உள்ளடக்கத்துக்குச் செல்

சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்/சிவஞானத்தோடு சேர்ந்தது தவறா?

விக்கிமூலம் இலிருந்து

சிவஞானத்தோடு சேர்ந்தது தவறா?

முதல்வர் கலைஞர் கேள்வி

மிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 27-4-74ல் சட்ட மேலவையிலும், 28-4-74ல் மயிலைப் பொதுக்கூட்டத்திலும் மாநில சுயாட்சி பற்றிப் பேசியபோது தமிழரசுக் கழகம் பற்றியும் தலைவர் ம.பொ.சி பற்றியும் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது:

"அண்ணா எழுதிய உயிலிலே கூட அதிக அதிகாரம் தானே கேட்டார். மாநில சுயாட்சி கேட்டாரா? - இல்லை. இந்தக் கருணாநிதிதான் வெட்கங் கெட்டுப்போய் மாநில சுயாட்சிக் கொள்கையை ம.பொ.சி. யிடம் கடன் வாங்கிக் கொண்டார்" என்றார்கள்.

நான் அதற்கு வெட்கப்படவில்லை. நல்லவற்றைக் கடன் வாங்குவது தவறல்ல. ம.பொ.சி.யிடம் போயும் போயும் இந்தக் கொள்கையைக் கடன் வாங்கினார்கள் - என்றார்கள்.

நான் அவரை சிலம்புச் செல்வர் என்றுதான் அழைப்பது வழக்கம் - சிவஞானத்திடத்திலே போய் இதைக் கேட்கலாமா? சிவஞானத்தோடு சேர்ந்து கேட்கலாமா? - என்கிறார்களே - பிறகென்ன, ஞானத்தோடு சேர்ந்து கேட்காமல் அஞ்ஞானத்தோடு சேர்ந்தா கேட்க முடியும்?

அதுவும் சாதாரண ஞானமல்ல, சிவஞானம்! அன்பே சிவம். ஞானம் என்றால், அறிவு. அன்போடும் அறிவோடும் நான் மாநில சுயாட்சி கேட்கிறேன்.

மாநில சுயாட்சி சிலம்புச் செல்வரவர்களால் நீண்ட நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிற - வலியுறுத்தப்பட்டு வருகின்ற உன்னதமான கொள்கையாகும்.

மாநில சுயாட்சி என்பது சிலம்புச் செல்வர் அவர்களால் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வார்த்தையா என்றால், இல்லை; ஆனால், மாநில சுயாட்சி என்கிற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு, சுயாட்சித் தன்மையில்லாத அளவுக்கு மாநிலங்கள் எல்லாம் ஆக்கப்பட்டு, அதற்கேற்ப ஒரு அரசியல் சட்டமும் வகுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால், அந்த அரசியல் சட்டம் திருத்தப்பட்டு-மாற்றப்பட்டு மாநில சுயாட்சி பெயரளவில் இல்லாமல் முழுமையான சுயாட்சியாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு, உண்மையான கூட்டாட்சி மத்தியிலே விளங்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்திய பெருமை சிலம்புச் செல்வரையே சாரும்.

நாங்கள் மாநில சுயாட்சி கேட்கிறோம். தமிழரசுக் கழகம் இன்று ஆளுங் கட்சியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆளுகிற தி.மு. கழகத்தைப் பார்த்து, தானே ஆளுவது போன்ற உணர்வோடு இருக்கிற தோழமைக் கட்சி தமிழரசுக் கழகம்.

நாளைக்கே தி.மு. கழகத்தைப் பார்த்து, 'நீ மாநில சுயாட்சி கேட்கிறாய்; ஆகவே, உன் அரசாங்கத்தைக் கலைக்கிறேன்' என்று டெல்லியிலிருந்து உத்தரவு வருமேயானால், அதைவிட என்னுடைய வாழ்க்கையிலே புனிதமான சரித்திரச் சம்பவம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

எனக்கோ, சிலம்புச் செல்வருக்கோ போராட்டம் புதிதல்ல, பழக்கப்பட்ட ஒன்று. சிறைச்சாலை, நாங்கள் போய் போய் வந்த-'போகிறேன்' என்று சொல்லாமல், 'போய் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு வந்த பழைய வீடுதான்!

ஒரு சோதனைக்காவது நான் சொல்லுகிறேன்; உறுதியாக அல்ல நான் சொல்லுவது; தி.மு. கழகத்தின் கொள்கையோ, தமிழரசு கழகத்தின் எண்ணமோ அல்ல! ஒரு பேச்சுக்குச் சொல்லுகிறேன்;

பத்தாண்டு காலத்திற்கு மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுத்துச் சோதித்துப் பாருங்களேன், இந்தியா உடைந்து போய் விடுகிறதா என்று.

எனக்கு இருக்கிற பயமெல்லாம் நீங்கள் அந்தச் சோதனைக்கு முன் வராவிட்டால், எங்கே சிலம்புச் செல்வர் சொன்னதைப் போல இந்தியா உடைந்து விடுமோ என்பதுதான்.

இந்தியாவின் ஒருமைப்பாடு என்கிற கேடயத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மாநில சுயாட்சி - மாநிலங்களுக்கு உரிமைகள் என்கிற குரலை அடக்கி ஒடுக்கிவிட மத்தியிலிருப்பவர்கள் எண்ணாமல், சாவதானமாகச் சிந்தித்து தி.மு.கழகம் பிரிவினைக் கொள்கையை விட்டுவிட்ட கட்சி - பிரிவினைக் கொள்கையை எதிர்த்த கட்சியான தமிழரசுக் கழகத்துடன் உறவாடிக் கொண்டிருக்கிற கட்சி - நாங்கள் பிரிவினையை விட்டு விட்டோம் என்று அறிவித்த கட்சி என்ற நம்பிக்கையோடு எங்களுடைய வரலாறுகளை ஆராய்ந்து கொண்டிராமல் நான் சொல்லுகின்ற விஷயங்களை ஆராய்ந்து சிந்தித்து, நல்ல முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.