கெடிலக் கரை நாகரிகம்/கெடிலத்தின் தொன்மை

விக்கிமூலம் இலிருந்து
8. கெடிலத்தின் தொன்மை

கெடிலத்தின் தொன்மை

கள்ளக்குறிச்சி வட்டத்தில் தோன்றிக் கடலூர் கடற்கரையில் துறைமுகப் பெருமையுடன் முடியும் கெடிலம் ஆறு வரலாற்றுக் காலத்துக்கும் அப்பாற்பட்ட தொன்மை உடையதாகும். இதற்குப் பல சான்றுகள் கூறமுடியும்.

கழிமுகத்தீவு (Delta)

கெடிலம் கடலோடு கலக்கும் முக்கிய முகத்துவாரத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் கெடிலத்திலிருந்து வடபுறமாக ஒரு கிளை பிரிந்து கடலில் கலப்பதாகவும், தென்புறமாக ஒரு கிளை பிரிந்து சென்று கடலில் கலப்பதாகவும், தென் கிளையாகிய உப்பனாற்றில்தான் கூடலூர்த் துறைமுகம் அமைந்திருப்ப தாகவும், கெடிலத்திற்கும் அதன் வடகிளைக்கும் நடுவே தேவனாம்பட்டினத் தீவு இருப்பதாகவும், கெடிலத்திற்கும் தென்கிளைக்கும் நடுவே அக்கரை எனப்படும் கழிமுகத் தீவு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படி ஓர் ஆறு கடலில் கலப்பதற்கு முன்னால் அதிலிருந்து கிளையாறுகள் பிரிவதும், அவற்றிற்கும் கடலுக்கும் இடையே கழிமுகத் தீவுகள் ஏற்படுவதும் அந்த ஆற்றின் மிகுந்த தொன்மையை (பழைமையை) அறிவிக்கின்றன என்று புவியியல் ஆராய்ச்சி அறிஞர்கள் (geologists) கூறுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக ஆற்றில் அடித்துக்கொண்டு வரப்படும் பொருள்கள் முகத்துவாரத்தில் படியப்படிய, அந்தப் படிவுகளால் முகத்துவாரப் பகுதி மேடிடுகிறது; அதனால் ஆறு நேரே சென்று கடலில் கலப்பதற்குத் தடையேற்படுகிறது; அதனால் ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு முன்னால் அதிலிருந்து கிளைகள் பிரிந்து வேறு இடங்களில் கடலில் கலக்கின்றன; அதனால் கழிமுகத் தீவுகள் ஏற்படுகின்றன. இந்த அமைப்புகளைக்கொண்டு ஆற்றின் தொன்மையை அறிந்துகொள்ளலாம்.

மற்றும், மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்கு நோக்கி விரைவாக ஒடி அரபுக் கடலில் விழும் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் கழிமுகத் தீவுகள் இல்லாமை இவண் குறிப்பிடத்தக்கது. மலை உயரத் தொடங்கியபின் நெடுங் காலத்திற்குப் பின்னால் இந்த ஆறுகள் தோன்றியதால், இவற்றிற்கு இன்னும் கழிமுகத் தீவுகள் ஏற்படவில்லை; எனவே, இந்த ஆறுகள் காலத்தால் மிகவும் பிற்பட்டவை, என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆற்றின் படிவு, பள்ளத்தாக்கு, அரிமானம், அரிமானச் சுற்றின் இளமை - முதிர்ச்சி முதுமை நிலைகள், மேடு, திட்டு, தேய்வு முதலிய அமைப்புகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின்படி பார்க்குங்கால், கழிமுகத் தீவுகளைப் பெற்றுள்ள கெடிலம் ஆற்றின் தொன்மை நன்கு புலப்படும்.

மரக்கல் (Wood Fossil)

கெடிலத்தின் தொன்மைக்கு மேலும் ஒரு சான்று கூறவியலும். கடலூருக்கு அண்மையிலுள்ள பாதிரிக் குப்பம் என்னும் சிற்றுரைச் சேர்ந்த முத்தால் நாயடு என்னும் முதியவர். தம் இளமைப் பருவத்தில், அப்பர் கரையேறின. பழைய கெடிலக்கரைப் பகுதியில் மண்தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, கல்லாக மாறிய மரப்பகுதிகள் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கக் கண்டதாகக் கூறினார் என்னும் செய்தியை முன்னர்ப் (பக்கம் - 54) பார்த்தோம்.

கல்லாக மாறிய மரத்தைப் பார்த்தால், வெளித் தோற்றத்திற்கு மரம் போலவே இருக்கும்; ஆனால் உள்ளமைப்பு கல்லாக இருக்கும். கல்லாக மாறிய மரம் பன்னூறாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டதாக இருக்கவேண்டும் எனப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நிலக்கரியின் வரலாறும் இது போன்றதுதானே! மரங்கள், புயலாலும் வெள்ளத்தாலும் புவி நடுக்கத்தாலும் கீழே விழுந்து, பன்னூறாயிரக் கணக்கான ஆண்டுகளாக மண்ணுக்கு அடியிலே கிடந்து மடிந்து மலைக்கல் போல் இறுகி மாறியதுதானே நிலக்கரி யென்பது? நிலக்கரி தன் முற்றாநிலை முற்றியநிலை ஆகியவற்றைக் கொண்டு பழுப்பாகவோ கறுப்பாகவோ இன்னும் வேறு விதிமாகவோ இருக்கிறது. ஆனால், மரக்கல் (Wood Fossil) மரத்தின் நிறமாகவோ கற்பாறையின் நிறமாகவோ இருக்கிறது. நிலக்கரி எரியும்; மரக்கல் எரியாது.

தமிழ் நாட்டில் சில விடங்களில் கல் மரங்களைக் காணலாம். புதுச்சேரிக்கு வடமேற்கே 21 கி.மீ. தொலைவில் செஞ்சியாறு எனப்படும் சங்கராபரணி ஆற்றங்கரையில் திருவக்கரை என்னும் ஊர் ஒன்று உள்ளது. இது திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருப்பதி, இவ்வூரை யொட்டிச் சங்கராபரணி ஆற்றங்கரையில் பல கல் மரங்கள் படுத்துக் கிடப்பதை இன்றும் காணலாம். பார்ப்பதற்கு மரங்கள் போலவே இருக்கும். மரங்கள் போலவே என்றென்ன - மரங்களே! வேர்கள், பட்டைகள், பட்டைகளின் சுருக்கம், பெருங் கிளைகள், சிறு கிளைகள், காம்புகள், இலைகள், இலை நரம்புகள் முதலிய பல்வேறு உறுப்புக்கள் உட்பட அடிமரத்திலிருந்து நுனிமரம் வரையும் அப்படியே முழு மரத்தையும் ஒரு சேரக் காணலாம். ஆனால், அவ்வளவும் கல் பாய்ந்த மாற்றம்! கல்லோடு நமக்குத் தொடர்பு எவ்வளவோ அவ்வளவே இம்மரத்தோடும்! இப்படிக் கிடக்கும் மரங்கள் இரண்டல்ல - மூன்றல்ல! பற்பல - பலப்பல! நூற்றுக்கணக்கில் என்றுங் கூறலாம். ‘படுத்துறங்கும் கல் மரக்காடு’ என்று புனைந்துரைக்கலாம்.

இந்தக் காட்சியைக் கடந்த முப்பது ஆண்டுகளில் நான் பலமுறை பார்த்துச் சுவைத்திருக்கிறேன். ஆனால், ஆனந்த விகடன் 4-9-1966 இதழில் (பக்கம் 19) திரு. டி.எம். வீரராகவன் என்னும் பெரியார் எழுதியுள்ள ஒரு கட்டுரையைப் படித்தபோது ஒரு புதிய செய்தியைத் தெரிந்து கொண்டேன். அது வருமாறு:

“இங்கே கல் மரக்காடு எப்படி வந்தது தெரியுமா?

இந்த மரங்களைப் பார்த்த பூகர்ப்ப நிபுணர்கள் ‘ஓக்’ மரம் என்கிறார்கள். ஒவ்வொன்றும் பிரமாண்டமான நீளம் இருக்கிறது. இங்கிலாந்தில் பூகம்பம் ஏற்பட்டு, ஓக் மரங்கள் பூமியில் அமுங்கிப் போய், பின்னர், திருவக்கரையில் வெளி வந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.”

இது ஆனந்த விகடன் கட்டுரைப் பகுதி, இதைப் படித்தபோது புராணங்களிலும் மாயாசாலக் கதைகளிலும் வரும் நிகழ்ச்சிகளைப் படிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. இதே மாதிரியில் ஓர் அணுகுண்டை ஆனந்த விகடன் 21-8-1966 இதழிலும் கண்ணுற்றேன். அந்த இதழில் (பக்கம் - 14) திரு. அமுநாரா என்பவர், ‘மரம் கல்லானது’ என்னும் தலைப்பில் படத்துடன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது, நான் பார்த்தறியாத புதிய செய்தி. அரியலூருக்கு அருகில் சாத்தனூர் என்னும் சிற்றூரில் ஓர் ஓடையின் குறுக்கே, 16 அடி நீளமும் 4 அடி சுற்றளவும் கொண்டு வேர்கள், கிளைகள் முதலிய உறுப்புக்களுடன் ஒரு பெரிய முழுக் கல் மரம் விழுந்து கிடக்கிறதாம். அம்மரத்தை இந்தியப் புவியியல் (பூகர்ப்ப ) மாணவர்களும், அமெரிக்கா, ஆசுதிரேலியா, இங்கிலாந்து, பிரான்சு, சப்பான் முதலிய அயல்நாட்டுப் புவியியல் வல்லுநர்களும் வந்து பார்த்துவிட்டு மூக்கின்மேல் விரல் வைத்து வியக்கின்றனராம். அதற்குக் காரணமாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், தென்னிந்தியா கடலாக இருந்த சமயம் கரையில் இருந்த இம்மரம், கடல் அலைகளால் கடலில் அமிழ்ந்து நாளாவட்டத்தில் மண்ணில் புதைந்து கல்லாக மாறிவிட்டதென்று பூகர்ப்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதி கடலாக இருந்தது என்பதற்கு அடையாளமாக இப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்களின் அபூர்வமான மண்டை ஓடுகளும் எலும்புகளும் காணப்படுகின்றன.”

இது அக் கட்டுரைப் பகுதி.

கல் மரங்கள் திருவக்கரையில் ஆற்றங்கரையிலும் சாத்தனூரில் ஓடைப் பகுதியிலும் இருப்பதைக் கொண்டும், அவற்றின் தோற்றத்தைப் பற்றிப் புவியியல் வல்லுநர்கள் கூறியிருப்பதாக ஆனந்த விகடனில் வந்துள்ள கட்டுரைப் பகுதிகளைக்கொண்டும், ‘இத்தகைய மாற்றங்கள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் நிகழக்கூடும்’ என நாம் ஒருவாறு நுனித்துணரலாம். இதைத் தெளிவு செய்து கொள்ள ஒரு துணை நாடி ஐக்கிய அமெரிக்காவுக்குச் (U.S.A) செல்வோம்.

ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியாகிய கலிபோர்னியா, அரிசோனா ஆகிய இடங்களில் கல்மரக் காடுகளைக் காணலாம். அரிசோனா (Arizona) மாநிலத்தில் ‘ஃஆல்பரூக்’ (Holbrook) ஓடைப் பகுதிக்குக் கிழக்கே 34 கி.மீ. தொலைவில் 90.000 ஏக்கர் பரப்பில் 3 கல்மரக் காடுகள் காக்கப்பட்டு வருகின்றன. 6 அடி குறுக்கு விட்டமும் 100 அடி நீளமும் கொண்ட கல்லாக மாறிய அடி மரங்கள் பல உள்ளனவாம் அங்கே. இத்தகைய கல் மரங்களின் தோற்றத்தைப் பற்றி இந்தத் (Petrification) துறையில் வல்ல அறிஞர்கள் தொகுத்துக் கூறியுள்ள கருத்துக்களாவன:

‘மேட்டுப் பகுதிகளில் தோன்றி வளர்ந்து வந்த மரங்கள் ஓடைகளாலும் ஆறுகளாலும் இழுத்துக் கொண்டு வரப்பட்டுக் கரைப் பகுதிகளில் ஒதுக்கப்பட்டன. அவை நாளடைவில் மண்ணில் புதைந்து சில சூழ்நிலைகளால் கல்லாக இறுகிவிட்டன. அம் மரங்களின் உயிர் அணுக்களினிடையே, மண்ணுக்குள் உள்ள சிலிகா (Silica) கரைசல் படிவு புகுந்து கல்போல் இறுக்கி விடுகின்றன. பின்னர் நாளடைவில் மேலேயுள்ள மண் பகுதி கரைந்து கரைந்து நீங்கிப் போக. உள்ளிருந்த கல்மரங்கள் வெளித்தோன்றிவிட்டன. இவ்வாறு கல்லாகிய மரங்கள் ஏறக்குறைய 16 கோடி (16,00,00,000) ஆண்டுகட்குமுன் தோன்றியிருக்க வேண்டும்.

இப்படியாக அறிஞர்கள் கூறியுள்ளனர். மரங்களைப் போலவே, மீன், தவளை முதலிய உயிரினங்களும் கல்லாக மாறுவதுண்டு. இது ஆங்கிலத்தில் ‘பாலியாந்தாலஜி’ (Paleontology) என அழைக்கப்படுகிறது. உயிரினங்களின் உடம்பிலுள்ள உயிர் அணுக்களுக்குள்ளே ‘கால்சியம் & கார்பனேட்’ (Calcium carbonate), சிலிகா கரைசல் படிவு (Silica Deposits) போன்றவை புகுந்து கல்லாக இறுக்கி விடுகின்றனவாம். இவ்வாறு கல்லாக மாறிய உயிரினங்கள் 45 கோடி (45,00,00,000) ஆண்டுகட்குமுன் தோன்றியிருக்கக் கூடுமாம். கடற்கரைப் பகுதிகளில் இது நடக்கக் கூடும்.

இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஆராயின், திருவக்கரையிலுள்ள கல்மரங்கள் இங்கிலாந்திலிருந்து வந்தவை எனக் கொள்ள வேண்டியதில்லை. மிகப் பழங்காலத்தில் தமிழ்நாட்டில் தோன்றி வளர்ந்த மரங்களே அவை. மேற்குப் பகுதியிலிருந்து ஆற்று வெள்ளத்தால் அவ்வப்போது அடித்துக் கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம். அல்லது, திருவக்கரைக்குக் கிழக்கே 16 கி.மீ. தொலைவில் இப்போது இருக்கும் கடல், அந்தக் காலத்தில் திருவக்கரைப் பக்கமாக இருந்திருக்கலாம். கடற்பெருக்காலும் கரைப் பகுதியிலுள்ள மரங்கள் சாய்க்கப்பட்டு மண்ணுக்குள் மறைந்து இறுக்கம் பெற்றிருக்கலாம். பின்னர்க் கடல் சிறிது சிறிதாகக் கிழக்கே தள்ளிப்போய்விட்டிருக்கலாம். திருவக்கரை, அதை அடுத்துள்ள சேதராப்பட்டு முதலிய விடங்களில் மீன்போன்ற உயிரினங்கள் இறுகிக் கல்லாக மாறியுள்ள உருவங்களும் கிடைக்கின்றன. இதனால், அந்தப் பகுதி மிகப் பழங்காலத்தில் கடல் சார்ந்ததாயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அரியலூருக்கு அருகில் சாத்தனூர் ஒடையில் காணப்படும் கல்மரம் பற்றியும் இது போன்ற கருத்துதான் சொல்லப்பட்டுள்ளது: அஃதாவது, இலட்சக்கணக்கான ஆண்டுகட்கு முன் அந்தப் பகுதி கடலாக இருந்தபோது அந்த மரம் வீழ்த்தப்பட்டு மண்ணுக்குள் மறைந்து இறுகியிருக்க வேண்டும் என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகாறுங் கூறியவற்றால், ஆற்று வெள்ளப் பெருக்காலோ அல்லது கடலின் சீற்றத்தாலோ, ஆற்றங்கரைகளில் அல்லது கடற்கரைகளில் கல்மரங்கள் உருவாகும் என்பதும், கல்லாக மாறியுள்ள அம் மரங்கள் நூறாயிரக்கணக்கான ஏன், கோடிக்கணக்கான ஆண்டு கட்குமுன் தோன்றியிருக்க வேண்டும் என்பதும் புலப்படும்.

இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கெடிலத்தின் தொன்மையை நாம் கணிக்கமுடியும். கெடிலம் திசைமாற்றம் அடைவதற்குமுன், திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஒடிய பழைய ஆற்றுப் பாதைப் பகுதியில் அஃதாவது, அப்பர் கரையேறிய பகுதிக்குப் பக்கத்தில், மண்ணுக்கு அடியில் கல்மரத் துண்டங்கள் காணப்பட்டதாக முத்தால் நாயடு என்னும் முதியவரால் அறிவிக்கப்பட்டுள்ள செய்தியை இங்கே இணைத்துக் கொள்ள வேண்டும். கெடிலக்கரைப் பகுதியிலும் கல்மரத் துண்டங்கள் காணப்படுகின்றனவென்றால், அந்த ஆறு பல கோடி ஆண்டுகட்குமுன் தோன்றியதாக இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் படி மரக்கால் போட்டு அளக்க மனம் ஒவ்வாவிடினும், பல நூறாயிரக் (இலட்சக்) கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டது கெடிலம் என்பதையாவது ஏற்றுக் கொள்ளலாம். பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகட்குமுன் கெடிலம் ஆற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு ஒதுக்கப்பட்ட மரங்கள் அந்தப் பகுதியில் மண்ணுக்குள் மறைந்து, நாளடைவில் சிலிகா கரைசல் படிவால் இறுக்கம் பெற்றுக் கல்லாகி விட்டிருக்க வேண்டும். இந்தக் கல்மரத் துண்டங்கள் தாம் மண் தோண்டும்போது முத்தால் நாயுடு முதலிய தொழிலாளர் கண்களில் தென்பட்டுள்ளன. எனவே, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் தோன்றியது கெடிலம் என்பது உறுதி.

முதியவருக்கு நன்றி

கெடிலத்தின் தொன்மையைக் கணிப்பதற்கு உதவியான கருத்தை வழங்கிய உயர்திரு. முத்தால் நாயடு அவர்கட்கு மிகவும் நன்றி செலுத்தவேண்டும். இந்தச் செய்தி சிறிதும் எதிர்பாரா வகையில் அவரிடமிருந்து கிடைத்தது. 1967 சனவரி ஏழாம் நாள், கெடிலக்கரைச் செய்திகளைத் தேடித் திரட்டும் வேட்டையில் முனைந்து, உந்து வண்டி (கார்) எடுத்துக்கொண்டு கெடிலக்கரைப் பகுதிகளில் நெடுந்தொலைவு சென்று திரும்பிவந்து கொண்டிருந்தபோது, திருவயிந்திரபுரத்திற்கும் திருப்பாதிரிப்புலியூருக்கும் இடையிலுள்ள பாதிரிக் குப்பம் என்னும் ஊரில் வண்டியை நிறுத்தி, பாதையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு முதியவரையணுகிச் சில செய்திகளை வினவினேன் நான். அவரை விட்டுப் பிரிந்து வண்டியில் ஏறிக்கொண்ட பிறகு மீண்டும் இறங்கிப்போய் அவர் பெயரைக் கேட்டேன். முத்தால் நாயுடு என்றார் அவர். இப்படி முன்பின் அறியாத முத்தால் நாயடு அறிவித்ததுதான் கெடிலக்கரைக் கல்மரச் செய்தி. எனவே, அவர் அறிவித்த செய்தி நூற்றுக்கு நூறு உண்மையாகத்தான் இருக்கும். அவர் கற்பனை கலந்து பொய்ச் செய்தி புகலக் காரணமேயில்லை. அவருக்கு நன்றி! அவர் வாழ்க!

செய்ய வேண்டியது

புவியியல் வல்லுநர்கள் (Geologists) முத்தால் நாயடு குறிப்பிட்ட பகுதியைத் தோண்டி ஆராய்ந்தால் கல் மரங்கள் பலவற்றைக் கண்டெடுக்கலாம். குப்பம் சென்று அவரை இடம் காண்பிக்கச் செய்து ஆவன புரியவேண்டும்.