கொல்லிமலைக் குள்ளன்/10
"அண்ணா, வரவர ஆற்றின் இரைச்சல் அதிகமாகிறதே! முன்னால் ஏதாவது நீர் வீழ்ச்சி இருக்குமோ?" என்று கண்ணகி அச்சத்தோடு கேட்டாள். அவள் உடம்பெல்லாம் நடுங்கிற்று.
துடுப்பு வலித்துக்கொண்டே தங்கமணி அவளுக்குத் தைரியம் சொல்லலானான். "நீர்வீழ்ச்சியாக இருக்காது. இருந்தால் அதன் ஓசை வேறு விதமாக இருக்கும். பயப்பட வேண்டாம்" என்று அவன் அந்த ஆற்றின் பகுதியெல்லாம் நன்கு அறிந்தவன்போலச் சொன்னான்.
"ஆற்று வெள்ளம் பாறைகளின்மேல் மோதுவதால் இந்த இரைச்சல் உண்டாவது போலத் தோன்றுகிறது” என்று சுந்தரம் தன் கருத்தை வெளியிட்டான்.
பரிசலைக் கரையோரமாகச் செலுத்தும் முயற்சியில் இரண்டு பேரும் தீவிரமாக ஈடுபட்டார்கள். ஆற்றின் இரைச்சல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
ஓர் இடத்திலே ஆறு புதிதாகக் கரை புரண்டு கரைப் பகுதியிலும் புகுந்து மண்ணை அரித்துக்கொண்டு ஓடியிருப்பது போலத் தென்பட்டது. புதிய வெள்ளம் ஆற்றிலே வந்த போது இது ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் அங்கே பல மரங்கள் வேரோடு பறிக்கப்பட்டு வெள்ளத்தில் போயிருக்கலாமென்றும் தெரிந்தது. ஏனெனில், சுற்றிலும் கரையோரத்தில் மரங்கள் அடர்ந்து ஒரே இருட்டாக இருக்க, இந்தப் பகுதி மட்டும் மரங்களின்றி இருந்தது. அங்கே ஒரு மரம் மட்டும் இன்னும் வெள்ளத்தில் போகவில்லை; ஆனால், தலைசாய்ந்து பாதி விழுந்து சாய்ந்த நிலையிலே இருந்தது. அதன் கிளையொன்று ஆற்றிற்குள்ளே நீளமாக நீண்டிருந்தது. அதன் பக்கமாகப் பரிசல் செல்லவே தங்கமணிக்குத் திடீரென்று ஒரு யோசனை உண்டாயிற்று. பரிசலைக் கட்டி வைப்பதற்காகப் பயன்படும் கயிற்றை அவன் எடுத்து வந்திருந்தானல்லவா? அந்தக் கயிறு இப்போது பயன்படும் என்று கருதினான். அதை எடுத்து ஒரு நுனியை இடக்கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு நுனியை வலக்கையால் பற்றி ஆற்றுவெள்ளத்திற்கு மேலே தென்பட்ட மரக்கிளைக்கு மேலே போகுமாறு வேகமாக வீசிவிட்டான். கயிறு மரக் கிளைக்கு மேலாகச் சென்று, அதன் மறு பக்கத்திலே நீரில் விழலாயிற்று. அதற்குள் பரிசலும் மரக்கிளையின் அடியிலே புகுந்து மறுபக்கம் வந்தது. உடனே தங்கமணி தான் வீசிவிட்ட கயிற்று நுனியையும் எட்டிப் பிடித்துக்கொண்டான். இப்பொழுது கயிற்றின் இரு நுனிகளும் அவன் கையில் இருக்கவே, பரிசல் மேற்கொண்டு ஆற்றில் போகாமல் ஓரிடத்திலேயே நின்றுவிட்டது.
சுந்தரத்திற்கும் இப்பொழுது தங்கமணியின் எண்ணம் புரிந்துவிட்டது. துடுப்பைப் பரிசலுக்குள்ளே போட்டுவிட்டு அவனும் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்தான். அதனால் ஆற்றுவெள்ளம் இழுத்தபோதிலும் பரிசல் ஒரே இடத்தில் மிதக்கலாயிற்று. ஆனால், சாய்ந்து விழுந்திருந்த மரமும் அதன் கிளையும் ஆட்டம் கொடுக்கத் தொடங்கிற்று. ஆற்று வெள்ளம் அடிமரத்தின் கீழே மண்ணை ஆழமாகப் பறித்திருந்த படியால் மரம் உறுதியாக நிற்கவில்லை.
"சுந்தரம், இந்த மரம் எவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து நிற்கிறதோ அது வரையில் நமக்குக் கவலை இல்லை” என்று தங்கமணி சிறிது உற்சாகத்தோடு கூறினான்.
“மரம் பெயர்ந்து வந்துவிட்டால் என்ன செய்வது?" என்று தடுமாற்றத்தோடு கண்ணகி கேட்டாள்.
"விடிவதற்குள் அப்படி ஒன்றும் ஏற்பட்டுவிடாது. வெளிச்சம் வந்த பிறகு இந்த மரத்தின் உதவி இல்லாமலேயே நாம் சமாளித்துக்கொள்ளலாம்" என்று தைரியமூட்டினான் சுந்தரம்.
"விடிவதற்குள்ளே ஜின்காவும் வந்து சேர்ந்துவிடும்" என்று நம்பிக்கையுடன் தங்கமணி பேசினான்.
"பரிசல் இப்படி ஒரே இடத்தில் நின்றால் ஆபத்து இல்லையா, அண்ணா? இப்போது ஒரு முதலை வந்து, அதன் வாலால் வீசி அடித்தால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டாள் சிறுமி.
"முதலை வாலை வீசினால் தலையை வாங்கிவிட்டால் போச்சு" என்றான் சுந்தரம்.
"இங்கெல்லாம் முதலையே இருக்காது. பயப்படாதே" என்று ஆறுதல் கூறினான் தங்கமணி.
இருந்தாலும் கண்ணகிக்கு அச்சம் நீங்கவில்லை. எங்கும் இருள் சூழ்ந்திருக்கும்படியான நேரத்திலே ஆற்றுக்குள்ளே பரிசலில் அமர்ந்திருப்பது அச்சத்தை அதிகப்படுத்திற்று. மரங்களுக்கிடையே இருந்து கோட்டான் அலறுகின்ற சத்தமும், நரிகள் ஊளையிடுகின்ற குரலும் அடிக்கடி கேட்டன. சிறுத்தைப் புலி ஒன்று திடீரென்று உரத்த குரலில் கர்ஜனை செய்தது. அந்த ஓசை ஆற்றின் இரைச்சலையும் அடக்கி விட்டுத் தூரத்திலுள்ள மலைவரையிலும் சென்று, அங்கிருந்து மீண்டும் நெஞ்சு திடுக்கிடும்படி எதிரொலித்தது.
“தங்கமணி, அதோ, ஆற்றின் நடுவிலே இரண்டு பரிசல்கள் வேகமாகப் போகின்றன, பார்த்தாயா?" என்று சுந்தரம் பரபரப்புடன் கூறினான். இவர்கள் இருந்த பகுதி மிகவும் இருண்டு இருந்த போதிலும் ஆற்றின் மையப் பகுதியில் மரக்கூட்டம் இல்லாமையால் ஓரளவு இருள் குறைவாகவே இருந்தது. அதனால் அங்கு செல்கின்ற பரிசல்களை நன்றாகப் பார்க்க முடிந்தது.
"அண்ணா, அண்ணா, நமக்குத்தான் உதவி வந்திருக்கிறது" என்று உற்சாகத்தோடு கூறினாள் கண்ணகி.
நான் சத்தம் போட்டுக் கூப்பிடட்டுமா?" என்று சுந்தரம் ஆவலோடு கேட்டான்.
"அவர்கள் நமக்கு உதவிக்கு வருகிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. வஞ்சியூர் சத்திரத்திலிருந்து அப்பாவோ அம்மாவோ பரிசல் அனுப்பியிருந்தால் ஒன்று தான் வந்திருக்கும். இவை அந்தக் குள்ளன் அனுப்பிய பரிசல் என்று தான் நான் நினைக்கிறேன். அவன் நாம் தப்பி வந்திருப்பதை அறிந்துகொண்டிருக்க வேண்டும்." என்று ஆழ்ந்த யோசனையோடு தங்கமணி மொழிந்தான்.
"அப்படியானால் இப்பொழுது நாம் என்ன செய்யலாம் ?" என்று சுந்தரம் பதட்டத்தோடு கேட்டான்.
"அண்ணா, அந்தக் குள்ளன் கையிலே மறுபடியும் நாம் சிக்கக் கூடாது. அதற்கென்ன செய்யலாம்?” என்று கண்ணகியும் கேட்டாள்.
"அந்தப் பரிசல்கள் ஆற்றோடே போகட்டும். நல்ல வேளையாக இந்தப் பரிசல் அவர்கள் கண்ணில் படவில்லை" என்று நிதானமாகப் பதில் சொன்னான் தங்கமணி.
"ஒருவேளை நம்மைக் காப்பாற்றுவதற்கு மாமா அனுப்பிய பரிசலாக இருந்துவிட்டால்...........?"
"அப்படி நினைத்து நாம் ஏமாந்துவிடக்கூடாது. நமக்கு இப்பொழுது துணை எதிர்பார்ப்பதைவிட, ஆபத்தை வலியத் தேடிக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. நமக்குத் துணையாக வந்த பரிசல்களாக இருந்தாலும் விடிந்த பிறகு அவற்றைப் பற்றி யோசிப்போம். முதலில் ஜின்கா வந்து சேரட்டும். அதுவரையில் நாம் புதிய தொல்லையில் மாட்டிக்கொள்ளக் கூடாது.”
இவ்விதம் தங்கமணி தீர்மானமாகக் கூறிவிட்டான். அதனால் போலீஸ்காரர்களின் உதவியை அவர்கள் பெற முடியாமல் போய்விட்டது. தங்கமணியின் எண்ணமெல்லாம் இப்பொழுது ஜின்காவைப் பற்றியே இருந்தது. அது திரும்பி வருவதை அவன் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
சத்திரத்தை விட்டுப் புறப்பட்ட ஜின்கா வெகு வேசமாக வந்துகொண்டிருந்தது. முதலில் வஞ்சியாற்றின் கரையோரமாகவே தரையில் தாவித்தாவிப் பாய்ந்து ஓடிற்று. கரையோரத்திலேயே மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி வந்ததும் கரையிலிருந்து ஆற்றில் குதித்து நீந்தலாயிற்று. இவ்வாறாக அது நிலத்திலும் நீரிலும் மாறிமாறிச் சென்றது. எப்படியாவது தங்கமணியிடம் விரைந்து செல்ல வேண்டுமென்று அதற்கு ஒரே ஆவல். ஆனால், நீண்ட நேரம் அது வேகமாக வந்தும் பரிசல் அதன் கண்ணுக்குத் தென்படவே இல்லை.