கொல்லிமலைக் குள்ளன்/16

விக்கிமூலம் இலிருந்து

16

“கண்ணகி, நீ படுத்துத் தூங்கிய இடத்திற்குத்தான் எல்லாரும் போக வேண்டும். இங்கு மருதாசலத்தின் தந்தை மட்டும் இருக்கட்டும். வாருங்கள், அங்கே ஓடி மறைந்து கொள்ளுவோம்” என்று கூறிக்கொண்டே தங்கமணி முன்னால் ஓடினான். தில்லைநாயகத்தைத் தவிர, மற்றவர்கள் அவனைத் தொடர்ந்து ஓடிப் பாறையின் திருப்பத்தில் ஒரு கணத்தில் மறைந்துவிட்டார்கள்.

நூலேணி வழியாக ஏறிவருகின்றவர்களைத் தில்லைநாயகம் பழைய வழக்கப்படி வரவேற்றார். ஐந்து பேரும் வந்தவுடன், “எஜமான் குகைக்குள்ளே இருக்கிறார். எங்கோ போய்விட்டு இப்பத்தான் வந்தார். உங்களை அங்கே கூப்பிடுகிறார்” என்று தில்லைநாயகம் சொன்னார். ஐவரும் வேகமாகக் குகைக்குள் நுழைந்தனர். உடனே தில்லைநாயகம் குகைக்கதவை இழுத்து வெளியே நன்றாகப் பூட்டி விட்டார்.

பிறகு, அவன் வெளியில் சிறிது தூரம் ஓடிச்சென்று சீழ்க்கையடித்தான். அதைக் கேட்டதும் தங்கமணி முதலியவர்கள் திரும்பி ஓடி வந்தனர்.

“மருதாசலம், வா. அந்தப் பரிசலில் கட்டுண்டு கிடப்பவர் யாரென்று பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே தங்கமணி நூலேணியில் அவசரமாக இறங்கலானான். “இந்தாடா, இது கையிலிருக்கட்டும்” என்று சுந்தரம் ஓடிவந்து, பேனாக்கத்தியைக் கொடுத்தான். மருதாசலமும் கீழிறங்கினான்.

தங்கமணி தன்னைக் கூப்பிடுவானே என்று ஜின்கா எதிர்பார்த்து நின்றது. ஆனால், அந்தச் சமயத்தில் அவன் அதை

முற்றிலும் மறந்துவிட்டான். கீழே செல்ல வேண்டும் என்று அவனுக்கு ஒரே துடிப்பு.

பரிசலில் கட்டுண்டு கிடந்தவர் அவன் தந்தை பேராசிரியர் வடிவேலுதான். அவன் நினைத்தது சரியாகிவிட்டது. அவன் விரைவில் தந்தையின் கட்டை அவிழ்க்கலானான். “தங்கமணி, நீ எப்படி இங்கே வந்தாய்? இந்த ஆள் யார்?” என்று வடிவேலு வியப்போடும் மகிழ்ச்சியோடும் கேட்டார்.

“அப்பா அந்தக் குள்ளனையும் நாங்கள் பிடித்து விட்டோம். எல்லாம் ஒரு பெரிய கதை. வாருங்கள், மேலே போகலாம். கண்ணகியும் சுந்தரமும் அங்கே இருக்கிறார்கள்” என்று குதூகலத்தோடு தங்கமணி கூறிக்கொண்டே ஏணியிருக்குமிடத்தை நோக்கி ஓடினான்.

“இது யாரென்று சொல்லவில்லையே!” என்று கேட்டுக் கொண்டே வடிவேலு பின்னால் வந்தார்.

“என்னைத்தான் உங்கள் மகன் முதலில் காப்பாற்றினான், அந்தக் குள்ளன் என்னையும் கொல்லுவதற்கு முயற்சி செய்தான். ஆனால், நல்லவேளையாக தங்கமணி அங்கு வந்து சேர்ந்தான். என் பெயர் மருதாசலம்” என்றான் மருதாசலம்.

“குள்ளனுக்கு ஊழியம் செய்பவர் மருதாசலத்தின் தந்தை. அவர் பெயர் தில்லை நாயகம். மேலே இருக்கிறார்”

“எந்தக் குள்ளன்? நீங்கள் இரண்டு பேரும் யாரைச் சொல்லுகிறீர்கள்?” என்று வடிவேலு ஒன்றும் விளங்காமல் கேட்டார்.

“அவன்தான் அப்பா. உங்களைச் சூழ்ச்சி செய்து கட்டி வந்தவன். அவனே தான் கொல்லிமலைக் குள்ளன்!” என்று கண்களில் வெற்றி ஒளி வீசத் தங்கமணி கூறினான்

“அவனையா பிடித்துவிட்டீர்கள்?” என்று வடிவேலு ஆச்சரியப்பட்டுக்கொண்டே மேலே ஏறலானார். அவரைப் பின்தொடர்ந்து மருதாசலம் வந்தான்.

வடிவேலுவின் தலை, மேலே தெரிந்ததும், ‘அப்பா’ என்று கூவிக்கொண்டு கண்ணகி ஓடி வந்தாள். ‘மாமா’ என்று உற்சாகமாகச் சுந்தரம் கூவினான். எல்லோருடைய மகிழ்ச்சியையும் கண்டு ஜின்கா உற்சாகத்தோடு குரல் கொடுத்துக்கொண்டு குதித்தது.

“இந்தக் குரங்குதான் எங்களை யெல்லாம் காப்பாற்றியது” என்று கூறிக்கொண்டே தில்லைநாயகம் வந்து, வடிவேலுவுக்கு வணக்கம் செய்தார்.

“ஆமாம், அம்மா எங்கே?” என்று திடீரென்று தோன்றிய கலக்கத்தோடு வடிவேலு கேட்டார்.

“அம்மா போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்துக்கொண்டு கூடல் பட்டணம் போயிருக்கிறார்கள். முதலில் நாம் இந்தக் குள்ளனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு போக வேண்டும்” என்று அவசரப்பட்டான் தங்கமணி.

“முதலில் ஐயாவுக்குக் கொஞ்சம் தாகத்திற்கு ஏதாவது கொண்டுவரட்டுமா?” என்று தில்லைநாயகம் கேட்டார்.

“இப்போது யாருமே உன் குகைக்குள்ளே போக முடியாதே. அது தான் ஜெயிலாக மாறிவிட்டதே” என்று சுந்தரம் சொன்னான்.

“அதென்னடா ஜெயில்! எல்லாம் விந்தையாக இருக்கிறதே!” என்றார் வடிவேலு.

“அப்பா, அதற்குள்ளே உங்கள் கூடவந்த அந்த ஐந்து தடியர்களும் அடைபட்டுக் கிடக்கிறார்கள். எல்லாம் அண்ணாவின் தந்திரம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கண்ணகி கூறினாள்.

ஒருவர் பேசுவதற்குள் இன்னொருவர் பேசி, நடந்ததையெல்லாம் கூறத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வடிவேலுவுக்கு நடந்ததையெல்லாம் கோவையாக அறிந்து கொள்வதே சிரமமாக இருந்தது. இருந்தாலும் அவருக்கு ஒரே ஆனந்தம். தம் மகன் தங்கமணியைப்பற்றி மனத்திற்குள்ளேயே மிகுந்த பூரிப்பெய்தினார்.

நடந்ததையெல்லாம் ஒருவாறு புரிந்துகொண்டதும் வடிவேலு. மேற்கொண்டு நடக்கவேண்டியவற்றில் எண்ணம் செலுத்தலானார்.

“தங்கமணி, நாம் இப்போது அந்த ரகசியக் குகைக்குச் சென்று, கொல்லி மலைக் குள்ளனைப் பிடித்துக் கட்டவேண்டும். அது தான் முதல் வேலை. மருதாசலம், தில்லைநாயகம் இருவரும் கூட வரட்டும். நீயும் வா” என்று அவர் கூறினார்.

மருதாசலமும் தில்லைநாயகமும் சிறிது ஐயத்தோடு பார்த்தார்கள். அவர்கள் அப்படிப் பார்ப்பதன் பொருளை அறிந்து கொண்டு வடிவேலு, “பயப்படாதீர்கள், நாம் மூன்று பேரும் சேர்ந்தால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம். ஏமாந்த சமயத்தில் அவனும் அவனுடைய ஆள்களும் என்னைக் கட்டிப் பிடித்துவிட்டார்கள். இல்லாவிட்டால் நானே அவனை ஒரு கை பார்த்திருப்பேன்” என்று கூறினார். அவருடைய நம்பிக்கையூட்டும் பேச்சைக் கேட்டு அவர்கள் இருவரும் துணிச்சல் கொண்டார்கள். மருதாசலம் வழிகாட்டியாக முன்னால் நடந்தான். வடிவேலு இடயிலே வர, தில்லைநாயகம் கடைசியில் நடந்தார், தங்கமணி முதலியவர்கள் அங்கேயே குகைக்கு முன்னால் தங்கியிருந்தனர். ஜின்கா அவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தது.

ரகசியக் குகையை அணுகியதும் மருதாசலமும் தில்லை நாயகமும் தயங்கி நின்றார்கள். ஆனால் வடிவேலு, தாம் ஊன்றி நடப்பதற்காகக் கொண்டுவந்த நீண்ட மூங்கிற்கழியைக் கையில் எடுத்துக்கொண்டு, முன்னால் சென்று, கதவின் குறுக்குச் சட்டத்தை எடுத்தார். மூங்கிற்கழிகளை எடுத்துக் கொண்டு பின்னாலேயே வரும்படி மற்ற இருவருக்கும் சமிக்கை செய்துவிட்டு, அவர் கதவைத் தள்ளிவைத்து உள்ளே நுழைந்தார். அங்கே மருதாசலம் முன்னால் வைத்துவிட்டுத் திரும்பிய லாந்தர் எரிந்து கொண்டே இருந்தது. கொல்லிமலைக் குள்ளன் கீழே மூர்ச்சையுற்று விழுந்ததாக அவர்கள் கூறிய இடத்தை நோக்கி வடிவேலு பாய்ந்து சென்றார். மருதாசலமும் தில்லைநாயகமும் பின்னாலே எச்சரிக்கையாக வந்தனர். ஆனால், அங்கே குள்ளனைக் காணவில்லை. லாந்தரை எடுத்துக் கொண்டு வடிவேலு, குகையின் ஒவ்வொரு பாகத்திலும் வேகமாகத் தேடினார். உள் குகைக்குள்ளும் சென்று பார்த்தார். மனத்திலே கொஞ்சம் அச்சம் இருந்தாலும் மருதாசலமும் தில்லைநாயகமும் வடிவேலுக்கு உதவியாக அவர் பின்னாளேயே வந்து கொண்டிருந்தார்கள். குள்ளனை எங்குமே காணோம். அவன் மாயமாக மறைந்து விட்டான்.

“தண்ணீர் கசிந்து வழிகின்றதே அந்தப் பக்கத்திலுள்ள சுரங்கத்தை நன்றாகப் பார்த்தீர்களா? வாருங்கள், மறுபடியும் அங்கே போய்ப் பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே, லாந்தரை ஒரு கையிலும் மூங்கிற்கழியை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு, வடிவேலு அந்தச் சுரங்கம் போன்ற பகுதியில் நடந்தார். தண்ணீர் எப்பொழுதும் கசிவதாலும் சொட்டிக் கொண்டிருப்பதாலும் அந்தப் பகுதி ஒரே வழுக்கலாக இருந்தது. இருந்தாலும் வடிவேலு, எச்சரிக்கையாக அடிமேல் அடிவைத்து முன்னால் சென்றார். மற்ற இருவரும் பின்னாலேயே வந்தனர். வளைந்து வளைந்து மூவரும் சென்றார்கள். சில இடங்களில் குனிந்துகொண்டு செல்ல வேண்டியிருந்தது. கடைசியில், ஒரு வளைவில் திரும்பிய உடனே வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. அது வழியாகத் தவழ்ந்துகொண்டுதான் போக முடிந்தது. அப்படிக் கொஞ்ச தூரம் வடிவேல் மட்டும் சென்று பார்த்தார். மலைப்பாறையின் கோடியிலே ஒரு பெரிய துவாரம் இருந்தது. அதன் வழியாக எட்டிப் பார்த்த போது கீழே வெகு ஆழத்திலே வஞ்சியாறு ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஆனால், மலை ஒரே செங்குத்தாக இருந்ததால் அந்தப் பக்கத்தில் இறங்குவதற்கு யாதொரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு மேலே தேடுவதில் பயனில்லை என்று வடிவேலு, பின்புறமாகவே தவழ்ந்து, மற்றவர்கள் இருக்குமிடம் வந்து சேர்ந்தார்.

“எப்படியோ அந்தக் குள்ளன் ஏமாற்றிவிட்டான். ஆனால், நான் போலீசின் உதவியைக்கொண்டு அவனைப் பிடிக்காமல் விடப்போவதில்லை. திரும்பிப் போவோம் வாருங்கள்” என்று கூறிக்கொண்டே வடிவேலு நடந்தார்.

ரகசியக் குகையின் வெளிக்கதவை மூடி. குறுக்குச் சட்டத்தைப் பொருத்திவைத்துவிட்டு மூவரும் தங்கமணி முதலியவர்கள் இருக்குமிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். கைதியாகக் குள்ளனைப் பிடித்துக்கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்த தங்கமணியும் சுந்தரமும் கண்ணகியும் பெரிதும் ஏமாற்றமடைந்தார்கள். அதுவரையில் உற்சாகமாக ஏதேதோ வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்த சுந்தரத்தின் முகம் வாடிப்போய்விட்டது.

“அப்பா, குள்ளனைப் பிடிக்காவிட்டால் போகிறது. அம்மாவிடம் போகலாம்” என்ற கவலை நிறைந்த குரலில் கண்ணகி கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/16&oldid=1101615" இலிருந்து மீள்விக்கப்பட்டது