சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

[4]

தங்கமணியின் ஆர்வம் !

பாட்டிக்கு ஒரே மகன்தான் உண்டு. அந்த மகனும் உத்தியோகம் பார்ப்பதற்காக பம்பாய் சென்று விட்டார்.
அவர் தம் குடும்பத்தோடு இங்கு வந்து தங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது அவருக்கு விடுமுறையே கிடைப்பதில்லையாம். பாட்டி தனியாகவே விவசாயம் செய்து கொண்டிருக்கிறாள்.

அன்றும் அதற்கு அடுத்த ஐந்து நாளும் மூவரும் கண்ணுப் பாட்டியின் விவசாயப் பண்ணைக்குப் போய் அங்கு நடக்கின்ற வேலைகளையெல்லாம் ஆச்சரியத்தோடு கவனித்தார்கள், அதுவே அவர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. விவசாயப் பண்ணையை அவர்கள் முன்பு பார்த்ததில்லை.

ஆனால் தங்கமணியின் ஆர்வமெல்லாம் சங்ககிரி மலையைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. பண்ணையில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும் தங்கமணி அந்த மலையைப் பற்றியும் அங்குள்ள திப்புசுல்தான் கோட்டையைப் பற்றியும் பல கேள்விகள் கேட்டான்.

அவர்களிடமிருந்து அவன் தெரிந்து கொண்ட செய்திகள் அடுத்த பகுதியில் சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன.