கோவூர் கிழார்/புலவர் உயிரைமீட்டல்
புலவர் உயிரை மீட்டல்
ஆவூர்க் கோட்டையினின்றும் சென்ற நெடுங்கிள்ளிக்குக் கோவூர் கிழார் கூறிய அறிவுரைகள் நெடுநாள் மனத்தில் இருக்கவில்லை. கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளைக்கு நிற்கும்? ஊருக்குப் போனவுடன் அவனுடைய நண்பர்கள் அவனுக்கு வேறு வகையில் உரை ஏற்றினார்கள். “கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமற் போனது போலப் பற்றிக் கொண்ட கோட்டையைக் கைவிடலாமா? எங்களுக்குச் சொல்லியனுப்பியிருந்தால் முற்றுகையிட்டிருந்த படையைத் தாக்கி உங்களுக்குத் துணையாக வந்திருக்கமாட்டோமா? தக்க சமயத்தைக் கைவிட்டுவிட்டீர்களே! இனி இப்படி வேறு காலம் வாய்க்குமா?” என்று கேட்டார்கள்.
சோழ நாட்டில் சோழ மன்னனுக்கு அடங்கிய குறுநில மன்னர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களை வேளிர் என்று வழங்கினார்கள். அவர்கள் தங்களுக்கென்று சிறிய சிறிய ஊர்களை உரிமையாக வைத்துக்கொண்டு சோழ அரசனுக்குத் திறை அளந்து வாழ்ந்து வந்தார்கள். எப்படியாவது சோழ மன்னனுக்கு அமைதியில்லாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இருந்தது. உண்மையில் நலங்கிள்ளியிடத்திலும் அவர்களுக்கு அன்பு இல்லை; நெடுங்கிள்ளியிடத்திலும் அன்பு இல்லை. சோழ நாட்டைச் சோழ மன்னரே ஆண்டு வரவேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. ஆதலால் எப்போதும் குறும்பு செய்து அமைதியைக் கெடுப்பதே அவர்களுடைய வேலையாக இருந்தது. பெருமன்னனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதில் அவர்கள் வல்லவர்கள். அத்தகையவர்களே இப்போது நெடுங்கிள்ளியினிடம் வந்து அவன் நெஞ்சத்தில் ஆறியிருந்த பகைக்கனலை மீட்டும் மூட்டினார்கள்.
”இடம் பொருள் ஏவல்கள் கைகூடியமையால் நலங்கிள்ளிக்கு உறையூரில் இருந்து அரசாளும் உரிமை கிடைத்தது. அந்த உரிமையை நீங்கள் இழந்து நிற்கிறீர்கள். உண்மையை ஆராய்ந்தால் நீங்களே சோழ நாட்டு ஆட்சிக்கு உரியவர்கள். நலங்கிள்ளி உங்களினும் இளையவன். நீங்கள் எங்களைப் போன்றவர்களின் பலம் இருந்தும் நலங்கிள்ளியை நேரே உறையூருக்குச் சென்று தாக்கி அரியணையைக் கைப்பற்றாமல் வாளா இருக்கிறீர்கள். தக்கபடி சூழ்ச்சி செய்து அத்தகைய முற்றுகைக்கு ஆயத்தம் செய்யுங்கள்; சோழ நாட்டில் உள்ள வேளிர்கள் அத்தனை பேரும் உங்களுக்குத் துணை வருவார்கள்” என்று மீட்டும் நெடுங்கிள்ளிக்கு மண்ணாசையை உண்டாக்கினர்கள்.
அரச குலத்திற் பிறந்தவர்களுக்கு முறையோ, அன்றோ, எப்படியாவது தாங்கள் அரசராக இருக்கவேண்டும் என்ற ஆசை உண்டாவது இயல்பு. அது மிக வளர்ந்துவிட்டால் எல்லாவற்றையும் அடியோடு இழக்கும் வரைக்கும் அவர்களுடைய பகை முயற்சிகள் நிற்பதில்லை. இக்காலத்தில் பங்காளிகள் சில சொத்துக்களுக்காக வழக்கிட்டு நீதிமன்றங்களிலெல்லாம் ஏறித் தம்முடைய பொருளத்தனையையும் இழந்து நிற்பதையும், அப்படி இழந்தாலும் மறுபடியும் வழக்குத் தொடுக்கப் பல வகையில் முயல்வதையும் நாம் பார்க்கிறோம். நிலங்களுக்காக இவ்வளவு தூரம் போராடும் மன இயல்பே அக்காலத்தில் அரச குலத்தினரிடம் பெரிய உருவை எடுத்து நின்றது.
வேளிர்கள் மெல்ல மெல்ல நெடுங்கிள்ளியின் மனத்தை மாற்றினார்கள். அவன் மறுபடியும் நலங்கிள்ளி சோர்ந்திருக்கும் சமயம் பார்த்து உறையூரையே கைப்பற்ற வேண்டுமென்று எண்ணியிருந்தான்.
ஒரு சமயம் நலங்கிள்ளி சோழ நாட்டிலே மூண்ட கலகம் ஒன்றை அடக்குவதற்காக ஒரு படையுடன் நேரே சென்றிருந்தான். ஓர் அரசன் புதிதாக ஆட்சிக்கு வந்தால் அவன் பெரும் படையும் தக்க துணையும் உடையவனாக இல்லாமல் இருப்பின் அமைதியாக ஆட்சி புரிவது எளிதன்று. தமிழ் நாட்டு மன்னர்களுக்குள் அடிக்கடி போர்கள் நிகழ்ந்த செய்தியைப் பழைய நூல்களில் காண்கிறோம். மிகப் பெரிய போராக இல்லா விட்டாலும், சிறிய சிறிய போர்கள் நிகழும். சேர சோழ பாண்டியர் குடியிற் பிறந்த மன்னர்கள் இத்தகைய சிறிய போர்கள் பல செய்து வெற்றியடைந்ததைத் தெரிவிக்கும் பாடல்கள் சங்க காலத்து நூல்களில் இருக்கின்றன.
நலங்கிள்ளி ஆட்சிக்கு வந்து பல ஆண்டுகள் ஆயினும் உள்நாட்டுப் பகையை முற்றும் ஒழிக்கவில்லை. நெடுங்கிள்ளி நினைத்தபோதெல்லாம் இடையூறு செய்து வந்தான். வேறு குறுநில மன்னர்களும் அடிக்கடி அல்லல் கொடுத்து வந்தார்கள். அதனால் நலங்கிள்ளி அமைதியாக வாழ முடியவில்லை.
அவன் தன் படையுடன் உறையூரை விட்டுப் போயிருந்த சமயத்தில் நெடுங்கிள்ளி சில வேளிர்களுடைய துணையுடன் உறையூருக்குட் புகுந்து கொண்டான். ஒரு நாளாவது உறையூர் அரண்மனையில் சோழருக்குரிய அரியணையில் அமர வேண்டும் என்பது அவன் ஆசை. அப்படியே அவன் உறையூரிற் புகுந்து அரண்மனையைத் தனதாக்கிக் கொண்டான். ஊரில் உள்ளவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. ஆவூர்க் கோட்டையை விட்டுச் சென்ற பிறகு நெடுங்கிள்ளியால் எந்த வகையான இடுக்கனும் நேராது என்று நலங்கிள்ளி எண்ணியிருந்தான். அவனைச் சார்ந்தவர்களும் அப்படியே நினைத்தார்கள். அவனுடைய பகைமைக் கனல் உள்ளே கனன்று கொண்டிருந்ததை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
நலங்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி உறையூரைக் கைக்கொண்ட செய்தி தெரிந்தது. நெடுங்கிள்ளியை ஒன்றும் செய்யாமல் விட்டது தவறு என்று அவனுக்குத் தோன்றியது. செய்யும் தொழிலிற் குறை வைத்தாலும், பகைவனை அடுவதில் குறை வைத்தாலும் தீயை விட்டு வைத்தாற் போல இறுதியில் அழிவை உண்டாக்கிவிடும் என்று அரசியல் நூல்கள் கூறுவது எத்தனை உண்மை என்பதை இப்போது அவன் தெளிவாக உணர்ந்தான்.
அவன் உறையூரில் இல்லாதிருந்தமையால் கோவூர் கிழார் வேறிடங்களுக்குச் சென்றிருந்தார். புலவர்கள் எப்போதும் ஓரிடத்தில் தங்கியிருப்பது வழக்கம் அன்று. அவர்கள் இருந்தாலும் தமிழ் நாட்டு மக்கள் அவர்களை இருக்கச் செய்வதில்லை. சோழ நாட்டிலே பிறந்தவரானாலும் மற்ற நாடுகளில் உள்ள மன்னர்களும் புலவர்களும் மக்களும் கோவூர் கிழாருடைய புலமை நலத்தை உணர்ந்து அவரை வரவேற்றார்கள். அதனால் அவர் உறையூரினின்றும் புறப்பட்டுப் பாண்டி நாட்டுக்குப் போயிருந்தார். நெடுங்கிள்ளி இப்படிச் செய்வான் என்று அவரும் எண்ணவில்லை.
நலங்கிள்ளி விரைவில் தன் வேலையை முடித்துக்கொண்டு ஆவூர்க்கோட்டையில் வந்து தங்கினான். இந்த முறை நெடுங்கிள்ளியை அடியோடு தொலைத்துவிட வேண்டும் என்ற ஆத்திரம் அவனுக்கு உண்டாயிற்று. என்ன செய்யலாம் என்பதை யோசித்தான். கோவூர் கிழார் ஊரில் இல்லாதது பெருங் குறையாக இருந்தது. அவர் இருந்தால் போரின்றியே சமாதானம் செய்ய முயலுவார். எதற்கும் வேறு ஒரு புலவரைத் தூதாக அனுப்பி நெடுங்கிள்ளிக்கு அறிவுரைகூறச் செய்ய நினைத்தான். இளந்தத்தனார் என்னும் புலவர் அப்போது நலங்கிள்ளியினிடம் வந்திருந்தார். அவருக்கு வேண்டிய பரிசில்களை வழங்கி, “நெடுங்கிள்ளியிடமும் போய்ப் பாடி அவன் உறையூரை அடைத்துக்கொண்டிருப்பது தவறு என்பதை எடுத்துக் காட்டுங்கள்” என்று சொல்லி அவரை அனுப்பினான். புலவர்களுக்குச் சமாதானம் செய்விப்பதில் விருப்பம் அதிகம். உலகனைத்தும் பகைமையின்றிப் போரின்றி வாழ வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம். அதற்குத் தங்களால் இயன்றவற்றைச் சந்தர்ப்பம் நேரும் பொழுதெல்லாம் செய்வார்கள்.
புலவர் இளந்தத்தனார் தமக்குச் சந்து செய்விக்கும் வாய்ப்புக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைந்தார். “கோவூர்கிழார் இப்போது இருந்தால் அவர் மிக்க திறமையுடன் இதனைச் செய்து வெற்றி பெறுவார். அவருக்கு உள்ள சொல்லாற்றலும் புலமையும் ஒளியும் என்னிடம் இல்லை. ஆயினும் நல்ல செயலை ஒல்லும் வகையில் செய்வது என் கடமை” என்று சொல்லி நலங்கிள்ளியிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். உறையூரை அணுகித் தாம் புலவர் என் பதை அறிவித்துக் கோட்டைக்குள் சென்றார். யாரோ ஒற்றன் அப் புலவர் நலங்கிள்ளியிடம் சென்று வருவதைக் கவனித்தான். அவரைப் புலவர் என்று தெளியாமல், நலங்கிள்ளியினுடைய ஒற்றன் புலவர் கோலம் புனைந்து வருகிறான் என்று எண்ணிவிட்டான். தன் கருத்தை நெடுங் கிள்ளியிடமும் தெரிவித்தான்.
இளந்தத்தனார் அரண்மனைக்குட் புகுந்து நெடுங்கிள்ளியை அணுகினார். அவனே வாழ்த்தினார். அவரை ஒற்றனென்று எண்ணிய நெடுங்கிள்ளி உடனே அவரைப் பற்றிச் சிறையில் வைக்கப் பணித்தான். பாவம்! புலவர் என்ன என்னவோ சொல்லிப் பார்த்தார். நெடுங்கிள்ளி நம்பவில்லை. அவர் சிறைக்குட் புகுந்தார். அவரை ஒறுத்து நலங்கிள்ளியைப் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும்படி ஏவினான் நெடுங்கிள்ளி.
உறையூருக்குள் சென்ற இளந்தத்தனார் வரவில்லையே என்று காத்திருந்தான் நலங்கிள்ளி. புலவர் சிறைப்பட்ட செய்தி அவனுக்குத் தெரியாது. சில நாட்கள் சென்றன. நெடுங்கிள்ளி செய்யும் உபசாரத்தால் புலவர் மயங்கி அங்கேயே தங்கிவிட்டார் என்று எண்ணினான். ஆனால் அந்த எண்ணம் அவனுக்கு நீடிக்கவில்லை. ஒருகால் புலவருடைய அருமை தெரியாமல் ஏதேனும் தவறு செய்திருப்பானோ என்ற ஐயமும் உண்டாயிற்று. இப்படி அவன் கலங்கிக்கொண்டிருந்தபோது கோவூர் கிழார் வந்தார். சென்ற இடத்தில் அவருக்குச் சோழ நாட்டுச் செய்திகள் தெரிந்தன. நெடுங்கிள்ளி மறுபடியும் பழைய குற்றத்தையே செய்யத் துணிந்ததைக் கேள்வியுற்றார். அவனை உயிரோடு ஆவூரினின்றும் வெளியேறச் செய்த பொறுப்புடையவராதலால், இப்போதும் ஏதாவது செய்து இரண்டு கிள்ளிகளுக்குமிடையே நிலையான சமாதானத்தைச் செய்விக்க வேண்டும் என்ற ஆவலோடு வந்து சேர்ந்தார்.
வந்தவுடன் நலங்கிள்ளியை அணுகி நிகழ்ந்தவற்றைத் தெரிந்துகொண்டார். நெடுங்கிள்ளி உறையூரைக் கைப்பற்றியதை எண்ணிச் சினந்திருந்த நலங்கிள்ளி இப்போது இளந் இளந்தத்தனார் நிலை என்ன ஆயிற்றோ என்ற கவலையில் மூழ்கியிருந்தான். அதனை அறிந்த கோவூர்கிழார் சிறிதும் காலம் தாழ்த்தாது உடனே புறப்பட்டு விட்டார், உறையூரை நோக்கி. கோட்டைக்குள்ளே புகுந்தார். புகும்போதே விசாரித்துக் கொண்டு சென்றார். இளந்தத்தனாரை ஒற்றனென்று பற்றிச் சிறையில் வைத்திருக்கும் செய்தியைக் கேள்வியுற்றார். புலவருக்குத் தீங்கு இழைக்குமளவுக்கு மன்னன் துணிந்துவிட்டதை எண்ணி வருந்தினர். இதுமட்டுமன்று; அரண்மனையை அடைந்தபோது அவர் அறிந்த செய்தி அவரைக் கலக்கிவிட்டது. புலவர் இளந்தத்தனாரைக் கொல்லும்படி நெடுங்கிள்ளி கட்டளையிட்டு விட்டானாம். அவர் துடிதுடித்துப் போனார். யாரையும் எதையும் சட்டை செய்யாமல் விரைந்து அரண்மனைக்குள்ளே சென்றார். அவரை அறியாதவர்கள் யாரும் அங்கே இல்லை; அவரை மதிக்காதவர்களும் இல்லை. அவர் வந்த செய்தி எங்கும் பரவிவிட்டது.
நேரே நெடுங்கிள்ளியிடம் சென்றார். அவருக்குச் சினம் உண்டாவது அரிது. ஆயினும் இப்போது கோபம் உண்டாகியிருந்தது. படபடப்புடன் பேசினார்: “அரசே! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? ஏழைப் புலவன் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வதென்று நினைத்துவிட்டாயா? தமிழ் நாட்டில் இதுகாறும் மன்னர்கள் செய்ய அஞ்சிய செயலைச் செய்யும் துணிவு உனக்கு எப்படி வந்தது?” என்று வேகமாகப் பேசினார்.
நெடுங்கிள்ளி கோவூர் கிழாரைக் கண்டவுடனே உள்ளூற அச்சங்கொண்டான்; புலவர் பெருமானே! அமர வேண்டும்” என்றான்.
நான் அமர மாட்டேன். முதலில் புலவர் இளந்தத்தனாரைச் சிறையினின்றும் விடுதலை செய், பிறகுதான் நான் அமர்ந்து பேச இயலும்” என்றார்.
புலவனா? ஒற்றனல்லவா அவன்? புலவனென்று நான் ஏமாந்து போவேனா?
கோவூர் கிழாருக்குக் கோபம் அதிகமாயிற்று. மன்னர்களுக்கு, அதுவும் பகையுணர்ச்சியுள்ள மன்னர்களுக்கு, கண் சரியாகத் தெரியாது. புலவர்களை அறிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமற் போவதைக்காட்டிலும் பெரிய தவறு இல்லை. நான் புலவன். நான் சொல்லுகிறேன்: இளந்தத்தனார் என்னைப்போல ஒரு புலவர்” என்று கூறினார்.
“புலவர் பெருமானே! மன்னிக்க வேண்டும்; அவர் புலவர் என்பதற்கு அடையாளம் என்ன?”
“அடையாளமா கேட்கிறாய்? அவரிடத்தில் உள்ள புலமை அடையாளம்; அவரிடத்தில் குடி கொண்டிருக்கும் தமிழ் அடையாளம். அவர் பொன்னும் பட்டாடையும் புனைந்து மன்னரைப் போல் இருக்க மாட்டார். எங்களுக்குச் செல்வம் இல்லை; ஆரவாரம் இல்லை; பொன் இல்லை; கண்ணைக் கவரும் ஆடையணிகள் இல்லை; அடையாளங்கள் இல்லை. யார் தரமறிந்து பாராட்டு பாராட்டுகிறார்களோ அவர்களை நாடுவோம். வரிசையறியும் வள்ளல்களைத் தேடி அவர்களிடம் வரிசைக்கேற்ற பரிசில் பெறுவதற்காக ஏங்கிக் கிடக்கும் வாழ்க்கை இது. எங்களால் யாருக்கும் தீங்கே உண்டாவதில்லை. எங்களுக்குப் பகைவர் யாரும் இல்லை. எல்லா ஊரும் எங்கள் ஊரே. எல்லாரும் எங்கள் சுற்றத்தார். நாடுடைய அரசர்களுக்குத் தான் வலிமையும் பெருமையும் உண்டென்று சிலர் நினைக்கிறார்கள். எங்களுக்கும் இறுமாப்பு உண்டு; பெருமிதம் உண்டு. மண்ணையாளும் செல்வத்தையுடைய நீங்கள் நில வேந்தர். நாங்கள் புல வேந்தர். எங்களை ஏழைகள் என்று எண்ண வேண்டாம். எங்களுக்கு அறிவுடையுலகம் தலை பணியும்; துணை நிற்கும். எங்களைப் பகைத்துக் கொண்டவர்கள் நாணத்தை அடைந்து தலை யிறக்கமடையும்படி உலகம் செய்துவிடும். நாங்கள் எப்போதும் யாருக்கும் தலை குனியமாட்டோம்.”
அவருடைய மனத்தில் உள்ள கோபத்தின் அளவை நெடுங்கிள்ளி உணர்ந்துகொண்டான். மன்னர்களை யெல்லாம் பகைத்துக்கொண்டாலும் புலவர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது. புலவர்களுக்குத் தீங்கு இயற்றுபவர்கள் இம்மை, மறுமை இரண்டையும் இழப்பார்கள். உலகம் உள்ளளவும் அவர்களுடைய பழி நிற்கும். இந்த உண்மைகளை நெடுங்கிள்ளி அறியாதவன் அல்லன். இளந்தத்தனாரைப் புலவர் என்று அவன் நினைக்கவில்லை; ஒற்றனென்றே உறுதியாக எண்ணிவிட்டான். அதனால்தான் கோவூர் கிழாரின் கோபத்துக்கு ஆளானான்!
உடனே இளந்தத்தனாரை விடுவிக்கச் செய்தான். கோவூர் கிழார் சிறிது நேரங் கழித்து வந்திருந்தால் இளந்தத்தனாரின் உயிரை மீட்க முடியாமல் போயிருக்கும். நல்ல வேளை தக்க சமயத்தில் வந்து அவரைக் காப்பாற்றினர். நெடுங்கிள்ளியுடன் நெடுநேரம் பேச அவருக்கு விருப்பம் இல்லை. தாம் வந்த காரியம் நிறைவேறினவுடன் இளந்தத்தனாரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். அவருடைய கோபத்தை நேரிலே கண்ட நெடுங்கிள்ளியும் அவரைத் தங்கிச் செல்லும்படி சொல்லாமல் விடை கொடுத்தனுப்பினான்.
கோவூர் கிழார், புலவர் இளந்தத்தனர் உயிரை மீட்ட மகிழ்ச்சியோடு உறையூர்க் கோட்டையினின்றும் வெளிவந்தார். இளந்தத்தனாரையும் உடன் அழைத்துக்கொண்டு நலங்கிள்ளியை அணுகினார்.