உள்ளடக்கத்துக்குச் செல்

கெடிலக் கரை நாகரிகம்/இலக்கியத்தில் கெடிலம்

விக்கிமூலம் இலிருந்து



9. இலக்கியத்தில் கெடிலம்

பாடல்பெற்ற கெடிலம்

ஒருவரோ, ஒர் இடமோ ஒரு பொருளோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ மக்களது பேச்சில் மட்டுமின்றி ஏட்டிலும், இடம் பெற்றுவிடின் ஒரு தனி மதிப்புதான்! ஏட்டிலும். உரை நடையினும் செய்யுள் நடைக்குச் சிறப்பு மிகுதி, செய்யுள் நடையிலும் பழங்காலச் செய்யுட்களில் சிறப்பிடம் பெற்றிருப்பின் மிகவும் பெருமை உண்டு. இந்த அடிப்படையில் தான், நாயன்மார்கள். ஆழ்வார்களின் பாடல் பெற்ற பதிகள் மிக்க பெருமைக்கு உரியனவாய்ப் போற்றப் பெற்று வருகின்றன. ஊர்களேயன்றி ஆறுகளும் பாடல் பெற்றிருக்குமாயின் மிக்க பெருமைக்கு உரியனவே. இவ்வாறு பாடல்பெற்ற பெருமை கெடிலம் ஆற்றிற்கும் உண்டு. பழைய சங்க இலக்கியங்களில் இடம் பெறும் வாய்ப்பு கெடிலத்திற்குக் கிடைத்திராவிடினும், சங்க காலத்தையடுத்த தேவாரத்தில் இடம் பெறும் வாய்ப்பு - தேவாரப் பாடல் பெறும் பெருமை கெடிலத்திற்கு உண்டு. இனி, தேவார காலத்திலிருந்து இலக்கியத்தில் கெடிலம் இடம்பெற்றுள்ளவற்றைக் கால வரிசை முறையில் காண்பாம்.

அப்பர் தேவாரம்

அப்பர் பெருமான் திருவதிகைமேல் பதினாறு பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றுள் எண்பத்தாறு இடங்களில் ‘கெடிலம்’ என்னும் பெயரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவருடைய பாடல் அடிகள் சில வருமாறு:

முதல் பதிகம்

"அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே"

இரண்டாம் பதிகம்

"கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்"

மூன்றாம் பதிகம்

"செய்ய பொன் கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே”
"தென்றிசைக் கெங்கைய தெனப்படும் கெடில வாணரே”
“வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.”
"ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.’’

நான்காம் பதிகம்

“வண்டு கொப்பளித்த தீந்தேன்
வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்
கெடில வீரட்டனாரே"

ஏழாம் பதிகம்

“கெடில வேலி அதிகை வீரட்டனாரே"

எட்டாம் பதிகம்

“....பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழியவோடி அதனிடை மணிகள் சிந்தும்
கெடில வீரட்டமேய கிளர்சடை முடியனாரே.’’
“கந்திரம் முரலுஞ் சோலைக் கானலங் கெடிலத்தாரே.”

ஒன்பதாம் பதிகம்

“மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத்தே எங்கள் வீரட்டமே”
"பைங்கால் தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுப்பர்
அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவும்
செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடிலக் கரைத்தே’’
"அம்மலர்க் கண்ணியர் அஞ்சனம் செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் கிரங்கார் தடந்தோள் மெலியக் குடைவார்
விம்மு புனற்கெடிலக் கரைத்தே எந்தை வீரட்டமே.”
“தூய தெண்ணீர்க் கெடிலக்கரைத் திருவீரட்டராவர்”

பத்தாம் பதிகம்

"ஆறெலாம் திரையார் ஒண்புனல் பாய் கெடிலக்கரை”
“ஆறுடைப் புனல்பாய் கெடிலக்கரை”
"வரையார்ந்த வயிரத்திரள் மாணிக்கம்
திரையார்ந்த புனல்பாய் கெடிலக்கரை”

பதினோராம் பதிகம்

"வாளமா லிழியும் கெடிலக்கரை”
"தெள்ளுநீர் வயல்பாய் கெடிலக்கரை”
"வரைகள் வந்திழியுங் கெடிலக்கரை”
"ஆலி வந்திழியுங் கெடிலக்கரை”
"மூரித் தெண்திரை பாய்கெடிலக் கரை”

பன்னிரண்டாம் பதிகம்

“எறி கெடிலத்தானை"
“செழுங் கெடில வீரட்டம் மேவினானை"
“எறி கெடில நாடர்”

பதினான்காம் பதிகம்

“அலை கெடில வீரட்டத் தாள்வாய்போற்றி”
"இருங் கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி"
“கார்க் கெடிலங் கொண்ட கபாலி போற்றி”

பதினைந்தாம் பதிகம்

"திரைவிரவு தென்கெடில நாடன்”
“நிறை கெடில வீரட்டம்”
"தெய்வப் புனல்கெடில நாடன்”
“திருந்துநீர்த் தென்கெடில நாடன்”
“கரைமாங் கலிக்கெடில நாடன்”
“செறி கெடில நாடர்”
“தணிபாடு தண்கெடில நாடன்”

பன்னிரண்டாம் பதிகம்

“செல்வப் புனற்கெடில வீரட்டமும்”
“தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்”

“சிறையார் புனற்கெடில வீரட்டமும்”
“செழுநீர்ப் புனற்கெடில வீரட்டமும்”
“தேனார் புனற்கெடில வீரட்டமும்”
"திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்”

இவை அப்பர் தேவாரப் பாடற் பகுதிகள்.

கெடிலக் கரையிலே பிறந்து கெடிலக் கரையிலே வளர்ந்து கெடிலக் கரையிலே உருவான நாவுக்கரசர் தம் தாய்த்திரு கெடிலத்தை ஆவல் தீரப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். “கெடிலம் தென்திசைக் கங்கையாம். கெடிலம் பொன் கொழிக்கிறதாம். கெடிலத்தில் வண்டுகள் மிழற்றுகின்றன; எருமைகள் பாய்கின்றன; மலர்கள் தேன் சொரிகின்றன; மந்திகள் தேன் நுகர்கின்றன: கயல் மீன்களும் தேன் மாந்துகின்றன; கெண்டைகள் தேன் கொப்பளிக்கின்றன. ஊருக்கு வேலிபோல் உள்ளது கெடிலம், கரைகளில் சோலைகள் சூழ்ந்துள்ளன; தெங்கின் முற்றிய மணிகள் நீரில் சிந்துகின்றன; ஒள்ளிய வெள்ளிய வாள்போல் நீரில் அலைகள் எழுகின்றன; அந்த அலைகளில் அன்னங்கள் ஊசல் (தொட்டில்) ஆடிக்கொண்டே உறங்கிவிடுகின்றன; வண்டுகள் தாலாட்டுப் பண்பாடுகின்றன. ஆற்றின் ஒருபால் தவளைகள் பறை கொட்டுகின்றன; நாரைகள் நடமாடுகின்றன; மற்றொருபால், சாந்து பூசிய - மாலையணிந்த மங்கையர்கள் இடுப்பு ஒடியத் தோள் மெலியத் தெண்ணிர்ப் புனல்குடைகின்றனர். கெடிலம் மலைப்பகுதியிலிருந்து புறப்பட்டு வருகிறது. மழை பொழிய நீர் திரளுகிறது; மணிவகைகள் அடித்துக் கொண்டுவரப்படுகின்றன. ஆற்றின் செழுமையான செல்வங் கொழிக்கும் நீர்ப்பெருக்கு வயல்களில் பாய்ந்து வளப்படுத்துகிறது. ஆற்றின் இருமருங்கும் கரைகள் உள்ளன. கெடில நீர் ஒரு செல்வப் புனலாகும் - தெய்வப் புனலாகும் தீர்த்தப் புனலாகும்” என்றெல்லாம் அப்பர் பெருமான் கெடில ஆற்றின் வளத்தையும் மாண்பையும் வாயாரப் புகழ்ந்துள்ளார். அவர் ஒரிடத்தில் ‘திருநீர்ப் புனல் கெடிலம்’ என்று கூறியுள்ளார். ‘திருநீர்’ என்பது, தீர்த்தம் என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லாகும்.

அப்பர் பெருமான் தம் பிற்கால வாழ்க்கையில் காவிரி நாட்டில் பன்னெடுங்காலம் கழித்திருப்பினும், தமது வாழ்நாளின் முற்பகுதியைக் கெடில நாட்டிலேயே கழித்தார். அப்பர் என்னும் கட்டடத்தைக் கட்டுவதற்குச் சேறு குழப்பிய தண்ணீர் கெடில ஆற்றின் தண்ணீர்தான். கெடிலத்தை அப்பர்

மறந்தாலும், அதைப் பாடுவதற்கு அவர் நா மறவாது - எழுதுவதற்கு அவர் கை மறவாது. அதனால்தான் ‘தென்திசைக் கெங்கைய தெனப்படும் கெடிலம்’ என்று பாடினார். ‘தென்கங்கை’ என்பதற்குமேல் என்ன சிறப்பு வேண்டும்?

சம்பந்தர் தேவாரம்

திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் திருவதிகைப் பதிகத்தில் இரண்டு இடங்களிலும், திருமாணிகுழிப் பதிகத்தில் இரண்டு இடங்களிலுமாக நான்கு இடங்களில் கெடிலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். முறையே அவை வருமாறு:

திருவதிகைப் பதிகம்

“கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
'வண்டு மருள் பாட..."

“கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்”

திருமாணிகுழிப் பதிகம்

"சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள்
கொண்டு கெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயும்மண மாருதவி
மாணி குழியே"

"உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி
மாணி குழிமேல்."

கெடிலத்தின் நீர் வளமும் அது பாயும் நிலவளமும் சம்பந்தரால் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.

சுந்தரர் தேவாரம்

சுந்தரர் பெருமான் தமது தேவாரத்தில் திருவதிகைப் பதிகத்தில் பாடல்தோறுமாகப் பத்து இடங்களில் கெடிலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவற்றுள் சில வருமாறு:

"இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட்டானத்
துறைவானை"

“ஏந்துநீர் எறி கெடிலம்”

எனச் சுந்தரராலும் கெடிலத்தின் நீர்வளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருமங்கையாழ்வார் திருமொழி

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியுள் - திருவயிந்திரபுரம் பற்றிய திருமொழியில் இரண்டிடங்களில் கெடிலத்தின் வளத்தைப் புகழ்ந்துள்ளார்; அவை வருமாறு;

மூன்றாம் பத்து - முதல் திருமொழி

“வரை வளந்திகழ் மதகரி மருப்பொடு
மலைவள ரகிலுந்தி
திரை கொணர்ந்தனை செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே”

“.....குலவுதண் வரைச்சாரல்
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம்
பாளைகள் கமழ்சாரல்
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
திருவயிந் திரபுரமே”

கெடிலம் காட்டு விலங்குகளையும் மணமிக்க மரங்களையும் இன்னபிற மலைவளங்களையும் உந்திக்கொண்டு மலைச்சாரலில் ஓடிவருவதாகவும், கமுகஞ் சோலைகள் சூழ்ந்திருப்பதாகவும், வயல்களில் பாய்ந்து நாட்டை வளப்படுத்துவதாகவும் ஆழ்வார் அறிவித்துள்ளார். திருமங்கை மன்னர் தம் பாடல்களில் ‘கெடிலம்’ என்னும் சிறப்புப் பெயரால் ஆற்றைக் குறிப்பிடாமல், ‘செழு நதி’ எனப் பொதுப் பெயராலேயே சுட்டியுள்ளார். ஒருவேளை, கெடிலம் நதிகளுக்குள் சிறந்தது; எனவே, நதி என்று பொதுவாகச் சொன்னாலும் அது கெடிலத்தையே குறிக்கும் என்று ஆழ்வார் சிறப்பாக எண்ணி யிருப்பாரோ என்னவோ! நதியிலும் ‘செழுநதி’ எனச் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்

தொல்காப்பியத் தேவர் தமது திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பக நூலில் மூன்றிடங்களில் கெடிலத்தைப் பாடியுள்ளார். அவையாவன:

“ஐயர் திருக்கெடிலம் ஆட்டி”

(13)

“கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்

கடிலமா நதியதன் வடபால்’’

(45)

“முத்தினை முகந்துபவ ளக்கொடியை வாரி
மோதியீரு டண்டலை முறித்துமத குந்தித்
தத்திவரு சந்தன மெறிந்தகி லுருட்டித்
தாமரையு நீலமும ணிந்ததட மெல்லாம்
மெத்திவரு கின்றகெடி லத்து வடபாலே"

(100)

தொல்காப்பியத் தேவர், ‘திருக் கெடிலம்’ எனக் கெடிலத்தின் தெய்வத்தன்மையைச் சுட்டியுள்ளார்; ‘கடில மாநதி’ என அதற்கு ஒரு பேராற்றின் தகுதி அளித்துள்ளார். கெடிலத்தின் வெள்ளப் பெருக்கு உயர்ந்த மணிவகைகளையும் நறிய மரவகைகளையும் உருட்டிக் கொண்டு வந்து மதகுகளுடன் மோதிச் சோலைக்குள் புகுந்து பொய்கைகளை நிறைத்துச் செல்வ ஆரவாரம் புரிவதாகப் புலவர் பெருமான் புனைந்து பாடியிருப்பது படித்துச் சுவைத்தற்கு இன்பமாயுள்ளது.

பெரிய புராணம்

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கெடிலம் பல பாடல்களில் புகழிடம் பெற்றுள்ளது. அவற்றுள் சில வருமாறு:

தடுத்தாட் கொண்ட புராணப் பகுதி

“விரிதிரைநீர்க் கெடிலவட வீரட்டா னத்திறை”

(84)

"பொன்திரளும் மணித்திரளும்
பொருகரிவெண் கோடுகளும்
மின்திரண்ட வெண்முத்தும்
விரைமலரும் நறுங்குறடும்
வன்திரைக ளாற்கொணர்ந்து
திருவதிகை வழிபடலால்
தென்திசையில் கங்கையெனும்
திருக்கெடிலம் திளைத்தாடி"

(89)

திருநாவுக்கரசர் வரலாற்றுப் பகுதி

“நீரார் கெடிலவட நீள்கரையில்”

(42)

"திரைக்கெடில வீரட்டா னத்திருந்த”

(69)

"பூவலர் சோலை மணமடி புல்லப் பொருண் மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடி லத்தைக்

கடந்தணைந்தார்” (136)


கெடிலத்தின் நீர்வளத்தையும், அது பொன்னும் மணியும் பொரு கரியின் மருப்பும் மின்னும் வெண்முத்தும் மணநாறும் மலர்களும் மரத்துண்டங்களும் உந்தி உருட்டி வருவதையும் பாடி ஆவல் தீர்வதில் சேக்கிழாரும் பின் தங்கவில்லை. ‘திருக்கெடிலம்’ எனக் கூறி அதன் தெய்வ மங்கலத்தைப் போற்றியுள்ளார். சேக்கிழார்க்குக் கெடிலம் திருக்கெடிலம் மட்டுமன்று - அது செல்வக் கெடிலமாம் - காவல் கெடிலமாம் - செல்வத் திருக்கெடிலமாம் - காவல் திருக்கெடிலமாம் - காவல் செல்வத் திருக்கெடிலமாம் - இத்துணை அரும் பெரும் பொருள் ‘காவல் செல்வத்திருக்கெடிலம்’ என்னும் தொடரில் பொதிந்து செறிந்திருப்பதைக் கண்டு மகிழலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அப்பர் பெருமானின் கருத்தை அடியொற்றி, ‘தென் திசையில் கங்கையெனும் திருக்கெடிலம்’ எனக் கெடிலத்தைக் கங்கையோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து பெருமை செய்துள்ளார் சேக்கிழார் பெருமான்.

அருணகிரிநாதர் திருப்புகழ்

அருணகிரிநாதர் தமது முதல் திருவதிகைத் திருப்புகழின் ஈற்றில் பின்வருமாறு கெடிலத்தின் வளப்பெருக்கைப் புனைந்து புகழ்ந்துள்ளார்:

"திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும் வயற் கதிரலையத் திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடில நதித்
திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே"
இப் பாடற் பகுதியால் கெடிலக்கரையின் சோலை வளங்களும் வயல் வளங்களும் தெரியவருகின்றன. புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடி வருகிறதாம்; அப்போது உழவர்கள் ‘திமிதிம்’ எனப் பறை கொட்டி முழக்குகிறார்களாம். என்ன அழகு! என்ன வியப்பு! கோடை கழிய, கொண்டல் பொழிய, ஆற்றில் புதுப்புனல் பெருக்கெடுத்தோடி வரும்போது, உழவர்கள் மழிச்சிப் பெருக்கெடுத்துப் பறை முழக்கிப் பூசனை புரிந்து ‘புதுப் புனல் விழா’ நிகழ்த்துவது பண்டைய மரபு அதனைத்தான் இப் பாடலில் அருணகிரியார் அறிவித்துள்ளார்.

புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடிவரும் மிடுக்கை அப்படியே சொல்லோவியப்படுத்திக் காட்டியுள்ளார் திருப்புகழார். மிடுக்கிற்கேற்ற சந்தம் பாடலில் அமைக்கப்பட்டுள்ளது. இப் பாடலை உரிய சந்தத்துடன் திரும்பத் திரும்பப் பாடுவோமாயின், புதுவெள்ளம் உண்மையிலேயே கமுகின் தலையை இடறுவது போலவும், வாழைக் குலையைச் சிதறுவது போலவும், கதிரை அலைப்பது போலவும், திரை மோதுவது போலவும், ‘திமிதிம்’ எனப் பறை முழக்குவது போலவும் உணர்ந்து வியந்து மனவெழுச்சி (Emotion) கொள்வோம்.

திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்

இலக்கணம் சிதம்பரநாத முனிவர் தாம் இயற்றிய திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் பல விடங்களில் கெடிலத்தைக் குறிப்பிட்டுள்ளார்; சில வருமாறு:

தலவிசிட்டச் சருக்கம்

“துங்க வாவியே யயிந்திரம் கெடிலமேற் சொல்லும்” பாடலேச்சுரர் சித்தராய் விளையாடிய சருக்கம்

“சந்தனத் துருமங்களு மகில்களுஞ் சரளச்

சுந்தரத் துருமங்களுந் தொலைவில் பல்வளனுஞ்

சிந்துரத் துருக்கேசரி வயப்புலித் திரளுங்

கொந்து கொந்ததாய்க் கெடிலமா நதிகொணர் தருமால்” (33)

‘வாரி முத்தமுங் கயமருப் பற்புத மணியும்

வாரி மிக்கெழுங் கெடிலமா நதியள்ளி வந்து

வாரி மிக்கபல் கலன்களு மேற்றுதல் மான

வேரி மிக்கநீர்க் காலென வெதிர்தரு மேல்வை.” (34)

கெடில மாநதி பாடலேச் சுரனிகே தனத்தின்” (45)

கெடில மாநதி சேய்த்ததாய்க் கெழுமுவதன்றி” (54)

உயரிய நறிய மரங்களையும் கொடிய காட்டு விலங்குகளையும் விலையுயர்ந்த பல்வேறு மணிகளையும் கெடிலம் உருட்டிக் கொண்டுவந்து கடலிலுள்ள கப்பல்களில் ஏற்றுமதி செய்வதுபோல் தோன்றுவதாகப் புலவர் புனைந்துள்ளார். இவரும் கெடிலத்தை ‘மாநதி’ எனச் சிறப்பித்துள்ளார்.
கரையேறவிட்ட நகர்ப் புராணம்

திருப்பாதிரிப் புலியூர்ச் சிவசிதம்பரப் புலவர் அவர்கள், தமது கரையேறவிட்ட நகர்ப் புராணத்தில் கெடிலத்தின் நீர்வளம் பற்றியும் அதனால் நடுநாடு பெற்றுள்ள நிலவளம் பற்றியும் பல இடங்களில் பாராட்டியிருப்பதன்றி, திருநாவுக்கரசரையும் சேக்கிழாரையும் பின்பற்றிக் கெடிலத்தைத் ‘தென்கங்கை’ எனப் பல இடங்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார்; அவற்றுள் சில இடங்கள் வருமாறு:

திருநாட்டுப் படலம்

”..........கெடிலமாந் தகைப்பேர்
மேவு தென்திசைக் கங்கையும் விரிந்து கால்கொண்டே
ஓவுறாப் பெருவளஞ் செயவொளிர் நடுநாடாம்”

(1)


விண்ணதிக் கிணையாகவே விளங்கும் ஒண்கெடிலம்
மண்ணதைத் தகைகாத்திடப் பயிரெலாம் வளர்த்தே” (9)
தலவிசேடப் படலம்
“விரைக்கடித்தண் கரையேற விட்டநக ரதுதீர்த்த
வியன்தென் கங்கை”

(1)

"தென்திசையிற் கங்கையெனத் திகழ்கெடிலப்
பூம்புனலே தீர்த்தமாமால்”

(7)

"வீறுகரை யேற்றுதல விசேடமுமற் றதன்பாலே
விளங்குங் கங்கை
ஆறெனுந் தீர்த்தக் கெடில அற்புதமும் அதற்கருகே
அமர்ந்தன் பர்க்கு ....”

(17)


இவ்வாறு இன்னும் பல இடங்களில் கெடிலத்தின் மாண்பு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவதிகைப் புராணம்

திருவதிகை வாகீசபக்த நாவலர் தாம் இயற்றிய திருவதிகைப் புராணத்தில், கெடிலம் ஆற்றுக்கு என்றே இரண்டு படலங்கள் செலவிட்டுள்ளார்; அவை: கெடிலோற்பவப் படலம், தீர்த்த விசேடப் படலம் என்பனவாம்.

இவரும் கெடிலத்தைக் கங்கையெனக் குறிப்பிட்டு, இதன் பெருமையை நாவுக்கரசரும் ஞானசம்பந்தருமே புகழ்ந்துள்ளனரென்றால் நான் எம்மட்டில் என்று கூறியுள்ளார். இதனைக் கெடிலோற்பவப் படலத்திலுள்ள

"இத்திரு நதியே கங்கை யிதிற்படிந் தவர்க ணேயச்
சுத்தமா யுறுவ ரென்று சொல்லர சறைத லோடு
முத்தராங் காழி வேந்தும் மொழிந்தன ராத லாலே
பத்தியிற் சிறிதிலா யான் பகர்வதுந் துணிபே யாமால்"

என்னும் (12) பாடலால் அறியலாம். மற்றும், சிவனது உடலிலிருந்து வியர்வை நீர்போல் வெளிவந்தது கெடிலம் என்றும், இஃது ஓர் உயிர்ப்பு உள்ள - அஃதாவது என்றும் வற்றாத (சீவ நதி) உயிர் ஆறு என்றும் இந்நூலாசிரியர் தெரிவித்துள்ளார். இதனைத் தீர்த்த விசேடப் படலத்திலுள்ள

"கூடிய காலை யாங்கு குலவிய வியர்வை நீரே
நீடிய நீத்த மாகி நின்மலக் கெடிலம் என்ன
ஓடிய திதனைச் சீவ நதி என உரைப்பர் கற்றோர்"

என்னும் (2) பாடலால் அறியலாம். இவ்வாறு பல செய்திகள் இப் புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இன்னும், திருவதிகை மான்மியம், திருவதிகை உலா, திருநாவலூர்ப் புராணம், திருவாமூர்ப் புராணம், திருமாணிகுழிப் புராணம் முதலிய நூல்களில் கெடிலத்தின் ஆட்சியையும் மாட்சியையும் காணலாம்.