உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்லிமலைக் குள்ளன்/4

விக்கிமூலம் இலிருந்து

4

மறுநாள் காலையில் எல்லாரும் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவந்தார்கள். பிறகு, காலை உணவை அதிவிரைவில் உண்டதும் தங்கமணி, சுந்தரம் ஆகிய இருவரும் கண்ணகியை அழைத்துக்கொண்டு திருவிழாக் கடைவீதிகளையும் மற்ற வேடிக்கைகளையும் பார்க்கச் சென்றார்கள். ஜின்கா தங்கமணி தோளின் மேல் அமர்ந்து கொண்டு கூட்டத்தில் வந்ததே அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரு விநோதக் காட்சியாக இருந்தது. அப்படி இவர்கள் சென்றுகொண்டிருந்த சமயத்தில்தான் வீர்சிங்கை எதிர்பாராத விதமாகச் சந்தித்தார்கள். வீர்சிங்கும் அவர்களைப் பார்த்துக் கொஞ்ச நேரம் திகைத்து நின்றுவிட்டார். பிறகு அவர் "தங்கமணி, நீங்க எங்கே வந்தாங்கோ? அப்பா எங்கே?" என்று கேட்டார். தங்கமணி உடனே, “நாங்கள் திருவிழாப் பார்க்க வந்தோம்" என்று பதில் சொன்னான். "கோடை விடுமுறையாதலால் எங்காவது கிராமத்துக்கு அழைத்துக்கொண்டு போகும்படி நான்தான் மாமாவைத் தொந்தரவு செய்தேன். இங்கு திருவிழா நடப்பதைக் கேள்விப் பட்டு எங்களை இங்கே அழைத்து வந்தார்" என்று கூறினான் சுந்தரம். "அச்சா அச்சா, உங்களுக்கு ஆத்திலே படகு சவாரி பண்றான் இல்லை? ரொம்ப ஜோர், வாங்கோ" என்றார் வீர்சிங்.

“அண்ணா, எனக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று கண்ணகி தன் ஆவலை மீண்டும் வெளியிட்டாள். தங்கமணியும் சுந்தரமும் ஆற்றிலே நீந்துவதற்குத் துடித்துக் கொண்டிருந்தார்கள். “இங்கே ஆறு எந்தப் பக்கத்திலே இருக்கிறது?" என்று இரண்டு பேரும் பரபரப்போடு கேட்டார்கள்.

“நம்மளுக்குத் தெரியும், வாங்கோ. ரொம்ப ஜோரான ஆறு. அதில் நீச்சல் போடலாம். படகு சவாரி செய்ராங்கோ. வாங்க, உங்க அப்பாவைப் பார்க்கலாம்" என்று கூறினார் வீர்சிங். சிறுவர்கள் அவரை ஆவலோடு சத்திரத்தில் இருந்த வடிவேலிடம் அழைத்துச் சென்றார்கள்.

வடிவேலிடம் வீர்சிங் ஆங்கிலத்திலே பேசினார். சென்னையிலே பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேலத்திற்கு வந்திருப்பதாகவும், அங்கு வந்த பிறகுதான் வஞ்சியூரில் நடக்கும் திருவிழாவிலே ஒயிலாட்டம் மிகச்சிறப்பாக நடைபெறும் என்று கேள்விப்பட்டதாகவும், அதைப் பார்ப்பதற்காக அவர் தம் குழுவைச் சேர்ந்த சிலரோடு முதல் நாள் இரவு அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

"ஒயிலாட்டம் மிகக் கவர்ச்சியாக இருக்கிறது. இன்னும் சில நாள்கள் இங்கே தங்கி அந்த ஆட்டத்தைப் பார்க்கப் போகிறோம். முடியுமானால், இந்த ஒயிலாட்டக் கோஷ்டியை எங்கள் பஞ்சாபுக்கு அழைத்துச் செல்லலாமென்று இருக்கிறேன்" என்று அவர் ஆங்கிலத்திலே தாம் அங்கு வந்துள்ள காரணத்தைத் தெரிவித்தார்.

"நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்? இங்கே வசதியாக உங்களுக்குத் தங்க இடம் கிடைத்ததா? புதிய இடமாயிற்றே!" என்று வடிவேலும் ஆங்கிலத்திலேயே கேட்டார்.

சேலத்திலே உத்தியோகஸ்தர் ஒருவர் எங்களுக்குக் கடிதம் கொடுத்தார். அதனால் ஆற்றோரத்திலே தனியாக ஒரு தோட்டத்து வீட்டில் எங்களுக்குத் தங்க இடம் கிடைத்தது. குழந்தைகளெல்லாம் ஆற்றில் நீந்தவும், படகு சவாரி செய்யவும் ஆவலோடு இருக்கிறார்கள். நான் படகெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் அனுமதி தந்தால் ஒரு மணி நேரத்தில் இவர்களைத் திருப்பி அழைத்து வந்துவிடுகிறேன்” என்றார் வீர்சிங்.

"ஆமாம், மாமா, இந்த வீர்சிங் ரொம்ப நன்றாக நீந்துவார். நாங்கள் போகட்டுமா?" என்று கேட்டான் சுந்தரம்.

"எனக்கு நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அவரிடத்திலே அதற்கு வேண்டிய ரப்பர் வளையம் இருக்கிறதாம். நானும் போகிறேன், அப்பா என்று கெஞ்சினாள் கண்ணகி.

"ஒன்றும் கவலை வேண்டாம். நான் எல்லாம் கவனித்துக் கொள்கிறேன்" என்று வீர்சிங் ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

குழந்தைகளின் ஆவலைக் குலைக்க வடிவேல் விரும்ப வில்லை. அதனால் அவர் இசைந்தார். எல்லாரும் உற்சாகத்தோடு நீந்துவதற்கு வேண்டிய ஆயத்தங்களோடு ஆற்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஜின்காவிற்கு உற்சாகம் தாங்கவே முடியவில்லை. அது 'ஜிங்ஜிங்' என்று குதித்துக்கொண்டும் தங்கமணியைச் சுற்றி ஆடிக்கொண்டும் சென்றது.

வஞ்சியூர்ப் பக்கமாக ஓடுகின்ற அந்த ஆற்றுக்குக் கருவேட்டாறு என்று பெயர். ஆனால், பொதுவாக அதை வஞ்சியாறு என்றே கூறுவார்கள். அந்த ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடிற்று. அந்த ஆறு தூரத்திலே உயர்ந்து தோன்றும் இரண்டு மலைகளுக்கு நடுவே புகுந்து போவது போல் காட்சி அளித்தது. அந்தக் காட்சி பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தது. அந்த ஆற்று நீரிலே சுமார் இடுப்பளவு ஆழத்திற்குச் சென்று, ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து நீந்துவது தங்கமணிக்கும் சுந்தரத்திற்கும் ஒரு புதிய இன்ப அனுபவம். இவ்வாறு அவர்கள் தங்கள் கைகள் சலிக்குமட்டும் ஆற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்தினார்கள். உற்சாகத்தினால் அவர்கள் அதிக ஆழமான பகுதிக்குப் போய்விடாமல் வீர்சிங் பார்த்துக்கொண்டார். அதே சமயத்தில் கண்ணகிக்கு நீச்சலும் பழக்கிக்கொண்டிருந்தார். காற்று அடித்த ரப்பர் வளையத்தை இடுப்பிலே கட்டிக்கொண்டு நீந்துவது கண்ணகிக்கு எளிதாக இருந்தது. கண்ணகி குதூகலமாகச் சிரித்துக்கொண்டும் கைகளையும் கால்களையும் வீசியடித்துக்கொண்டும் நீந்த முயன்றாள். அவளுக்கு நீச்சல் பழக்குவதால் விர்சிங் நீந்தவில்லை. சட்டைகளையும் கழற்றவில்லை. ஜின்கா தண்ணீரிலே முழுகுவதும், ஆழமான இடத்திற்கெல்லாம் சென்று பாய்ந்து பாய்ந்து நீந்துவதுமாக இருந்தது.

எல்லாரும் களைத்துப்போகும் வரையில் இவ்வாறு நீந்தினார்கள். பிறகு, கரையை நோக்கிப் புறப்படலானார்கள். கண்ணகி வீர்சிங்கின் இடக்கையைப் பற்றிக்கொண்டு கரையை நோக்கி நடந்தாள். தங்கமணியும் சுந்தரமும் வீர்சிங்கின் வலக்கைப் பக்கமாகத் தண்ணீரில் நடந்தனர். ஜின்கா மட்டும் இன்னும் நீந்திக்கொண்டே முன்னால் சென்றது. ஓரிடத்திலே தண்ணீருக்கடியிலே வழுவழுப்பான கூழாங்கற்கள் நிறையக் கிடந்தன. கூழாங்கற்களிலே பாசம் படிந்து அதிக வழுக்கலாக இருந்தது. வீர்சிங்கின் இடக்கையைப் பற்றிக்கொண்டு நடந்த கண்ணகி வழுக்கலைக் சமாளிக்க முடியாமல் ஓரிடத்திலே விழுந்துவிட்டாள். விழாமல் தப்பித்துக்கொள்ள அவள் வேகமாக வீர்சிங்கின் இடக்கையை மூடியிருந்த ஜிப்பாவைப் பற்றினாள். அதனால் ஜிப்பாவின் இடக்கை அப்படியே கிழிந்து வந்துவிட்டது. வீர்சிங்கின் இடக்கையில் 'குள்ளன்' என்று பெரியதாகப் - பச்சை குத்தியிருந்தது. அதைப் பார்த்த சுந்தரம், 'குள்ளனா!' என்று தன்னையும் மறந்து கத்திவிட்டான். தங்கமணி உடனே நிலையைச் சமாளிக்க விரும்பி,

"குள்ளக் குள்ளனைக்
குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை
வினாயக னைத்தொழு"

என்று தான் குழந்தைப் பருவத்தில் கேட்டுப் பாடம் செய்திருந்த பாட்டைப் பாடினான். "யாருக்காவது தீங்கு நேரிட்டால் இந்த பாட்டைச் சொல்லுவது எங்களுக்கு வழக்கம். சுந்தரமும் அதைத்தான் சொல்லத் தொடங்கி, அதற்குள் கண்ணகி எழுந்துவிட்டதால் நிறுத்திவிட்டான்" என்று அவன் வீர்சிங்கிடம் விளக்கம் கூறினான்.

இருந்தாலும், அந்தக் குள்ளன் தன்னை யாரென்று இந்தச் சிறுவர்கள் அறிந்துகொண்டதை உணர்ந்துகொள்ளாமலிருக்கவில்லை. ஆனால், அவன் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், “பரிசலிலே ஏறி ஆற்றிலே கொஞ்ச தூரம் சென்று வரலாமா, பரிசலில் போவது நன்றாக இருக்கும்" என்றான். அவன் கூறிய யோசனைக்கு இணங்காவிட்டால் சந்தேகம் உண்டாகுமென்று கருதி, தங்கமணி உடனே சம்மதம் தெரிவித்தான். குள்ளன் கொஞ்ச தூரத்துக்கப்பால் பரிசலோடு நின்றுகொண்டிருந்த ஒருவனைப் பார்த்துப் பேசப் போனான்.

"உடனே சத்திரத்திற்குப் போய் மாமாவிற்கு உண்மையைச் சொல்ல வேண்டாமா?" என்று ஆவலோடு கேட்டான் சுந்தரம். “இப்பொழுது போக முயன்றால், அவன் சந்தேகப்படுவான்; நம்மைப் போகவும் விடமாட்டான்; நமக்கு அவனை யாரென்று தெரியாதது போலவே இப்பொழுது நடிப்பதுதான் நல்லது. அப்படி நடித்தால்தான் அவனிடமிருந்து தப்ப முடியும்” என்று தங்கமணி பதில் சொன்னான்.

இதற்குள் குள்ளனும் பரிசல் ஓட்டியும் அருகில் வந்து விட்டார்கள். குள்ளன் தனது இடக்கையில் தனது கைக்குட்டையைச் சுற்றிக்கொண்டிருந்தான். "வந்து பரிசலில் ஏறுங்கள். அதோ அங்கே தெரிகிறதே, எதிர்க்கரையிலே உள்ள காட்டில் மரங்களும் பூக்களும் நிறைய உண்டு. பார்க்க அழகாக இருக்கும். அவற்றையும் பார்த்துவிட்டுப் பிறகு சத்திரத்துக்கு அழைத்துச் செல்வான் இவன்" என்று கூறினான் அவன். தங்கமணி, சுந்தரம், கண்ணகி ஆகிய மூவரும் பரிசில் ஏறினர். ஜின்காவும் தாவி ஏறிக்கொண்டது. பரிசலோட்டி துடுப்பைக்கொண்டு பரிசலை நீரில் வலிக்கத் தொடங்கினான்.

“நீங்களும் எங்களுடன் வரவில்லையா?" என்று கண்ணகி கேட்டாள்.

“தாழிவயிறா, ஜாக்கிரதையாகத் துடுப்புப் போடு. நான் சொன்னதை மறந்துவிடாதே" என்று குள்ளன் உரக்கச் சொன்னான். அதற்குள் பரிசலும் முப்பது கஜத்திற்குமேல் தண்ணீரில் சென்றுவிட்டது. தாழிவயிறன் வேகமாகத் துடுப்புப் போட்டு, எதிர்க்கரையில் உள்ள காட்டின் கரைக்குப் பரிசலைச் செலுத்த முயன்றான். தங்கமணியும் சுந்தரமும் திகைப்போடு உட்கார்ந்திருந்தனர். தாழிவயிறனையும் தங்க மணியையும் ஜின்கா மாறி மாறிக் கவனித்துக்கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்தில் பரிசல் வஞ்சி ஆற்றின் மறுகரையை அடைந்தது. அதிலே உயர்ந்த மரங்களும் குற்றுச் செடிகளும் பூச்செடிகளும் வளர்ந்திருந்தன. அந்த இடத்திற்கு வந்ததும் தாழிவயிறன் கீழே இறங்கிப் பரிசலைக் கையில் பிடித்துக்கொண்டு எல்லாரையும் கீழே இறங்குமாறு சொன்னான்.

"இங்கே இறங்க வேண்டாம். திரும்பிப் போகலாம். வயிறு பசிக்கிறது” என்றாள் கண்ணகி.

"எனக்குந்தான் பசி. ஆனால், இந்தக் காட்டைப் பார்க்காமல் போகப்படாது. இறங்குங்கள்" என்றான் தாழிவயிறன்.

 மூவரும் ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக்கொண்டே தயங்கித் தயங்கி இறங்கினர். தாழிவயிறன் பரிசலை ஓர் இடத்தில் இழுத்துக் கட்டிவிட்டுப் பின்தொடர்ந்தான். ஜின்காவிற்கு அவன்மேல் எப்படியோ சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அவனை அது முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டே நடந்தது. நிழலான ஒரு பகுதியை அடைந்ததும் தாழிவயிறன் அங்கே படுத்துவிட்டான். மற்ற மூவரும் அந்தக் காட்டைப் பார்க்கப் போவது போல் பாசாங்கு செய்து கொண்டு சற்று எட்டி நடந்து போனார்கள்.

“நல்ல தாழியடா அவன் வயிறு. எத்தனை பெரிசு" என்று கவலைக்கிடமான நிலைமையிலும் சுந்தரம் கேலியாகப் பேசினான்.

"நாம் சந்தேகப்படுவதாகக் காட்டிக்கொள்ளக்கூடாது. இந்தக் காட்டைப் பார்த்ததும் இங்கிருந்து புறப்படலாமென்று அவனிடம் சொல்லலாம்” என்று தங்கமணி கூறிானன்.

"அண்ணா. அவன் தான் கொல்லிமலைக் குள்ளனா ? எனக்குப் பயமாக இருக்கிறது" என்று கண்ணகி குழறிக் குழறிப் பேசினாள்.

"நாம் கண்டுகொண்டதாக அவன் தெரிந்துகொண்டானா என்று தான் நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்" என்று யோசனையோடு தங்கமணி கூறினான்.

"நல்ல வேளையாக அந்தப் பாட்டைச் சொன்னாய். நான் கொஞ்சம் ஏமாந்து போய்விட்டேன்" என்று வருத்தப் பட்டான் சுந்தரம்.

"நடந்து போனதற்கு வருத்தப்பட்டு என்னடா செய்வது? சத்திரத்திற்குத் திரும்புவதற்கு வழியைப் பார்க்கலாம்" என்று கூறிக்கொண்டே தங்கமணி வேகமாக நடந்தான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் தாழிவயிறனை நோக்கித் திரும்பி வந்தனர். "இனிப் புறப்படலாமா?" என்று கேட்டான் தங்கமணி.

"புறப்படுவதா?" என்று கூறி நகைத்துக்கொண்டே திரும்பிப் படுத்தான் தாழிவயிறன். "அவர் எப்போது உத்தரவு போடுவாரோ அதுவரையிலும் எல்லாரும் இங்குதான் இருக்க வேண்டும். சாப்பிடக்கூட அவர் என்னை விடவில்லை. ரொம்பப் பசிக்குது" என்று முணுமுணுத்தான் தாழிவயிறன்.

கண்ணகிக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால், தங்கமணி அவளுக்குச் சைகை காட்டித் தைரியப்படுத்தினான். மூன்று பேரும் மறுபடியும் தாழிவயிறனை விட்டு எட்டிச் சென்றனர். என்ன செய்வதென்று தங்களுக்குள் பேசிக் கொள்ளவே அவ்வாறு செய்தனர். அவர்கள் தனித்துச் செல்வதைப்பற்றித் தாழிவயிறன் கவலைப்படவில்லை. "பசங்க எங்கே போயிடுவாங்க. இந்தக் காட்டுக்குள்ளேதானே போக வேணும்? போனால் அவ்வளவுதான்" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே தாழிவயிறன் நிம்மதியாகப் படுத்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/4&oldid=1100306" இலிருந்து மீள்விக்கப்பட்டது