கோவூர் கிழார்/உறையூர் முற்றுகை

விக்கிமூலம் இலிருந்து

7
உறையூர் முற்றுகை

“இனியும் நாம் சும்மா இருப்பது அழகன்று. அவனை அடியோடு அழித்தாலன்றி நாம் அமைதியாக வாழ முடியாது. பாம்போடு ஒரு வீட்டில் வாழலாம். பகையோடு ஒரு நாட்டில் வாழ முடியாது. நாம் எதற்காக அஞ்ச வேண்டும்? நம்மிடம் படைப்பலம் இல்லையா?” என்றான் அரசன் நலங்கிள்ளி.

இளந்தத்தனாரை நெடுங்கிள்ளி சிறையில் வைத்து வருத்தினதையும் அவரைக் கொன்றுவிட முயன்றதையும் கேட்டபோது நலங்கிள்ளியின் குருதி துடித்தது. சோழ நாட்டிற்கே இதைக் காட்டிலும் வேறு அவமானம் இல்லையென்று எண்ணினான். தன் ஊரைப் பிடித்துக்கொண்டு அடைத்திருப்பதைப் பொறுத்துக் கொள்ளலாம்; புலவரைக் கொல்லத் துணிந்த இந்த அடாத செயலைப் பொறுக்கக்கூடாது என்று தோன்றியது. “நெடுங்கிள்ளியைப் பற்றிக்கொண்டு வந்து சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்து கொல்லவேண்டும். மன்னர் குலத்துக்கே யல்லவா மாசு தேடிக்கொண்டான், அந்தப் பாவி? தமிழ் நிலத்துக்கு, தமிழ் மரபுக்கு, தமிழன் சான்றாண்மைக்குத் தகாத செயலையல்லவா அவன் செய்து விட்டான்?” என்று அவன் கனன்றான். அவன் அரசன் அல்லவா? அவனுடைய கோபம் பொங்கியது. கண்கள் சிவந்தன. அந்த நிலையில் யார் எதிரே நின்றாலும் கண்பார்வையாலே சுட்டு விடுவான். “இனி ஒரு கணமும் தாமதம் செய்யக் கூடாது. படைத் தலைவரை அழைத்து வா” என்றான். படைத்தலைவர் வந்து முன் நின்றர். “உடனே படையைக் கொண்டு சென்று உறையூரை முற்றுகையிடுங்கள்” என்று கட்டளையிட்டு விட்டான்.

கோவூர் கிழார் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். சோழனுக்கு வந்த கோபத்தைக் கண்டு ஒரு வகையில் அவருக்கு உள்ளத்துள்ளே மகிழ்ச்சி உண்டாயிற்று. புலவருக்குத் தீங்கு இழைத்த செயலைப் பொறாமல் வெகுண்டான் சோழன் என்பதை நினைக்கும்போதுதான் அந்த மகிழ்ச்சி உண்டாயிற்று.

மன்னனுடைய கட்டளைப்படியே சோழர்படை, உறையூரை முற்றுகையிட்டது. ஆவூர் முற்றுகையைப்போல் இந்த முறை வெறுங் காவலாக இருக்கக் கூடாது. என்ன வந்தாலும் சரி; உறையூர்க் கோட்டைக்குள் புகுந்து பகைவர்களை ஒழித்துவிட வேண்டும்” என்று நலங்கிள்ளி சொன்னான். ஆகவே, போரிடும் வகையில் ஆயத்தமாகச் சோழப் படை உறையூர் மதிலைச் சூழ்ந்து நின்றது.

படை முற்றுகையிட்ட பிறகு, இனி எப்படிப் போரை நடத்துவது என்பதை அமைச்சர்களுடன் ஆராயத் தலைப்பட்டான் அரசன். இனி முடிந்த முடிபாக நெடுங்கிள்ளியின் குறும்புக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற உறுதியே அவனிடம் மேலோங்கி நின்றது. அமைச்சர்களும் கோவூர் கிழாரும் அங்கே இருந்தனர். அப்பொழுது தன் கருத்தை நலங்கிள்ளி வெளியிட்டான்.

அமைச்சர்கள் அவனுடைய கருத்துக்கு மாறு சொல்லவில்லை. தம்முடைய மன்னனது கருத்தே ஏற்றதென்று சிலர் கூறினர். மன்னன் கோவூர் கிழாரை நோக்கினான். “இப்போது புலவர்பெருமான் முன்பு சொன்னபடி சொல்லமாட்டார் என்று நினைக்கிறேன். புலவர்களை அவமதிக்கும் மன்னனை ஒறுப்பதற்குப் புலவரே தடை சொல்வாரா?” என்றான். அவ்வாறு கூறுகையில் அவன் சிறிதே புன்முறுவல் பூத்தான்.

ஆனால் கோவூர் கிழார் கூறிய வார்த்தை அவனுக்கு வியப்பை உண்டாக்கியது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை. “ஆம்; புலவர்களுக்குத் தீங்கு செய்யும் குற்றம் மிகப் பெரியது. ஆனாலும் புலவர்களைவிடப் பெரியவர்கள் குடி மக்கள். அவர்களுக்குத் தீங்கு வராமற் பாதுகாக்க வேண்டும்” என்றார் கோவூர் கிழார்.

இளந்தத்தனாரைச் சிறையிலிட்டதற்காக நெடுங்கிள்ளியிடம் அவருக்குச் சினம் உண்டானது உண்மை. ஆனால் அது குணமென்னும் குன்றேறி நின்றவருடைய வெகுளி அல்லவா? அது உடனே மாறிவிட்டது. நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் மூண்டால் உறையூரில் வாழும் மக்களுக்கும் அவ்வூருக்கும் ஏதும் உண்டாகும் என அஞ்சினார். இந்தப் போருக்கு மூல காரணமாக உள்ள பகைமையை நீக்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று நினைத்தார். ‘இப்படியே இவர்களிடையில் உள்ள பகைமை மறைந்தும் வெளிப்பட்டும் துன்பத்தை உண்டாக்குவதானால் சோழநாட்டின் புகழுக்கும் நன்மைக்கும் கேடு உண்டாகும். இவர்களை எப்பாடுபட்டாவது ஒற்றுமையாக வாழும்படி செய்துவிடவேண்டும்’ என்று அவர் தீர்மானித்துக்கொண்டார்; ஆகவே, அதற்கு ஏற்ற வகையில் பேசினார்.

“அறிவில்லாத மன்னனால் மக்களுக்குத் தீங்கு வரத்தான் வரும். புலவர்களையே மதிக்காதவன், குடிமக்களின் உயிரை மதிக்கப் போகிறானா? முன்பு குழந்தைகளையும் பெண்டிரையும் பட்டினி போட்டுக் கொல்லத் துணிந்தவன்தானே அவன்?” என்று நலங்கிள்ளி கூறினான்.

“அவன் செய்வது இருக்கட்டும்; போர் என்று வந்தால் ஒரு சாரார்மட்டும் தீங்கு இழைப்பதில்லை. இரு சாராரும் மக்களுக்கும் பொருள்களுக்கும் அழிவை உண்டாக்கி அமைதியைக் குலைத்துத் தாமும் அமைதியின்றி நிற்கிறார்கள்” என்றார் புலவர்.

“அமைதியை விரும்புபவன்தான் நான். முதுகண்ணன் சாத்தனாரும் தாங்களும் கூறிவந்த அறிவுரைகளை நான் மறக்கவில்லை. ஆனால் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல அமைதியைக் குலைக்கும் பகைவனைப் போர் செய்துதானே அடக்கவேண்டும்?” என்று சோழ மன்னன் கேட்டான்.

“பெரிய பகையாக இருந்தால் மன்னர்பிரான் சொல்வது உண்மைதான். ஆனால் நெடுங்கிள்ளியின் பகை அத்தகையதன்று. ஒரு குலத்திற் பிறந்தமையால் உண்டான ஆசை அது. அவனும் சோழ குலத்திற் பிறந்தவன். நீங்களும் அக் குலத்திற் பிறந்தீர்கள். உங்கள் தலையில் அணிந்திருக்கும் அடையாள மாலையாகிய ஆத்தியையே அவனும் கண்ணியாக அணிந்திருக்கிறான். இரண்டு பேரும் போர் செய்து, ஒருவர் தோற்றுப்போனால், ‘சோழன் தோற்றான்’ என்றே உலகம் சொல்லும். வெற்றி யாரேனும் ஒருவர் பங்கில்தான் இருக்கும். ஒருவர் வென்றால் மற்றவர் தோற்பார். தோல்வியுறுபவன் நெடுங்கிள்ளியாக இருந்தாலும் அவன் வந்த குடிக்கு அது தோல்வி; அந்தக் குடி உங்கள் இருவருக்கும் உரிய சோழகுலமல்லவா?”

நலங்கிள்ளி வியப்பில் ஆழ்ந்தான். புலவர் பெருமான் சோழர் குடிப் பெருமையிலே கருத்தூன்றிப் புலவர் குடிக்கு நேர்ந்த துன்பத்தை மறந்து விட்டாரென்பதை எண்ணியே வியந்தான்.

“யோசித்துப் பாருங்கள். சோழர் குடிப் பெருமை மிகமிகப் பழங் காலமுதல் வளர்ந்து வருவது. இதை அழிப்பது முறையன்று. கொண்டும் கொடுத்தும் உறவை வலிமைப்படுத்த வேண்டும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. நெடுங்கிள்ளி தங்களைக் காட்டிலும் ஆண்டில் முதிர்ந்தவன். இன்னும் சில ஆண்டுகளே வாழ்வான். அதுவரையில் அவன் அமைதியாக வாழும்படி நாட்டின் ஒரு பகுதியில் அவனை நிறுவி ஆட்சி புரியச் செய்யலாம்; அவனும் பதவி மோகத்தால் விளைவதை எண்ணாமல், அறியாமையால் ஏதேதோ செய்துவருகிறான். ஒரு குடியிற் பிறந்தவர்கள் தமக்குள் முரண்பட்டுப் போர் செய்தால் குடிப் பெருமைக்கு இழுக்கு வந்து விடும். தொன்றுதொட்டு இந்தக் குடிக்குப் பகைவராக இருக்கும் சேர பாண்டியர்கள் இந்த நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். ஆதலின், நெடுங்கிள்ளியின் விருப்பத்தை அறிந்து ஒருவகையாக நிறைவேற்றி, இனி இத்தகைய சண்டை நேராமல் அமைதியை உண்டாக்குவது தான் தக்கது என்று எனக்குத் தோன்றுகிறது.”— கோவூர் கிழார் தம் பேச்சை நிறுத்தினார். அரசன் சிந்தனையுள் ஆழ்ந்தான். அமைச்சர்கள் கோவூர் கிழார் பேசியதைக் கேட்ட பிறகு, அவர் கூறும் வண்ணமே செய்தல் நலம் என்று தெளிந்தார்கள்.

சிறிது நேரங் கழித்து நலங்கிள்ளி கோவூர் கிழாரை நோக்கிப் பேசலானான்: “புலவர் பெருமான் கூறியது அனைத்தையும் நான் சிந்தித்தேன். அமைதி வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஆனால் அவன் அதற்கு இடங் கொடுக்கவில்லையே! அவன் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தானே சோழ அரசுக்கு உரியவனாக முடி சூட வேண்டுமென்று அவன் விரும்பினால் அதற்கு நாம் உடம்படுவதா?”

இப்போது புலவர் அதற்கு விடை கூறினார்; “அவனுக்கு அந்த ஆசை இருப்பது இயல்புதான். ஆனாலும் இதுகாறும் அவனுடைய முயற்சி ஒன்றும் பயன்படவில்லை. யாரோ நண்பர்கள் அவ்வப்போது தூண்டி விடுவதனால் இத்தகைய காரியங்களைச் செய்கிறான் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் அவனை அணுகி, எப்படியாவது அவனுக்கு நல்லுரை கூறி இனித் தொல்லை கொடுக்காமல் வாழும்படி செய்யக் கூடும் என்று நினைக்கிறேன். என் முயற்சி வெற்றி பெற்றால் எல்லோருக்கும் நன்மை, சோழர் குடிக்கும் இழுக்கு வராது” என்றார்.

“நீங்கள் அவனைத் திருத்த முடியும் என்று உறுதியாக நம்பினால் நான் அதற்குத் தடை கூறவில்லை. எப்படியாவது நாட்டில் அமைதி உண்டானால் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன்” என்று நலங்கிள்ளி கூறினான். அவனுடைய சினம் ஒருவாறு ஆறியது.

மேலே கோவூர் கிழார் தம்முடைய அன்புத் தொண்டிலே ஈடுபட்டார். நெடுங்கிள்ளியிடம் சென்றார். அவனுக்கு நேர்மையான நெறி இது என்று எடுத்துக் காட்டினார். அவருடைய அறிவு நிரம்பிய பேச்சு வென்றது. நெடுங்கிள்ளி சோழ நாட்டின் ஒரு பகுதியைத் தனக்கு உரிமையாகப் பெற்று வாழ ஒப்புக்கொண்டான். நலங்கிள்ளியும் கோவூர் கிழார் கூறியதற்கு இணங்கினான்.

மீட்டும் சோழ நாட்டில் அமைதி நிலவியது. நெடுங்கிள்ளி தன் பகையுணர்ச்சியையும் ஆசையையும் விட்டொழித்து அமைதியாக வாழ்ந்தான். நலங்கிள்ளி பழையபடியே உறையூரில் இருந்து அரசாட்சி செய்து வந்தான். கோவூர் கிழாருடைய நட்பால் தனக்கு வரும் புகழையும் நன்மைகளையும் நன்கு உணர்ந்து அவரைப் போற்றிப் பாராட்டி வணங்கினான்.

சில ஆண்டுகளில் நெடுங்கிள்ளி இறந்தான். காரியாறு என்ற இடத்தில் அவனுக்குச் சமாதி கட்டினார்கள். அதனால் அவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியென்று பிற்காலத்தார் வழங்கினர்.