கொல்லிமலைக் குள்ளன்/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5

"வனுக்கு நம்மேல் சந்தேகம் சிறிது ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கலக்கத்தில் அவன் வடநாட்டுக் காரனைப் போல் பேசுவதை விட்டுவிட்டு நம்மைப் போலப் பேசிவிட்டான்" என்றான் தங்கமணி.

"நாம் பரிசலில் ஏற மறுத்திருக்க வேண்டும்" என்று தனது கருத்தைத் தெரிவித்தான் சுந்தரம்.

“மறுத்திருந்தால் மட்டும் தப்ப முடியுமா? நாம் குளித்துக் கொண்டிருந்த இடத்தில் மக்கள் நடமாட்டமே இருக்கவில்லை. குள்ளனும் தாழிவயிறனுந்தான் இருந்தார்கள். அவர்கள் சுலபமாக நம்மைச் சத்திரத்திற்குப் போகவொட்டாமல் தடுத்திருக்க முடியும்.”

"இதையெல்லாம் நீ அப்பொழுதே நினைத்துப் பார்த்தாயா?"

"ஆமாம்; அது மட்டுமல்ல. குள்ளன் நம்மை அடித்து ஆற்றில் போடவும் தயங்கியிருக்கமாட்டான். இப்பொழுது நம்மீது அவனுக்குக் கொஞ்சம் சந்தேகம் மட்டும் இருக்கிறது. அதனால் சத்திரத்திற்குப் போக முடியாமல் செய்து வைத்திருக்கிறான். நிச்சயமாக நமக்கு அவன் கொல்லிமலைக் குள்ளன் என்று தெரிந்துவிட்டதாக இருந்தால் அவன் எதற்கும் துணிவான்!"

"டேய், நீதான் உண்மையான துப்பறியும் சாம்பு."

"அதிருக்கட்டும். இப்பொழுது தப்பிக்க வழி பார்ப்போம். இந்தத் தாழிவயிறனை எப்படியாவது ஏமாற்ற வேண்டும்" என்றான் தங்கமணி.

இந்தச் சமயத்திலே தாழிவயிறன் உரக்கக் கூவினான். “டேய் பசங்களா, வாங்கோ. சோறு வந்திருக்குது.”

"ஓகோ, அப்படியா! சரி, நம்மை இங்கேயே அடைத்து வைத்திருக்கக் குள்ளன் திட்டம் போட்டிருக்கிறான். அதுவும் ஒரு வகையில் நல்லதே" என்று தங்கமணி கூறிக்கொண்டே நடந்தான்.

“அண்ணா , இங்கேயே இருந்தால் இருட்டிலே பயமாய் இருக்குமே" என்று கண்ணகி தேம்பத் தொடங்கினாள்.

“இங்கே நம்மை வைத்திருக்க முயன்றால் மாமா தேடி வர மாட்டாரா?" என்று சுந்தரம் கொஞ்சம் நம்பிக்கையோடு சொன்னான்.

"குள்ளன் நம்மை இரவோடு இரவாக எங்காவது கடத்திச் செல்ல முயலுவான் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்துவிட்டு எங்காவது தப்பியோட நினைப்பான்," என்று தங்கமணி கருதினான். குள்ளன் என்ன செய்வானென்று அவனுக்கு நிச்சயமாகப் புலப்படவில்லை. எதற்கும் இரவில் தப்பிப்போக வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே தாழிவயிறனை அணுகினான். மற்றவர்களும் மௌனமாகப் பின்னால் வந்தனர்.

வேறொரு பரிசலில் யாரோ வந்து உணவு தந்துவிட்டுப் போனதாகத் தெரிந்தது. உணவு கிடைத்ததைப்பற்றி அனைவருக்கும் மகிழ்ச்சிதான். கவலையை மறந்துவிட்டு மூவரும் உணவில் நாட்டம் செலுத்தினர். ஜின்காவிற்கு வேண்டியதைக் கொடுக்கத் தங்கமணி மறந்துவிடவில்லை.

"இந்தச் சோறெல்லாம் ஒரு வேளைக்கு எனக்கே பத்தாது. இதையே ராத்திரிக்கும் உங்களுக்கு வைத்திருந்து கொடுக்க வேணுமாம்," என்று கடுகடுப்பாகப் பேசினான் தாழிவயிறன்.

தங்கமணிக்கு நல்ல சமயம் வாய்த்தது. “இந்தாப்பா, கவலைப்படாதே. இங்கே தேங்காய் நிறைய காய்த்துத் தொங்குகிறது. வேண்டிய மட்டும் சாப்பிடலாம்" என்று அன்போடு பேசினான்.

“அட போ, அந்த மரத்திலே என்னால் ஏற முடியாது. முன்னெல்லாம் ஒரு நொடியிலே ஏறிடுவேன். இப்போ மரத்தைக் கட்டிப் பிடிக்கவே முடியறதில்லை” என்று கவலைப் பட்டான் தாழிவயிறன்.

“ஆமாம், உன்னால் எப்படி ஏற முடியும்? வயிறு தடுக்குமே!" என்று சுந்தரம் கிண்டலாகப் பேசினான்.

"நீ ஒண்ணும் ஏற வேண்டாம். நான் உனக்குத் தேங்காய் போட்டுத் தருகிறேன்" என்று தங்கமணி சொல்லி விட்டு அவன் ஜின்காவிற்குச் சமிக்கை செய்தான்.

ஜின்கா அதிவிரைவில் மரத்தில் தாவியேறித் தேங்காய்களைப் பறித்துப் போட்டது. தாழிவயிறனுக்குச் சொல்ல முடியாத பூரிப்பு. பொழுது சாயும் வரையில் தேங்காய்களை உடைத்துத் தின்றுகொண்டே இருந்தான்.

தாழிவயிறன் தேங்காயிலே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தபோது தங்கமணி தனது திட்டத்தை நிறை வேற்றுவதற்கான செயல்களில் ஈடுபட்டான். “சுந்தரம், உனது கத்தி எங்கே? அதைக் கொண்டு ரயில் கற்றாழையில் பெரிய மடலாக ஒன்றை வெட்டி வா" என்று அவன் சொன்னான். எதற்காகக் கற்றாழை மடல் என்று தெரியாவிட்டாலும் சுந்தரம் உடனே அதை வெட்டி எடுத்து வந்தான்.

கற்றாழைமடலில் இரண்டு ஓரங்களிலும் ரம்பம் போல முள் இருக்கும். அதன் நுனியிலே நீண்ட கூர்மையான பெரிய முள் ஒன்றும் இருக்கும். தங்கமணி அந்த நீண்ட முள்ளைத் தனியாக வெட்டி எடுத்து வைத்துக்கொண்டான். பிறகு, கற்றாழைமடலில் இரண்டு ஓரங்களிலுமுள்ள ரம்பமுட்களைக் கத்தியால் சீவிக் களைந்துவிட்டு, ஓலைச் சுவடியைப் போல அந்த மடலை இரண்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொண்டான். பழங்காலத்திலே எழுதுவதற்குப் பனை ஓலை பயன்பட்டது. எழுத்தாணியைக்கொண்டு அதில் எழுதினார்கள். தங்கமணி கற்றாழையில் நீண்ட முள்ளை எழுத்தாணி போலப் பயன்படுத்திக் கற்றாழை மடலில் கீழ்க்கண்ட கடிதம் எழுதலானான்.

அன்புள்ள அப்பாவிற்கும் அம்மாவிற்கும்,

எங்கள் வணக்கம். இக்கடிதம் உங்களுக்குக் கிடைக்கும்போது நாங்கள் மூவரும் பரிசலில் ஏறி
ஆற்றின் மறுகரை ஓரமாக வெள்ளத்தோடு போய்க் கொண்டிருப்போம். பிறகு, கரையில் இறங்கி, காட்டிற்குள் நுழைந்து போவோம். காடு எங்கு முடிகிறது என்று தெரியாது. வீர்சிங்தான் கொல்லி மலைக்குள்ளன். அதை நாங்கள் தெரிந்துகொண்டதால் எங்களை ஆற்றின் மறுகரையில் உள்ள காட்டில் அவன் வைத்திருக்கிறான். ஆனால், தாழிவயிறன் தூங்கும்போது தப்பிப் போக போகிறோம். அந்தக் குள்ளனைப்பற்றிப் போலீசுக்குத் தகவல் கொடுங்கள். எங்கள் உதவிக்குப் போலீஸ் படையுடன் ஒரு பரிசலில் வரக் கோருகிறோம். நாங்கள் தைரியமாய் இருக்கிறோம்.
தங்கள் அன்புள்ள,
தங்கமணி.

கற்றாழைமடல் நல்ல தடிப்பாக இருக்கும். அதனால் அதில் எழுவது எளிதாக இருந்தது. ஆனால் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டியிருந்ததால் சிறிய கடிதமானாலும் இரண்டு துண்டுகளில் எழுத வேண்டியதாயிற்று. அதை எழுதி முடித்து, ஒரு பக்கத்தில் மறைத்து வைத்தான் தங்கமணி.

மாலையில் சாப்பிடுவதற்காகவும், பரிசலில் தங்களோடு எடுத்துச் செல்வதற்காகவும் போதுமான தேங்காய்களைத் தயார் செய்து கொண்டான். "கண்ணகி, இரண்டு மூன்று நாள்களுக்கு இந்தத் தேங்காயே போதுமா?" என்று அவன் தன் தங்கையைப் பார்த்துக் கேட்டான்.

“எங்களுக்கென்ன தாழிவயிறா?" என்று நகைத்தான் சுந்தரம்.

"இரண்டு மூன்று நாள்களுக்கு இந்தத் தேங்காயைத் தவிர வேறு உணவே கிடைக்காமல் போய்விடலாம். அதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும்" என்று யோசனையோடு தங்கமணி கூறினான்.

சுந்தரத்திற்கும் கண்ணகிக்கும் அவன் கூறுவது முற்றிலும் விளங்கவில்லை. அதனால் மௌனமாக இருந்தார்கள். ஜின்காமட்டும் தாழிவயிறனால் மட்டை உரிக்கப்பட்ட தேங்காய்களை ஓரிடத்தில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தது. அதற்குத் தங்கமணியின் யோசனைகள் புரிந்துவிட்டனவோ என்னவோ?

"வாடா சுந்தரம், தாழிவயிறன் இப்போது நம்மிடம் பிரியமாக இருப்பான். அவனைக்கொண்டு ஓரளவுக்கு நாம் பரிசல் தள்ளக் கற்றுக்கொள்ளலாம்" என்று கூறிக்கொண்டே தங்கமணி தாழிவயிறனை நோக்கி நடந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே தாழிவயிறன் அவர்களுக்குப் பரிசலில் ஏறித் துடுப்புப் போட்டு அதைச் செலுத்தக் கற்றுக்கொடுக்க இணங்கினான். தின்பதற்குத் தேங்காய் கிடைத்துவிட்டதல்லவா? தங்கமணியும் சுந்தரமும் ஆர்வத்தோடு துடுப்புப் போட்டுப் பழகலானார்கள். ஆனால், அதிக ஆழமான இடத்திற்கு அவர்களால் பரிசலைச் செலுத்த முடியவில்லை. தாழிவயிறன் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கினாலும் அந்தக் காட்டை விட்டுப் பரிசல் அதிக தூரம் செல்லாதவாறு கவனித்துக்கொண்டான், தங்கமணியும் சுந்தரமும் துடுப்புப் போடுவதை ஓரளவுதான் கற்றுக்கொள்ள முடிந்தது. சிலமணி நேரங்களில் அந்த வித்தையைக் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்குப் பல நாள்கள் பழக வேண்டியிருக்கும். இருந்தாலும், ஓரளவாவது கற்றுக்கொண்டால் உபயோகமாக இருக்கும் என்றுதான் தங்கமணி எண்ணியிருந்தான்.

கொல்லிமலைக் குள்ளன்.pdf

தேங்காயை வயிறு புடைக்கத் தின்றதாலும், இரண்டு மூன்று மணி நேரம் பரிசல் தள்ளக் கற்றுக் கொடுத்ததாலும் தாழிவயிறன் பொழுது சாய்ந்ததும் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டான்.

இதைத்தான் தங்கமணி எதிர்பார்த்திருந்தான். தாழிவயிறன் குறட்டை போடத் தொடங்கியதும் அவன் தேங்காய்களைப் பரிசலில் எடுத்து வைத்தான். உடனே சுந்தரமும் கண்ணகியும் ஜின்காவும் அதே வேலையில் ஈடுபட்டார்கள். தேங்காய்களை உடைப்பதற்கு உதவியாக ஒரு கல்லையும் பரிசலில் வைத்துக்கொண்டார்கள். தங்கமணி தான் எழுதிய கற்றாழைக் கடிதத்தை ஜின்காவின் அடிவயிற்றில் ஒன்றும், முதுகில் ஒன்றுமாக வைத்து, கற்றாழை நாரையே கிழித்து நன்றாகக் கட்டினான். ஜின்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. “ஜின்கா, பரிசலில் ஏறு. அப்புறம் நான் சொல்லுகிறேன்” என்று தங்கமணி அதன் காதில் மெதுவாகக் கூறிவிட்டுச் சுந்தரத்திற்கும் கண்ணகிக்கும் சமிக்கை செய்தான். அனைவரும் பரிசலில் ஏறிக்கொண்டனர். மரத்தோடு பரிசலைக் கட்டி வைத்திருந்த நீண்ட கயிற்றை அவிழ்த்துவிட்டு, அதனையும் சுருணையாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு தங்கமணி பரிசலில் தாவி ஏறினான். பரிசல் ஆற்று வெள்ளத்தோடே கரை ஓரமாக மெதுவாக மிதந்து செல்லலாயிற்று. இப்படிச் சுமார் நூறு கஜம் சென்றதும் தங்கமணி பேசத் தொடங்கினான். "சுந்தரம், இப்போதும் நாம் இரண்டு பேரும் மாறிமாறித் துடுப்புப் போடுவோம். ஒரே இருட்டாகவே இருந்தாலும் கரையில் உள்ள மரங்கள் தெரிகின்றன. கரை ஓரமாகவே ஆற்று வெள்ளம் போகிற திசையில் மெதுவாகப் பரிசலைச் செலுத்த முயலுவோம்” என்று அவன் கூறினான்.

"ஆற்றுவேகத்தை எதிர்த்து மறுகரைக்கு உங்களால் பரிசலைத் தள்ள முடியுமா?” என்று கண்ணகி கவலையோடு கேட்டாள். மறுகரைக்குப் போனால் சத்திரத்திற்கு ஓடிவிடலாம் என்பது அவள் ஆசை.

"நேருக்கு நேராக எதிர்க்கரையை நோக்கிப் போக முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று வெள்ளத்தோடு பரிசலைப் போகவிடலாம். முதலில் தாழிவயிறனிடமிருந்து தப்பவேண்டும். பிறகுதான் மற்ற வேலை” என்றான் தங்கமணி.

"தேங்காய் தீர்ந்துவிட்டால் தாழிவயிறன் நம்மையே வாயில் போட்டுக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. அப்பா! எத்தனை தேங்காயைத் தின்று தீர்த்துவிட்டான்” என்றான் சுந்தரம்.

"எதிர்க்கரையைச் சேராவிட்டாலும் தாழி வயிறனுக்கும் குள்ளனுக்கும் தப்பி வந்துவிட்டோம். இது நமக்கு முதல் வெற்றி" என்று கூறிக்கொண்டே தங்கமணி ஜின்காவிற்கு ஏதேதோ சமிக்ஞைகள் செய்தான்.

"டேய் ஜின்கா, ஆற்றில் பாய்ந்து நேராகச் சத்திரத்திற்குப் போ; அப்பா இல்லாவிட்டாலும் அம்மாவிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு உடனே வந்து சேர். ஆற்று ஓரமாகவே வந்து பரிசலுக்கு வந்துவிடு" என்று சொல்லிவிட்டு அதைத் தட்டிக் கொடுத்தான். ஜின்கா உற்சாகத்தோடு ஆற்றில் குதித்து வேகமாக நீந்திச் செல்லலாயிற்று.

"அம்மாவிடம் கொடுக்கச் சொன்னாயே, ஏன்?” என்று கண்ணகி கேட்டாள். "அந்தக் குள்ளன் நம்மை இந்தக் காட்டிலே சிறை செய்துவிட்டுச் சும்மா இருந்திருக்கமாட்டான். அவன் என்னவாவது சூழ்ச்சி செய்திருப்பான் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று தங்கமணி தனது கருத்தை வெளியிட்டான்.

"எப்படியும் நாம் தப்பிவிட்டால் அந்தக் குள்ளனைப் பிடிக்க வகை செய்துவிடலாம். நெட்டைக்குள்ளனைப் பிடித்தே தீருவோம்" என்று சுந்தரம் உற்சாகத்தோடு கூறினான்.

“அவன் எதற்குக் குள்ளன் என்று பெயர் வைத்துக் கொண்டானோ?” என்று கேட்டாள் கண்ணகி.

"அதுவும் உலகத்தை ஏமாற்றத்தான். இவன் சாதாரணப் பேர்வழி அல்ல."

"இல்லாவிட்டால் துப்பறியும் சாம்பு இருக்கின்ற வீட்டிலேயே பழக வருவானா?" --இது சுந்தரத்தின் பேச்சு.

"நம் வீடு கலைப்பொருட்காட்சி சாலைக்கு அருகிலே இருக்கிறதல்லவா! அதை முன்பே தெரிந்திருக்கிறான். நம் வீட்டில் மேல்மாடி காலியாயிருப்பதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அப்பாவிடம் அவன் கேட்டதை நீங்கள் யாரும் கவனிக்கவில்லை. அருகில் இருந்துகொண்டே தன் திருட்டை நடத்த முயற்சி செய்திருக்கிறான். அதற்காகவே நம்முடன் வலிய வந்து பழகியிருக்கிறான்" என்று தங்கமணி விளக்கம் கூறிக்கொண்டே துடுப்பைப் போட்டான்.

பரிசல் கரை ஓரமாகவே ஆற்று வேகத்தோடு போய்க் கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ 'தடதட' என்று தண்ணீர் வேகமாக விழுவது போலச் சத்தம் கேட்கலாயிற்று. நேரம் ஆக ஆக அது அதிகமாகக் கேட்டது. “நீர்வீழ்ச்சி ஏதாவது இருந்தால்...” என்று நடுங்கிக்கொண்டே கண்ணகி கேட்டாள்.

இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால், தங்கமணியும் சுந்தரமும் தைரியத்தை இழக்காமல் மாறிமாறித் துடுப்பு வலித்து, பரிசலைக் கரையின் ஓரமாகவே செலுத்த முயன்று கொண்டிருந்தனர். பேரிரைச்சல் அதிகப்பட்டுக்கொண்டேயிருந்தது.