கெடிலக் கரை நாகரிகம்/கெடிலக்கரை அரசுகள்
கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாட்டை வரலாற்றுக் காலந்தொட்டு கி.பி. இருபதாம் நூற்றாண்டுவரை அரசாண்டுவந்த மன்னர்கள் குறித்தும் அவர்தம் மரபுகள் குறித்தும் முறையே முன் பகுதியில் (கெடில நாட்டு வரலாறு) பொதுவான குறிப்புக்களே சுருக்கமாகக் கொடுக்கப் பட்டுள்ளன. அம் மன்னர்கள் வரிசையில், திருமுனைப்பாடி நாட்டிலேயே பிறந்து வளர்ந்து திருமுனைப்பாடி நாட்டிலேயே தலைநகர்கள் அமைத்துக் கொண்டு அரசாண்ட மன்னர்களேயன்றி, தமிழகத்தின் வேறு பகுதிகளிலிருந்தும், பாரதத்தின் வேறு மாநிலங்களிலிருந்தும், உலகின் வேறு (ஐரோப்பா) கண்டத்திலிருந்தும் வந்து அரசோச்சிய பேரரசர்களும் இடம் பெற்றுள்ளனர். இனி இந்தப் பகுதியில், திருமுனைப்பாடி நாட்டிலேயே (தென்னார்க்காடு மாவட்டத்தில்) பிறந்து வளர்ந்து திருமுனைப்பாடி நாட்டிலேயே தலைநகர்கள் அமைத்துக் கொண்டு அரசோச்சிய திருமுனைப்பாடி நாட்டு மன்னர்கள் சிலரைப் பற்றிய வரலாறுகள் முறையே சங்க காலந்தொட்டுக் கொடுக்கப்படும்.
இம்மன்னர்களுள், கெடிலம் ஆற்றிற்கு வடக்கே (6 மைல்) 10 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோவலூரைத் தலைநகரமாகக் கொண்டு செங்கோலோச்சிய மன்னர்கள் மிகவும் இன்றியமையாதவர்களாகக் காணப்படுகிறார்கள். சங்க நூல்கள், பிற்கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், வரலாற்று நூல்கள் ஆகியவை கெடிலக்கரை அரசுகளைப் பற்றி அறியத் துணை செய்கின்றன.
சங்க காலத்திலேயே சீர்சால் மன்னர்களால் கெடிலக் கரை நாடு மிகவும் சிறப்புற்றும் செழிப்புற்றும் திகழ்ந்தமையைச் சங்க இலக்கியங்கள் அறிவிக்கின்றனவெனில், கெடிலக்கரை நாகரிகத்தின் மாண்பு எத்துணையது என்பதை உய்த்துணரலாம்! கெடிலக் கரைக்குப் பெருமை தேடித்தந்த அம்மன்னர்களின் வரலாறுகள் வருமாறு:
பேரும் ஊரும்
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்று கருதப்படும் சங்க காலத்தில் வாழ்ந்தவன் மலையமான் திருமுடிக்காரி. இவன், காரி, திருமுடிக்காரி, மலயன், மலயமான் என்றெல்லாம் இலக்கியங்களில் அழைக்கப்பட்டுள்ளான். மலையமான் என்பது மரபுப்பெயர்; காரி இயற்பெயர். இவனது நாடு, தென்பெண்ணையாறும் கெடிலமும் பாய்ந்து வளப்படுத்தும் திருமுனைப்பாடி நாடாகும். மலையமான் ஆண்டதால் மலையமானாடு. மலாடு என்று இது பண்டு அழைக்கப்பட்டது. மலையமாநாடு என்பதன் சுருக்கமான மரூஉப் பெயர் மலாடு என்பது. இது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.
காரியின் தலைநகர் கோவல் எனப்படும் திருக்கோவலூர், முள்ளூர் மலை இவனுக்கு உரிய மலை. இச் செய்திகளை, அம்மூவனார் பாடிய
- “துஞ்சா முழவின் கோவல் கோமான்
- நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுரை
என்னும் அகநானூற்றுப் (35) பாடல் பகுதியாலும், கபிலர் பாடிய
- “முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
- முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து
என்னும் குறுந்தொகைப் (312) பாடல் பகுதியாலும், கல்லாடனார் பாடிய
- “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி"
என்னும் அகநானூற்றுப் (209) பாடல் பகுதியாலும், கபிலர் பாடிய
- “தொலையா நல்லிசை விளங்கு மலையன்...'
- பயன்கெழு முள்ளூர் மீமிசை
என்னும் புறநானூற்றுப் (123) பாடல் பகுதியாலும் பிறவற்றாலும் அறியலாம்.
கொடை வீரம்
காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகப் போற்றப் பெறுகிறான். இவன், தன்னை நாடிவரும் புலவர்கட்கும் கலைஞர்கட்கும் தேர்களை வழங்குவானாம்; அதனால் ‘தேர் வண்மலையன்’ (நற்றிணை - 100 ) எனச் சிறப்பிக்கப் பெற்றுள்ளான். முடியுடை மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்களுங்கூட, பல காரணம் பற்றி இவன் உதவியை நாடுவார்களாம். இவன் அவரவர்க்கு வேண்டிய உதவிகளைப் புரிவானாம். இவன் உதவியால் முடிசூடிக் கொண்டவரும் உண்டு. இச் செய்தியை, கபிலர் பாடிய
- “வீயாத் திருவின் விறல்கெழு தானை
- மூவருள் ஒருவன் துப்பா கியரென
- ஏத்தினர் தரூஉம் கூழே நுங்குடி”
என்னும் புறநானூற்றுப் (122) பாடல் பகுதிக் குறிப்பால் தெரிந்து கொள்ளலாம். கபிலர், பரணர், கல்லாடனார், கோவூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், பேரி சாத்தனார், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் முதலிய சிறந்த புலவர் பெருமக்கள் பலர் மலையமான் காரியைப் புகழ்ந்து பாடியிருப்பதிலிருந்து, மலையமான் தமிழின் பால் மிக்க காதல் கொண்டவன் என்பதும், தமிழ்ப் புலவர்கட்கு வரையாது வாரி வழங்கிய வள்ளல் என்பதும் புலனாகும். சுருங்கச் சொல்லின், திருமுடிக்காரி ஒரு பெரிய கொடை மறவன் என்பது போதரும், ‘இவனுக்கென ஓர் உடைமையும் இல்லை; எல்லாம் பிறருடையன வாக்கினான்’ எனக் கபிலர் புறப் (122) பாடலில் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
படை மறம்
கொடை மறம், படை மறம் என்னும் இரண்டனுள் கொடை மறம் அரியது; படைமறம் எளிது. எனவே, அரிய கொடை மறத்திலேயே சிறந்தவனாயிருந்த காரி, எளிய படைமறத்தில் மிகமிகச் சிறந்து விளங்கினான் என்பது சொல்லாமலே விளங்கும்.
பேரரசர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் துணை வேண்டிய போதெல்லாம் சென்று அவர்களின் பகைவர்களைவென்று அவர்களை அரியணையில் அமர்த்தியிருக்கிறான் காரி. குதிரையூர்ந்து போர் புரிவதில் வல்லவன் இவன். இவனது குதிரைக்கும் காரி என்பதே பெயர். இவன், ஓரியுடன் போர் புரிந்து கொன்று கொல்லியைச் சேரர்க்கு ஈந்தான் என்னும் செய்தியை,
- காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
- ஓரிக் குதிரை ஓரி"
என்னும் சிறுபாணாற்றுப்படைச் செய்யுட் (110 -111) பகுதியாலும்,
- “செவ்வேல், முள்ளூர் மன்னன் கழல்தொடிக்காரி
- செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
- ஓரிக் கொன்று சேரலர்க்கு நத்த
- செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி"
என்னும் அகநானூற்றுப் பாடல் (209) பகுதியாலும் அறியலாம்
முள்ளூரில் இவனை எதிர்த்த ஆரிய மன்னர் பலர், இவனது ஒரே வேல் படைக்கு அஞ்சி ஓடிய செய்தி,
- "ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
- பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
- ஒரு வேற்கு ஓடியாங்கு”
என்னும் நற்றிணைப் (170) பாடல் பகுதியால் தெரிய வருகிறது.
மலையமான் மக்கள்
மலையமான் பெருமறவனாய்த் திகழ்ந்திருந்தும், முடியுடை மூவேந்தர்க்கும் மாறிமாறி உதவி செய்யும் துணைவனாய் விளங்கியிருந்தும், கோவூர்கிழார் பாடியுள்ள புறநானூற்றுப் (46) பாடல் ஒன்றைப் படிக்குங்கால், மலையமான் குடிக்கும் சோழர் குடிக்கும் இடையே ஒருகால் பகை படர்ந்திருந்தமை புலப்படுகிறது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமானின் இளைய மக்கள் இருவரை யானையைக் கொண்டு இடறிக் கொல்ல ஏற்பாடு செய்தான். திறந்த வெளியில் மக்கள் பலர் குழுமியிருந்தனர். நடுவே மலையமான் சிறார்கள் நின்று கொண்டிருந்தனர். கொலை யானை கொண்டு வரப்பட்டது. சிறார்கள் தம் சிறுமையால் யானையை வேடிக்கை பார்த்து அதற்கு அஞ்சாமல், சுற்றியிருந்த மக்களைப் பார்த்து மிரண்டனர். இஃதறிந்த புலவர் கோவூர் கிழார், கிள்ளி வளவனை அணுகி, “சோழ மன்னா! நீயோ, புறாவுக்காகத் தன் உடலையீந்த சிபிச்சோழனின் வழிவந்தவன்; இச் சிறார்களோ, புலவர்க்குத் தம் உடைமையை வரையாது வழங்கும் வள்ளல் மரபினர்; எனவே, நீ இவர்களைக் கொல்லுதல் தகாது’ என அறிவு கொளுத்தினார். குழந்தைகள் இருவரும் உயிர் பிழைத்தனர். இச் செய்தியை அறிவிக்கும் புறப்பாடல் வருமாறு:“நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே. புலனுழு துண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழூஉ மழா அன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே."
‘சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது.'(46)
இந்தப் பாடலின்படி, மலையமான் மக்களைக் கிள்ளி வளவன் கொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருந்ததென்றால், இதற்கு முன்னமேயே தந்தை மலையமான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகும். இந்த மலையமான், கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகக் கருதப்படும் ‘ மலையமான் திருமுடிக்காரி’ என்னும் மலையமானா? - அல்லது - மலையமான் மரபைச் சேர்ந்த வேறொரு மலையமானா? - என்பது தெளிவுபடுத்தப்படவில்லை யாயினும், அவன் மலையமான் காரியாகத்தான் இருக்க வேண்டும்.
அதியமான் வெற்றி
மற்றும், அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னன் திருக்கோவலூரை வென்றதாக ஒரு செய்தி, அதியமானை ஔவையார் பாடியுள்ள,
‘பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்டு திகிரி ஏந்திய தோளே’’
- ‘அதியமான் - கோவலூர் எறிந்தானை ஔவையார் பாடியது’
என்னும் புறநானூற்றுப் (99) பாடல் பகுதியால் தெரிய வருகிறது. அதியமானால் வெல்லப்பட்ட திருக்கோவலூர் மன்னன் யார்? என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. அவன் காரியாகத்தான் இருக்கக்கூடும்.
எப்படியிருந்த போதிலும், சங்க காலத்தில், மலையமான் திருமுடிக்காரி சிறந்த கொடை மறவனாயம் படை மறவனாயும் திகழ்ந்து திருமுனைப்பாடி நாட்டை ஆண்டான் என்பது தெளிவு.மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
மலையமான் மரபைச் சேர்ந்த மன்னர் பலர், திருக்கோவலூரைத் தலைநகராகவும் முள்ளூர் மலையை அரணாகவும் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்களுள் ஒருவனே மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் இவனுக்கு ‘மலையமான் சோழிய ஏனாதி திருக்கிள்ளி’ என்ற பெயரும் உண்டு. இவன் சோழ மன்னரின் படைத் தலைவனாய்ப் பணி புரிந்ததால் ‘சோழிய ஏனாதி’ என்னும் சிறப்புப் பட்டம் அளிக்கப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. சங்ககாலக் குறுநில மன்னனாகிய இவனும், மலையமான் திருமுடிக்காரியைப் போலவே ஒரு வள்ளலாய்த் திகழ்ந்தான். இவனை மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர் பெருமான் புகழ்ந்து பாடிய பாடலொன்று புறநானூற்றில் (174) காணப்படுகிறது. அதிலுள்ள சில கருத்துக்கள் வருமாறு:
சோழன் ஒருவன் நாடிழந்து பகைவர்க்கு அஞ்சி ஓடி வந்து மலையமான் திருக்கண்ணனிடம் அடைக்கலம் புகுந்தான். இவன் அவனைத் தன் முள்ளூர் மலையரணில் வைத்துக் காத்து வந்தான். தக்க சூழ்நிலை உருவாகியதும், மலையமான் சோழனைச் சோழ நாட்டிற்கு அழைத்துச் சென்று பகை களைந்து மீண்டும் அரியணையில் அமர்த்தினான். மன்னனையிழந்து மயங்கி வருந்திய சோழநாடு மகிழ்வெய்திற்று. இங்கே பாடலாசிரியர் ஓர் அழகான ஒப்புமை தந்துள்ளார்: “அரக்கர்களால் கதிரவன் மறைக்கப்பட உலகம் இருளில் ஆழ்ந்து வருந்தியபோது திருமால் கதிரவனை மீட்டு உலகிற்கு ஒளியுண்டாக்கியது போன்று, பகைவரால் சோழன் விரட்டப்படச் சோழநாடு கலங்கியபோது மலையமான் திருக்கண்ணன் மன்னனை மீட்டுக் கொணர்ந்து சோழ நாட்டை மகிழ்வித்தான்” எனப் புகழ்ந்துள்ளார் ஆசிரியர். அப் பாடலை மேலும் ஓர் உவமை அணி செய்கிறது. புலவர் திருக்கண்ணனை நோக்கி, “மழையின்றிக் கொடிய கோடையின் வெப்பம் உலகை வருத்தும்போது மிக்க மழை பெய்தாற்போல, நும் முன்னோன் விண்ணுல கடைந்ததால் நாடு துயருற்றபோது நீ மன்னனாய்த் தோன்றி நன்முறையில் நாடு காவல் புரிகின்றாய்” என்று புகழ்ந்துள்ளார். இனி, பாடலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
- “அணங்குடை யவுணர்...--
- அருவழி யிருந்த பெருவிறல் வளவன்
- மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை
- புதுமையி னிறுத்த புகழ்மேம் படுந.......
- விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூட்
- சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
- ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச் சென் றுணீஇயர்
- உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தன னாகலின்......
- நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல் ........
- கோடை நீடிய பைதறு காலை.....
- உருமுரறு கருவிய மழைபொழிந் தாங்கே.
(28 அடிகள் கொண்ட பாடலிலிருந்து, இன்றியமையாத 10 அடிகள் மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.) இப் பாடலில் - உள்ள பெரும்பெயர் நும்முன்’ என்னும் தொடருக்கு, ‘பெரிய புகழினையுடைய நும்முன்னாகிய தந்தை’ என, பெயர் தெரியாத பழைய உரையாசிரியர் ஒருவர் பொருள் எழுதியுள்ளார்; இக்காலத்து உரையாசிரியர் சிலரும் இவ்வாறே கூறுகின்றனர். இங்கே, பெரிய புகழுடைய தந்தை என்று குறிப்பிடப் பட்டிருப்பவன், மலையமான் திருமுடிக் காரியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், வரலாற்றுக்குத் தெரிந்தவரையில், மலையமான் மரபில் மிகவும் புகழ்பெற்று விளங்கியவன் திருமுடிக்காரி தானே! பாடலில் உள்ள ஈரடிகள் இந்தக் கருத்துக்கு மிகவும் துணை செய்கின்றன. திருக்கண்ணனுடைய முன்னோன், இந்த உலகில் செய்த நல்வினையின் பயனை அந்த (மேல்) உலகில் நுகர்வதற்காகச் சென்றுள்ளானாம். இக்கருத்தை, ‘நும்முன், ஈண்டுச் செய் நல்வினையாண்டுச்சென் றுணீஇயர், உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன்’ என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அப்படி, இவ்வுலகில் மிகுதியாக நல்வினை - நல்லறம் செய்திருக்கும் மன்னன் மலையமான் மரபில் திருமுடிக்காரிதான். அவன் தன் உடைமைகளை யெல்லாம் வந்து கேட்ட இரவலர்க்கு உரித்தாக்கி விட்டதாகப் புறப்பாடல்களும் பிறவும் அவனைப் புகழ்ந்துள்ளன. கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகவும் அவன் போற்றப் படுகிறான். எனவே, இப் பாடலில் ‘நும்முன்’ என்று சுட்டப்படுபவன் மலையமான் திருமுடிக்காரியே. அங்ஙனமெனில், மலையமான் திருமுடிக் காரிக்கு அடுத்தாற்போல் பட்டத்துக்கு வந்தவன் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பது தெளிவு.
இந்தத் திருமுடிக்காரிக்கும் திருக்கண்ணனுக்கும் இடையேயுள்ள உறவுமுறை யாது? பாடலிலுள்ள ‘நும்முன்’ என்னும் தொடருக்கு ‘நும்முன்னாகிய தந்தை’ எனப் பழைய உரையாசிரியரும் புதிய உரையாசிரியரும் பொருள் எழுதியிருப்பதாக முன்னர்க் கூறப்பட்டது. இந்தப் பொருளின்படி பார்த்தால், திருமுடிக்காரியின் மைந்தன் திருக்கண்ணன் என்ற கருத்து கிடைக்கிறது. ஆனால், இது பொருந்தாது; அஃதாவது, ‘நும்முன்’ என்பதற்கு ‘நும் தந்தை’ என உரையாசிரியர்கள் கூறியிருக்கும் பொருள் பொருந்தாது. உண்மையில் தந்தை என்று குறிப்பிட்டிருக்க வேண்டுமென்றால் ‘நுந்தை’ என்னும் சொல்லைப் பெய்திருப்பார் புலவர். அங்ஙனமின்றி, ‘நுமக்கு முன் பிறந்த அண்ணன்’ என்னும் பொருளிலேயே புலவர் ‘நும்முன்’ எனக் கூறியுள்ளார். ‘முன்’ என்னும் சொல், முன் பிறந்த அண்ணன் என்ற பொருளிலேயே ஆன்றோர்களால் ஆளப்பட்டுள்ளது. பெரும்பற்றப் புலியூர் நம்பி என்னும் புலவர் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில், விநாயகர் ஆறு முகங்களையுடைய முருகனுடைய அண்ணன் என்னும் பொருளில்
- *அறுமுகேசன் முன்"[1]
எனப் பாடியுள்ளார். இங்கே ‘முன்’ என்னும் சொல்லுக்கு, முன் பிறந்த அண்ணன் என்பது பொருள், முன் என்றால் முன் தோன்றிய அண்ணன் என்று பொருள் விளக்குவார் போன்று புகழேந்திப் புலவர்,
- “பாண்டவரின் முன்தோன்றல் பார் முழுதும் தோற்று"[2]
என்று நளவெண்பாவில் பாடியுள்ளார். பாண்டவரின் முன்தோன்றல் என்றால், பாண்டவர்களுக்கு முன் பிறந்த அண்ணனாகிய தருமன், என்பது பொருள், திருமங்கையாழ்வாரும் திவ்வியப் பிரபந்தத்தில்,
- "தன்னுடைய முன்தோன்றல் கொண்டேக"[3]
என அண்ணன் என்னும் பொருளில் பாடியுள்ளார்.
இன்னும் தெளிவான சான்று வேண்டுமானால் கம்பராமாயணத்துக்குச் செல்லலாம். காட்டிலிருந்து இராமனை நாட்டிற்கு அழைத்துவரச் சென்ற பர தன கங்கைக் கரையில் குகனை நோக்கி, ‘நம் அண்ணன் இராமன் இங்கே தங்கியிருந்த இடத்தைக் காட்டுக’ என்று கேட்டான். இந்தச் செய்தியை அறிவிக்கும் கம்பராமாயணப் பாடல் பகுதி,
- *“எவ்வழி உறைந்தான் றம்முன் என்றலும்” [4]
என்பதாகும். ஈண்டு ‘நம்முன்’ என்பது ‘நம் அண்ணன்’ என்னும் பொருளைக் குறிக்கிறது. குகனும் ஓர் உடன் பிறந்தவனாக இராமனால் கொள்ளப்பட்டுள்ளான் என்பது நினைவு கூரத்தக்கது.
இவ்வாறு ஆன்றோர் பலரின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு ஆராயின், ‘நும்முன்’ என்பதற்கு ‘நும் அண்ணன்’ என்ற பொருளே பொருந்தும் என்பது போதரும். இதனால், திருமுடிக்காரியின் தம்பி திருக்கண்ணன் என்ற உறவுமுறையும் தெளிவுப்படும். இந்தக் கருத்தையெல்லாம் வைத்துக் கொண்டு ஆராயின், இங்கே, ஒரு செய்தியைப் பின்வருமாறு நுனித்துணர்ந்து கூறலாம்:
‘மலையமான் திருமுடிக்காரி தன் வாணாள் இறுதியில் சோழப் பேரரசுடன் பகைத்துக் கொண்டிருக்கவேண்டும். இருதிறத்தார்க்கும் நடந்த போரில் சோழன் காரியைக் கொன்று அவன் இளஞ்சிறார்களைச் சிறைப்பிடித்துச் சென்று யானை இடறிக்கொல்ல ஏற்பாடு செய்தான். புலவர் கோவூர் கிழார் தடுத்துக் குழந்தைகளைக் காத்தார். கோவூர் கிழாரால் ஏற்பட்ட இந்த நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, திருமுடிக்காரியின் தம்பியாகிய திருக்கண்ணன் மீண்டும் சோழர் நட்பைப் புதுப்பித்துக் கொண்டான். சோழரின் கீழ்க் குறுநில மன்னனாயும் அவர் தம் படைத்தலைவனாயும் பணிபுரிந்து வந்தான். அதனால்தான், ‘சோழிய ஏனாதி’ என்ற பட்டமும் இவனுக்குக் கிடைத்தது.
மலையமான்கள் இருவரின் உறவு முறையைத் தெளிவு செய்து கொள்வதற்குச் சங்கநூற் பாடல்கள் நன்கு துணை செய்கின்றன. மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் (புறம் : 37, 39, 226) பாடியுள்ளார்; மலையமான் திருமுடிக்காரியையும் (புறம் : 126) பாடியுள்ளார்; மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனையும் (புறம் : 174) பாடியுள்ளார்; அதிலும், ஒவ்வொருவரையும் நேரில் விளித்துப் பாடியுள்ளார். எனவே, இந்த மன்னர்கள் மூவரும் மாறோக்கத்து நப்பசலையார் காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. இது நிற்க, கோவூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நான்கு பாடல்களில் (புறம் : 41, 46, 70, 386) பாடியுள்ளார்; இவற்றுள் ஒன்றில் (புறம் : 46) மலையமான் மக்களைக் கொல்ல வேண்டா எனக் கிள்ளிவளவனுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது நிற்க, பரணர் என்னும் புலவர் மலையமானை ஒரு (நற்றிணை - 100) பாடலிலும், அதியமான் நெடுமான் அஞ்சியை ஒரு (அகநானூறு - 372) பாடலிலும் பாடியுள்ளார். இதிலிருந்து மலையமான் திருமுடிக்காரி காலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சி வாழ்ந்துள்ளான் என்பதும் புலனாகும். அதியமான் நெடுமான் அஞ்சி திருக்கோவலூரை வென்றதாக ஒளவையார் (புறம் : 99) பாடியிருப்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.
இதுவரையும் எடுத்து காட்டியுள்ள சங்க நூற்பாடல்களை அடிப்படையாக வைத்து ஆராயுங்கால், பின்வரும் செய்திகள் புலனாகலாம்:
“தன் நண்பன் ஓரியைக் காரி கொன்றதைப் பொறாத அதியமான் அஞ்சி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனோடு சேர்ந்துகொண்டு மலையமான் திருமுடிக் காரியை எதிர்த்து வெற்றிபெற்றிருக்கிறான். அவன் திருக்கோவலூரை அழித்ததாகப் பொதுப்படையில் ஒளவையார் குறிப்பிட்டிருப்பது இந்த வெற்றியாகத்தான் இருக்க வேண்டும். இந்தப் போரில் திருமுடிக்காரி செத்தே போனான். அவனுடைய இளஞ்சிறார்களைக் கிள்ளிவளவன் கொல்ல முயன்றான். கோவூர் கிழார் தடுத்துக் காத்தார். திருமுடிக்காரியின் மக்கள் இளஞ்சிறாராயிருந்ததனால், அவன் தம்பி மலையமான் திருக்கண்ணன் சோழரது நட்பைப் பெற்று அவர்தம் தலைமையின் கீழ்க் கோவலூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்” இவ்வாறு நடந்திருக்கலாம். எனவே, திருமுடிக்காரியின் தம்பி திருக்கண்ணன் என்ற கருத்து வலியுறும். ஆகவே, திருமுடிக்காரிக்குப் பின்னர்த் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டவன் திருக்கண்ணன் என்பது தெளிவுறும். இவர்கள் மரபினர் மிகமிகப் பிற்பட்ட காலம்வரையும் தொடர்ந்து சிற்றரசர்களாய் அரசாண்டு வந்தனர்.
மலையமான் மரபினர்
மலையமான் மரபினர்க்குத் திருக்கோவலூரேயன்றி, ஒவ்வொரு காலத்தில் ஆடையூரும் கிளியூருங்கூடத் தலைநகர்களாய் இருந்தன. கிளியூரிலிருந்து ஆண்ட மன்னர்கள் கிளியூர் மலையமான்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆண்ட பகுதிக்குச் ‘சேதி நாடு’ என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. “கிளியூர் மலையமாந் பெரியுடையானான இராசராசச் சேதிராயனும், கிளியூர் மலையமாந் ஆகார சூரநான இராச கம்பீரச் சேதிராயனும்” - எனத் திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டொன்றிலுள்ள தொடர்களை ஈண்டு ஒப்பு நோக்குக.சோழர் மேலாட்சி
பொதுவாக, மலையமான் மரபினர் மற்றவரினும் சோழப் பேரரசர்கட்கு உற்ற துணைவராய் அவர்தம் மேலாட்சியின்கீழ் இருந்து வந்ததாகத் தெரிகிறது. சான்றாக, சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னனும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனும் போர் புரிந்த போது மலையன் சோழனுக்குத் துணை புரிந்த செய்தியைப் பேரி சாத்தனார் பாடிய (125ஆம்) புறநானூற்றுப் பாடல் அறிவிப்பது காண்க.
நாடும் நகரும்
மெய்ப் பொருள் வேந்தர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலாடு (திருமுனைப்பாடி) நாட்டை ஆண்டவர். இந் நாட்டிற்குச் சேதிநாடு என்னும் பெயரும் உண்டு. இந்தச் செய்திகளை,
- [5]*"சேதிநன் னாட்டு நீடு திருக்கோவ லூரின் மன்னி
- மாதொரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான் “
- “இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
- மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து”
- "சோதிவெண் கொடிகள் ஆடும் சுடர்நெடு மறுகிற் போகிச்
- சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்”
- "இன்னுயிர் செகுக்கக் கண்டு எம்பிரான் அன்பர் என்றே
- நன்னெறி காத்த சேதி நாதனார்”
என்னும் பெரிய புராணப் பாடல் பகுதியால் அறியலாம். மெய்ப் பொருள் வேந்தரை ‘மலாடர் கோமான்’ எனச் சேக்கிழார் கூறியிருப்பதைக் கொண்டு, இவ்வேந்தர் மலையமான் மரபில் வந்தவர் என்பது புலனாகும். மலையமான் மரபில் வந்தவர்களுள் பல பங்காளிக் குடும்பங்கள் இருந்திருக்கலாம், அவற்றுள் ஒரு பிரிவுக்குச் ‘சேதியர்’ என்னும் மரபுப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவரே ‘மெய்ப்பொருள் வேந்தர்’ அதனால்தான் இவர், ‘சேதியர் பெருமான்', ‘சேதி நாதனார்', என்றெல்லாம் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ளார். சேதியரால் ஆளப்பட்டதால் நாடு ‘சேதி நாடு’ எனப்பட்டது.
ஆட்சியும் மாட்சியும்
மெய்ப் பொருள் வேந்தர் அறநெறி வழுவாமல் நாடுகாத்தார்; சிறந்த வீரமும் வலிமையும் உடையராய் விளங்கினார்; போர் முனைகள் பல வென்றார். முத்தநாதன் என்னும் பகை மன்னன் ஒருவன் மெய்ப்பொருள் வேந்தரை வென்று சேதிநாட்டைப் பறித்துக் கொள்ளப் பலமுறை முயன்று படையெடுத்துப் பார்த்தான்; ஒவ்வொரு முறையும் தோல்வியே அவனுக்குக் காத்துநின்றது; எனவே, குதினால் வெல்லச் சூழ்ச்சி செய்தான்.
புராண வரலாறு
மெய்ப் பொருள் மன்னர் படைவீரத்துடன் கொடை வீரமும் உடையவராய்த் திகழ்ந்தார்; புலவர்களைப் போற்றினார்; சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வழிபட்டார்; அடியார்கள் விரும்பியன வெல்லாம் அளித்து வணங்கினார். மெய்ப்பொருளாரது இவ்வியல்பறிந்த முத்தநாதன் ஒரு சிவனடியார்போல் கோலங்கொண்டு கோவலூர் அரண்மனை யெய்தினான். அடியார் என நம்பிய மெய்ப்பொருளார் அவனை வரவேற்று வணங்கினார். தான் அரிதிற் கிடைத்த அருள் நூற் பொருள் விளக்க வந்திருப்பதாக அவன் அறிவித்தான். அவனை மேலிருத்தி, தாம் கீழிருந்து, அருளுரை வழங்க வேண்டினார் மன்னர். அவன் அருள் நூலை எடுப்பவன்போல், மறைத்து வைத்திருந்த கூரிய கொலைக் கருவியை எடுத்து அரசர்மேல் பாய்ச்சி நினைத்ததை முடித்தான். அடுத்து நின்றிருந்த அரசரின் உதவியாளனாகிய தத்தன் என்பான் முத்தநாதன்மேல் பாய முனைந்தான். அரசர் தடுத்து, அடியாரை நகர் எல்லை தாண்டும்வரை காவலுடன் இட்டுச் சென்று நலமுடன் வழியனுப்பி வரும்படி பணித்தார். அவனும் அவ்வாறே செய்தான். அந் நற்செய்தியறிந்து மகிழ்ந்து மன நிறைவுடன் உயிர் நீத்தார் மெய்ப்பொருளார் - இது பெரிய புராண வரலாறு.
நாயனார்
இறைவன் திருவருளே மெய்ப்பொருள் என உணர்ந்து ஒழுகியதால் இவர் மெய்ப்பொருள் வேந்தர் எனப் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அங்ங்னமெனில் இவருக்கு இயற்பெயர் ஒன்று இருந்திருக்கவேண்டும். இவர் சிவநெறியிலும் சிவனடியார் வழிபாட்டிலும் மிக்குச் சிறந்து விளங்கியதால், சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக வைத்து வழிபடப் பெறுகிறார். சைவ உலகம் இவரை மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைக்கும்.
காலம்
எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினர் எனக் கருதப்படும் சுந்தரரால் இவர் திருத்தொண்டத் தொகையில் பாடப்பட்டிருப்பதால், சுந்தரர் காலத்துக்கும் முற்பட்டவர் இவர் என்பது தெளிவு. “இவர் வழியில் சுதர்மான் முதலிய மூவர் வம்சம் உண்டாயிற்று. இவர் காலம் ஒளவையார் காலமாக இருத்தல் வேண்டும். தந்தை தெய்வீக அரசன், தாய் சோழன் குமாரியாகிய பொன்மாலை” - என இவரைப் பற்றி ‘அபிதான சிந்தாமணி’ ஆசிரியர் எழுதியிருப்பது ஆராய்ச்சிக்குரியது.
நாடும் மரபும்
கெடிலக்கரை சார்ந்த திருமுனைப்பாடி நாட்டைப் பல்வேறு காலங்களில் பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். பல்வேறு மரபுகளைச் சேர்ந்த பேரரசர்கள் நேரடி ஆட்சி புரிந்திருப்பதன்றி, பேரரசர்களின் கீழ்ப் பல்வேறு மரபுகளைச் சேர்ந்த சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் செங்கோல் செலுத்தியுள்ளனர்; அவர்களுள் ஒருவர் நரசிங்க முனையரையர் என்பவர். இவர் நரசிங்க முனையர் எனவும் அழைக்கப்படுவதைப் பெரிய புராணத்தில் காணலாம்.
நரசிங்க முனைரையரின் குலமரபின் பெயர் ‘முனைய தரையர்’ என்பதாகும்; இது, ‘முனையரையர்” எனவும், ‘முனையர்’ எனவும் பின்னர் மருவிற்று. இம்மரபு குறுநில மன்னர் மரபாகும். கொடி - இலச்சினை. சிங்கம்; நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி என்னும் நாட்டுப் பகுதியை அரசாண்டதாகச் சேக்கிழார் தெரிவித்துள்ளார்:
[6]"தேடாத பெருவளத்தில் சிறந்த திரு முனைப்பாடி
நாடுஆளும் காவலனார் நரசிங்க முனையரையர்"
என்பது பெரிய புராணப் பாடல். ‘முனைப்பாடி என்ற நாட்டின் பெயருக்கும் முனையரையர்’ என்னும் அரச மரபின் பெயருக்கும் சொல் அளவிலேகூட மிக்க தொடர்பு இருப்பதைக் காணலாம். முனையரையர்கள் ஆண்டதால் ‘முனைப்பாடி நாடு’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்குமா? அல்லது, முனைப்பாடி நாட்டை யாண்டதால் முனையரையர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்குமா? - என்றெல்லாம் ஆராயத் தோன்றலாம். இவ்விரண்டனுள் எதற்கு எது காரணம் என்பது எளிதில் தெளிவுபடாவிடினும், இவ்விரண்டும் நெருங்கிய தொடர்புடையவை என்பது வரைக்கும் மலையத்தனை உண்மை!
திருமுனைப்பாடி நாட்டு மன்னராய நரசிங்க முனையரையர் எந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு அரசு செலுத்தினார்? அவருடைய காலம் யாது? என்ற வினாக்கட்கு விடைகாண வேண்டும்:
தலைநகர்
நரசிங்க முனையரையர், திருநாவலூரில் பிறந்த நம்பி யாரூரர் என்னும் சுந்தரரைத் தம் செல்லப்பிள்ளையாக எடுத்து வளர்த்து வந்தார் எனப் பெரியபுராணம் தெரிவிக்கிறது.
[7]பரவருங் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
என்பது பெரிய புராணச் செய்யுள். இது வெற்றுப் புராணச் செய்தி மட்டுமன்று, திருநாவலூர் மக்களும் வாழையடி வாழையாகச் செவிவழி அறிந்து வைத்து இச் செய்தியைத் தெரிவிக்கின்றனர்.
மற்றும் சுந்தரருங்கூட, தமது தேவாரத்தில் திருநாவலூர்ப் பதிகத்தின் இறுதிப் பாடலில், நரசிங்க முனையரையர் திருநாவலூரில் இருந்து இறைபணி புரிந்தார்’ என்னும் செய்தியைத் தெரிவித்துள்ளார். அப் பாடல் வருமாறு:
ஆதரித்தீசனுக் காட்செயும் ஊர்அணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டன் ஆரூரன் உரைத்ததமிழ்
‘திருநாவலூர், இறைவன் எழுந்தருளியுள்ள ஊராகும்; என்னுடைய ஊருமாகும்; நரசிங்க முனையரையன் இறைவனுக்கு ஆட்செயும் ஊருமாகும்’ எனச் சுந்தரர் கூறியுள்ளார். இதன் வாயிலாக, திருநாவலூர்க்கும் நரசிங்க முனையரையர்க்கும் இருந்த நெருங்கிய தொடர்பு புலப்படும்.
மற்றும், முனையரையர் மரபினர் நரசிங்கன், இராமன் என்னும் இரு பட்டப் பெயர்களையும் மாறி மாறி வைத்துக் கொண்டு நரசிங்க முனையரையர், இராம முனையரையர் என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நரசிங்கன், இராமன் என்னும் பெயர்கள் திருநாவலூர் வட்டாரத்து மக்களிடையே மிகுதியாய் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனாலும், முனையரையர் மரபினர்க்கும் திருநாவலூர் வட்டாரத்திற்கும் இருந்த உறவு அறியப்படும்.
இச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயின், திருநாவலூர் வட்டாரமே நரசிங்க முனையரையரின் தலைநகராய் இருந்திருக்கக் கூடும் என நுனித்துணரலாம். இதற்குத் தக்க சான்று வேறு ஒன்றும் கூற முடியும்:
திருநாவலூரில் சிவன் கோயிலுக்கு எதிரேயுள்ள சிறிது மேடான நிலப்பகுதியை அவ்வூர் மக்கள் கச்சேரி மேடு என அழைக்கின்றனர். “கச்சேரி” என்பது அரசனது திருவோலக்க அவையைக் குறிப்பதாகும். அவ்விடத்தில் அரசவை கூடி அரச வினைகள் ஆராயப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அங்கே அரசவை கூடிற்றென்றால், அதுதானே அரசனது தலைநகராய் இருந்திருக்கக்கூடும்! எனவே, நரசிங்க முனையரையர் சுந்தரரைப் பிள்ளையாக எடுத்து வளர்த்த செய்தியைக் கொண்டும், கச்சேரி மேடு என்னும் பழைய வழக்காற்றுப் பெயரைக் கொண்டும், திருநாவலூர் நரசிங்க முனையரையரின் தலைநகராயிருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். இது குறித்து மாற்றுக் கருத்து ஒன்றும் கூறலாம்:
கெடிலத்தின் வடகரையில் உள்ள திருநாவலூருக்குத் தென் மேற்கே 4 கி.மீ. தொலைவில் - கெடிலத்தின் தென்கரையில் சேந்த மங்கலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. நரசிங்க முனையரையருக்குச் சில நூற்றாண்டுகள் பிற்பட்ட கோப்பெருஞ் சிங்கன் என்னும் வலிய மன்னனுக்குத் தலைநகராக விளங்கிய ஊர் இது. பாழடைந்த கோட்டை ஒன்றை இன்றும் இவ்வூரில் காணலாம். இவ்வூர் பற்றி, ‘கோப்பெருஞ் சிங்கன்’ என்னும் தலைப்பிலும், சேந்த மங்கலம்’ என்னும் தலைப்பிலும் வேறிடங்களில் விரிவாகக் காணலாம். இந்த ஊர் தான் நரசிங்க முனையரையரின் தலைநகராய் இருந்திருக்கக் கூடும் என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. திருநாவலூர்க் கோயிலில் பூசனை புரியும் பெரியார் ஒருவர் இந்தக் 0கருத்துப்பட என்னிடம் சில கூறினார். சேந்த மங்கலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருத்தலானும், திருநாவலூருக்கு மிக அண்மையில் இருத்தலானும், இந்தக் கருத்தில் உண்மையிருக்க முடியும். அடுத்தடுத்துள்ள சேந்த மங்கலத்தில் அரசரது அரண்மனையும், திருநாவலூரில் அரசவை கூடும் மாளிகையும் இருந்திருக்கலாம். சேந்த மங்கலம் திருநாவலூர் உட்பட 10 கி.மீ. பரப்புக்குத் தலைநகரப் பகுதி விரிந்திருக்க வேண்டும் என அவ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது எப்படியிருந்த போதிலும், திருநாவலூர் வட்டாரமே நரசிங்க முனையரையரின் தலைநகரப் பகுதி என்று பொதுப்படையாகக் கூறுவதில் தவறொன்றும் இல்லை.
காலம்
நரசிங்க முனையரையர் சுந்தரரை மகன் மை கொண்டு வளர்த்ததாக அறியப்படுவதால், இவரது காலம் சுந்தரர் காலம் என்பது புலனாகும். சுந்தரர் காலம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இக் கால ஆராய்ச்சி குறித்து, ‘சுந்தரர்’ என்னும் தலைப்பில் சிறிது விரிவாகக் காணலாம். எனவே, நரசிங்க முனையரின் காலம், எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
அருட்பணி
நரசிங்க முனையரையர் நலமும் வளமும் பெருக நாடாண்டமாண்புடன், கனிந்த இறையன்பு மிக்கவராயும் திகழ்ந்தார். சிவன் பால் இவருக்கு இருந்த ஈடுபாடு வியத்தற்பாலது. அதனால் இவர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக வைத்து வழிபடப்பட்டு வருகிறார்.
இடையறாத சிவத்தொண்டில் ஈடுபட்ட நரசிங்க முனையர் திருக் கோயில்களில் செல்வங்களைப் பெருக்கினார்; திங்கள் தோறும் திருவாதிரை நாளில் சிவனுக்குச் சிறப்பு விழா நடத்தினார். அந்நாளில் வரும் சிவனடியார் ஒவ்வொருவருக்கும் நூறு பொற்காககள் பரிசளிப்பது இவர் வழக்கம். ஒரு நாள் ஒரு தொண்டர் காட்சிக்குக் காமுகர் போல் காணப்பட்டதால், அங்கிருந்த பலராலும் பழிக்கப்பட்டு இழிக்கப்பட்டாராம். அஃதறிந்த நரசிங்கர், சிவக்கோலம் கொண்டோர் எவரும் வழிபடுதற்கு உரியவரே என உரைத்து அவரைப் பெரிதும் போற்றி, அவருக்கு இரட்டிப்பாக இருநூறு பொற் காசுகள் நல்கியனுப்பினாராம். இவ்வாறு பெரியபுராணம் கூறுகிறது.
அரசர்க்கு அரசராய், அடியார்க்கு அடியாராய்த் திகழ்ந்து கெடிலக்கரை யீன்றளித்த செல்வமாய் விளங்கிய நரசிங்க முனையரையரைப் பற்றி, “இவர் காலம் ஒளவையார் காலம்; தந்தை தெய்வீக அரசன், தாய் பாண்டியன் குமரியாகிய காஞ்சனமாலை” என அபிதான சிந்தாமணியாசிரியர், கூறியிருப்பது ஆராயற்பாவது. மேலும் அந் நூலாசிரியர், ‘சுந்தரரை எடுத்து வளர்த்த நரசிங்க முனையரையர் வேறு, சிவனடியார்க்குப் பொன் வழங்கிய நரசிங்க முனையரையர் வேறு என்று கூறியிருப்பதும் ஆராயத்தக்கது. மற்றும், ‘நரசிங்கர்’ என்னும் பெயரைக் கொண்டு, இவர் பல்லவ மரபினரா யிருக்கலாம்’ என எவரேனும் கூறினும் வியப்படைவதற்கில்லை.
தெய்வீக மன்னன்
திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு தெய்வீகன் என்னும் மன்னன் நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டை முன்னொரு காலம் ஆண்டதாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. ஒளவையார் பாரி மகளிரை இந்தத் தெய்வீக மன்னனுக்கு மணம் செய்வித்ததாகவும், இம்மன்னன் வழியில் வந்தவர்களே மலையமான் மரபினர் என்பதாகவும் பல்வேறு செய்திகள் இவனைப் பற்றிக் கூறப்படுகின்றன. இவனைப்பற்றி அறியச் சங்கநூற் சான்று ஒன்றும் இலது. புராணங்களை அடிப்படையாகக் கொண்டு இவனைப் பற்றிய செய்திகள் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. ‘தெய்வீக மகாராஜன்’ என்னும் பெயரில் இவனைப் பற்றி அபிதான சிந்தாமணி ஆசிரியர் எழுதியுள்ள செய்திகள் அதில் உள்ளபடியே வருமாறு:
தெய்வீக மகாராஜன்
இவன் நடுநாட்டை ஆண்ட அரசருள் ஒருவன். இவன் கல்யாணத்தில் ஒளவை சென்று, பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு இம் மூன்றினையும் முறையே பால், நெய், வெண்ணெயாக வரும்படி ஏவினள். ஆதலால் அவ்வாறு வந்தன வென்பர். சிவமூர்த்தி தனித்து இருக்கையில் பர்வதராஜன் காணச்சென்று சாபம் அடைந்து குகமுனிவர் யாகத்தில் பிறந்து தெய்வீக அரசன் என்று பெயர் பெற்றனன். இவன் தெய்வப் புரவி ஊர்ந்து காசி, சிதம்பரம், இராமேச்சுரத்தை நாள் தோறும் தெரிசித்து வருவன். இவனிடமுள்ள குதிரையைப் பிடுங்க ஆவல் கொண்ட தமிழ் நாட்டரசர் மூவரும் மந்திரியரை ஏவிக் குதிரையைக் கேட்டு அனுப்பினர். அரசன் மறுத்தமையால் மூவரசரும் யுத்த சந்நத்தராய் நாங்கள் தோற்பின் எங்கள் கன்னியரைத் தருகின்றோம் நீர் தோற்பின் உமது குதிரையைத் தருக எனப் பந்தயம் இட்டு யுத்தத்தில் தோற்றுத் தமது கன்னியரை அரசனுக்கு மணஞ்செய்வித்தனர். இவன் காரண்டன், வல்லூரன் எனும் இரண்டு அசுரரை வதைத்து, பாண்டியன் புத்திரியாகிய காஞ்சனமாலையை மணந்து, நரசிங்க முனையரைய நாயனாரைப் பெற்றுச் சோழன் புத்திரியாகிய பொன் மாலையிடம் மெய்ப்பொருள் நாயனாரைப் பெற்றுச் சேரன் குமரியாகிய பத்மாவதியிடம் சித்திர சேநனைப் பெற்று முத்தி அடைந்தனன். இவன் வழியில் நந்தமான் வம்சம், சுதர்மான் வம்சம், மலையமான் வம்சம் உண்டாயின.
மேலுள்ள அபிதான சிந்தாமணிக் கருத்துக்களை நம்பினால், மெய்ப்பொருள் நாயனாரும் நரசிங்க முனையரையரும் தெய்வீகனின் மக்கள் எனவும் மலையமான்கள் தெய்வீகனின் பேரப் பிள்ளைகள் எனவும் கொள்ள வேண்டும். கொள்ளவே, மெய்ப்பொருள் நாயனாரும் நரசிங்க முனையரையரும், நரசிங்கரால் வளர்க்கப் பெற்ற சுந்தரரும், சங்க காலத்தில் வாழ்ந்த மலையமான் திருமுடிக் காரி முதலிய மன்னர்களினும் காலத்தால் முற்பட்டவர்கள் என்று கொள்ள வேண்டி வரும். இத்தகைய முடிவுகள் சிறிதும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்துவனவாகத் தெரியவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககால மலையமான்கள் எங்கே? எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினரான நரசிங்க முனையரையர் எங்கே?
சங்க கால மன்னர்களின் - மக்களின் பெயர்கள் தனித் தமிழ்ப் பெயர்களாகவும், சங்க காலத்துக்குப் பிற்காலத்து மன்னர்களின் - மக்களின் பெயர்கள் வடமொழிச் சார்புடையனவாகவும் இருப்பதைக் காணலாம். எடுத்துக் காட்டாக, சங்க காலத்தில் சோழ மன்னர்களின் பெயர்கள் கரிகாலன், நெடுமுடிக்கிள்ளி என்பனவாகவும், பாண்டிய மன்னர்களின் பெயர்கள் இளம்பெருவழுதி, நெடுஞ்செழியன் என்பனவாகவும் இருந்ததையும், பிற்காலத்தில் சோழர் பெயர்கள் விஜயாலயன், இராஜராஜன் என்பனவாகவும், பாண்டியர் பெயர்கள் ஜடாவர்மன் , சுந்தரபாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பனவாகவும் இருந்ததையும் காண்க. எனவே, தனித்தமிழ்ப் பெயர்களையுடைய மலையமான் திருமுடிக்காரி, மலையமான் திருக்கண்ணன் முதலியோர் முற்பட்டவர் என்பதும், வடமொழிப் பெயருடைய நரசிங்க முனையரையர் பிற்பட்டவர் என்பதும் தெளிவு.
இந்த ஆராய்ச்சி அடிப்படையில் வைத்துக் காணுங்கால், தெய்வீகன் மலையமான்களின் முன்னோனாக இருக்க முடியாது; மலையமான்களுக்குப் பின்னால், தெய்வீகன் என்னும் மன்னன் ஒருவன் திருக்கோவலூரை ஆண்டு இருக்கலாம் - என்பது புலனாகும். ஒரு வேளை, மெய்ப்பொருள் நாயனார் முதலியோர் வேண்டுமானால் தெய்வீகன் வழி வந்தவரா யிருக்கலாம். எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.
குல மரபு
ஒரு காலத்தில் கெடிலக் கரையில் பேரும் புகழுமாய் அரசோச்சிய கோப்பெருஞ் சிங்கன் என்னும் மன்னவன், காடவர் அல்லது காடவராயர் என்று அழைக்கப்படும் குல மரபைச் சேர்ந்தவன். இம்மரபினர் ‘சம்பு குலக்காடவராயர்’ என்றும் அழைக்கப்படுவர். காடவர் அல்லது காடவராயர் என்பது பல்லவ மன்னரைக் குறிக்கும் பட்டப் பெயராகும். *[8]” காடவர் கோன் கழற் சிங்கன் என்னும் சுந்தரரது தேவாரப்பாடல் ஆட்சியினும் இதனை அறியலாம்.
மூன்றாம் நூற்றாண்டிற்கு மேல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் தமிழகத்தில் பல்லவப் பேரரசர்கள் பெருஞ் செல்வாக்குடன் அரசு புரிந்து வந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அபராசித பல்லவனோடு பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பின்னர், சோழப் பேரரசு தலையெடுத்து, பல்லவரது தொண்டை நாட்டையும் சேர்த்து விழுங்கி விட்டது. பல்லவ மரபு சிதைந்து பல்வேறு உருவம் எடுத்தது. பல்லவ மரபினருட் பலர், சோழப் பேரரசர்களின் அமைச்சராயும் படைத் தலைவராயும் அரசாங்க அலுவலராயும் பணி புரிந்தனர்; சிலர், சோழ வேந்தர்க்கு உட்பட்ட சிறு சிறு ஆணையர் (அதிகாரிகள்) ஆகவும் சிற்றரசர்கள் ஆகவும் குறுநில மன்னர்களாகவும் விளங்கி வந்தனர். இவர்கள் பிற்காலப் பல்லவர்கள்’ என வரலாற்றில் அழைக்கப்பட்டுள்ளனர்.
தென்னார்க்காடு மாவட்டத்தில், பன்னிரண்டு - பதின்மூன்றாம் நூற்றாண்டு கால அளவில் பிற்காலப் பல்லவர்கள் சிலர் சோழப் பேரரசர்களின் சிறந்த சிற்றறசர்களாய் விளங்கி, பகைச் சிற்றரசர் பலரை முறியடித்துச் சோழப் பேரரசுக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். விக்கிரம சோழன் (1120 -1135) காலத்தில் இவர்கள் மிக்க பெருமையும் செல்வாக்கும் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கெடிலத்தின் தென்கரையில் உள்ள திருமாணிகுழி வட்டாரத்தில், வளந்தானார் என்ற காடவர் சோழரின் ஆணையராய் ஆட்சி நடத்தி வந்தார். அவரை யடுத்து, அவர் மரபை (வழியைச்) சேர்ந்தவர்களான ஆட்கொல்லி, அரச நாராயணன், கச்சிராயன், வீரசேகரன், சீயன் என்பவர்கள் ஆணை செலுத்தி வந்தனர். இறுதியில் குறிப்பிடப் பட்டுள்ள சீயன் என்ற காடவனின் மகன் தான் சீயன் கோப்பெருஞ்சிங்கன் என்பவன்.
ஆட்சி
இவன், தென்னார்க்காடு மாவட்டத்தில் - திருக்கோவலூர் வட்டத்தில் கெடிலத்தின் தென் கரையில் உள்ள சேந்தமங்கலம் என்னும் ஊரைத் தலைநகராகக்கொண்டு 1243ஆம் ஆண்டு பட்ட மேற்றான். இவன் வீரத்துடன் சூழ்ச்சியும் மிக்கவன்; தன்னை வலுப்படுத்திக்கொள்ளச் சோழப் பேரரசின் வீழ்ச்சியை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான்; சிற்றரசனாகிய தனக்கு மேல் பேரரசனாக மேலாட்சி செலுத்தி வந்த மூன்றாம் இராசராசச் சோழனிடம் அச்சமும் பணிவும் கொண்டவன் போல் நடித்துக் கொண்டே பாண்டியப் பேரரசுடன் கள்ள நட்புக் கொண்டிருந்தான், ஈழத்து இளவரசன் ஒருவனையும் தனக்குத் துணைவனாக்கி வைத்திருந்தான். சோழப் பேரரசும் தளர்ச்சியுறத் தொடங்கியது.
சோழனின் சோர்வை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய வேந்தன், 1230 - 31ஆம் ஆண்டு கால அளவில் மூன்றாம் இராசராசச் சோழனை வென்று முடிகொண்ட சோழபுரத்தில் வெற்றி விழாக் கொண்டாடினான். தோல்வியுற்ற சோழ மன்னன் போசள மன்னனின் ஆதரவை நாடச் சென்று கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்துக் கோப்பெருஞ் சிங்கன் தெள்ளாறு என்னும் இடத்தில் சோழனை இடைமறித்து வென்று தன் தலைநகராகிய சேந்தமங்கலத்தில் கொண்டு வந்து சிறைவைத்தான். திருவயிந்திரபுரத்திலும் சிறை வைத்திருந்ததாகச் சொல்லப் படுகிறது. செய்தியறிந்த போசள மன்னன் வீர நரசிம்மன் (கன்னட நாட்டான்) படையுடன. புறப்பட்டு வந்து பொருது சோழனைச் சிறைமீட்டு மீண்டும் சோழப் பேரரசின் அரியணையில் அமர்த்தினான். இந்தப் போரில் கோப்பெருஞ் சிங்கனின் ஊர்கள் பலவும் கடலூர்த் துறைமுகமும் வீரநரசிம்மனால் அழிக்கப்பட்டன. இச் செய்தியைத் திருவயிந்திரபுரம் கல்வெட்டொன்று விரிவாகக் கூறுகிறது. பின்னர்க் கோப்பெருஞ்சிங்கன் போசள மன்னனைப் பெரம்பலூரில் பொருது வென்று இழிவு படுத்தியதாகச் சொல்லப் படுகிறது.
அரசியல் மாற்றங்களைப் பற்றி ஒன்றும் உறுதியாகக் கூற முடியாது போலும்! கோப்பெருஞ் சிங்கன் பாண்டியருடன் கொண்டிருந்த நட்பு நீடிக்கவில்லை. 1255ஆம் ஆண்டில் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டியமன்னன் கோப்பெருஞ் சிங்கனின் சேந்தமங்கலத்தை முற்றுகை யிட்டான். அரசியல் சூழ்ச்சியில் வல்ல கோப்பெருஞ் சிங்கன் ஒருவாறு பாண்டியனோடு நட்பு உடன்பாடு செய்து கொண்டான். எனினும், தோற்றம் உண்டேல் முடிவு உண்டல்லவா? 1279ஆம் ஆண்டில் பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் என்னும் பாண்டிய வேந்தன் சோழநாடு, திருமுனைப்பாடி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று பாண்டியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சியும் முடிந்தது. அவனோடு காடவ குலஆட்சியும் முடிவுக்கு வந்தது. 1243இல் ஆட்சியேற்ற கோப்பெருஞ் சிங்கன், காஞ்சி புரத்திலிருந்து காவிரிக்கரை வரை தன் ஆட்சியைப் பரப்பி ஆட்சி புரிந்து விட்டு 1279இல் வீழ்ச்சியடைந்தான்.
மாட்சி
கோப்பெருஞ் சிங்கன் வீரமும் அரசியல் சூழ்ச்சியும் ஆட்சித்திறனும் உடையவனாயிருந்ததன்றி நல்ல தமிழ்ப் புலமையும் முதிர்ந்த கலையுணர்ச்சியும் கனிந்த கடவுள் அன்பும் மிக்கவனாயும் திகழ்ந்தான். தில்லைக் கூத்தப் பெருமானிடம் இவனுக்கு ஈடுபாடு மிகுதி. தில்லைக் கோயிலின் கீழைக் கோபுரம் கட்டியவன் இவனே. தெற்கே தஞ்சையிலிருந்து வடக்கே திராட்சாராமம் (ஆந்திரா - கோதாவரி மாவட்டம்) வரையும் சிவன் கோயில்கள் பலவற்றில் பல்வேறு திருப்பணிகள் புரிந்துள்ளான்.
சிவனுக்குத் திருப்பணிகள் புரிந்தது போலவே தமிழன்னைக்கும் இவன் பணி பல புரிந்துள்ளான்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழ்க் கலைகளை வளர்த்தான். சொக்கசீயர் என்னும் புலவர் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். கோப்பெருஞ் சிங்கனும் ஒரு தமிழ்ப் புலவனாய் விளங்கினான். இவனது பாடல், கோதாவரி மாவட்டம் - இடர்க்கரம்பை அல்லது திராட்சாராமம் எனப்படும் ஊரிலுள்ள ஒரு சிதைந்த கல்வெட்டில் காணப்பட்டுள்ளது.
கோப்பெருஞ் சிங்கனைப் பற்றிப் பல்வேறு இடங்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. வடார்க்காடு மாவட்ட வந்தவாசி வட்டத்தைச் சேர்ந்த வயலூரில் ஏரிக்கரை மேல் உள்ள [9] ஒரு கல் வெட்டின் பாடல்களில், கோப்பெருஞ் சிங்கன் மூன்றாம் இராசராசச் சோழனையும் அவன் அமைச்சனையும் சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தி வைத்திருந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கல்வெட்டுப் பாடலில், கோப்பெருஞ் சிங்கனைக் குறிக்கும் பெயர்களாக, அவனி நாராயணக் காடவப் பெருஞ்சிங்கன், நிருபதுங்க சீயன், திரிபுவனராசாக்கள் தம்பிரான், மல்லைவேந்தன் முதலிய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இவன் தமிழ் வாழப் பிறந்தவனாகப் புகழப்பட்டுள்ளான்.
நினைவுக் குறி
பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராய குல மரபின் பெருமன்னனாய்ப் பீடு பெருமையுடன் முப்பத்தேழு ஆண்டுகள் நாடாண்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனின் நினைவுக் குறியாக, அவனது தலைநகராக இருந்த சேந்தமங்கலம் என்னும் ஊரில் அவனால் திருத்தி அமைக்கப்பட்ட கோட்டையும் கோயிலும் இடிந்தழிந்த நிலையில் இன்னும் இருப்பதைக் காணலாம். கீழே காண்பது பாழடைந்த சேந்தமங்கலக் கோட்டையின் ஒரு தோற்றம்.
இது, கோட்டை வெளிப்புற மதிலின் வடமேற்கு மூலையின் தோற்றம் மதிலுக்குமேலே ஒத்த இடைவெளிகளுடன் தனித் தனிக் கட்டைகள் இருப்பதைக் காணலாம். நான்குபக்க மதில்களின் மேலும் தொடர்ந்து இடைவெளிகளுடன் தனித்தனிக் கட்டைகள் இருந்ததற்கான சுவடுகள் உள்ளன. பல கட்டைகள் இடிந்துபோக, இப்போது சில கட்டைகளே எஞ்சியுள்ளன. இந்தப் படத்தில் மதிலுக்கு மேலே மூன்று கட்டைகள் இடைவெளிகளுடன் இருக்கக் காண்கிறோம். மதில்களின் மேலே இடைவெளிகளுடன் இந்தக் கட்டைகளை அமைத்திருப்பதன் நோக்கம் யாது? கட்டைகளுக்கு நடுவேயுள்ள ஒவ்வோர் இடைவெளியிலும் ஒவ்வொரு காவலர் படைக் கலத்துடன் நின்று காவல் காப்பதே இந்த அமைப்பின் நோக்கம். இக் காவல் மறவர்கள் தொலைவில் வரும் பகைவர்களை முன்கூட்டியறிந்து தம் அரசுக்குச் செய்தி தெரிவிக்கவும், எவரும் கோட்டையைத் தாக்கி உட்புகாதபடி தடுத்துக் காக்கவும் இந்த அமைப்பு அக்காலத்தில் உதவியது.
இவ்வளவு ஏற்பாடு செய்திருந்தும், இன்று கோட்டை எங்கே? கோப்பெருஞ்சிங்கன் எங்கே? மதி மயக்கங் கொண்ட மன்னர்களின் மண்ணாசை எங்கே? மதி மயக்கங் கொண்ட மன்னர்களின் மண்ணாசை எங்கே? பாழடைந்த இக் கோட்டையின் முன்பு - மக்களின்றி இடிபாடுகளுடன் தனித்துக் கிடக்கும் இக் கோட்டையின் எதிரில் நின்று பார்க்கும்போது, உலகத்தின் நிலையாமை உணர்வு உள்ளத்தில் உந்தத் தலை சுற்றுகிறது. வானவூர்தியில் வந்து அணுகுண்டுகளைத் துவும் இந் நாளில், இவ்வகைக் கோட்டைகளின் இரங்கத்தக்க நிலை என்னே - என்னே!
ஏகம்ப வாணன்
திருக்கோவலூருக்குத் தென் கிழக்கே 22 கி.மீட்டர் தொலைவில் கெடிலத்தின் தென்கரையிலுள்ள ஆற்றுார் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் ஏகம்பவாணன். ஆற்றுார் ஆறை’ எனவும் மருவி வழங்கும். வாணன் இலக்கியங்களில், ஆறையர்கோன், ஆறைநகர் காவலன், ஆறை ஏகம்பவாணன் என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளான்.
தமிழகத்தில் இருந்த எத்தனையோ சிற்றரசர் மரபுகளுள் வாணர் மரபும் ஒன்று. அம் மரபினருள் ஏகம்பவாணன் மிகச் சிறந்தவனாக விளங்கினான். இவனும் கொடை மறமும் படை மறமும் ஒரு சேரமிக்குத் திகழ்ந்தான். சோற்றுக்கு அரிசி கேட்ட புலவர் ஒருவர்க்கு இவன் யானையைக் கொடுத்தானாம். இதனைப் பெருந்தொகையிலுள்ள
சோற்றுக் கரிசிதரச் சொன்னக்கால் - வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன்
ஆரும் நிற்கும் உயர் வேம்பு நிற்கும் வளர்
பனையும் நிற்கும் அதனருகிலே
அரசு நிற்கும் அரசைச் சுமந்தசில
என்பது அப் பாடலின் இறுதிப் பகுதி. இங்கே குறிக்கப் பட்டிருப்பவை மரங்கள் அல்ல. ஆர் நிற்கும் என்றால், ஆத்திமாலை யணிந்த சோழன் நிற்பான் என்பது பொருள். அவ்வாறே வேம்பு என்றால், வேப்பமாலை யணிந்த பாண்டியன், பனை என்றால், பனைமாலை யணிந்த சேரன் என்று பொருளாம். அரசு நிற்கும் என்றால் அரசர் பலர் நிற்பர் என்பது பொருள். அத்தி நிற்கும் என்பதற்கு, அரசர்கள் ஏறிவந்த யானைகள் நிற்கும் என்று பொருளாம். இப் பாடற் பகுதியால் வாணனது பெரும்புகழ் புலனாகும்.
நாடு
மலையமானாடு, மலாடு, சேதிநாடு, திருமுனைப்பாடி நாடு, நடுநாடு என்றெல்லாம் அழைக்கப்படுவது தென்னார்க்காட்டு மாவட்டப் பகுதிதான். இந்தப் பகுதிக்குள்ளேயே வாணர் மரபினர் ஆண்டுவந்த சிறு பகுதி ‘மகத நாடு’ என அழைக்கப்பட்டது. இதனை, பெருந்தொகை என்னும் நூலில் ஏகம்பவாணனைப் பற்றியுள்ள
மகதேசன் ஆறை நகர் காவலன்
வாண பூபதி மகிழ்ந் தளிக்க மிகு
என்னும் பாணாற்றுப்படைப் (1192) பாடல் பகுதியால் அறியலாம். இப் பாடலில், ஆறைநகர் காவலனாகிய வாணன் ‘மகதேசன்’ எனச் சுட்டப்பட்டுள்ளான். மகத+ஈசன்=மகதேசன். அஃதாவது மகதநாட்டின் தலைவன் மகதேசன் என்பது பொருளாம். எனவே வாணர் ஆண்ட பகுதிக்கு மகதநாடு’ என்னும் பெயர் உண்மை புலப்படும். பெயர்க் காரணம்
ஏகம்ப வாணனது பெயர்க்காரணம் பற்றி ஒரு கதை வழங்கப்படுகிறது: “வாணன் குழந்தையாயிருந்த போதே பெற்றோர் இறந்து விட்டனர். குழந்தையை ஏகன் என்னும் பண்ணையாள் உடனிருந்து வளர்த்து ஆளாக்கினான். வளர்ந்து பெரியவனான வாணன் கம்பரிடம் கல்வி கற்றான். இவன் தன்னை உருவாக்கிய ஏகனுக்கும் கம்பருக்கும் நன்றி செலுத்து முகத்தான் அவ் விருவர் பெயரையும் இணைத்து இறுதியில் தன் குலப் பெயரையும் சேர்த்து (ஏகன்+கம்பன்+வாணன்- ‘ஏகம்ப வாணன்) எனத் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டான்” - இது கதை. இந்தக் கதையில் கம்பரை இழுத்து வம்பு செய்திருப்பது பொருந்தாது. வாணன் காலம் எங்கே - கம்பர் காலம் எங்கே? ஏகம்பவாணனுக்குக் கூறப்படும் பெயர்க்காரணம், கம்பருக்குக் கூறப்படும் பல்வேறு பெயர்க்காரணங்கள் போன்ற கற்பனையே வாணனது ‘ஏகம்பன்’ என்னும் பெயர் காஞ்சி ஏகம்பரது பெயராக இருக்கக் கூடாதோ?
கால ஆராய்ச்சி
தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலில் ஏகம்ப வாணனைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. அவற்றுள், பாண்டியனது வேப்பமாலையை வாங்கிவருமாறு ஏகம்பவாணனால் அனுப்பப்பட்ட தாதியர் பாண்டியனைப் பார்த்துக் கூறியனவாகச் சில பாடல்கள் உள்ளன. அவற்றுள் (182, 183) இரு பாடல்களில்,
“தென்னவா மீனவா சீவலமாறா மதுரை
மன்னவா பாண்டி வரராமா’’ ....
“சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவலமாறா
எனப் பாண்டியன் விளிக்கப்பட்டுள்ளான். இங்கே ‘சீவலன்’ என்று குறிக்கப்பட்டிருக்கும் பாண்டியன், வெற்றி வேற்கை இயற்றிய அதிவீரராம பாண்டியனாவான். இதனை,
“கோ ஜடிலவர்மன் திரிபுவன சக்கர வர்த்தி
கோனேரின்மை கொண்டான் திருநெல்வேலிப்
பெருமாள் குலசேகர தேவர்’ நந்தனாரான அழகம்
- ↑ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - காப்பு - 2.
- ↑ நளவெண்பா - சுயம்வர காண்டம் - 1.
- ↑ திவ்வியப் பிரபந்தம் - இயற்பா - பெரிய திருமடல் - 53.
- ↑ *கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - கங்கை காண்படலம் - 38.
- ↑ *பெரிய புராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1,6,8,24.
- ↑ *பெரிய புராணம் - நரசிங்க முனையரையர் - 1.
- ↑ *பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 5.
- ↑ *சுந்தரர் தேவாரம் - திருத்தொண்டத்தொகை - 9.
- ↑ *இந்திய சாசனங்கள் - தொகுதி 23 பக்கம்: 174, 182,