கெடிலக் கரை நாகரிகம்/கெடிலக்கரை இலக்கியங்கள்

விக்கிமூலம் இலிருந்து
14. கெடிலக்கரை இலக்கியங்கள்

‘கெடிலக்கரை இலக்கியங்கள்’ என்ற தலைப்பில், கெடிலக்கரை நாடாகிய திருமுனைப்பாடி நாட்டு ஊர்கள், கோயில்கள், அரசர்கள், தலைவர்கள், மக்கள் பற்றிய இலக்கியங்கள் அடங்கும், பிற நாட்டில் பிறந்தவர்கள் திருமுனைப்பாடி நாட்டுக் கோயில்களையும் அரசர்களையும் பாடியுள்ள பாடல்களும் இத் தலைப்பில் அடங்கும். அஃதாவது, திருமுனைப்பாடி நாட்டு உயர்திணைப் பொருள் - அஃறிணைப் பொருள்களைப் பற்றிய பாடல் பகுதிகள் யாவும் இதனுள் அடங்கும். இந் நாட்டுப் பகுதியைப் பற்றிச் சங்க காலத் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டுள்ள இன்றியமையாத சில இலக்கியங்களைத் தெரிந்த வரையில் - கிடைத்துள்ள வரையில் காண்போம்.

சங்க கால இலக்கியங்கள்

கெடிலம் பாயும் திருமுனைப்பாடி நாட்டைப் பற்றிச் சங்க நூல்களில் அறியக் கிடைத்துள்ள செய்திகள், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு அரசோச்சிய மலையமான் மரபினரைப் பற்றிய செய்திகளே. மலையமான் மரபினருள்ளும், மலையமான் திருமுடிக்காரி, அவன் மக்கள், அவன் தம்பி மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் மட்டுமே ஓரளவு தெரிய வந்துள்ளன. சங்க நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை என்னும் நூல்களில் மலையமான் மரபினர் இடம் பெற்றுள்ளனர். இவற்றுள், முதல் நான்கும் ஒருவரைப் பற்றி ஒரே புலவரால் பாடப்பட்ட நூல்கள் அல்ல; மன்னர் பலரைப் புலவர் பலர் பாடிய தனித்தனிப் பாடல்கள் பலவற்றின் தொகுப்பே இவை. எனவே, மலையமான் மரபினரைப் பற்றிய ஒவ்வொரு தனிப்பாடலும், கெடில நாட்டுத் தொடர்புடைய ஒவ்வொரு தனி இலக்கியம் போன்றதாம். இனி, ஒவ்வொருவரையும் பற்றிய பாடற் குறிப்புக்கள் வருமாறு :

மலையமான் திருமுடிக்காரி

நற்றிணையில், 77, 100, 120, 291, 320 ஆம் பாடல்கள் மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள், 77, 291, 320ஆம் பாடல்கள் கபிலராலும், 100ஆம் பாடல் பரணராலும் பாடப்பட்டவை, 120ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் தெரியவில்லை.

குறுந்தொகையில், 208, 312ஆம் பாடல்கள் இம் மன்னனைப் பற்றிப் பேசுகின்றன. இவை கபிலரால் பாடப்பட்டவை.

அகநானூற்றில், அம்மூவனாரால் இயற்றப்பெற்ற 35ஆம் பாடலிலும், கல்லாடனாரால் இயற்றப்பெற்ற 209ஆம் பாடலிலும் திருமுடிக்காரியைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.

புறநானூற்றில், கபிலரால் பாடப்பெற்ற 121, 122, 123, 124ஆம் பாடல்களும், பேரி சாத்தனாரால் பாடப்பெற்ற 125ஆம் பாடலும், மாறோக்கத்து நப்பசலையாரால் பாடப்பெற்ற 126ஆம் பாடலும், பெருஞ் சித்திரனாரால் இயற்றப்பெற்ற 158ஆம் பாடலும் திருமுடிக்காரியைப் பற்றிய செய்திகளைத் - தெரிவிக்கின்றன.

மேலே நான்கு நூல்களிலும் குறிப்பிடப்பட்டவற்றுள், பல பாடல்கள் முற்றிலும் திருமுடிக்காரியைப் பற்றியவை; சில பாடல்கள் இடையிடையே அவனை எடுத்தாண்டு ஒரு சிறிது அவனைப் பற்றிக் கூறுபவை.

மற்றும், ஓய்மானாட்டு நல்லியக் கோடனைப் பற்றி இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியுள்ள சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க நூலிலும் இடையிடையே (வரிகள் : 91 - 95; 107 - 110) காரியின் படை வீரமும் கொடை வீரமும் புகழ்ந்து பேசப்பட்டுள்ளன.

திருக்கோவலூர்

மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர், அகநானூற்றில் அம்மூவனார் பாடியுள்ள 35ஆம் பாடலிலும், புறநானூற்றில் ஒளவையார் பாடியுள்ள 99 ஆம் பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளூர்

மலையமான்களின் இன்றியமையா இடங்களுள் (முக்கியக் கேந்திரங்களுள்) முள்ளூர் என்னும் ஊரும் ஒன்று. அங்கு மலையும் உண்டு, இந்த முள்ளூர், நற்றிணையில் ஆசிரியர் பெயர் தெரியாத 170 ஆம் பாடலிலும் கபிலர் பாடிய 291ஆம் பாடலிலும், குறுந்தொகையில் கபிலர் பாடிய 312 ஆம் பாடலிலும், அகநானூற்றில் கல்லாடனார் இயற்றிய 209ஆம் பாடலிலும் புறநானூற்றில் கபிலர் பாடிய 123ஆம் பாடலிலும் மாறோக்கத்து நப்பசலையார் இயற்றிய 126, 174 ஆம் பாடல்களிலும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரியும் கபிலரும்

திருமுடிக்காரியைப் பற்றிக் கபிலர் என்னும் புலவர்தாம் மிகுதியாகப் பாடியிருக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய நூல்களில் ஒன்பது பாடல்களில் கபிலர் காரியைப் பாடியுள்ளார். கபிலர் முதலிய புலவர்களால் காரியைப் பற்றிச் சங்க நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள், இந் நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் பகுதியில் ‘மலையமான் திருமுடிக்காரி’ என்னும் தலைப்பில் முன்பே தொகுத்துச் சொல்லப் பட்டுள்ளனவாதலின், அவற்றை மீண்டும் ஈண்டு விரிக்க வேண்டா. இருப்பினும், காரியின் வரையாத வள்ளல் தன்மையின் உயர் எல்லையைக் கபிலர் புகழ்ந்து பாடியுள்ள புறநானூற்றுப் பாடல்கள் (121, 122, 123, 124) நான்கினை மட்டும் முறையே ஈண்டுக் காண்போம்:


          “ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
          பலரும் வருவர் பரிசில் மாக்கள்
          வரிசை அறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே மாவண் தோன்றல்
          அதுநற் கறிந்தனை யாயின்
          பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.”


          “கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
          கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே
          அழல்புறந் தரூஉம் அந்தண ரதுவே
          வியாத் திருவின் விறல்கெழு தானை
          மூவருள் ஒருவன் துப்பா கியரென
          ஏத்தினர் தரூஉம் கூழே நுங்குடி
          வாழ்த்தினர் வரூஉம் இரவல ரதுவே
          வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
          அரிவை தோளள வல்லதை
          நினதென இலைநீ பெருமிதத் தையே.”


          “நாட்கள் ளுண்டு நாள் மகிழ் மகிழின்
          யார்க்கு மெளிதே தேர் ஈதல்லே
          தொலையா நல்லிசை விளங்கு மலையன்
          மகிழா தீத்த இழையணி நெடுந்தேர்
          பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
          பட்ட மாரி உறையினும் பலவே.”

          “நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
          பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
          வறிது பெயர்குநர் அல்லர் நெறிகொளப்
          பாடான் றிரங்கும் அருவிப்
          பீடுகெழு மலையற் பாடி யோரே.”

மேலுள்ள நான்கு புறநானூற்றுப் பாடல்களின் சுருக்கமான கருத்துக்கள் முறையே வருமாறு:

“திருமுடிக்காரியே! உன்னிடம் பரிசு பெறப் பலர் வருகின்றனர்; அவருள் சிறப்பிற் குறைந்தவரும் உளர், மிக்க வரும் உளர். நீயோ, அவரவர் தகுதி யறியாது அனைவருக்கும் ஒரே மாதிரியாக நிரம்ப வழங்குகின்றாய். அத்துணைக் கொடை மடம் உடையவனாக இருக்கின்றாயே நீ!”

“காரி மன்னா! உன் உடைமைகளையெல்லாம் மற்றவர்க்கு வாரி வழங்கிவிட்டாய்! கற்பிற் சிறந்த உன் மனைவியைத் தவிர உனக்கென வேறு ஓர் உடைமையும் இல்லையே!”

“உலகில் மற்ற மன்னர்கள் மதுவுண்டு மயங்கி மகிழ்ந்திருக்கும் நேரத்தில் பரிசிலர்க்கு ஒரு தேரை எளிதாகக் கொடுக்கக் கூடும். ஆனால், மகிழ்ச்சியற்ற கடுமையான சூழ்நிலையிலும் மலையமான் காரி பரிசிலர்க்கு வழங்கியுள்ள தேர்களின் எண்ணிக்கை, அவனது முள்ளூர் மலையுச்சியில் பெய்யும் மழைத் துளிகளின் எண்ணிக்கையினும் மிகுதியாம்.

“பரிசில் வேண்டுவோர் நல்ல நாள் அல்லாத கெட்ட நாளில் புறப்பட்டு, வழியில் பறவைகள் கெட்ட நிமித்தம் (கெட்ட சகுனம்) காட்டியும் அதையும் மீறிச் சென்று, மலையமான் மகிழ்ச்சியற்றுத் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் கொடிய சூழ்நிலையில் அவனை அடைந்து, பேசத் தகாத பொருத்தமற்ற பேச்சுக்களை அவனிடம் பேசினும், அவன் அவர்களை வறிதே அனுப்பாமல், அவர்க்கு நிரம்பப் பரிசு வழங்கி அனுப்புவான்."

இப் பாடற் கருத்துக்களை எண்ணிப் பார்க்குங்கால் எத்துணை இன்பம் ஏற்படுகிறது! உள்ளத்தைத் தொட்டு உணர்ச்சிகளைக் கிளறும் இந்த இலக்கியச் சுவை நயத்தை என்னென்பது! இங்கே காரியின் கொடை மடத்தைப் புகழ்வதா! அல்லது கபிலரின் இலக்கியத் திறனைப் போற்றுவதா! அல்லது கெடிலக்கரை நாகரிகத்தைப் பாராட்டுவதா!

மலையமான் மக்கள்

‘சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது’ என்னும் அடிக் குறிப்புடைய பாடல் (46) ஒன்று புறநானூற்றில் உள்ளது. சோழன் கிள்ளி வளவனிடமிருந்து புலவர் கோவூர்கிழாரால் காப்பாற்றப்பட்ட சிறார்கள் மலையமான் திருமுடிக்காரியின் மக்களாகத்தான் இருக்க வேண்டும். இப் பாடலும், இப் பாடல் பற்றிய கருத்தும் முன்னர்க் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது காண்க. (பக்கம் : 141-142)

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்

புறநானூற்றில் மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ள 174ஆம் பாடலில் இம் மன்னனைப்பற்றி அறியலாம். இவனைப்பற்றி முன்னர்க் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் பகுதியில், ‘மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்’ என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டிருப்பது காண்க (பக்கம் : 143).

மூவர் தமிழ்

கெடிலக்கரைப் பகுதிகளோடு தொடர்புடையனவாகக் கிடைத்திருக்கும் நூல்களுக்குள் சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக, [1]ஔவையாரால் ‘மூவர் தமிழ்’ எனச் சிறப்பிக்கப்பெற்றுள்ள அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரங்களை முறையே நிறுத்தலாம். தேவாரம் எனப்படுவது ஒரு பொருள் பற்றிய ஒரு தனி நூல் அன்று. தேவார ஆசிரியர் ஒவ்வொருவரும் இறைவன் திருக்கோயில் கொண்டுள்ள ஊர்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு ஒவ்வோர் ஊர்மேலும் பதிகம் பாடினர். பின்னர் இப் பதிகங்கள், அகநானூறு, புறநானூறு முதலிய சங்கத் தொகை நூல்களைப்போல ஒன்றாகத் தொகுக்கப் பெற்றுத் தேவாரம் என்னும் பொதுப் பெயரில் மிளிர்கின்றன. எனவே, திருமுனைப்பாடி நாடு என்னும் நடுநாட்டு ஊர்கள் மேல் பாடப் பெற்றுள்ள தேவாரப் பதிகங்களைக் கெடிலக்கரை இலக்கியங்களாக நாம் கொள்ளலாம். மற்றும், இப்போது தேவாரங்களை அச்சிட்டிருப்பவர்கள் நாடு வாரியாகப் பதிப்பித்திருக்கிறார்கள். நடு நாட்டுப் பதிகங்கள் யாவும் ஒருசேரத் தொகுக்கப் பெற்றுத் தனியிடம் பெற்றுள்ளன. மூவர் தேவாரங்களிலும் உள்ள நடு நாட்டுப் பதிகங்கள் கெடிலக்கரை இலக்கியங்களே. இவற்றுள், காலத்தால் முற்பட்ட அப்பர் தேவாரப் பதிகங்கள் முதலில் வருமாறு:

அப்பர் தேவாரம்

நடு நாட்டில் அப்பர் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ள ஊர்ப் பெயர்களும், அவற்றிற்கு நேரே அவ்வவ்வூர்க்கு உரிய மொத்தப் பதிக எண்ணிக்கையும், மொத்தப் பாடல் எண்ணிக்கையும், அவற்றையடுத்துப் பதிகமும் பாடலும் இத்தனையாவது திருமுறையைச் சேர்ந்தவை எனத் திருமுறை எண்ணும் முறையே கீழே தரப்படும். அப்பர் தேவாரம் 4, 5, 6 ஆம் திருமுறைகளாக வகுக்கப்பட்டிருத்தல் ஈண்டு நினைவுகூரத்தக்கது.

ஊர்
மொத்தப் பதிகம் மொத்தப் பாடல் திருமுறை எண்
திருவதிகை 16 158 4, 5, 6
திருப்பாதிரிப் புலியூர் 1 10 4
திருவாமாத்துர் 2 21 5, 6
திருமுண்டீச்சுரம் (கிராமம்) 1 9 6
திருக்கோவலூர் (வீரட்டம்) 1 10 4
திருவண்ணாமலை 3 30 4, 5
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) 1 10 6
திருத்துங்கானை மாடம் (பெண்ணாகடம்) 1 3 4
நெல்வாயில் அரத்துறை 1 10 5

இந்த ஊர்களேயன்றி, நடு நாட்டில் இன்னும் பல ஊர்களில் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகம் பாடியுள்ளார்; அவருடைய பதிகங்கள் பல கிடைக்கவில்லை என்ற செய்தி முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்திருக்கும் பதிகங்களிலும் சில பாடல்கள் கிடைக்கவில்லை. திருவதிகைப் பதிகங்களில் எட்டுப் பாடல்களும், திருமுண்டிச்சுரம் பதிகத்தில் ஒரு பாடலும், திருத்தூங்கானை மாடம் பதிகத்தில் ஏழு பாடல்களும் கிடைக்கவில்லை. வடார்க்காடு மாவட்டத்தில் பல பகுதிகள் தொண்டை நாட்டைச் சார்ந்தன வெனினும் திருவண்ணாமலை திருமுனைப்பாடி நாடு என்னும் நடுநாட்டைச் சேர்ந்ததாகவே அறிஞர்களால் கருதப்பட்டு வந்துள்ளது. இப்போது வடார்க் காடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருவண்ணாமலை வட்டம் முன்பு ஒரு கால் தென்னார்க்காடு மாவட்டத்தில்தான் இருந்தது என்பதும் ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கது. இதனால்தான் அறிஞர்கள் திருவண்ணாமலைத் தேவாரத்தை நடு நாட்டுப் பதிகங்களுள் ஒன்றாகச் சேர்த்துள்ளனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களேயன்றி, நடு நாட்டிலுள்ள திருத்தினைநகர், திருமாணிகுழி, திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்கட்கும் திருநாவுக்கரசர் சென்று இறைவனை வழிபட்டதாகப் பெரியபுராணத்தில் சேக்கிழார் இதரிவித்துள்ளார். அவ்வூர்களின் பதிகங்கள் அகப்படவில்லை. அவர் பிறந்த திருவாமூர்ப் பதிகமே கிடைக்கவில்லையே! நாவுக்கரசர் மொத்தம் பாடியிருப்பவை இவ்வுளவு - இப்போது கிடைத்திருப்பவை இவ்வளவு என முன் ஓரிடத்தில் கூறியிருப்பது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.

மற்றும், நடு நாட்டில் கடலூர் வட்டத்திலுள்ள ‘நல்லாற்றுார்’ என்னும் ஊருக்கும் அப்பர் பெருமான் சென்று வழிபட்டுள்ளார் என்னும் குறிப்பை, அவரது ‘அடைவுத் திருத்தாண்டகம்’ என்னும் பதிகத்திலுள்ள பின்வரும் பாடலால் அறியலாம்:

“பிறையூரும் சடைமுடியெம் பெருமானாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றுாரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஒத்தூரும் ஊற்றத்தூரு
மளப்பூரோ மாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோமூர்தானும்
துடையூரும் தொழவிடர்கள் தொடராவன்றே”

இந்த நல்லாற்றூர் மேலும் நாவுக்கரசர் முழுப் பதிகம் பாடியிருக்கக் கூடும். இப்படியாகத் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்களுள் சென்றன போக நின்றனவாக உள்ளவை, கெடிலக்கரை இலக்கியங்களுள் சங்க இலக்கியப் பாடல்கட்கு அடுத்தபடி பலவகையிலும் முதன்மை உடையனவாகும். அப்பர் தேவாரத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியும் நடுப்பகுதியுமாகும்.

நாவுக்கரசர் நடு நாட்டில் பாடியிருப்பனவாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களின் பதிகங்களேயன்றி, அவர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினதும் சமணர்கள் அவரைப் பல்லவ மன்னனிடம் வருமாறு அழைத்தபோது அவர் அஞ்சாது பாடியதாகக் கூறப்படும் “நாமார்க்கும் குடியல்லோம்” என்று தொடங்கும் பதிகமும், அவரை நீற்றறையில் இட்டபோது பாடியதாகக் கருதப்படும் “மாசில் வீணையும்” என்று தொடங்கும் பதிகமும், அவரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட்டபோது பாடியதாகச் சொல்லப்படும் “சொற்றுணை வேதியன்” என்று தொடங்கும் பதிகமும் இன்ன சிலவும் அப்பர் அடிகள் கெடில நாட்டில் இருந்துகொண்டு பாடியனவேயாம்.

சம்பந்தர் தேவாரம்

நடு நாட்டில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ள ஊர்ப்பெயர்களும், அவ்வவ்வூர்க்குரிய மொத்தப் பதிகங்களும் மொத்தப் பாடல்களும், திருமுறை எண்ணும் முறையே கீழே தரப்படும். சம்பந்தர் தேவாரம் 1, 2, 3ஆம் திருமுறைகளாக வகுக்கப்பட்டிருத்தல் நினைவுகொள்ளத்தக்கது.

ஊர் மொத்தப் பதிகம் மொத்தப் பாடல் திருமுறை எண்
திருவெருக்கத்தம் புலியூர் 1 10 1
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) 7 72 1, 2, 3
திருத்துங்கானை மாடம் (பெண்ணாகடம்) 1 11 1
நெல்வாயில் அரத்துறை 1 11 2
திருச்சோபுரம் (தியாகவல்லி) 1 11 1
திருமாணி குழி 1 11 3
திருப்பாதிரிப் புலியூர் 1 11 2
வடுகூர் (திருவாண்டார் கோயில்) 1 11 1
திருவதிகை 1 11 1
திருவாமாத்துர் 2 22 2
திருநெல்வெண்ணெய் 1 11 3
திருக்கோவலூர் (வீரட்டம்) 1 11 2
அறையணி நல்லூர் (அரகண்ட நல்லூர்) 1 11 2
திருவண்ணாமலை 2 22 1
திருப்புறவார் பனங்காட்டுர் (பனையபுரம்) 1 11 2
திருவக்கரை 1 11 3
இரும்பை மாகாளம் 1 11 2
அரசிலி (ஒழுந்தியாப்பட்டு) 1 10 2

இந்த ஊர்களேயன்றித் திருத்தினை நகர் முதலிய நடுநாட்டு ஊர்கட்கும் சம்பந்தர் சென்று வழிபட்டதாகப் பெரிய புராணத்தால் தெரிகிறது. ஆனால், திருத்தினை நகர்ப் பதிகம் கிடைக்கவில்லை. கிடைத்திருப்பனவற்றுள்ளும் திருவெருக்கத்தம் புலியூர்ப் பதிகத்தில் ஒரு பாடலும், திருமுதுகுன்றம் பதிகங்களில் ஐந்து பாடல்களும், அரசிலி பதிகத்தில் ஒரு பாடலும் கிடைக்கவில்லை. தேவாரம் பதிப்பித்துள்ள முன்னோர்கள் திருவக்கரை, இரும்பை, அரசிலி ஆகிய மூன்று ஊர்ப் பதிகங்களையும் தொண்டை நாட்டுப் பதிகங்களில் சேர்த்துள்ளனர்; இருப்பினும், இந்த மூன்று ஊர்களும் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தைக் காட்டிலும் கெடிலக்கரைக்கு அண்மையில் இருப்பதால், கெடிலக்கரை பற்றிய இந்நூலில், இம் மூன்று ஊர்ப் பதிகங்களும் நடுநாட்டுப் பதிகங்களுடன் சேர்க்கப்பட்டன.

சம்பந்தர் தேவாரத்தில் ஒவ்வொரு பதிகத்திலும் பதினொரு பாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தர் தேவாரத்தின் காலம் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். சுந்தரர் தேவாரம்

நடுநாட்டில் சுந்தர மூர்த்தி தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ள ஊர்ப் பெயர்களும், அவ்வவ்வூர்க்குரிய மொத்தப் பதிகங்களும் மொத்தப் பாடல்களும் முறையே கீழே தரப்படும். சுந்தரர் தேவாரப் பாடல்கள் அனைத்தும் ‘ஏழாம் திருமுறை’ எனும் ஒரே திருமுறையாகத் தொகுக்கப்பட்டிருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

ஊர் மொத்தப் பதிகம் மொத்தப் பாடல்
திருவெண்ணைய் நல்லூர் 1 10
திருநாவலூர் 1 11
திருத்துறையூர் 1 11
திருவதிகை 1 10
திருத்தினை நகர் 1 10
திருக்கூடலை யாற்றுார் 1 10
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) 3 31
திருவாமாத்துர் 1 11
திருவிடையாறு 1 10
நெல்வாயில் அரத்துறை 1 10

இவையேயன்றி, நடுநாட்டில் திருமாணிகுழி முதலிய திருப்பதிகட்கும் சுந்தரர் சென்று வழிபட்டதாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால், திருமாணிகுழி பதிகம் கிடைக்கவில்லை. திருமுதுகுன்றம் - மூன்றாம் பதிகத்தின் இறுதிப் பாடல் முழுதும் கிடைக்கவில்லை. இப்படியாக மூவர் தேவாரங்களிலும் பல பதிகங்களையும் பல பாடல்களையும் நாம் இழந்திருப்பது தீப்பேறே.

சுந்தரர் மேற்கூறிய நடுநாட்டு ஊர்கட்குத் தனித்தனியே பதிகம் பாடியிருப்பதன்றி, வேறு ஊர்ப் பதிகங்களில் திருக்கோவலூரை எடுத்தாண்டு பாடியுள்ளார். திருநாவலூர்ப் பதிகத்தின் ஆறாம் பாடலில்,

"கோட்டம் கொண்டார் குடமூக்கிலும்
கோவலும் கோத்திட்டையும்
வேட்டம் கொண்டார்”

எனவும், திருப்பரங்குன்றப் பதிகத்தின் முதல் பாடலில்,

“கோத்திட்டையம் கோவலும் கோயில் கொண்டீர்”

எனவும் கோவல் குறிப்பிடப்பட்டிருப்பது காணலாம்.

பாடல் பெற்ற நடுநாட்டு ஊர்கள்

பொதுவாகப் பாடல் பெற்ற ஊர்கள் என்றாலேயே ஒரு தனிப் பெருமைதான்! நடு நாட்டில் மூவர் தேவாரப் பாடல் பெற்றள்ளனவாகத் தேவாரம் பதிப்பித்துள்ள பெரியோர்கள் குறிப்பிட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அவர்கள் அமைத்துள்ள வரிசைப்படி வருமாறு:

நெல்வாயில் அரத்துறை, திருத்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்), திருக்கூடலை யாற்றூர், திருவெருக்கத்தம் புலியூர் (திருவெருக்கற்றம் புலியூர்), திருத்தினை நகர் (தீர்த்தன நகர்), திருச்சோபுரம் (தியாகவல்லி), திருவதிகை, திருநாவலூர் (திருநாம நல்லூர்), திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருநெல்வெண்ணெய் (நெய் வெண்ணெய்), திருக்கோவலூர் (கீழவூர்), அறையணி நல்லூர் (அரகண்ட நல்லூர்), திருவிடையாறு, திருவெண்ணெய் நல்லூர், திருத்துறையூர், வடுகூர் (வடுவூர், திருவாண்டார் கோயில்), திருமாணிகுழி, திருப்பாதிரிப் புலியூர், திருமுண்டீச்சுரம் (கிராமம்), திருப்புறவார் பனங்காட்டூர் (பனையபுரம்), திருவாமாத்தூர், திருவண்ணாமலை, இவற்றுடன், திருவக்கரை, இரும்பை, அரசிலி (ஒழுந்தியாப்பட்டு) ஆகிய மூன்று ஊர்களையும் நாம் சேர்த்துக் கொண்டுள்ளோம்.

தேவாரப் பதிப்பாசிரியர்கள் இந்த வரிசையில் ஊர்ப் பெயர்களை நிறுத்தியிருப்பினும், நாம் மேலே, தேவார ஆசிரியர் ஒவ்வொருவரையும் பற்றிய தனித்தனித் தலைப்பின்கீழ் இவ்வூர்ப் பெயர்களை வெவ்வேறு வரிசைகளில் (பக்கங்கள் : 200, 202, 203, 204) நிறுத்தியுள்ளோம். அஃதாவது, தேவார ஆசிரியர் மூவரும் அவ்வவ்வூர்க்குப் பயணம் செய்த வரிசை முறையில் அவ்வரிசைகள் நம்மால் அமைக்கப்பட்டன. அந்தப் பயண வரிசை முறை, சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ள வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

இனி, நடுநாட்டில் தேவாரப் பாடல் பெற்றுள்ள இவ்வூர்கள் எந்தெந்த வட்டத்தைச் (தாலுகாவைச்) சேர்ந்தன - யார் யாருடைய தேவாரத்தில் எத்தனை எத்தனை பதிகங்கள் பெற்றுள்ளன - என்பதைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்:

ஊர்கள் வட்டம் அப்பர் பதிகம் சம்பந்தர் பதிகம் சுந்தரர் பதிகம்
நெல்வாயில் அரத்துறை விருத்தாசலம் 1 1 1
திருத்தூங்கானை மாடம் விருத்தாசலம் 1 1 -
திருக்கூடலையாற்றுார் சிதம்பரம் - - 1
திருவெருக்கத்தம் புலியூர் விருத்தாசலம் - 1 -
திருத்தினை நகர் கடலூர் - - 1
திருச்சோபுரம் கடலூர் - 1 -
திருவதிகை கடலூர் 16 1 1
திருநாவலூர் திருக்கோவலூர் - - 1
திருமுதுகுன்றம் விருத்தாசலம் 1 7 3
திருநெல்வெண்ணெய் திருக்கோவலூர் - 1 -
திருக்கோவலூர் திருக்கோவலூர் 1 1 -
அறையணி நல்லூர் திருக்கோவலூர் - 1 -
திருவிடையாறு திருக்கோவலூர் - - 1
திருவெண்ணெய் நல்லூர் திருக்கோவலூர் - - 1
ஊர்கள் வட்டம் அப்பர் பதிகம் சம்பந்தர் பதிகம் சுந்தரர் பதிகம்
திருத்துறையூர் கடலூர் - - 1
வடுகூர் (திருவாண்டார் கோயில்) புதுச்சேரி மாநிலம் - 1 -
திருமாணிகுழி கடலூர் - 1 -
திருப்பாதிரிப் புலியூர் கடலூர் 1 1 -
திருமுண்டிச்சுரம் திருக்கோவலூர் 1 - -
திருப்புறவார் பனங்காட்டூர் விழுப்புரம் - 1 -
திருவாமாத்துர் விழுப்புரம் 2 2 1
திருவண்ணாமலை வடார்க்காடு - திருவண்ணாமலை 3 2 -
திருவக்கரை திண்டிவனம் - 1 -
அரசிலி திண்டிவனம் - 1 -
இரும்பை மாகாளம் திண்டிவனம் - 1 -

(இந்த வரிசை முறை, தேவாரப் பதிப்பாசிரியர்களின் வரிசை முறையை ஒட்டியவை.)

இந்த அட்டவணையைப் பார்க்குங்கால், சிதம்பரம் வட்டத்தில் திருக்கூடலையாற்றுார் தவிர வேறு ஊர்கள் நடுநாட்டில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. காரணம், சிதம்பரம் வட்டம் இப்போது தென்னார்க்காடு மாவட்டத்தில் சேர்ந்திருந் தாலும், முன்பு சோழ நாட்டில் சேர்ந்திருந்தமையேயாகும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களுள் பல, வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. நெல்வாயில் அரத்துறை திருவரத்துறை எனவும், திருத்துங்கானை மாடம் பெண்ணாகடம் எனவும், திருவெருக்கத்தம் புலியூர் இராசேந்திரன் பட்டணம் எனவும், திருத்தினை நகர் தீர்த்தன நகர் எனவும், திருச்சோபுரம் தியாகவல்லி எனவும், திருநாவலூர் திருநாம நல்லூர் எனவும், திருமுதுகுன்றம் விருத்தாசலம் எனவும், அறையணி நல்லூர் அரகண்ட நல்லூர் எனவும் வடுகூர் திருவாண்டார் கோயில் எனவும், திருமுண்டீச்சுரம் கிராமம் எனவும், திருப்புறவார் பனங்காட்டூர் பனையபுரம் எனவும், அரசிலி ஒழுந்தியாப்பட்டு எனவும், அழைக்கப்படுகின்றன. முன்னவை தேவாரப் பதிகங்களில் உள்ள பெயர்கள்; பின்னவை உலக வழக்கில் இன்று உள்ள பெயர்கள். குழப்பத்திற்கு இடமின்றிப் பெயர்களைத் தெளிந்து கொள்ள வேண்டும். திருக்கோவலூர் வட்டத்தில் கிராமம் என அழைக்கப்படும் திருமுண்டீச்சுரம் என்னும் ஊரை அவ்வாறு கொள்ளாமல், கடலூர் வட்டத்திலுள்ள திருக்கண்டீசுரம் என்னும் ஊர்தான் அஃது எனச் சிலர் கூறுகின்றனர்.

இத்தனை ஊர்த் தேவாரப் பதிகங்களும் கெடிலக்கரை இலக்கியச் செல்வங்களாகும்.

ஆழ்வார் பாடல்கள்

ஆழ்வார் பன்னிருவராலும் பாடப் பெற்றுள்ள வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டு உள்ளன. பாடல் பெறுதல் என்பதை ‘மங்களா சாசனம் செய்தல்’ என்று கூறுவது வைணவ மரபு. நூற்றெட்டுத் திருப்பதிகளுள் மிகுதியானவற்றிற்கு மங்களா சாசனம் செய்திருக்கும் ஆழ்வார் திருமங்கை யாழ்வார்தாம். இவரால் பாடப்பெற்றுள்ள திருப்பதிகள் மொத்தம் எண்பத்தாறாகும். இவருக்கு அடுத்தபடியாக மிக்க திருப்பதிகளைப் பாடியிருப்பவர், ஆழ்வார்களுள் சிறந்தவராகப் போற்றப்படும் நம்மாழ்வார்தாம். நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்றுள்ள திருப்பதிகளின் மொத்த எண்ணிக்கை முப்பத்தைந்தே

மிகுந்த திருப்பதிகட்கு மங்களா சாசனம் செய்துள்ள பெருமையேயன்றி மற்றொரு பெருமையும் திருமங்கை யாழ்வாருக்கு உண்டு. ஆழ்வார் பன்னிருவரும் பாடியுள்ள

பாடல்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய நாலாயிரமாகும். இந்த நாலாயிரத்தில் திருமங்கை யாழ்வாரின் பாடல்கள் 1361 ஆகும். மீதிப் பாடல்களையே மற்றப் பதினொருவரும் பங்கிட்டுக் கொள்கின்றனர். திருமங்கை யாழ்வாரின் பாடல்கள், பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் நூல் தலைப்புக்களின்கீழ் உள்ளன.

நூற்றெட்டுத் திருப்பதிகளுள் நடு நாட்டைச் சேர்ந்தவை திருக்கோவலூர், திருவயிந்திரபுரம் என்னும் இரண்டு மட்டுமே. இவை யிரண்டினையும் திருமங்கை யாழ்வார் பாடியுள்ளார். இப்பாடற் பகுதிகள் பெரிய திருமொழியில் உள்ளன. திருமங்கை மன்னர் அருளிச் செய்துள்ள ‘பெரிய திருமொழி’ என்னும் நூல் பதினொரு பத்துக்களைக் கொண்டது. ஒரு பத்து என்பது நூறு பாடல்கள் கொண்டது; ஒரு பத்து என்பது நூறு பாடல்கள் கொண்டது; அஃதாவது ஒவ்வொரு பத்திலும் பத்து உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வோர் உட்பிரிவிலும் பத்துப் பாடல்கள் உண்டு. ஒவ்வொரு பத்துப் பாடலும் ஒரு ‘திருமொழி’ எனப்படும்; அஃதாவது ஒரு திருமொழி என்பதில் பத்துப் பாடல்கள் இருக்கும். எனவே, பத்துத் திருமொழிகள் கொண்டது ஒரு பத்து; இப்படியாகப் பதினொரு பத்து கொண்டது பெரிய திருமொழி என்னும் நூல். ஆனால், இந்நூலின் பதினோராவது பத்தில் மட்டும் எட்டுத் திருமொழிகளே (80 பாடல்களே) உள்ளன; இறுதி இரண்டு திருமொழிகள் (20 பாடல்கள்) ஆழ்வாரால் பாடப் படவில்லையோ - அல்லது - பாடப்பட்டும் கிடைக்காமல் அழிந்துவிட்டனவோ - தெரியவில்லை.

திருக்கோவலூர்

திருமங்கையாரின் பெரிய திருமொழியில் இரண்டாம் பத்தில் ‘மஞ்சாடு’ என்று தொடங்கும் பத்தாம் திருமொழி திருக்கோவலூரைப் பற்றியதாகும். இதில், திருக்கோவலூரின் வளத்தையும் சிறப்பையும் இறைவனின் மாண்பையும் விளக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. பாடற் சுவையின் மாதிரிக்காக முதல் பாடல் வருமாறு:

ஆரபி ராகம் ஆதி தாளம்

"பஞ்சாடு வரையேழுங் கடல்க ளேழும்
வானகமு மண்ணகமு மற்று மெல்லாம்

எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேலோர்
இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னைத்
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்
தூயநான் மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுட் கண்டேன் நானே”

திருமங்கையார் தித்திக்கும் செந்தமிழால் எவ்வளவு சுவையாகப் பாடியிருக்கிறார்! இவ்வாறு இவர் பெரிய திருமொழியில் திருக்கோவலூருக்காகத் தனியே பத்துப் பாடல்கள் பாடியிருப்பதன்றி, வேறு சில விடங்களிலும் நடுநடுவே திருக்கோவலூரை எடுத்தாண்டுள்ளார்: பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாடலில்.

“குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல் நின்றான்.”

எனவும், ஏழாம்பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாடலில்,

“....மகரக் குழைக்காதனை மைந்தனை
மதிட்கோவ லிடைகழி யாயனை....”

எனவும். கோவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இவையேயன்றி, திருமங்கையார் தாம் அருளியுள்ள திருநெடுந்தாண்டகத்திலும் மூன்று (6, 7, 17) பாடல்களில் கோவலூரைப் பாடியுள்ளார்; முறையே அப்பாடல்களில் சில அடிகள் வருமாறு:

“...புலம்பரந்து பொன்விளைக்கும் பொய்கை வேலிப்
பூங்கோவ லூர்தொழுதும் போது நெஞ்சே”

“...பொற்புடைய மலையரையன் பணிய நின்ற
பூங்கோவ லூர்தொழுதும் போது நெஞ்சே”

“... தண்காவும் தன்குடந்தை நகரும் பாடித்
தண்கோவ லூர்பாடி ஆடக்கேட்டு.”

இந்நூல்களிலன்றி, திருமங்கை யாழ்வார் தமது ‘சிறிய திருமடல்’ என்னும் நூலில் (69),

“காரார் திருமேனி காணு மளவும் போய்ச்
சீரார் திருவேங் கடமே திருக்கோவ லூரே”

எனவும், ‘பெரிய திருமடல்’ என்னும் நூலில் (122),

“முன்னிவ் வுலகாண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னும் இடைகழியெம் மாயவனை”

எனவும் கோவலூரைப் பாடியுள்ளார்.

திருவயிந்திரபுரம்

திருமங்கை யாழ்வாரின் பெரிய திருமொழியில் மூன்றாம் பத்தில் ‘இருந்தண்’ என்று தொடங்கும் முதல் திருமொழி திருவயிந்திரபுரத்தைப் பற்றியதாகும். இதிலுள்ள பத்துப் பாக்களில், திருவயிந்திரபுரத்தின் இயற்கை வளமும் இறைவனின் மாண்பும் பரக்கக் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்கு முதல் பாடல் வருமாறு:

செஞ்சுருட்டி ராகம் - ஆதி தாளம்

“இருந்தண் மாநில மேனம தாய்வளை
மருப்பினி லகத்தொடுக்கிக்
கருந்தண் மாகடற் கண்டுயின் றவனிடம்
கமலநன் மலர்த்தேறல்
அருந்தி இன்னிசை முரன்றெழு மளிகுலம்
பொதுளியம் பொழிலுடே
செருந்தி நாண்மலர் சென் றணைந் துழிதரு
திருவயிந் திரபுரமே”

திருமங்கை யாழ்வார் காலம் எட்டாம் நூற்றாண்டாகும். எனவே, அவர் படைப்புக்கள் எட்டாம் நூற்றாண்டு இலக்கியங்களின் வரிசையில் இடம்பெறும்.

பிற ஆழ்வார்கள்

நடுநாட்டுத் திருப்பதியாகிய திருக்கோவலூரைத் திருமங்கை யாழ்வரேயன்றிப் பொய்கை யாழ்வார், பூதத் தாழ்வார் முதலியோரும் போற்றிப் பாடியுள்ளனர். முதலாழ்வார்கள் எனச் சிறப்பிக்கப்படும் மூவருள் முதல்வரும் காஞ்சியுரம் திருவெஃகாவில் பிறந்தவருமாகிய பொய்கை யாழ்வார் தாம் இயற்றிய ‘முதல் திருவந்தாதி’ என்னும் நூலில் (பா : 86),

“நீயுந் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா - வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி”

எனக் கோவலூரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். முதலாழ்வார்கள் மூவருள் இரண்டாமவரும் மாமல்லபுரத்தில் தோன்றியவருமாகிய பூதத்தாழ்வார் தாம் அருளிய இரண்டாந்திருவந்தாதி என்னும் நூலில் (பா : 70),

“தமருள்ளந் தஞ்சை தலையரங்கந் தண்கால்
தமருள்ளுந் தண்பொருப்பு வேலை - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே
ஏவல்ல வெந்தைக் கிடம்”

எனக் கோவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

முதலாழ்வார்கள் எனப்படும் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் சேர்ந்து கோவலூரை வழிபட்ட வரலாறு சுவைமிக்கது. திருக்கோவலூரில் ஒரு வீட்டின் இடைகழியில் மூவருள் ஒருவர் ஒருநாள் இரவு முடங்கிப்ப்டுத்துக் கொண்டிருந்தார். மழை பெய்யத் தொடங்கியது. மற்றொருவர் ஓடி வந்தார். வந்தவரும் முடங்கிப் படுத்திருந்தவரும் உட்கார்ந்திருக்க மட்டும் அவ்விடம் போதியதாயிற்று. அந்த நேரம் மூன்றாமவர் வந்தார். அந்த இடத்தில் மூவர் உட்கார்ந்திருக்க முடியாது. எனவே, மூவரும் எழுந்து நின்று கொண்டிருந்தனர். ஒரே இருட்டு. அவ்வேளையில் மூவருக்கும் நடுவில் யாரோ ஒருவர் புகுந்து மூவரையும் நெருக்கித் தள்ளினார். மூவரும் நெருக்குண்டு திக்குமுக்காடினர். நெருக்கியவர் திருமால் என்று பின்னர் மூவரும் உணர்ந்து இறைவனை மெய்ம்மறந்து பாடித் துதித்தனர். பொய்கை யாழ்வார் பாடிய நூல் ‘முதல் திருவந்தாதி’ எனவும், பூதத்தாழ்வார் பாடிய நூல் ‘இரண்டாம் திருவந்தாதி’ எனவும், பேயாழ்வார் பாடிய நூல் ‘மூன்றாம் திருவந்தாதி’ எனவும் பெயர் கொடுக்கப்பட்டு, திவ்ய பிரபந்தத்துள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்மூவரும் கோவலூரில் இறைவனைப் பாடி வழிபட்டதை,

“பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவல் பாவலர்
பாதிநா ளிரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக் கேற்றி முகுந்தனைத்
தொழுத நன்னாடு”

என்று வரந்தருவார் பாடியுள்ள பாரதச் சிறப்புப்பாயிரப் பாடற் பகுதியால் அறியலாம்.

இவர்தம் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியும் என்று சொல்லப்படுகிறது.

திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்

கெடிலக்கரையிலுள்ள திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி யுள்ள சிவன்மேல் பாடப்பட்ட கலம்பக நூல் ‘திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்’ எனப்படும். இதில் பாயிரப் பாடல்கள் மூன்று உட்பட மொத்தம் நூற்று மூன்று பாடல்கள் உள்ளன.

இடைக்கால இலக்கியம்

கலம்பகம் முதலிய சிற்றிலக்கிய வகைகளைக் காலத்தால் பிற்பட்டவையெனக் கூறுவது வழக்கம். சிற்றிலக்கிய வகைகள் பிற்காலத்தில் தோன்றியவை என்பது உண்மையெனினும், கலம்பக இலக்கியம் சங்க காலத்திற்குப் பிற்பட்டதே தவிர, பொதுவாகப் பார்க்குமிடத்து இடைக்காலத்தைச் சேர்ந்ததே இது. கலம்பக இலக்கியத்தை இடைக்காலத்தைச் சேர்ந்த பெருமைக்கு உரியதாக ஆக்கிய பெருமை திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்திற்குண்டு.

கலம்பக நூல்களுக்குள் காலத்தால் முற்பட்டவை நந்திக் கலம்பகமும் திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகமும் ஆகும். இவ்விரண்டனுள் நந்திக் கலம்பகம் சில ஆண்டுகள் முற்பட்டது. 844ஆம் ஆண்டு தொடங்கி 866வரை ஆண்ட மூன்றாம் நந்திவர்ம பல்லவன்மேல் (பெயர் தெரியா ஒருவரால்) இயற்றப்பட்டது நந்திக் கலம்பகம். இஃது ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியைச் சேர்ந்தது. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்டதாகும்.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் தொல்காப்பியத் தேவர் என்பார். சீவக சிந்தாமணி இயற்றிய திருத்தக்க தேவர், சூளாமணி இயற்றிய தோலா மொழித் தேவர் முதலிய சமணசமயப் பெரியார்களின் பெயர்களோடு தொல்காப்பியத் தேவர் என்னும் பெயரை ஒப்பு நோக்குமிடத்து, இவர் முதலில் சமணசமயத்தைப் பின்பற்றியிருந்து பின்னர்ச் சைவ சமயத்திற்கு மாறியிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. இந்தக் கருத்தை மெய்ப்பிப்பதுபோல் இவரைப் பற்றிப் பின்வருமாறு ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது:

தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியில் ஒரு சைனக் கோயில் கட்டுவதற்காக ஓரிடத்தில் செங்கல் சூளைபோட ஏற்பாடு செய்தார். அது கண்ட திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலார் சிவனுக்கு உரிய எல்லையில் நீர் இவ்வாறு செய்யலாமா எனக் கேட்டு மறித்தனர். அதற்குத் தேவர், ‘உலகம் முழுவதுமே சிவனுக்கு உரியதாயிருக்க, நீவிர் இச்சிறு எல்லையை மட்டும் சிவனுக்கு உரியதாகக் கூறுகிறீர்களே’ என்னும் கருத்தில்,

“வேத மொழிவிசும்பு மேனி சுடர்விழிமண்
பாதம் திருப்பா திரிப்புலியூர் - நாதர்

பரமாம் பரமாம் படுகடலென் திக்கும்
கரமாம் அவர்க்குயிர்ப்பாம் கால்”

என்னும் வெண்பாவை எழுதிபனுப்பினார். பாடலைப் படித்த சைவர்கள் மிகவும் வியந்து மகிழ்ந்து, திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் படுமாறு தேவரை வேண்டினர். தேளுரும் அவ்வாறே பாடித் தந்தார்.

நூலில் இவ்வெண்பாவை இரண்டாம் பாடலாக ஆசிரியர் வைத்துள்ளார்.

இவ்வாறு முதலில் சைனராயிருந்த தொல்காப்பியத் தேவர் பின்னர்ச் சைவராக மாறினார். அவரது காலம், மத மாற்றங்கள் நிரம்ப நடந்த காலமாகும். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் என்ற செய்தி முன்பே ஓரிடத்தில் (பக்கம் : 69-70) ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது.

நூல் பெருமை

கலம்பகம் பாடுவதில் இரட்டைப் புலவர்கள் மிகவும் வல்லவர்கள் (Champions) என்பதை, ‘கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ என்னும் ஆன்றோர் மொழியால் அறியலாம். இந்த இரட்டையர்கள் மிகவும் பெயர் பெற்று விளங்கிய திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்தை மிகவும் விரும்பிப் போற்றிப் படித்து வந்தார்கள். இதன்பால் அவர்கட்கு இருந்த ஈடுபாடு அளவிடற்கரியது. கலம்பகச் சுவைகண்ட அவர்கள் தாமும் தில்லைக் கலம்பகம், திருவாமாத்துர்க் கலம்பகம் முதலிய நூல்கள் பாடினர்.

ஒருமுறை இரட்டையர்கள் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்தபோது, கலம்பகம் பாடுவதில் வல்லவர்களான அவர்களை நோக்கி, திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் பாடுமாறு ஊர் மக்கள் வேண்டினர். அதற்கு இரட்டையர்கள், இவ்வூர் இறைவன்மேல் தொல்காப்பியத் தேவர் கலம்பகம் பாடிய பிறகு நாங்கள் பாடினால் எடுபடாது என்று கூறித் தட்டிக் கழித்தனர். இதனை,

“தொல்காப் பியத்தேவர் சொன்னதமிழ்ப் பாடலன்றி
நல்காத் திருச்செவிக்கு நாமுரைப்ப தேறுமோ
மல்காப் புனறதும்ப மாநிலத்திற் கண்பிசைந்து
பல்காற் பொருமினர்க்குப் பாற்கடலொன் றீந்தார்க்கே”

என்னும் இரட்டையர் பாடலால் அறியலாம். இக்கலம்பகத்தைப் புலவர்களே பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள் என்றால் - அதிலும், கலம்பகம் பாடுவதில் வல்ல புலவர்களே வியந்து பாராட்டியிருக்கிறார்கள் என்றால், இதன் மாண்சிறப்பு எத்துணைய தென்பது நன்கு விளங்குமே!

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி

ஆசிரியர்

வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டையும் பற்றி அந்தாதித் தொடையாகப் பாடப் பெற்ற நூல் இது. இதன் ஆசிரியர் அழகிய மணவாளதாசர் என்னும் ‘பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஆவார். இந்நூலில், நடுநாட்டுத் திருப்பதிகளான திருவயிந்திரபுரமும் திருக்கோவலூரும் இடம்பெற்றுள்ளன. அவை பற்றிய பாடல்கள் (72, 73) முறையே வருமாறு:

திருவயிந்திரபுரம்

“அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி
முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே - என்பர்
எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்
தமையிந் திரபுரத்தார் தாம்”

திருக்கோவலூர்

“தாமைரையா னாதியாய்த் தாவரங்க ளீறான
சேம வுயிருஞ் செகமனைத்தும் - பூமடந்தைக்
காங்கோவ லாயுதன்பின் னாக வவதரித்த
பூங்கோவ லாயன் பொருள்”

காலம்

பல்வேறு ஆராய்ச்சிகளையும் கூர்ந்து நோக்குமிடத்து, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியின் காலம் பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டாயிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழ்

திருப்பதிகள் தோறும் சென்று சிவபெருமான் மேல் மூவர் பதிகம் பாடியதுபோல, அருணகிரிநாதர் முருகப் பெருமான் மேல் அன்புப் பாடல்கள் பாடியுள்ளார். மூவர் பாடலுக்கும் தேவாரம் எனப் பெயர் வழங்கப்படுதல்போல, அருணகிரிநாதர் பாடலுக்குத் ‘திருப்புகழ்’ எனப் பெயர் வழங்கப்படுகிறது. முருகனது அழகிய - மங்கலமான தெய்வத்தன்மை மிக்க - வளவிய புகழைக் கூறும் பாடல் ஆதலின் ‘திருப்புகழ்’ எனப்பட்டது. திருப்புகழ் என்பது, தேவாரம் போலவே, அருணகிரிநாதர் பல காலங்களில் பலவிடங்களில் பாடிய பல பாடல்களின் தொகுப்பேயாகும்.

திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து உருவான அருணகிரிநாதர் நடுநாட்டில் உள்ள பல ஊர்கட்கும் சென்று முருகனை வழிபட்டுத் திருப்புகழ் பாடியுள்ளார். தேவார ஆசிரியர்கள் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகங்கள். பாடியிருப்பதைப்போல அருணகிரிநாதர் பாடவில்லை; ஒவ்வோர் ஊர்மேலும் தனித்தனியாக ஒரு பாடலோ இரு பாடல்களோ, நான்கு பாடல்களோ, இன்னும் பல பாடல்களோ பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் அவ்வவ்வூர்ப் பெயர் இருக்கும். இனி, அருணகிரியார் நடுநாட்டில் திருப்புகழ் பாடியுள்ள ஊர்ப்பெயர்களும் ஒவ்வோர் ஊர்க்கும் உரிய மொத்தப்பாடல் எண்ணிக்கையும் முறையே வருமாறு:

ஊர் மொத்தப் பாடல்
திருவண்ணாமலை 78
மயிலம் 1
திருவக்கரை 1
திருவாமாத்துார் 4
திருக்கோவலூர் 1
திருத்துறையூர் 1
திருவதிகை 2
திருவாமூர் 1
திருப்பாதிரிப் புலியூர் 1
திருமாணிகுழி 1
வடுகூர் (திருவாண்டார் கோவில்) 1
திருநாவலூர் 1
ஊர் மொத்தப் பாடல்
திருவெண்ணெய் நல்லூர் 1
திருக்கூடலையாற்றுார் 1
விருத்தாசலம் (திருமுதுகுன்றம்) 1
நெல்வாயில் அரத்துறை 1
யாழ்ப்பாணாயன் பட்டினம் 1
திருமுட்டம் 1

இவ்வூர்களில், யாழ்ப்பாணாயன் பட்டினம் என்பது திருவெருக்கத்தம் புலியூராக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர். நடுநாட்டில் மூவர் தேவாரம் பெற்றுள்ளவற்றுள் பெரும்பாலான ஊர்கள் அருணகிரியாரின் திருப்புகழும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தென்னார்க்காடு மாவட்டத்தில் மிகச்சிறந்த முருகன் திருப்பதியாய் விளங்கும் காரணத்தால் மயிலமும் இங்கே சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. அருணகிரியார் தமது சொந்த ஊராகிய,திருவண்ணாமலைமேல் எழுபத்தெட்டுப் பாடல்கள் பாடியிருப்பது கருதத்தக்கது.

அருணகிரிநாதர் வில்லிபுத்துரார், வரபதியாட்கொண்டான் முதலியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்; எனவே அவரது காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகும்; ஆகவே, திருப்புகழ் பதினைந்தாம் நூற்றாண்டு இலக்கியம் என்பது போதரும். அருணகிரிநாதர் திருப்புகழின் மாதிரிக்காக, கெடிலக்கரைத் திருவதிகை முருகன்மேல் பாடியுள்ள முதல் திருப்புகழ் வருமாறு:-

திருவதிகை
தனனதனத் தனனதனத் தனனதனத் தனனதனத்
தனனதனத் தனனதனத் தனதான.

"பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத் தமுதுறல்

பருகிநிறத் தரளமணிக் களபமுகைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப் பொதுமாதர்

சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் ருபைவிளைவித் துருகாமுன்

சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித் தருள்வாயே

கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக் குமரேசா

கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப் புலவோனே

திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத் திரைமோதித்

திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே."


நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ்


முருகன் திருக்கோயில் கொண்டுள்ள பல ஊர்கள் மேலும் அருணகிரிநாதரால் பாடப்பெற்றுள்ள திருப்புகழ் போல, திருமால் எழுந்தருளியுள்ள நூற்றெட்டுத் திருப்பதிகள் பேரிலும் குருவை இராமானுசதாசர் என்பவரால் புகழ்ந்து பாடப் பெற்ற திருப்பாடல்களின் தொகுப்புதான் இந்த நூல். ஆசிரியர் இராமானுசதாசரின் வரலாறு, காலம் முதலியன பற்றி ஒன்றும் புலப்படவில்லை. இந் நூலுள் நடுநாட்டு வைணவத் திருப்பதிகளான திருவயிந்திரபுரம், திருக்கோவலூர் ஆகியவை பற்றிய அழகான திருப்புகழ்கள் இரண்டு உள்ளன. அவை மிகமிக நீளமாயிருப்பதால் ஊரைப்பற்றிய செய்தி அமைந்துள்ள இறுதிப் பகுதிகள் மட்டும் வருமாறு.

திருவயிந்திரபுரம்

”...சிறை கறங்களிகள் விளரி பண்கெழுமு
துழனி பொங்கியெழு கழனி மிஞ்சிலளர்
திருவ யிந்த்ரபுர மிக விளங்கவரு பெருமாளே.”

திருக்கோவலூர்

”...கோலநீல மேனியாயு பாயமாய நேயதுய
கோவ லூரில் வாழ்வு மேவு பெருமாளே”.

இந்தநூல் மிகவும் பிற்காலத்ததாய் இருக்க வேண்டும் எனத் தெரிகிறது. திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்

திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் பெருமையைக் கூறும் நூல், இறைவன் திருக்கோயில் கொண்டுள்ள ஒவ்வோர் ஊர் பேராலும் புராணம் இயற்றுவது பிற்கால மரபு. இப்புராணம் பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் இலக்கணம் சிதம்பரநாதமுனிவர் என்பவர். பெயரிலிருந்தே இவர் இலக்கணத்தில் வல்லவர் என்பது விளங்கும். இவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவர்களுள் ஒருவர். அக்காலத்தில் பெரும்புலமை பெற்றுச் சிறந்திருந்த சிவஞான முனிவரின் மாணாக்கர் சிதம்பரநாத முனிவர் என்பதொன்றே இவரது புலமைக்குப் போதிய சான்றாகும். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.

நூல் அமைப்பு

இப்புராணத்தில் பாயிரம், திருநாட்டுப் படலம், திருநகரப் படலம், தல விசிட்டச் சருக்கம் முதல் திருவிழாச் சருக்கம் ஈறாகப் பதினாறு சருக்கங்கள் உள்ளன. ஆக மொத்தம் பத்தொன்பது உறுப்புக்கள் உள்ளன. நூல் முழுவதிலுமுள்ள மொத்தச் செய்யுட்கள் 987 ஆகும். சில செய்யுட்கள் முற்றிலும் கிடைத்தில. சில அரைகுறையாயுள்ளன.

பதிப்பு

இந்நூலினை, திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடத்து ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் 1896 ஆம் ஆண்டு ஒலைச் சுவடியை ஆராய்ந்து முதன் முதலாக அச்சிற் பதிப்பித்தார்கள். நூலின் முகப்பை, ஞானியார் அடிகளார் எழுதியுள்ள முகவுரையும், அன்று கூடலுர் நகர்க் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த மு. சாமிநாத ஐயரவர்கள் இயற்றிய பன்னிருபாக்கள் கொண்ட சிறப்புப் பாயிரமும் அணி செய்கின்றன. அச்சு இடுவதற்கு முன்பே ஒலைச் சுவடியின் முகப்பில் இருந்த சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் இரண்டு அச்சு நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை இயற்றியவர் பெயர் காணப்படவில்லை. ஏடு பெயர்த்து எழுதிய எவரோ ஒருவரால் இவை இயற்றப்பட்டிருக்கலாம். திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலார், இப்போது இப் புராணத்தைப் புதிதாகப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.

மு. சாமிநாத ஐயரவர்களைக் கொண்டு இப் புராணத்திற்குப் பொழிப்புரை போன்ற ஒர் உரைச் சுருக்கம் எழுதச் செய்து நூலுடன் இணைத்துப் பதிப்பித்துள்ள ஞானியார் அடிகளாரின் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

நூற் செய்திகள் சில

நூலில் திருநாட்டுப் படலத்தில் திருமுனைப்பாடி நாட்டின் வளங்களும் பெருமைகளும் சிறக்கக் கூறப்பட்டு உள்ளன. நமது இந்தியத் துணைக் கண்டமாகிய பாரத நாட்டிற்கு ‘நாவலந் தீவு’ என்னும் பெயர் உண்மையை ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார்.

"இன்ன நாவலந் தீவினில் காஞ்சியின் தென்பால்..

மன்னி வாழ்வது திருமுனைப்பாடிமா நாடு"

என்பது பாடல் (102) பகுதி. தீவு என்பதை இங்கே துணைக் கண்டம் என நாம் நிலைமைக்கேற்றாற்போல் பொருள் கொள்ள வேண்டும். மற்றும், “நாட்டின் மேம்படுந் திருமுனைப் பாடி நாடு என்றே.”(104) எனத் திருமுனைப் பாடி நாட்டை நாடுகளுள் மேம்பட்டதாக ஆசிரியர் சிறப்பித்துள்ளார்.

அடுத்துத் திருநகரப் படலத்தில், திருப்பாதிரிப் புலியூரும் அதைச்சார்ந்த பகுதிகளுமான இன்றைய கடலூர் நகரம் மிகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர்த் துறைமுகத்தின் பரந்த பெருமையை இப்படலத்தில் காணலாம்.

நூலுக்குள்ளே பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்தில், திருப்பாதிரிப் புலியூருக்கு, மாணிக்கவாசகர் வருகையும், அவருக்காகக் கெடிலம் ஆறு திசை மாறியதும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்புராணத்தில், உமையம்மையார் பாதிரி மரத்தின் கீழ் இருந்து நோன்பு கொண்ட நிகழ்ச்சியும் புலிக்கால் முனிவர், மங்கணர் முதலியோர் தவம் செய்து நற்பேறு பெற்றமையும் இன்ன பிற செய்திகளும் புராண மரபுப்படி விவரிக்கப்பட்டுள்ளன.

கரையேற விட்ட நகர் இலக்கியங்கள்
1. கரையேறவிட்ட நகர்ப் புராணம்

இப்போது வண்டிப் பாளையம் என அழைக்கப்படும் ஊர், அன்று அப்பர் கரையேறியதால் ‘கரையேற விட்டவர் குப்பம்’ என அழைக்கப்பட்டது. இவ்வூர்மேல் இயற்றப்பட்ட நூலே ‘கரையேற விட்ட நகர்ப்புராணம்’ என்பது.

ஆசிரியர்

இப் புராணத்தின் ஆசிரியர் க. ரா. சிவசிதம்பர முதலியார் என்பவர். இவர் ஊர் திருப்பாதிரிப் புலியூர். “இயற்றமிழ்ப் போதகாசிரியர் ” என இவர் நூலின் முகப்பில் குறிப்பிடப் பட்டுள்ளார். புலவர் பெருமக்கள் பலர் இவரைப் பல பாடல்களால் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். இவர் திருவதிகை மான்மியம் என்னும் நூலும் இயற்றியுள்ளார். இவர் கரையேற விட்ட நகர்ப் புராணத்தை 1892 ஆம் ஆண்டில் இயற்ற, வண்டிப்பாளையம் இராசப்ப முதலியார் 1896 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

நூல்

இந்நூலில் திருநாட்டுப் படலம் முதல் அன்பர் போற்றிசைப்படலம் ஈறாக ஒன்பது படலங்கள் உள்ளன. பாயிரம் உட்பட மொத்தச் செய்யுட்கள் 333 ஆகும். இந்நூலிற் கூறப்பட்டுள்ள சில செய்திகளாவன:

“கெடிலம் தென்கங்கை எனப்படும். இந்த ஆறு வண்டிப் பாளையத்தை ஒட்டி முன்பு ஓடியது. ஆற்றின் வடகரையில் வண்டிப்பாளையம் இருந்தது. இங்கே அப்பர் கரையேறினார். இவ்வூர் இறைவன் பெயர் திருக்காட்சிநாதர்; இறைவி பெயர் தெரிசனாம்பிகை. இவ்வூருக்கு வண்டு நகர், வண்டுபுரம், சித்திபுரம் என்னும் பெயர்களும் உண்டு. இவ்வூர் அமைந்துள்ள திருமுனைப்பாடி நாட்டிற்கு ‘நடுநாடு’ என்னும் பெயரும் உண்டு. சான்றோர் உடைத்தான தொண்டை நாட்டிற்கும் சோறுடைத்தான சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதாலும், சான்றோரையும் சோற்று வளத்தையும் ஒரு சேரக் கொண்டிருத்தலாலும் இந்நாடு நடுநாடு எனப்பட்டது. தேவார ஆசிரியர் மூவருள் இருவர் பிறந்தது நடுநாடு; பாரிமகளிரை ஒளவையார் தெய்வீக மன்னனுக்குத் திருக்கோவலூரில் மணமுடித்த நாடு நடுநாடு; சீராமன் வழிபட்ட நாடு நடுநாடு.

இவ்வாறு பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. ஊருக்குத் தெற்கே ஒடிய கெடிலம் மாணிக்கவாசகருக்காகக் கடவுளால் திசை மாற்றப்பட்டு வடக்கே ஒடுவதாக இப் புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஊர் இப்போது கெடிலத்திற்குத் தெற்கே உள்ளது; முன்பு வடக்கேயிருந்தது. 1892 இல் சிவசிதம்பர முதலியார் இந்நூலை எழுதினும், ஊர் ஆற்றுக்கு வடக்கே யிருப்பதாகவே எழுதியுள்ளார். படிப்பவர்களைப் பழைய காலத்துக்கு அழைத்துச் சென்று வரலாறு கூறுவது போல் இருப்பதால் பழைய காலத்தில் இருந்தவாறே ஆசிரியர் பாடவேண்டியதாயிற்று. இதனைச் சித்தர் திருவிளையாடற் படலத்திலுள்ள,

“வாய்ந்த தொல் கெடி லத்தின் வடகரை

ஏய்ந்த சீர்க்கரை யேற்றும் பதி...

"தென்புறநின் றணிவடக்கைக் காட்டி விட்டார்
வெள்ளமதுஞ் சென்ற தாங்கே"

என்னும் பாடற்பகுதிகளால் அறியலாம். .

இந்நூலில் இராவணன் குறித்தும் திருநாவுக்கரசர் குறித்தும் ஒரு சுவையான செய்தி கூறப்பட்டுள்ளது: பண்டு இராவணன் கைலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்றான். சிவபெருமான் கால் பெருவிரலால் ஊன்றி மலையின் கீழே அவனை அகப்படச்செய்தார். இராவணன் வெளியேறும் வழியறியாது திணறித் திண்டாடினான். அப்போது கைலைமலையை வலம் வந்து கொண்டிருந்த வாகீசர் என்னும் முனிவர் இராவணன்பால் இரக்கமுற்று ‘இறைவன் மேல் சாமகானம் பாடினால் அவர் மகிழ்ந்து விடுவிப்பார்’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அவன் அவ்வாறே பாடி இறைவனை மகிழ்வித்து மலையடியிலிருந்து விடுதலை பெற்றான். பின்னர்ச் சிவபெருமான் வாகீச முனிவரை அழைத்து, நீ இராவணனுக்குச் சூழ்ச்சி சொல்லித் தந்ததனால், மண்ணுலகில் பிறந்து உழன்று பின் ஈண்டு வருக’ என ஆண்ணயிட்டார். அவ்வாறே அவர் திருவாமூரில் வந்து திருநாவுக்கரசராகப் பிறந்தார்.

இவ்வாறு திருநாவுக்கரசருக்குத் தெய்வப் பிறப்பு கற்பிக்கப்பட்டுள்ளது. இந்தச்செய்தி கரையேற விட்ட படலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படலத்தில், இராவணன் பாடிய ‘சாமகானம்’ என்பதாக ஒரு பாடல் உள்ளது. அளபெடை வடிவிலுள்ள அப்பாடல் மிகவும் சுவையானது. அது வருமாறு:

"ஓஒ மாஅ தேஎ வாஅ ஊஉ மாஅ தேஎ சாஅ
சீஇ மாஅ தாஅ வாஅர் தேஎ காஅ வேஎ சாஅ
ஆஅ மாஅ நாஅ யேஎ னாஅ வீஇ போஒ மாஅ
காஅ மாஅ ரீஇ நீஇ காஅ வாஅ சாஅ மீஇ”

இந்தப் பாடலை அளபெடை நீக்கிப்பார்த்தால் பின் வருமாறு இருக்கும்.

"ஒமா தேவா ஊமா தேசா
சீமா தாவார் தேகா வேகா
ஆமா நாயே னாவீ போமா
காமா ரீநீ காவா சாமீ”

இந்நூலாசிரியரின் சிறந்த கற்பனைப் புலமைக்குள் இந்த அளபெடைப் பாடல் ஒர் எடுத்துக் காட்டாகும். இந் நூலின் திருநகரப் படலத்தில்,"

"ஆலைவாய்க் கரும்பாட்டு சாறு அட்டிடு புகையும்”

என, கரையேற விட்ட நகரில் கரும்பாலை இருந்ததாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. புராணங்களில் கற்பனைகள் பல இருப்பது உண்மையெனினும், கரும்பாலையைப் பொறுத்த வரையும் உண்மையாகவே தெரிகிறது. இந்த நூல் 1892ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. கரையேறவிட்ட நகராகிய வண்டிப் பாளையத்தில் 1843ஆம் ஆண்டிலேயே பாரி கம்பெனியாரால் கரும்பாலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றும், பாரி கம்பெனியார் ஆலை நிறுவுவதற்குமுன் பழங்கால முறையில் நாட்டு ஆலையும் நடைபெற்றிருக்கலாம்.

இவ்வாறு பல சிறப்புகட்குரிய கரையேற விட்ட நகர்ப் புராணமேயன்றி, மேலும் சில சிற்றிலக்கியங்கள் கரையேற விட்ட நகர்மேல் இயற்றப்பட்டுள்ளன. அவை வருமாறு:


2. கரையேற விட்ட நகர்

கற்பக வினாயகர் இரட்டை மணிமாலை

கரையேற விட்ட நகரில் கற்பக வினாயகர் திருக்கோயில் ஒன்று உள்ளது. இது வரலாற்றுத் தொடர்புடையது. கடலிலிருந்து கெடிலம் ஆற்றின் வழியாக இவ்வூரில் வந்து கரையேறிய திருநாவுக்கரசர் இங்கே தங்கி இளைப்பாறியதின் நினைவுக் குறியாக, இந்தக் கற்பக வினாயகர் கோயிலின் பக்கலில் திருநாவுக்கரசரும் இடம் பெற்றுள்ளார். அவருக்கும் சிலை உண்டு; பூசனை உண்டு. விநாயகர் எங்கும் உள்ளவர், ஆனால் இங்கே திருநாவுக்கரசரும் இணைந்து இடம் பெற்றிருப்பதால் இந்த விநாயகர் கோயிலுக்குச் சிறப்பு மிகுதி. இன்னும் சொல்லப்போனால், விநாயகர் வழிபாடு தமிழகத்தில் பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்டர் காலத்திலிருந்தே விரிவாக ஏற்பட்டது. எனவே, விநாயகர் வழிபாட்டினும் திருநாவுக்கரசர் வழிபாடு தமிழகத்தில் சிறிது பழமையானது என்பது நினைவு கூரற் பாலது.

கற்பக விநாயகர்மேல் இரட்டை மணிமாலை பாடியவர் சிதம்பரம் - ஈசானிய மடம் இராமலிங்கசுவாமிகள் என்பவர். வெண்பாக்கள் பத்தும் கலித்துறைகள் பத்துமாக மாறி மாறி இருபது பாக்கள் கொண்டது இரட்டை மணிமாலை. இவ்விருபதுக்கு முன்னால் காப்புச் செய்யுள் ஒன்றும் இறுதியில் தனிவிருத்தப் பாக்கள் மூன்றும் ஆசிரியரால் இயற்றப் பட்டுள்ளன. இந்நூலின் மாதிரிக்காக, இறுதியிலுள்ள இரண்டாம் விருத்தம் வருமாறு:

          “கருவாதைக் கடல் கடத்தி மன்பதையை முத்தியெனும்
                    கரையின் உய்ப்பான்
          திருவாமூர் தனிலுதித்த வாகீசர் கருங்கல்லே
                    தெப்ப மாகப்
          பொருவாரி எளிதகன்று கரையேறி விட்டநகர்ப்
                    பொலிந்தெல் லோர்க்கும்
          பெருவாழ்வு பெரிதளிக்கும் கற்பக விநாயகன் தாள்
                    பேணி வாழ்வோம்."

இப்பாடலால், நாவுக்கரசர் கரையேறிய வரலாறும், அதனால் ஊருக்குக் கரையேற விட்ட நகர்’ என்னும் பெயர் ஏற்பட்ட காரணமும் நன்கு விளங்கும்.

3. கரையேற விட்ட நகர்

திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திர நவமணிமாலை

இது, கரையேறவிட்ட நகர்-கற்பக விநாயகர் பக்கலில் ஒருபால் கோயில் கொண்டிருக்கும் திருநாவுக்கரசர்மேல், சிதம்பரம் - ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளால் இயற்றப்பெற்ற நூலாகும். இதில் திருநாவுக்கரசரின் வரலாறு ஒன்பது பாடல்களில் சுருக்கமாகவும் சுவையாகவும் தரப்பட்டுள்ளது. இறுதியில் தனிப்பாக்கள் இரண்டு உள்ளன. இரண்டாம் தனிப்பாடலில் வரலாற்றுக்குப் பயன்படும் செய்தியொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையேற விட்ட நகரில் கற்பக விநாயகர் கோயிலை ஒட்டித் திருநாவுக்கரசர் திருமடம் ஒன்று உண்டு. அவ்விடத்தில் திருநாவுக்கரசர் தங்கியிருந்ததாகக் குறிப்பின் உணரப்படுகிறது. இந்தச் செய்தியை உணர்த்தும் அப் பாடல் வருமாறு:

"திருவாக்கும் எழிலாமூர் தனிலுதித் தெக்கலையும்
தேர்ந்ததிகைப் பிரானருளால் செறிசூலை தவிர்ந்து
கருவாக்கு முருட்டமணக் கடலுமவர் வஞ்சக்
கடலுமவ ரிடுகடலுங் கடந்தருளிற் கதித்தே
மருவாக்கு மலர்ப்பொழில்சூழ் கரையேற விட்ட
மாநகரில் புரிமடத்தில் வாஞ்சையுடன் அமரும்
திருவாக்குக்கு அரையர்தமைப் பெருவாக்கி னிறைஞ்சிற்
சிந்தித்த பேறனைத்தும் சந்திக்கும் எளிதே."

கரையேற விட்ட நகர் - திருநாவுக்கரசர் திருமடம் இப் பாடலின் மூன்றாம் அடியில் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க.

4. கரையேற விட்ட நகர்

கற்பக வினாயகர் பஞ்ச ரத்தினம்

காப்புப் பாடல்கள் இரண்டும், கற்பக வினாயகர் கோயில் திருநாவுக்கரசர் திருமடம் ஆகியவற்றின் திருப்பணி செய்தவரைப் பற்றிய பாடல் ஒன்றும், கற்பக விநாயகரைப் பற்றிய பாடல்கள் ஐந்தும் முறையே கொண்டுள்ள இந்நூலில் ஆசிரியர் வா. இராசப்ப முதலியார் என்பவர். இவர், திருப்பாதிரிப் புலியூர் இயற்றமிழ் ஆசிரியர் சிவசிதம்பர முதலியார் அவர்களின் மாணாக்கராவார். ஆசிரியர் இராசப்ப முதலியார், கரையேற விட்ட நகர் - ஸ்கந்த பக்த ஜனசபையின் தலைவராய்ப் பணியாற்றியுள்ளார்.

நூல்களின் பதிப்பும் காலமும்

மேற்கூறப்பட்டுள்ள இரட்டை மணிமாலை, நவமணி மாலை, பஞ்சரத்தினம் ஆகிய மூன்று நூல்களும், “கற்பக விநாயகக் கடவுள் - திருநாவுக்கரசு சுவாமிகள் தரும கைங்கரியம் சு. சொக்கலிங்கம் பிள்ளையால், சோபகிருது ஆண்டு புரட்டாசித் திங்களில், சென்னை கலாரத்நாகர அச்சு யந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டன” - என்பதாக நூல்களின் முகப்பில் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த ‘சோபகிருது’ ஆண்டு என்பது, நான்கு ஆண்டுகட்கு முன் வந்த சோபகிருது ஆண்டு அன்று; அல்லது இற்றைக்கு நூற்றிருபத்து நான்கு ஆண்டுகட்கு முன் வந்த சோபகிருதும் அன்று இற்றைக்கு அறுபத்து நான்கு ஆண்டுகட்கு முன் வந்த சோபகிருது ஆண்டே இது. எனவே, 1903ஆம் ஆண்டில் இந்நூல்கள் அச்சிடப்பட்டன என்பது தெளிவாகும். ஆகவே, இந்நூல்களின் ஆசிரியர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்கள் என்பதும் தெளிவு.

இந்நூல்கள் அளவால் சிறியனவாயும் காலத்தாற் பிற்பட்டனவாயும் இருப்பினும், கெடிலக்கரையோடு மிக்க தொடர்புடைய திருநாவுக்கரசரையும், கெடிலக்கரையின் இன்றியமையாத இடங்களுள் (முக்கியக் கேந்திரங்களுள்) ஒன்றான கரையேற விட்ட நகரையும் பற்றியனவாதலின் இந்நூலில் சிறப்பிடம் பெற்றன.

திருவதிகைப் புராணம்

ஆசிரியர்

திருவதிகையின் புகழ்பாடும் புராணம் திருவதிகைப் புராணமாகும். இதன் ஆசிரியர் திருவதிகை வாகீச பக்த நாவலர் என்னும் புலவராவார். இவருக்கு ‘அப்பாவு’ என்னும் பெயரும் உண்டு, இஃது இயற் பெயராயிருக்கக் கூடும். இவர், மயிலம் பொம்மபுரம் சிவஞான பாலைய தேசிகர் ஆதீனப் புலவராவார். இவர் திருவதிகைப் புராணமேயன்றி, புட்பாசலப் புராணம், திருநாவுக்கரர் சுவாமிகள் பிள்ளைத் தமிழ், திருநாவுக்கரசு சுவாமிகள் இரட்டை மணிமாலை, திருவதிகை உலா, திருவாமூர்ப் புராணம் முதலிய நூல்களும் இயற்றியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் இவர். திருவதி கைப்புராணம் 1902ஆம் ஆண்டு சென்னையில் அச்சிடப்பட்டது.

நூல்

இந்நூலில் கடவுள் வாழ்த்து, அவையடக்கம், சிறப்புப் பாயிரம் ஆகியவை போக, திருநாட்டுப் படலம் முதற் கொண்டு நைமிச முனிவர் பூசித்த படலம் இறுதியாக மொத்தம் இருபத்தொன்பது படலங்கள் உள்ளன. நூலின் மொத்தப் பாடல்கள் 1037 ஆகும். இவையேயன்றி, நூலாசிரியரைப் பாராட்டிப் புலவர் பெருமக்கள் பலரால் இயற்றப்பெற்ற அணிந்துரைப் பாக்கள் பல நூலின் முகப்பை அணி செய்கின்றன. இனி இந்நூலில் உள்ள சில சிறப்புச் செய்திகள் வருமாறு:

திலகவதியார், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலானோர் தொடர்பாகத் திருவதிகையில் நிகழ்ந்தனவாகப் பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் பலவும் சிறப்பாகவும் விரிவாகவும் திருவதிகைப் புராணத்தில் விளக்கப்பட்டுள்ளன. மற்றும், திருவதிகையில் சிவபெருமான் முப்புரங்களை எரித்தது, தருமன் முதலிய ஐவர் வழிபட்டது, திருமால் புத்த அவதாரம் எடுத்தது, பிரமன், கருடன், நைமிச முனிவர் முதலியோர் பூசனை புரிந்தது முதலிய பல்வேறு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கைலைமலையின் கீழ் அகப்பட்டுத் தவித்த இராவணனுக்கு, சாமகானம் பாடித் தப்பித்துக் கொள்ளும்படி சூழ்ச்சி சொன்ன வாகீச முனிவர் என்பவர், அக் குற்றத்திற்காகச் சிவனது ஆணைப்படி மண்ணுலகில் வந்து திருநாவுக்கரசராகப் பிறந்தார் என்ற செய்தி இந்த நூலிலும் கூறப்பட்டுள்ளது.

கெடிலம் ஆற்றிற்குத் திருவதிகைப் புராணத்தில் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. கெடிலோற்பவப் படலம், தீர்த்த விசேடப் படலம் என்னும் இரு படலங்கள் கெடிலத்தின் பெருமைக்கென்றே இயற்றப்பட்டுள்ளன. கங்கை சிவனது முடியிலிருந்து கீழே வந்தது; கெடிலம் சிவனது உடலிலிருந்து வியர்வையாய் வெளிவந்தது; எனவே இரண்டும் ஒத்த தன்மையன கெடிலத்தைக் கங்கையென்றே சொல்லலாம். என்னும் கருத்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது. கெடிலம் என்றும் வற்றாத ‘சீவநதி’ என்னும் உண்மை இப்புராணத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்நூலாசிரியர் திருமுனைப்பாடி நாட்டை மிகமிக உயர்த்திப் பேசியுள்ளார்.

“உலகுறு மலையின் மேலாம் உயர்கிரி இமயம் போலும்

திலகநன் னாட்டின் மேலாம் திருமுனைப் பாடி நாடு’’

என்னும் பாடலில் (திருநாட்டுப் படலம் -4), உலக மலைகளுள் உயர்ந்தது இமயம் (எவரெஸ்ட்) போல, நாடுகளுள் உயர்ந்தது திருமுனைப்பாடி நாடு எனப் புகழ்ந்துள்ளார் ஆசிரியர்.

பல்வேறு இலக்கியங்கள்

கெடிலநாட்டு ஊர்களின்மேல் இன்னும் பல்வேறு இலக்கியங்கள் பல்வேறு காலங்களில் இயற்றப்பட்டு உள்ளன.

திருநாவலூர்ப் புராணம்

திருநாவலூரின் பெருமையை விளக்கும் இந்தப் புராணத்தில் ஒன்பது படலங்கள் உள்ளன. மொத்தச் செய்யுட்கள் : 514. இந்நூலின் ஆசிரியர், திருவெண்ணெய் நல்லூரில் தோன்றிய இராசப்ப நாவலர் என்பவர். இவர் திருவெண்ணெய் நல்லூர்க்கலம்பகம் என்னும் நூலும் இயற்றியுள்ளார். திருநாவலூர்ப் புராணத்தில் ஊர்ப்பெருமை, சுந்தரர் பற்றிய செய்தி முதலியவை புகழ்ந்து கூறப்பட்டுள்ளன.

இன்னும், திருக்கோவலூர்ப் புராணம், திருவாமூர்ப் புராணம், திருவதிகை மான்மியம், திருமாணிகுழிப் புராணம் முதலிய பல்வேறு புராண நூல்களும், திருவதிகை உலா, திருவயிந்திரபுரம் மும்மணிக் கோவை, நவரத்தின மாலை முதலிய பல்வேறு சிற்றிலக்கியங்களும் உள்ளன அவற்றையெல்லாம் விரிப்பிற் பெருகும்.


  1. நல்வழி - 40ஆம் பாடல்.