கோவூர் கிழார்/சாத்தனாரின் அறிவுரைகள்
சாத்தனாரின் அறிவுரைகள்
நலங்கிள்ளிக்குப் பகைவரை ஒழிக்கவேண்டும் என்ற ஊக்கம் மிகுதியாக இருப்பதை அறிந்த முதுகண்ணன் சாத்தனார் அவனுக்கு அறிவுரை கூறலானார். புலவரையும், பாணரையும், பொருநரையும் போற்றிப் பாராட்டும் வகையில் அவனுடைய கவனம் செல்லும்படி செய்தார். “புலவரால் பாடல் பெறும் புகழை உடையவர்கள் இவ்வுலகத்திலே தாம் செய்யவேண்டிய செயல்களையெல்லாம் முடித்துக்கொண்டு, பிறகு யாரும் ஓட்டாத இந்திர விமானத்தில் ஏறி விண்ணுலகம் செல்வார்கள் என்று பெரியோர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நம்மால் இயன்றதைப் பிறருக்கு அளித்து வாழவேண்டும். ஏதேனும் தெரிந்தவராயினும், ஒன்றும் தெரியாதவராயினும் வறுமையால் வருந்தி வந்தவர்களிடம் இரக்கம் காட்ட வேண்டும். அவ்வாறு பிறரிடம் காட்டும் அருளே அரசனுக்குப் பலமாகும். அரசர்பிரானுக்கு அந்த வலிமை நிறையக் கிடைக்கட்டும். பகையரசர்களுக்கு அந்த வலிமை கிடைக்காமல் ஒழிவதாகுக” என்று பாடினார்.
மற்றொரு சமயம் அப்புலவர் பெருமான், “அரசர்பிரானுடைய அரண்மனையில் எப்போதும் பாணரும் பிற கலைஞர்களும் கூட்டம் கூட்டமாக இருக்கட்டும். கொடியவர்களைத் தண்டித்து நல்லவர்க்கு வேண்டியவற்றை நல்கவேண்டும். நல்ல செயலால் நன்மை இல்லை, தீய செயலால் தீமை இல்லை என்று சொல்வோர்களுடைய உறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இந்த உலகில் மக்கள் பிறப்பதும் இறப்பதும் இயற்கை. கூத்தாடுபவர்கள் நாடக அரங்கில் அவ்வப்போது பல்வேறு கோலந் தாங்கி வந்து தம் பகுதியை நடித்துக் காட்டிப் போய்விடுவது போல மக்கள் வருகிறார்கள்; போகிறார்கள். இங்கே புகழ் ஒன்று தான் நிற்கும். நீ ஈட்டிய பொருள் இசையை விளைவிக்கட்டும்” என்று பாடினார். அப் புலவர் கூறியவற்றையெல்லாம் அமுத மொழியாகக் கொண்டான் மன்னன் நலங்கிள்ளி.
அதுகாறும் புலவர் பலர் உறையூருக்கு வந்து சென்றனர். எல்லாக் கலைஞர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று முதுகண்ணன் சாத்தனார் அறிவுறுத்திய பிறகு மன்னன் பாணருக்கும் பொருநருக்கும் பரிசில் வழங்கலானான்.
பாணர் என்பார் பழங்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த இசைப் புலவர்கள். அவர்கள் பலவகையான வாத்தியங்களை வாசிப்பார்க்ள். சிறப்பாக யாழை வாசித்து மன்னர்களிடமும் செல்வர்களிடமும் பரிசு பெற்று வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய மனைவிமார் அபிநயம் பிடித்துப் பாடுவார்கள். அவர்களை விறலியர் என்று சொல்வது வழக்கம். ஒரு பக்கத்தில் மாத்திரம் அடிக்கும் தடாரி என்னும் தோற்கருவியை வாசிக்கிறவர்கள் பொருநர். இக்காலத்தில் ‘கிஞ்சிரா’ என்று வழங்கும் வாத்தியத்தைப் போன்றது அது. அதற்குக் கிணையென்றும் ஒரு பெயர் உண்டு. அதனால் பொருநரைக் கிணைப் பொருநர் என்றும் சொல்வதுண்டு. இப்படியே கூத்தை ஆடிக் காட்டி மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் கலைஞர்களைக் கூத்தர்கள் என்று சொல்வார்கள். பாணர், விறலியர், பொருநர், கூத்தர் ஆகியவர்கள் எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கென்று ஊர்கள் இருந்தாலும், எங்கெங்கே தங்கள் கலையை விரும்பி ஆதரிக்கும் செல்வர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் செல்வார்கள். தம்மைப் போற்றிப் பேணும் புரவலர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடிச் செல்வார்கள்.
தம்முடைய கலையில் திறமை பெற்று மேலும் மேலும் அதை வளர்ப்பதையன்றி வேறு எதனையும் அறியாதவர்கள் அவர்கள். ஏதேனும் பொருள் கிடைத்தால் அதை உடனே செலவு செய்துவிட்டு, மறுபடியும் யாரையேனும் தேடிக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை புலவர்களிடத்திலும் இருந்தது. இதனால் இரவலரென்றும், பரிசிலரென்றும் கலைஞர்களைக் கூறும் வழக்கம் ஏற்பட்டது.
நாள்தோறும் கலை நயம் கண்டு பாராட்டும் மக்கள் கிடைப்பார்களா? எங்கோ சில இடங்களில்தான் பாணரையும் பொருநரையும் பாதுகாக்கும் செல்வர்கள் இருப்பார்கள். அவர்களை அண்டிச் சில நாட்கள் தங்குவார்கள். பிறகு அவர்கள் வழங்கும் பொருளைப் பெற்றுச் சென்று தம் வீட்டில் இன்புற்றிருப்பார்கள். பொருள் செலவழிந்த பின் மறுபடியும் வறுமை அவர்களை வந்து பற்றும். அது வரையில் அவர்கள் தம் கலையின்பத்தைத் தாமே நுகர்ந்து பொழுது போக்குவார்கள். வீட்டில் அடுத்த வேளைக்குச் சோறு இல்லை என்று தெரிந்தபோதுதான் மறுபடியும் புறப்படுவார்கள். இத்தகைய இயல்பு பெற்றவர்களாதலின் அவர்கள் எப்போதும் வறியவர்களாகவே இருந்தார்கள். புலவர்கள் அவர்களைப் பாடும்போது அவர்களுடைய வறுமைக் கோலத்தையே வருணித்துப் பாடினார்கள்.
புரவலர் கலைஞர்களுக்கு நல்ல ஆடையை வழங்குவர்; அணிகளை வழங்குவர்; அறுசுவை உண்டியை அளிப்பர். பாணர்களுக்குப் பொன்னால் தாமரைப் பூவைப்போன்ற பதக்கத்தைச் செய்து அணியச் செய்வர். விறலியர்களுக்கு அணிகலம் வழங்குவர். புலவர்களுக்கு நிலமும் நாடும் வழங்குவதுண்டு.
சோழன் நலங்கிள்ளி புலவர்களையும் பொருநர்களையும் பாணர்களையும் கூத்தர்களையும் ஆதரித்துப் பாராட்டி விருந்து அருத்திப் பரிசில் வழங்குகின்றான் என்ற செய்தி எங்கும் பரவியது.