உள்ளடக்கத்துக்குச் செல்

கெடிலக் கரை நாகரிகம்/கெடில நாடு

விக்கிமூலம் இலிருந்து
10. கெடில நாடு

காவிரி பாயும் நிலப்பகுதியைக் ‘காவிரி நாடு', ‘புனல் நாடு’ என்றெல்லாம் அழைப்பது மரபு. அதுபோல, கெடிலம் பாயும் பகுதியைக் ‘கெடில நாடு’ என்று நாம் அழைக்கலாம். இப் பெயர் புதுப்பெயர் அன்று. கெடில நாடு என்னும் பெயரை, நம் இருபத்தைந்தாம் தலைமுறையைச் சேர்ந்த பாட்டனார் ஒருவர் முன்னமேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவர்தாம் திருநாவுக்கரசர், அவர் தமது தேவாரத்தில் பன்னிரண்டாம் திருவதிகைப் பதிகத்தில் இரண்டிடங்களில் ‘கெடில நாடர்’ எனவும் பதினைந்தாம் திருவதிகைப் பதிகத்தில் ஏழிடங்களில் ‘கெடில நாடன்’ எனவும் இறைவனைக் குறிப்பிட்டுள்ளார். ‘காவிரி நாடு’ என்னும் பெயர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கம்பரால் சோழ நாட்டிற்கு இடப்பட்ட பெயராகும். ஆனால், கெடில நாடு என்னும் பெயரோ, ஆறாம் நூற்றாண்டிலேயே நாவுக்கரசரால் கெடிலம் பாயும் பகுதிக்கு இடப்பட்ட பெயராகும். எனவே, கெடிலநாடு என்பது, காவிரிநாடு என்பதனினும் அறுநூறு ஆண்டுகள் முற்பட்ட பழமையுடைய பெயராகும். இந்தக் கெடில நாடு என்ற பெயருக்கு உரியது முழுவதும் தென்னார்க்காடு மாவட்டமே. கெடிலத்தின் தோற்றம், ஓட்டம், முடிவு அத்தனையும் தென்னார்க்காடு மாவட்டத்திலேயே நிகழ்கின்றன அல்லவா? கெடில நாடு என்னும் பெயர் பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்திற்கு உரியது என்றாலும், சிறப்பாக, தென்னார்க்காடு மாவட்டத்தின் நட்டநடுவேயுள்ள கள்ளக் குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய மூன்று வட்டங்களும் சேர்ந்த பகுதிக்கே மிகவும் உரித்து. இந்த மூன்று வட்டங்களில் தானே கெடிலத்தின் தோற்றமும் போக்கும் முடிவும் நிகழ்கின்றன? இருப்பினும், வரலாற்று ஆராய்ச்சிக்குள் புகும் நாம் இந்த மூன்று வட்டங்களை மட்டும் தனியே பிரித்து வைத்துப் பார்க்க முடியாது. சுற்றுப் புறச் சூழல்களையும் இணைத்தாற்போல், பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டம் முழுவதையும் மையமாகக் கொண்டே ஆராய்ச்சியைத் தொடங்கவேண்டும்.

மலையமா னாடு

தென்னார்க்காடு மாவட்டப்பகுதி சங்ககாலத்தில் ‘மலைய மானாடு’ எனவும் ‘மலைநாடு’ எனவும், ‘மலாடு’ எனவும் அழைக்கப்பட்டது. இந்தப் பகுதி அக் காலத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் என்னும் மரபைச் சேர்ந்த மன்னர்களால் ஆளப்பட்டதால் மலையமானாடு என்னும் பெயர் பெற்றது. பின்னர் மலையமானாடு என்னும் பெயர் சுருங்கி மலாடு என மருவிற்று. இதனை இலக்கண நூலார் ‘மரூஉப் பெயர்’ என்பர். நன்னூலில்,

[1]"இலக்கண முடையது இலக்கணப் போலி
மரூஉ என் றாகு மூவகை யியல்பும்...."

என்னும் நூற்பா உரையில், “....மலையமானாடு என்பதனை மலாடு என்றும், சோழ நாடு என்பதனைச் சோணாடு என்றும் ... வருவனவும் இவ்வாற்றான் வருவன பிறவும் மரூஉ மொழி” என மயிலைநாதர் எடுத்துக்காட்டி யிருப்பது காண்க, அதே நன்னூலில்,

[2]"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்...."

என்னும் நூற்பாவின் விளக்கவுரையில், செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலங்களின் (நாடுகளின்) பெயர்களைக் கூறுமுகத்தான்,

"தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி,
பன்றி. அருவா, அதன் வடக்கு. - நன்றாய
சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்"

என்னும் பழைய வெண்பா எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பன்னிரண்டு நாடுகளுள் ‘மலாடு’ என்பதும் குறிக்கப் பட்டிருப்பது காண்க. ‘மலாட்டார் (மலாடு நாட்டார்) தோழியை இகுளை என்று வழங்குவர்’ என உரையாசிரியர் மயிலைநாதர் குறிப்பிட்டுள்ளார். [3]'மலாடர் கோமான்’ எனச் சேக்கிழாரும் இப் பெயரை ஆண்டுள்ளார். மலாடு என்னும் பெயர் இலக்கிய இலக்கண நூல்களிலேயன்றி,

'சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடானஜகந்நாத
வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்’ -
‘மிலாடு (மலாடு) ஆகிய ஜனனாத வளநாட்டுக்
குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர்’ - என்பன போலத் திருக்கோவலூர்க் கல்வெட்டுக்களிலும் ஆட்சி பெற்றுள்ளது. இதிலிருந்து, ஒரு தனி நாட்டிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் அனைத்தும் அந்தக் காலத்தில் மலாடு நாட்டிற்கு. இருந்ததாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் மலையமான்களின் நல்ல ஆட்சியும் மாட்சியுமேயாகும். செஞ்சி வட்டத்தில் மலையமான் பெயரால் ‘மலையனூர்’ என ஓர் ஊர் இருப்பதும், தென்னார்க்காடு மாவட்டத்தில் மக்களுக்கு ‘மலையன்’ என்னும் பெயர் வைக்கும் வழக்கம் இருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது, மலையமானுக்கு மலையன் என்னும் பெயர் உண்மையை, ‘செவ்வேல் மலையன் முள்ளூர் (குறுந்தொகை - 312), ‘முள்ளூர்....மலையனது’ (நற்றிணை - 170), ‘மலையன்....முள்ளூர் மீமிசை’ (புறநானூறு - 123) முதலிய சங்க இலக்கிய ஆட்சிகளால் அறிக.

இந்த நாட்டிற்கு மலாடு என்னும் பெயரையடுத்து, ‘நடுநாடு,’ ‘திருமுனைப்பாடி நாடு’ ‘சேதி நாடு,’ ‘மகத நாடு', ‘சகந்நாத நாடு', ‘சன நாத நாடு’ என்னும் பெயர் வழக்காறுகளும் ஏற்பட்டுள்ளன.

தமிழக சுவிட்சர்லாந்து

நடுநாடு என்னும் பெயர் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவையாவன:

1. தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் நடுவே இருப்பதால் நடுநாடு எனப்பட்டது. அஃதாவது, தென்பெண்ணையாற்றுக்கு வடக்கேயிருப்பது தொண்டை நாடு; வடவெள்ளாற்றிற்குத் தெற்கே யிருப்பது சோழநாடு; இந்த இரண்டிற்கும் நடுவேயிருப்பது நடுநாடு.

2. மலையமான், தான் புரிந்த உதவிகளுக்காகச் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தனக்கு அளித்த நிலப்பகுதிகளை இணைத்து, மூவர் நாடுகட்கும் எல்லை உடையதாக - மூவர் நாடுகட்கும் நடுவே அமைத்துக் கொண்ட நிலப்பகுதி யாதலின் நடுநாடு எனப்பட்டது.

3. முடியுடை மூவேந்தர்க்கும் பொதுவுடைமை உள்ளதாக நடுநிலைமையில் இருந்ததால் நடுநாடு எனப்பட்டது.

4. மலையமான் மரபினர் மூவேந்தரிடத்தும் நட்பு உடையவராக மூவேந்தரும் உதவி வேண்டிய போதெல்லாம் புரிந்தவராக - மூவேந்தர்க்கும் நடுநிலை உடையவராக இருந்தமையால் அவர்கள் ஆண்ட நாடு நடுநாடு எனப்பட்டது.

மேற்கூறிய பெயர்க் காரணங்கள் நான்கினையும் தொகுத்து இரண்டாகச் சுருக்கிவிடலாம். அவையாவன:

1. மிகப்பெரிய தொண்டை நாட்டிற்கும் மிகப் பெரிய சோழ நாட்டிற்கும் நடுவே உள்ள ஒரு சிறு நாடு ஆதலின் நடுநாடு எனப்பட்டது. இந்தக் காரணம் பொருத்தமாகத்தான் தெரிகிறது.

2. முடியுடைப் பேரரசர் மூவர்க்கும் நண்பராய் - நடுநிலைமை உடையவராய் - வாழ்ந்த மலையமான் மரபினர் ஆண்டதால் நடுநாடு எனப்பட்டது. இந்தக் காரணமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. இதன்படி பார்த்தால், இன்று உலகின் நடுநிலை நாடாகச் ‘சுவிட்சர்லாந்து’ என்னும் சிறுநாடு விளங்குவதுபோல, அன்று தமிழகத்தின் நடுநிலை நாடாக இது விளங்கி யிருந்தமை புலப்படும். இந்தக் கருத்துக்கு, புலவர் கபிலர் மலையமான் திருமுடிக் காரியின்மேல் பாடியுள்ள

"வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பா கியரென
ஏத்தினர் தருஉம் கூழே நுங்குடி"

என்னும் புறநானூற்றுப் (122) பாடல் பகுதி தக்க சான்று.

கரையேறவிட்ட நகர்ப் புராண ஆசிரியர் நடுநாடு என்னும் பெயர் வந்ததற்குக் கூறும் காரணம் இங்கே மிகவும் குறிப்பிடப்பட்டு மகிழ்தற்குரியது. ‘தொண்டை நாடு சான்றோர் உடைத்து'; ‘சோழ நாடு சோறுடைத்து’. என்பன முதுமொழிகள், இவ்விரு நாடுகட்கும் நடுவில் இருத்தலாலும், இவ்விரு நாடுகளின் தனிச் சிறப்பான சான்றோரையும் சோற்று வளத்தையும் தான் ஒருசேரப் பெற்றிருத்தலாலும் இப் பகுதி ‘நடுநாடு’ எனப்பட்டது என அவர் கூறியுள்ளார்; பாடல் வருமாறு:

[4]"சொற்றதிரு முனைப்பாடித் தூநாட்டை நடுநாடாச்
சொல்வார் ஆன்ற
கற்ற அறி வினரதற்குக் காரணநோக் கிடிற் சான்றோர்
கனிந்துற் றோங்கித்
துற்ற திரு நாட்டினுக்கும் சோறுகுறை வற்றவளம்
சூழ்நாட்டிற்கும்
தெற்றநடு ஆர்ந்து இரண்டு சீரும்மலிந்து ஓங்குகின்ற
திறத்தாற் போலும்"

இப் பெயர்க் காரணம் மிகவும் பொருத்தமாகப் புலப்படுகிறது. இந்நாடு, வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில்,

"நடுவில் மண்டலத்துத் திருமாணிக் குழி"

என ‘நடுவில் மண்டலம்’ என்பதாய்க் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. நடுவில் மண்டலம் என்பதற்கு, நடுவே உள்ள நடுநாடு என்பதாகத்தான் பொருள் இருக்க வேண்டும்.

திருமுனைப்பாடி நாடு

அடுத்து, திருமுனைப்பாடி நாடு என்பதின் பெயர்க் காரணம் வருமாறு:

திருமுனைந்து ஆடும் நாடு - அஃதாவது - திருமகள் மிகுந்த சிறப்புடன் வாழும் நாடு என்ற பொருளில் (திருமுனைப்பு ஆடி நாடு) திருமுனைப்பாடி நாடு எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனச் சிலர் கூறகின்றனர், இந்தக் காரணம் பொருத்தமானதாய்ப் புலப்படவில்லை. முனை என்பது போர் முனையை - போர்க் களத்தைக் குறிக்கும்; பாடி என்றால் பாசறை - போர் மறவர்கள் தங்கியிருக்கும் இடம். எனவே, முனைப்பாடிநாடு என்றால், போர்கள் பல நடந்த நாடு - போர் முனைகள் மிக்க நாடு - போர் மறவர்கள் நிறைந்த நாடு எனப் பொருள்படும். திரு என்பது மங்கலச் சொல், இப்படியாக - இந்தப் பொருளில் திருமுனைப்பாடி நாடு என்னும் பெயர் உருவாயிற்று என ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இதுதான் பொருத்தமாய்த் தோன்றுகிறது.

இந்த நாடு தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் வடபுல மன்னர்களும் தென்புல மன்னர்களும் பலமுறை இங்கே மோதிக்கொண்டிருக்கலாம்; முடியுடை மூவேந்தர்கள் துணைவேண்டிய போதெல்லாம் மலையமான் மரபினர் மிக்க படை வீரர்களுடன் சென்று உதவியதாய் அறியப்படுதலின், பயிற்சியும் பட்டறிவும் மிக்க போர் மறவர்கள் மிகப் பலர் இங்கே இருந்திருக்க வேண்டும்; எனவே, இந்நாடு முனைப்பாடி என்னும் பெயருக்கு ஏற்றதே. மற்றும், இந்நாடு நடுநிலை நாடாக இருந்ததால், ஒருவர்மேல் ஒருவர் படையெடுத்துச் சென்ற மன்னர் பலரின் படைகள் வழியில் இந் நாட்டைப் பாடிவீடாகக் கொண்டு தங்கி இளைப்பாறுவதும் வழக்கமாயிருந்திருக்கலாம்; இதனாலும் இந் நாட்டிற்குத் திருமுனைப் பாடிநாடு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

திருமுனைப் பாடிநாடு என்பதற்கு எத்தனை பெயர்க் காரணங்கள் கூறினாலும் அத்தனையும் மலையமான்களை மையமாகக் கொண்டே சுற்றிச் சுற்றி வருவனவாயுள்ளன. கெடிலமும் தெண்பெண்ணையும் பாயும் இத் திருமுனைப் பாடி நாட்டைப் புலவர்கள் மிகவும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். “நல்லொழுக்கம் மிக்க குடிமக்களையும் வளஞ்சிறந்த ஊர்களையும் உடையது திருமுனைப்பாடி நாடு, திருநாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்த சிறப்புடையது திருமுனைப்பாடி நாடு என்றால், இதற்குமேல் அதற்கு இன்னும் வேறு பெருமை கூறவியலாது” என்னும் கருத்தில் சேக்கிழார் பெரிய புராணத்தில்,

[5]"கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதியிரு மருங்கும் ஓடிச்
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடி நாடு"
[6]"தொன்மைமுறை வருமண்ணின் துகளன்றித் துகளில்லா
நன்மைநிலை ஒழுக்கத்து நலஞ்சிறந்த குடிமல்கிச்
சென்னிமதி புனையவளர் மணிமாடச் செழும்பதிகள்
மன்னிநிறைந் துளதுதிரு முனைப்பாடி வளநாடு"
[7]"மறந்தருதீ நெறிமாற மணிகண்டர் வாய்மை நெறி
அறந்தருநா வுக்கரகம் ஆலால சுந்தரரும்
பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு.”

எனத் திருமுனைப்பாடி நாட்டைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். மற்றும், இலக்கணம் சிதம்பரநாத முனிவர் தமது திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில், “காஞ்சிபுர நாட்டுப் பகுதிக்குத் தெற்கிலும் காவிரி நாட்டுக்கு வடக்கிலும் உள்ளது திருமுனைப்பாடி நாடு; சுந்தரரும் நாவுக்கரசரும் தோன்றிச் சிறந்தது அந்நாட்டில்தான்; நாடுகளுக்குள் மேம்பட்டது திருமுனைப்பாடி நாடு என்று காவியங்கள் கூறுகின்றன” - என்னும் கருத்தில்,

[8]"இன்ன நாவலந் தீலனிற் காஞ்சியின் தென்பால்
பொன்னி நல்வளம் பரப்புநாட் டுத்தரம் பொலிந்து
தன்னை யொப்பரும் பெண்ணைநீர் பாய்ந்தகந் தழைத்து
மன்னி வாழ்வது திருமுனைப் பாடிமா நாடு"
அன்ன நாட்டினில் ஆலால சுந்தரர் உதிப்ப
என்னையாள் வெண்ணை நாயகர் தடுத்தினி தாண்டார்
முன்னர் நாவினுக் கரசரு முளைத்திந்தக் கடலின்
மன்னி யேகரை யேறவிட் டார்புகழ் வளர்த்தார்”
"நாட்டின் மேம்படுந் திருமுனைப் பாடிநா டென்றே
ஏட்டின் மன்னிய காப்பியக் கவிகளே யிசைக்கும்..."

என்று புகழ்ந்து பாடியுள்ளார். திருவதிகை வாகீச பக்த நாவலர் தமது திருவதிகைப் புராணத்தில்,

[9]"தெய்வநன் னாட்டின் மேலாம் திருமுனைப் பாடிநாடு"
[10]"திருவுறு கெடிலம் பாயு திருமுனைப் பாடிநாடு"

என்றெல்லாம் பல பாடல்களில் பலபடப் புகழ்ந்துள்ளார். இவரும், அப்பரும் சுந்தரரும் பிறந்ததால் பெருமை பெற்ற நாடு எனக் கூறத் தவறவில்லை . இதே பெருமையைச் சிவசிதம்பரப் புலவரும் தமது ‘கரையேறவிட்ட நகர்ப் புராணம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர். திருமுனைப்பாடி நாட்டிற்கு ‘நடுநாடு’ என்னும் பெயர் உண்மையையும் குறிப்பிட்டுள்ளார். இந் நாடு ‘சீராமன் வழிபட்ட நாடு’ எனவும் புகழ்ந்துள்ளார். பாடற் பகுதிகள் வருமாறு:

[11]"ஓவு றாப்பெரு வளஞ்செய ஒளிர்நடு நாடாம்
பாவு சீர்முனைப் பாடிநாட் டணிவளம் பகர்வாம்"
"உவப்புடன் ஒரு சீராமனும் வழிபட்
டுள்ளதும் இந்நடு நாடே."

மற்றும், புலவர் வரந்தருவார் வில்லிபாரதத்தின் பாயிரச் செய்யுளில், “திருமுனைப் பாடிநாடு நீர்வளம் மிக்கநாடு; பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் முதலாழ்வார் மூவரும் கோவலூரில் ஒன்று சேர்ந்து திருமாலைத் தொழுதநாடு; தேவார ஆசிரியர்கள் மூவருள் இருவராகிய நாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்த சிறந்த நாடு"- என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவருடைய பாடற் பகுதிகள் வருமாறு:

"தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
திருமுனைப் பாடிநன் னாdu”
"பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவற்
பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக் கேற்றி
முகுந்தனைத் தொழுதநன் னாடு
தேவரும் மறையும் இன்னமுங் காணாச்
செஞ்சடைக் கடவுளைப் பாடி
யாவரும் மதித்தோர் மூவரில் இருவர்
பிறந்த நாடு இந்தநன் னாடு."

இவ்வாறு புலவர் பலரால் போற்றிப் புகழப் பெற்ற பெருஞ்சிறப்பிற்குரியது திருமுனைப்பாடிநாடு. இலக்கியங் களிலேயன்றிக் கல்வெட்டுக்களிலும் ‘திருமுனைப்பாடிநாடு’ என்னும் பெயர் ஆட்சியைக் காணலாம்.

[12]"திருமுனைப் பாடிக் கீழாமூர் நாட்டுத் திருவாமூர்
ஊரோம்"

என்றும்

"திருமுனைப்பாடி நாட்டுப் பாண்டையூர் மங்கலங்
கிழான்"

என்றும் கல்வெட்டுக்களில் இப்பெயர் ஆளப்பட்டுள்ளமை காண்க சேதிநாடு

இந்நாட்டிற்குச் சேதி நாடு’ என்னும் பெயரும் இருப்பதை,

[13]"சேதிநன் னாட்டுநீடு திருக்கோவ லூரின்மன்னி" என்னும் பெரிய புராணப் பாடல் பகுதியால் அறியலாம். சேதிநாடு திருமுனைப்பாடி நாட்டின் ஓர் உட்பகுதியாக இருக்கலாம்.

மகதநாடு

திருக்கோவலூர் வட்டாரத்திலுள்ள ஆற்றுார் அல்லது ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு வாணர் என்னும் குறுநில மன்னர் மரபினர் ஆண்ட பகுதி ‘மகத நாடு’ என அழைக்கப்பட்டது. மகத நாட்டையாண்ட மன்னர்கள் ‘மகதேசர்’ என அழைக்கப்பட்டனர். மகத+ஈசர் = மகதேசர். அதாவது, மகதநாட்டின் தலைவர். இச்செய்தியை, ஏகம்ப வாணன் என்னும் வாண மன்னனைப் பற்றிப் பெருந்தொகை என்னும் நூலின் 1192ஆம் பாடலிலுள்ள

"மகதேசன் ஆறைநகர் காவலன் வாண பூபதி”

என்னும் பகுதியாலும், திருவண்ணாமலைக் கோயிலில் வாணவ கோவரையன் என்னும் வாண மன்னனைப் பற்றிய கல்வெட்டொன்றிலுள்ள

“ஆறகளுர் உடையான் மகதேசன் உலகம் காத்த
வாணவ கோவரையன்”

என்னும் பகுதியாலும் திருவயிந்திரபுரம் கல்வெட்டொன்றிலுள்ள ’மகதராஜ்ய நிர்ம்மூலமாடி’ என்னும் பகுதியாலும் பிறவற்றாலும் அறியலாம்.

சனநாத நாடு

இந்நாட்டிற்கு, ’சனநாத நாடு’ என்னும் பெயரும் ஒருகால் ஒரு சிலரால் வழங்கப்பட்டமையை, திருக்கோவலூர் திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்களில் உள்ள,

“ஜநனாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்து
பிரம்மதேயம் திருக்கோவலூர் ஆன பூரீ மதுராந்தக
சதுர்வேதி மங்கலத்து திருவிடைகழி ஆழ்வார்க்கு
இவ் ஊர் சபையோம் விற்றுக் குடுத்த நிலமாவது....”
“மிலாடாகிய ஜனனாத வளநாட்டுக் குறுக்கைக்
கூற்றத்து திருக்கோவலூர்”
என்னும் பகுதிகளால் அறியலாம்.

சகந்நாத நாடு

இதே நாட்டிற்கு ‘சகந்நாத நாடு’ என்னும் பெயரும் வழங்கப்பட்டதை, திருக்கோவலூர்க் கல்வெட்டொன்றிலுள்ள

"மலாடான ஜகந்நாத வளநாட்டுக் குறுக்கைக்
கூற்றத்துத் திருக்கோவலூர்

என்னும் பகுதியால் அறியலாம். சனநாத நாடு என்பது சகந்நாத நாடு எனத் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டதோ - அல்லது சகந்நாத நாடு என்பது சனநாத நாடு என மாற்றி வழங்கப்பட்டதோ - தெரியவில்லை. இரண்டும் தனித்தனிப் பெயராகவும் இருக்கலாம்.

இவ்வாறு கெடில நாட்டிற்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டன. இப்பெயர்களுள், சங்ககாலத்தில் மலாடு என்னும் பெயரும், சங்க காலத்திற்குப் பின் திருமுனைப்பாடி நாடு என்னும் பெயருமே வழக்காற்றில் பெரிதும் இடம் பெற்றன என்பது நினைவுகூரத் தக்கது.

உலக எல்லைக்குள் கெடில நாடு

கெடிலம் பாயும் தென்னார்க்காடு மாவட்டம் உலக எல்லைக்குள், வடகுறுக்கைக் கோடு (North Latitude) 11°5’ - 12°30’ ஆகிய அளவிற்குள்ளும், கிழக்கு நெடுக்கைக் கோடு (East Longitude) 78°37’ -80’ ஆகிய அளவிற்குள்ளும் அமைந்து கிடக்கிறது. இந்தப் பொது எல்லைக்குள்ளேயே, கெடிலம் பாயும் கள்ளக்குறிச்சி வட்டம், திருக்கோவலூர் வட்டம், கடலூர் வட்டம் ஆகிய மூன்று வட்டங்களும் அடங்கிய கெடில நாடு, வடகுறுக்கைக் கோடு {North Latitude) 11°30’ - 12°10’ ஆகிய அளவிற்குள்ளும், கிழக்கு நெடுக்கைக் கோடு (East Longitude) 78°40’ - 79°50’ ஆகிய அளவிற்குள்ளும் அமைந்துள்ளன. இது, உலக எல்லைக்குள், சிறப்பாகக் கெடில நாடு அமைந்திருக்கும் இட எல்லையாகும்.


  1. நன்னூல் - பெயரியல் - 10.
  2. நன்னூல் - பெயரியல் - 16.
  3. பெரியபுராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1.
  4. கரையேறவிட்ட நகர்ப்புராணம் - திருநாட்டுப் படலம் - 37.
  5. பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 1.
  6. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 2, 11.
  7. பெரிய - திருநாவுக்கரசர் - 11.
  8. திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் - 102, 103, 104.
  9. திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 3.
  10. திருவதிகைப் புராணம் - திருநாட்டுப் படலம் - 7.
  11. கரையேறவிட்ட நகர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் - 1, 40.
  12. திருவாமூர்க் கோயில் கல்வெட்டு (கி.பி. 1090).
  13. பெரியபுராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1.