கொல்லிமலைக் குள்ளன்/12

விக்கிமூலம் இலிருந்து

12

"ஆளுக்கொரு தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள்; வழியில் பசித்தால் சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டே தங்கமணி தன் கையில் தேங்காயை எடுக்கப் போனான். முன்னாலேயே அவன் நீண்ட பரிசல் கயிற்றைச் சுருட்டித் தன் தோளில் மாட்டிக்கொண்டிருந்தான்.

"நீ மட்டும் ரெண்டு தேங்காயை எடுத்துக்கொள்; உனக்கொன்று, உன் குரங்குக்கொன்று” என்றான் சுந்தரம்.

“ஜின்கா இதையும் கன்னத்தில் அடக்கிக்கொள்ளுமா?" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் கண்ணகி.

"நல்ல தமாஷாகப் பேசுகிறயே! பயமெல்லாம் நீங்கிப் போய்விட்டதா?" என்று சுந்தரம் கேட்டுக்கொண்டே தான் ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு, கண்ணகியிடம் ஒன்றைக் கொடுத்தான்.

மூவரும் காட்டிற்குள் புகுந்து சென்றார்கள். ஜின்கா தங்கமணியின் பக்கத்திலே நடந்து வந்தது.

“வாடா ஜின்கா, இரவெல்லாம் ஓடோடி வந்தது உனக்குக் களைப்பாய் இருக்கும்” என்று சொல்லிவிட்டுத் தங்கமணி இடத்தோளைத் தட்டினான். ஜின்கா ஒரே பாய்ச்சலில் அவன் தோள் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டது.

மரங்களும் செடிகளும் புதர்களுமாக அந்தக் காட்டில் அடர்ந்திருந்தன. பலவகையான கொடிகள் மரங்களில் பற்றிப் படர்ந்து தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றிற்கிடையே வழி உண்டாக்கிக்கொண்டு போவதே சிரமமாக இருந்தது. ஆனால், அவர்கள் விடாமுயற்சியோடு காட்டிற்குள் புகுந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

“எங்காவது ஒரு ஒற்றையடிப்பாதை தென்பட்டால் பிறகு அதைப் பின்பற்றியே காட்டைக் கடந்து செல்ல முயலலாம். அப்படிப் பாதையைத்தான் நான் தேடிப் போகிறேன்” என்று தனது நோக்கத்தை மற்றவர்களுக்கு விளங்குமாறு செய்து கொண்டே தங்கமணி முன்னால் சென்றான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி காட்டிற்குள் பாதையொன்றும் தென்படவில்லை. ஓரிடத்திலே மரங்களுக்கிடையே ஒரு சிறிய புல்வெளி இருந்தது. சுற்றிலும் மரங்கள் ஓங்கி நின்றன. அவற்றின் மத்தியில் இருந்த அந்தப் பசும்புல் தரையிலே நின்று, காலை நேரத்தில் ஒரு மயில் அழகாக ஆடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் மூன்று பெண்மயில்கள் இரை தேடி உலாவிக் கொண்டிருந்தன. மூன்று பேரும் அந்த ஆண்மயிலின் ஆட்டத்தைக் கண்டு, அதில் மனத்தைச் செலுத்தி, அப்படியே நின்றுவிட்டார்கள். ஜின்காவும் அசையாமல் தோளின்மேல் அமர்ந்திருந்தது.

“அண்ணா, எத்தனை அழகாக அந்த மயில் ஆடுகிறது. இந்தக் காடு எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கண்ணகி மெதுவாகத் தங்கமணியிடம் கூறினாள்.

“பேசாதே, மயில் ஓடிப்போய்விடும்” என்று தங்கமணி மெதுவாக எச்சரிக்கை செய்தான். இந்தச் சமயத்தில் சுந்தரம் இரண்டு மரக்கிளைகளுக்கு இடையே வளைந்து தொங்கிக்கொண்டிருந்த ஏதோ ஒன்றைப் பார்க்கும்படி சுட்டிக் காட்டினான்.

அது ஒரு பெரிய மலைப்பாம்பு. ஒரு மரத்தின் கிளையிலே அதன் தலைப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்தது. மற்றொரு மரத்தின் கிளையிலே அதன் வால் பகுதி சுற்றிக் கொண்டிருந்தது. அதன் நடுப்பாகம் மெதுவாக வளைந்து கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருந்தது. பார்த்தவுடன் அதை மலைப்பாம்பென்று சொல்லவே முடியாது. ஏதோ ஒரு பெரிய கொடி ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிச் சென்று படர்ந்திருப்பது போலத்தான் தோன்றிற்று. அதன் அடியிலே தரையின் மீது ஒரு முயல் புல்லை மேய்ந்துகொண்டு மெதுவாக வந்துகொண்டிருந்தது. அது மலைப்பாம்பு தொங்குமிடத்திற்கு வந்ததுதான் தாமதம், அந்தப் பாம்பு மின்னல் வேகத்திலே முயலின்மீது விழுந்து, அதைத் தன் நீண்ட உடம்பால் சுற்றிக்கொண்டது. அடுத்த கணத்திலே அந்தப் பாம்பின் தசைநார்களால் இறுக்கப்பட்டு, முயலின் எலும்புகள் ‘படபட’ என்று ஒடிந்தன. முயல் வீறிட்டுக் கத்தி மாண்டு போயிற்று. பிறகு, மலைப்பாம்பு தனது பெரிய வாயைத் திறந்து, அந்த முயலை விழுங்கத் தொடங்கிற்று. இந்தக் கொடிய காட்சியைக் கண்டு கண்ணகி பயத்தால் வீறிட்டுக் கத்திவிட்டாள். “அண்ணா, இந்தக் காடு வேண்டவே வேண்டாம். உடனே பரிசலுக்காவது போய் விடலாம்” என்று அவள் அலறினாள்.

“கண்ணகி, பயப்படாதே. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தக் காட்டைவிட்டு நாம் வெளியேறிவிடலாம்” என்று தங்கமணி தைரியம் சொல்லிவிட்டு, மலைப்பாம்பு இருக்குமிடத்தைவிட்டு விலகி முன்னால் வேகமாக நடந்தான். சுந்தரமும் கண்ணகியும் அவனுக்குப் பக்கத்திலேயே சென்றார்கள்.

தங்கமணி எதிர்பார்த்தது போல ஒற்றையடிப் பாதையொன்றும் காணப்படவில்லை. ஆனால் ஓரிடத்திலே புதர்களையும் குற்றுச் செடிகளையும் இரண்டு பக்கங்களிலும் மடக்கிவிட்டுக்கொண்டு யாரோ புதிதாக வழி செய்துகொண்டு போயிருப்பதாகத் தெரிந்தது. அந்த வழியைப் பின்பற்றிக் கொண்டு மூவரும் நடந்தார்கள். இவ்வாறு சுமார் அரை மணி நேரம் சென்றிருப்பார்கள். அப்பொழுது யாரோ ஒருவர் ‘அப்பா! அப்பா! ஐயோ ! ஐயோ !’ என்று வேதனையோடு அனத்துவது போலக் கேட்டது. போகப்போக இந்த வேதனைக் குரல் நன்றாகக் கேட்கலாயிற்று. அந்தக் குரல் வரும் திசையை நோக்கித் தங்கமணி வேகமாக நடந்தான். மற்றவர்களும் சந்தேகத்தோடு அவனைத் தொடர்ந்தார்கள்.

ஓர் இடத்திலே மரக்கட்டைகளைக்கொண்டே ஒரு சிறிய வீடு போலக் கட்டப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு எந்தப் பக்கத்திலும் கதவு இருக்கவில்லை. அதன் மேல் பாகத்திலும் கூரை போலப் பெரிய பெரிய மரத்துண்டங்களைப் போட்டுக் கட்டியிருந்தார்கள்; அதற்குள்ளிருந்துதான் யாரோ ஒருவர் அனத்தும் குரல் வெளியே வந்தது. தங்கமணியும் சுந்தரமும் அதைச் சுற்றி ஓடோடிப் பார்த்தார்கள். உள்ளே நுழைய ஒருவழியும் தென்படவில்லை.

உடனே தங்கமணி ஜின்காவை மேலே ஏறும்படி சமிக்கை செய்தான். அதன் கையில் தான் கொண்டுவந்த கயிற்றின் ஒரு நுனியையும் கொடுத்தான். அது பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்மீது ஏறி, ஒரு கிளைவழியாக வந்து, அந்த மரவீட்டின் கூரைமேல் குதித்தது. குதிப்பதற்கு முன்னால் மரக்கிளையிலே கயிற்றின் நுனியை நாலைந்து தடவை நன்றாகச் சுற்றிவிட்டது. “டேய் சுந்தரம், உன் பேனாக் கத்தியைக் கொடுடா” என்று கூறி, சுந்தரத்திடமிருந்து தங்கமணி அதை வாங்கிக்கொண்டு, கயிற்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே வீட்டின் சுவர்களான மரக்கட்டைகளின் மேல் கால்களை மாற்றி மாற்றி வைத்து மேலே ஏறினான். கூரையை அடைந்தவுடன் பேனாக்கத்தியால் வீட்டுக் கூரைக் கட்டைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தான். இரண்டு மூன்று கட்டைகளைக் மெதுவாகக் கீழே தள்ளி விட்டுவிட்டு உள்ளே பார்த்தான். அங்கே சுமார் முப்பது வயதுள்ள ஒரு வாலிபன் கையும் காலும் கட்டுண்டு கிடந்தான், அவன் தான் பசிக்கொடுமையால் அனத்திக் கொண்டிருந்தவன். அவனுடைய முகத்தைப் பார்த்ததும் தங்கமணிக்கு அவனுடைய நிலைமை நன்றாகத் தெரிந்துவிட்டது.

“சுந்தரம், அந்தத் தேங்காய்களை என்கைக்குக் கிடைக்கும் படி கூரை மேல் வீசு” என்று சுந்தரத்தை நோக்கிக் கூவினான்.

“ஏண்டா, பசிக்குதா?” என்று கேட்டுக்கொண்டே சுந்தரம் மூன்று தேங்காய்களையும் மேலே வீசினான்.

கூரையிலிருந்து அறுத்து எடுத்த ஒரு சிறு கயிற்றுத் துண்டைக்கொண்டு அந்தத் தேங்காய்களின் குடுமிகளில் கத்தியால் ஓட்டை செய்து சேர்த்துக் கட்டினான். பிறகு, அந்தத் தேங்காய்களைத் தான் தொற்றி ஏறிய கயிற்றின் மற்றொரு நுனியில் கட்டி, வீட்டிற்குள் விட்டான். தானும் கயிற்றைப் பிடித்துக்கொண்டே உள்ளே இறங்கினான். அந்த வாலிபனைக் கட்டியிருந்த கயிற்றையெல்லாம் கத்தியால் அறுத்துவிட்டான். அந்த வாலிபன் பசி மயக்கத்தால் சோர்ந்து அப்படியே தரையில் படுத்திருந்தான். தங்கமணி ஒரு தேங்காயை உடைத்துத் தேங்காய்த் தண்ணீரை அந்த வாலிபன் வாயில் ஊற்றினான். பிறகு, தேங்காயை அவன் உண்ணுமாறு கத்தியால் கீறி எடுத்துக் கொடுத்தான். அந்த வாலிபன் இவ்வாறு மூன்று தேங்காய்களையும் தின்றான்.

அதன் பிறகுதான் அவனுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. “நீ யாரப்பா? எப்படி இங்கு வந்தாய்? நீதான் என் உயிரைக் காப்பாற்றினாய்” என்று அவன் ஆச்சரியத்தோடும் நன்றியோடும் கூறினான்.

“முதலில் நாம் வெளியே போகலாம். பிறகு எல்லாம் பேசுவோம். வெளியில் கண்ணகியும் சுந்தரமும் காத்திருக்கிறார்கள்” என்று தங்கமணி அவசரப்பட்டான்.

கயிற்றின் உதவியைக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/12&oldid=1100383" இலிருந்து மீள்விக்கப்பட்டது