சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்/மாநில சுயாட்சித் தீர்மானம்-1
மாநில சுயாட்சித் தீர்மானம்
1
21-8-70 அன்று தமிழக சட்டப் பேரவையில் மாநிலங்களுக்குச் சுயாட்சி வழங்கக் கோரும் உத்தியோகப் பற்றற்ற தீர்மானத்தை தமிழரசுக் கழகத்தின் சார்பில் திரு.ம.பொ. சிவஞானம் முன் மொழிந்தார். அப்போது அவர் பேசியது வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! கீழ்க்கண்ட தீர்மானத்தை இந்த அவையில் முன் மொழிகிறேன்:
இப்பொழுது நம் நாட்டிலுள்ள அரசியல் சட்டத்தை நாம் பொதுவாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த அரசியல் சட்டத்திற்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துத்தான் நான் இங்கே அங்கம் வகிக்கிறேன். ஆனாலும், அந்த அரசியல் சட்டத்திலேயே ஒரு விதி இருக்கிறது. அதன்படி கால மாறுதலுக்கேற்ப அரசியல் சட்டத்தை மாற்றுமாறு கோரலாம். மாற்றவும் செய்யலாம். அந்த விதியின்படித்தான் இந்தத் தீர்மானத்தை இந்த அவையின் முன்பு கொண்டுவருகிறேன்.
நம் நாட்டிலுள்ள அரசியல் சட்டம் ரொம்ப விசித்திரமானது. அது, மூன்று அதிகாரப் பட்டியல்களைக் கொண்டிருக்கிறது. ஒரு பட்டியல், 'சென்ட்ரல் லிஸ்ட்' - மத்திய அரசினுடையது. அந்தப் பட்டியலிலுள்ள எந்த அதிகாரத்தையும் மாநில அரசு கோரிப் பெற முடியாது.
இரண்டாவதாக, மாநிலத்திற்கென்று ஒரு பட்டியல் இருக்கிறது. அந்தப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் பொதுவாக மாநிலத்திற்கே உரியவை என்றாலும், மத்திய அரசு விரும்பினால், இராஜ்ய சபை மூலம் அந்த அதிகாரங்களில் எதையும் பறித்துக் கொள்ளலாம்.
இராஜ்ய மந்திரி சபை மீது மத்திய அரசுக்கு அவ நம்பிக்கை ஏற்படுமானால், "சட்டம் ஸ்தம்பித்து விட்டது" என்று சொல்லி - அனைத்து அதிகாரங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த - ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரலாம்.
மூன்றாவதாக, மத்திய அரசுக்கும் மாநிலத்திற்குமான பொதுப்பட்டியல் ஒன்று இருக்கிறது. 'கன்கரன்ட் லிஸ்ட்' என்று. ஆனால், அந்தப் பட்டியல் மீது சுப்ரீம் பவர் மத்திய அரசுக்கே யொழிய, மாநில அரசுக்கு இல்லை என்று அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. பொதுவாகப் பார்த்தால் அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசுக்குத்தான். அது நல்லலெண்ணம் காட்டி விட்டுக் கொடுப்பதை, விட்டுக் கொடுக்கின்ற காலம்வரை, மாநில அரசு வைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு அரசியல் சட்டம் சமஷ்டி நாடு எதிலும் இல்லை. இதனை, சமஷ்டி நாடுகளின் அரசியலமைப்புகளை ஆராய்ந்து பார்த்தே சொல்லுகிறேன்.
கதை ஒன்று சொல்கிறேன்; தென்னை மரம் ஏறத் தெரியாத ஒருவன், மரம் ஏறத் தெரிந்தவனைக் கூப்பிட்டு, தன் மரத்தில் ஏறித் தேங்காய் பறிக்கச் சொன்னான். 'மரம் ஏறிய உனக்கு 1, மரத்தின் சொந்தக்காரனான எனக்கு 3-ஆக 4 காய்கள் பறி' என்று சொன்னானாம். மரம் ஏறியவன் தேங்காயைப் பறித்துக் கொண்டு கீழே இறங்கி, "ஏறியதற்கு ஒன்று. இறங்கியதற்கு ஒன்று, நீயாகக் கொடுக்கிறேன் என்று சொன்னது ஒன்று, நானாக எடுத்துக் கொண்டது ஒன்று" என்று சொல்லி, நான்கையும் எடுத்துக் கொண்டு போய்விட்டானாம்.
அதைப்போல், மத்திய அரசுக்குரிய அதிகாரங்கள் அதற்கே! மாநில அரசுக்குக் கொடுத்ததையும் விரும்பினால் எடுத்துக் கொள்ளக்கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. இரண்டுபேருக்கும் பொதுவான அதிகாரங்களிலே முடிவான அதிகாரம் மத்திய அரசுக்கே!
இந்த அரசியல் அமைப்பு முறை சமஷ்டி முறைக்கே மாறுபட்டதாக இருப்பதைப் பார்க்கிறோம். வேறு எந்த நாட்டிலும் கன்கரண்ட் லிஸ்டிலே இவ்வளவு அதிகாரங்களைக் குவித்து வைத்து - அவர்களுக்குத்தான், சமஷ்டிக்குத்தான் முடிவான அதிகாரம் என்று வைக்கவில்லை.
அரசியல் சட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். நடைமுறையில் பார்த்தால், திட்டக் கமிஷன் ஒன்று இருக்கிறது. இராஜ்யங்களுக்கு உள்ள அதிகாரங்கள் எல்லாவற்றிலும் தலையிடக் கூடிய ஒரு போட்டி அரசாங்கமாகவே அது இருக்கிறது. பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் இந்தத் திட்டக் கமிஷனைப் பற்றி, "நான் எதிர்பார்க்காத அளவுக்கு இது போட்டி அரசாங்கத்தைப் போல் வளர்ந்து தொலைந்து விட்டது" என்று மிக வருத்தத்தோடு சொல்லிவிட்டார். திட்டக் கமிஷன், கல்வித் துறையிலே தலையிடலாம்- விவசாயத்தில் தலையிடலாம். அது இடுகின்ற ஆணைகளை மாநில அரசானது ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலை இருக்கிறது.கல்வித்துறை மாநிலங்களுக்கே உரியது என்று சொல்லப் பட்டாலும் பல்கலைக்கழக மானியக் குழு என்று ஒன்று இருக்கிறது. கொஞ்சம் பணத்தைக் காட்டி, மாநிலங்களிடத்திலிருந்து கல்வி நிலையங்களிலும் அது தலையிடலாம்.
தொழில் அமைச்சர் மாண்புமிகு மாதவன் அவர்கள் "தினத்தந்தி"யிலே கல்வித்துறையைப் பற்றி-சில திங்கள் அந்தத் துறையை நிர்வகித்த அனுபவத்தைப்பற்றி-எழுதினார்கள். எப்படி எல்லாம் சுற்றி வளைத்து, இராஜ்யத்தில் கல்வித் துறையிலே பல்கலைக் கழக மானியக் குழு தலையிட முயல்கிறது என்பதை எடுத்துச் சொன்னபோது, "மிகுந்த வேதனையோடு" என்ற வார்த்தையை நிறையக் கையாண்டிருந்தார்கள். சொற்ப நாட்களே அந்தத் துறையிலே அனுபவம் பெற்ற அவர்கள், எவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்கிறார்கள்! இந்த இலட்சணத்தில் கல்வித்துறை மாநிலத்திற்கே உரியது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டு இருக்கிறது.
இங்கு இந்தி போதனை வேண்டாமென்று நாம் முடிவு செய்திருக்கிறோம். ஆனால், பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் இங்கு இந்தியைக் கொண்டு வருகிறது மத்திய அரசு. ஏன், இந்தி பல்கலைக் கழகத்தைக் கூடத் துவக்க முன் வருகிறது. ஆக, ஜனநாயகத்தைப் பறிக்கக் கூடிய அளவுக்கு பல்கலைக் கழக நிதிக் குழுவும் திட்டக் கமிஷனும் செயல்படுவதைப் பார்க்கிறோம்.
மொத்தத்தில் நடைமுறையில் அரசியல் சட்டம் கொடுக்கிற சொற்ப அதிகாரங்களைக்கூட மாநிலங்கள் அனுபவிக்க முடியாமல் பல்கலைக் கழக மானியக் குழுவும் திட்டக் கமிஷனும் இயங்குகின்றன.
இன்னொரு கட்டுப்பாடு அரசியல் சட்டம் கொடுக்கும் அதிகாரத்தைத் தணிக்கை செய்கிறது. அது கட்சிக் கட்டுப்பாடு. இந்த மாநிலத்திலேயே பார்க்கும்போது, மத்தியிலுள்ள ஆளுங் கட்சிதான் இங்கும் ஆளும் கட்சி என்றால், மத்தியிலே உள்ள கட்சியினுடைய மேலிடம் இங்குள்ள ஆளுவோரைக் கூப்பிட்டு "இதை இப்பொழுது அமுல் படுத்தாதே; அதை இப்பொழுது விரும்பாதே" என்று ஆணையிடுகிறது. அரசியல் சட்டம் அனுமதி கொடுத்தாலும்-மாநிலத்திற்கு உரிமை அளித்தாலும். கட்சிக் கட்டுப்பாடு, மேலிடத்தின் உத்திரவு அந்த உரிமைகளை அனுபவிக்க முடியாமல் தடையாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, அது மாநிலங்களுக்குரிய அதிகாரங்கள் இன்னின்ன என்பதைத் தெளிவுபடுத்தும் பிரச்னையை மீண்டும் புனராலோசனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்று இந்தத் தீர்மானத்தின் மூலம் கூற விரும்புகிறேன்.
அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து 19-ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 19-ஆண்டு அனுபவத்தை வைத்துப் பார்த்தாலும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான அதிகாரப் பங்கீடு பற்றிய சட்ட விதிகளை மீண்டும் புனராலோசனை செய்ய வேண்டுமென்பதே எந்தக் கட்சியும்-என்னோடு வேறுபாடு உள்ள கட்சி கூட ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது.
எல்லா மாநிலங்களிலும் 20 ஆண்டுகள் ஒரே கட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது இந்தக் குறைபாடுகள் வெளியில் தெரியவில்லை; தெரியாமல் மறைக்கப்பட்டு வந்தன. ஆனால், அநேக மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆள வந்துவிட்டன. அவைகளால் அரசியல் சட்டத்தில் உள்ள குறைபாடுகள், கோணல்கள் வெளிப்படுத்தப்பட்ட காரணத்தால், அரசியல் சட்டத்தையே மாற்றவேண்டிய-அரசியல் அமைப்புப் பற்றிப் புனராலோசனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். கேரளத்தின் முதல் அமைச்சர் ஒரு கருத்தைச் சொன்னார்; அவர், "அரசியல் சட்டத்தை உடைக்கிறேன்" என்றாரோ, அல்லது "அரசியல் சட்டத்தைத் திருத்துகிறேன்" என்றாரோ. பத்திரிகைச் செய்தியே விவாதத்திற்குரியதாகி விட்டது. அவர், "திருத்தந்தான் கோருகிறேன்" என்று சொல்கிறார். ஆனால், மத்தியினுடைய உள்துறை அமைச்சர், "வா" என்று அவரை டில்லிக்கு கூப்பிட்டிருக்கின்றார்.
போலீஸ் ஸ்டேஷனுக்குக் குற்றவாளியைக் கூப்பிடுகிற மாதிரி "டெல்லிக்கு வா" என அழைத்திருக்கிறார். அப்படிக் கூப்பிடுகிற முறையிலே டெல்லி உள்துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் இருக்கிறது. அரசியல் மரபை மீறுகிற அரசாக அது இருக்கிறது.
தி.மு. கழகம் மக்களிடத்திலே மிகுந்த செல்வாக்கு கொண்டுள்ளது. அதனை, அதற்கு ஏற்பட்ட பல சோதனைகளிலே கூட, அது உறுதிப்படுத்தி வந்திருக்கிறது. அத்தனை உபதேர்தல்களிலும் வெற்றி கண்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இத்தனைத் துணைத் தேர்தல்கள் அந்த மாநிலத்தைச் சோதிக்கவில்லை. இடைத் தேர்தல்கள் மேலும் மேலும் வருகின்றன.
இவ்வளவு செல்வாக்கை அது மக்களிடம் பெறக் காரணம், ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியின் பொழுது இருந்த நிலையை மாற்ற முயல்வதுதான். மத்தியிலுள்ள ஆட்சிக்கு மாநில ஆட்சி அடங்கிச் சென்ற காலம் போய்விட்டது. மாநில மக்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கத் தக்க வகையில், இந்த மாநிலத்தின் தனித் தன்மைக்கு- மாநிலத்தின் தனிப் பழக்க வழக்கத்திற்குத் மாநிலத்தில் தனிப்பாரம்பரியத்திற்கு மாநிலத்திற்கு தனி வரலாறு உள்ளது என்பதற்கு மதிப்பு கொடுக்க மத்திய அரசு தவறுகிறது. இதனால் வெறுப்பு அடைந்து, அதிருப்தி அடைந்து காங்கிரசுக்கு எதிரான மனப்போக்கை மக்கள் அடைந்திருக்கிறார்கள். ஆகவே, தி.மு. கழகம் தாங்கள் நினைத்ததைச் செய்யும்; காங்கிரஸ் அல்லாத கட்சிகள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றும்; தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எல்லாம் தங்களுக்குக் கிடைக்கும் என்று ஆசைப்பட்ட மக்கள் ஒன்றைத் தெரிந்து கொண்டார்கள். இப்போது காங்கிரசு அல்லாத கட்சிகளை அரசாட்சியில் அமர்த்திப் பார்த்த பிறகு ஒரு காங்கிரஸ் அல்லாத கட்சி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு ஒன்றை நிறைவேற்ற நினைத்தால், அப்படி நிறைவேற்றப்பட அரசியல் சட்டம் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டார்கள்.
என்னுடைய சொந்த அபிப்பிராயம் ஒன்றை நான் சொல்கிறேன். ஏன், நான் சார்ந்திருக்கிற தமிழரசுக் கழகத்தின் சார்பாகவும் சொல்கிறேன். மத்தியில் போக்குவரத்து, அயல்நாட்டு உறவு, பாதுகாப்பு ஆகிய மூன்று அதிகாரங்களை மட்டும் வைத்து, மற்றவைகளையெல்லாம் மாநிலங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது என் கொள்கை. ஆனால், நான் கொடுத்துள்ள தீர்மானத்தில் அப்படி வரையறுத்துச் சொல்லவில்லை. அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. அதிகாரப் பங்கீட்டுப் பட்டியலை மாற்றி அமைக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது என்ற அளவுக்கு பொதுப்படையாக இந்த மன்றம் ஒப்புக்கொண்டு, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆட்சியினுடைய கரத்தைப் பலப்படுத்தி, மத்தியத்திற்கு அனுப்பினால் போதும், விவரங்களைப் பிறகு-நடைமுறைக்கு வரும்போது பார்த்துக் கொள்ள விட்டுவிடலாம் என்ற எண்ணத்தால்தான் இந்தத் தீர்மானத்தில் விவரங்களைச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
முடிப்பதற்கு முன்பு ஒன்று சொல்கிறேன். நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து, அனுபவித்து, நான் தெரிந்து கொண்டதைச் சொல்லுகிறேன். காங்கிரஸில் 28 ஆண்டுகாலம் இருந்து, விடுதலைப் போராட்டத்தில் இரண்டறக் கலந்துகொண்டு, எந்தெந்தக் காலத்தில், காங்கிரசிலே எப்படிப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன, எந்தத் தீர்மானம்- எந்த உணர்ச்சியின் பின் அணியிலே நிறைவேற்றப்பட்டது என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.திரிபுரா காங்கிரசிலும் அரிபுரா காங்கிரசிலும் நிறை வேற்றப்பட்ட தீர்மானம், பாதுகாப்பு- போக்குவரத்து- அயல் நாட்டு உறவு இந்த மூன்று அதிகாரங்களையும் மத்தியத்திற்கு விட்டுவிட்டு, மற்றவையெல்லாம் உடைய மாநில அரசுகள் சுதந்திர இந்தியாவில் அமையும் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறது.
அந்தக் காங்கிரஸ் மாநாடுகளில் தலைமை வகித்த நேதாஜி சுபாஷ்போஸ் அவர்கள் தலைமை உரையிலும் அவ்வாறு கூறபட்டிருக்கிறது. அதுமாத்திரமல்ல. தனது தேர்தல் பிரகடனங்களில் மாகாண சுயாட்சிக் கொள்கையை காங்கிரஸ் வற்புறுத்தியிருக்கிறது.
இன்னும் பின்னே சென்றால், 1935வது ஆண்டு சட்டத்தை காங்கிரஸ் நிராகரித்ததற்கான காரணம் மாநிலங்களுக்குப் போதிய சுயாட்சி வழங்கப்படவில்லை என்பதுதான். 1946வது வருஷத்தில் வெளியான பிரிட்டிஷ் மந்திரி சபைத் திட்டத்தில்-இந்தியாவுக்கு சுதந்தரம் கொடுத்தபொழுது-இந்த மூன்று அதிகாரங்கள் மத்தியத்திற்கும், மற்றவைகளெல்லாம் மாநிலங்களுக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த மூன்று அதிகாரங்களிலிருந்து கிடைக்கின்ற நிதி வசதி மத்திய அரசுக்குப் போதுமா?- என்ற வினா எழுந்த நேரத்தில், அதிலே ஒரு விதியைப் புகுத்தியிருக்கிறார்கள். அது, மத்திய அரசுக்கு வருவாய் போதாது என்றால், மாநிலங்களிடமிருந்து மானியம் பெறலாம் என்பதாகும்.
இதையெல்லாம் முணு முணுப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய சுதந்திரத்தை ஆகஸ்டு 15ம் தேதி பிரகடனம் செய்தது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் அரசியல் நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது.
இந்த அரசியல் நிர்ணய மன்றத்தில் முதல்நாள் கூட்டத்தில் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவில், "மூன்று அதிகாரங்களை மத்தியத்திற்கு வழங்கி, மற்றைய அதிகாரங்களையெல்லாம் உடைய சுயாட்சி மாநிலங்களைக் கொண்ட சுதந்திர இந்தியா உலகத்திற்கு ஒரு முன்னோடி. இந்த உலகத்திற்கு ஒரு வழிகாட்டி என்று நான் பெருமைப்படுகிறேன்" என்று பேசினார். ஆனால், பிற்கால நடைமுறையில் என்னென்னவோ நிகழ்ந்து, எல்லாம் தலைகுப்புற கவிழ்ந்து விட்டதைப் பார்க்கிறோம்.
அரசியல் நுணுக்கங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நிர்வாக அடிப்படையில் இந்தப் பிரச்னையை அணுகினால்- இங்கு ஒரு கல்வித்துறை, டில்லியில் ஒரு கல்வித்துறை, போலீஸ், சுகாதாரத் துறைகள் இங்கும் இருக்கின்றன; அங்கும் இருக்கின்றன. முழு அளவுக்குப் பொறுப்பேற்று நடத்துகிற மாநில சர்க்காரிடத்தில் ஒரு பொதுச் சுகாதாரத் துறை இருக்கிறது. மத்தியிலும் ஒரு பொது சுகாதாரத்துறை இருக்கிறது. இங்கு ஒரு போலீஸ் துறை; இந்த போலீஸ் அமைச்சரை நம்பாமல், அங்கு ஒரு போலீஸ் துறை எதற்கு? நம்முடைய மதிப்பிற்குரிய சவாண் அவர்கள் மகாராஷ்டிர முதலமைச்சராக இருந்தபோது அவரை சந்தேகித்தது மத்திய போலீஸ் துறை. அவரே மத்திய உள்துறை அமைச்சரானபின், மாகாண உள்துறை அமைச்சரை சந்தேகிக்கிறார். மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருப்பவரிடம் மத்திய உள்துறைக்கு ஐயப்பாடு இருப்பதால், அங்கே மத்தியில் ஒரு போலீஸ்துறை அவசியமாகிறது.
மாநிலத்தில் ஆளுநராக உள்ளவர் அந்த மாநிலத்தைச் சேராதவராக இருக்கவேண்டும் என்ற மரபு உள்ளது. அரசியல் சட்டம் அப்படிச் சொல்லவில்லை. அரசியல் சட்டப்படித் தமிழகத்து ஆளுநர் தமிழராக இருக்கக்கூடாது என்பது இல்லை. வங்காளத்தில் ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது. கேரளத்தில் ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்று 23 ஆண்டுகள் சென்றும், தமிழ் நாட்டில் தமிழ் மகன் ஒருவர் ஆளுநராக வரவில்லை. ஏதோ ஒரு ஐயப்பாட்டின் அடிப்படையில் இப்படிப்பட்ட ஒரு மரபு இருக்கிறதே தவிர, அரசியல் சட்டம் அப்படி வற்புறுத்தவே இல்லை.
வலிமை வாய்ந்த மத்திய சர்க்கார் வேண்டும் என்று சொல்கிற தேச பக்தர்களோடு நான் இரண்டறக் கலந்து கொள்கிறேன். இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும் என்பவர்களோடு உணர்ச்சி பூர்வமாக நான் ஒன்றுபடுகிறேன். ஆனால், வலிமை உள்ள சர்க்கார் வேண்டும் என்பதற்காக, சுகாதாரத்தையும் கல்வியையும் ஏன் மத்தியிலும் வைத்துக் கொள்ள வேண்டும்? யாருக்கு எதிராக மத்தியில் வலிமை வாய்ந்த சர்க்கார்? மாநிலத்திற்கு எதிராக மத்தியில் வலிமைவாய்ந்த சர்க்கார் இருக்கவேண்டும் என்று சொல்வது மக்களுடைய தேசபக்தியையே சந்தேகிப்பது ஆகும்.
மத்திய சர்க்கார் மாநில சர்க்கார் மீது சந்தேகத்தை 20 ஆண்டுகளாக வளர்த்து வந்ததன் விளைவுதான் ஜனாதிபதி தேர்தலின் முடிவு. அந்த முடிவு நம்மிடையே நல்ல மாறுதல் ஏற்படுத்தவேண்டும். வெற்றி வெறியோடு நான் சொல்லவில்லை. விரோத உணர்ச்சியோடு நான் சொல்லவில்லை. நேற்றிரவு 10.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட முடிவு வோட்டுகள் எப்படிப் பிரிந்துள்ளன; மாகாணங்கள் எப்படி காங்கிரசின் கையை விட்டுப்போய்க் கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்துகிறது. வெற்றி, நான் விரும்புகிற பக்கம் இருந்தாலும் கூட, எனக்குக் கவலை இருக்கிறது. அது பகைமையில் போகக்கூடாது. உறவில் முடியவேண்டும். அந்த உறவை வளர்க்க அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும். இதைத் தவிர. வேறுவழி ஒன்றும் தெரியவில்லை.
இது ஒருமைப்பாட்டு முயற்சிக்குக் கேடானது என்றால் அதை எனக்கு எடுத்துச் சொல்லலாம். இதில் என்ன கேடு வந்துவிடும்? சுகாதாரத்தை, கல்வியை மாநிலங்களுக்கே விடுவதனால் இந்தியாவில் பலம் வாய்ந்த சர்க்கார் மத்தியில் இருக்காதா?
நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் ஒன்றை திரு. ஹனுமந்தய்யா தலைமையில் மத்திய சர்க்கார் நியமித்தது. அந்தக் கமிஷனும் சிபார்சு செய்திருக்கிறது, 'அதிகாரப் பங்கீட்டு முறைகள் மாறவேண்டும்' என்று. நிதி வசதி கூடுதலாகக் கிடைக்கும் அளவுக்கு மாநிலங்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். திட்டங்களை நிறைவேற்ற மாநிலங்களுக்கு சுதந்திரம் தரவேண்டும்! மாநிலக் கவுன்சில் ஒன்று வேண்டும் என்றெல்லாம் நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. காங்கிரசின் கையிலுள்ள மத்திய அரசு நியமித்த நிர்வாகச் சீர்திருத்தக் கமிஷனே இப்படிச் சிபாரிசு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள்கூட மறுக்க மாட்டார்கள். எதிர்கட்சித் தலைவர் அவர்களுக்கு ஒருவேளை என்னைப் பிடிக்கவில்லை என்றால், நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் செய்துள்ள சிபாரிசுகளின் பேரிலாவது இந்தத் தீர்மானத்தை அவர் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தீர்மானத்தின் மீது நான் அதிகமாகப் பேச விரும்பவில்லை. விவாதத்தின் முடிவில் ஏதேனும் சொல்ல வேண்டுமானால் சொல்கிறேன்.