கெடிலக் கரை நாகரிகம்/ஆறும் நாகரிகமும்

விக்கிமூலம் இலிருந்து


கெடிலக்கரை நாகரிகம்
1. ஆறும் நாகரிகமும்

‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்பது ஒளவை மொழி. உலகில் உள்ள ஊர்கள் எல்லாம் ஆற்றங்கரையிலேதான் உள்ளனவா? அல்ல. மற்ற ஊர்களிலும் ஆற்றங்கரை ஊர்கள் பல்வகை வாய்ப்புகள் மிகப்பெற்றவை என்பது கருத்து.

உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவற்றுள் நீரும் உணவும் முதன்மையானவை. நீர் இன்றி உணவுப்பொருள் இல்லை. எனவே, நீர் தாழ்ந்த நிலப் பகுதியிலே பண்டை மக்கள் நிலையாக உறைவிடம் அமைத்துத் தங்கலானார்கள். வானம் பார்த்த மண் பூமியினும் குளங்குட்டைகள் நிறைந்த பகுதி மேலானது. அதனினும், ஊற்றுக் கேணிகளும் ஏரிகளும் மிக்க பகுதிகள் முறையே மேலானவை. அவற்றினும், ஆற்றங்கரைப் பகுதிகள் மிகவும் மேலானவை. ஆற்றங்கரைப் பகுதிகளிலேயே, நெல் போன்ற உயர் பொருள்கள் விளையும் நன்செய் வயல்கள் உருவாகிப் பரந்து கிடக்கும். இந்த வயல் சார்ந்த பகுதிக்கே ‘மருதநிலம்’ என்பது பெயர்.

காடு சார்ந்த முல்லைநிலக் கொல்லைகளைவிட, மலை சார்ந்த குறிஞ்சிநிலப் புனங்களைவிட, கடல் சார்ந்த நெய்தல் நிலக் கானலைவிட, ஆற்றங்கரை சார்ந்த மருதநில நன்செய் வயல்களே மிக்க விலைமதிப் புடையவை. இதன் காரணம் அனைவருக்கும் விளங்கும்.

எனவேதான், ஆற்றங்கரைகளில் மக்கள் உறைவிடங்களை அமைத்துக் கொண்டனர். ஆங்கே நிலம் பெறமுடியாதவர்கள், வேறு இடங்களில் உறைவிடம் அமைத்துக்கொண்டு அவ்வம் மண்ணில் விளைந்தனவற்றை உண்டு வாழ்ந்து வந்தனர். வேறிடத்து மக்களினும், ஆற்றங்கரை மக்களே வாழ்க்கை வசதியிலும், கல்வி - கலைத்துறையிலும், நாகரிகத்திலும் மிக்குச் சிறந்திருந்தனர் என்பது வரலாறு கண்ட உண்மை.

மக்கள் வாழும் குடியிருப்புக்களை, தமிழில் ஊர், புரம், பேட்டை, பாளையம், பாக்கம், பட்டினம், பதி, நகர், சேரி, பூண்டி , அகரம், குடி, குறிச்சி, வேலி, பாடி, குப்பம், சாவடி, பட்டு, பட்டி, கோட்டம், கோட்டை , கிராமம், வலசு, மங்கலம், கோயில், பள்ளி, கரை, துறை, மலை, கானல், காடு, குளம், ஏரி, தோப்பு, நாடு, குடிசை, சத்திரம், சமுத்திரம் முதலிய பெயர்களால் நாம் அழைக்கிறோம். இதனை,

[1]“பாக்கம், பட்டினம், பதி, நகர், சும்மை,
பூக்கம், சேரி, புரம், முட்டம், பூண்டி,
அகரம், குடியே, குறிச்சி, கோசரம்,
அகலுள், நொச்சி, இருக்கை, வேலி,
குப்பம், பாடி, குறும்பு, பாழி,
சிறுகுடி, தண்ணடை, உறையுள், எயிலொடு,
வாழ்க்கை, உட்படுத்து இருபத் தேழும்
நாடில் ‘ஊர்’ என நவின்றிசி னோரே"

“பட்டும், நொச்சியும், பள்ளியும் சிற்றூர்”

முதலிய திவாகர நூற்பாக்களாலும், உலக வழக்குப் பெயர்களாலும் அறியலாம்.

இப் பெயர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக ‘ஊர்’ என்னும் பெயரே உலக வழக்கில் தலைமை தாங்குகிறது. நாம் புதியவர் ஒருவரைக் கண்டால், “உங்கள் ஊர் எந்த ஊர்?” என்று கேட்கிறோமே தவிர, ‘உங்கள் பட்டி எந்தப் பட்டி?’ என்றோ; ‘உங்கள் பாக்கம் எந்தப் பாக்கம்?’ என்றோ கேட்பதில்லை. கதை சொல்பவர்கள் கூட, ‘ஒரே ஓர் ஊரிலே’ என்று தொடங்குகிறார்களே யொழிய, ‘ஒரே ஒரு குப்பத்தில்’ என்றோ , ‘ஒரே ஒரு புரத்தில்’ என்றோ தொடங்குவதில்லை. ஓர் இடத்தைக் குறிப்பிடுவதானாலும், ‘மன்னார்குடி என்னும் ஊரிலே’ என்று குறிப்பிடுகிறார்களே யன்றி, ‘மன்னார்குடி என்னும் சேரியிலே’ என்றோ, ‘மன்னார்குடி என்னும் பாளையத்திலே’ என்றோ குறிப்பிடுவதில்லை. எனவே, ‘ஊர்’ என்னும் பெயர், மக்கள் குடியிருப்புக்களின் பொதுப் பெயர் என்பது புலனாகும், முற்கூறிய திவாகர நூற்பாவிலும்,

“பாக்கம், பட்டினம்.... இருபத் தேழும்
நாடில் ‘ஊர்’ என நவின்றிசி னோரே”

என, பாக்கம், பட்டினம் முதலிய இருபத்தேழும் ‘ஊர்’ என்னும் பொதுப் பெயராலேயே சுட்டப்பட்டுள்ளமை காண்க

இவ்வாறு, முல்லை நிலத்துக் குடியிருப்பாகிய பாடி, குறிஞ்சி நிலக் குடியிருப்பாகிய குறிச்சி, நெய்தல் நிலக் குடியிருப்பாகிய பட்டினம் முதலிய எல்லா - நிலத்துக் குடியிருப்புக்களையும் குறிக்கப் பயன்படும் ‘ஊர்’ என்னும் இப் பொதுப் பெயர், பண்டைக் காலத்தில், ஆற்றங் கரையை அடுத்த - நன்செய் வயல்கள் நிறைந்த மருத நிலத்துக் குடியிருப்புக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன், ‘ஊர்’ என்றால் ஆற்றங்கரை வயல் வளம்மிக்க மருதநிலக் குடியிருப்பு என்றுதான் பொருள் ஆற்றுக்கும் ஊருக்கும் உள்ள தொடர்பினை, தொல்காப்பிய - பொருளதிகார - அகத்திணையியலிலுள்ள,

[2]“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென் மொழிப்"

என்னும் நூற்பாவின் உரை விளக்கத்தில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள,

“முல்லைக்கு நீர்: கான்யாறு (காட்டாறு); ஊர்: பாடியும் சேரியும் பள்ளியும். குறிஞ்சிக்கு நீர்: அருவியும் கனையும்; ஊர்: சிறுகுடியும் குறிச்சியும். மருதத்திற்கு நீர்: யாற்று நீரும் மனைக் கிணறும் பொய்கையும்; ஊர்: ஊர்கள் என்பனவேயாம். நெய்தற்கு நீர்; மணற் கிணறும் உவர்க் குழியும்; ஊர்: பட்டினமும் பாக்கமும். பாலைக்கு நீர்: அறுநீர்க் கூவலும் சுனையும்; ஊர் : பறந்தலை.”

என்னும் உரைப்பகுதி நன்கு வலியுறுத்தும். மற்ற நிலத்துக் குடியிருப்புகளுக்கெல்லாம் தனித்தனிப் பெயர்கள் குறித்துள்ள ஆசிரியர், மருதநிலத்துக் குடியிருப்புக்கு மட்டும் ‘ஊர்கள் என்பனவேயாம்’ என ‘ஊர்’ என்னும் பெயரையே குறிப்பிட் டுள்ளமை காண்க. மற்றும், ஊரைக் கொண்டுள்ள மருத நிலத்திற்கே ‘ஆற்றுநீர்’ உரியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளமையும் ஈண்டு இணைத்து நோக்கற்பாலது. இதனை, நாற்கவிராசநம்பி இயற்றிய ‘அகப் பொருள் விளக்கம்’ என்னும் நூலில் உள்ள,

[3]இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்....
பெருகிய சிறப்பின் பேரூர் மூதூர்
யாறு மனைக்கிணறு இலஞ்சி....
வருபுனள லாடல் மருதக் கருப்பொருளே" என்னும் நூற்பாவும், மற்றும் பல்வேறு இலக்கிய ஆட்சிகளும் மேலும் உறுதி செய்யும்.

ஆறும் ஊறும் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பைக் கண்டறியவே இவ்வளவு வழி கடந்துவர வேண்டியிருந்தது. நாம் மேற்கொண்ட இந்தச் சிறிய ஆராய்ச்சியிலிருந்து, பழங்கால மக்கள் ஆற்றங்கரைப் பகுதியையே மிகவும் நாடினர் என்பதும், ஆற்றங்கரைக் குடியிருப்புகளே ஊர்கள் என அழைக்கப்பட்டன என்பதும், நாளடைவில் ஒரு நிலத்துக் குடியிருப்பைக் குறிக்கும் பெயர்கள் மற்ற நிலத்துக் குடியிருப்புகளையும் மாறிக் குறிக்கலாயின என்பதும் தெள்ளிதின் விளங்கும். மற்றும் இவ்வாராய்ச்சியிலிருந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத குறிப்பாவது, ஆற்றங்கரை ஊர்களே வாழ்க்கைக்கு வசதியான உறையுள்களாகும் என்னும் கருத்து. இதனை, திவாகர நிகண்டில் உள்ள,

[4] “பூக்கம், கொடிக்காடு, பூரியம்,உறையுள்,
பாக்கம். அருப்பம், அகலுள். பதியே.
கோட்டம், வசதி, தாவளம், நியமம்,
வாழ்க்கை, தண்ணட, மருதநிலத்து ஊர்ப்பெயர்"

என்னும் நூற்பா தெளிவாகத் தெரிவிக்கிறது. ஆற்றங்கரை வயல் வளம் மிக்க மருதநிலத்துக் குடியிருப்புக்களைக் குறிக்கும். மேலுள்ள பெயர்களுள் உறையுள், வசதி, வாழ்க்கை என்னும் பெயர்கள் ஈண்டு விதந்து குறிப்பிடத்தக்கன. இம்மூன்று பெயர்களும் மருதநிலத்து ஊர்களே உறைவதற்கு ஏற்றவை - வசதியானவை - தங்கிவாழ்தற்கு உரியவை என்னும் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன வன்றோ? கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு? ஆற்றங்கரை ஊர்களின் வாழ்க்கை வசதிச் சிறப்பை, இலக்கிய இலக்கணங்களிலிருந்து சான்று காட்டித்தானா மெய்ப்பித்தாக வேண்டும்? இந்தக் காலத்து மக்கள் நேரிலே வாழ்ந்து பார்த்தே தெரிந்து கொண்டிருக்கிறார்களே! இந்தக் காலத்தில் என்றென்ன - அந்தக் காலத்திலும் - எந்தக் காலத்திலும், வசதியான ஆற்றங்கரை வாழ்க்கையிலிருந்தே, கலை - கல்வி - நாகரிக வளர்ச்சிகள் தோன்றின . தோன்றும் என்னும் கொள்கைக்கு அடிப்படையிடவே இத்தனை சான்றுகள் பயன்படுத்தப்பட்டன.

எகிப்திய நைல் ஆற்றங்கரையிலும், மெசபட்டோமியாவின் (இராக்) யூப்ரடீசு, டைக்ரீசு என்னும் ஈராற்றங்கரைகளிலும் (மெசபட்டோமியா என்பதற்கு, இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட இடம் என்பது பொருள்), இந்தியத் துணைக் கண்டத்தின் சிந்து ஆற்றங்கரை வெளியிலும் மாபெரும் வரலாற்றுப் புகழ்படைத்த நாகரிகங்கள் தோன்றியிருந்தமை உலகறிந்த உண்மையன்றோ? உலகின் பெரு நகரங்கள் பல ஆற்றங்கரைகளில் அமைந்திருப்பதும் ஈண்டு எண்ணத்தக்கது.

பிரிட்டிசுப் பேரரசின் முதல் பெரிய நகரும் தலைநகருமாகிய இலண்டன் நகரம், ‘தேம்சு’ (Thames) என்னும் ஆற்றின் கரையில்தானே உள்ளது! அதே பேரரசின் இரண்டாவது பெரிய நகரமாயிருந்ததும், பிரிட்டிழ்சு இந்தியாவின் முதல் தலைநகராய்த் திகழ்ந்ததும், இப்போது இந்தியப் பேரரசின் முதல் பெரிய நகருமாய் விளங்குவதுமாகிய கல்கத்தா நகரம், ‘ஃஊக்ளி’ (Hooghly) என்னும் ஆற்றின் கரையில்தானே அமைந்துள்ளது! ஆற்றல் அனைத்தும் படைத்துள்ள அமெரிக்கப் பேரரசின் முதல் தலைநகராயிருந்ததும் முதல் பெரிய நகராயிருப்பதுமாகிய நியூயார்க் நகரம் ‘பாசேயிக்’ (Passaic) என்னும் ஆற்றின் கரையில்தானே உள்ளது! இவை மட்டுமா? ‘சாங்காய்’ (சைனா), ‘ராட்டர் டாம்’ (ஃஆலந்து), ‘ஃஆம்பர்கு’ (செர்மனி), ‘நியூ ஆர்லியன்சு’ (லுய்சியானா), ‘போனசு அயர்சு’ (அர்சென்டினா) முதலிய பெரு நகரங்கள் பலவும் ஆற்றங்கரைகளில்தானே அமைந்து திகழ்கின்றன!

சோழர்களின் தலைநகராய்த் திகழ்ந்த உறையூரும் புகாரும் காவிரியாற்றங் கரையிலும், பாண்டியரின் தலைநகராய் விளங்கிய மதுரை வைகையாற்றங் கரையிலும் அமைந்திருப்பதும் ஈண்டு ஒப்பிட்டு எண்ணற்பாலது.

மேற்கூறிய கல்கத்தா, இலண்டன், நியூயார்க் முதலிய உலகப் புகழ்பெற்ற மாபெரு நகரங்கள் ஆற்றங்கரைகளில் அமைந் திருக்கும் ஒன்றினோடு அவற்றின் பெருமை நின்று விடவில்லை. அவை, மிகப் பெரிய ஆற்றங்கரைத் துறைமுகங்களும் உடையவை. இந்தியா பிற நாடுகளுடன் புரியும் வாணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு, ஆற்றங்கரையில் அமைந்துள்ள கல்கத்தா துறைமுகத்தின் வாயிலாகத்தான் நடக்கிறதாம். இலண்டன், நியூயார்க் முதலிய துறைமுகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

தெய்வத் தன்மை

இவ்வாறு உழவு, வாணிகம், போக்குவரவு, குடிநீர் முதலிய பலமுனைத் திட்டங்களுக்குப் பயன்படுவதாலேயே ஆற்றங்கரைகளில் நகரங்கள் தோன்றி நாகரிகங்களை உருவாக்கின. ஆறுகள் தம் வளங்களால் மக்களை வளர்ப்பதனாலேயே, அவற்றைத் தெய்வத் தாயாக மதித்துப் போற்றி மக்கள் வழிபடுகின்றனர். கங்கையம்மா காவிரித் தாயே என்றெல்லாம் நம் மக்கள் அன்னையென அழைத்து வழிபட, ஆப்பிரிக்க ‘நைல்’ ஆற்றங்கரை மக்களோ, “எங்கள் அப்பன் நீலன்’ என்பதாக ஆற்றை அப்பன் என அழைத்துப் போற்றுகின்றனராம்.

தமக்கு வேண்டிய வளங்களை வள்ளலென வற்றாது வாரி வழங்கும் ஆறுகளைத் தெய்வத்தன்மை உடையனவாக மதித்த மக்கள், அவ்வாறுகளிலே நீராடுவதிலும் அவற்றின் கரைகளிலே திருக்கோயில் எடுத்து இறை வழிபாடு செய்வதிலும் பேரின்பம் கண்டதோடு, அச் செயல்களைப் பெரிய அறமாகவும் கருதினர். [5]‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்று ஒளவைப் பிராட்டி அருளிய அமிழ்த மொழியின் அருமை இப்போது புலனாகுமே!

இந்த அடிப்படையில் வைத்து நோக்குங்கால், தமிழகத்தில் - திருமுனைப்பாடி நாட்டில் ஒடும் ‘கெடிலம் ஆற்றின் பங்கும் மிகவும் விதந்து குறிப்பிடத்தக்கது.

ஆறும் அறத்தாறும்

‘ஆறு’ என்னும் சொல்லுக்கு உரிய பொருள்களை ஆராயின், தமிழ் மக்கள் ஆற்றின் பெருமையை எந்த அளவு உணர்ந்திருந்தனர் என்பது புலனாகும். ஆறு’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு, நதி, அறம், வழி, அறவழி, சமயம், பயன், பக்கம், இயல்பு, விதம், உபாயம், 6 என்னும் எண் முதலிய பொருள்களும்; ‘ஆறு (தல்) என்னும் வினைச் சொல்லுக்கு, தணிதல், மனநிறைவு பெறுதல், சூடு நீங்குதல், புண் காய்ந்து ஆறுதல், அடங்குதல், அமைதி பெறல் முதலிய பொருள்களும்; ‘ஆ(ற்)று (தல்) என்னும் பிறவினைச் சொல்லுக்கு, வலிமை பெறல், முடியக் கூடியதாதல், போதுமானதாதல், உய்தல், நடத்துதல், செலுத்துதல், வழிகாட்டுதல், தேடுதல், உதவி செய்தல், கூட்டுதல், பொறுத்துக் கொள்ளுதல், தாங்குதல், சுமத்தல், பசி பிணி முதலியன தணித்தல், தேற்றுதல், சூடு குறைத்தல், ஈரம் போக்குதல், முறுக்கு ஆற்றுதல் முதலிய பொருள்களும்; ஆறு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த ‘ஆற்றல்’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு, வலிமை, மிகுதி, முயற்சி, உறுதி, ஆண்மை, பொறை, ஞானம், வாய்மை, வெற்றி முதலிய பொருள்களும் உள்ளமை காண்க.

மேலே கூறியுள்ள பொருள்கள் யாவும் ‘ஆறு’ என்னும் சொல்லை வேராகக்கொண்டு எழுந்தவையே. இவ்வளவு பொருள்களையும் ‘ஆறு’ என்னும் ஒரு சொல்லால் குறிப்பிடுவதற்குத் தமிழ் மக்கள் எவ்வாறு கற்றுக் கொண்டிருப்பார்களெனில், ஓடுகின்ற ஆற்றைப் (நதியை) பார்த்துத்தான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

ஆறு என்னும் சொல்லுக்குரிய எல்லாப் பொருள்களையும் நல்வழி, தணிவு என்னும் இருபிரிவுக்குள் ஏறக்குறைய அடக்கிவிடலாம். ஆறானது நேராக ஒழுங்காக இடையறாது நல்வழியில் ஓடிக் கொண்டிருப்பதையும், அது தன் குளிர்ச்சியால் வெப்பத்தைத் தணித்தும் நீர் தந்து நீர் வேட்கையைத் தணித்தும், உணவுப் பொருள் விளைத்துப் பசி வறுமை ஆகியவற்றைத் தணித்துச் செல்வம் பெருக்கி உயிர்களைத் தாங்கிக் காத்தும் உடல் உடை முதலியவற்றைத் தூய்மை செய்வதற்குத் துணை புரிந்தும் போக்குவரவுக்குரிய வழிப்பாதையாகியும் தேவைக்கு மேற்பட்டு ஊரை அழிக்கக்கூடிய நிலையில் மிகுதியாகப் பெய்த மழைநீரைத் தன்னிடத்தே வாங்கிக் கொண்டு ஊருக்கும் வயல்களுக்கும் வடிகாலாகி ஊரையும் மக்களையும் கேட்டிலிருந்து விடுவித்தும் இன்னும் பல்வேறு வகைகளிலும் உதவிசெய்து கொண்டிருப்பதையும் கண்ட தமிழ் மக்கள், நல்வழியையும் நற்செயல்களையும் ஒழுங்குமுறையையும் உள்ளத் தணிவையும் ‘ஆறு’ என்னும் அழகிய அருமை அன்புப் பெயராலேயே அழைக்கலாயினர்.

‘ஆறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் ஆராயுங்கால், மற்றொரு செய்தி புலனாகிறது. பழங்கால மக்கள் போக்கு வரவுக்கு முதல் முதலில் ஆறுகளைத்தான் பயன்படுத்தினர், என்பதுதான் அந்தச் செய்தி.

ஆறுகளில் நிரம்பத் தண்ணீர் ஓடுகின்ற காலங்களில் மட்டுந்தானே படகு, தெப்பம் முதலியவற்றின் துணை கொண்டு போக்குவரவு செய்ய முடியும்? நிரம்பத் தண்ணீர் ஓடாத காலங்களிலும், மழை பெய்யும்போது தவிர மற்ற நேரத்தில் தண்ணீரே இல்லாத ஆறுகளிலும் எப்படிப் போக்குவரவு செய்ய முடியும்? மற்றும், ஆறுகள் இல்லாத பகுதிகளில் எவ்வாறு போக்குவரவு செய்தனர்?

இங்கே ‘போக்குவரவு’ என்னும் தொடர் தண்ணீரிலே தெப்பத்தின் துணைகொண்டு போய்வரும் பயணத்தை மட்டும் குறிக்கவில்லை; காலால் நடந்து சென்று வருவதையும் குறிக்கிறது. தண்ணீர் உள்ளபோது தெப்பத்தைப் பயன்படுத்தியும், தண்ணீர் இல்லாத போதும் தண்ணீர் இல்லாத ஆறுகளிலும் காலாலேயே நடந்தும் போய் வந்தனர். ஏனெனில், இந்தக் காலத்தைப் போல் அந்தக் காலத்தில் செப்பனிடப்பட்ட பாதைகளே இருந்திருக்க முடியாது. மழைக் காலத்தில் மழைநீர் ஓடியோடி இயற்கையாக உண்டாக்கிய ஆற்றுப் பாதைகள் மட்டுமே அந்தக் காலத்தில் இருந்திருக்கக்கூடும். கல்லும் முள்ளும் புல்லும் புதரும் மரஞ்செடி கொடிகளும் நிறைந்த மற்ற தரைப் பகுதியில் நடப்பதை விட, மழைநீர் ஓடியோடி உண்டாக்கிய இயற்கையான பாதையில் நடப்பதே வசதியானது. அந்த இயற்கைப் பாதை, மேடு பள்ளமின்றிச் சமமட்டமாகவும் மென்மையாகவும் தூய்மையாகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தன. எனவே, அத்தகைய ஆற்றுப் பாதைகளை அக்கால மக்கள் நடப்பதற்குப் பயன் படுத்திக் கொண்டனர். இயற்கை உண்டாக்கிக் கற்றுக்கொடுத்த அந்தப் பாதைகளைப் பார்த்துப் பார்த்துத்தான், பின்னர் மக்கள், வேறிடங்களில் அவை போலவே செயற்கையாகப் பாதைகள் அமைத்துக் கொண்டனர். அந்தச் செயற்கைப் பாதைகளையும் ‘ஆறு’ என்ற பெயராலேயே அழைத்தனர்.

இந்தக் கருத்துக்கு ஆதாரம் வேண்டுமென்றால் என் சொந்தப் பட்டறிவிலிருந்தே (அனுபவத்திலிருந்தே) சொல்ல முடியும். நான் மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளனா யிருந்தபோது இதைப் பட்டறிந்துள்ளேன். மயிலம் மலைப் பாங்கான ஊர். அந்த ஊரைச் சுற்றியுள்ள வெற்றிடங்களிலும் தோப்புக்களிலும் நடப்பது தொல்லை. தரை கல்லும் முள்ளும் நிறைந்து மேடுபள்ளமாக இருக்கும். புதியவர்கள் கால் வைக்க முடியாது. அப்பகுதிகளில் மழை நீர் ஓடியோடி இயற்கையாக ஏற்பட்டுள்ள பாதைகள் மட்டும் மென்மையாகவும் வெண்மையாகவும் அழகாகவும் சமமாகவும் நடப்பதற்கு வசதியாக இருக்கும். இன்னும் இதுபோன்ற இயற்கைப் பாதைகளைப் பல ஊர்க் காட்டு மேடுகளிலும் கண்டுள்ளேன்.

இந்தக் காலத்திலேயே இன்னும் பல ஊர்களில் ஒழுங்கான பாதைகள் இல்லாத நிலையில், அந்தக் காலத்து மக்கள் எவ்வாறு ஒழுங்கான பாதைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்க முடியும்? இயற்கையாய் ஏற்பட்ட ஆற்றுப் பாதைகளைத்தானே பயன்படுத்தியிருக்க முடியும்? ஆம்.

இயற்கையான ஆற்றுப் பாதை மற்ற தரைப் பகுதிகளைப் போல் இல்லாமல், ஒழுங்காகவும் தூய்மையாகவும் உதவியாகவும் இருந்ததால், நன் மக்கள் புரியும் ஒழுங்கான - தூய்மையான - உதவியான அறச் செயல்களையும் ‘ஆறு’ என்னும் பெயராலேயே மக்கள் அழைத்தனர். நதி, நல்வழி, அறச்செயல் முதலியவை, ‘ஆறு’ என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடப்படுவதிலுள்ள உண்மை இதுவாகத்தான் இருக்கக் கூடும்.

மக்கள் மட்டுமா? இலக்கியப் புலவர்கள் எல்லாரும், நதியின் பெயராகிய ‘ஆறு’ என்னும் அழகு தமிழ்ச் சொல்லால் நல்வழியினையும் நல்லறத்தினையும் குறிப்பிடலாயினர். திருவள்ளுவப் பெருந்தகையார்,

‘அறத்து ஆறு இதுவென வேண்டா’ 37
‘ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை’ 43
‘அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்’ 46
‘ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா’ 48
‘அறிவறிந்து ஆற்றின் அடங்கப்பெறின்’ 123
‘அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து’ 130
‘ஒழுக்கு ஆறாக் கொள்க ஒருவன்’ 161
‘அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான்’ 176
நல் ஆறு எனினும் கொளல் தீது’ 222
‘நல் ஆற்றான் நாடி அருளாள்க’ 242
‘நல் ஆறு எனப்படுவது யாதெனின்’ 324
‘தான் வேண்டும் ஆற்றான் வரும்’ 367
‘பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு’ 465
‘ஆற்றின் வருந்தா வருத்தம்’ 468
‘ஆற்றின் அளவறிந்து ஈக’ 477
‘ஆகுஆறு அளவு இட்டிதாயினும் கேடில்லை
போகுஆறு அகலாக் கடை’
487
‘ஆற்றின் நிலை தளர்ந்தற்றே’ 716
‘ஆற்றின் அளவறிந்து கற்க’ 725
‘அழிவினவை நீக்கி ஆறு உய்த்து’ 787
‘நன்றெய்தி வாழ்வதோர் ஆறு’ 932
‘நெடிது உய்க்கும் ஆறு’ 943
என்றெல்லாம் எடுத்தாண்டிருப்பது காண்க. உலகப் பேரிலக்கிய மாகிய திருக்குறளிலிருந்து சான்று காட்டினாலே போதும் என்றாலும், பெரும்புலவர் கம்பர், ஓரிடத்தில் ஒரே பாட்டில் ஒரே அடியில் நதி, நல்லறவழி என்னும் பொருள்களில் ஆறு என்னும் சொல்லை எடுத்தாண்டு விளையாடியிருப்பதை இங்கே குறிப்பிடாமல் விடமுடியவில்லை.

[6]“அவ் ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே
எனத் தெளிந்த அருளின் ஆறும்”

என்பது கம்பரின் பாடல் பகுதி. ‘ஆற்றுப்படை’ என்னும் நூற்பெயர்ப் பொருளும் கண்டு ஒப்புநோக்கற்பாலது. இதுகாறும் கூறியதிலிருந்து, ஆறுகள் மக்களிடத்தில் எவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்தன என்பது புரியும்.

இம்மட்டுமா? கம்பர் ஒரு பாடலில், கோதாவரி ஆற்றுக்கு, பெரும்புலவர் இயற்றிய கவியினை ஒப்புமை கூறுமுகத்தான், ஆறுகளின் பெருமைகளையெல்லாம் - பயன்களையெல்லாம் தொகுத்துக் கூறிப் புகழ்ந்துள்ளார். ஆறுகள் கவிகளைப்போல நாட்டுக்கு நல்லழகாம்; சிறந்த பொருள்களைத் தருமாம்; புலங்களை (வயல்களை) வளப்படுத்துமாம்; அகத்துறைகளைக் (குளிக்கும் நீர்த்துறைகளைக் கொண்டிருக்குமாம்; முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை நெறியும் (ஐந்து நிலங்களின் வழியாய் வரும் ஓட்டத்தையும்) உடையனவாம்; தெளிந்திருக்குமாம்; குளிர்ந்திருக்குமாம்; ஒழுங்கான நடை உடையனவாம். இக்கருத்துடைய கம்பரது பாடல் வருமாறு:

[7]"புவியினுக்கு அணியாய், ஆன்ற
பொருள் தந்து, புலத்திற் றாகி,
அவி அகத் துறைகள் தாங்கி
ஐந்திணை நெறி அளாவி,
சவியுறத் தெளிந்து, தண்ணென்
ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா
வரியினை வீரர் கண்டார்."

நன்னூல் ஆசிரியர்கூட, நூற்பாவின் நிலைக்கு ‘ஆற்றொழுக்கு’ என்று பெயர் தந்துள்ளார்.

இத்துணை பெரும்புகழுக்குரிய ஆற்றங்கரை ஊர்களிலே மிக்க செல்வமும், சிறந்த கல்வியும் - கலைகளும், உயர்ந்த நாகரிகமும் தோன்றி வளர்ந்து பெருகித் திகழ்வதில் வியப்பேது! இந்நூலில் நாம் எடுத்துக் கொண்ட ‘கெடிலம்’ என்னும் ஆறு, இத்துணை பெரும் புகழுக்கும் மிகவும் உரியது என்று சொன்னால் மிகையாகாது.


  1. சேந்தன் திவாகரம் - இடப் பெயர்த் தொகுதி - நூற்பா : 88, 94.
  2. தொல் - பொருள் - அகம் - நூற்பா: 18.
  3. அகப்பொருள் விளக்கம் - அகத்திணையியல் - நூற்பா : 23.
  4. சேந்தன் திவாகரம் - இடப்பெயர்த் தொகுதி - 99.
  5. நல்வழி : 24.
  6. "கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - நாடவிட்ட படலம் - 22.
  7. "கம்பராமாயணம் - ஆரணிய காண்டம் - பஞ்சவடிப் படலம் - 1.