உள்ளடக்கத்துக்குச் செல்

கெடிலக் கரை நாகரிகம்/கெடிலம் - பெயரும் காரணமும்

விக்கிமூலம் இலிருந்து
7. கெடிலம் - பெயரும் காரணமும்

இந்த ஆறு பழைய இலக்கியங்களில் ‘கெடிலம்` என அழைக்கப்பட்டுள்ளது. அப்பர் தேவாரம், பெரியபுராணம், அருணகிரியார் திருப்புகழ், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் முதலிய நூல்களில் ‘கெடிலம்’ என்னும் சொல்லுருவமே காணப்படுகிறது. ஆனால், இப்போது உலக வழக்கில் ‘கடிலம்’ என்று சிலர் அழைக்கின்றனர். அரசினரின் வெளியீடான ‘Madras District Gazetteers South Arcot’ (1962) எனும் ஆங்கில நூலில் ‘gadilam என்று காணப்படுகிறது, இந்த ஆங்கிலச் சொல்லுருவத்தைத் தமிழில் ‘கடிலம்’ என்று ஒலிக்க வேண்டும். ஒருசார் உலக வழக்கையொட்டி இந்த வெளியீடு ‘கடிலம்’ என்று பெயர் சொல்லுகிறது போலும்.

பல நூற்றாண்டுகட்குமுன் தொல்காப்பியத் தேவர் என்பவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூலில் கெடிலம், கடிலம் என்னும் இரண்டு சொல்லுருவங் களும் காணப்படுகின்றன. இச் செய்தி அந்நூலில் உள்ள

'ஐயர் திருக் கெடிலம் ஆட்டி’

(13)

'கடிலமா நதியதன் வடபால்’

(45)

'மெத்தி வருகின்ற கெடிலத்து வடபாலே’

(100)


என்னும் பாடற் பகுதிகளால் தெரியவரும். பழைய நூல்களெல்லாம் கெடிலம் என்றே ஒருமித்துக்கூற, ஆசிரியர் தொல்காப்பியத் தேவர் மட்டும், அந்த உருவத்தோடு கடிலம் என்னும் உருவத்தையும் கலந்து பயன்படுத்தியிருப்பதேன்?

ஒருவேளை, தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்தின் நாற்பத்தைந்தாம் செய்யுளிலும் ‘கெடில மாநதி’ என்றே எழுதியிருக்கவும், அவருக்குப் பின்னால் ஏடு பெயர்த்து எழுதியவர்கள் ‘கெ’ என்னும் எழுத்திலுள்ள ‘ ௳ என்னும் கொம்பைக் கை தவறுதலாக விட்டுவிட்டுக் கடில மாநதி’ என எழுதிவிட்டிருப்பார்களோ? அல்லது, ஆசிரியரே, கடிலம் - கடிலம் என ஒலித்துப் பேசும் வழக்கத்தாலோ அல்லது கை தவறுதலாகவோ அந்தப் பாட்டில் ‘கடில மாநதி’ என எழுதிவிட்டிருப்பாரோ? அல்லது, இருவகையான வழக்குகளும் உள்ளன என்பதை அறிவிக்க வேண்டும் என்னும் கொள்கையுடன், கடிலம், கெடிலம் என்னும் இரண்டு உருவங்களையும் வேண்டுமென்றே ஆசிரியர் பயன்படுத்தி யிருப்பாரோ? இரண்டு உருவங்களுள் எது சரியானது?

தொல்காப்பியத் தேவர் 45 ஆம் பாடலில், ‘கமலம்’ என எழுதியிருப்பதற்குப் பொருத்தமான ஓர் அமைதி (சமாதானம்) கூற முடியும். ஈண்டு அப் பாடலின் இரண்டாவது அடி.’ முழுவதையும் நோக்க வேண்டும்.

"கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்
கடிலமா நதியதன் வடபால்"

என்பது பாடலின் இரண்டாம் அடி. இவ்வடியினை, ‘கைத்தலத்து’ என ‘கை’ என்னும் எழுத்தில் தொடங்கி யிருப்பதால், அதற்கு மோனைச் சொல்லாக, ‘கடில மாநதி’ என ‘க’ என்னும் எழுத்தில் சொல்லைத் தொடங்கியமைத்துள்ளார் ஆசிரியர். அ, ஆ, ஐ, ஒள என்னும் நான்கும் சொற்களின் முதலில் ஒத்துவருவது மோனையன்றோ ? இங்கே ‘கெடிலம்’ என எழுதிவிடின், ‘ஐ'யும் ‘எ'வும் அதாவது ‘கை'யும் ‘கெ’ வும் மோனையாக ஒத்துவர முடியாது. இதனை,

[1]"அகரமோடு ஆகாரம் ஐகாரம் ஔவாம்,
இகரமோடு ஈகாரம் எஏ

என்னும் மோனையிலக்கணப் பாடலால் அறிக. ஆயின், மோனைப் பொருத்தத்திற்காகக் கெடிலத்தைக் கடில மாக்குவதா? ‘குல்லாய்’ கொள்ளவில்லை என்பதற்காகத் தலையைச் செதுக்கலாமா? இதிலிருந்து தெரிவதாவது:மோனைப் பொருத்தத்திற்காக வலிந்து கெடிலத்தைக் கடிலமாக்கியிருக்க முடியாது. ‘கடிலம்’ என்னும் வழக்காறும் மக்களிடையே உள்ளதாலேயே தொல்காப்பியத் தேவர் துணிந்து ‘கடிலம்’ என்னும் சொல்லுருவத்தையும் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

‘க'வுக்கும் ‘கெ'வுக்கும் எப்போதுமே போட்டியிருந்து கொண்டு வருகிறது. இந்த ஆறு இருக்கட்டும். கங்கை ஆற்றை எடுத்துக் கொள்வோம். அது ‘கெங்கை’ எனவும் பெயர் வழங்கப்படுகிறது. ஆறுகளின் பெயர்கள் இருக்கட்டும். கயாதரர் என்னும் புலவர் கெயாதரர் எனவும், அவரியற்றிய கயாதரம் என்னும் நூல் கெயாதரம் எனவும் இரண்டு விதமாகவும் நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். சுந்தகம் கெந்தகம் எனவும், கஜமுகன் கெஜமுகன் எனவும், கடிகாரம் கெடிகாரம் எனவும், இவை போல் இன்னும் பல பெயர்களும் வழங்கப்படுவது கண்கூடு. ‘பல்லு குச்சைப் பல்லிலே போடப் பன்னிரண்டு மணி ஆய்விட்டது’ என்னும் தொடரை, ‘பெல்லு குச்சியெ பெல்லுலே போட பென்னண்டு மணி ஆயிட்டது’ எனச் சில ஊர் மக்கள் கொச்சையாக ஒலித்துப் பேசுகின்றனர். இப்படியே இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டலாம். ‘க'வுக்கும் ‘கெ'வுக்கும் இடையே நடந்து வரும் நீண்ட காலப் போராட்டம் இப்போது புலனாகுமே!

அங்ஙனமெனில், கடிலம் என்பது கெடிலம் என மாறியதா? அல்லது, கெடிலம் என்பதுதான் கடிலம் என்றாயிற்றா? இதற்குத் தீர்ப்பு வழங்குவது அரிது. முற்கூறிய எடுத்துக் காட்டுகளைக் கொண்டு தீர்ப்பு கூறப்புகின், கங்கை கெங்கையானது போல், கஜமுகன் கெஜமுகனானது போல், பல்லு குச்சு பெல்லு குச்சாக மாறியது போல், கடிலம் என்பதுதான் கெடிலமாக மாறியிருக்க வேண்டும் என எளிதில் சொல்லிவிடலாம்போல் தோன்றும். ஆனால், பெரியோர்களின் இலக்கியங்களில் ‘கெடிலம்’ என்ற உருவமே ஆட்சி பெற்றிருப்பது ஆழ்ந்து நோக்கற்பாலது.

கெடிலம் என்னும் சொல்லுக்கு அறிஞர்கள் பொருள் கூறுவதை நோக்குங்கால், கெடிலம் என்ற பெயரே சரியானது என்று தோன்றுகிறது. கெடிலம் என்னும் சொல்லுக்கு, ‘ஆழமான ஊற்று ஓடை’ என்னும் கருத்துப்படப் பொருள் சொல்லப்படுகிறது. இந்த ஆற்றைக் கடிலம் (Gadilam) எனவே எல்லாவிடங்களிலும் குறிப்பிடும் அரசாங்க விவரத் தொகுப்புச் சுவடி (Gazetteer) [2]ஓரிடத்தில் பின்வருமாறு எழுதுகிறது:-

- In ancient days it (Gadilam) was called the Kedilam meaning a deep gulf.”-

“பழங்காலத்தில் கடிலம் ஆறு ‘கெடிலம்’ என அழைக்கப்பட்டது; கெடிலம் என்றால் ‘ஆழமான நீர் ஓட்டம்’ என்பது பொருள்”. இது மேலுள்ள ஆங்கிலப் பகுதியின் கருத்து. இந்த ஆறு முன்பு கெடிலம் என அழைக்கப்பட்டதாகவும், இப்போது கடிலம் என அழைக்கப்படுவதாகவும் அரசாங்க வெளியீடு அறிவிக்கிறது. இது, கெடிலம் என்னும் சொல்லுக்கு deep gulf எனப் பொருள் கூறியுள்ளது, ‘deep’ என்பதற்கு ‘ஆழமான’ என்பது பொருள். ‘gulf’ என்பதற்கு, வளைகுடா, ஆழ்கடற்கயம், ஆழ்கயம், படுகுழி, ஆழ்கெவி, பாதாளப் பள்ளம், நீர்ச் சுழல், நிரம்பா நெடுநீள் பள்ளம், பெரும் பிளவு, கடக்க முடியா இடைப் பள்ளம் முதலிய[3] பொருள்கள் கூறப்பட்டுள்ளன. எனவே, ‘deep gulf’ என்பதைக் கொண்டு, கெடிலம் என்பதற்கு ‘ஆழமான நீரோட்டம்’ என்று பொருள் கொள்ளலாம்.

கெடிலம் என்னும் சொல்லுக்கு, [4]சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி பின்வருமாறு பொருள் கூறியுள்ளது:-

கெடிலம் 1. Ketilam, n. cf. Garuda. 1. A river ncar Cuddalore; கடலூரை யடுத்துச் செல்லும் ஒரு நதி. நிரம்பு கெடிலப் புனலுமுடையார் (தேவா, 949, 1). 2. Deep stream; ஆழமான ஓடை . (W.)

கெடிலம் 2, Ketilam, N. cf. Kalila. 1. Den; கெபி. 2. Narrow passage; ஒடுங்கிய பாதை (W.)

இதன்படி நோக்குங்கால், கெடிலம் என்னும் சொல்லுக்கு, ஆழமான ஓடை, கெபி (பள்ளம்), ஒடுங்கிய பாதை என்னும் பொருள்கள் கிடைக்கின்றன. இந்தப் பொருள்கள், வின்சுலோ என்னும் ஆங்கில அறிஞரால் 1862 இல் உருவாக்கப்பெற்ற ‘வின்சுலோ தமிழ் - ஆங்கில அகராதி’ (M. Winslow, A Comprehensive Tamil and English Dictionary.) 67 GOLD அகராதியிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். வின்சுலோ அகராதியிலுள்ள பகுதி அப்படியே வருமாறு:-

“கெடிலம், S. The name of a river near Cuddalore, ஓர் நதி. 2. A byss, a deep gulf, ஆழமான ஓடை, 3. A den, கெபி. 4. A narrow passage, ஒடுங்கிய பாதை.”

வின்சுலோ அவர்களின் கருத்துப்படி., கெடிலம், மற்ற ஆறுகளுக்கு இல்லாத ஆழமோ பள்ளமோ, ஒடுங்கிய பாதையோ உடையதாகத் தோன்றவில்லை. ‘கெடிலம் ஓர் ஆறு என்னும் பொருள் வரையிலும் சரி. கெடிலம், காவிரி போன்ற ஆறுகளை நோக்க ஆழத்தில் மிகவும் குறைந்தது. வெள்ள நாட்கள் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலான இடங்களில் முழங்கால் அளவிற்குமேல் தண்ணீர் இல்லையென்று கூடச் சொல்லிவிடலாம். பிற ஆறுகளைப்போல் கெடிலமும் தொடக்கத்தில் ஒடுக்கமாயிருப்பினும் இதனினும் பள்ளமும் ஒடுங்கிய பாதையும் உடைய நீரோட்டங்கள் எத்தனையோ உள்ளன. எனவே, ஆழமோ, பள்ளமோ, ஒடுக்கமோ உடைமையால் இந்த ஆற்றிற்குக் கெடிலம் என்ற பெயர் சிறப்பாக ஏற்பட்டிருக்க முடியாது. அப்படி நோக்கினால், இதனினும் வேறு சில ஆறுகளுக்கே கெடிலம் என்னும் பெயர் மிகப் பொருந்தும்.

மற்றும், கெடிலம் என்னும் சொல்லுக்கு, ஆழமான ஓடை, கெபி (பள்ளம்), ஒடுங்கிய பாதை என்னும் முப்பொருள் களையும் வின்சுலோ எப்படி எங்கிருந்து கண்டு பிடித்தார் என்பது தெரியவில்லை. இஃது ஆராய்ச்சிக்கு உரிய தொன்று. வின்சுலோ, கெடிலம் என்னும் சொல்லைத் தமிழ்ச் சொல்லாகக் கொள்ளாமல், வடமொழிச் சொல்லாகக் கொண்டே, இப்பொருள்களைக் கூறியிருக்கிறார் என்று கருத வேண்டியிருக்கிறது. அவரது அகராதியில் கெடிலம், S. எனக் கெடிலம் என்னும் சொல்லின் பக்கத்தில் ‘S’ என்னும் குறியீடு காணப்படுகிறது. இந்த S என்பது Sanskrit என்னும் சொல்லின் சுருக்கக் குறியீடு (Abbreviation) ஆகும். Sanskrit என்றால், சமசுகிருதம் - அதாவது வட மொழிச் சொல் என்று பொருளாம். எனவே, கெடிலம் என்பது வடமொழிச்சொல் என வின்சுலோ கருதினார் என்பது விளங்கும். அதனால் தான், கெடிலம் என்னும் சொல்லுக்கு ஆழமான ஓடை, பள்ளம் என்றெல்லாம் அவர் பொருள் கூறியிருக்கிறார். அப்படியே கெடிலம் என்பதை வடிமொழிச் சொல்லெனக் கொண்டாலும், வடமொழியில் இந்தப் பொருள்களுடன் இப்படி ஒரு சொல் உண்டா என்பது ஐயப்பாட்டிற்கு உரியது.

வடமொழியில் கெடிலம் என ஒரு சொல் இருப்பதாகத் தெரியவில்லை. வடமொழி வல்லுநர்களின் கருத்தும் இதுவே. வடமொழியில் 1. கடா (gada), 2. கடுலா (gadula), 3. கடலிகா (gaddalika), 4. கடரிகா (gaddarika) என்னும் சொற்கள் உள்ளன. இச்சொற்களுக்கு ‘A Sanskrit - English Dictionary By Sir Monier Williams, M.A., K.C.I.E’ - என்னும் வடமொழி - ஆங்கில அகராதியில்,

(கடா ) gada = ditch.

(கடுலா ) gadula = hump - backed.

(கடலிகா) (GL 60.5/s) gaddalika = Pravahena - like the current of the Gaddalika river, very slowly.

(கடரிகா) gaddarika = N. of a river with a very slow current (of which the source and course are unknown.)

என்று பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலுள்ள நான்கு சொற்களுக்கும் கெடிலம் என்னும் சொல்லுக்கும் உருவத்தில் ஒருசார் ஒப்புமை யிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒவ்வொரு சொல்லாகப் பார்ப்போம்:

1. gada (கடா) என்ற சொல்லுக்கு அந்த அகராதியில் ditch எனப் பொருள் எழுதப்பட்டுள்ளது. ditch என்றால் குழி, பள்ளம், நீர்வடிகால் என்றெல்லாம் பொருள் உண்டு. வின்சுலோ அவர்கள், இந்த ‘கடா’ (gada) என்ற சொல்லிலிருந்துதான் கெடிலம் என்னும் சொல் உருவாகியிருக்க வேண்டும் எனக் கருதி, கெடிலம் என்ற சொல்லுக்கு ஆழமான ஓடை பள்ளம் என்ற பொருள்களைக் கூறியிருக்கவேண்டும் எனத் தோன்றகிறது. பார்க்கப்போனால், கடா எங்கேயோ இருக்கிறதே கெடிலம் எங்கேயோ இருக்கிறதே அதிலிருந்து இது எப்படி உருவாகியிருக்கக் கூடும், என்று கேட்கத் தோன்றும். இதற்கு வடமொழி வாணர்கள் எளிதில் விடையிறுப்பர். அதாவது, “வடமொழியிலக்கண முடிபுப்படி ‘இலச்’ என்பது சேர்ந்து, ஜடா என்னும் சொல்லிலிருந்து ‘ஜடில’ என்ற சொல்லும், பங்கம்’ என்னும் சொல்லிலிருந்து ‘பங்கில’ என்னும் சொல்லும் உருவாகியது போன்று ‘கடா’ என்ற சொல்லிலிருந்து ‘கடில’ என்ற சொல் உருவாகியிருக்கலாம். பின்னர் அது கடிலம் - கெடிலம் என்றெல்லாம் ஆகியிருக்கலாம்” என்று கூறக்கூடும். தமிழும் வடமொழியும் ஒருங்கறிந்த வின்சுலோவின் கருத்து இதுவாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், வடமொழியில் ‘கெடிலம்’ என்ற நேர்சொல் இல்லை. கடா என்பதிலிருந்து சுற்று வழியில் கெடிலம் உருவாகியதாக வின்சுலோ கருதிவிட்டார்.

வின் சுலோவின் கருத்துப்படி நோக்கினாலும் கெடிலம் அப்படியொன்றும் மிக்க ஆழமும் பள்ளமும் உடைய ஆறு அன்று. இப்படிப் பார்த்தால் இதனினும் வேறு எத்தனையோ ஆறுகளுக்கு இந்தப் பெயர் பொருந்தும்.

2. அடுத்து, Gadula (கடுலா) என்ற சொல்லுக்கு hump - backed எனப் பொருள் சொல்லப்பட்டுள்ளது. hump - backed என்றால், கூன் முதுகான - முதுகு கூனிய என்பது போலப் பொருள். இந்தப் பொருளுக்கும் ஆற்றுக்கும் தொடர்பில்லையாதலின் இந்தச் சொல்லை ஆராய்வுக்கு எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடலாம். ஒரு வேளை, ஆற்றின் வளைவைக் குறிப்பதாக ஏதேனும் தொடர்பு கூறுவதாயின், எல்லா ஆறுகளுக்குந்தான் வளைவு இருக்கிறது எனக் கூறித் தள்ளிவிடலாம்.

3. மூன்றாவதாக, gaddalika (கடலிகா) என்னும் சொல்லுக்கு, ‘கடலிகா’ என்னும் ஆற்றின் போக்கைப்போல் மிகவும் மெதுவாகச் செல்லும் நீரோட்டம் {Pravahena- like the current of the gaddalika river, very slowly) என்பதாகப் பொருள் செய்யப்பட்டுள்ளது. கடலிகா என்பது நமது கெடிலம் ஆற்றைக் குறிக்கும் பெயர் அன்று; அது எங்கேயோ உள்ள ஏதோ ஓர் ஆற்றைக் குறிப்பிடுகிறது. இதனை அடுத்த சொல் விளக்கத்தாலும் உறுதி செய்து கொள்ளலாம்.

4. இறுதியாக, gaddarika (கடரிகா) என்னும் சொல்லுக்கு, ‘கடரிகா என்பது மிகவும் மெதுவாகச் செல்லும் ஓர் ஆற்றின் பெயர், இந்த ஆறு எங்கே தோன்றி எங்கே ஓடுகிறது எனத் தோற்றமும் போக்கும் இப்போது தெரியப்படவில்லை’ (N, of a river with a very slow current of which the source and course are unknown) என்பதாக விளக்கம் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து, கடரிகா, கடலிகா என்னும் இரண்டு சொற்களுமே ஏதோ ஓர் ஆற்றைக் குறிப்பன என்பதும், இந்த ஆறு இருக்குமிடம் தெரியவில்லை - வடமொழி நூற்களிலே பெயர் மட்டும் காணப்படுகிறது என்பதும் புலனாகலாம். ஆகவே, வடமொழி நூலிலே பெயர் காணப்படும் கடலிகா அல்லது கடரிகா என்னும் ஆறு, வடநாட்டுப் பக்கத்தில் உள்ள ஏதோ ஓர் ஆறாக இருக்கக்கூடுமே தவிர, தென்னாட்டில் உள்ள கெடிலமாகக் கருத வாய்ப்பே இல்லை. அன்றியும், தென்னாட்டில் எத்தனையோ பெரிய பெரிய ஆறுகள் இருக்க, சிறிய கெடிலத்தைப் பற்றிப் பழைய வடநூற்கள் குறிப்பிடக் காரணமேயில்லை.

மற்றும், கடா (gada), கடலிகா (gaddalika) என்பன போன்ற வடமொழிச் சொற்களின் அடிப்படையில் தமிழ் நாட்டு ஆற்றைக் குறிக்கும் கெடிலம் என்னும் சொல் உருவாகியிருக்க முடியும் என்ற கருத்துக்கு மொழி வரலாற்றுக் கொள்கையும் இடம் தராது. கெடிலக் கரையில் கல்மரத் துண்டுகள் காணப்பட்டதைக் கொண்டும், கெடிலம் கடலோடு கலக்குமிடத்தில் கழிமுகத் தீவுகள் ஏற்பட்டிருப்பதைக் கொண்டும் கெடிலம் பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என (அடுத்த பகுதியில்) ஆய்ந்து முடிவு கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு பழமையான ஆற்றின் பெயராகிய கெடிலம் என்பது, ஈராயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ் நாட்டிற்கு வந்த வடமொழிச் சொல்லாக இருக்கவே முடியாது.

பிற்காலத்தில் தமிழ் நாட்டில் பல இடங்களின் பெயர்கள் வடமொழிச் சொற்களால் குறிக்கப்படுவதைப் போல, இந்த ஆற்றிற்குக் கெடிலம் என்னும் வடமொழிப் பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சிலர் கூறலாம். அப்படியென்றால் இந்த ஆற்றின் பழைய பெயர் எது? பன்னுறாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ்நாட்டில் தோன்றித் தமிழ்நாட்டில் ஓடித் தமிழ்நாட்டுக் கடலில் கலக்கும் ஓர் ஆற்றுக்குத் தமிழில்தானே முதலில் பெயர் வைக்கப்பட்டிருக்கக் கூடும்? அந்தத் தமிழ்ப் பெயர் எது? திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் ஓர் ஆற்றைத் ‘தாமிரவருணி’ என்னும் வடமொழிப் பெயரால் இப்போது குறித்தாலும், ‘பொருநை’ என்னும் பழைய தமிழ்ப் பெயர் அதற்கு உள்ளமையை இலக்கியங்களால் அறிகிறோம். அதுபோல, கெடிலம் என்பது வடமொழிப் பெயராயின் பழைய தமிழ்ப்பெயர் எங்கே? அப்படி யொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏழாம் நூற்றாண்டில் எழுந்த அப்பர் தேவாரத்திலும் கெடிலம் என்ற பெயரே காணப்படுகிறது. பிற்காலத்தில் ‘கருடநதி’ என்ற ஒரு பெயர் ஏற்பட்டது. அது, திருவயிந்திரபுரப் பதிப்பெருமை தொடர்பாக ஏற்பட்டது. திருமாலின் தண்ணீர் வேட்கையைத் தணிப்பதற்காகக் கருடன் தன் அலகால் கீறி உண்டாக்கிய ஆறு ஆதலின் ‘கருடநதி’ என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுவது ஒரு வகைப் புராணக் கதை. இது குறித்துப் பின்னர் விவரிக்கப்படும். இந்தப் பெயர் மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டது. மிகப் பழைய பெயர் கெடிலம் என்பதே. எனவே, அது தமிழ்ப் பெயரேதான்; வடமொழிச் சொல்லிலிருந்து உருவான பெயர் அன்று.

கெடிலம் என்பது வடமொழிச் சொல் அன்று என்று கூறுவது, ‘எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை’ என்று கூறுவதுபோல் இருக்கிறதே! என்று சிலர் சொல்லலாம். இங்கே இது குறித்து இவ்வளவு எழுதவேண்டி வந்ததற்குக் காரணம், ஆங்கில அறிஞர் வின்சுலோ அவர்களின் அகராதிப் பொருள்தான் அவர் கெடிலம் என்னும் சொல்லை வடசொல்லாகக் கொண்டு, ஒரு நதி, ஆழமான ஓடை, கெபி (பள்ளம்) என்றெல்லாம் பொருள் எழுதியுள்ளமை, பிற்கால ஆராய்ச்சியாளர்க்குக் குழப்பம் விளைவிக்கலாம். அக் குழப்பத்தைப் போக்கவே இங்கு இவ்வளவு எழுத நேர்ந்தது. எனவே, கடா - கடில - கெடிலம் எனக் கடாவுக்கும் கெடிலத்திற்கும் முடிச்சுப் போடாமல், கெடிலம் என்பதைத் தமிழ்ச் சொல்லாகவே கொள்ளவேண்டும்.

கெடிலம் என்பது தமிழ்ச் சொல்லாயின் அதன் பொருள் என்ன? இந்த ஆற்றுக்குக் கெடிலம் என்னும் பெயர் எதனால் ஏற்பட்டது? என்ற வினாக்கள் எழலாம். வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெயர்களுக்குத்தான் நாம் பொருத்தமான பொருளும் சரியான காரணமும் கூறமுடியுமே தவிர, வரலாற்றுக் காலத்துக்கு முந்திய (Pre - History) காலத்தில் ஏற்பட்ட பெயர்களுக்கு நாம் சரியான பொருள் விளக்கம் தர முடியாது. மற்றும், ஊர்களின் பெயர்களுக்கு விளக்கம் கொடுக்க முடிந்தாலும், ஆறுகளின் பெயர்களுக்கு விளக்கம் கொடுப்பது அருமை. ஏனெனில், காலத்துக்குக் காலம் மக்கள் பெருகப் பெருக ஊர்களும் புதிது புதிதாகத் தோன்றுவதியல்பு; ஊர்கள் மக்கள் அறிந்து தோன்றுபவை; மக்களால் தோற்றுவிக்கப்படுபவை; அதனால், மக்கள் தம்மால் உண்டாக்கப்படும் ஊர்களுக்குப் பொருத்தமான காரணங்களுடன் பெயர்கள் வைக்கின்றனர்; அதனால் ஊர்கட்குப் பெயர்க்காரணப் பொருள் விளக்கம் கூறிவிட முடியும். ஆறுகளின் நிலையோ அத்தகையதன்று. மக்கள் தோன்றுவதற்கு முன்பே ஆறுகள் தோன்றிவிட்டிருக்கும். மற்றும், ஆறுகள் மக்களால் உண்டாக்கப்படவில்லை. மேலும் ஓர் ஆறு, ஓர் ஊரோடு அல்லது ஒரு நாட்டோடு அமைந்து விடவில்லை ; ஒரே ஆறு பலநாடுகளின் வழியாக பல ஊர்களின் வழியாக ஓடுகிறது. இந்த நிலைமையில், எந்த நாட்டார், எந்த ஊரார், தமக்கு முன்பே தோன்றியுள்ள ஓர் ஆற்றிற்கு எந்தக் காரணம் பற்றி எந்தப் பெயரை வைப்பது? பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய ஓர் ஆற்றுக்கு, வரலாற்றுக் காலத்துக்கு முன்பே - எப்போதோ ஏதோ ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அதன் காரணத்தைக் கண்டறிவது அறிது. பழங்கால மக்கள், தமக்கு முன்பே தோன்றியிருந்த மரம், மட்டை , இலை, கல், காடு முதலியவற்றை இப்பெயர்களால் அழைப்பதற்கு என்னென்ன காரணங்கள் கூற முடியும்? நம்மால் காரணங்கள் கூற முடியாது. அதே போலத்தான், அவர்கள் அழைத்த ஆற்றின் பழைய பெயருக்கும் காரணம் கூறமுடியாது. ஒர் ஆற்றின் பெயருக்குக் காரணப் பொருள் விளக்கம் கூறமுடியாதிருப்பதே, அந்த ஆறும் அந்தப் பெயரும் மிகமிகப் பழமையானவை என்பதற்கு ஒரு தக்க சான்றாகும்.

அன்றியும், ஒர் ஆற்றிற்குப் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுவதும் உண்டு; இருப்பினும், எல்லோரும் அறிந்த எல்லாராலும் வழங்கப்படுகிற பொதுப்பெயர் ஒன்றும் அந்த ஆற்றிற்கு இருக்கும். ஆறு ஓடிவரும் வழியில் உள்ள ஊர்களின் பெயரால் ஆற்றின் பெயர் அழைக்கப்படுவதும் உண்டு. செஞ்சி வட்டத்திலிருந்து தோன்றி வருவதும் சங்கராபரணி என்றும் வராகநதி என்றும் அழைக்கப்படுவதும் ஆகிய செஞ்சியாறு, வில்லியனூர் என்னும் ஊர்ப்பக்கத்தில் வரும்போது ‘வில்லியனுர் ஆறு’ என்றும், திருக்காஞ்சி என்னும் ஊர்ப்பக்கத்தில் வரும்போது ‘திருக்காஞ்சியாறு’ என்றும் வெளியூர் மக்களால் அழைக்கப்படுகின்றது. அதனையே, புதுச்சேரிப் பக்கத்தில் சுண்ணாம்பு ஆறு - கிளிஞ்சல் ஆறு என்றெல்லாம் அழைக்கின்றனர். இது போலவே, கெடிலம் கருடநதி என்று அழைக்கப்படுவதல்லாமல், திருவதிகைப் பக்கம் வரும்போது ‘திருவதிகை ஆறு’ என்றும் திருவயிந்திரபுரம் பக்கம் வரும்போது திருவயிந்திரபுரம் ஆறு’ என்றும் வெளியூர் மக்களால் இன்றும் அழைக்கப்படுகிறது. திருவதிகை அல்லது திருவயிந்திரபுரத்தில் உள்ள மக்கள் கெடிலத்தை வறிதே ஆறு என்றோ அல்லது ‘நம்மூர் ஆறு’ என்றோ குறிப்பிடக்கூடும். ஆனால், எல்லா ஊர்க்காரர்களுமே கெடிலம் என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடுவர். எனவே, கெடிலம் என்பதுதான் அந்த ஆற்றின் பழைய இயற்பெயராய் இருக்க முடியும். ஒர் ஆற்றின் பழைய இயற்பெயர்தான், பெரும்பாலான இலக்கியங்களிலும் பெரிதும் இடம் பெற்றுப் பொதுமைப் பெருமை அடைந்திருக்க முடியும். கெடிலத்தைப் பொறுத்த வரையில், பழைய இலக்கியங்களிலிருந்து புதிய இலக்கியங்கள் வரையும் பெரும்பாலும் கெடிலம் என்றே அழைக்கப்பட்டுள்ளது. எனவே, கெடிலம் என்பதை, அந்த ஆற்றின் முதல் தமிழ்ப் பெயர் எனத் துணிந்து கூறலாம்.

கெடிலம் என்னும் தமிழ்ப் பெயருக்கு என்ன பொருள் விளக்கம் கூறுவது? கெடிலம் என்றால் ஒர் ஆறு என்னும் பொருளோடு தமிழ் அகராதிகள் அமைந்துவிட்டன. ஓர் ஆறு என்பது தவிர்த்து வேறு பொருள்கள் எல்லாம் வின் சுலோ கூறுபவை. அவர் வடமொழிச் சொல் எனக் கொண்டு வலிந்துகூறும் அப்பொருள்களை விட்டுவிடுவோம். கடலூரை அடுத்து ஒடும் ஆறு ஆதலின் கடிலம் கெடிலம் என்றாகி யிருக்கலாம் என்று சிலர் ஒரு தோற்றமாகக் கூறுகின்றனர். இது போன்ற பெயர்க்காரணங்கள் எல்லாம், ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காகக் கூறும் பொருந்தா உரைகளாகும். கெடிலம் இருக்கட்டும்! ஊர் அறிந்த உலகறிந்த காவிரி யாற்றின் பெயர் விளக்கமே பலவிதாகப் பேசப்படுகிறதே!

காவிரி ஆறானது காவேரி எனவும் அழைக்கப்படுகிறது. உலக வழக்கில் மட்டுமன்று; செய்யுள் வழக்கிலும் காவேரி, காவிரி என்னும் இருவேறு பெயர்களும் காணப்படுகின்றன. சங்க காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில்

[5]"கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி."
[6]“காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி."
[7]"ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி.”
[8]"பரப்பு நீர்க் காவிரிப் பாவை."

என்று இளங்கோவடிகள் காவேரி, காவிரி என்னும் இரு பெயர்களும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பொருநராற்றுப்படை முதலிய சங்க இலக்கியங்களில் முப்பத்தைந்துக்கு மேற்பட்ட இடங்களில் காவிரி என்னும் சொல்லாட்சியே காணப்படுகிறது. இடைக் காலத்தில் எழுந்த கம்பராமாயணத்தில்கூட,

[9]"காவிரி நாடன்ன கழனிநா டொரீஇ"

எனக் காவிரி என்றே கம்பரால் குறிப்பிடப் பட்டுள்ளது. பிற்காலத்தில் காவிரி, காவேரி என்ற இரண்டு ஆட்சிகளும் உலக வழக்கில் காணப்படுகின்றன. இந்த நிலையில் நாம் எந்தப் பெயரைச் சரியான பெயர் என்று எடுத்துக் கொள்வது? என்ன பெயர்க்காரணம் கூறுவது? காவிரி என்ற பெயருக்கும் காரணம் கூறப்பட்டுள்ளது; காவேரி என்ற பெயருக்கும் காரணம் கூறப்பட்டுள்ளது. இப் பெயர்க் காரணங்களுள் எதை ஏற்றுக்கொள்வது? முதலில் அப்பெயர்க் காரணங்களைப் பார்ப்போம்:

மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த சையமலையில் முன்னொரு காலத்தில் அகத்தியர் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அவரது கைச்செப்பு (கமண்டலம்) தண்ணிருடன் வைக்கப்பட்டிருந்தது. இது நிற்க. அசுரர்க்கு அஞ்சிய இந்திரன் அவர்களை வெல்வான் வேண்டி இறைவனுக்குப் பூசனை புரியச் சீர்காழியில் மலர் வனம் வைத்து வளர்த்து வந்தான். அம் மலர் வனத்திற்கு நீர் வசதியளிக்குமாறு அவன் விநாயகரை வேண்டிக் கொண்டான். விநாயகர் காகத்தின் வடிவில் சையமலை சென்று அகத்தியரின் கைச்செப்பு நீரைக் கவிழ்த்து விட்டார். அந்த நீர் ஆறாக விரிந்து சீர்காழிவரையும் ஒடி வந்து இந்திரனது பூந்தோட்டத்திற்குப் பயன்பட்டது. இதுதான் காவிரி ஆறு. காகத்தால் கவிழ்க்கப்பட்டு விரிந்து ஆறு ஆனதால் ‘காகவிரி என்று ஆற்றிற்குப் பெயர் ஏற்பட்டதாம். ‘காகவிரி’ என்ற பெயர் நாளடைவில் சுருங்கிக் ‘காவிரி’ என்று ஆயிற்றாம். இவ்வாறு பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இந்திரனது ‘கா’ (பூஞ்சோலை) வளர்வதற்காக விரிந்து வந்த ஆறு ஆதலின் காவிரி என்ற பெயர் ஏற்பட்டதாகவும் காரணம் கூறப்படுகிறது. இந்தப் பெயர்க் காரணங்கள் கூறுபவர்கள், கந்தபுராணக் கதையை ஆதாரமாகக் கொண்டவர்கள். இனி, காவேரி என்பதின் பெயர்க் காரணம் வருமாறு:

கவேரன் என்பவன் வீடுபேறு அடையப் பிள்ளைப்பேறு வேண்டிப் பிரமனை நோக்கித் தவஞ்செய்தான். பிரமன் தன் மகளாகிய விஷ்ணு மாயை என்பவளைக் கவேரனுக்கு மகளாகத் தோன்றச் செய்தான். கவேரனுக்கு மகள் ஆனதால் அவள் காவேரி எனப்பட்டாள். அவள் உலோபா முத்திரை என்னும் பெயருடன் அகத்தியரை மணந்துகொண்டாள். அகத்தியர் அவளை நீர் வடிவாக்கித் தம் கைச்செப்பில் அடக்கி வைத்தார். அவரது கைச்செப்பு கவிழ்க்கப்பட்டு நீர் ஆறாகப் பெருகி ஒடியது. அதுதான் காவேரி ஆறு. கவேரன் மகளாகிய காவேரி நீர் வடிவில் ஆறாக ஓடியதால் அந்த ஆற்றிற்குக் காவேரி என்னும் பெயர் ஏற்பட்டது. இப்படிப் பெயர்க்காரணம் கூறப்படுகிறது. ஆக்கினேய புராணத்தை ஆதாரமாகக் கொண்டது இது.

ஜனகன் மகள் ஜானகி என்பதுபோலக் கவேரன் மகள் காவேரி என்று ஆனது. வடமொழி இலக்கணத்தில் ‘தத்தி தாந்த நாமம்’ எனக் கூறப்படும். இப்படிப் பார்த்தால், காவேரி என்னும் பெயரை வடமொழிச் சொல்லாகக் கொள்ளநேரும். காவிரி என்பதன் பெயர்க் காரணத்தை நோக்கின், அதனைத் தமிழ்ச்சொல்லாகக் கொள்ள முடிகிறது. சிலர் காவேரி என்பதையும் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு, ‘கா என்றால் சோலை; வேரி என்றால் தேன்; காவேரி என்றால் சோலையில் தேன் பெருகப் பாய்ந்து வளப்படுத்தும் ஆறு - சோலைத் தேனுடன் பாய்ந்து வரும் ஆறு’ என்றெல்லாம் பொருள் கூறுகின்றனர்.

இப் பெயர்க் காரண விளக்கங்களைப் பார்க்கும்போது, காவிரி, காவேரி என்பவற்றில் எது உண்மையான பெயர்? அப் பெயர் ஏற்பட்டதன் காரணம் என்ன? என்பது குறித்துத் திட்ட வட்டமான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்ப நிலையே நிலவுகிறது. காவிரியைப் பற்றியே இப்படியென்றால், கெடிலத்தைப் பற்றி என்ன கூறுவது? எனவே, கெடிலத்தைப் பற்றித் திட்டவட்டமான பெயர்க்காரணம் ஒன்றும் கூறவியலாது என்பது தெளிவு.

கெடிலத்திற்குப் பெயர்க் காரணம் கூறமுடியாது என்று தெரிவிப்பதற்கு இத்தனை பக்கம் எழுதியது ஏன்? கெடிலம் என்பதை வடமொழிச் சொல்லாகக் கொண்ட வின்சுலோ அகராதியால் ஆராய்ச்சியாளரிடையே விளையக் கூடிய குழப்பத்தைத் தெளிவு படுத்தவே இவ்வளவு வேண்டியதாயிற்று.

கருடநதி

கெடிலத்திற்குக் ‘கருடநதி’ என்னும் மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. இப்பெயர் ஏற்பட்டதற்கு இரண்டு இடங்களில் இரண்டு வகையான காரணங்கள் கூறப்படுகின்றன. முதலிடத்து முதற்காரணமாவது:

கெடிலம் ஆறு, கள்ளக்குறிச்சி வட்டத்தில் - மையனூரில் ஒரு மலையின் அடியில் - ஒரு பாறையிலுள்ள ஒரு சுனையி லிருந்து தோன்றுகிறது என முன்னர்க் கண்டோம். கெடிலம் தோன்றும் பாறையின் பெயர் ‘கருடன் பாறை’ என்பதாகும். கருடன் பாறையிலிருந்து தோன்றும் நதி ஆதலின் ‘கருடநதி’ என்னும் பெயர் ஏற்பட்டதாக அந்தப் பக்கத்து மக்கள் கூறுகின்றனர். கருடன் பாறையின் தோற்றம் கருடன் அலகு (மூக்கு) போல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்போது அப்படியொன்றும் தெளிவாகத் தெரியாவிடினும் முன்னொரு காலம் அப்படியிருந்திருக்கலாமோ - பின்னர் நாளடைவில் தோற்றத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கலாமோ - என்னவோ! அந்தப் பாறைப் பகுதியில் கருடப் பறவைகள் நிரம்பத் தங்கியிருந்ததால் ‘கருடன் பாறை’ என்ற பெயர் வழங்கப் பட்டும் இருந்திருக்கலாமே!

மற்றும், கருடன் அப்பாறையில் தன் அலகால் கீறி உண்டாக்கிய சுனையிலிருந்து ஆறு தோன்றுவதால் ‘கருடநதி’ என்னும் பெயர் ஏற்பட்டது என அங்கேயே வேறொரு காரணமும் கூறப்படுகிறது. மேலும், அந்தச் சுனை அடிப்பகுதி அகலமாகவும் முடியும் முனைப்பகுதி கூர்மையாகவும் கருடன் மூக்கு போல் இருப்பதால் அந்தச் சுனையிலிருந்து தோன்றும் ஆறு கருடநதி எனப்பட்டது என்று எவரேனும் ஒரு பெயர்க் காரணம் கூறினும் வியப்படைவதற்கில்லை . (படம் காண்க : பக்கம் - 33)

அடுத்து, திருவயிந்திரபுரச் சூழ்நிலையில் வேறொரு வகையான பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது. அதாவது:

முன்னோர் காலத்தில் வைகுந்தத்திலிருந்து திருமாலானவர் திருமகளுடனும் தேவ குழுவுடனும் வான் வழியாக உலாச் சென்று கொண்டிருந்தாராம். கடலூரை யடுத்துள்ள திருவயிந்திரபுரத்துக்கு மேலே போய்க்கொண்டிருந்த போது திருமால் நீர்வேட்கை கொண்டாராம்; உடனே கீழிறங்கி, ஆங்குள்ள மலைமேல் தங்கினாராம். கருடனும் ஆதிசேடனும் நீர் கொண்டுவரச் சென்றனர். ஆதிசேடன் ஒரு கிணறு தோண்டி அதிலிருந்து நீர்கொண்டு வந்தார். கருடனோ, மலைக்குக் கீழே தன் அலகால் (மூக்கால்) தரையைக் கீறினார். அந்த இடம் ஆறாகத் தண்ணீர் பெருகியது. அதிலிருந்து அவர் தண்ணீர் கொண்டுவந்து தந்தார். அந்த ஆறுதானாம் கெடிலம். இது ஒரு புராணத்தின் கதை. இவ்வாறு கருடனால் உண்டாக்கப்பட்ட ஆறு எனச் சொல்லப்படுதலின், கருடநதி என்று அழைக்கப் படுகிறது. இது, இரண்டாவது வகையான பெயர்க்காரணம்.

கருடநதி என்பதுதான் நாளடைவில் சிறிது சிறிதாக மாறிக் கடிலநதி - கெடிலநதி என்றாகியிருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்து பொருத்தமாகப் புலப்படவில்லை. கருடன் எங்கேயோ இருக்கிறார் - கெடிலம் எங்கேயோ இருக்கிறது - இரண்டுக்கும் இடைவெளி மிகுதி - அன்றியும், திருவயிந்திரபுரப் பெயர்க் காரணம் பொருத்தமானதாய்த் தோன்றவில்லை. கெடிலம் திருவயிந்திரபுரத்திற்கு அண்மையில் முடியும் தறுவாயில் உள்ளது. அதாவது, திருவயிந்திரபுரத்துக்கு மேற்கே 90 கி.மீ. தொலைவிற்கு அப்பால் தோற்றம் எடுக்கும் கெடிலம், திருவயிந்திரபுரத்திற்குக் கிழக்கே 8 கி.மீ. அளவு தொலைவில் கடலோடு கலக்கிறது. புராணக் கதையின்படி கருடன் கீறி உண்டாக்கியதா யிருந்திருந்தால், திருவயிந்திர புரத்திற்கு மேற்கே உள்ள கெடிலத்தின் பெரும் பகுதியைப் பற்றி என்ன கூறுவது? மேடான மேற்கிலிருந்துதான் சரிவான கிழக்கு நோக்கித் தண்ணீர் ஓடி வந்து கொண்டிருக்கிறது. ஈண்டு, திருவயிந்திரபுரம் பற்றி வட மொழியிலுள்ள வைணவக் கந்தபுராணத்தில் உள்ள ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது. திருமாலுக்காக நீர் கொண்டுவரச் சென்ற கருடன் தன் அலகால் கீறிக் கருடநதி என்னும் கெடிலத்தை உண்டாக்கியதாக இந்தப் புராணத்தில் கூறப்படவில்லை. அண்மையில் ஆறு ஒன்று வந்து கொண்டிருப்பதாகக் கருடன் திருமாலுக்குத் தெரிவித்ததாகவே இந்தப் புராணத்தின் முதல் பகுதி (அத்தியாயம்) கூறுகிறது. இந்தப் புராண ஆசிரியர் உண்மையை உள்ளவாறு கருடன் வாயிலாகக் கூறிவிட்டிருக்கிறார். எனவே, கருட பகவான் கதையைப் பற்றி ஆராய்ச்சி ஒன்றும் செய்யாமல், ‘பக்தி - புராணம்’ என்ற அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே, கெடிலத்தின் பெயர்க் காரணத்தோடு கருடனை முடிச்சுப் போடக்கூடாது.

தெய்வத்தோடு தொடர்பு படுத்தித் தெய்வத் தன்மையுடைய ஓர் ஆறாகச் சொல்லப்பட்டிருக்கிற வரைக்கும் கெடிலம் கொடுத்து வைத்ததுதான். இது போன்ற சிறப்பு எல்லா ஆறுகளுக்கும் கிடைப்பதரிது. காவிரி, கங்கை போன்ற உயர்ந்த ஆறு கட்கே இத்தகைய சிறப்பு ஏற்றிக் கூறப்பட்டுள்ளது. அகத்தியரின் கைச்செப்பில் (கமண்டலத்தில்) இருந்த நீரை, இந்திரனுக்காக விநாயகர் காகத்தின் உருவில் வந்து கவிழ்க்க, அதிலிருந்து தான் காவிரியாறு தோன்றியதாக முன்பு பார்த்தோம். பகீரதனது தவத்திற்கு இரங்கி, விண்ணுலகத்துக் கங்கையைச் சிவபெருமான் மண்ணுலகத்திற்குக் கொண்டு வந்தாராம். இது கங்கை தோன்றிய வரலாறு. இவ்விரண்டும் போலவே கதையில் கருடனால் கெடிலம் தோன்றியிருக்கிறது. கங்கை, காவிரி ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றிப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் கதைகள் எவ்வளவு உண்மையானவையோ அவ்வளவு உண்மையானது, கருடனால் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் கெடிலத்தின் கதையும்! இன்னும் கேட்டால், கெடிலத்தின் தோற்றம்பற்றி மற்றுமொரு புராணக் கற்பனை உண்டு. அதாவது:- ‘சிவபெருமானிடத்திலிருந்து வியர்வை நீர்போல் வெளிவந்ததுதான் கெடிலம்’ எனத் திருவதிகைப் புராணம் கூறுகிறது. கங்கை சிவனது முடியி லிருந்து வந்தது; கெடிலம் சிவனது உடலிலிருந்து வந்தது; எனவே, கங்கையைப் போன்றது கெடிலம் எனத் திருவதிகைப் புராணம் கூறுகிறது. இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தாவது: கங்கையைப் போல் - காவிரியைப்போல் ஒப்ப மதிக்கத்தக்க ஓர் உயரிய ஆறு கெடிலம் என்பதாம்.


  1. யாப்பருங்கலக் காரிகை - உரை.
  2. South Arcot District Gazetteer - Chapter I - Physical and General Description - Page 7.
  3. சென்னைப் பல்கலைக் கழகம்: ஆங்கிலம் தமிழ்ச் சொற் களஞ்சியம் - 2 ஆம் தொகுதி - பக்கம் 463.
  4. சென்னைப் பல்கலைக் கழகம் : தமிழ் லெக்சிகன் - 2 ஆம் தொகுதி - பக்கம் 1085. கெ .6.
  5. சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி.
  6. சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி.
  7. சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - கானல் வரி.
  8. சிலப். புகார்க். நாடுகாண் காதை-146
  9. கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் கங்கைகாண் படலம் - 1.