கொல்லிமலைக் குள்ளன்/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9

“ம்... துடுப்பை வேகமாகப் போடுடா! எப்படியாவது அந்தப் பசங்க செல்லும் பரிசலைப் பிடித்துவிட வேண்டும்" என்றான் ஒருவன்.

"இந்தத் தாழிவயிறனால் நமக்கு இந்தத் தொல்லை ஏற்பட்டிருக்கிறது. தாழிவயிறா, நீயும் துடுப்புப் போடடா!" என்றான் மற்றவன்.

"போடா ரங்கப்பா! எல்லாம் அந்தக் குரங்கு பண்ணின வேலை" என்றான் தாழிவயிறன்.

"குரங்கு என்ன பண்ணிச்சாம்?" என்று உறுமினான் ரங்கப்பன்.

"அந்தப் பசங்க ஒரு குரங்கை வைச்சிருந்தானுங்க. அது தேங்காயைப் பறிச்சுப் பறிச்சுப் போட்டுக்கிட்டேயிருந்தது. நான் உடைச்சு உடைச்சுத் தின்னுக்கிட்டேயிருந்தேன். அப்படியே தூக்கம் வந்திட்டுது.”

“சரி சரி. துடுப்பை வேகமாகப் போடு. எப்படியும் அவங்களைக் கண்டுபிடிச்சு எசமாங்கிட்டே நல்ல பேரு வாங்கணும், இல்லாவிட்டால் அவர் கோபத்தைத் தாங்க முடியாது” என்றான் ரங்கப்பன்.

"அதோ ஒரு பரிசல் தெரியுது. அதன் பக்கமா தள்ளுங்கடா வேகமா" என்றான் மற்றொருவனான சொக்கன். மூன்று பேரும் பரிசலை வேகமாகச் செலுத்தினர். முன்னால் சென்ற பரிசலை விரைந்து நெருங்கிப் பிடித்தனர்.

"அட பசங்களா ! ஏமாத்திட்டுப் போகவா பாத்தீங்க?" என்று கூறிக்கொண்டே தாழிவயிறன் முன்னால் சென்ற பரிசலை எட்டிப் பிடித்தான். அதிலிருந்த மூன்று போலீஸ் வீரர்கள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

"யாரடா நீங்கள்? பிடியுங்கள் இவர்களை!” என்று அதட்டினான் ஒரு போலீஸ் வீரன், உடனே போலீஸ் வீரர்கள் தமது திறமையைக் காட்டலாயினர்.

"சாமி, நாங்க மீன் பிடிக்க வந்தவங்க, எங்களை விட்டு விடுங்க, சாமி" என்று கெஞ்சினான் தாழிவயிறன்.

"மீன் பிடிக்கவா வந்தீர்கள்? வலையெல்லாம் எங்கே? தூண்டிலைக்கூடக் காணோம்!"

தாழிவயிறனுக்குச் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. அவன் ஏதோ குளறிப் பேசலானான். "பசங்களா என்று பினாத்தினாயே, அந்தப் பசங்களைத் தேடியா வந்தீர்கள் ? சொல் உண்மையை” என்று அதட்டினான் ஒரு போலீஸ் வீரன்.

"இல்லை சாமி, அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க” என்று தாழிவயிறன் இழுத்து இழுத்துப் பேசலானான். ரங்கப்பனும்
கொல்லிமலைக் குள்ளன்.pdf

 சொக்கப்பனும் திகைத்துப் போய் மௌனமாக இருந்தார்கள். அவர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை.

"டேய் 712, அவன் தொப்பை வயித்திலே ரெண்டு கும்கா குத்து விடு. அப்பத்தான் உண்மை வெளிவரும்." இப்படி ஒரு போலீஸ்காரன் சொன்னதுதான் தாமதம், "கும்கும்" என்று தாழிவயிறனுடைய வயிற்றின் மேலே குத்து விழலாயிற்று.

“ஐயோ சாமி, எல்லாம் சொல்லிவிடுகிறேன். குத்தாதீங்க. தின்ன தேங்காயெல்லாம் வெளியே வந்திடும் போல இருக்குது” என்று கெஞ்சினான் தாழிவயிறன்.

"ம், ம், சொல்லு, சட்டென்று சொல்லு" என்று இன்னும் இரண்டு குத்துவிட்டான் போலீஸ் வீரன். தாழிவயிறன் உண்மையைச் சொல்லிவிட்டான். தங்கமணி முதலியவர்களைத் தேடிப்பிடிக்க அவர்களை அனுப்பியிருக்கிறார்கள் என்ற உண்மை போலீஸ் வீரர்களுக்குத் தெரிந்துவிட்டது.

"யார் உங்களை இப்படித் தேடிப்பிடிக்கச் சொன்னது? அந்தக் கொல்லிமலைக் குள்ளனா?” என்று பலத்த குரலில் கேட்டான் ஒரு போலீஸ்காரன்.

"கொல்லிமலைக் குள்ளனா ? அவனை எங்களுக்கு தெரியவே தெரியாது. எங்கள் எசமான் தான் அனுப்பினாரு" என்றான் தாழிவயிறன். “யார் உங்க எசமான் ?"

"எங்க எசமான் எசமான் தான். அவரைத் தவிரக் குள்ளனை எங்களுக்குத் தெரியவே தெரியாது" என்றான் தாழிவயிறன், மேலும் நாலு குத்து அவன் வயிற்றில் விழுந்தது. ஆனால், அதற்கு மேலே அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த எசமான் பெயர் இந்த ஆள்களுக்குத் தெரியாது என்பதைப் போலீஸ் வீரர்கள் புரிந்துகொண்டார்கள்.

“சரி, உங்களை எங்கே வரச் சொன்னான் அவன் ? அதைச் சொல்” என்று அதட்டினான் போலீஸ் வீரன்.

"அந்தப் பசங்களையும் பிடித்துக்கொண்டு கொல்லி மலைக்கு அந்தப் பக்கம் தச்சுப்பட்டறைக்கு வரச் சொன்னாங்க” என்று தாழி வயிறன் உண்மையைச் சொன்னான்.

தங்க மணி முதலியோர் எறியுள்ள படகைத் தேடிக் கொண்டே ஆற்றில் செல்லுவதென்றும், தாழிவயிறன் கூறிய தச்சுப்பட்டறைக்குச் சென்று, அங்கே பதுங்கியிருந்து, தாழி வயிறனின் எசமானைக் கைது செய்வதென்றும் போலீஸ் வீரர்கள் தங்களுக்குள்ளேயே முடிவு செய்துகொண்டார்கள். குழந்தைகளைக் காப்பாற்றுவதோடு திருடனையும் பிடித்து விடலாம் என்ற உற்சாகத்தோடு போலீஸ் வீரர்கள் இருந் தார்கள்.

இரண்டு பரிசல்களும் ஆற்றில் வேகமாகச் சென்றன. தாழிவயிறனும் மற்றவர்களும் துடுப்பைச் சுறுசுறுப்போடு போட்டார்கள். இல்லாவிட்டால் உதை கிடைக்கும் என்று அவர்களுக்குப் பயம். அதனால் போலீஸ்காரர்கள் விருப்பப்படியே அவர்கள் நடந்துகொண்டார்கள். அவர்கள் தப்பிப் போய்விடாதவாறு போலீஸ்காரர்கள் எச்சரிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆற்று வெள்ளத்தோடு அந்த வெள்ளத்தின் வேகத்தை மீறிக்கொண்டு இரண்டு பரிசல்களும் சென்றன.

தாழிவயிறனையும் அவனுடன் வந்த இருவரையும் போலீஸ்காரர்கள் மாறிமாறிப் பல கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தனர். அவர்களுடைய எசமான் மரப் பொம்மைகள் செய்து அவற்றிற்கு வர்ண அலங்காரங்கள் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றவர் என்றும், திருட்டு வேலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லையென்றும் அவர்கள் கூறினார்கள். அவர்கள் பொய் பேசவில்லை யென்பதும் புலனாயிற்று. அதனால் போலீஸ்காரர்களுக்குக் கொல்லிமலைக் குள்ளன் திருடனே அல்லவென்று தோன்றிற்று.