உள்ளடக்கத்துக்குச் செல்

சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்/சுயாட்சிப் போர்பற்றி சட்டப் பேரவையில் விவாதம்

விக்கிமூலம் இலிருந்து

சுயாட்சிப் போர்பற்றி சட்டப்
பேரவையில் விவாதம்

"மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரி
திரு.ம.பொ.சிவஞானம் அவர்களால் நடத்தப்பட
இருக்கும் போராட்டத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை"

என்னுந் தலைப்பில் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது 19-8-69ல் சட்டப் பேரவையில் நடந்த விவாதம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. சீமைச்சாமி அவர்கள் ஓர் ஒற்றிவைப்புத் தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், 'மாண்புமிகு ம.பொ.சிவஞானம் அவர்கள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டி நாளை முதல் போராட்டம் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை விவாதிக்க சபையை ஒற்றிவைக்க வேண்டுகிறேன்' என்று கொடுத்திருக்கிறார்கள். இதே கருத்துப் பட, திரு. ஆ. கு. சுப்பையா அவர்களும் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள். அதை இன்று எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை இருக்குமா என்ற நிலையிலே வேண்டாமென்று கூறியிருக்கிறேன். இருப்பினும் அவர்களும் இந்தத் தீர்மானம் எப்படிப் பேரவையில் விவாதத்திற்கு வரக்கூடியது என்பதைப் பற்றிச் சுருக்கமாக விளக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

திரு.கரு. சீமைச்சாமி: சார், மதிப்பிற்குரிய திரு.ம.பொ.சி. அவர்கள் ஆறு மாதத்திற்கு முன்பாகவே மாநில சுயாட்சிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தச் சட்ட மன்றத்திலேயும் அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்களும் இது சம்பந்தமாகக் கூறுகிறபோது, காலம் வரும்; நாங்களும் கலந்துகொள்வோம் என்று கூறியிருக்கிறார்கள். திரு.ம. பொ. சி. அவர்கள் முதலமைச்சர் அவர்களுடன் கலந்து பேசியபோது ஒரு நாளைக்கு அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டு அதற்கு மேலே என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று பத்திரிகைகளிலே வந்திருக்கிறதில், சென்னையிலே தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்ததை மத்திய அரசுக்குத் தெரிவித்து இருக்கிறார்களா? மாநில அரசாங்கம் இதைப்பற்றி ஒரு தீர்மானத்தைப் போட்டு மத்திய அரசுக்கு அனுப்ப முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்வார்களா? தொடர்ந்து போராட்டம் நடத்தினால் அதனால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளையொட்டி - நடவடிக்கைகள் எடுப்பது பற்றி விவாதிக்க இந்தச் சபையின் பிற நடவடிக்கைகளை ஒற்றிவைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு.ஆ.கு. சுப்பையா : பேரவைத் தலைவர் அவர்களே, தமிழரசுக் கழகம் நடத்த இருக்கின்ற போராட்டம் குறித்து நானும் இந்தச் சபையினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறேன். இது மிக முக்கியமான அவசரமான விஷயமாகும். மாநிலங்களுக்குப் போதுமான அதிகாரம் இல்லாமல் இன்றைய தினம் எதற்கெடுத்தாலும் மத்திய அரசாங்கத்தைத்தான் கேட்கக் கூடிய நிலைமையில் இருக்கிறோம். மாநிலங்களுக்கு எந்த அளவுக்குப் போதுமான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். மாநிலங்கள் சுயேச்சையாக....

மாண்புமிகு பேரவைத் தலைவர் : சுருக்கமாகச் சொல்லுங்கள். டீட்டெய்ல்ஸுக்கு எல்லாம் போக வேண்டாம்.

திரு.ஆ.கு. சுப்பையா : மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதை எல்லாக் கட்சிகளும் விரும்புகின்றன. இந்த முறையிலே நம்முடைய தமிழக அரசு இது சம்பந்தமாக தீர விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். ஆகவே, இன்றைக்கு இந்தச் சபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு திரு.மு.கருணாநிதி: பேரவைத் தலைவர் அவர்களே, தமிழரசுக் கழகத் தலைவர் மாண்புமிகு ம.பொ.சி. அவர்கள் நாளையதினம் நடத்த இருக்கின்ற மாநில சுயாட்சிப் போராட்டம் குறித்து மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. சீமைச்சாமி அவர்களும், திரு.ஆ.கு. சுப்பையா அவர்களும் கொடுத்துள்ள இந்த ஒத்தி வைப்புத் தீர்மானம் தேவையில்லை என்பது என்னுடைய கருத்தாகும். ஏனென்றால், இன்றையதினம் ஆளும் கட்சியாக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம், மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து அதிக அதிகாரங்களைப்பெற்று சுயாட்சித் தன்மையோடு விளங்கிட வேண்டுமென்ற கொள்கையை மிகவும் அக்கறையோடும், தீவிரமாகவும் எடுத்துச் சொல்லி வருகிற கட்சியாகும். இந்தக் கட்சியினுடைய தலைவராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநில சுயாட்சியை வலியுறுத்தி அவர்கள் மறைவதற்கு முன்னால்கூட ஒரு பெரும் கட்டுரையை எழுதி இருக்கிறார்கள் என்பதையும் நாடு அறியும். எல்லாக் கட்சி நண்பர்களும் நன்றாக அறிவார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெற வேண்டுமென்பதில் உள்ள அக்கறையின் காரணமாக முதலமைச்சர் என்ற முறையில் நான் டில்லிக்குச் சென்றிருந்த நேரத்திலும், வேறு பல அறிவிப்புகளிலும் 'மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெற வேண்டும். ஆனால் அப்படிப் பெற வேண்டுமென்று கருதுகிற அதிகாரங்கள் எவை எவை என்று நாம் கூறும்போது, மொத்தத்தில் மூன்று அல்லது நான்கு அதிகாரங்கள் போக மிச்சம் உள்ள எல்லா அதிகாரங்களும் மாநிலங்களுக்கு என்று கூறுவதைவிட, திட்டவட்டமாக வரையறுத்து இன்ன இன்ன அதிகாரங்கள் என்று நாமே நமக்குள்ளே வரையறுத்துத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டுமென்பதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டுமென்று இந்த அரசு கருதுகிறது' என்று நான் அறிவித்திருக்கிறேன். அப்படிப்பட்ட குழுவில் இந்தக் கொள்கைகளை ஒத்துக் கொள்ளுகின்ற அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. இந்தக் கட்சியினுடைய கொள்கைகளைப் புரிந்துகொண்டு நம்முடைய கொள்கைகளுக்கேற்ப என்னென்ன அதிகாரங்களை மாநிலங்கள் மத்திய அரசிலிருந்து பெறலாம் என்று திட்டவட்டமாக வரையறுத்துக் கூற சட்ட நுணுக்க அறிவும் வேறு பல ஆற்றல்களும் அமைந்த தகைமை சான்றவர்கள் அந்தக் குழுவில் இருக்க வேண்டுமென்று கருதி, அப்படிப்பட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு மூவர் கொண்ட குழுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவினுடைய பணியாகக் கூட்டாட்சித் தத்துவம் முழுமையும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டும்; மத்திய அரசு அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும்; மாநில அரசு அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு மாநிலங்கள் பூரண தன்னாட்சி உரிமை பெற்று விளங்கத் தேவையான திருத்தங்களை அரசியல் அமைப்புச் சட்டத்திலே செய்வதற்கு அவர்கள் நமக்கு யோசனை கூற வேண்டுமென்ற அடிப்படையில் அந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவுக்குத் திரு. பி.வி. ராசமன்னார் அவர்கள் தலைவராகவும், திரு.ஏ. லட்சுமணசாமி முதலியார் அவர்களும், திரு.பி. சந்திரா ரெட்டி அவர்களும் உறுப்பினர்களாகவும் இருந்து நல்ல முறையில் பணியாற்றி மாநிலங்கள் எந்தெந்த அதிகாரங்களை மத்திய அரசிடம் இருந்து பெறலாம் என்பதற்கான திட்டவட்டமான விளக்கங்களைத் தருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த எந்த அதிகாரங்களைப் பெறலாம் என்பதற்கான குறிப்புகள் கொடுங்கள், அறிக்கை கொடுங்கள்' என்று அந்தக் குழுவினிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் மூவரும் அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒத்துழைப்புத் தர ஒத்துக் கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

அவர்களுடைய அறிக்கை வந்த பிறகு என்னென்ன அதிகாரங்களைப் பெற வேண்டுமென்பதிலே திட்டவட்டமான முடிவுக்கு வந்து எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் கூடி முடிவு செய்யலாம். நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. கரு. சீமைச்சாமி அவர்களும், மாண்புமிகு சுப்பையா அவர்களும் எடுத்துக் காட்டியதுபோல் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெற வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது? வேறு மாநிலங்களிலே உள்ள காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்கள் மாத்திரமல்ல; காங்கிரஸ் மாநில முதலமைச்சர்கள் கூட இப்படிப்பட்ட அதிகாரங்களைப் பெற வேண்டுமென்பதிலே அக்கறை கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இதற்கு இந்தியா முழுமையும் உள்ள மாநிலங்களில் இருந்து நல்லா தரவு கிடைக்கும்.

ஆகவே, இந்த அதிகாரங்களை வரையறுத்துக்கொண்டு நல்ல முறையில் பிரசாரம் செய்து, மற்ற மாநிலங்களுடைய நல்லாதரவையும் பெற்று மத்திய சர்க்காரோடு வாதாட வேண்டும். வாதாடிப் பயன் இல்லை என்றால் போராட வேண்டும். அப்படிப் போராடுகின்ற நேரத்தில் எல்லாக் கட்சிகளும் இணைந்து நின்று அந்தப் போராட்டத்தை நடத்திட வேண்டுமென்றுதான் தமிழரசுக் கழகத் தலைவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அவர்களும் முதலில் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தார்கள் ஆனால் என்னுடைய வேண்டுகோளுக்குப் பிறகு அதை ஒரு நாள் அடையாளப் போராட்டமாக மட்டும் நடத்துவதற்கு முன்வந்தார்கள். ஆனால், இன்று காலை பத்திரிகைகளில் தொடர்ந்து சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. நான் அதைப்பற்றி ம.பொ.சி. அவர்களிடம் கேட்ட நேரத்தில், பத்திரிகைகளில் செய்தி தவறாக வந்திருப்பதாகவும், ஒரு நாள் அடையாளமாக மட்டுந்தான் அந்தப் போராட்டம் நடை பெறுவதாகவும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்போது கூட நான் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் - நான் அன்று கேட்டுக்கொண்டதைப் போல் - இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று.

மூவர் குழு முடிவுக்குப் பிறகு அனைவரும் இணைந்து, நம்முடைய மாநிலம் மாத்திரமல்லாது எல்லா மாநிலங்களும் இணைந்து நின்று வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைப் பெற தகுந்த யோசனைகளைச் செய்து அதிலே ஈடுபடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் இப்போது தேவையில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.ம.பொ. சிவஞானம் : மாண்புமிகு தலைவர் அவர்களே! இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஒத்திவைப்புத் தீர்மானங்கள் பற்றியும் முதல்வரவர்கள் வெளியிட்ட அறிக்கை பற்றியும் விளக்கமாக இரண்டொன்று சொல்ல நிற்கிறேன். ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்து அரசின் கவனத்தைக் கவர்ந்த அன்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பெருமதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் "ஒரு குழு அமைத்து, அந்தக் குழு அறிக்கை வெளியான பிறகு மத்திய அரசுக்கு அனுப்பி, அவர்கள் ஏற்கவில்லை என்றால் தொடர்ந்து போராடலாம்" என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஓரளவுதான் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

இதிலே ஒரு அடிப்படைக் குறைபாடு இருப்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். என்னென்ன அதிகாரங்களைக் கோருவது என்று நிபுணர்கள் முடிவு செய்வது எப்போது என்றால், கொள்கை ரீதியில் சுயாட்சிக் கோரிக்கையை மத்திய அரசு ஒப்புக்கொண்டால்தான். முதலமைச்சர் அவர்கள் நிலைக்கு வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக 'சுயாட்சிக் கோரிக்கையை கொள்கையளவில் ஒப்புக்கொண்டால் போதும்' என்று பிரதமருக்கு எழுதினேன். இன்னும் பதில் வரவில்லை. மத்திய அரசும், அதை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சியும், இந்த மாநில சுயாட்சிக் கிளர்ச்சியைப்பற்றிக் கூறும்போது, "பிரிவினைக் கிளர்ச்சிக்கு இது முன்னோடி, அடையாளம்" என்ற முறையிலே கூறி, அடிப்படையிலே நமது தேசபக்தியையே சந்தேகிக்கின்றார்கள். அப்படி, பிரிவினைக் கொள்கைக்கு முன்னோடி என்று சொல்லும் ஆட்சியிடம் நிபுணர் குழுவின் அறிக்கையை அனுப்புவதால் என்ன பயன்?

இதைப்பற்றி நிபுணர் குழுவினருக்கும் தெளிவு இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் மொழிவாரி இனங்களின் பிறப்புரிமை என்ற வகையில்தான் சுயாட்சித் தன்மையை வலியுறுத்தி வருகிறேன். இந்தக் குழுவில் இருப்பவர்கள் மொழிவாரி மாநில அமைப்பை எதிர்த்து அறிக்கை விட்டவர்கள், கண்டித்தும் அறிக்கை விட்டவர்கள். அவர்களுக்கு மொழிவாரி மாநிலங்களின் சுயாட்சிக் கொள்கையிலே எப்படி நம்பிக்கை இருக்க முடியும்? தனிப்பட்ட முறையிலே அவர்களிடம் எனக்கு மதிப்பு உண்டு. அவர்களை நான் மதிக்கக் கூடியவன்.

சென்னை நகரில் ஆகஸ்டு 20-க்குப் பின்னும் தொடர்ந்து போராட்டம் நடைபெறுமென்று இன்று காலையில் வந்த செய்தி சரியல்ல. ஒருநாள் அடையாள நிகழ்ச்சியாகத்தான் போராட்டத்தை நடத்துகிறேன். தொடர்ந்து நடத்துவதை முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, பொறுப்பை அவரிடம் தந்து, நிறுத்திக்கொள்கிறேன் என்பதை முதல்வர் அவர்களுக்கு மிகவும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு திரு.மு. கருணாநிதி : தலைவர் அவர்களே! அமைக்கப்பட்ட குழுவைப்பற்றி நம்முடைய தமிழரசுக் கழகத் தலைவர் சில எண்ணங்களை வெளியிட்டார்கள். நம்முடைய மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களைப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட குழுவை நாமே சந்தேகிப்பது நல்லதல்ல. அந்தக் குழுவிலே இருப்பவரும், இன்று மேலவை உறுப்பினராக இருக்கக்கூடியவருமான மதிப்பிற்குரிய டாக்டர் ஏ. எல். முதலியார் அவர்கள் மேலவையிலே ஆற்றி இருக்கும் உரைகளைப் பார்த்தாலே, மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப் பட்டிருப்பதை எவ்வளவு வன்மையாகக் கண்டித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியும். நாமே குழுவைச் சந்தேகிப்பது முறையல்ல. அந்தக் குழுவினிடம் பொறுப்பை ஒப்படைத்து அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்ததும் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாக் கட்சியினரோடும் சேர்ந்து மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய உரிமைகளுக்காக, பெற வேண்டிய அதிகாரங்களுக்காக, வாதாடும். வாதாடிப் பயன் இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் போராட்டத்திற்கு அஞ்சியது அல்ல என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : முதல் அமைச்சர் அவர்களின் விளக்கத்தை யொட்டி இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்குத் தேவையில்லை என்ற காரணத்தால் இதற்கு அனுமதி தர நான் மறுக்கிறேன்.

(தமிழ் நாடு சட்டப் பேரவை நடவடிக்கைக்
குறிப்புகள்
:19-8-1969. பக்கங்கள் 254-259.)