உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்லிமலைக் குள்ளன்/13

விக்கிமூலம் இலிருந்து

13

ந்த வாலிபன் பெயர் மருதாசலம். தங்கமணியும் மற்றவர்களும் அந்தக் காட்டிற்குள் வந்தது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. “எப்படி நீங்கள் தனியாக இங்கு வந்தீர்கள்? இது யாரும் நுழையாத காடாயிற்றே!” என்று அவன் மீண்டும் கேட்டான்.

“எல்லாம் அந்தக் கொல்லிமலைக் குள்ளனுடைய சூழ்ச்சி. ஆனால், அவனிடமிருந்து தப்பி வந்துவிட்டோம்” என்று தங்கமணி பதிலளித்தான்.

“கொல்லிமலைக் குள்ளனா! அது யார் அவன்? நான் கேள்விப்பட்டதே இல்லையே!” என்று சந்தேகத்தோடு மருதாசலம் கேட்டான்.

“அவன் தான் சிலைகளைத் திருடும் நெட்டைக்குள்ளன்— பெயர் குள்ளன்; ஆனால். ஆள் நெட்டை” என்று சுந்தரம் சொன்னான்.

“சிலை திருடுகிறானா இவன்? ஓகோ! எனக்கு இப்போது கொஞ்சம் விளங்குகிறது. உடனே நாம் என் தகப்பன் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும்” என்று மருதாசலம் கூறிவிட்டு முன்னால் நடந்தான்.

“எங்கள் அப்பாவையும் நாங்கள் கண்டுபிடிக்க வேண்டுமே!” என்று தன் கருத்தை வெளியிட்டான் தங்கமணி.

“உங்கள் அப்பா யார்?”

“அவர் தான் பேராசிரியர் வடிவேல். இங்கே வந்து குள்ளன் கையிலே அகப்பட்டுக்கொண்டுவிட்டார்.”

“அவரைக் கண்டுபிடிப்பதற்கும் என் தகப்பனாரின் உதவி வேண்டியிருக்கும். முதலில் அவரைப் பார்த்து நடந்ததையெல்லாம் சொல்லுவோம். பரிசல் இருந்தால் சீக்கிரம் போக முடியும்” என்று கூறிவிட்டு மருதாசலம் வேகமாக நடந்தான்.

“நாங்கள் பரிசலில் தான் வந்தோம்” என்று சுந்தரம் உற்சாகமாகச் சொன்னான்.

“பரிசல்? வேண்டவே வேண்டாம். யாருக்கும் பரிசல்விடத் தெரியாது” என்று அச்சத்தோடு கண்ணகி சொன்னாள்.

“எனக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். அம்மா, உனக்குப் பயமே வேண்டியதில்லை. பரிசல் இருக்கும் இடத்திற்குப் போவோம்; வாருங்கள்” என்றான் மருதாசலம்.

தங்கமணி வேகமாக முன்னால் சென்று வழிகாட்டினான். ஜின்கா அவன் தோள்மேலே ‘ஜங்’ என்று தாவி ஏறி உட்கார்ந்து கொண்டது.

“இதென்னடா, குரங்கு!” என்று கூறிக்கொண்டே மருதாசலம் அதை விரட்டியடிக்கப் புறப்பட்டான்.

“வேண்டாம் வேண்டாம்; இது நம் ஜின்காதான். அவர்கள் இரண்டு பேரும் அண்ணன் தம்பிகள்” என்று சிரித்தான் சுந்தரம்.

இவ்வாறு பேசிக்கொண்டே பரிசல் இருக்குமிடத்தை அடைந்தார்கள்.

“அடடா! இந்தத் தேங்காய்தான் உங்களுக்குச் சாப்பாடா? பரிசலில் உட்கார்ந்துகொண்டு நீங்கள் தேங்காயை உடைத்துச் சாப்பிடுங்கள். நான் பரிசல் தள்ளுகிறேன்” என்று மருதாசலம் பரிசலை ஆற்றில் மிதக்க விட்டுக்கொண்டே சொன்னான்.

அனைவரும் பரிசலில் ஏறிக்கொண்டனர். மருதாசலம் துடுப்புப் போட்டான். வஞ்சியாறு அந்த இடத்திலிருந்து இரண்டு உயரமான மலைகளின் இடையிலே ஏதோ ஒரு குகைக்குள் நுழைவது போல நுழைந்து சென்றது. ஆறு வளைந்து சென்றதால் எதிரிலேயும் ஒரு மலையின் பகுதியே உயர்ந்து காட்சியளித்தது. சுற்றிலும் உயரமான மரங்கள் மலைச்சாரல்களிலே ஓங்கி வளர்த்து நின்றன. அவற்றிற்கிடையிலே அந்த நேரத்திலும் இருட்டாகத்தான் தோன்றியது.

மலைகளுக்கு இடையிலே ஆறு வளைந்து செல்வது பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தது. என்றாலும், மருதாசலத்தைத் தவிர மற்றவர் மனத்திலே பயங்கர உணர்ச்சிதான் அதிகமாக இருந்தது. அவர்களால் இயற்கை அழகை அந்த நிலையில் கண்டு களிக்க முடியவில்லை.

இப்படி சுமார் அரை மைல் தூரம் சென்றிருப்பார்கள். மருதாசலம் பரிசலை வலக்கைப் பக்கத்திலிருந்த மலையருகாகவே தள்ளி வந்தான். அங்கே ஓரிடத்தில் மலை செங்குத்தாக ஓங்கி நின்றது. அதன்கீழே ஆற்றின் கரையில் ஒரு பரிசலை மேட்டில் தள்ளி நிறுத்தக்கூடிய அளவுக்குத் தட்டையான பாறை ஒன்று இருந்தது. அதன் அருகிலே பரிசலை நிறுத்தி மருதாசலம் லாகவமாகப் பாறையின்மேல் குதித்தான். பிறகு, பரிசலைப் பாறையோடு சேர்ந்தாற்போல் நிற்குமாறு பிடித்துக்கொண்டு, “பாறை மேல் இறங்குங்கள்” என்று கூறினான்.

“இங்கே இறங்கி என்ன செய்வது? போவதற்கு வழியே இல்லையே!” என்று சுந்தரம் கேட்டான்.

“இதோ வழி கிடைக்கிறது பாருங்கள்” என்று உற்சாகமாகக் கூறிக்கொண்டே மருதாசலம் தன் வாயில் இரண்டு விரல்களை மடக்கி வைத்துக்கொண்டு வேகமாகச் சீழ்க்கையடித்தான். கண்ணகி கண்களை உருட்டி விழித்துக்கொண்டு நின்றாள். சுந்தரத்திற்கும் தங்கமணிக்கும் அது துணிகரச் செயலுக்கு அறிகுறியாக உற்சாகமளித்தது. ஜின்கா மருதாசலத்தைச் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டு பாறையின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தது.

மருதாசலம் மூன்று சீழ்க்கையடித்தான். ஆனால், பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. “ஏன் அப்பா இன்னும் பதில் கொடுக்கவில்லை? அவரையும் அந்தக் குள்ளன் ஏதாவது...” என்று அவன் சொல்லி முடிக்கு முன்பே, “எதற்காகச் சீழ்க்கையடிக்கிறாய்? யாராவது வர வேண்டுமா?” என்று தங்கமணி கேட்டான்.

“அதோ, மேலே பாருங்கள். நூறடிக்கும் மேலே ஒரு நூலேணி சுருட்டி வைத்திருக்கிறதல்லவா? அதைக் கீழே விடச் சொல்லித்தான் அப்பாவுக்குச் சீழ்க்கையடித்தேன்” என்று மருதாசலம் தெரிவித்தான்.

“அதற்கு வேறு யாரும் வேண்டாம். டேய் ஜின்கா இங்கே வா” என்றான் தங்கமணி.

தங்கமணியின் சமிக்கைகளைப் புரிந்துகொண்டு ஜின்கா மேலே நிமிர்ந்து அண்ணாந்து பார்த்தது. அந்த இடத்தில் மலை செங்குத்தாகவும், வெறும் பாறையாகவும் இருந்ததால் நேராக மேலே ஏறுவதற்கு முடியாது. அதனால் ஜின்கா ஆற்றில் குதித்துக் கரையோரமாகவே ஆற்றின் நீரோட்டத்தோடு கொஞ்ச தூரம் நீந்திச் சென்றது. எல்லாரும் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஜின்கா மரங்கள் வளர்ந்துள்ள ஒரு பகுதியை அடைந்ததும் கரையை அடைந்து, ஒரு உயர்ந்த மரத்தின் மேலே தாவி ஏறிற்று. அந்த மரத்தின் உச்சியிலிருந்து மலையின் சாரலில் உள்ள மற்றொரு மரத்தின் கிளைக்குத் தாவிற்று. அங்கிருந்து மலையில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல்லின்மீது குதித்தது; பிறகு,

மலையில் சரிவின் வழியாகவே போகத் தொடங்கியது. இப்படியாக மரத்தில் ஏறியும், குன்றுகளில் தாவியும், அது நூலேணி சுருட்டி வைத்திருந்த இடத்தை அடைந்துவிட்டது. நூலேணியை அங்கு முளையடித்துக் கட்டி வைத்திருந்தார்கள். அதன் கீழ்ப்பாகம் சுருளாக இருந்தது. அதை அவிழ்த்து ஜின்கா கீழே விட்டது. மருதாசலத்திற்கு அதன் செய்கை ஒரே ஆச்சரியமாக இருந்தது.

“எல்லோரும் ஏணியின் வழியாக மேலே ஏறுங்கள். நான் கடைசியில் வருகிறேன்” என்று அவன் மகிழ்ச்சியோடு சொன்னான்.

“அண்ணா, நானெப்படி ஏறுவேன்?” என்று கண்ணகி கவலையோடு கேட்டாள்.

“நான் முதுகிலே சுமந்துகொண்டு போகிறேன். கவலைப்பட வேண்டாம்” என்று மருதாசலம் தெரிவித்தான். கண்ணகியை எப்படி மேலே கொண்டு சேர்ப்பது என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்த தங்கமணி, மகிழ்ச்சியோடு முதலில் நூலேணியில் ஏறிச் சென்றான். பிறகு, அவனைத் தொடர்ந்து சுந்தரம் ஏறினான். கடைசியாக, மருதாசலம் கண்ணகியைத் தூக்கிக்கொண்டு மேலே போய்ச் சேர்ந்தான்.

அவர்கள் ஏறிவந்த செங்குத்தான பகுதியிலே கொஞ்சம் இடைவெளி விட்டு வேறொரு செங்குத்தான பகுதி இருந்தது. அது மலையின் உயரத்தை இன்னும் அதிகப்படுத்திக் காண்பித்தது. அதன் ஒரு பகுதியிலே மரக் கூட்டங்களினிடையே இயற்கையாக அமைந்த ஒரு குகை இருந்தது. அதை நோக்கி மருதாசலம் வேகமாகச் சென்றான். குகையின் முன்பாகத்திலே செங்கல்லால் சிறிதளவு சுவர்கள் எழுப்பிக் குகைக்குக் கதவு அமைத்திருந்தார்கள். அந்தக் கதவு பூட்டப்பட்டிருந்தது.

‘அப்பா எங்கே போய்விட்டார்?’ என்று சந்தேகத்தோடு கேட்டுக்கொண்டே மரங்களையெல்லாம் கடந்து. வெறும் பாறையாக இருந்த இடத்திற்கு வந்து நின்றுகொண்டு, அவன் சுற்றிலும் பார்த்தான். அவனைப் பின்தொடர்ந்து வந்த தங்கமணி, “உங்களுடைய தகப்பனார் இங்கேதான் வசிக்கிறாரா?” என்று மருதாசலத்தைக் கேட்டான்.

“அந்தக் குள்ளன் தான் அவரை ஏமாற்றி இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறான். அவனுடைய திருட்டுத் தொழிலைத் தெரிந்துகொள்ளாமல் இவர் அவனுக்கு உதவி செய்து வருகிறார்” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போது அவனுடைய தந்தை தில்லைநாயகம் ஒரு பெரிய மூட்டையைத் தலையில் சுமந்துகொண்டு அங்கே வந்து சேர்ந்தார்.

வந்ததும் அவர், “மருதாசலம், பட்டணத்திலிருந்து வந்தாச்சா! எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தாய்?” என்று மூட்டையைக் கீழே இறக்கி வைத்துக்கொண்டே ஆச்சரியத்தோடு கேட்டார்.

“பட்டணத்துக்கா அந்தக் குள்ளன் கூட்டிக்கொண்டு போனான்? அந்தக் குள்ளன் என்னைக் கொல்லத்தான் கூட்டிக் கொண்டு போனான்” என்று ஆத்திரத்தோடு பேசினான் மருதாசலம்,

தில்லைநாயகத்திற்குத் தம் மகன் கூறுவது ஒன்றும் விளங்கவில்லை. “இவர்கள் எல்லாம் யார்? எப்படி இங்கே வந்தார்கள்?” என்று மேலும் வியப்போடு கேட்டார்.

“அப்பா, முதலில் குகைக்குப் போவோம், வாருங்கள், நாங்கள் எல்லாரும் பட்டினியாகக் கிடக்கிறோம். உடனே சாப்பாடு வேண்டும். சாப்பாடு தயாரித்துக்கொண்டே பேசுவோம்.”

எல்லாரும் குகையை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். தில்லைநாயகம் தம் மடிப்பையில் வைத்திருந்த சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தார். “நீங்கள் எங்கேயப்பா போயிருந்தீர்கள்? நான் சீழ்க்கையடித்தது காதில் விழவில்லையா?” என்று மருதாசலம் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

“அரிசி தீர்ந்துபோச்சு. வாங்கிவரக் கூடல் பட்டணம் போயிருந்தேன்” என்று தில்லை நாயகம் பதிலளித்தார்.

தந்தையும் மகனும் பேசிக்கொண்டே சமையல் வேலையில் ஈடுபட்டார்கள். அவர்களுடைய எஜமானன் ஒரு திருடன் என்பதையும், அவன்தான் கொல்லிமலைக் குள்ளன் என்பதையும் அவனுடைய ரகசியக் குகையையும் தான் தற்செயலாகக் கண்டு கொண்டதால் தன்னைக் கொல்ல அவன் சூழ்ச்சி செய்து அழைத்துப் போனதைப்பற்றியும் மருதாசலம் விவரமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். “அவன் என்னைப் பட்டணத்துக்குக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொன்னதெல்லாம் உங்களை ஏமாற்றத்தான். இந்தப் பையன் வந்திருக்காவிட்டால் நான் அந்த மர வீட்டிற்குள்ளேயே கிடந்து செத்திருப்பேன்” என்றான் மருதாசலம்.

இதையெல்லாம் கேட்டுத் தில்லைநாயகத்திற்குக் கோபம் கோபமாக வந்தது. “இந்தத் திருட்டுப்பயலுக்கா நான் இத்தனை நாளாய் உழைத்தேன்; எதற்காக அவன் இந்தப் பொம்மையெல்லாம் செய்கிறான்? திருடனுக்கு இவை எதற்காக வேண்டும்?” என்றார் தில்லைநாயகம் ஆத்திரத்தோடு.

“இந்த மரப்பொம்மைகள் தாம் அவன் திருட்டு வேலைக்கு உதவி” என்று மருதாசலம் கூறினான். அவன் கூறியது ஒருவருக்கும் விளங்கவில்லை. உடனே அவன் தன் தந்தைக்கும், தங்கமணி முதலியவர்களுக்கும் விளக்கமாகக் கூறத் தொடங்கினான்.

குகைக்குள்ளே 3, 4 மரப்பொம்மைகள் கிடந்தன. ஒவ்வொன்றும் சுமார் 4 அல்லது 5 அடி உயரம் இருக்கும். எல்லாம் பரத நாட்டியமாடும் பெண்களைப் போன்றவை. ஒவ்வொன்றையும் பெண் உருவத்தின் முன்பகுதி தனியாகவும், பின்பகுதி தனியாகவும் இருக்குமாறு நடுவிலே ரம்பத்தால் அறுத்திருந்தார்கள். அப்படி அறுத்த ஒரு பொம்மையின் அறுபட்ட உட்பகுதியிலே இருக்கும் மரக்கட்டையை உளியால் செதுக்கிக் குடைந்து எடுத்திருந்தார்கள்.

“அப்பா! நீங்கள் எதற்கு இப்படி உட்பகுதியைக் குடைந்து எடுக்கிறீர்கள் தெரியுமா?” என்று மருதாசலம் தன் தந்தையைக் கேட்டான்.

“உனக்கு அது தெரியாதா? பொம்மையின் உள் பகுதியை இப்படிக் குடைந்து எடுத்துவிட்டால் பொம்மையின் எடை குறைந்து போகும். அமெரிக்காவுக்கு அனுப்பும் போது கப்பல் கூலி அதிகமாக இருக்காது. தூக்கிச்செல்லவும் சுலபம்” என்று தில்லை நாயகம் தமக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னார்.

“அந்தக் குள்ளன் இப்படிச் சொல்லித்தான் உங்களை ஏமாற்றியிருக்கிறான். நீங்களும் அவன் பேச்சை நம்பி இந்த வேலையைச் செய்து வந்திருக்கிறீர்கள். இப்படிக் குடைந்தெடுப்பது எடையைக் குறைப்பதற்காக அல்ல. ஒவ்வொரு பொம்மையிலும் ஒரு சிலையை மறைத்து வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பத்தான் அவன் இந்தத் தந்திரம் செய்திருக்கிறான்” என்று மருதாசலம் குள்ளனின் ரகசியத்தை வெளியிட்டான்.

“அப்படியா?” என்று திகைப்போடு தில்லை நாயகம் கூவினார். குள்ளன் திருடனென்று தெரிந்திருந்தால் அவனுக்கு வேலை செய்யத் தில்லைநாயகம் இசைந்திருக்கவே மாட்டார். கொல்லிமலைக்கும் கூடல் பட்டணத்துக்கும் மத்தியிலே வஞ்சியாற்றின் கரையில் ஒரு காட்டுக்குள் இருந்த தச்சுப் பட்டறையில் பல தச்சர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பெரிய பெரிய மரங்களின் அடிப்பாகத்தைக் கொண்டு பொம்மைகள் செய்தார்கள். பிறகு, ஒவ்வொரு பொம்மையையும் நீளவாட்டில் சரிபாதியாக இருக்குமாறு ரம்பத்தால் அறுத்து, உள்ளேயிருக்கும் மரத்தைக் குடைந்து எடுத்துவிட்டு, இரண்டு பகுதிகளையும் ஒன்றாக வைத்து நன்றாகப் பொருந்துமாறு உள்ளே மறைவாக மறையாணிகளை வைத்துப் பூட்டுவார்கள். இப்படி வேலை செய்து முடிக்கப்பட்ட பொம்மைகளைக் கொல்லிமலைக் குள்ளன் மலை மேல் இருந்த தில்லைநாயகத்திற்கு அனுப்புவான். தில்லை நாயகம் அந்தப் பொம்மைகளுக்குப் பல வகையாக வர்ணங்கள் பூசி அழகுபடுத்துவார். வர்ணம் கொடுத்து உயிருள்ள பெண்கள் போலவே பொம்மைகளைச் செய்வதில் அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். அப்படி அவர் செய்து முடித்த பொம்மைக்குள்தான் கொல்லிமலைக் குள்ளன் யாருக்கும் தெரியாதபடி தானாகவே தனது ரகசியக் குகையில் திருடி வைத்திருக்கும் சிலையை வைத்து மறையாணிகளைத் திருகிப் பூட்டிவிடுவான். மீண்டும் பொம்மையின் அறுபட்ட பாகம் தெரியாதவாறு வர்ணத்தைப் பூசிவிடுவான்.

“இப்படிச் செய்துமுடித்த பொம்மைகளை அமெரிக்காவில் விற்பதற்குக் கப்பலில் எடுத்துச் செல்வான். கொல்லிமலைக் குள்ளன் இவ்வாறு பொம்மைக்குள் மறைத்து எடுத்து வந்த சிலையை இருபதாயிரம், முப்பதாயிரம் டாலர் என்று விலைக்கு விற்றுப் பொருள் திரட்டி வந்தான். இதுவரை யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மருதாசலம் கூறியவற்றிலிருந்து குள்ளனுடைய சூழ்ச்சி தங்கமணிக்கும், சுந்தரத்திற்கும் ஓரளவு விளங்கிற்று. அவர்கள் இரண்டு பேரும் மருதாசலத்தோடும் அவன் தந்தையோடும் பேசி, இந்த விவரங்களையெல்லாம் தெரிந்துகொண்டிருந்தார்கள்.

இப்படி இவர்கள் குகைக்குள்ளே பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கண்ணகி கொஞ்சநேரம் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவளுக்குச் சலிப்பேற்பட்டுவிட்டது. ஜின்காவுக்கும் குகைக்குள்ளேயே இருப்பது பிடிக்கவில்லை. அது மெதுவாக வெளியே நடக்கத் தொடங்கியது.

கண்ணகியும் அதைப் பின்பற்றி வெளியே வந்தாள். அவளும் ஜின்காவும் வெளியே சென்றதைத் தங்கமணியும், சுந்தரமும் கவனிக்கவில்லை . மருதாசலமும், அவன் தந்தையும் கூறியவற்றைக் கேட்பதிலேயே அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். உச்சி வேளை சுமார் 12 மணிக்கு உணவு தயாராகிவிட்டது. சாப்பிடப் போகும் போதுதான் கண்ணகியைப்பற்றிய நினைவு வந்தது. ‘கண்ணகி!’ என்று கூப்பிட்டான் தங்கமணி. சுந்தரம் வெளியே சென்று பார்த்தான்.

“எங்கேடா உன் குரங்கையும் காணோம்?” என்று சுந்தரம் கூறிக்கொண்டு ‘கண்ணகி!’ என்று உரத்துக் கூவினான். ஆனால், கண்ணகி வரவில்லை. ஜின்காவும் குரல் கேட்டு ஓடி வரவில்லை. பக்கத்திலே அங்குமிங்குமாக அனைவரும் ஓடிப் பார்த்தார்கள். “கண்ணகி! ஜின்கா!” என்று தங்கமணி பலத்த குரலெடுத்துக் கூவினான். ஆனால், கண்ணகியையும் காணோம்; ஜின்காவையும் காணோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/13&oldid=1101579" இலிருந்து மீள்விக்கப்பட்டது