சங்க இலக்கியத் தாவரங்கள்/094-150
வள்ளி
ஐபோமியா பட்டடாஸ் (Ipomoea batatas,Poir.)
வள்ளி இலக்கியம்
‘வாழை வள்ளி நீள்நறு நெய்தல்’ (குறிஞ். 79) என்றார் கபிலர். இவ்வடியில் குறிப்பிடப்படும் ‘வள்ளி’ என்பது ஓரு கொடி. இது சருக்கரை வள்ளி எனப்படும். வள்ளிக் கிழங்குக்காக இக்கொடி பயிரிடப்படுகிறது. வளளுவர் பண்டே நீரின்றி வாடிய இதனைக் குறிப்பிடுகின்றார்.
“ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந் தற்று”[1]
இதன் மலர் ஊதா நிறமானது. இப்பூவைக் கடப்ப மலர் மாலையின் இடைஇடையே வைத்துக் கட்டுவர் என்பர் நல் அச்சுதனார். மலர் விரிந்த போது புனல் வடிவாக இருக்கும். மாலையில் இம்மலரின் மேற்பகுதியான மடல்கள், சுருண்டு தோன்றும்.
“சுருளுடைய வள்ளி இடைஇடுபு இழைத்த
உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ்தார்.”
–பரி. 21:10-11
பரிமேலழகர், ‘சுருளுதலை உடைய வள்ளிப்பூ’ என்று உரை கூறுவர். குறவர் மகளாம் வள்ளியை மலராக்கி நயம்பட உரைப்பர் கேசவனார்.
“நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே!”–பரி. 14:22
வள்ளி
(Ipomoea batatas)
வள்ளி தாவர அறிவியல்
|
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே அகவிதழ்கள் இணைந்தது. |
தாவரக் குடும்பம் | : | கன்வால்வுலேசி (convolvulaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஐபோமியா (Ipomoea) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பட்டடாஸ் (batatas, Poir.) |
சங்க இலக்கியப் பெயர் | : | வள்ளி, நூறை |
உலக வழக்குப் பெயர் | : | வள்ளி, சர்க்கரை வள்ளி, வள்ளிக் கொடி |
தாவர இயல்பு | : | படர் கொடி, மென் கொடி நீண்டு, தரை மேல் கிளைத்துப் படர்ந்து வளரும். |
இலை | : | தனி இலை 3-5 பிளவுள்ளது. நடுப் பிரிவு நீண்டு அகன்று இருக்கும். பக்கத்துப் பிளவுகள் குட்டையாக இருக்கும். 5-10 X 5-9 செ.மீ. பசிய பளபளப்பானது. இலைக் காம்பு நீளமானது. 10 செ. மீ. வரையுள்ளது. |
மஞ்சரி | : | இலைக்கோணத்தில் தனிமலர். மலர்க் காம்பு 8-10 செ. மீ. வரையுள்ளது. |
மலர் | : | ஊதா நிறமானது. இருபாலானது. புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் இணைந்து, அடியில் குழல் வடிவாக இருக்கும். 3 செ. மீ. நீளமான குழல். |
புல்லி வட்டம் | : | 5. பசிய புறவிதழ்களில் புறத்தில் 3 சற்று அகன்று, குட்டையானவை. உட்புறத்தில் 2 புல்லிகள் அகன்று, நீளமானவை. நுனி கூரியது 9 X 4 செ.மீ. |
அல்லி வட்டம் | : | 5 ஊதா நிற இதழ்கள் இணைந்தவை புனல் வடிவான குழல், அடியில் நீண்டிருக்கும். மேற்புறத்தில் புனல் மடல் விரிந்து, அழகாக இருக்கும். மடலில் இக்குடும்பத்தியல்பான 5 பட்டைகள் (இதழ்களை இணைக்கும்) நாமம் போல நீண்டிருக்கும். |
மகரந்த வட்டம் | : | 5 தாதிழைகளின் அடியில் நுண்மயிர் உண்டு. இழைகள் 5-7 செ. மீ. நீளமிருக்கும். ஐபோமியா வகையான நுண்முள்ளுடைய புறவுறைத் தாது உருண்டையானது. |
சூலக வட்டம் | : | இரு சூலிலைச் சூலகம். 4 சூல்கள். சூல்தண்டு 1 செ. மீ. நீளமான இழை போன்றது. சூல்முடி குல்லாய் போன்றது. |
கனி | : | 4 வால்வுகளை உடைய காப்சூல், 4 விதைகள். |
இத்தாவரக் குடும்பத்தில் 47 பேரினங்களும், 1100 சிற்றினங்களும் உலகின் வெப்பமான பகுதிகளில் வளர்கின்றன. ஐபோமியா என்ற இப்பேரினத்தில் 24 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகின்றன. ஐபோமியா பட்டடாஸ் என்ற இச்சருக்கரை வள்ளிக் கொடி இதன் கிழங்கிற்காகப் பயிரிடப்படுகின்றது. இக்கொடியின் பக்க வேர்கள் பருத்து இனிய கிழங்காகும். இதில் பல வகைகள் உள. இராச வள்ளி யாழ்ப்பாணத்தில் பயிர் செய்யப்படுகிறது. ஊதா நிறமான உருண்டை வடிவான கிழங்கு மிக இனிப்பானது. பெருவள்ளி, சிறுவள்ளி, மரவள்ளி என்ற வள்ளிப் பெயர் பெற்ற கிழங்குச் செடிகள் வெவ்வேறு தாவரக் குடும்பத்தின் பாற்படுவன. சருக்கரை வள்ளியின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 84 எனக் கானோ என்பவரும், 2n = 90 எனக் கிங் ஜே. ஆர். ராம்பேர்டு (1937) ராவ் என். எஸ். (1947) டிங், கேர் (1953) ஷர்மா ஏ. கே. டட்டா. பி. சி (1958) என்போரும் குறிப்பிட்டுள்ளனர்.
- ↑ திருக்குறள்: 1304