கோவூர் கிழார்/ஏழெயிற் போர்

விக்கிமூலம் இலிருந்து

4
ஏழெயிற் போர்

பாண்டி நாட்டிலிருந்து வந்த ஒற்றர்கள், பாண்டியனும் அவனைச் சார்ந்தவர்களும் சோழ நாட்டின்மேல் படையெடுத்து வருவதற்கு உரியவற்றைச் செய்வதாக அறிந்து வந்து கூறினர். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்பதை எண்ணிய நலங்கிள்ளி பாண்டியனுடைய செருக்கை அடக்கிவிடுவது என்று உறுதி பூண்டான்.

முதுகண்ணன் சாத்தனார் பூதவுடம்பை நீத்துப் புகழுடம்பை அடைந்துவிட்டார். இயன்ற வரையில் போர் செய்யாமல் வாழ வேண்டுமென்று அரசனுக்கு வற்புறுத்தியவர் அவர். ஆயினும் படை வலியை உடைய அரசன் பகையை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி யெறிய வேண்டும். அப்பொதெல்லாம் புறக் கணித்து விட்டால் பகைஞன் வலிமை மிகுதியாகிப் பின்னால் அவனை அடக்குதல் அரிதாகி விடும். இதனைச் சிந்தித்த மன்னன், பாண்டி நாட்டின்மேல் படையெடுக்கத் துணிந்தான். அமைச்சர்களுடன் கலந்து ஆராய்ந்தான்.

முதுகண்ணன் சாத்தனார் இல்லாமையால் நலங்கிள்ளியின் அவைக்களம் பொலிவு இழந்திருந்தது. அவரைப் போலப் பெரும் புகழைப் படைத்த புலவர்பிரான் ஒருவரை அவைக்களத் தலைமைப் புலவராக அமைக்க வேண்டும் என்ற விருப்பம் அரசனுக்கு உண்டாயிற்று. அரசவைக்குப் பல புலவர்கள் வந்தார்கள். அவர்களுக்குள் புலவர்கள் போற்றும் பெரும் புலவராகக் கோவூர் கிழார் விளங்கினர். முதுகண்ணன் சாத்தனாருக்கு அப் புலவரிடம் பெரு மதிப்பு இருந்தது. இவற்றை அறிந்த நலங்கிள்ளி அவரையே தன்னுடைய அவைக்களப் புலவராக ஆக்கிக்கொண்டான். புலவர் பெருமக்கள் இந்தச் செயலைப் பாராட்டினார்கள்.

கோவூர் கிழார் அவைக்களப் புலவராக இருந்ததோடு, அமைச்சர் குழுவில் ஒருவராகவும் இருந்தார். பாண்டி நாட்டின்மேல் படையெடுக்க வேண்டும் என்ற முடிபை அவரும் ஆதரித்தார். நாட்டு நலம் கருதும் மன்னன் தன்னுடைய நாட்டில் பிற மன்னன் புகுந்து அதனைப் போர்க் களமாக்குவதை விரும்பமாட்டான். பகை மன்னனுடைய நாட்டுக்குச் சென்று அங்கே அவனை மடக்கித் தோல்வியுறச் செய்வதே சிறந்த வீரம். ஆதலால் நலங்கிள்ளி பாண்டி நாட்டின்மேற் படையெடுப்பது சிறந்த செயலென்று புலவர் கூறினார்.

நலங்கிள்ளி அரியணை ஏறின பிறகு இது வரையில் போரே செய்யவில்லை. பகைவர்கள் இல்லாமையால் உண்டான நிலை அன்று அது புற நாட்டுப் பகையும் உள்நாட்டில் நெடுங்கிள்ளியின், பகையும் இருந்தன. தன்னுடைய வீரத்தைக் காட்டாமல் இருந்தால் இந்தப் பகைகள் பெருகிவிடும். ஆதலின் தக்க சமயத்தில் தன் படையின் ஆண்மையையும் தன் ஆண்மையையும் வெளிப்படுத்துவது இன்றியமையாதது என்ற நினைவு இதுகாறும் நலங்கிள்ளியின் நெஞ்சில் கருவாகவே இருந்தது. படைப் பலத்தைச் சேர்த்து வந்தான். இப்போது தன்னுடைய படைகளின் துணையால் எந்தப் போரிலும் வெற்றியை அடையலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டாயிற்று.

அப்போது கூடிய அவையில் படைத் தலைவனும் இருந்தான். அவன் சோழர் படையின் அளவையும் ஆற்றலையும் எடுத்துக் கூறினான். “சோழ நாட்டில் உள்ள ஆடவர் பலர் நம்முடைய படையில் சேரும் விருப்பமுடையவர்களாக இருக்கிறார்கள். நம்மிடம் உள்ள படையே பெரியது. அதனோடு, போரென்று கேட்டவுடன் படையிலே சேரும் தோள்வலி படைத்த காளைகளும் சேர்ந்தால் சிறிதும் ஐயமின்றி எந்த நாட்டையும் வென்றுவிடலாம்” என்று பெருமிதத்தோடு பேசினான்.

போருக்கு வேண்டிய ஆயத்தங்கள் நடை பெற்றன. முன்பே அறிவித்துப் போர் செய்தல் அக்காலத்து வழக்கம். போரிலும் இப்படிச் சில அறங்கள் இருந்தமையால் அறப்போர் என்று சொல்வார்கள். சோழ நாட்டின் தெற்கு எல்லையே பாண்டி நாட்டின் வடக்கு எல்லை. அங்கே முரசை முழக்கிப் பாண்டி நாட்டின்மேல் சோழ அரசன் படையெடுப்பதாக கொண்ட முடிவை அறிவித்தார்கள். போர் செய்ய விரும்பாவிட்டால் பகையரசன் தூதுவர் மூலம் கையுறைகளை அனுப்பிச் சமாதானம் செய்துகொள்வது வழக்கம். பாண்டிய மன்னன் போரை விரும்புகிறவனாகவே காணப்பட்டான். நலங்கிள்ளி இதுகாறும் போர் செய்யாமல் இருந்ததற்கு அவனுடைய வலியின்மையே காரணம் என்று அவன் நினைத்திருந்தான்.

“அரசன் வலிமை உடையவனாக இருந்தால் சோழ நாட்டுக்குள்ளேயே பகையாக இருக்கும் மன்னன் நெடுங்கிள்ளியை அடக்கியிருக்கமாட்டானா? போருக்கு அஞ்சுகிறதனால்தான் பெயருக்குச் சில படைகளே வைத்துக்கொண்டு காலத்தைக் கழிக்கிறான்” என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான்.

இப்போது நலங்கிள்ளி தன் நாட்டைத் தாக்க முற்பட்ட செய்தி பாண்டியனுக்கு முதலில் வியப்பைத் தந்தது. ‘இந்த இளைய மன்னனுக்கு இவ்வளவு தைரியம் உண்டாகக் காரணம் யாது?’ என்று யோசித்தான். ‘இதுகாறும் நாம் வாளா இருந்திருக்கக் கூடாது. நாம் சோழ நாட்டின்மேல் படையெடுத்திருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் குற்றம் இல்லை. நம்முடைய நாட்டினிடையே சோழர் படையை நெருக்கி நசுக்கிவிடலாம். பாவம்! சோழ மன்னன் வாழ்வு இதனோடு முடிவு பெறவேண்டியதுதான் போலும்!’ என்று அவன் மகிழ்ச்சி அடைந்தான். சோழர் படையின் அளவையும் ஆற்றலையும் நன்கு ஆராய்ந்து அறியாமலே, அது வெற்றி பெறாது என்று முடிவு கட்டிவிட்டான்.

குறிப்பிட்டபடி சோழர் பெரும்படை பாண்டி நாட்டிற் புகுந்தது. பாண்டிய மன்னன் மதுரையிலிருந்து தன் படையுடன் புறப்பட்டான். சோழர் படை ஆரவாரத்துடன் மேற்சென்றது. இரண்டு படைகளும் சந்தித்தன. போர் மூண்டது. நலங்கிள்ளி முதல்முதலாகப் போர் செய்யப் புகுந்தாலும் அவனுடைய ஆற்றல் சிறந்து நின்றது. யானைக் கூட்டத்திற் புகுந்த அரியேற்றைப்போல விளங்கினான் அவன். பாண்டிய மன்னன் தக்க ஒற்றர்களைச் சோழ நாட்டுக்கு அனுப்பிச் சோழ மண்டல வீரப் படையின் அளவையும் ஆற்றலையும் உள்ளபடி அறிந்துவரச் செய்திருக்கலாம். அரசியல் நுட்பம் தெரியாத சிலர் தம் வாய்க்கு வந்தவற்றையெல்லாம். கூற, அவற்றை மெய்யென்று நம்பி ஏமாந்து போய்விட்டான். இப்போது சோழ மன்னன் ஆற்றலையும் அவனுடைய படைகளின் பேராண்மையையும் அவன் நேரில் உணர்ந்தான்.

ஒருவருடைய சொந்த நாட்டில் அவர்களுக்கு வலிமை அதிகம். தம்முடைய நாட்டை விட்டு வேற்று நாட்டுக்குச் சென்றால் அவர்களுடைய வலிமை ஓரளவு குறையும். முதலை நீரில் இருந்தால் அது யானையையும் இழுக்கும் வல்லமை உடையதாகும். ஆனால் அது நிலத்தில் இருந்தால் தன் வலியை இழந்திருக்கும். ஆயினும் மிக்க வலிமையுடையவர்களுக்குப் பிறர் நாட்டிலும் வெற்றி கிட்டும். “சிங்கத்துக்குத் தன் காடு பிறன் காடு என்பது இல்லை” என்பது ஒரு பழமொழி. சிங்கம் போன்ற தைரியமும் உறுதியும் உடையவர்கள் வேற்று நாட்டிலும் தம்முடைய திறமையினால் வெற்றி பெறுவார்கள். சோழர் படைக்கு இந்த இயல்பு இருந்தது. பாண்டி நாட்டில் போர் நிகழ்ந்தாலும் பாண்டியனுடைய படையைவிடப் பேராற்றல் உடையதாக அப்படை இருந்தது. பல காலமாகப் போர் செய்யவேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்த வீரர்கள் சோழப் பெரும் படையில் இருந்தார்கள். அவர்கள் தம் வீரத்தைப் பயன்படுத்தும் காலம் கிடைத்ததே என்று ஊக்கத்துடன் போர் செய்தார்கள்.

பாண்டியனுடைய படையிலுள்ள வீரர்களும் வலிமை மிக்கவர்களே. மற்றவர்களுடைய படையாக இருந்தால் அவர்களுடைய கை மேலோங்கியிருக்கும். சோழ வீரர்களின் வீரம் அவர்கள் ஆற்றலை விஞ்சி நின்றது. யானைப் படைகளும் குதிரைப் படைகளும் காலாட் படைகளும் அணி அணியாகச் சோழர் படையில் இருந்தன.

முதலில் சில நாட்கள் பாண்டியனுடைய படை சோழன் படையை எதிர்த்து மேற்செல்லவொட்டாமல் நிறுத்தியது. ஆனால் தடை உண்டாக உண்டாகச் சோழர் படையில் படைத் தலைமை தாங்கிய மறவர்களுக்குச் சினம் மூண்டது. தங்கள் படை வீரர்களைத் தூண்டினர். சோழப் படை வீரர்கள் தம் ஆற்றலை உள்ளபடியே காட்டத் தொடங்கினர்கள். அதனால் பாண்டியன் படை உள்வாங்கியது. மெல்ல மெல்லப் பின்னே நகர்ந்தது. நாளுக்கு நாள் படை வீரர்கள் பின்னே சென்றுகொண்டே இருந்தார்கள். சோழ மன்னன் முன்னேறிக் கொண்டிருந்தான். சோழ நாட்டின் எல்லையைத் தாண்டிச் சில காவதங்கள் தெற்கே வந்துவிட்டது சோழர் படை.

பாண்டியன் உண்மை நிலையை உணர்ந்தான். இப்படியே விட்டுவிட்டால் சோழன் மதுரையளவும் வந்துவிடுவான் என்ற அச்சம் உண்டாயிற்று. தன்னுடைய படைக்குச் சோழ வீரர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லை என்பதை அவன் இப்போது உணரத் தொடங்கினான். இனி ஏதேனும் வலிய துணையை நாடினாலல்லாமல் அந்தப் போரில் தனக்கு வெற்றி இல்லை என்ற உண்மை அவனுக்குப் புலனாயிற்று.

போரை நிறுத்திச் சோழ மன்னனிடம் சரண் புகுந்தால் தப்பலாம். அதற்கு மனம் வரவில்லை. தக்க துணையாக யாரை அழைத்து வரலாம் என்று யோசித்தான். சேர மன்னனுடைய நினைவுதான் அவனுக்கு உண்டாயிற்று. உடனே தூதுவன் ஒருவனை அந்த மன்னனிடம் அனுப்பி, “இப்போது துணைப் படைகளை அனுப்பினால் சோழ மன்னனைப் புறங்கண்டு விடலாம். இது தான் ஏற்ற தருணம். இல்லையானால் பாண்டி நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் சோழ மன்னனால் எந்தச் சமயத்திலும் தீங்கு விளையும்” என்று சொல்லச் செய்தான்.

பாண்டி நாட்டினிடையில் சோழ மன்னன் தன் படைகளுடன் வந்திருக்கிறான் என்பதைக் கேட்ட சேரன், அவன் படையை அப்படியே வளைத்துக் கொள்ளலாம் என்று எண்ணமிட்டான். உடனே பெரும்படை ஒன்றுடன் புறப்பட்டான். போர் நடக்கும் இடத்திற்கு அவன் படையோடு வந்து சேர்ந்தவுடன் பாண்டியன் படைகளுக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. இனிச் சோழன் படையை அழித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தன.

அறிவும் சூழ்ச்சியும் மிக்க சோழனுக்குச் சேரன் படையுடன் வருவது முன்பே தெரிந்துவிட்டது. அப்படை வந்தால் இன்னது செய்வது என்று அவன் திட்டமிட்டு வைத்திருந்தான். சேரனுடைய படை வந்தவுடன் சோழ நாட்டிலிருந்து புதிய படை ஒன்று புறப்பட்டு வந்து அந்தப் படையைத் தாக்கியது. இந்தப் புதிய படையை யாரும் எதிர்பார்க்கவில்லை.

போர் கடுமையாக நடைபெற்றது. சேரன் படை வந்தமையால் ஒரு நாள், இரண்டு நாள் சோழனுடைய முன்னேற்றம் தடைப்பட்டது. அப்பால் மறுபடியும் சோழப் படை முன்னேறலாயிற்று. பாண்டியன் படை மறுபடியும் தளர்ச்சியை அடைந்தது. சேரன் படையில் உள்ளவர்கள் ஊக்கத்துடன் போர் புரியவில்லை. தம்முடைய நாட்டுக்கு அபாயம் வந்தால் எவ்வாறு வீரத்தைக் காட்டுவார்களோ, அவ்வாறு காட்டவில்லை. ஆதலினால் சோழன் நாளுக்கு நாள் பகைவர் படையைத் தெற்கே துரத்திக் கொண்டு சென்றான்.

தம் மன்னன் ஒவ்வொரு நாளும் வீரச் சிறப்புடன் போராடிப் பகைவர்களை ஓட்டும் இச்செயலைச் சோழ நாட்டு மக்கள் கேள்வியுற்றார்கள். அவர்களுடைய தோள்கள் பூரித்தன. படையில் சேராத மக்கள் சேர்ந்தார்கள். மறுபடியும் புதுப் படை வேண்டுமானால் செல்வதற்கு ஆயத்தமாகப் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அழைப்பு வரவில்லை.

பாண்டி நாட்டின் பகுதியாகிய கோனாட்டைத் தாண்டிப் படைகள் சென்றன. ஏழெயில் என்ற ஊரை அடைந்தன. இப்போது சிவகங்கைக்கு அருகில் ஏழுபொன் கோட்டை என்ற ஊர் இருக்கிறது. அதுவே முன் காலத்தில் ஏழெயில் என்ற பெயரோடு விளங்கியதென்று தெரிகிறது. அங்கே வந்தவுடன் அங்குள்ள கோட்டையின் பலத்தால் பாண்டியன் நின்று போரிட்டான். தன் படைகளை ஊக்கினன். பாண்டிய வீரர்கள் கோட்டையிற் புகுந்து கொண்டு அம்பு எய்தார்கள். அவ்விடத்தில் சோழன் படையில் சில வீரர் இறந்துபட்டனர். அதனால் எஞ்சியிருந்தவர்களுக்கு மான உணர்ச்சி மிகுதியாயிற்று. தம்முடைய முழு வலிமையையும் காட்டிப் போரிடத் தொடங்கினார். இரண்டே நாட்களில் கோட்டைக் கதவைப் பிளந்து கோட்டையைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

பாண்டியன் இந்த நிலையில் சற்று ஆழ்ந்து சிந்தித்தான். சேர மன்னனுடனும் ஆராய்ந்தான். இனிமேல் போரை நீட்டிப்பதனால் தங்களுக்குப் பயன் ஒன்றும் இல்லை என்பதை அவ்விருவரும் உணர்ந்துகொண்டனர். உடனே சோழனுடன் சமாதானம் செய்துகொள்ளுவதுதான் தக்க வழி என்று தெளிந்தார்கள். அதற்கு வேண்டிய முயற்சிகள் நடைபெற்றன.

சமாதானம் செய்வதற்கு முன் தன் கருத்தை முரசறைந்து பாண்டியன் தெரிவித்துப் படைக்கலங்களைக் கீழே போடும்படி தன் படைவீரர்களுக்கு உத்தரவிட்டான். சோழனுக்கு இச்செய்தி தெரிந்தது. அவனும் போரை நிறுத்தும் படி தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டான். இரு சாராரும் ஒன்று கூடினர். சான்றோர்களை உடன் வைத்துக்கொண்டு சமாதானப் பேச்சைத் தொடங்கினார்கள். சோழ மன்னன் கோவூர் கிழாரை வருவித்தான். ஏழெயில் என்ற இடத்தில் சமாதானம் ஏற்பட்டது. சோழன் வென்றதற்கு அடையாளமாக அந்தக் கோட்டையின் கதவுகளில் புலிப்பொறியைப் பொறித்தார்கள். சோழன் தன் யானையின்மேல் குடையைப் பிடித்துக்கொண்டு முன்னே செல்ல, அவனுக்குப் பின்னே பாண்டியனும் சேரனும் தங்கள் குடைகளுடன் சென்றனர். சோழனுடைய வீரம் தங்கள் வீரத்தினும் சிறந்தது என்பதை இத்தகைய செயல்களால் அவர்கள் காட்டினர். சோழன் வெற்றிக் களிப்போடு ஏழெயிலில் பவனி வந்தான்.

பவனியின் பிறகு பாசறையிலே தங்கினான். போர் நின்றதனால் புலவர்கள் களித்தனர். சோழ வீரர்கள் ஆரவாரம் செய்தனர். பாசறையில் சோழ மன்னன் தன் அமைச்சர்களும் படைத் தலைவர்களும் சூழ வீற்றிருந்தான். கோவூர் கிழாரும் அங்கே இருந்தார். சோழ மன்னன் தன் பகை வேந்தனுடைய நாட்டுக்கே சென்று வெற்றி கண்ட பெருமையை நினைந்து நினைந்து அவர் மகிழ்ந்தார். பாசறையில் வெற்றி மிடுக்குடன் அவன் வீற்றிருப்பதைக் கண்டு கண்களித்தார். தம்முடைய உணர்ச்சியை அருமையான கவியில் வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவர் அவர். ஆதலின் நலங்கிள்ளி பாசறையில் வீற்றிருக்கும் அந்தக் காட்சியைப் பாடத் தொடங்கினர்.

றம் பொருள் இன்பம் என்ற மூன்றும் இவ்வுலக வாழ்வில் மக்கள் பெறுவதற்குரியவை. இந்த மூன்றிலும் அறம் சிறந்தது. அறத்தால் வந்த பொருளும் அறத்தால் வந்த இன்பமும் சிறந்தவை. சிறப்பையுடைய இந்த மூன்றிலும் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே நிற்பதை அறிவுடையார் உணரலாம். கண்ணால் அதைக் காண முடியாது. இங்கே வெற்றி பெற்ற சோழ மன்னனுடைய குடை யானையின் மேலே உயர்ந்து முன்னே செல்ல, அதனை அடுத்துக் கீழே சேர பாண்டியர்களுடைய குடைகள் சென்றன. அந்தக் காட்சி, சிறப்பான முறைமையுடைய பொருளும் இன்பமும் அறத்தின் வழிப்படும் தோற்றம் போன்று இருந்தது.

நலங்கிள்ளிக்குப் பாண்டி நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை இல்லை. மற்ற நாடுகள் உணவின்றிப் பஞ்சத்தால் துன்புறும் காலத்திலும் வளம் குன்றாமல் விளங்கிப் பிற நாட்டுக்கும் நெல்லை வழங்கும் வண்மையை உடைய சோழநாடு அவனுடைய நாடு. ஆதலின் அவனுக்கு வேறு நாட்டில் ஆசை இல்லை; மண்ணாசை இல்லாத மன்னன் அவன். ஆனால் இப்போது பாண்டி நாட்டுக்குள்ளே புகுந்து இந்தப் பாசறையில் இருக்கிறானே. ஏன்? அவனுக்குப் புகழாசை உண்டு. தன்னை இகழும் வேந்தர்களை அடக்கியாளும் பேராண்மையுடையவன் என்ற நல்ல இசையை விரும்பினான். அதனால்தான் இந்தப் போரில் ஈடுபட்டான்.

பகைவர்களுடன் போர் புரிவதற்கு வேண்டிய படைப்பலம் நலங்கிள்ளியிடம் இருந்தது. அவனுடைய யானைப் படை எதற்கும் அடங்காதது. தம்முடைய தந்தங்களால் பகைவர்களுடைய மதிலையும் மதிற் கதவுகளையும் குத்தும் ஆற்றலுடையவை அந்த யானைகள். அவனுடைய வீரர்களோ போர் என்ற சொல்லக் கேட்டாலே ஆனந்தக் கூத்தாடுவார்கள். சோழ நாட்டை விட்டுப் பல காடுகளைக் கடந்து சென்று போர் செய்ய வேண்டுமானாலும், “ஐயோ! அவ்வளவு தூரமா? என்று சொல்ல மாட்டார்கள்; இதோ! புறப்பட்டுவிட்டோம்” என்று சொல்வார்கள்.

இத்தகைய யானைப் படையையும் வீரர் பெரும் படையையும் உடைய சோழன் போர் செய்யத் தொடங்கி மாற்றரை அடக்கி வெற்றி கொண்டான். இந்தச் செய்தி மற்ற நாட்டிலுள்ள அரசர்கள் காதில் பட்டது. வடநாட்டில் உள்ள அரசர்களும் அறிந்தார்கள். அவர்களுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. ஏன் தெரியுமா? “சோழன் வேறு நாட்டுக்குக் சென்று வென்றான், கீழ் கடற்கரை வழியே தன் குதிரையின்மேல் ஏறிப் பாண்டி நாடு முழுவதையும் அடிப்படுத்திக் கொண்டு, அப்படியே மேல் கடற்கரைக்குச் சென்று சேர நாட்டையும் பணியச் செய்து, வடக்கு நோக்கியும் வந்தால் என் செய்வோம்! அவன் வலம் வரும் செயலை மேற்கொண்டால் நம்முடைய வலிமையெல்லாம் எந்த மூலை?” என்று அஞ்சி அவர்கள் உறங்காமல் இருக்கிறார்கள்.

கோவூர் கிழார் பாட்டில் இந்தக் கருத்துக்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.

கோவூர் கிழார் இன்னும் சில பாடல்களைப் பாடினார். அவனிடம் பரிசு பெறுவதற்காக் வரும் கலைஞர்களே நோக்கிப் பாடும் முறையில் ஒரு பாட்டுப் பாடினர். “பரிசில் பெறுவதற்குரிய கலைஞர்களே! வாருங்கள்; நாம் நலங்கிள்ளியைப் பாடுவோம். அவன் தன்னுடைய நாட்டை வளம் படுத்திய சிறப்பைப் பார்த்தீர்களா? எங்கே பார்த்தாலும் வயல்கள் நிரம்பியது சோழநாடு. வெறுங் களிமண்ணைக் கொண்டு குயப்பிள்ளைகள் எவ்வளவு அழகான உருவங்களே ஆக்கிவிடுகிறார்கள்! மக்களுக்குப் பல வகையில் பயன்படும்படி செய்துவிடுகிறார்கள் அல்லவா? அவ்வாறே அம் மன்னன் சோழ நாட்டை மிகச் சிறப்புடையதாக்கிவிட்டான். அதன் பெருமையை உலகு முழுவதும் தெரிந்துகொள்ளும்படி செய்திருக்கிறான். இத்தகைய வளநாடு அவனுக்கு இருப்பதனால் மற்ற நாடுகளையும் அங்குள்ள நகரங்களையும் அவன் விரும்புவதில்லை. அவன் எது கேட்டாலும் கொடுப்பான். நம் சுற்றத்தாரோடு உண்டு வாழ்வதற்காக ஏதாவது வேண்டுமென்றால் சேரனுக்குரிய வஞ்சி மாநகரத்தையே கொடுப்பான். விறலியர்கள் வந்து கேட்கட்டும்; மாட மதுரையையே தந்துவிடுவான். வாருங்கள், அவனைப் பாடலாம்” என்று அந்தப் பாட்டின் பொருள் விரிகிறது.

ஒரு பாட்டில், நலங்கிள்ளி பாண்டி நாட்டில் உள்ள ஏழெயிலென்னும் கோட்டையைக் கைப்பற்றி அதன் கதவில் தன்னுடைய புலியாகிய அடையாளத்தை எழுதச் செய்த வீரச்செயலைப் பாராட்டினார்.

வெற்றி பெற்ற பெருமிதத்தால் சோழன் பாணர்களுக்கும் விறலியர்களுக்கும் பொருநர்களுக்கும் கூத்தர்களுக்கும் பலவகைப் பரிசில்களை வழங்கினான். புலவர்களுக்கும் சிறந்த பரிசில்களை அளித்தான். புலவர்கள் அவனுடைய போர் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் பாடினார்கள்.

ஒருவாறு பாண்டியனையும் சேரனையும் பணிய வைத்த பெருமையோடு ஏழெயிலை விட்டுப் புறப்பட்டு, வெற்றி மிடுக்குடன் சோழன் நலங்கிள்ளி மீட்டும் உறையூர் வந்து சேர்ந்தான்.