உள்ளடக்கத்துக்குச் செல்

சமதர்மம்/சொல்வதெல்லாம் செய்தல் சதந்திரம்

விக்கிமூலம் இலிருந்து
சொல்வதெல்லாம் செய்தல் சுதந்தரம்

சுகமாக வாழவேண்டும் என்ற எண்ணம், மக்கள் மனதிலே இயற்கையாகவும், தொடர்ந்தும், தோன்றுகிற முறையிலும் அளவிலும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை. சுதந்திர வேட்கையே மக்கள் உள்ளத்திலே கிடையாது என்பதல்ல இதன் பொருள். சுதந்தரத்தைப் பற்றிய கருத்து அவ்வளவு தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசப்படுவதில்லை.

பெரும்பாலான மக்கள் சுகமாக வாழவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். அதுதவறும் ஆகாது. அந்தச் சுக வாழ்வுக்கு, என்ன வழி என்று சிந்தித்தபோது கிடைத்த பல எண்ணங்களிலே மிக முக்கியமானது சுதந்தரம் என்ற கருத்து.

ஆதி மனிதன், மிகமிகச் சுதந்தரபுருஷன்--அவன் வரி செலுத்தியதில்லை --அவனைக் கட்டுப்படுத்த எந்தச் சட்டமும் கிடையாது. 144--வது செக்ஷனை அவன் அறியான், வழக்கு மன்றமும் கிடையாது. வாதாடும் முறை கிடையாது. சிறையோ சிரச்சேதமோ கிடையாது. இங்கே நுழையாதே; இதைத் தொடாதே; இப்படிச் செய்யாதே என்று அவன் ஆட்டிவைக்கப்பட்டதில்லை, கண்ணெதிரே தெரிந்த காட்டில் தன்னிச்சையாகத் திரிந்து, பசித்தால் புசித்து, அலுத்தால் உறங்கி, கோபம் வந்தால் கூவி, குதூகலம் வந்தால் ஆடிப்பாடிக் கொண்டுதான் இருந்தான்.

இந்தச் சுதந்தர வாழ்வு, நெடுநாட்களுக்கு அவனுக்குச் சுகவாழ்வு கிடைக்கும் வழி செய்யவில்லை. யாரும் அவளைக் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் அவனுடைய வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கை முறையுடன் மோதவேண்டி நேரிட்டது. இயற்கையையும் அவர் எதிர்த்துத் தீரவேண்டி வந்தது.

சட்டம் மீறி அல்ல அவனுக்குத் தடை உத்திரவு பிறந்தது. காட்டில் உலவிய மிருகங்கள் மூலம், பல எதிர்ப்புக்கள் எதிர்பாரா ஆபத்துக்கள் ஏற்படலாயின, வாழ்வதற்காகப் போராடவேண்டி ஏற்பட்டது. வாழ்க்கைப் போட்டியிலும் ஈடுபடவேண்டி நேரிட்டது. தன்னை ஒத்த மற்றவர்களுடன். தன் சுகவாழ்வின் பாதுகாப்பைப் பற்றியும், அதனைக் கெடுத்திடக் கூடியவர்களை அடக்கித் தீரவேண்டிய அவசியத்தைப் பற்றியும், அதற்கு ஏற்றவிதமான முறைகள் பற்றியும் அவனே யோசிக்கவும், தீர்மானிக்கவும், முறைகள் வகுக்கவேண்டியவனானான், முதல் சட்டசபை கூடிற்று. சுதந்தர வாழ்வு சுகவாழ்வாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இப்படி இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்ற விதிகள் வகுத்தான். முதல் சட்ட புத்தகம் ஏற்பட்டது. விதிகளை மீறி நடந்தால் கேட்பதற்கு, இவருக்கு அதிகாரம் என்று குறித்தான், முதல் மாஜிஸ்ட்ரேட் தோன்றினார். விதிகளை மீறாதிருக்கிறானா என்று கவனித்துக்கொள்ள வழி வகுத்தான். முதல் போலீஸ்காரர் உலவினார். தடைகளை மீறாதிருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூற ஏற்பாடு செய்தான். முதல் உபதேசியார் கிளம்பினார்; தடையை மீறினான், தவறு இழைத்தான் என்று வேண்டுமென்றே யார் மீதேனும் மற்றவர் பழி சுமத்தினால் கண்டறிந்து, தவறு செய்யவில்லை என்று காரணம் காட்டி வாதாட வழி செய்தான். முதல் வக்கீல் பேசலானார்; குற்றம் செய்தானா இல்லையா என்பதைச் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்பளிக்கத் திட்டம் வகுத்தான், முதல் நீதிபதி நின்றார். இவ்விதமெல்லாம், முறைகளும், ஏற்பாடுகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டன. மெள்ள மெள்ள படிப்படியாக போலீஸ்காரர், உபதேசியார், வக்கீல், நீதிபதி, சிறைக்காவலர், ஆகியோர் சூழ்ந்து கொண்டனர். இவ்வளவும் அவனாகத் தேடிக் கொண் டமை. எல்லாம் சுதந்தரத்தை இழந்துவிடவேண்டும் என்ற எண்ணங்கொண்டு அல்ல; அடிமைப் புத்தி ஏற்பட்டதால் அல்ல; சுதந்திரத்தின் விளைவாகச் சுக வாழ்வு கிடைக்கவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக. இவ்வளவுக்கும், இன்று இருப்பது போலத் தனித்தனி ஆட்கள் அல்ல; ஆதி நாட்களில், இந்த அதிகாரம் அவ்வளவும் ஒரே இடத்தில்; ஒரே ஆளிடம் குவிந்துவிட்டது.

அவனே காட்டுராஜா--அவனுடைய சொல்லே சட்டம் அவனுடைய கூர்ந்த கண்களே போலீஸ்--அவன் சிரித்துப் பேசும் போது, உபதேசியார் கோலம். சீறிப் பேசும்போது மாஜிஸ்ட்ரேட் உருவம். ஆதரவு காட்டும்போது வக்கீல் வடிவம். இவ்வண்ணம், அவனே சகலமுமாக இருந்து வந்தான்,

மக்களின் சுகவாழ்வு, அவனுடைய வலிவையும், நேர்மையையும் பொறுத்திருந்தது. நீதியை நிலைநாட்டக் கூடிய அளவு வலிவும் மக்களின் சுக வாழ்க்கைக்காகவே, தன்னிடம் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது என்கிற நேர்மை உணர்ச்சியைப் பொறுத்துமே, மக்களின் சுக வாழ்வு இருந்தது.

சில காலத்துக்குப் பிறகு, அவன் தன் வலிவையும், பதவியையும் மட்டும் பெரியதென, முக்கியமானதென, எண்ணத் தொடங்கினான். மக்களின் நலனையும் நேர்மை உணர்ச்சியையும் கைவிட்டு விட்டான். கொடுங்கோலனானான். அதற்கும் சில காலத்துக்குப் பிறகு வலிவுகூட அல்ல முக்கியமான தேவையாக இருந்தது; வெறும் பதவியே போதுமானதாகிவிட்டது, கேடு செய்ய, சுக வாழ்வுக்காகத் தேடிக் கொண்ட சாதனமே பிறகு, சுதந்தரத்தைச் சூறையாடும் சக்தியாகிவிட்டது. உணர்ந்தோர் எதிர்க்கலாயினர். புரட்சி பூத்தது. உணர முடியாதோர் திகைத்தனர். அடிமைத்தனம் முளைத்தது. இந்த மூன்று சக்திகளுக்குமிடையே இருந்துவந்த தொடர்புதான் வரலாற்றிலே குறிக்கப்பட்டுள்ள பெரும்பாலான சம்பவங்கள்.

வானத்தில் வட்டமிடும் பறவை இரையும் இருப்பிடமும் தேடி பலவற்றைக் கண்டு ஏதேனும் ஒன்றினைக் கொண்டு மகிழ்தல்போலச், சிந்தனைத் திறம் படைத்த மனிதன், சுக வாழ்வுக்கான சாதனங்கள் யாவை என்று தேடிய வண்ணம் இருந்து வந்திருக்கிறான். பல தவறுகளை இழைத்திருக்கிறான். வட்டமிடும் பறவையைக் கொத்தவரும் வல்லூறுபோலச் சுகவாழ்வு தேடிய மனிதனை கொடுங்கோலர் வதைத்துமிருக்கிறார்கள், பல கஷ்டங்களுக்குப் பிறகு, மக்களாட்சி முறையே, சுகவாழ்வுக்குச் சரியான சாதனம் என்று முடிவு செய்திருக்கிறான்.

காட்டு அரசன் கெட்டவனானபோது, இந்த அரசன் அக்கிரமக்காரன், பாபி--இவன் ஒழிந்தால் போதும்--இவன் தம்பி நல்லவன்--மகன் சாது--தம்பியோ மகனோ பட்டத்துக்கு வந்தால் இப்படிக் கொடுமைப் படுத்தமாட்டான்; சுதந்தரத்தை அழிக்கமாட்டான்--சுகவாழ்வு கிடைக்கும் என்ற பெருமூச்சுடன் பேசலாயினர். அதாவது ஆளை மாற்றிவிட்டால் போதும்; அநீதி அழிந்து விடும்; நிம்மதி ஏற்படும் என்று எண்ணினர்.

ஒவ்வொரு காட்டரசனிடமும், ஏதேனும் ஒருவித கெட்ட நடவடிக்கை இருக்கக்கண்டு சலித்துச் சலித்துப் போயான பிறகுதான், அரசனாக இருப்பவனுக்கு, மட்டற்ற அதிகாரத்தைத் தந்திருப்பதால், அவனுக்கு நிகர் யாரும் கிடையாது. அவன் ஆண்டவனுக்கு பதில் கூறவேண்டியவனேயொழிய, மக்களுக்கு அல்ல என்ற தத்துவம் இருக்கும் வரையில், யார் அரசனாக வந்தாலும் அக்கிரமம் செய்யத்தான் துணிவான்--சுதந்திரத்தை அழித்துக் கொண்டு தான் இருப்பான்--அரசனின் அதிகாரத்தை மட்டுப் படுத்த வேண்டும்; கட்டுப்படுத்த வேண்டும்--அக்கிரமம் செய்தால் கேட்பதற்கும் திருத்துவதற்கும் வழிவகை இருக்கவேண்டும். அப்போது தான் சுதந்தரம் நிலைக்கும்; சுகவாழ்வு தழைக்கும் என்று பேசலாயினர். தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி, சண்டப் பிரசண்டனாவான் அல்லவா? அம்முறையில், அரசனின் அதிகாரத்தை அளவுப்படுத்திப் பார்த்தனர்.

பிறகு இந்த முறையும், சுதந்தரத்தைச் சூதுமதியினர் சூறையாடுவதைத் தடுக்க உதவவில்லை. எப்படியோ, அரசனானால், தன் அதிகாரத்தைக்கொண்டு மக்களை அச்சமூட்ட, அடக்க முடிந்தது.

எவ்வளவுதான் கட்டு, காவல் வைத்தாலும், அதிகாரத்தை மட்டுப்படுத்தனாலும், பயனில்லை. ஒருவன் அரசன் என்ற பதவியைப், பிறவி காரணமாகவே பெற்று விடுகிறான்-- அறிவால் அல்ல--ஆற்றலால் அல்ல--நற்பண்பினால் அல்ல. இந்த நிலை இருக்கும் வரையில் சுதந்தரம் தழைக்காது. மக்களின் சுதந்தரம் காக்கப்பட வேண்டுமானால். மக்களாட்சி ஏற்பட வேண்டும். ஓநாயைச் சாதுவாக்கி ஆட்டுக்குக் காவல் வைக்கவும் முடியாது. உருத்திராட்சம் அணிந்தாலேயே பூனை, போதகாசிரியனாகிவிடாது என்று கூறினர், மக்களை மக்களே ஆளவேண்டும். மக்களிடமிருந்தே சகல அதிகாரமும் பிறக்கிறது. மக்களுக்காகத்தான் ஆட்சியே தவிர, ஆட்சி செய்பவர்களின் அட்டகாசத்துக்கு இரையாவதற்காக, மக்கள் இல்லை, என்று பேசினர். மக்களாட்சி அமைக்கப்பட்டது.

மக்களாட்சி அமைக்கப்பட்ட பிறகுதான், ஆட்சிக்கு வருமுன்னம் மக்களுக்கு இன்னின்ன நன்மைகள் செய்கிறோம்; தொழிலை வளமாக்க, செல்வத்தைப் பெருக்க, புதிய பல திட்டங்கள் உள்ளன என்று பேசவும், ஆசைக் காட்டவும் முன் வந்தனர். கட்சிகள் ஏற்பட்டன. மக்கள் மன்றத்திலே இடம் பெறும் முறை அமைக்கப்பட்டது. ஆட்சி மன்றம் ஏறு முன்னம் "அன்பரே! நண்பரே! ஆருயிர்த் தோழர்களே! எமக்கு ஆதரவு தந்துபாரும் வரி குறையும்; வளம் அதிகரிக்கும்--காடு மேடுகள் வயலாகும் காட்டு முறை ஒழியும்; இரும்புத் தொழிலும் ஏனைய தொழில்களும் எங்கும் ஓங்கும்-வறுமை நீங்கும். வாட்டம் தொலையும்--தேனும் பாலும் தெருவெல்லாம் ஓடும்--என்று பலப்பல பேசிவிட்டு--மமதைக் கொள்ள மாட்டோம். மக்களை மதித்து நடப்போம்; சீறிடமாட்டோம்; மக்களின் சித்தத்தின்படி நடப்போம்--ஊராள வந்து உறுமிக்கொண்டிரோம், உமது நன்மை ஊழியராக இருப்போம்; அடக்குமுறை வீசோம்; அன்பு நெறியைக் கொள்வோம்" என்று இன்பமொழி பலபேசி--ஆட்சிமன்றம் ஏறிய பிறகு, புரு வத்தை நெறிக்கவும், கையை விரிக்கவும், முடுக்காக நடக்கவும், மக்களின் உரிமையை நசுக்கவும் முனைந்தால், மக்கள் மனவேதனையடைவர். அந்த வேதனையைத் தீர்த்துக் கொள்ளவும், அதிகார வெறி கொண்டோரை அடக்கவும், அடுத்த தேர்தல் வரட்டும் வரட்டும் என்று கூறிக்கொண்டு, நாள் எண்ணிக்கொண்டு இருந்து, அடுத்த தேர்தலின்போது, ஆளவந்தார்களை வீட்டுக்கு அனுப்பிட மக்களுக்கு அதிகாரமும் வசதியும் இருக்கிறது--மக்கள் ஆட்சியில்.

ஆனால் இதற்கு, பொதுப் பிரச்சினைகளில் கவலை செலுத்தும் பண்பு வேண்டும். உள்ளென்று வைத்துப் புறமொன்று பேசாத உயர் குணமும், அச்சம் தயைதாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டுக் கடமையை மறந்து விடாதிருக்கும் ஆற்றலும் வேண்டும். இவைகளை எல்லாம் விட மிகமிக முக்கியமாகத், தங்கள் எண்ணத்தையும் கவலையையும் வேறு பக்கம் திருப்பி விட்டுவிடக் கூடிய பிரசாரத்தை நம்பி, அதற்குப் பலியாகிவிடாத, பண்பு வேண்டும்.

திறமை மிக்க ஓவியக்கலைஞன், திரையில் தீட்டிய தீங்கனி குலுங்கும் மரத்தின் காட்சியைக் கண்டு உயிர்ப்பறவை மயங்கி, கனியை அங்கு வட்டமிடும் காட்சிப்போல, தந்திரமான பிரசாரத்தால் மயங்கிடும் மனப்பான்மை பொது மக்களிடம் இருக்குமானால், மக்களாட்சிக் காலத்தில், சாதுர்யக்காரர்கள் சர்வாதிகாரமும் பெறமுடியும். சுதந்திரத்தைக் கேலிக் கூத்தாகிவிட முடியும். ஆகவேதான் இந்நாட்களிலே, மக்களின் சுதந்தர வாழ்வுக்குச், சிந்தனைத் தெளிவுதான் மிகவும் அடிப்படையாகத் தேவைப்படுகிறது.

ஆடு மாடுகளை விற்பதுபோல, மனிதர்களை அடிமைகளாக விற்றுவந்த கொடுமை நிரம்பிய காலத்தையும், சவுக்கு கொண்டு அடித்து, இரும்புச் சங்கிலிகொண்டு பிணைத்துத் தொழுவத்தில் கட்டிப்போட்டு அடைத்து வேலை வாங்கிவந்த, வேதனை நிரம்பிய காலத்தையும், இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்று ஆர்ப் பரித்த தூக்கு மேடையைத் துரைத்தனத்தின் முதல் மந்திரியாகக் கொண்டு, கொடுங்கோலாட்சி புரிந்த மன்னர்கள், ரணகளச் சூரர்கள் காலத்தையும் கடந்து மக்களாட்சி முறையெனும் இக்காலத்துக்கு வந்துசேருவதற்கு, நடாத்திய பயணம் மிகமிக நீண்டது. நெஞ்சுருகும் சம்பவங்கள் பலப் பல கொண்டது; மிக மிக சிரமமானது, இந்தப் பயணத்திலே மனிதன் சிந்திய இரத்தமும் கண்ணீரும் கொஞ்சமல்ல. பல சுடலைகளைக் கடந்து இந்த நிலைக்கு வந்தான், பல போராட்டங்களுக்குப் பிறகு. பல முறை திகைத்திருக்கிறான், பலமுறை தியாகத்தீயிலே குளித்திருக்கிறான். பயணம் மட்டும் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது. வீழ்ந்தவர்போக, மற்றவர்கள் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினர்; வெற்றியும் பெற்றனர்.

உயர்ந்த ஜாதிக்காரர், கொழுத்த பணக்காரர், தேர்ந்த தந்திரக்காரர், மிகுந்த வடிவுள்ளவர் என்று எந்தக் காரணத்தைக் கொண்டாகிலும் ஒருவர் மற்றவர்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வழி அமைந்து விடுமானால், அங்கு ஏட்டிலே எவ்வளவுதான் சிறந்த முறையில் சுதந்தரத்தின் கோட்பாடுகள்-சாசனம்-தீட்டப்பட்டிருப்பினும், உண்மையான சுதந்தரம் மலராது நிலைக்காது.

ஒரு சிலர், உயர்ந்த ஜாதியினர் என்று கூறப்பட்டு, மக்களால் நம்பப்பட்டு, அந்த நம்பிக்கை முறியாதிருக்க ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு விடுமானால், பிறகு அவர்கள் மற்ற மக்களைத் தமது இஷ்டம்போல் ஆட்டிப்படைக்க முடியும். செல்வத்தால் கிடைக்கும் சக்தியைக் கொண்டு சுதந்தரத்தைச் சூறையாடிவிட முடிகிறது. இவரை எதிர்த்து நாம் என்ன செய்ய முடியும்? அவர் நம்மைப் பணத்தாலேயே அடித்தும் கொன்றும் விடுவார், என்ற அச்சம் பிடித்தாட்டும்போது, சுதந்திரமாகச் சிந்திக்கவோ, நடந்து கொள்ளவோ எப்படிச் சாத்தியமாகும்?

எனவே, மனிதருக்குள் பேதத்தையும் அச்சத்தையும் மூட்டக்கூடிய, வளர்க்கக்கூடிய எந்த ஏற்பாடும், சுதந்தரத்தின் பரம விரோதிகளே.

ஜெபமாலை, இரும்புப் பெட்டி, எதைக் கருவியாகக் கொண்டாலும், சரி, இவைகள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமட்டும் மனித சுதந்தரம் பறிக்கப்பட்டுத்தான் போகும். இத்துடன், மக்களாட்சிக் காலத்திலே கூர்மையாகிவிட்ட, பேனா முனையும் சேர்ந்துவிட்டால், சுதந்தரத்தை சுலபத்திலே குறையாடிவிட முடிகிறது.

பேச்சுச் சுதந்தரம், எழுத்துச் சுதந்திரம். மதச் சுதந்தரம்; ஏட்டில் இருக்குமளவுக்கு நடை முறைக்கு வருவதில்லை.

சொல்லுகிறபடி செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்க்கும், சொன்னபடி செய்யக்கானோம் ஏன்? என்று கேட்கும், விழுப்புணர்ச்சி மக்களுக்கும் ஏற்படவேண்டும். இந்த ஆளவந்தார்களைப் போல மக்களைச் சீர்கேடான முறையிலே நாங்கள் நடத்த மாட்டோம்; சுதந்திரத்தை பறிக்க மாட்டோம் எம்மை ஆட்சியாளராக்கினால் என்று கூறி, பொது மக்களின் ஆதரவைத் திரட்ட மற்றோர் கட்சி இருக்கிறதென்றால்தான் ஆள்பவர்கள் மக்களின் சுதந்தரத்தை மதித்து நடக்க முன் வருவார்கள்.

இவைகளைச் சாதிக்க, மக்களுக்கு உள்ளத்தில் உரம் வேண்டும். உணவு, உடை, உறைவிடம் எனும் இம்மூன்று அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கே உடலும் உள்ளமும் உருக்குலையும் அளவு பாடு பட்டால் தான் முடியும் என்ற கேவல நிலையில் மக்கள் இருந்தால் அவர்களுக்கு உள்ள உரம், எப்படி ஏற்படும்.

அரிசிப் பஞ்சமும் அமெரிக்கா நாட்டுப் பிரச்சினையும் ஒருசேர மக்களின் முன் வந்து நிற்கும்போது, அமெரிக்கத் தேர்தலைப் பற்றி அல்ல. அரிசி விஷயமாகத்தான் மக்களால் அதிகமான அக்கரை காட்டமுடியும்.

மக்களாட்சி முறைக்குத் தேவையான, தேர்தல் யந்திரத்தையே விலைக்கு வாங்கி விடக்கூடிய அளவு பொருளாதார பலம் சிலரிடமும், செக்குமாடென உழைத்தால்தான் வாழவே முடியும் என்ற நிலையுள்ள பொருளாதார பீடை பலரிடமும் இருக்கும் பொருளாதார பேதமுறை ஒழியவேண்டும்

இவ்வளவும் நடைபெற்றால்தான், உண்மைச் சுதந்தரம் மலரும்--மக்கள் சமுதாயம் மிக்க கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்த மக்களாட்சி முறை, இன்ப புரிக்கு ஏற்ற இலட்சியப் பாதையாகும், நாடு புன்னகை பூங்கா வாகும்.