சந்திரோதயம்/கூறுகிறார்கள்
கூறுகிறார்கள்:
சிங்காரவேலர்: நான் வயோதிகனானாலும் வைதீக புரியிலே ஒரு சிற்றரசன். அதை பயன்படுத்திக்கொண்டான் வாஞ்சிநாத சாஸ்திரி. என் கண்மனி சந்திராவை ஒரு வயோதிக ஜமீன்தாரருக்கு திருமணம் நடத்திவைத்து அதன் மூலம் தனது பிழைப்புக்கு அஸ்திவாரம் தேட ஆரம்பித்தான். நான் மறுத்தேன். பார்ப்பனியம் படமெடுத்தாடியது. நான் பஞ்சையாக்கப்பட்டேன். வாஞ்சிநாத சாஸ்திரி வெற்றிபெற்றான். சூது சூழ்ச்சியால் பணக்காரனானான். என்மகள் நல்லூர் ஜமீன்தாரணியாக்கப்பட்டு மறுமாதமே விதவையாக்கப்பட்டாள். இந்த நிலையிலும் வைதீகபுரியில் இளவரசன் பட்டத்தை இழக்கவில்லை நான்! மாயேந்திரன்! ஆம்! ஊர் மக்களால் மாயேந்திரன் வள்ளல்—மக்கள் நலம் நாடுபவர் என்றெல்லாம் போற்றப்பட்டார். அவர் என்னால் திருட்டுக்குற்றம் சாட்டப்பட்டு ஊரை விட்டோடிய துரைராஜ் என்பது எனக்குத் தெரியாது. மாயேந்திரன் அழைத்தார் என்றவுடன் காணச்சென்றேன். நான் சென்ற சிறிது நேரத்தில் வாஞ்சிநாதன் வருவது தெரிந்து நான் மறைவிலிருந்தேன். மாயேந்திரன் வாஞ்சிநாத சாஸ்திரியோடு உரையாடினார்— அதன் முடிவும் சாஸ்திரியை நானே கொலை செய்தேன். அந்த கொலையிலிருந்து என்னை தப்புவித்தார் மாயேந்திரன். என் மகளுக்கும் அவள் காதலன் சாம்பசிவத்திற்கும் திருமணம் முடித்துவைத்தார் ஆனால், மாயேந்திரன்?
சந்திரா: அன்றொரு நாள் சந்திரோதயத்தின்போது என் வீட்டுத் தோட்டத்திலே ஆடிப்பாடிக் கொண்டிருந்தேன். சாம்பசிவம் — ஆம், அவர் வந்து என் அழகை அப்படி(!) வர்ணித்தார். காதல் வளர்ந்தது. இடையிலே என் தந்தையின் பயங்கர நடவடிக்கைகளால் நான் ஒரு கிழ ஜமீன்தாரருக்கு மனைவியாக்கப்பட்டேன். மறு மாதம் விதவையானேன். மீண்டும் சாம்பசிவத்தை சந்தித்து புத்துலகம் அமைக்க துடித்தோம். மாயேந்திரன் எங்கள் வாழ்க்கையை இணைத்து வைத்தார்— ஆனால் அந்த கர்மவீரன்—?
துரைராஜ்: இந்த நாட்டு மக்கள் மக்களாகவே வாழ வேண்டுமென்று விரும்பினேன். புத்துலகக் கழகம் அமைத்தேன். சாம்பசிவம் போன்ற நண்பர்களை உதவிக்கு வைத்துக் கொண்டேன். பணியாற்றப் புறப்படும் பாதையில் வைதீகப் புயல் வீசத் தொடங்கிற்று. பார்ப்பனீயம் என்ற பாம்பு படமெடுத்தபடி பயமுறுத்தியது. திருடனாக்கப்பட்டேன். ஊரை விட்டு ஓடினேன். வழியில் இரண்டு காவிகட்டிகள் தன் குருநாதரான அழகூர் மடாதிபதியை ஒழித்து தங்களை அந்த ஸ்தானத்திற்கு வைத்தால் எல்லா உதவிகளையும் செய்வதாக கூறினார்கள். அதன் மூலம் “நான் ஒருநாள் மடாதிபதியாகி” அழகூர் மடாலய சொத்துக்கு அதிபதியானேன். மறுநாள் என் வேஷங்களை கலைத்து விட்டு சிறிது சொத்துடன் மாயேந்திரனாக மாறி அந்த ஊரைவிட்டு என் சொந்தஊர் திரும்பினேன். விட்டுப்போயிருந்த என் பணிகளை பணத்தின் துணைகொண்டு மிகு எளிதில் முடித்தேன். என் வேலை முடிந்தது. நாடு திருந்தியது. நான் வருகிறேன்.
கோதண்டம் — தங்கவேல், நாங்கள் என்னகூறப்போகிறோம். உங்களது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உங்கள் கவனம் அடுத்தடுத்து பக்கங்களைப் புரட்டிப் படிப்பதில் செல்லட்டும், வணக்கம்!