உள்ளடக்கத்துக்குச் செல்

கோவூர் கிழார்/ஆவூர் முற்றுகை

விக்கிமூலம் இலிருந்து
5
ஆவூர் முற்றுகை

நலங்கிள்ளி உறையூருக்கு வந்து சேர்ந்தவுடன் அவனுடைய நாட்டில் நிகழ்ந்த ஒரு புதிய நிகழ்ச்சியைக் கேள்வியுற்றான். சேரனும் பாண்டியனும் நலங்கிள்ளியின் ஆற்றலுக்கு அஞ்சிப் போரை நிறுத்திப் பணிந்தனர். ஆனால் இங்கே சோழநாட்டின் அரியணைக்குத் தானே தனியுரிமையுடையோன் என்று சொல்லிக்கொண்டிருந்த நெடுங்கிள்ளி சிறிதேனும் அஞ்சாமல் ஆவூர்க் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். சோழன் நலங்கிள்ளியும் அவனுடைய படையும் பாண்டி நாட்டின்மேற் படையெடுத்துச் சென்றிருந்தபோது, இதுதான் ஏற்ற காலமென்று எண்ணிய நெடுங்கிள்ளி ஒரு சிறு படையுடன் சென்று ஆவூரைத் தாக்கினான். ஆவூரில் ஒரு கோட்டை இருந்தது. ஒரு சிறிய படையும் இருந்தது. ஆனால் அந்தப் படை அப்போது பாண்டி நாட்டுக்குச் சென்றிருந்தது. ஆவூர்க் கோட்டை அப்போது தக்க பாதுகாப்பு இல்லாமல் இருந்ததென்றே சொல்லவேண்டும். நெடுங்கிள்ளி இப்படிச் செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதுகண்ணன் சாத்தனார் இருந்த காலத்தில் அவர் கூறியபடி நலங்கிள்ளி வஞ்சின மொழியாக அமைத்த பாட்டை நெடுங்கிள்ளிக்கு அனுப்பினானே, அப்பொழுது முதல் அவன் தன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் இருந்தான்.

இனிமேல் இவனால் நமக்கு எவ்விதமான இடையூறும் நேராது’ என்று சோழனும் அவனுடைய அமைச்சர்களும் எண்ணிவிட்டார்கள். ஆனால் நெடுங்கிள்ளி மாத்திரம் சமயம் வரும் வரையில் பேசாமல் இருக்கும் கொக்கைப் போலக் காத்திருந்தான். நலங்கிள்ளி தென்னாட்டுக்குப் படையுடன் சென்றிருந்த வாய்ப்பான சமயம் கிடைத்தது. பாதுகாப்பு இல்லாமல் இருந்த ஆவூரை எளிதிலே பற்றிக்கொண்டான்.

ஊர்புகுந்த நலங்கிள்ளி இதனைக் கேட்டான். அவனுக்குச் சிரிப்பாக வந்தது. ‘பெரிய பகைவர்களையெல்லாம் மண்ணைக் கவ்வச் செய்துவிட்டு வருகிறோம்; இந்தச் சிறிய மனிதன் நம்மிடம் சிறு குறும்பு செய்கிறானே! பாண்டியனை ஓட்டவும் நம் படையை ஏவுவது; இந்தச் சிறியோனை மடக்கவும் நம்முடைய பெரும் படையை ஏவுவதா?’ என்று அவனுக்குத் தோன்றியது.

நலங்கிள்ளி வழக்கம்போல் தன் அமைச்சர்களின் யோசனையைக் கேட்டான். கோவூர் கிழாரையும் கேட்டான். நெடுங்கிள்ளியிடம் தூதனுப்பி, ஆவூர்க் கோட்டையை விட்டுப் போகாவிட்டால் முற்றுகையிட்டு அவனைச் சிறை பிடிக்க நேரும் என்று சொல்லும்படி செய்வதாக முடிவு செய்தார்கள். அப்படியே ஒருவன் சென்று ஓலையை நெடுங்கிள்ளியினிடம் நீட்டினான். நலங்கிள்ளியின் வார்த்தைகளை அறிந்து அவன் நகையாடினான். “உங்கள் மன்னனுக்கு அஞ்சுகிறவன் அல்லன் நான். எனக்குப் படைப்பலம் உண்டு” என்று விடை கூறி அனுப்பினான்.

இந்த அசட்டுத் தைரியத்தைக் கண்டு கோவூர் கிழார் இரங்கினார். மண்ணாசை என்பது எவ்வளவு தூரம் அறிவை மயக்கிவிடுகிறது என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். பாண்டி நாடும் சேர நாடும் சோழனுடைய படைப் பலத்தைப் பாராட்டிக்கொண்டிருக்கையில் நெடுங்கிள்ளி அதை இகழ்ந்தான். இதைக் காட்டிலும் பேதைமை வேறு உண்டா?

இனி வேறு வழியில்லையாதலால் ஆவூரை முற்றுகை இடுவதாக அரசன் துணிந்தான். கோவூர் கிழார் அரசனிடம் ஒன்று கூறினார். “ஆவூருக்குப் படைகளுடன் சென்று கோட்டையைச் சூழ்ந்துகொண்டாலே போதும்; போர் செய்ய வேண்டாம். கோட்டையையும் அழிக்க வேண்டாம். அந்தக் கோட்டை அரசர்பிரானுடைய முன்னோர்களால் கட்டப்பெற்றது. நெடுங்கிள்ளி உள்ளே பதுங்கியிருக்கிறானென்று அந்தக் கோட்டையைத் தகர்த்தல் நல்லது அன்று. புறத்திலே படைகள் சூழ்ந்து நின்றால் உள்ளே ஒன்றும் செல்ல இயலாது. உள்ளே உள்ளவர்களுக்கு உணவுப் பொருள் முதலியவை போகாவிட்டால் கோட்டைக்குள் இருக்கும் படை வீரர்கள் பசியினால் துன்பம் அடைவார்கள். பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். ‘உணவு வேண்டும், உணவு வேண்டும்’ என்று அவர்கள் கதறுவார்கள். அவர்களுடைய கூக்குரல் தாங்காமல் நெடுங்கிள்ளி, ஒன்று இந்தக் கோட்டையை விட்டு ஓடிப்போவான்; அல்லது உள்ளே இருந்து சாவான்” என்றார். அவர் சொன்னது தக்கதென்பதை உணர்ந்து அவ்வாறு செய்வதாகவே வாக்களித்தான் மன்னன்.

அதன்படியே நலங்கிள்ளி தன் படையின் ஒரு பகுதியையும் அதனுடன் ஒரு படைத் தலைவனையும் அனுப்பினான். படை ஆவூர்க் கோட்டையைச் சூழ்ந்துகொண்டது. ஆனால் கோட்டை வாயிற்கதவை மோதி அழிக்கவில்லை. அரசன் முற்றுகை மாத்திரம் இடச் சொல்லியிருந்ததே காரணம். கோட்டைக்குள் நெடுங்கிள்ளி தன் படையுடன் இருந்தான். நலங்கிள்ளியின் படை முற்றுகையிட்டதைக் கண்டு அவன் அஞ்சவில்லை. தன்னுடைய படைவீரர்களை அம்பு எய்யும்படி ஏவினான். அவர்கள் மதிலின்மேல் ஏறி அம்பு எய்யும் புழைக்கருகில் மறைந்து எய்தார்கள். நலங்கிள்ளியின் படைவீரர்கள் தக்க கவசங்களை அணிந்து கேடயங்களுடன் வந்திருந்தார்கள். ஆதலின் உள்ளிருப்போர் விட்ட அம்பு அவர்களுக்கு அதிக ஊறுபாட்டை உண்டாக்கவில்லை. புறத்தே நின்ற படைவீரர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொண்டார்களேயன்றி, மதிலின் மேல் ஏறவோ, உள்ளே ஆயுதங்களை வீசி எறியவோ முயலவில்லை. புறத்தே நின்றவர்கள் போர் செய்யாமல் இருக்கும்போது அம்பை எய்து ஏன் வீண் செய்யவேண்டுமென்று அகத்தில் இருந்தவர்கள் தொடர்ந்து அம்பு எய்வதை நிறுத்திக்கொண்டார்கள்.

மதிலுக்குப் புறத்தே தங்கியிருந்த படைகள் காவலாக நின்றன. மதிலின் உள்ளே அகப்பட்ட படைகள் நான்கைந்து நாட்கள் ஒரு குறையும் இன்றி இருந்தன. படை வீரர்களும் மன்னனும் பல குடும்பத்தினரும் ஆவூர்க் கோட்டைக்குள் இருந்தார்கள். ஓரளவு சேமித்து வைத்திருந்த நெல் முதலிய உணவுப் பொருள்களை வைத்துக் கொண்டு அவர்கள் நாட்களைக் கழித்தார்கள். வர வர அவர்களிடம் இருந்த பொருள்கள் சுருங்கின. மனம் போனபடி போக இயலாமல், சிறைப்பட்டவர்களைப்போலக் கோட்டைக்குள் இருந்த மக்கள் துன்புறத் தொடங்கினார்கள்.

யானையைக் கட்டித் தீனிபோடுவது எளிய செயலா? உள்ளே யானைப் படை இருந்தது. அது சிறிய படையேயாயினும் அதில் இருந்த யானைகளுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. உணவுப் பொருள்கள் சுருங்கச் சுருங்க மக்கள் தம் உணவைக் குறைத்துக்கொண்டனர். குழந்தைகளுக்கும் கணவன்மார்களுக்கும் உணவை அளித்துவிட்டு மகளிர் தாம் ஒரு பொழுது மாத்திரம் உண்ணலாயினர்.

இந்த அவலமான நிலையிலும் நெடுங்கிள்ளி தன் பிடிவாதத்தை விடவில்லை. “எல்லாரும் மடிந்தாலும் கோட்டைக் கதவைத் திறந்து பகைவரை வரவேற்கமாட்டேன்” என்று இருந்தான். தன் கண்முன்னே மக்கள் வாடுவதை அவன் கண்டான். குழந்தைகள் பாலின்றி அழுவதைக் கேட்டான். அவன் மனம் மாறவில்லை. அவனுடைய அசட்டுத் துணிவைக் கண்டு கோட்டையில் உள்ளவர்கள் அஞ்சினார்கள். தலைவன் எவ்வழி நடக்கிறானோ, அவ்வழியே நடப்பதையன்றி அவர்களால் செய்யத்தக்க ஒன்றும் இல்லை.

பல நாளாக முற்றுகையிட்டிருந்தும் நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறவாமலே இருப்பதைக் கண்டபோது வெளியில் இருந்தவர்கள் அவனுடைய துணிவை எண்ணி வியந்தார்கள்; சிலர் அவனுடைய அறியாமையால் வீணே பல குடும்பங்கள் நாசமாகின்றனவே என்று இரங்கினார்கள்.

எல்லாரும் அமைதியாக வாழவேண்டும் என்ற நோக்கம் உடையவன் சோழன் நலங்கிள்ளி. முதுகண்ணன் சாத்தனார் இளமையிலிருந்தே அவனுக்குப் பகர்ந்த நல்லுரைகள் அவனை அப்படி ஆக்கியிருந்தன. இன்றியமையாத சமயங்களிலன்றிப் போரிடுவது தகாதென்றே அவன் உறுதியாக எண்ணினான். அவன் நினைத்திருந்தால் ஆவூர்க் கோட்டைக்குள் இருந்த நெடுங்கிள்ளியை வெளிவரச் செய்திருக்கலாம். போரைத் தொடங்குவது எளிது. ஆனால் அதை நடத்தி வெற்றி பெறுவதற்குள் இரு படையிலும் பலர் உயிர் இழப்பார்கள். ஆதலால் இயன்ற வரையில் போர் செய்யாமல் காலங்கடத்தவே அவன் விரும்பினான்

இப்போது நிலைமை வேறுவிதமாக இருந்தது. நெடுங்கிள்ளி கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டுவிடவில்லை. அங்கு இருப்பவர்கள் என்ன ஆனார்களோ! அவர்களைக் காப்பாற்றும் பொருட்டாகவாவது மதிற்கதவை உடைத்து உள்ளே புகலாமா என்று எண்ணினான். மதிலின்மேல் தன் வீரர்களை ஏறச்செய்து உள்ளே குதித்துக் கோட்டைக் கதவைத் திறக்கச் செய்யலாமா என்று யோசித்தான்.

திடீரென்று அவனுக்கு ஒரு வழி தோன்றியது. அது நிறைவேறினால் உள்ளே உள்ள மக்களுக்கு நன்மை உண்டாகும். பெரும் புலவரும் நல்லமைச்சருமாகிய கோவூர் கிழாரைக் கோட்டைக்குள் அனுப்பி நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறும்படி செய்யலாம் என்பதே அவன் நினைத்த வழி. பகை வேந்தர்கள் போரிட்டுக்கொண்டிருந்தாலும் புலவர்கள் அவர்களைப் போர்க்களத்திலே சென்று பார்ப்பதுண்டு. ஓர் ஊரிலே உள்ள புலவர் அந்த ஊருக்குரிய மன்னனுடைய பகைவன் இருக்கும் ஊருக்குச் செல்லலாம். அந்தப் பகை மன்னன் புலவருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்வான். ஒரு நாட்டுப் படைத் தலைவனை, அமைச்சனை போர் நிகழும் காலத்தில் பகை நாட்டுக்குள் அகப்பட்டால் மீண்டு வரமுடியாது. ஆனால் ஒரு நாட்டிலே வாழும் புலவன், பகை நாட்டுக்குச் செல்லலாம். புலவன் யாருக்கும் பகைவன் அல்லன். போர் நிகழ்ந்தால் போரிடும் வேந்தர்களுக்கிடையே சந்து செய்விக்க முயல்வார்கள் புலவர்கள். தமிழ் மக்கள் அரசனைத் தெய்வத்தைப் போல எண்ணி மதித்தார்கள். மன்னனுடைய பதவிதான் நாட்டிலே மிக மிக உயர்ந்த பதவி. ஆனால் மன்னர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களாகப் புலவர்களை மதித்தனர். புலவர்கள் எல்லாருக்கும் நண்பர்கள்; யாருக்கும் அவர்களிடம் பகை இராது. புலவர்கள் பாடும் புகழை இவ்வுலகத்தில் பெறும் பேறுகளுக்குள் சிறந்ததாகவும், அவர்களாற் பாடப்பெறாமையைப் பெரிய குறையாகவும் தமிழ்நாட்டு மன்னர்கள் எண்ணினார்கள்.

ஆகவே, கோவூர் கிழார் நெடுங்கிள்ளியிடம் சென்றால் அவன் அவரை மதித்து உபசரிப்பான் என்பது யாவருக்கும் தெரியும். கோவூர் கிழார் கோட்டைக்குள் எப்படிச் செல்வது? சென்ற பிறகல்லவா நெடுங்கிள்ளியைக் கண்டு அறிவுரை கூறமுடியும்? அதற்கும் ஒரு தந்திரம் தோன்றியது, நலங்கிள்ளிக்கு. கோவூர் கிழார் நெடுங்கிள்ளியைப் பார்க்க விரும்புகிறார் என்ற செய்தியை ஒர் ஓலையில் எழுதி அதைச் சுருளாகச் சுருட்டி அம்பின் நுனியில் வைத்து அதைக் கோட்டைக்குள் எய்து வீழ்த்தினார்கள். கோட்டைக்குள் இருப்பவர்களுக்குச் சந்து செய்யும் யோசனையையும் மற்றக் கருத்துக்களையும் இந்த வகையாகத் தெரிவிப்பது பழங்கால் வழக்கம்.

ஓலை மதிலுக்குள் சென்று வீழ்ந்தது. நெடுங்கிள்ளியிடம் அந்த ஓலையை எடுத்துச் சென்று காட்டினார்கள். கோவூர் கிழார் வருவார் என்ற செய்தியை அவனுடன் இருந்த படைத் தலைவர்கள் அறிந்தார்கள். செய்தி கோட்டைக்குள் எங்கும் பரவியது. ஒரு வேலையும் இன்றிப் போதிய உணவும் இன்றிக் கோட்டைக்குள்ளே சிறைப்பட்டுக் கிடந்தவர்களில் பெரும்பாலோருக்கு எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமென்ற ஆசை இருந்தது. கோவூர் கிழார் வரப் போகிறார் என்ற செய்தி அவர்களுடைய உள்ளத்தில் புதிய நம்பிக்கை முளைக்கும்படி செய்தது. பாலை நிலத்தில் மழை பெய்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது.

நெடுங்கிள்ளி அந்த ஓலைக்கு விடை அனுப்பினான். எந்தச் சமயத்திலும் கோவூர் கிழாரை வரவேற்கக் காத்திருப்பதாகச் செய்தி அனுப்பினான். சொன்ன சொல்லை மாற்றாமலும் வரம்பு கடவாமலும் தமிழ் மன்னர்கள் நடந்தார்கள். ஆதலால் கோவூர் கிழார் உள்ளே வருகிறார் என்று சொல்லிவிட்டு ஏமாற்றிப் படையை உள்ளே புகுத்திவிடும் எண்ணம் நலங்கிள்ளிக்கு இல்லை.

குறிப்பிட்டபடி கோவூர் கிழார் மாத்திரம் கோட்டைக்குள் நுழைந்தார். மதில் வாயிலில் நின்ற காவலர்கள் அவரை உள்ளே விட்டுக் கதவைச் சாத்திக்கொண்டார்கள். நெடுங்கிள்ளி வாயிலருகிலே நின்று புலவரை வரவேற்றான். கோவூர் கிழாரின் பெருமையைத் தமிழுலகம் முழுவதும் நன்கு அறிந்திருந்த காலம் அது. ஆகவே, அவர் ஏதேனும் சொன்னால் நெடுங்கிள்ளி மறுக்க மாட்டான் என்று யாவரும் நம்பினர்.

புலவர் பெருமான் கோவூர் கிழார் உள்ளே புகுந்து சுற்றிப் பார்த்தார். யானைப் படையைப் பார்த்தார். தக்கபடி உணவு பெறாமல் யானைகள் மெலிந்திருந்தன. அடிக்கடி பசி தாங்காமல் ஆர்த்தன. மகளிர் முகத்தில் ஒளியே இல்லை. வேண்டிய அளவு சோறு, தண்ணீர் இல்லாமல் மக்கள் வருந்தினார்கள். அவருக்கே துயரம் பொறுக்கவில்லை. நெடுங்கிள்ளியை அணுகினார். அவர் முன் அமர்ந்தார்.

“அரச குலத்திலே பிறந்து மிக்க வலிமையோடிருக்கும் தலைவன் நீ; இங்கே நீயாக மேற்கொண்ட சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறாய் இது தகுமா?” என்று கேட்டார்.

“அரசர்களுக்கு வழக்கமான செயல்தானே இது?” என்றான் நெடுங்கிள்ளி.

“அரசருக்கு இது வழக்கமென்கிறாயே! இங்கே உன்னைச் சூழ இருக்கும் காட்சிகளைப் பார்த்தாயா? உன்னுடைய படையிலுள்ள யானைகள் எப்படி இருக்கின்றன? அவை முன்பு எப்படி வாழ்ந்தன? எண்ணிப் பார். தினந்தோறும் பெண் யானைகளின் கூட்டத்தோடு களிறுகள் குளத்துக்குச் சென்று படிந்து நீராடி இன்புறும். நெல்லைக் கதிரோடு தின்னும் சோழ நாட்டு யானைகள் அல்லவா அவை? நெய்யும் சோறுமாகப் பிசைந்து தரும் கவளத்தை உண்டு நடைபோடும் அவை இப்போது எப்படி இருக்கின்றன? கட்டுத் தறியை முறித்துத் தும்பிக்கையை நிலத்திலே புரளவிட்டுத் தடவுகின்றன. அடிக்கடி பெரு மூச்சு எறிகின்றன. பசி தாங்காமல் இடிபோல முழங்குகின்றன. இவ்வளவு காலமும் இன்புற்று வாழ்ந்த அவற்றை இப்படிப் பட்டினி போடுகிறாயே! இது தகுமா?”

நெடுங்கிள்ளி ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஏதாவது விடை சொல்வானோ என்று எதிர்பார்த்துக் கோவூர் கிழார் தம் பேச்சைச் சிறிதே நிறுத்தினார். அம் மன்னன் ஏதும் பேசவில்லை. புலவர் உண்மையைத்தானே எடுத்துச்சொன்னார்? அதை அவன் மறுக்க முடியுமா? அல்லது இந்த நிலை முறைப்படி ஏற்பட்டது என்று சொல்வானா? கோவூர் கிழார் மறுபடியும் பேசத் தொடங்கினார்.

“மக்கள் நிலையைக் கண்டு பொறுக்க முடியவில்லை. தாய்மார்கள் போதிய உணவு இல்லாமல் உடம்பு மெலிந்திருக்கிறார்கள். அவர்களிடம் போதிய பால் இல்லாமையால் இளங் குழந்தைகள் பசி நீங்காமல் கதறுகின்றன. அந்தக் குழந்தைகளின் அலறல் உன் காதில் விழவில்லையா? அன்றி, விழுந்தும் உன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு விட்டாயோ?”

மறுபடியும் கோவூர் கிழார் சிறிது நேரம் தம் பேச்சை நிறுத்தி மெளனமாக இருந்தார். தாம் கூறும் வார்த்தைகள் அவன் உள்ளத்தில் இறங்கி அழுத்தமாகப் படவேண்டும் என்ற எண்ணத்தால் அப்படிச் செய்தார். உண்மையில் அவர் இந்தக் காட்சிகளை எடுத்துக் காட்டும்போது நெடுங்கிள்ளியின் அகக் கண்ணில் அவை பெரிய உருவம் எடுத்துக்கொண்டு நின்றன. அவன் ஒன்றும் பேச வழியின்றி வாயடைத்து அமர்ந்திருந்தான்.

கோவூர் கிழார் மீண்டும் தமது பொருளுடைய சொற்களை வீசலாயினர். இப்போது நெடுங்கிள்ளி அவர் கூறும் அவலக் காட்சிகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறான் என்பதை அவனுடைய முகம் அவருக்கு எடுத்துக் காட்டியது. நன்றாகப் பதமானபொழுது அடித்து இரும்பை உருவாக்கும் கொல்லனைப்போலத் தம் சொல்லால் நெடுங்கிள்ளியின் உள்ளத்தை அடித்துப் பதப்படுத்தித் தாம் எண்ணி வந்த காரியத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார் புலவர் பெருமான்.

“அந்த மங்கையருடைய நிலை எவ்வளவு இரங்கத்தக்கதாக இருக்கிறது! தம்முடைய கணவர் அருகில் இருக்க, வேளைக்கு ஒரு பூவை முடித்து மணமும் மங்கலமும் விளங்க மனை விளக்குகளாகக் திகழ்பவர்கள் அவர்கள். இப்போது தம் கணவன்மார் அருகில் இருக்கவும் பூவோடு முடிக்கும் கூந்தலை வெறுமையாக முடிக்கிறார்கள். மக்கள் உணவில்லை யென்று இடும் கூக்குரல் கிடக்கட்டும். வீட்டிலே குடிக்க நல்ல தண்ணீர் இல்லை என்று வருந்துகிறார்கள். இவற்றையெல்லாம் உன் கண் கொண்டு பார்த்தாயா? இதுவா உன் ஆண்மைக்கு அழகு? நீர்வளம் மிக்க சோழ நாட்டிலே உண்ணும் நீருக்கும் பஞ்சம் உண்டாகும்படி இந்தக் கோட்டையை ஆக்கின நீ, சோழ குலத்தில் தோன்றினவன் என்று சொல்லிக்கொள்ள உரிமை உண்டா?”

புலவர் தலைவர் பேசப் பேச அவருடைய சொற்கள் நெடுங்கிள்ளியின் உள்ளத்தைச் சுட்டன. சில சமயங்களில் அவர் வார்த்தைகள் அவனை உருக்கின. மேலும் அவர் பேசிக் கொண்டே போவதை அவன் விரும்பவில்லை. தான் செய்வது தவறு என்ற உணர்ச்சி அவனுக்கு உண்டாகிவிட்டது. அதுகாறும் தலையைக் குனிந்தவாறே கேட்டுக்கொண்டிருந்தவன் சற்றே தலை நிமிர்ந்தான்.

“புலவர் பெருமானே! என் குற்றங்களைப் பொறுக்க வேண்டும். தாங்கள் கூறுகின்ற காட்சிகளை நான் காணாமல் இருக்கவில்லை. கண்டேன்; ஆனால் கருத்தோடு காணவில்லை. இப்போது என் அறியாமையை உணர்கிறேன். இனி என்ன செய்வது என்று எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படிச் செய்கிறேன்” என்று மெலிந்த குரலில் அவன் பேசினான். அவன் வாயில் சொற்கள் மிடுக்கோடு வரவில்லை; தொடர்ந்தும் வரவில்லை. இடையிடையே அற்று அற்று வந்தன. புலவர் எடுத்துச் சொன்னவை அவன் உள்ளத்தை அரம்போல் அறுத்தன.

எனக்குத் தெரிந்தவை இரண்டு வழிகள். ஒன்று அறநெறி; மற்றென்று ஆண்மை நெறி. நலங்கிள்ளி நாட்டை விட்டுப் புறத்தே சென்றிருந்த காலத்தில் நீ இந்தக் கோட்டையைக் கைப்பற்றியது அறநெறி அன்று; ஆண்மையும் அன்று. ஆதலின், ‘இந்தக் கோட்டை உனக்குரியது’ என்று சொல்லித் திறந்து அவனுக்கு உரியதாக்கி விடுவது நல்லது. அவ்வாறு செய்ய மனமின்றி உன் ஆண்மையைக் காட்டவேண்டுமானால் கோட்டையைத் திறந்து போர் செய்வது இரண்டும் செய்யாமல் கதவை அடைத்துக்கொண்டு ஒரு மூலையிலே பதுங்கியிருத்தல் அறமும் அன்று; ஆண்மையும் அன்று. இது கோழையின் செயல்.”

நெடுங்கிள்ளி இப்போது பேசலானான்: “ஆண்மை நெறியென்றும் அறநெறியென்றும் சொன்னீர்களே. அறநெறிப்படியே செய்வதாக நான் விரும்பிக் கோட்டையின் கதவைத் திறந்து விட்டால் நலங்கிள்ளியின் படை உள்ளே புகுந்து என் படையை அழித்துவிடாதா?” என்று கேட்டான்.

“அறம் என்பது எல்லாருக்கும் பொது. நீ அறங்கருதித் திறந்தாயானால் பிறகு போர் ஏன்? பகை ஏது? உன் வீட்டில் நீயே வந்து இரு என்று வீட்டை விடும்போது, பழைய பகையை நினைத்துச் சண்டை போடுவது புல்லியோர் இயல்பு. நலங்கிள்ளி அத்தகையவன் அல்லன். நீ சமாதானத்தை விரும்புகிறாய் என்று தெரிந்தால் அவன் உன்னையும் உன் படைவீரர்களையும் அவர்களைச் சார்ந்தோரையும் ஒன்றும் செய்ய மாட்டான். ஒரு குலத்திற் பிறந்த உன்னைத் துன்புறுத்துவதனால் அவனுக்கு ஊதியம் ஏதும் இல்லை” என்று அறிவுறுத்தினார் கோவூர் கிழார்.

நெடுங்கிள்ளி அவர் உரையின்படியே செய்யத் துணிந்தான். கோவூர் கிழாரையே முன்னிட்டுக் கொண்டு கோட்டைக் கதவைத் திறந்து விட்டான். சமாதான நோக்கத்தோடு நெடுங்கிள்ளி வருவதனை அறிந்த சோழப் படையினர் ஆரவாரித்தனர். கோட்டைக்குள் அது காறும் அடைபட்டிருந்த மக்கள் மதிலுக்குப் புறம்பே வந்து சொர்க்க போகம் பெற்றவர்களைப் போல் ஆனார்கள். கோவூர் கிழாரைத் தம்முடைய உயிரை மீட்ட பெரியார் என்று வாழ்த்தினார்கள். நெடுங்கிள்ளி தன் படையுடன் மீண்டும் தன் சொந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தான்.

கோவூர் கிழாருடைய முயற்சியால் போரின்றி அமைதி உண்டானதையும், நெடுங்கிள்ளி பகையுணர்ச்சி நீங்கிக் கோட்டையை விட்டு அகன்றதையும் கேள்வியுற்ற சோழநாட்டார் அக்கவிஞர் பிரானைப் பாராட்டிப் போற்றினார்கள். நலங்கிள்ளி அவரைத் தெய்வமாகவே கொண்டாடினான்.