உள்ளடக்கத்துக்குச் செல்

கெடிலக் கரை நாகரிகம்/கெடிலநாட்டு வரலாறு

விக்கிமூலம் இலிருந்து
11. கெடில நாட்டு வரலாறு

வரலாற்றுத் தொன்மை

கெடிலக்கரை நாடு மிகப் பழம்பெரும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாடு, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே (Pre - Historic Period) மிகவும் சிறப்புற்றிருந்ததாகத் தெரிகிறது. நாட்டுப் பெயர்கள், ஊர்ப் பெயர்கள், அரசர் பெயர்கள், தலைவர் பெயர்கள், காலக் கணக்கு அரசியல் - சமூக நிகழ்ச்சிகள் முதலியவை ஓரளவேனும் தெரியத் தொடங்கிய காலம் வரலாற்றுக் காலம் (Historic Time) எனப்படும். இவை ஒரு சிறிதும் தெரியாத காலம் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலம் (Pre - Historic Time) எனப்படும்.

உலகில் சில நாடுகள் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலேயே உருவாகி மிகவும் சிறப்புடன் விளங்கியிருக்கும்; சில நாடுகள் வரலாற்றுக் காலத்துக்கு மிகவும் பிற்பட்ட காலத்தில், அதாவது இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முன்போ - அல்லது - சில ஆண்டுகட்கு முன்போதான் உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கும் - அல்லது - வளர்ந்து கொண்டிருக்கும். சிந்துவெளி, எகிப்து, மெசபொடோமியா, பாபிலோனியா, அசிரியா, காவிரிப் பூம்பட்டினம் முதலியவை வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே உருவாகி வளர்ச்சி பெற்றிருந்தவை. புது அமெரிக்கா, ஆசுதிரேலியா, சிங்கப்பூர் முதலியவை சில நூற்றாண்டுகட்கு முன் உருவாகி வளர்ச்சி பெற்றவை. இந்த இருபெரும் பிரிவுகளுள் முதல் பிரிவைச் (Pre - Historic Period) சேர்ந்தது திருமுனைப்பாடி நாடு. மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டாயிரம் - மூவாயிரம், இன்னும் ஏறினால் ஐயாயிரம் ஆண்டுகால உலக வரலாறு ஓரளவு நமக்குத் தெரியக்கூடும் இந்தக் காலக் கணக்கிற்கு எல்லாம் அப்பால், பதினாயிரக் கணக்கான - ஏன் நூறாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டது திருமுனைப்பாடி நாடு. உலகில் திருமுனைப்பாடி நாடு ஒன்று மட்டுமே மிகப் பழமையானது என்று சொல்ல வரவில்லை; உலகின் மிகப் பழைய நாடுகளுள் திருமுனைப்பாடி நாடும் ஒன்று என்பதுதான் இங்கே சொல்ல வந்த கருத்து. இதற்குத் தக்க சான்றுகள் இல்லாமற் போகவில்லை.

உலகில் முதல்முதல் தமிழகத்திலேயே மக்கள் தோன்றியதாகச் சொல்லப்படும் ஆராய்ச்சி ஒருபுறம் இருக்க, - ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலையில்,

[1] "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி

எனக் கூறியிருப்பது ஒருபுறம் இருக்க

[2]"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரித லின்று”

என்னும் திருக்குறள் உரையில்,

'பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற
குடியின்கட் பிறந்தார்; தொன்று தொட்டு வருதல் - சேர
சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலம்
தொடங்கி மேம்பட்டு வருதல்’

எனப் பரிமேலழகர் பொருள் எழுதி யிருப்பது ஒருபுறம் இருக்க, கெடிலக்கரையில் மரக் கற்கள் காணப்பட்டிருப்பதாலும், கெடிலம் கடலோடு கலக்குமிடத்தில் கழிமுகத் தீவுகள் ஏற்பட்டிருத்தலாலும் கெடிலம் பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி யிருக்கவேண்டும் என ஆராய்ந்து முன்னர்த் (பக்கம் - 93, 94} தெரிவித்துள்ள செய்தி ஈண்டு மிகவும் இன்றியமையாதது.

கெடிலமும் அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதியும் நூறாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றியிருந்தால் போதுமா? அங்கே மக்கள் வாழ்க்கையும் அரசாட்சியும் நாகரிகமும் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியிருந்தால் தானே, அந்தப் பகுதியைப் பழமையான நாடு என்று கூற முடியும்? உலகின் எல்லாப் பகுதிகளுந்தான் நூறாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் தோன்றின. தோன்றியும், பல பகுதிகள் மக்கள் வாழ்க்கையற்றுக் கிடந்தன - இன்னும் சில கிடக்கின்றன. உலகின் தலைசிறந்த நாடுகளாக இன்று மதிக்கப்படும் இங்கிலாந்தையும் அமெரிக்காவையும் எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்து ஒரு காலத்தில் மீன் பிடிக்கும் தீவாகத்தானே இருந்தது! இன்றைய அமெரிக்கா ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்தானே உருவாயிற்று! இவை போன்றவற்றைப் பழம்பெரும் நாடுகள் என்று எவ்வாறு சொல்ல முடியும்? கெடிலக்கரைத் திருமுனைப்பாடி நாடு இவற்றிற்கு முற்றிலும் வேறுபட்டதாகும்.

கெடிலக்கரைப் பகுதியில் கரடு முரடான கல்மலைப்பாங்கோ காடுகளோ இல்லையாதலின் அன்று தொட்டே மக்கள் வாழ்ந்து வந்திருக்கவேண்டும். வரலாற்றுக் காலத்திற்கு முன்பே அங்கே மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குத் தக்க சான்று உண்டு. உழவுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் தேவையான நீரைத் தரும் ஆற்றங்கரைகளில் மிகுதியாக மக்கள் வாழ்வார்கள் என்ற இயற்கைச் சான்று ஒருபுறம் இருக்க, தென்னார்க்காடு மாவட்டத்தில் சிலவிடங்களில் கிடைத்துள்ள பழைய கற்கருவிகளும், பரவலாகப் பலவிடங்களில் காணப்படும் சவக்குழிகளும் அப்பகுதியின் பழைய பழமையைப் பறைசாற்றி யறிவிக்கின்றன. மக்கள் கல்லால் கருவிகள் செய்து பயன்படுத்திய காலம் ‘கற்காலம்’ (Stone Age) எனப்படும். இது, ‘பழைய கற்காலம்’ (Paleolithic) எனவும், ‘புதிய கற்காலம்’ (Neolithic) எனவும் இருவகைப்படும். கற்காலம் எனப்படுவது, இற்றைக்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முற்பட்ட காலமாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இரும்பு போன்ற தாதுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, இயற்கையாய் எளிதாய்க் கிடைத்த கற்களைக் கொண்டு கருவிகள் செய்து பண்டைய மக்கள் பயன்படுத்தினார்கள். இத்தகைய கற்கருவிகள் சிலவற்றைத் தென்னார்க்காடு மாவட்டத்துப் பழங்குடி மரபினர் சிலர் தம் கோயில்களில் வைத்துத் தெய்வத் தன்மை உடையனவாகக் கருதிப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாகக் கல்வராயன் மலை வட்டாரப் பகுதியில் இவற்றைக் காணலாம். இச்சான்று கொண்டு தென்னார்க்காடு மாவட்டமாகிய திருமுனைப்பாடி நாட்டின் பழமையைப் பழைய கற்காலம் வரைக்கும் கொண்டு செல்லலாம்.

மற்றும், இம்மாவட்டத்தில் திருக்கோவலூர் வட்டத்திலுள்ள கொல்லூர், தேவனூர் முதலிய இடங்களிலும், கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள கொங்கராய பாளையம், குண்டலூர் முதலிய இடங்களிலும் சவக்குழிகள் காணப்படுகின்றன. இவற்றுள் சில, 6 அடி நீளமும் 4 அடி அகலமும் 3 அடி ஆழமும் உடையனவாய்க் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. சிலவற்றில், எலும்புத் துண்டுகளுடன் மட்கலங்களும் இரும்புக் கருவிகளும் காணப்படுகின்றன. இவை, புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் புதைக்கப்பட்ட குழிகளாம். பழைய கற்காலத்திற்கும் உலோக காலத்திற்கும் (Metal Age) இடைப்பட்டது புதிய கற்காலம். புதிய கற்காலத்தில் மட்கலங்களும் இரும்புக் கருவிகளும் ஒரு சிறிது உண்டாகத் தொடங்கிவிட்டன.

பெரிய சால்களில் (பானைகளில்) பிணத்தை வைத்து மூடிப் புதைக்கும் வழக்கமும் அந்தப் பழங்காலத்தில் இருந்தது. இத்தகைய பிணச்சால்கள் கடலூர் வட்டத்துத் திருவதிகைப் பகுதியில் இப்போதும் கண்டுபிடிக்கப்படுகின்றன. எவ்வளவு வயதாகியும் இறக்காமல் இழுத்துப் பறித்துக் கொண்டிருக்கும் தொண்டு கிழங்களை, இத்தகைய சால்களில் உணவு - தண்ணீருடன் உயிரோடு வைத்துப் புதைக்கும் வழக்கமும் அன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ! இத்தகைய சால்கள் ‘முசுமுசுக்குச் சால்’ என்றும் ‘முசுமுசுச்சாலை’ என்றும் உலக வழக்கில் சொல்லப்படுகின்றன; இலக்கிய வழக்கில், [3]முதுமக்கள் சாடி’ எனவும், [4]'ஈமத்தாழி’ எனவும், [5]முதுமக்கள் தாழி’ எனவும் அழைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிணங்களைச் சவக்குழிகள் கட்டியிடுவதும் முசுமுசுச் சாலில் புதைப்பதும் மிக மிகப் பழங்காலத்து வழக்கங்களாகும். இத்தகைய குழிகளும் சால்களும் காணப்படும் திருமுனைப்பாடி நாடு மிக்க வரலாற்றுத் தொன்மையுடையது என்பது தெளிவு.

ஆட்சி வரலாறு

நமக்குத் தெரிந்த வரையில் தமிழ் நாட்டு ஆட்சி வரலாற்றுத் தொடக்க காலம் என்பது கடைச் சங்க காலம்தான், அப்படியென்றால் கடைச் சங்க காலத்திற்குமுன் தமிழ் நாட்டில் வரலாறு ஒன்றும் நிகழவில்லை என்பது பொருளன்று; கடைச் சங்க காலத்திற்குமுன் தமிழ் நாட்டில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதற்குரிய எழுத்துச் சான்று கிடைத்திலது என்பதே அதன் பொருள். கடைச் சங்க காலம் கி.மு. 500 -ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 500 - ஆம் ஆண்டு வரையும் இழுத்துக் கொண்டு வரப்படுகிறது. முந்தி என்கின்றனர் சிலர்; பிந்தி என்கின்றனர் சிலர். சங்க காலம் என்பது, மதுரையில் பாண்டிய மன்னர்கள் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த காலத்தைக் குறிக்கும். அங்கே மூன்று முறை மூன்று சங்கங்கள் தோன்றி மறைந்தனவாம். இங்கே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடைச் சங்கம் என்பது மூன்றாம் சங்கமாகும். இதற்கும் பல நூற்றாண்டுகட்குமுன் இடைச் சங்கம் எனப்படும் இரண்டாம் சங்கம் இருந்ததாம். அதற்கும் பல நூற்றாண்டுகட்கு முன் முதற் சங்கம் இருந்ததாம். அங்ஙனமெனில், ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழகம் சிறந்த இலக்கிய இலக்கணக் கலைச் செல்வங்களுடன், மிக்க வளர்ச்சியும் நாகரிகமும் பெற்றிருந்தமை புலனாகும்.

தமிழகம் முப்பெருஞ் சங்கங்களைப் பெற்றிருந்தும் தீவினைப்பயனால் முதற் சங்க நால்களும் இடைச் சங்க நூல்களும் கிடைக்கவில்லை; கடைச்சங்க நூல்கள் சில மட்டும் கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டுதான் திருமுனைப் பாடிநாடு உட்படத் தமிழகத்தின் வரலாற்றினை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கடைச் சங்க காலம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என ஒரு முடிவுக்கு வரலாம். எனவேதான், தமிழக வரலாற்றுத் தொடக்க காலம் கடைச் சங்க காலம் எனக் கூறப்பட்டது.

சோழப் பேரரசு

இலக்கியங்களின் துணைகொண்டு வரலாற்றுக்கு எட்டியுள்ள வரைக்கும், தொடக்க காலத்தில் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டவர்களாக அறியப்படுபவர்கள் சோழ மரபினராவர். கி.மு. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டி லிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதி வரை - அதாவது - கி.பி. 250’ வரை, சோழப் பேரரசர்கள் சோழ நாட்டுடன், திருமுனைப்பாடி நாடு எனப்படும் நடுநாடு, தொண்டைநாடு ஆகியவற்றையும் இணைத்துத் தம் தலைமையின் கீழ் ஆண்டு வந்தனர். இவர்களுள், கி.மு. முதல் நூற்றாண்டில் ஆட்சி தொடங்கியவளாகக் கருதப்படும் கரிகாற் சோழன் மிகவும் இன்றியமையாதவன். ஆட்சிச் சிறப்பில் இவனுக்கு அடுத்த பங்குடையவனாயிருந்தவன் நெடுமுடிக் கிள்ளியாவான். சோழர்கள் நாட்டைப் பல கோட்டங்களாகப் பிரித்து, ஆங்காங்குத் தம் ஆணையரை அமர்த்தி, காடு திருத்தியும் நீர்ப்பாசன வசதி செய்தும் நன்கு மேற்பார்வையிட்டு ஆண்டு வந்தனர்.

மலையமான் மரபினர்

சோழரின் மேலாட்சி இருக்க, கி.பி. முதல் மூன்று நூற்றாண்டு கால அளவில், மலையமான் என்னும் மரபைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்தார்கள் அப்போது இந்நாட்டிற்கு ‘மலாடு’ என்பது பெயர். இவர்கள் பெரும்பாலும் சோழர்க்குக் கட்டுப்பட்டே ஆண்டு வந்தனர்; அதே நேரத்தில் மற்ற மன்னர்களுடன் நட்புறவு கொண்டு நடுநிலையாளராகவும் விளங்கி வந்தனர். இவர்களுள், மலையமான் திருமுடிக்காரி, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்னும் இருவரும் இன்றியமையாதவர்கள். மலையமான் மரபினருள், திருமுடிக்காரி மற்றவரினும் ஓரளவு தன்னுரிமை (சுதந்திரம்) உடையவனாயிருந்ததாகத் தெரிகிறது. திருக்கண்ணனோ முழுக்க முழுக்கச் சோழரைச் சார்ந்து வாழ்ந்தவனாகத் தெரிகிறது.

பல்லவப் பேரரசு

மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி. 250-க்கு மேல்) தொண்டை நாடு சோழர்களிடமிருந்து பல்லவ மன்னர் கைக்கு மாறியது; திருமுனைப்பாடி நாடு அதாவது - தென்பெண்ணைக்கு வடக்கேயுள்ள பகுதி அப்போதும் சோழர்களிடமே இருந்தது; ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து திருமுனைப்பாடி நாடும் பல்லவர் பேரரசின் கைக்குச் சென்று விட்டது. இந்நாட்டை ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் பல்லவப் பேரரசர்களே ஆட்சி புரிந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ‘அபராசிதன்’ என்னும் வலிமையற்ற பல்லவ மன்னன் ஆண்டான், அவனோடு பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. மீண்டும் சோழர் ஆட்சி தலை தூக்கியது.

பல்லவப் பேரரசின் ஆட்சியில் சமண மதம் தழைத்திருந்தது. திருநாவுக்கரசர் தோன்றி, ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மன்னனையும் (முதல் மகேந்திரவர்மன்) மக்களையும் மீண்டும் சைவத்திற்கு மாற்றினார்; பல்லவ மன்னர்கள் தங்கள் காலத்தில் நாட்டில் கலைவளமும் பொருள் வளமும் கொழிக்க நன்றாக ஆட்சி புரிந்தனர்.

கல்வெட்டுக்களின் துணைகொண்டும் இலக்கியங்களின் துணைகொண்டும் ஆராய்ந்து அறிந்துள்ள வரைக்கும், நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை, தொண்டை நாட்டுடன் திருமுனைப்பாடி நாட்டையும் இணைத்து அரசோச்சிய பல்லவகுலப் பேரரசர்களின் பெயர்களும் அவர் தம் ஆட்சிக் காலமும் முறையே வருமாறு:

(முதல் வரிசை)
  1. முதலாம் குமார விஷ்ணு 325 - 35
  2. முதலாம் ஸ்கந்தவர்மன் 350 - 375
  3. வீரவர்மன் 375 - 400
  4. இரண்டாம் ஸ்கந்தவர்மன் 400 - 436
  5. முதலாம் சிம்மவர்மன் 436 -460
  6. மூன்றாம் ஸ்கந்தவர்மன் 460 - 480
  7. இரண்டாம் சிம்மவர்மன் 480 - 500
  8. முதல் நந்திவர்மன் எனக் கருதப் படுகிறது வேறு சிலரும் இருந்திருக்கலாம் 500 - 574?
(இரண்டாம் வரிசை)
  1. சிம்ம விஷ்ணு 574 - 600
  2. முதலாம் மகேந்திரவர்மன் 600 - 630
  3. முதல் நரசிம்மவர்மன் 630 - 668
  4. இரண்டாம் மகேந்திரவர்மன் 668 - 670
  5. முதலாம் பரமேசுரவர்மன் 670 - 680
  6. இரண்டாம் நரசிம்மவர்மன் 680 - 729
  7. இரண்டாம் பரமேசுரவர்மன் 730 - 731
  8. இரண்டாம் நந்திவர்மன் 731 - 795
  9. தந்திவர்மன் 795 - 845
  10. மூன்றாம் நந்திவர்மன் 844 - 866
  11. நிருபதுங்கவர்மன் 855 - 896
  12. அபராசித பல்லவன் 879 - 897

இந்த அட்டவணையில் உள்ளாங்கு, அபராசித பல்லவ மன்னனோடு ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவப் பேரரசு மறைந்தது. இதற்கு, விசயாலயச் சோழனும் அவர் மரபினரும் காரணராவர்.

பிற்காலச் சோழர் ஆட்சி

கி.பி. 897 ஆம் ஆண்டு கால அளவில், விசயாலய சோழன் மகன் முதலாம் ஆதித்த சோழன் அபராசித பல்லவனை வென்று திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் மீண்டும் சோழப் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். இந்தப் பிற்காலச் சோழ மரபினரின் ஆட்சி, 897 ஆம் ஆண்டு தொட்டு 1279 ஆம் ஆண்டு வரை திருமுனைப்பாடி நாட்டில் நிலவியது.

 இவர்களின் பெயர்களும் ஆட்சிக் காலமும் முறையே வருமாறு:

விசயாலயச் சோழன் 870
முதலாம் ஆதித்த சோழன் 871 - 907
முதலாம் பராந்தகன் 907 - 954
கண்ட ராதித்தன் 954 - 957
அரிஞ்சயன் (சில திங்கள்கள்) 957
இரண்டாம் பராந்தகன் 957 - 973
உத்தம சோழன் 973 - 985
முதலாம் இராசராசன் 985 - 1014
முதலாம் இராசேந்திரன் 1012 - 1044
முதலாம் இராசாதிராசன் 1044 - 1054
இரண்டாம் இராசேந்திரன் 1054 - 1063
வீர ராசேந்திரன் 1063 - 1070
அதிராசேந்திரன் 1070
முதலாம் குலோத்துங்கன் 1070 - 1120
விக்கிரம சோழன் 1120 - 1135
இரண்டாம் குலோத்துங்கன் 1136 - 1150
இரண்டாம் இராசராசன் 1151 - 1163
இரண்டாம் இராசாதிராசன் 1163 - 1178
மூன்றாம் குலோத்துங்கன் 1179 - 1216
மூன்றாம் இராசராசன் 1216 - 1246
மூன்றாம் இராசேந்திரன் 1247 - 1279

மூன்றாம் இராசேந்திரனுக்குப் பிறகு சோழப் பேரரசு வீழ்ச்சியடைய, சடையவர்மன் சுந்தர பாண்டியன் தலைமையில் பாண்டியப் பேரரசு எழுச்சி பெற்றது.

இராட்டிர கூடர்

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்கிடையே பல மரபுகளைச் சேர்ந்த மன்னர்கள் சில பல ஆண்டுகள் தலைதூக்கிப் பின்னர் மறைந்தனர். இவர்களுள் இராட்டிரகூட மரபினரும் ஒருவர். இவர்கள் கி.பி. 950 தொடங்கி 170 வரையும் கண்ணை முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் பராந்தகனும் முதலாம் இராசராச சோழனும் இவர்களை ஒடுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட்டனர், இராட்டிரகூடர்களுள் மூன்றாம் கிருட்டிணன் என்பவன் சிறிது காலம் இப்பகுதியை ஆண்டிருக்கிறான்.

காடவராயர்

சோழர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கீழ்ச் சிற்றரசராய், காடவராயர் என்னும் மரபினர் திருமுனைப்பாடி நாட்டைச் சில காலம் ஆண்டனர். அழிந்து போன பல்லவப் பேரரசின் வழிவந்தவர்களே காடவராயர் எனப்படுபவர். சங்க காலச் சோழரின் கீழ் மலையமான் மரபினர் சிற்றரசர்களாய் ஆண்டது போல, பிற்காலச் சோழர்களின் கீழ், பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர்கள் குறுநில மன்னர்களாயும் சோழ ஆணையர்களாயும் ஆண்டு வந்தனர்.

12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திருமுனைப்பாடி நாட்டில், கெடிலக்கரையிலுள்ள திருமாணிகுழிப் பகுதியில் வளந்தானார் என்ற காடவர் சோழரின் கீழ் ஆட்சி புரிந்தார். இவர் வழிவந்தவருள் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் மிகவும் குறிப்பிடத்தக்கவன், இவன், கெடிலக்கரையிலுள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு 1243 முதல் 1279 வரை திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி புரிந்தான். இவனோடு காடவராய மரபினராட்சி ஒரு சேரச் சோழராட்சியுடன் 1279ஆம் ஆண்டளவில் பாண்டியரால் வீழ்த்தப்பட்டது.

பாண்டியப் பேரரசு

திருமுனைப்பாடி நாடு சோழர் தலைமைக்கு உட்பட்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனது ஆட்சிக்குப் பின் பாண்டியப் பேரரசின் கைக்கு மாறியது. இவ்வாறு மாற்றிய வெற்றியில் முறையே இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1239-1251), முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1270), முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268-1311) ஆகியோர்க்கு மிக்க பங்கு உண்டு. பாண்டியர் ஆட்சி முக்கால் நூற்றாண்டுக்கால அளவு நடைபெற்றது. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் பாண்டியர் காலமாகும்.


பதினான்காம் நூற்றாண்டில் பல்வேறு
அரசர்கள்

போசளர்

பதினான்காம் நூற்றாண்டின் முற்பாதியில் தென்னார்க்காடு மாவட்டத்தில் பாண்டியப் பேரரசின் மேலாட்சி பெரும்பாலான இடங்களில் இருந்தது ஒருபுறம் இருக்க, மாவட்டத்தின் மூலைக்குமூலை சிற்சில பகுதிகளில் பலவேறு அரசர்கள் ஆணை செலுத்தியதாகத் தெரிகிறது. சிலவிடங்களில், மைசூர் நாட்டைச் சேர்ந்த ‘ஓய்சாளர்’ அல்லது ‘போசளர்’ எனப்படும் மரபினரின் ஆட்சி நிலவியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியிலேயே போசள மரபினர் தென்னார்க்காடு மாவட்டத்தில் தம் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அப்போது, திருக்கோவலூர் வட்டத்தில் கெடிலக் கரையில் உள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனுக்கு உரியதாயிருந்த கடலூர்த் துறைமுகத்தை, வீரநரசிம்மன் என்னும் போசள மன்னன் தாக்கியிடித் தழித்தான், இப்படியாகப் போசளரின் ஆதிக்கம் 1340 வரை சில வட்டாரங்களில் இருந்தது.

சேரர்

மற்றும், திருவதிகைக் கோயில் கல்வெட்டின் துணை கொண்டு, 1313 தொடங்கி 1327 வரையும் குலசேகரன் என்னும் சேர வேந்தன் கடலூர் வட்டாரத்தை அரசாண்டதாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

உடையார்கள்

மேலும், உடையார்கள் என்னும் மரபைச் சேர்ந்த சிற்றரசர்களும் 14ஆம் நூற்றாண்டில் தென்னார்க்காடு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆணை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் பாண்டியப் பேரரசின் மேலாட்சியும் இம்மாவட்டத்தில் நடைபெற்றிருந்தது.

மதுரை சுல்தான்

பாண்டியரைத் தொடர்ந்து மதுரை சுல்தான் மாலிக் கபூர் 1334 முதல் 1378 வரை 45 ஆண்டு காலம் திருமுனைப்பாடி நாட்டை அரசு செலுத்தினார். பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 1310) வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் தன் பங்காளிப் பாண்டியரை வெல்வதற்காக வடக்கேயிருந்த முசுலீம் மன்னரின் உதவியை நாடியதால், தென்னாட்டில் - மதுரையில் முசுலீம் ஆட்சி எளிதில் ஏற்பட வழி உண்டாயிற்று.

விசயநகரப் பேரரசு

பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை (1378 - 1645) திருமுனைப்பாடி நாடு விசய நகரப் பேரரசின் கீழ் இருந்தது. தங்கள் மேற்பார்வையில் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட விசயநகர மன்னர்களுள், குமார கம்பனா (1343 முதல்), கிருஷ்ண தேவராயர் (1509 - 1529), இரண்டாம் சீரங்கன் (1614 முதல்), மூன்றாம் வேங்கடன் {1642 முடிவு) முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சி நாயக்க மரபைச் சேர்ந்த மன்னர்கள் விசய நகரப் பேரரசின் தலைமையின் கீழ், செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டின் சில பகுதிகளை ஆண்டனர். இவர்களது செல்வாக்கு 1370 தொட்டு 1648 வரைக்கும் ஓங்கியிருந்த தெனலாம். இம் மன்னர்களுள், கோபன்னா நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், அச்சுத இராமச்சந்திர நாயக்கர், வேங்கடப்ப நாயக்கர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்; இவர்களுள்ளும் கிருஷ்ணப்ப நாயக்கரே {1570 - 1616) மிகவும் சிறப்புற்று விளங்கினார்.

ஏகம்ப வாணன்

பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருமுனைப்பாடி நாட்டில் மூலைக்கு மூலை இன்னும் சிலர் ஆண்டதாகத் தெரிகிறது. அவர்களுள் ஒருவர் வாணர் மரபினர். இந்தக் காலத்தில், திருக்கோவலூர் வட்டத்திலுள்ள ஆற்றூரைத் தலைநகராகக்கொண்டு ‘ஏகம்ப வாணன் என்னும் மன்னன் பெருஞ் சிறப்பு..... ன் ஆண்டான். திருமுனைப்பாடி நாட்டிற் குள்ளேயே இவன் ஆண்ட பகுதிக்கு ‘மகத நாடு’ என்ற பெயர் வழங்கப்பட்டது.

பீஜப்பூர் சுல்தான்

மொத்தத்தில் செஞ்சி நாயக்கர்கட்குப் பின் 1648 முதல் 1677 வரை திருமுனைப்பாடி பீஜப்பூர் சுல்தான் கைக்குள் அகப்பட்டுக் கிடந்தது. சுல்தானின் ஆணையர்களான சையது நாசிர்கானும், நாசிர் முகமது கானும் ஒருவர் பின் ஒருவர் முறையே ஆட்சி நடத்தினர். இந்த ஆட்சிக் காலத்தில்தான் கடலூர் இஸ்லாமாபாத்’ எனப் பெயர் வழங்கப்பட்டிருந்தது.

மராத்தியர் பங்கு

திருமுனைப்பாடி நாட்டு ஆட்சியில் மராத்தியர் பங்குக்கும் குறைவில்லை . மராத்தியப் பேரரசர் சிவாஜி 1677 தொட்டு 1698 வரை, சந்தாஜி, சம்பாஜி முதலிய உதவியாளர்களைக் கொண்டு இந்தப் பகுதியை ஆண்டார்.

மொகலாயப் பேரரசு

1698ஆம் ஆண்டு சனவரித் திங்களில் மராத்தியர் களிடமிருந்து நாடு ஔரங்கசீப்பின் கைக்கு மாறியது. ஔரங்கசீப்பின் உதவியாளர் கையில் தென்னார்க்காடு மாவட்டம் சிக்கியது. 1698 முதல் 1700 வரை ஒளரங்கசீப்பால் அமர்த்தப்பட்ட முசுலீம் ஆணையர்கள் ஆண்டு வந்தனர். தென்னிந்தியாவில் ஒளரங்கசீப்பின் பேரரசுக்குள் அகப்பட்டிருந்த மைசூர் மாநிலப் பகுதிகள் சிலவும் ஆந்திர மாநிலப் பகுதிகள் சிலவும், தமிழ் மாநிலப் பகுதிகள் சிலவும் இணைக்கப்பட்டுக் ‘கரு நாடகம்’ எனப் பெயர் கொடுக்கப் பட்டிருந்தன. 1700இல் ஔரங்கசீப்பின் ஆணைப்படி கருநாடகத்தின் தலைமை நவாப்பாக ‘தாவுத்கான்’ என்பவர் அமர்த்தப்பட்டார்; அவரது தலைநகரம் ஆர்க்காடு. அவரது தலைமையின்கீழ் செஞ்சிப் பகுதியின் ஆணையராக ‘சரூப்சிங்’ என்னும் இந்து மதவீரர் அமர்த்தப்பட்டார்.

இந்த நிலையில் வடக்கே ஔரங்கசீப் காலமாக, டில்லி ஆட்சி கலகலத்தது. தெற்கே யிருந்தவர்கள் உரிமையுடன் {சுதந்தரத்துடன்) நடக்கத் தொடங்கினர். கர்நாடகத் தலைமை நவாப்புக்குமேல் பெரிய தலைவராக ஐதராபாத்தில் ‘நிசாம்-உல் - முல்க்’ என்பவர் இருந்தார். இவர் தக்கணம் முழுவதற்கும் தம்மைத் தலைவரெனச் சொல்லித் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார்.

செஞ்சி சிங்குகள்

இங்கே செஞ்சிப் பகுதியைக் கவனித்து வந்த சரூப்சிங், ஆர்க்காட்டு நவாப்புக்குக் கட்டுப்படாமலும் கப்பம் கட்டாமலும் தம்மைத் தனி உரிமை உடையவரெனச் சொல்லிக் கொண்டார். இவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் பெரும் பகுதியைத் தம் ஆணையின்கீழ் வைத்திருந்தார். ஆங்கிலேயரின் கடலூர் செயிண்ட் டேவிட் கோட்டையையுங்கூடத் தாக்கினார். ஆங்கிலேயர் சிலரைச் செஞ்சியில் சிறைப் படுத்தியும் வைத்திருந்தார். இப்படியாகப் பல வீரச் செயல்கள் புரிந்து 1713இல் சரூப்சிங் இறந்து போனார். இவரைத் தொடர்ந்து இவர் மகன் தேசிங்கு என்னும் இளைஞர் பட்டத்துக்கு வந்தார். இவரும் தந்தை வழியைப் பின்பற்றினார். இவர் சில திங்கள்களே ஆட்சியில் இருந்தார். தாவுத்கானுக்குப் பின் கர்நாடக நவாப்பாக 1710 இல் ஆர்க்காட்டில் பட்டமேற்ற சதத்துல்லாகான், கப்பம் கட்டும்படி தேசிங்கை நெருக்கினார். கப்பம் கட்டாமல் நவாப்பை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தேசிங்கு முடிவுற்ற கதை நாடறிந்த வரலாறு.

கர்நாடக நவாப்புகள்

தேசிங்குக்குப் பின் தென்னார்க்காடு மாவட்டம் மீண்டும் முசுலீம் ஆணையரின் கீழ் வந்தது. 1732 ஆம் ஆண்டுகால அளவில் சதத்துல்லாகான் காலமானதும், அவருடைய வளர்ப்பு மகன் தோஸ்து அலி என்பவர் 1732இல் கர்நாடக நவாப்பாகப் பட்டமேற்று 1740 வரை அரசாண்டார். அவர் மகன் ‘சப்தர் அலி’ 1740 இல் ஆட்சிக்கு வந்தார். 1742இல் முர்தாஜ் அலி என்னும் கீழ் ஆணையன் சப்தர் அலியைக் கொன்று தன்னை நவாப் ஆக்கிக் கொண்டான். ஆனால், படை வீரர்கள் அவனை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டி சப்தர் அலியின் மகனான சாகிப் ஜெக்தா என்னும் மறுபெயருடைய முகமது சையத்தை நவாப் ஆக்கினர். பின் 1743இல் காஜா அப்துல்லாகான் நவாப் ஆக்கப்பட்டார். சில நாளில் அவர் இறந்து போக, அன்வர் உத்தீன் என்பவர் நவாப் பட்டமேற்றார். இந்த நவாப்புகளை அமர்த்துவதிலும் வீழ்த்துவதிலும், தக்கணத்தின் பெருந்தலைவராகிய நிசாம் - உல் - முல்க் பெரும்பங்கு கொண்டிருந்தார்.

1748 இல் ஐதராபாத் நிசாம் - உல் - முல்க் காலமானார். அவருக்குப்பின் அவர் மகன் ‘நாசிர் ஜங்’ என்பவருக்கும் பேரன் ‘முசாபர் ஜங்’ என்பவருக்கும் இடையே பதவிப் போட்டி ஏற்பட்டது. இங்கே ஆர்க்காட்டில் அன்வர் உத்தீனுக்கு எதிராக, சந்தா சாகிப் என்பவர் கிளம்பினார். சந்தா சாகிப்பும் முசாபர் ஜங்கும் பிரெஞ்சுத் தலைவர் டூப்ளேயின் துணையுடன் பொருது தாம் எண்ணியதை முடித்தனர். அன்வர் உத்தீன் 1748 இல் கொல்லப்பட, சந்தா சாகிப் கர்நாடக நவாப் ஆனார். அங்கே முசாபர் ஜங் ஜதராபாத் நிசாம் ஆனார். இந்நிலையில் நாசிர் ஜங்கும், அன்வர் - உத்தீன் மகன் முகமது அலி என்பவரும் ஆங்கிலேயரின் துணை நாடினர்; எண்ணியதை முடித்தனர். ஆர்க்காட்டில் முகமது அலியும், ஜதராபாத்தில் நாசிர் ஜங்கும் பதவியைப் பிடித்துக் கொண்டனர். இவர்களை அகற்றி மீண்டும் சந்தா சாகிப்பும் முசாபர் ஜங்கும் பதவிக்கு வந்தனர். நாசிர் ஜங் கொல்லப்பட்டார். பின்னர் முசாபர் ஜங்கும் கொல்லப்பட்டு ‘சலாபாத் ஜங்’ என்பவர் நிசாம் ஆக்கப்பட்டார். இறுதியாக, சந்தா சாகிப் கொல்லப்பட்டு முகமது அலி கருநாடக நவாப் ஆக்கப்பட்டார்.

மைசூர் முசுலீம் குறுக்கீடு

நவாப் முகமது அலியின் ஆட்சிக் காலத்தில், மைசூரை ஆண்ட ‘ ஐதர் அலி’ என்னும் முசுலீம் மன்னர் 1780 இல் தென்னார்க்காடு மாவட்டத்தைத் தாக்கினார்; பிரெஞ்சுக்காரரின் உதவியுடன் கடலூரைப் பிடிக்க முயன்றார்; முடியவில்லை. ஆங்கிலேயர்கள் ஐதர் அலியை ஒடுக்கிவிட்டனர். 1782இல் ஐதர் அலி இறந்ததும், அவர் மகன் திப்பு சுல்தான் மைசூர் அரசரானார். அவரும் தந்தையின் வழியைப் பின்பற்றிப் போர் தொடுத்தார். அவரையும் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். 1799இல் திப்பு இறந்தார்.

இவ்வாறு, சந்தா சாகிப், முசாபர் ஜங், பிரெஞ்சுக்காரர்கள், மைசூர் முசுலீம் மன்னர்கள் முதலியோரின் போட்டிப் பொறாமைப் பூசல்களுக்கிடையே, ஆங்கிலேயரின் துணை வலிமையால் முகமது அலி 1748 முதல் 1795வரை கர்நாடக நவாப்பாக ஆட்சி புரிந்தார். அவருக்குப் பின் அவர் மகன் ‘உமதத் - உல் - உமர்’ என்பவர் 1795 தொட்டு 1801 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.

இவ்வாறாகத் தென்னார்க்காடு மாவட்டம், 1698 முதல் 1801 வரை - அதாவது பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் - ஒளரங்கசீப்பின் ஆட்சி வழிவந்த மொகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. இந்தக் காலத்தில் தான், மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் ஒருவர்க்கொருவர் நட்பாகவும் பகையாகவும் இருந்து கலந்து கொண்ட வரலாற்றுப் பெயர் பெற்ற ‘மூன்று கருநாடகப் போர்கள்’ நிகழ்ந்தன. இப்போர்களில் பெரும்பாலும் தென்னார்க்காடு மாவட்டமே மையமாக இருந்து பெரும்பங்கு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, இந்த ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தில் புரிந்த திருவிளையாடல்களை ஒரு சிறிது சுருக்கமாக நோக்குவோம்:

ஐரோப்பியர்கள்

திறந்து கிடந்த நாட்டில் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பியர்களும் நுழைந்து விளையாடத் தொடங்கி விட்டார்கள். பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் நம் நாட்டின் உடைமைக்காகத் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதன்றி, மொகலாய மன்னர்களுக்குள்ளும் இந்து மன்னர்களுக்குள்ளும் சிண்டு முடிந்து விட்டும் கலகத்துக்கு வத்தி வைத்தும் நாடு பிடிக்கும் தம் குறிக்கோளை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வந்தனர். இந்தப் போட்டியில் டச்சுக்காரரையும் போர்ச்சுகேசியரையும்விட ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரருமே பெரும்பங்கு கொண்டிருந்தனர். ஆங்கிலேயருள் ‘ராபர்ட் கிளைவ் என்பவரும், பிரெஞ்சுக்காரருள் ‘டூப்ளே’ என்பவரும் இன்றியமையாதவர்கள்.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தென்னார்க்காடு மாவட்டத்தில் ஐரோப்பியர்கள் நன்கு வேரூன்றத் தொடங்கினர். போர்ச்சுகேசியரைப் பறங்கிப் பேட்டை கவர்ந்தது. டச்சுக்காரர் கடலூரில் தொழிற்சாலை கட்டத் தொடங்கினர். பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் கால் கொண்டனர். ஆங்கிலேயர்கள் கடலூரில் சரக்குக் கொட்டடியும் (1683), ‘செயின்ட் டேவிட்’ (Fort St, David) என்னும் பெயரில் ஒரு கோட்டையும் (1702) கட்டினர்.

ஆங்கில பிரெஞ்சுப் போட்டி

ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் போர் என்றால், இங்கேயும் நமது மண்ணில் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரருக்கும் போர்; அங்கே உடன்பாடு என்றால் இங்கேயும் உடன்பாடு; மீண்டும் அங்கே போர் என்றால் இங்கேயும் போர். ஐரோப்பாவில் தேள் கொட்டினால் நமது நாட்டில் நெறி கட்டிற்று; அங்கே மழை பெய்தால் இங்கே குடை பிடித்தார்கள் வெள்ளையர்கள். 1744 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் போர் நடந்தபோது, இங்கே தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரம், பறங்கிப்பேட்டை , கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செஞ்சி முதலிய இடங்கள் செருக்களங்களாய் மாறின.

இவ்வாறு நிகழ்ந்த பல போர்களின் விளைவாக, சென்னை, செஞ்சி, கடலூர், புதுச்சேரி முதலிய இடங்கள் ஆங்கிலேயர் கைக்கும் பிரெஞ்சுக்காரர் கைக்குமாக மாறி மாறிப் பந்தாடப்பட்டன. ஆங்கிலேயரின் கடலுர் செயின்ட் டேவிட் கோட்டையைப் பிடித்து நிலைப்படுத்திக் கொள்வதற்காக, பிரெஞ்சு தலைவர் டூப்ளே நான்கு முறை தாக்கினார் என்றால், ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் இடையே இருந்த போட்டி பொறாமை - போர்களின் கொடுமை நன்கு புலனாகுமே! இவ்வாறு பல தடவை கை மாறிய நிலையில், இறுதியாக 1783 இல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே நட்பு உடன்படிக்கை ஏற்பட்டதால், இங்கே புதுச்சேரி பிரஞ்சுக்காரர்க்கும், கடலூர் முதலிய இடங்கள் ஆங்கிலேயர்க்குமாக மீண்டும் மாறி நிலை பெற்றன. இவ்விருதரப்பு வெள்ளையர்களின் போர்களுக்கிடையே, அவர்கட்கு நட்பாகவும் பகையாகவும் செயல்பட்டு ஐதர் அலி, அவர் மகன் திப்பு, ஆர்க்காடு நவாப்புகள், ஐதராபாத் நிசாம்கள் முதலியோர் பெரும்பங்கு பெற்றிருந்தனர்.

ஆங்கிலேயர் செல்வாக்கு

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னார்க்காடு மாவட்டத்தில் ஒரு சில இடங்கள் ஆங்கில ஆணையரின் கீழ் இருந்தாலும், மொத்தத்தில் தென்னார்க்காடு மாவட்டம் 1748 முதல் 1795 வரை, கர்நாடக (ஆர்க்காட்டு) நவாப் முகமது அலியின் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. நவாப்பின் உதவியாளர்கள் ஆட்சியை நடத்தி வந்தார்கள். 1795இல் முகமது அலி இறந்தபின், அவருடைய மூத்த மகன் உமதத் - உல் - உமர் பொறுப்பில் 1801 வரை ஆட்சி இருந்தது. இவ்வாறு இப்பகுதி கர்நாடக நவாப்புகளின் பொறுப்பில் இருந்தாலும், ஆங்கிலேயர்களின் இடையீடுகட்கும் தலையீடுகட்கும் அளவேயில்லை; அவர்கள், நவாப் மன்னர்களைப் பலவகைகளில் ஆட்டிப் படைத்து வந்தார்கள். இறுதியாக 1801 இல், தமிழ் நாட்டின் மற்ற மாவட்டங்களைப் போலவும், இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவும் தென்னார்க்காடு மாவட்டமும் (திருமுனைப்பாடி நாடும்) ஆங்கிலேயரின் முழு ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்து விட்டது.

ஆங்கில ஆட்சி

கர்நாடக நவாப் கையிலிருந்து 1801இல் ஆங்கிலேயரின் கைக்கு முற்றிலும் மாறிய திருமுனைப்பாடிநாடு (தென்னார்க்காடு மாவட்டம்) பாரதத்தின் மற்ற பகுதிகளைப் போலவே 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் வரை ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு வந்தது. மகாத்மா காந்தியடிகளின் அரும் பெரு முயற்சியால் 1947 நவம்பர் முதல் நாள், தென்னார்க்காடு மாவட்டத்தின் இடையிடையே உள்ள புதுச்சேரிப் பகுதிகள் பிரெஞ்சுக்காரரிடமிருந்து விடுதலை பெற்றன.

உரிமைப் போராட்டம்

விடுதலைக்காக அண்ணல் காந்தியடிகள் வகுத்து நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் தென்னார்க்காடு மாவட்டமும் முழுப்பங்கு ஏற்றிருந்தது. மாவட்டத்தில் விடுதலை வேண்டிப் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தப் பெற்றன; ஒத்துழையாமை, வெளிநாட்டுப் பொருள் விலக்கல், கதர் இயக்கம், கள்ளுக்கடை மறியல், பதவி பட்டங்களைத் துறத்தல், வரி கொடாமை முதலிய பல்வேறு இயக்கங்களும் இடம் பெற்றன. கடலூர், பண்ணுருட்டி, விழுப்புரம் முதலிய இடங்களில் பல கிளர்ச்சிகளும் நடைபெற்றன. 1930 சனவரி 26 ஆம் நாள், ‘உரிமை நாள்’ (The Indcpendence Day) ஆக மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. 1930 ஏப்ரல் தொடங்கி மூன்று திங்கள் கால அளவுக்கு மேல் கடலூரில் உப்பு காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. திருவாளர்கள் நயினியப்பப்பிள்ளை , சுதர்சனம் நாயுடு, குமாரசாமிப்பிள்ளை முதலியோர் இப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களாவர். அரசு பலரைச் சிறையில் வைத்தது. இப் போராட்டம் கடலூரினும் திண்டிவனத்தில் மிகவும் சூடு பிடித்திருந்தது.

உரிமைப் போராட்ட காலத்தில் இந்த மாவட்டப் பகுதிக்கு எத்தனையோ இந்தியத் தலைவர்கள் வந்து போயிருப்பினும், 1921 செப்டம்பரிலும் 1927 செப்டம்பரிலும் காந்தியடிகள் வருகை தந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. கடலூரில் கெடிலம் ஆற்று மணல் வெளியில் காந்தியண்ணல் சொற்பொழிவாற்றி மக்களுக்கு எழுச்சியூட்டினார்கள். மக்கள் வீறு கொண்டெழுந்தனர்.

இப்படியாகப் பல்வேறு வகைகளிலும், காந்தியடிகளின் உரிமைப் போராட்டத் திட்டங்களை வரவேற்றுப் பின்பற்றி, நாடு விடுதலை பெறுவதற்குத் தென்னார்க்காடு மாவட்டமும் தன் கடமைப் பங்கை ஆற்றியுள்ளது.

ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை யடைந்ததிலிருந்து, மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப் பெறும் பேராளர் வாயிலாகத் தம்மைத்தாமே உரிமையுடன் ஆண்டு கொண்டு வருகின்றனர்.

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலம் தொட்டு இன்று (1967) வரை திருமுனைப்பாடி நாட்டின் சுருக்கமான வரலாறு இது தான்.


  1. புறப்பொருள் வெண்பாமாலை - கரந்தைப் படலம் - 14.
  2. திருக்குறள் - பொருட்பால் - குடிமை : 5.
  3. விக்ரமசோழன் உலா - வரி 15, 16; தக்கயாகப் பரணி - 376 - உரை.
  4. புறநானூறு - 256.
  5. புறநானூறு - 256 உரை.