீரியா) 3200 700 800
மிசிசிப்பி (வட அமெரிக்கா) 4240 1258 700
எலிசி (சைபீரியா) 3240 968 700
பிரம்மபுத்திரா (இந்தியா) 1970 280 620
லேனா (சைபீரியா) 2850 920 585
கங்கை (இந்தியா) 1860 419 530
மெக்கன்சி (கானடா) 2510 682 500
ஆப்-இர்ட்டிஷ் (சைபீரியா) 3550 1122 400
வால்கா (ஐரோப்பா) 2300 563 300
நைல் (ஆப்பிரிக்கா) 4160 1120 56
கொலராடோ (வட அமெரிக்கா) 1,700 244 23
காவிரி (தமிழ்நாடு) 480 28000 சதுர மைல்
தென்பெண்ணை (தமிழ்நாடு) 250
பாலாறு (தமிழ்நாடு) 230 50000 ஏக்கர்
வைகை (தமிழ்நாடு) 165
கொள்ளிடம் (தமிழ்நாடு) 94
தாமிரவர்ணி (தமிழ்நாடு) 75 1750 சதுர மைல்
கெடிலம் (தமிழ்நாடு) 70 10,000 ஏக்கர்

மேலுள்ள அட்டவணையில் கெடிலத்திற்கு மேலே இருபது ஆறுகளைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நோக்கக் கெடிலத்தின் மிக எளிய தோற்றம் தெரியவரும்.

இஃதென்ன புதுமை! இந்த இருபது ஆறுகளுள் முதல் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ள அமேசான், காங்கோ, மிசிசிப்பி போன்ற ஆறுகளைப் பற்றி நூல் எழுதுபவர்கள் வேண்டுமானால், இப்படி ஓர் அட்டவணையைத் தந்து, “இதோ பாருங்கள்! உலக ஆறுகளை நோக்க இந்த ஆறு எவ்வளவு பெரியது - சிறந்தது என்று அறிந்துகொள்ளுங்கள்!” என்று கூறித் தாங்கள் எடுத்துக்கொண்ட ஆற்றின் பெருமையை வானளாவப் புகழலாம். இதுதான் இயற்கை. ஆனால், கெடில ஆற்றைப் பற்றி நூல் எழுதப் புகுந்தவர், இப்படி ஒர் அட்டவணையைக் காட்டி, கெடிலத்தை அட்டவணையின் அடியில் போட்டு இழிவுபடுத்தி அல்ல அல்ல - சிறுமைப்படுத்திக் காட்டலாமா?

அட்டவணையைக் கூர்ந்து நோக்குவோர்க்கு இன்றிய மையாத ஒர் உண்மை புலப்படும். அதற்காகவே இங்கே இந்த அட்டவணை கொடுக்கப்பட்டது. அட்டவணையின் முற்பகுதியில் உள்ள (தமிழ் நாட்டு ஆறுகள் அல்லாத) பதினான்கு உலக ஆறுகளைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். இந்தப் பதினான்கு ஆறுகளின் பெயர்களையும், அமேசான் முன்னதாகவும் கொலராடோ பின்னதாகவுமாக, இந்த வரிசையில் [4]அறிஞர்கள் அமைத்திருப்பது ஏன்? இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நீளத்தைக் கொண்டு மட்டும் ஆறுகளின் பெருமை சிறுமையைக் கணித்து விடக்கூடாது; மற்றத் தகுதிகளையும் நோக்கியே கணிக்க வேண்டும். பதினான்கனுள் முதலில் வைக்கப்பட்டுள்ள அமேசான் ஆறு 4000 கல் (6400கி. மீட்டர்) நீளம் உடையது. ஆனால், இதனினும் மிகுதியாய், முறையே 4240 கல் (6784 கி. மீட்டர்) நீளமும் 4160 கல் (6656 கி. மீட்டர்) நீளமும் உடைய மிசிசிப்பி ஆறும் நைல் ஆறும் முறையே ஐந்தாவதாகவும் பதின்மூன்றாவதாகவும் வைக்கப்பட்டிருப்பது ஏன்? இவ்விரண்டினும் நீளத்தால் சிறிய அமேசான் ஆற்றின் வடிநிலப்பரப்பு 2868 ஆயிரம் சதுர மைல். மிசிசிப்பியின் வடிநிலப் பரப்போ 1258 ஆயிரம் சதுர மைலே நைலின் வடிநிலப் பரப்போ 1120 ஆயிரம் சதுர மைலேதான். இதுமட்டுமா? அமேசான் ஆற்றின் சராசரி ஒழுக்கு 3800 ஆயிரம் க.அடி செக. மிசிசிப்பியின் சராசரி ஒழுக்கோ 700 ஆயிரம் க.அடி செக. தான். நைலின் சராசரி ஒழுக்கோ 56 ஆயிரம் க.அடி செக. அளவேதான். எனவேதான், நீளத்தால் குறைந்தாலும், வடிநிலப் பரப்பாலும் சராசரி ஒழுக்காலும் மிகுந்த அமேசான் முதல் இடத்தைப் பெற்றது. நீளத்தால் மிக்கிருந்தாலும், மற்ற இரண்டாலும் குறைந்த மிசிசிப்பி ஐந்தாம் இடத்தையும், நைல் பதின்மூன்றாம் இடத்தையும் பெற்றன. எனவே, நீளத்தின் மிகுதியைவிட, வடிநிலப்பரப்பின் மிகுதியும் சராசரி ஒழுக்கின் மிகுதியும் மிகவும் இன்றியமையாதவை என்பது தெளிவு.

வடிகால் பரப்பு, சராசரி ஒழுக்கு ஆகிய இரண்டுக்குள்ளும் சராசரி ஒழுக்கே மிகவும் இன்றியமையாதது. நீரோட்டம் இன்றி, ஆறு நீண்டும் வடிகால் பகுதி அகன்றும் இருந்து என்ன பயன்? இந்தப் பதினான்கு ஆறுகளுள், பிரம்மபுத்திராவையும் நைலையும் இங்கே எடுத்துக்கொள்வோம். பிரம்மபுத்திராவின் நீளம் 1970 மைல் (3152கி. மீட்டர்) தான். நைலின் நீளமோ 4160 மைலாகும். (6.656 கி. மீட்டர்). பிரம்மபுத்திராவின் வடிநிலப்பரப்பு 280 ஆயிரம் சதுர மைல்தான். நைலின் வடிநிலப் பரப்போ 1120 ஆயிரம் சதுர மைலாகும். அப்படியிருந்தும் அட்டவணையில் சிறிய பிரம்மபுத்திரா ஏழாவது இடத்தையும், பெரிய நைல், பதின்மூன்றாம் இடத்தையும் பெற்றிருப்பதற்குக் காரணம் என்னவென்றால், சிறிய பிரம்மபுத்திரா மிகுந்த அளவில் 620 ஆயிரம் க.அடி.செக, சராசரி ஒழுக்கும், பெரிய நைல் குறைந்த அளவில் 56 ஆயிரம் க.அடி. செ.க. சராசரி ஒழுக்கும் உடைமையேயாம்.

பதினான்கு ஆறுகளின் பெயர்களுமே, சராசரி ஒழுக்கின் அளவைப் பொறுத்தே முன் பின்னாக வரிசைப்படுத்தப் பட்டிருப்பதை அட்டவணையில் காணலாம். ஆனால், இது தொடர்பாக ஒரே ஒரு விதிவிலக்கு காணப்படுகிறது. முதலாவதாகக் குறிக்கப்பட்டுள்ள அமேசான் ஆற்றின் சராசரி ஒழுக்கு 3300 ஆயிரம் க.அடி செ.க. ஆகும். இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ள காங்கோ ஆற்றின் சராசரி ஒழுக்கோ 4300 ஆயிரம் க.அடி செ.க. ஆகும். அங்ஙனமெனில், சராசரி ஒழுக்கில் குறைந்த அமேசான் முதலாவதாகவும், சராசரி ஒழுக்கில் மிகுந்த காங்கோ இரண்டாவதாகவும் அட்டவணையில் அறிஞர்களால் அமைக்கப்பட்டிருப்பது ஏன்? காங்கோவைவிட அமேசான் சராசரி ஒழுக்கில் ஓரளவு குறைந்திருப்பினும், நீளம், பாய்ந்து பயன்படும் வடிநிலப் பரப்பு ஆகிய இரண்டிலே மிகவும் கூடுதலாக இருப்பதால் அமேசான் அட்டவணையில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகாறும் செய்த ஆராய்ச்சியின் முடிபாவது:- ஓர் ஆற்றை அதன் நீளத்தைக் கொண்டு மதிப்பிடக்கூடாது; மற்றத் தகுதிகளையும் உடன் கூட்டிப் பார்க்கவேண்டும் என்பதாம். இதனினும் இன்றியமையாத மற்றொரு கருத்தும் இங்கே ஆராய்ச்சிக்கு உரியது:

ஓர் ஆற்றின் நீளம், வடிநிலப்பரப்பு, சராசரி ஒழுக்கு ஆகியவற்றின் அளவுகள், ஒரு மாந்தனுடைய உயரம், பருமன், எடை ஆகியவற்றின் அளவுகளைப் போன்றனவாம். ஒருவரது தகுதியை, அவருடைய உயரம், பருமன், எடை ஆகிய உடல் பண்பைக் கொண்டு மதிப்பிடுவதில்லை. உடல் பண்பு இன்றியமையாததுதான் என்றாலும், அதற்கு மேல் சிறந்தனவாக உள்ளப் பண்பு, உயிர்ப் பண்பு என இரண்டு உள்ளன. இந்த இரண்டும் உடைமையே மக்கட் பண்பு ஆகும். இன்னும் கேட்டால் நீண்டு பருத்த மரம் போல் வாட்டசாட்டமான உடல்: உரம் மட்டும் பெற்று, உள்ளப் பண்பும் உயிர்ப் பண்பும் பெற்றிராதவரை மாந்தராக அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதனை ‘மக்களே போல்வர் கயவர்’ ‘மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லா தவர்’ என்னும் திருக்குறள் பகுதிகளால் தெளியலாம்.

உருவத்தால் பெரியவராயினும் மக்கட் பண்பு இல்லாத மாக்களைவிட, உருவத்தால் சிறியவராயினும் சிறந்த உள்ளப் பண்பும் உயரிய உயிராற்றலும் உடையவர் மிகவும் மதிக்கத்தக்கவர். இதுபோலவே, ஓர் ஆறு உருவத்தால் சிறுத்திருப்பினும், துறைமுகப் பெருமை, ஊர்ப் பெருமை, பெருமக்கள் பெருமை, தலைநகர்ப் பெருமை, அரசாட்சிப் பெருமை, கோயில் பெருமை, நீராடல் பெருமை, பாடல் பெருமை, பழைய இலக்கியப் பெருமை, கல்விப் பெருமை, கலைப் பெருமை, நீண்டகால வரலாற்றுப் பெருமை, உயர்ந்த நாகரிகப் பெருமை முதலிய பெருமைகளைப் பெற்றிருப்பின், மிகப் பெரிய ஆறுகளைக் காட்டிலும் அது மிக உயர்ந்ததேயாம்.

ஓர் ஆற்றுக்குத் தலைநகர்ப் பெருமை, வரலாற்று நாகரிகப் பெருமை முதலியன அமைந்திருப்பது, ஒரு மனிதர்க்கு உயர்ந்த உள்ளப் பண்பும் உயிர் ஆற்றலும் அமைந்திருப்பது போன்றதாகும் என்னும் கருத்தைப் புரிந்து கொண்டால், உருவத்தால் சிறிய ஆறாகிய நமது கெடிலத்தின் ‘எவரெஸ்ட்’ பெருமையை எவரும் ஏற்றுக் கொள்வர். இந்த அடிப்படையிலேயே கெடிலத்தைப் பற்றிய இந்நூல் எழுகிறது.

மிகப் பெரிய இமயமலையைப் பற்றி மட்டும் உலகத்தில் ஆராய்ச்சி நடக்கவில்லை; கண்ணுக்குப் புலப்படாத மிகவும் சிறிய அணுவைப் பற்றியும் ஆராச்சி நடக்கிறது; அவ்வணுவுக்குள் அளவற்ற ஆற்றல் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தவும் படுகிறது. விண்ணில் கண்ணுக்குத் தெரியும் மிகப் பெரிய ஞாயிற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதோடு அறிஞர்கள் அடங்கிவிடவில்லை; கண்ணுக்குத் தெரியாத மிக மிகச் சிறிய விண்மீன்களைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்தத்தான் செய்கின்றனர்.

எனவே, அமேசான், மிசிசிப்பி, கங்கை, நைல், காவிரி முதலியவற்றோடு ஆறுகளைப் பற்றிய நூல்கள் அமைந்து விட வேண்டியதில்லை; அப்பர் பெருமானால் ‘தென் கங்கை’ என்று சிறப்பிக்கப்பெற்றுள்ள கெடிலத்தைப் பற்றியும் ஆராய்ச்சி நூற்கள் எழவேண்டியதுதான்! அந்தப் பணியின் ஒரு கூறே இந்நூலின் எழுச்சி!


  1. 1 கல் என்பதை 1.6 சிலோ மீட்டர் எனக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
  2. மூதுரை.
  3. 'திருக்குறள் - 667.
  4. தமிழ்க் கலைக்களஞ்சியம் - முதல் தொகுதி ! ஆறுகள் - பக்கம் 472.