உள்ளடக்கத்துக்குச் செல்

கெடிலக் கரை நாகரிகம்/கெடிலக்கரை நாகரிகம்

விக்கிமூலம் இலிருந்து



25. கெடிலக்கரை நாகரிகம்

நாகரிகம்

நாகரிகம் என்ற சொல்லுக்குப் பொருள் காண்பது அரிது; எது நாகரிகம் என்று அறுதியிட்டுக் கூறுவது அதனினும் அரிது. நகர் அடிப்படையில் நாகரிகம் பிறந்ததாக ஒரு விளக்கம் கூறப்படுகிறது. நகரங்களில் தொழில் வளமும் வாணிக வளமும் மிகுதி; அதனால் மக்கள் தொகையும் மிகுதி. நகரங்களில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அதனால், ஒரு பிரிவினர்க்கு இன்னொரு பிரிவினர் இளைத்தவரல்லர் என்ற முறையில் ஒருவர்க்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடையுடை முதலியவற்றால் தங்களைச் சிறந்தவராகக் காட்டிக் கொள்ள முயல்கின்றனர். அதனால் வெளித்தோற்றத்திற்கு ஏதோ ஒருவகை ஆரவார ஆடம்பர அமைப்பு காணப்படுகிறது; இந்த அமைப்பையே ‘நாகரிகம்’ என்னும் சொல்லால் பலர் குறிப்பிடுகின்றனர். இதனால், நகரிலிருந்து நாகரிகம் பிறந்தது என்பதாக ஒருவகைப் பெயர்க்காரணம் கூறப்படுகிறது.

நகரங்கள் உருவானதற்கு ஆற்றுவளம் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆற்றுப்பாசன வசதியால் பல்வேறு வகைப் பொருள்கள் விளைய, அதனால் தொழில் வளமும் வாணிக வளமும் பெருக, அதனால் வாழ்க்கை வசதி உயர, அதனால் மக்கள் ஒன்றுதிரள நகரங்கள் உருவாயின; நகரங்களிலிருந்து ‘நாகரிகம்’ தோன்றிப் பரவியது - எனக் கூறப்படுகிறது.

பழைய நாகரிகங்கள்

உலகில், எகிப்திய நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம், இந்தியச் சிந்துவெளி நாகரிகம் முதலிய நாகரிகங்கள் மிகவும் பழைமையானவை எனப் பாராட்டப்படுகின்றன. இவை யாவும், ஆற்றங்கரைச் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையே. எகிப்திய நாகரிகம் நைல் ஆற்றையும், மெசபட்டோமிய நாகரிகம் டைக்ரீஸ் - ‘யூப்ரடிஸ்’ என்னும் இரண்டு ஆறுகளையும், சிந்து வெளி நாகரிகம் ‘சிந்து’ ஆற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. இவை போலவே, கெடிலக் கரை நாகரிகம் ‘கெடிலம்’ ஆற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும்.

இற்றைக்கு 8000 அல்லது 10,000 ஆண்டுகட்கு முன்பே உலகம் ஓரளவு நாகரிகம் அடைந்திருந்தது. பழைய நாகரிகங்கள் எனப்படுபவை சில, கி.மு. 6000 தொட்டு கி.மு. 3000 வரை செழித்திருந்ததாகக் கருதப்படுகிறது. அந்தக் காலத்திலேயே உழவு, நெசவு, மண் மர உலோகக் கைத்தொழில்கள், பண்டமாற்று வாணிகம், குறிப்பு எழுதி வைத்தல், ஓவியம், சிற்பம், கட்டடவியல், கணிதம், வானவியல், கடவுள் வழிபாட்டு நெறி, அரசியல் அமைப்பு முதலியவை இருந்தன.

இந்தியாவில் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் என்பவர் தலைமையில் தொல் பொருள் ஆராய்வாளர்கள் சிந்து மாநிலத்தில் ‘மொகஞ்சதாரோ’ முதலிய இடங்களிலும் பஞ்சாப் மாநிலத்தில் ‘ஹரப்பா’ முதலிய இடங்களிலுமாக 60 இடங்களில் 1921 - 22 ஆம் ஆண்டு காலத்தில் அகழ்ந்து ஆராய்ந்து பல பொருள்களைக் கண்டறிந்து பல செய்திகளை வெளிப்படுத்தினர். சிந்து வெளி நாகரிகம் எனப்படும் இதன் காலம் கி.மு. 3000 - கி.மு. 1500 ஆகிய ஆண்டுகட்கு இடைப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிந்து வெளி அகழ்வாராய்ச்சியினால், பல வசதிகளுடன் கூடிய கட்டடங்களைக் கொண்டிருந்த நகரங்கள் புதையுண்டு கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்திய நாகரிகம் போலவே சீன நாகரிகமும் பழைமையானது. ஐரோப்பியர்களின் குடியேற்றத்திற்கு முன்னே அமெரிக்கக் கண்டத்திலும் ஆஸ்ட்டெக் நாகரிகம், ‘மாயா’ நாகரிகம், இன்கா நாகரிகம் எனப் பல நாகரிகங்கள் தோன்றிப் பதினாறாம் நூற்றாண்டு வரை சிறப்புற்றிருந்தன.

இப்படியாக உலகில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி வளர்ந்து மறைந்துள்ளன. ‘உயிரினங்களைப் போலவே நாகரிகங்களும் பிறந்து வளர்ந்து மறைகின்றன’ என ‘ஆஸ்வால்டு ஸ்பிங்ளர்’ (Oswald Spingler) என்னும் அறிஞர் ‘மேல் நாடுகளின் வீழ்ச்சி’ என்னும் நூலில் கூறியுள்ளார். ‘எகிப்து, மெசபடோமியா முதலிய நாடுகளின் சிற்பங்களைக் கொண்டு, நாகரிகத்தில் வளர்ச்சி, முதிர்ச்சி, வீழ்ச்சி என மூன்று படிகள் இருந்தமை புலனாகிறது’ என்பதாக ‘சர் ஃபிலிண்டர்ஸ் பெட்ரி’ (Sir Flinders Petrie) என்னும் தொல்பொருள் ஆராய்ச்சியறிஞர் தெரிவித்துள்ளார்.

ஒரு பகுதியில் ஆற்றுவளச் சிறப்பால் விளைவும், அதனால் தொழில் வாணிகமும், அவற்றால் செல்வமும் முறையே செழிக்கின்றன; அதனால் பசிக்கவலை வாழ்க்கைக் கவலை நீங்க, பல்வேறு வகைக் கலைகள் தோன்றி வளர்கின்றன; இத்தகைய அமைப்பு நாகரிகம் எனப்படுகிறது. இத்தகைய அமைப்பு உள்ள இடங்களின் பெயரால் ‘நாகரிகங்கள்’ பெயர் வழங்கப்படுகின்றன. எடுத்துக் காட்டு:- எகிப்திய நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம் முதலியன. இத்தகைய நாகரிகங்கள் நிலநடுக்கம், எரிமலை, நீண்ட வறட்சி, புயல், வெள்ளம், மண் மேடிடுதல், கடல்கோள் முதலிய இயற்கையின் சீற்றத்தாலும் மாற்றத்தாலும் அழிந்துபோவதுண்டு; மற்றும், அரசியல் போர் - பிணக்கு முதலியவற்றாலும், வேற்று அரசு - மொழி - சமயம் - நாகரிகம் முதலியவற்றின் இடையீட்டாலும் தலையீட்டாலும் மேலாட்சியாலும் குறிப்பிட்ட ஒரு நாகரிகம் மறைந்து போவதும் உண்டு. இன்ன பிற இடையூறுகளினின்றும் தப்பி நெடுநாளாய் நிலையாய் ஒரு நாகரிகம் இருக்கிறதென்றால் அது மிகவும் குறிப்பிடத்தக்கதாம். பொதுவாக இந்திய நாகரிகம், சிறப்பாகத் தமிழ் நாகரிகம் நெடுநாளாய் நின்று நிலைத்திருப்பதாகச் சொல்லலாம். கெடிலக் கரை நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமே.

தமிழகத்தில் நடுநாடு என அழைக்கப்படும் திருமுனைப் பாடி நாட்டில் கெடிலம் ஆறு ஓடுகிறது. எனவே, கெடிலக்கரை நாகரிகத்தைத் தமிழகத்தின் நடுநாகரிகம் அஃதாவது பொது நாகரிகம் என ஒருவாறு கூறலாம். இந்தக் கெடிலக் கரை நாகரிகத்தின் தொடக்க காலத்தைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. வரலாற்றுக் காலத்திற்கு மிக முற்பட்டது இந்த நாகரிகம். இந்நூலில் ‘கெடிலத்தின் தொன்மை’ என்னும் தலைப்பில், ‘கெடிலம்’ ஆறு காலம் கணக்கிட முடியாத அளவிற்குப் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது” என்னும் உண்மை பல சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. மற்றும் இந்நூலில் ‘கெடில நாட்டு வரலாறு’ என்னும் தலைப்பில், ‘கெடிலம் பாயும் திருமுனைப்பாடி நாட்டில் கற்கருவிகளும் சவக்குழிகளும் முதுமக்கள் தாழிகளும் கிடைப்பதால், இந்நாடு கற்காலத்திற்கு முற்பட்ட பழம்பெருமை உடையது’ என்னும் உண்மையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதைக்கொண்டு, கெடிலக் கரை நாகரிகத்தின் பழைமை புலனாகிறது.

உலகில் பழைய எகிப்திய நாகரிகமும், மெசபட்டோமிய நாகரிகங்கள் எனப்படும் சூமிரிய நாகரிகம் - பாபிலோனிய நாகரிகம் - அசிரிய நாகரிகம் ஆகிய நாகரிகங்களும், இந்தியச் சிந்துவெளி நாகரிகமும், அமெரிக்கக் கண்டத்தின் பழைய நாகரிகங்களான ஆஸ்ட்டெக் நாகரிகம் - மாயா நாகரிகம் இன்கா நாகரிகம் ஆகிய நாகரிகங்களும் இன்ன பிற பல்வேறு நாட்டு நாகரிகங்களும் ஒரு காலத்தில் தோன்றி இன்னொரு காலத்தில் மறைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன. ஆனால், கெடிலக்கரை நாகரிகம் தோன்றி - வளர்ந்து - மறைந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை - வளர்ந்துகொண்டே யிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எனவே, சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் கி.மு. 3000 - மறைவு கி.மு. 1500 எனவும், மெசபட்டோமியா முதலிய பழைய நாகரிகங்களின் தோற்றம் கி.மு. 6000 - மறைவு கி.மு. 3000 எனவும்

சொல்வதுபோல் கெடிலக்கரை நாகரிகத்திற்குத் தோற்றம் - மறைவு சொல்ல முடியாது. உயிரினங்களைப் போலவே நாகரிகங்களும் தோன்றி வளர்ந்து - மறைகின்றன என்பதாக ‘ஆஸ்வால்டு ஸ்பிங்ளர்’ (Oswald Spingler) என்பார் கூறியுள்ள பொதுவிதி கெடிலக்கரை நாகரிகத்திற்குப் பொருந்தாது விலக்காகிறது. கெடிலக்கரை நாகரிகம் கற்காலத்திற்கு முற்காலந்தொட்டு இன்றுவரை படிப்படியாக வளர்ந்து கொண்டே வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

கெடிலக்கரை நாகரிகத்தின் வளர்ச்சியின் இடையிடையே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். அந்த மாற்றங்கள், இயற்கையின் ஆற்றலாலும் காலத்தின் கோலத்தாலும் மதமாற்றங்களாலும், ஆட்சி மாற்றங்களாலும் அயலவர் தலையீட்டாலும் நிகழ்ந்திருக்கலாம். இடையிடையே ஏற்பட்ட மாற்றங்களுள் பொருந்தாத சிலவற்றைக் கெடிலக்கரை நாகரிகம் வென்று விழுங்கித் தனது பழைய தூய தனித்தன்மையை இழவாதிருப்பதுடன், வேறு சில நல்ல மாற்றங்களை வரவேற்றுப் பெற்று வளரவுஞ் செய்துள்ளது. ஒரிடத்து நாகரிகத்தில் காலத்திற்குக் காலம் ஏற்படும் நல்ல மாறுதல்களை வளர்ச்சியின் படிகள் என்று சொல்ல வேண்டும். வளர்ந்து வரும் குழந்தையின் தோற்றத்திலும் செயலிலும் பண்பிலும் பருவத்திற்குப் பருவம் மாறுதல்கள் இருக்கத்தானே செய்யும்?

எது நாகரிகம்?

சிறப்பாகக் கெடிலக் கரை நாகரிகம் எனப்படுவது எது என்று ஆராய்வது ஒருபுறம் இருக்க, பொதுவாக உலகில் நாகரிகம் எனப்படுவது எது என முதலில் ஆராய வேண்டும். ஆடம்பரமான ஆடையணிகள் அணிந்து மேனி மினுக்கி வாழ்வது நாகரிகம் எனச் சிலர் கூறலாம். மாட மாளிகை கூடகோபுரம் காட்டிச் செல்வச்செழிப்புடன் வாழ்வதுதான் நாகரிகம் என வேறு சிலர் சொல்லலாம். விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளின் துணைகொண்டு வியத்தகு வாழ்க்கை வாழ்வதே நாகரிகம் என மற்றொரு சாரார் மொழியலாம். கல்வியறிவொழுக்கங்களால் தலைசிறந்தவராய்த் திகழ்வதே நாகரிகம் என இன்னொரு சாரார் இயம்பலாம். இவையெல்லாம் சேர்ந்ததே நாகரிகம் என ஒரு சிலரும், இவற்றுள் எது ஒன்றும் நாகரிகமாகாது என வேறு சிலரும் கூறவுங்கூடும்.

[1]‘கிளைவ் பெல்’ (Clive Bell) என்னும் அறிஞர் நாகரிகம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: “கடவுள் நம்பிக்கையோ, கற்புடைமையோ, பெண்ணுரிமையோ, திருடாமையோ, உண்மை பேசுதலோ, தூய்மை உடைமையோ, நாட்டுப் பற்றோ, இன்ன பிறவோ நாகரிகம் ஆகமுடியாது. ஏனெனில், மிகவும் நாகரிகமுடையவர் என்று கூறிக்கொள்ளும் இனத்தவர் பலரிடையே மேற்கூறிய பண்புகள் காணப்படுவதில்லை; அதற்கு மாறாக, மிகவும் நாகரிகமற்றவர் எனக் கூறப்படும் பழங்குடிமக்கள் பலரிடையே மேற்கூறிய பண்புகள் காணப்படுகின்றன” என்பதாகக் ‘கிளைவ் பெல்’ கூறுகிறார். இன்னின்ன நாட்டுப் பழங்குடி மக்களிடம் காணப்படும் இன்னின்ன நற்பண்புகள், இன்னின்ன நாட்டு நாகரிக மக்களிடம் காணப்படவில்லை எனக் கிளைவ் பெல் பெயர் சுட்டியும் கூறியுள்ளார். இவரைப் போலவே ‘வெஸ்டர் மார்க்’ (Wester Marck) என்னும் அறிஞரும் ஒத்த கருத்துத் தெரிவித்துள்ளார். அங்ங்னமெனில், இதுதான் நாகரிகமென எதை எடுத்தியம்புவது?

மேலும், ஒரு காலத்தில் நாகரிகமுடைய செயலாகக் கருதப்பட்ட ஒன்று, இன்னொரு காலத்தில் நாகரிகம் அற்ற செயலாகக் கருதப்படுவது உலகியலில் கண்கூடு. முன்னர் உலகில் உயர்வு - தாழ்வு கருதப்பட்டது; உயர் குலம் இழிகுலம் என்ற வேறுபாடு இருந்தது; ஆண்டான் - அடிமை என்ற பாகுபாடு இருந்தது; உயர்ந்த குலத்தினர் நாகரிகம் உடையவராகவும் மற்றவர் நாகரிகம் அற்றவராகவும், அவர்கட்கு இவர்கள் அடிமை ஊழியம் செய்ய வேண்டியவராகவும் உலகச் சூழ்நிலை முன்பு இருந்தது. இப்போதோ உயர்வு தாழ்வு பாராட்டுவதும், ஒருவரை இன்னொருவர் அடிமைப்படுத்திச் சுரண்டுவதும், ஒருவரோடொருவர் பிணங்கிப் பொருவதும் நாகரிகமற்ற செயல்களாக இழிக்கப்படுகின்றன. அளவுமீறி ஆடம்பரமாக உடுத்துவதும் உண்ணுவதும் மிகுந்த பொருட்செலவில் திருமணம் முதலிய நிகழ்ச்சிகள் நடத்துவதும் இன்ன பிறவும் முன்பு மிக்க நாகரிகச் செயல்களாகக் கருதப்பட்டன; இவை இப்போது நாகரிகம் அற்ற செயல்களாகப் பழிக்கப்படுகின்றன. இன்னும் கேட்டால், மிகுதியாகப் பிள்ளை பெறுவதும் இன்று நாகரிகம் அற்ற செயலாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், ‘எது நாகரிகம்’ என்னும் பெருஞ்சிக்கலை அவிழ்ப்பதற்குப் பின்வருமாறு ஒரு தீர்வு கூறப்படுகிறது: ‘மற்ற உயிரினங்களினின்றும் மாந்தரை வேறு பிரித்துக் காட்டும் உயர்பண்பே நாகரிகம்’ - என்பதாக அறிஞர்களால் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. இந்தக் கருத்து உண்மையே என்றாலும், மற்ற உயிரினங்களினின்றும் மாந்தரை வேறு பிரித்துக் காட்டும் உயர்பண்பு எது? - என்பதாக மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது.

இந்த நிலையில், நாகரிகம் எது எனத் தெரிந்து கொள்வதற்கு உலகப் பேரறிஞராகிய திருவள்ளுவப் பெருந்தகையாரின் துணையை நாடுவது பயனளிக்கும். பேரிரக்கமாகிய கண்ணோட்டமே நாகரிகம் என வள்ளுவனார் மொழிந்துள்ளார். இதனைத் தெளிவு செய்து கொள்வதற்காகத் திருக்குறள் பொருட்பாலில் ‘கண்ணோட்டம்’ என்னும் தலைப்பிலுள்ள பத்துக் குறட்பாக்களும் வருமாறு:

கண்ணோட்டம்

 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. 1

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. 2

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னும்
கண்ணோட்டம் இல்லாத கண். 3

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 4

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். 5

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். 6

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். 7

கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்தில் வுலகு. 8

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. 9

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 10

திருவள்ளுவர் கண்ணோட்டத்தைப் பற்றிய பத்துக் குறள்களுள் முதல் ஒன்பது குறள்களில் கண்ணோட்டம் என்னும் சொல்லை இட்டுக் காட்டியுள்ளார்; இறுதியான பத்தாவது குறளில் கண்ணோட்டம் என்னும் சொல்லுக்குப் பதிலாக நாகரிகம் என்னும் சொல்லைப் பெய்துள்ளார். எனவே, நாகரிகம் என்னும் சொல்லுக்கு வள்ளுவனார் தரும் பொருள் ‘கண்ணோட்டம்’ என்பது புலனாகிறது.

‘கண்ணோட்டம் இல்லையேல் உலகம் இல்லை; கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணில்லாதவர்; கண்ணோட்டம் உடையவர்க்கு உலகம் உரியது; தம்மைத் துன்புறுத்தும் கொடியோரிடத்தும் கண்ணோட்டம் கொள்வதே தலையாய பண்பு’ என்றெல்லாம் கூறிவந்த திருவள்ளுவர், இறுதிக் குறளில் கண்ணோட்டத்தின் உயர் எல்லைக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளார். உலகில் எவர் எவரோ எது எதையோ நாகரிகம் என்கின்றனர். அந்த உலகியல் நாகரிகங்களினின்றும் உண்மையான நாகரிகத்தை வேறு பிரித்து உணர்த்துகிறார் வள்ளுவர்; யாவரும் விரும்பத்தக்க உண்மையான நாகரிகம் இதோ இருக்கிறது என எடுத்துக் காட்டுகிறார் பொய்யாமொழியார், அஃதாவது, ‘எவரும் விரும்பும்படியான அருட் கண்ணோட்டம் என்னும் நாகரிகத்தை விரும்புபவர், ஒருவர் நஞ்சை ஊற்றித் தர நேரில் பார்த்தும், அவரை மகிழ்விப்பதற்காக அந் நஞ்சை அருந்தி அமைதிகொள்வர்’ - என்பதுதான் திருவள்ளுவனார் நாகரிகம் என்னும் பண்புடைமைக்குக் கூறும் விளக்கமாகும்.

எனவே, திருவள்ளுவரின் கருத்துப்படி, வானளாவ நூறடுக்கு மாளிகை - கூடகோபுரம் கட்டி வாழ்வதோ, ஒருவர்க்கு ஒரு சிற்றுந்துவண்டி (கார்) வீதம் வைத்து வாழ்வதோ, ஆரவார ஆடையணிகலன்கள் அணிந்து வாழ்வதோ, உலகிலுள்ள எல்லாக் கல்வி - கலைகளையும் கற்று வாழ்வதோ, அனைத்து அறிவியல் படைப்புகளையும் பயன்படுத்தி வாழ்வதோ உண்மையான நாகரிகங்கள் ஆகா; இவை இருப்பினும் இல்லாவிடினும், அருட் கண்ணோட்டம் உடைமையே உயரிய உண்மையான நாகரிகமாகும் - என்பது தெளிவு. பேரிரக்கமாகிய - அருட் கண்ணோட்டமாகிய உண்மை நாகரிகத்திற்கு வள்ளுவர் கூறும் பெயர் ‘நயத்தக்க நாகரிகம்’ என்பதாகும். இந்த நயத்தக்க நாகரிகமே கெடிலக்கரை நாகரிகம்.

ஒருவரின் உடல்மட்டும் வளர்ந்திருத்தல் முழுவளர்ச்சி யாகாது; உடல் வளர்ச்சியுடன் அவருடைய உள்ளப் பண்பும் உயிராற்றலும் ஒருசேர வளர்ந்திருந்தாலே அவர் முழுவளர்ச்சி உடையவராக மதிக்கப்படுவார். அது போலவே, ஒரு நாடும் செல்வவளத்தால் வளர்ந்திருப்பது மட்டும் நாகரிகமாகாது; அதனுடன் கல்வி கலைகளாலும், உயர் ஒழுக்கப் பண்புகளாலும் வளர்ந்திருந்தாலேயே, அந்நாடு உயரிய உண்மையான முழு நாகரிகம் உடையதாக மதிக்கப்படும். பண்பால் வளராமல் செல்வத்தால் மட்டும் வளர்ந்திருக்கும் ஒரு நாட்டினும், செல்வத்தால் வளராமல் பண்பால் வளர்ந்திருக்கும் ஒருநாடு உயரிய நாகரிகம் உடையதாகப் போற்றப்படும். இந்த உயர் நாகரிகப் பண்பு பொதுவாகத் தமிழக முழுவதற்கும் உண்டு; சிறப்பாகக் கெடிலக்கரைக்கும் உண்டு.

கெடிலக்கரை நாகரிகத்தை விளக்கப் பொதுவாக இந்நூல் முழுதும் துணை புரியினும், சிறப்பாக இந்நூலிலுள்ள ‘கெடில நாட்டுப் பெருமக்கள்’ என்னும் தலைப்பு பெருந்துணை புரியும். ஒரு நாட்டின் உயர்வையோ அல்லது தாழ்வையோ அந்நாட்டின் வளத்தால் வரையறுக்க முடியாது; அந்நாட்டு மக்களின் பண்பாலேயே வரையறுக்க முடியும் என்னும் கருத்து அந்தத் தலைப்பின் தொடக்கத்தில் நன்கு விளக்கப்பட்டுள்ளது: (பக்கம் : 164-165) கெடிலநாடாகிய திருமுனைப்பாடி நாடு தன்னிடம் பிறந்தும் வாழ்ந்தும் சிறப்புற்ற பெருமக்களால் நாடுகளுக்குள் மிக்க பெருமைபெற்றுத் திகழ்கிறது என்னும் செய்தி இந்நூலில் பலவிடங்களில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் பண்பு ஒரு காலத்தில் உயர்ந்திருக்கலாம்; இன்னொரு காலத்தில் தாழ்ந்து போகலாம். கெடில நாட்டின் பண்போ, அன்றுதொட்டு இன்றுவரை தாழவேயில்லை; வர வர உயர்ந்து வளர்ந்துகொண்டே யிருக்கிறது; இதற்குச் சான்று பகர, நமக்கு ஒரு தலைமுறைக்கு முன் நம் தந்தையார் - பாட்டனார் காலத்தில் வாழ்ந்த வடலூர் இராமலிங்க வள்ளலார் ஒருவரே போதுமானவர். இந்நூலில் ‘கெடில நாட்டுப் பெருமக்கள் வடலூர் வள்ளலார்’ என்னும் தலைப்பில் இராமலிங்க அடிகளாரைப் பற்றிக் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் முழுதும் ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கன.

‘வடலூர் கடலூர் ஆகும்’ எனக் கூறிக் கடலூர் வட்டத்தில் உள்ள கடலூரில் வாழ்ந்த இராமலிங்க வள்ளலார் ஒரே உலகக் கண்கொண்டு ‘ஒருமை நன்னெறி இயக்கம்’ (சமரச சன்மார்க்க சங்கம்) கண்டார்; உலக மக்களை வேறு பிரிக்கும் சாதி - சமய சாத்திரப் பாகுபாடுகளைக் கடிந்தார்; எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி அருட்கண்ணோட்டம் செலுத்தினார்; இன்ன பிற உயரிய கோட்பாடுகளை மற்றவர்க்கும் அறிவுறுத்தித் தாமும் பின்பற்றி யொழுகினார். ஈண்டு, அவர் அருளிய,

 “பித்தெலா முடைய உலகர்தங் கலகப்
பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்த சன்மார்க்க
சங்கம் என்றோங்குமோ...”

“ஒருமையின் உலகெலாம் ஓங்குக வெனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்.”

“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே...”

“சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையுந் தணந்தேன்”

“எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணியுள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமெனநான் தேர்ந்தேன்...”

முதலிய அருட்பாக்கள் ஆழ்ந்து படித்து ஆராயத்தக்கன. வள்ளலார், மாந்தருக்குள் பாகுபாடு கருதாதது மட்டுமன்று உயிர்கட்குள்ளும் பாகுபாடு கருதினாரல்லர்: அதனால்தான் ‘எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி’ என்று மொழிந்தார். வள்ளலார் கொண்டிருந்த நயத்தக்க நாகரிகமாகிய அருட் கண்ணோட்டத்தின் எவரெஸ்ட் உயர் எல்லைக்குப் பின்வரும் பாடல் தக்க சான்று பகரும்:

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேருறக் கண்டுளந் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைக ளாய்நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.”

வள்ளலார், ஏழைகளாய் உடல் மட்டுமன்று உள்ளமும் இளைத்துப் போனவர்களைக் கண்டு தாமும் இளைத்துப் போனாராம்; பிணியினால் வருந்தினோரைக் கண்டு உள்ளம் துடிதுடித்தாராம்; வீடுதோறும் இரந்தும் பசிநீங்காது சோர்ந்து போன எளியோரைக்கண்டு உள்ளம் பதைபதைத்தாராம். அவரது அருள் உள்ளம் என்னே! அதனால்தான் வடலூரில் அறச்சாலை நிறுவி ஏழை எளியோர்க்கு உணவளிக்க ஏற்பாடு செய்தார்; அந்தப் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆறறிவு பெற்ற உயர்திணையாகிய மக்களுயிரிடத்து வள்ளலார் அருட்கண் செலுத்தியிருப்பதனினும், ஓரறிவே உடைய அஃறிணை உயிராகிய பயிர்வகையிடம் அருட்கண்ணோட்டம் செலுத்தியிருப்பது பெருவியப்பிற்குரியது. ‘வா’டிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் உளம் நெகிழ்ந்து உரைத்திருப்பது, கல் நெஞ்சையும் கரையச் செய்கிறது. இதனினும் உயர்நாகரிகப் பண்பு இன்னும் என்ன வேண்டும்? இத்தகைய அருள்வள்ளலை உருவாக்கிய பெருமை திருமுனைப்பாடி நாட்டினுடையதாகும். வடலூர் வள்ளலார் கண்ட ஒருமை நன்னெறி இயக்கம் தமிழக முழுதுமட்டுமன்று தமிழர்கள் வாழும் அயல் நாடுகளிலும் பரவிவருகிறது; வள்ளலார் பெயரால் ஆங்காங்கே மன்றங்கள் தோன்றிப் பணிபுரிகின்றன. வள்ளலாரின் அருட்பாக்கள் உலகம் முழுதும் பரவும் நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை. இதற்குரிய பெருமை கெடில நாடாகிய திருமுனைப்பாடி நாட்டைச் சாரும்.

கெடிலக்கரை நாகரிகம்

‘ஒருமையின் உலகெலாம் ஓங்குக’ என வள்ளலார் கண்ட ஒரே உலகக் கொள்கையும், எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணியுள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் என அவர் கண்ட ஒத்துரிமைக் கொள்கையும் இன்று உயர்ந்த நாகரிகக் கோட்பாடுகளாகக் கருதப்படுகின்றன. வள்ளுவனார் தண்ட நயத்தக்க நாகரிக உள்ளம் வளர்ந்தாலேயே, வள்ளலார் கண்ட ஒரே உலக ஒத்துரிமைக் கோட்பாடு வெற்றி பெற முடியும். என்றாவது ஒருநாள் இது நடந்தே தீரும்; இதுதான் கெடிலக்கரை நாகரிகம்!

அணு குண்டுகளையும் நீரகக் (ஹைட்ரசன்) குண்டுகளையும் செய்து விறகு அடுக்குவதுபோல அடுக்கிவைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில் - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் படைக் கருவிகளைப் படைத்து வைத்துக்கொண்டு காலத்தை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகில் பாராளுமன்றங்களில் படித்த பெருமக்கள் நாற்காலி, மிதியடி முதலியவற்றைத் தூக்கியெறிந்து, ஒருவரோடொருவர் அடித்துப் பிடித்துக்கொள்ளும் இவ்வுலகில் ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்பது போல, வெளியிலேயுள்ள வேண்டாத பிணக்குகளையெல்லாம், உலக நாடுகளின் ஒற்றுமைக் கழகமாகிய ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) மன்றத்திலும் புகுத்திப் போர் விளையாட்டு புரிகின்ற இவ்வுலகில் ஒருவரையொருவர் உயிரோடு அப்படியே எடுத்து விழுங்கிவிட முயலும் இவ்வுலகில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும்’ நயத்தக்க நாகரிகம் நானூறு கோடி மக்களுக்கும் வேண்டும் என்னும் நல்லுரையை வடலூர் வள்ளலார் வாயிலாக நயமாக அறிவிக்கிறது கெடிலக்கரை நாகரிகம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” [2]என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே முழங்கிய தமிழநாகரிகம் இன்றுவரையும் சிறிதும் ஒளிகுன்றாமல், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அளவுக்குக், கெடிலக்கரை நாட்டில் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. வாழ்க கெடிலக் கரை நாகரிகம்!

[3]“நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர் -
அவ்வழி நல்லை வாழிய நிலனே.”


  1. Clive Bell’s Civilisation (Book)
  2. புறநானூறு - 192 கணியன் பூங்குன்றனார்.
  3. புறநானூறு - 187: ஒளவையார்.