சமதர்மம்/விதிக்கு அடிமைத்தனம்
ஓரிரு நூற்றாண்டுகள் அந்நிய ஏகாதிபத்தியத்திடம் சிக்கிச் சீர்குலைந்திருந்த தாயகம் விடுதலைபெற்று விட்டதை உலகுக்கு உவகையுடனும், பெருமிதத்துடனும் அறிவித்துவிட்ட நாம்--அடிமைத்தனம் அடியோடு, பூண்டோடு அழிந்துவிட்டதா? இன்னும் ஏதோனும் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும், அடிமைத்தனம் நம்மிடம் இருந்து கொண்டு நம்மை ஆட்டிவைக்கிறதா என்று, நம்மை நாமே கேட்டுக் கொண்டாக வேண்டும்--கண்டு பிடித்தாக வேண்டும்--காரணம் தெரிந்தாக வேண்டும். நாம் இதைச் செய்யாவிட்டால்--நமக்கு முழு வாழ்வும் புது வாழ்வும் கிட்டாது என்பது மட்டுமல்ல, நானிலம் நகைக்கும். அதோ பார்! விழிகளில்லா குருடன் விலங்கொடித்தேன் என்று வீரம் பேசுகிறான்! தன்மீது பூட்டப்பட்டுள்ள வேறு விலங்குகளை உணராமலேயே, என்று கேலி பேசும்.
எனவேதான், நாம் ஏதெதற்கு அடிமைப் பட்டிருந்தோம்--எதையெதை நீக்கிவிட்டோம்--மேலும் நீக்கப்படவேண்டிய அடிமைத்தனம் என்பதுபற்றி, நம்மிலே நேர்மையில் நாட்டமும், நெஞ்சில் உரமும் கொண்டவர்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாகிறது.
அடிமைத்தனம் ஓர் கூட்டுச்சரக்கு. அடிமைத்தனம் ஏற்படுவதற்காண காரணங்களை ஆராய்ந்தாலும், அடிமைத்தனம் என்பது ஒரு கூட்டுச்சரக்கு என்பது தெரியும்.
கந்தசாமிக்குக் கடும் ஜூரம், ஜூரத்தின் காரணமாகக் கைகால் பிடிப்பு, கண்ணில் பஞ்சடைப்பு மார்பிலே வலி இவ்வளவும். ஜூரத்தைப் போக்க மருந்திடுகிறார் மருத்துவர் ஜூரம் போகிறது--மறைகிறது--முகம் மலருகிறது. ஜூரம் போய்விட்டது வைத்தியரே! ஆனால் கை கால் பிடிப்பும், மார்பு வலியும் போகக் காணோம். மேலும் ஏதோ ஓர்வகை புதுவிதமான அலுப்பும் ஏற்பட்டிருக்கிறது என்று கந்தசாமி கூறுகிறான். ஆமப்பா கந்தசாமி! இப்பொது நான் நாலு நாட்கள் கொடுத்த சூரணம் ஜூரத்தை போக்க மட்டுந்தான். இனித்தரப்போகும் மருந்தினால்தான் கை கால் பிடிப்பும் மார்பு வலியும் அலுப்பும் நீங்கும்; இரத்த சுத்தி ஏற்படும். புதிய பலம் உண்டாகும் என்று கூறுகிறார். நல்ல மருத்துவர் இதைக் கூறுவார். நல்லறிவுள்ள நோயாளி இது போலவே நடப்பார். ஜூரம் என்பது உடலிலே முள் தைத்தது போலத் திடீரென உடலுக்குள் புகுந்தது அல்ல. முள்ளை எடுத்து விடுவது போல் ஜூர நோயை மட்டும் நீக்கிவிட- ஜுரம் என்பது கூட்டுச்சரக்கு. அடிமைத்தனமும் அது போன்றதே. அந்நிய ஆட்சி கடும் ஜூரம் போன்றது. அது நீங்கி இப்போது.
விதிக்கு நாம் அடிமைபட்டது அந்நியனுக்கு அடிமை பட்டதற்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, விதி நமது பரம்பரை நோய்--பூர்வீகச் சொத்து, ஆஸ்ரமத்திலே பிறந்தது; அரண்மனையிலும், குடிசையிலும்; சரி சமமாசட்படர்ந்த பழம் பெரும் நோய். ஜொலித்திடும் சாம்ராஜ்யங்களும், மணங்கமழும் கலைநயங்களும், காவியமும் வீரமும்--செல்வமும் மேலோங்கியிருந்த நாட்களிலேயே இந்த நோய் நம்மைப் பிடித்து ஆட்டிப் படைத்தது. ஆனால் புண்ணின் கெட்ட வாடை வெளியே தெரியாதிருக்க; பன்னீர் கொண்டு அதனைக் கழுவி புனுகு பூசி, மறைத்திடுதல் போல. நாம் சாம்ராஜ்யச் சிரப்பு, கலையழகு என்னும் பல்வேறு பூச்சு வேலைகளினால் புண்ணின் கெட்ட வாடையைக் குறைத்துப் பார்த்தோம் மறைத்துப் பார்த்தோம் போக்கிட முயற்சிகாவில்லை.
விதி, கர்மம், வினை தலையெழுத்து என்று பல்வேறு பெயர்களால் குறிக்கப்படும் இதனை, பழம் வியாதி என்று கூறுவது தவறு பண்டைய நாட்களிலே, இருந்து வந்த பெரியவர்கள், தவச் சிரேஷ்டர்கள், வேத விற்பன்னர்கள் விதியை நம்பினர்; விதியின் வலிமையையும், அதனை மாற்றீட மானிடனின் சிறுமதி பயன்படாது என்ற உண்மையையும் தத்துவமாகவும், உவமானத்துடனும், கதை வடிவி லும், காவிய உருவிலும் கூறினரே கசடனே! அவர்கள் கூற்றுப் பொய்யா? அந்த நாளில் அவர்கள் கண்ட தத்துவத்தைத் தகர்க்க உன்னால் ஆகுமா?அதனைச் சந்தேகிப்பது தகுமா? அதை ஒழித்தாக வேண்டும் என்று பேசும் அளவுக்கு உனக்குத் துணிவா? என்று கேட்கத் தோன்றும் பலருக்கு அல்ல சிலருக்கு. ஆனால் அந்தச் சிலரும் நேரடியாகக் கேளார். பழங்காலத்திலிருந்து விதி எனும் தத்துவம் இருந்த காரணத்தாலேயே அந்தத் தத்துவம் நீக்கப்பட முடியாதது; கூடாதது; என்று யாரும் வாதிட முடியாது. கனியும் அழுகுவது காண்கிறோம்...அந்த அழுகிய பழத்திலே பிறகு புழு நெளியபும் காண்கிறோம். மதுரம் தரும் பழமாயிற்றே. நமது தோட்டத்திலே கிடைத்த தாயிற்றே இதிலே நெளிவது புழுவாக இருக்க முடியாது; பழத்திலே சுவை இருக்கும்; புழு எப்படி இருக்கும் என்று யாராவது வதாடுவார்களா? பழம் அழுகுவது போல, மலர் கசங்கி மணத்தை இழந்து பிறகு கெட்ட வாடை கொள்வதுபோல தழை சருகு ஆவது போல, கட்டடங்கள் கலனாகிக் குப்பை மேடு ஆவது போல, பலப்பல தத்துவங்களும், ஏற்பாடுகளும் காலச்சிறையிலே கிடந்து கிடந்து கெடுவதும், பல கேடுகளை உற்பத்தி செய்வதும், இயற்கையாக ஏற்படும் ஓர் நிகழ்சி; இதனை உணர மறுப்பது உலகை அறியாதார் போக்கு.
விதி, ஒரு நோய்; நெடுநாளாக மனித சமுதாயத்தில் இருந்து வருவது. அதன் பிடியும், வேகமும் குறைக்கப்படுவதற்கு மற்ற நாட்டினர் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் அளவையும், திறத்தையும்விடச் சற்று அதிகமான அளவிலும், திறத்திலும் நாம் விதியெனும் நோயைக் குறைக்க அல்ல--வளர்த்திட வேலை செய்துகொண்டிருந்தோம். அதனாலேதான் விதிக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலை, இங்கு மிக மிகக் கவலைதரும் அளவுக்கு இருக்கிறது.
கண்முன் நடைபெறும் பல நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கத் தெரியாத பருவம் குழந்தைகளுக்கு. ஆனால் காரணம் கண்டு பிடிக்கும் திறமை ஏற்படாவிட்டாலும் சிந்திக்காமலிருப்பதில்லை.
அன்பையும்--அன்னத்தையும் ஒன்றாகக் கலந்து. வானத்திலுள்ள நிலவையும் காட்டிக் குழந்தைகளுக்குத் தாய் சோறிடும் போது, குழந்தையும் நிலைவைப் பார்க்கிறது. ஏதேதோ எண்ணத்தான் செய்கிறது. மழலை மொழியில் ஏதேதோ சொல்கிறது. ஏதேதோ கேள்விகளைக் கேட்கிறது.
யாரம்மா இவ்வளவு அழகான விளக்கை அவ்வளவு உயரத்திலே ஏற்றி வைத்திருக்கிறார்கள். அந்த ஒரு விளக்கைச்சுற்றி ஏனம்மா அவ்வளவு சிறு சிறு விளக்குகள் உள்ளன? என்று கேட்கிறது.
அம்மா அந்தச் சந்திரனைப் பிடித்துத் தா? நான் பந்தாட வேண்டும் என்று கேட்கிறது இன்னொரு குழந்தை. நிலவையும் பார்த்துவிட்டுத் தன் அன்னையின் திருமுகத்தையும் பார்த்து, இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று யோசிக்கிறது இன்னோர் குழந்தை.
குழந்தை உள்ளத்திற் குமுறி எழும் எண்ணங்கள் வேடிக்கை யானவை--ஆனால் முடிவுகளல்ல; ஆசை அலைகள் அவை, மனித சமுதாயத்தில் குழந்தைப் பருவத்திலேயும் இதேபோலத்தான் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும். இயற்கைக் காட்சிக்கும் ஏதோ ஒரு வகையான காரணம் தேடி அலைந்து, பலப்பல விசித்திரமான காரணங்களை, விளக்கங்களை மனித சமுதாயம் எண்ணிற்று--பேசிற்று--நம்பலாயிற்று.
மனித சமுதாயத்தில் பாலப் பருவத்தில் கிடைத்த பல உண்மைகள், இன்று உண்மைகள் என்று உலகினரால் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை. பர்மாவை ஜப்பானியர் பிடித்தபோது, அவர்கள் வெளியிட்ட நோட்டுகள் எப்படி இன்று பர்மாவில் செல்லுபடியாகாதோ, அதுபோலச் செல்லுபடியாகாத நோட்டுகளைச் சேகரித்து வைத்துச் சிறு பிள்ளைகள் விளையாடினால், கேடு அதிகம் இல்லை; அந்த நோட்டுகள் செல்லுபடியாக வேண்டும் என்று வாதாடினால், நாட்டுக்கு எவ்வளவு பெரிய தொல்லை. அதுபோல மனித சமுதாயத்தின் சிறுபிள்ளைப் பருவ எண்ணங்களை--ஏற்பாடுகளை--தத்துவங்களை--விளக்கங்களை இன் னும் நம்பித்தான் தீரவேண்டும். அவைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய கேடு என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். எதிர்பார்ப்பதற்கு நேர்மாறான நிகழ்ச்சிகளைக் காணும்போது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் துவக்கப்பட்ட காரியம், நல்ல முயற்சிக்குப் பிறகும் முறிகிறபோது, போட்ட கணக்குப் பொய்யாகும்போது, விதைத்து முளைக்காதபோது, நண்பர்களிடமிருந்து பகை கிளம்பும்போது, ஓவியம் தீட்டுகையில், வண்ணக் கலயம் உடையும்போது, வீணையை மீட்டும்போது நரம்பு அறுந்து, அறுந்த நரம்பு வேகமாகக் கண்ணில் பாயும்போது, இவைபோன்ற திகைப்பூட்டும் சம்பவங்கள் மனதைக் குழப்பும் நிகழ்ச்சிகள் நேரிடும்போது, மனம் ஒடியுமோ என்று மருளும்போது ஏதேனும் ஓர்வகை ஆறுதல் தேவைப்படுகிறது. அப்போது விதியெனும் தத்துவம் வெற்றிச் சிரிப்புடன் மக்கள் உள்ளத்திலே புகுந்து கொள்ளுகிறது. குடி புகுந்த பிறகு விதிதான் எஜமானன். அந்த எண்ணத்துக்கு இடமளித்தவன், அதற்கு அடிமை. அடிமையை ஆட்டிப் படைக்கிறது விதி. பிறகு தெய்வீக மூலாம் பூசிவிட்டனர் விதியென்ற தத்துவத்திற்கு. ஆகவேதான் அதனை உதறித் தள்ள நெஞ்சு உரம் பலருக்கு வருவதில்லை.
மேலுலகத்தில் ஏதோ ஓர் பெரும் ஏடு இருப்பது போலவும், அதிலே பூலோக வாசி ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிப்பும் முன்கூட்டியே எழுதி வைக்கப்பட்டிருப்பது போலவும், அதன்படித்தான் சகல காரியமும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பழவழிகளில் இந்த நம்பிக்கையைப் பலப்படுத்தினர். எவ்வளவு பெரிய கேடு செய்கிறோம் என்பதை அறிந்தார்களோ இல்லையோ, மனிதன் மனதை முடமாக்குகிறோம்; கருத்தைக் குருடாக்குகிறோம் என்று தெரிந்து செய்திருந்தால், அவர்கள் மாபெரும் துரோகிகள்; தெரியாமல் செய்திருந்தால் ஏமாளிகள். கபட ராயினும், கசடராயினும் அவர்கள் கட்டிவிட்ட கதைகள் இந்த நாட்டு மக்களைத் தலைமுறை தலைமுறையாகக் கெடுத்து விட்டது--தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந் தது--முயற்சிகளை முறியடித்தது--முற்போக்கைக் கெடுத்தது.
அதோ ஓர் அழகு மங்கை; வயது பதினெட்டு; ஐயோ என்று அலறுகிறாள்; அவளைத் தொட்டுத் தாலிகட்டிய கிழவன் இறந்ததால், வாழ்வு கருகிற்றே என்று வேதனையால்.
விதியடி அம்மா விதி--பலர் கூறுகிறார்கள். எரியும் கொப்பரையாக உள்ள அவள் மனதிலே எண்ணெய் ஊற்றுகிறார்கள். இந்தக் கிழவனுக்கு--சாக்காட்டை நோக்கி நடக்கும் வயோதிகனுக்கு என்னைத் தாரமாக்கினீர்களே--தர்மமா, என்று துணிந்து கேட்டுவிடுகிறாள் ஓர் அறிவழகி.
அது உன் எழுத்தடியம்மா எழுத்து--நீ வந்த வழி--உனக்கு உள்ள விதி-- உடனே பதில் கிடைத்து விடுகிறது.
எலும்பு முறியப் பாடுபடுகிறேனே, ஏழையாக வதைகிறேனே என்று ஓலமிடுகிறான் பாட்டாளி--நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான்--உடனே பதில் கிடைத்து விடுகிறது.
கடைவீதிக்குச் செல்கிறோம், கையில் பணத்துடன் கடைவீதி போய்ச் சேருவதற்குள் கடைவீதியிலே உள்ள பண்டங்களே மாறிவிடக் கூடும். விலையும் வித்தியாசமாகிவிடக் கூடும். அதுமட்டுமல்ல, எடுத்துச் செல்லும் காசும் செல்லுபடியாகாததாகி விடலாம்; குறையக் கூடும்; மறையக் கூடும்; இதிலே எது--எப்போது நேரிடும் என்று தெரிந்துகொள்ள முடியாது. இவற்றில் எதையும் தடுக்கவும் முடியாது என்றால், கடைவீதி செல்பவனின் கருத்தும் காரியமும் என்ன ஆகும்? இந்நாட்டு மக்களில், பெரும்பான்மையினருக்கு, வாழ்க்கைச் சந்தை இதுபோலவே அமைந்து விடுகிறது.
முயற்சி பலனளிக்காதபோது, திட்டம் தகர்ந்துவிடும் போது, நோக்கம் ஈடேறாதபோது, என் முயற்சி பலிக்கவில்லை; திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை நமது கணக்கு ஏன் பொய்த்துப் போயிற்று; காரணம் என்ன என்று கண்டுபிடிக்க, ஆராய்ச்சி செய்ய, புதிய முயற்சி செய்ய, திருத்தம் தர, இந்த விதியெனும் தத்துவம், மனிதனை விடுவதில்லை. எவ்வளவோ பாடுபட்டோம் கடைசியில் பலிக்கவில்லை--நமது விதி அப்படி என்று எண்ணி ஏங்கவைக்கிறது. அவனுடைய திறமையும் தூங்க ஆரம்பிக்கிறது. துயரம் எழுகிறது, அப்போது துதிக்கிறான்; ஏக்கம் பிறக்கிறது. அப்போது புராண, இதிகாச ஏடுகளிலிருந்து அவனுக்குக் கதைகள் படித்துக் காட்டப்படுகிறது.
இந்த விதியை வெல்ல, அல்லது முன் கூட்டியே தெரிந்துகொள்ள, மாற்ற, திருத்த, ஏதாவது செய்யலாமா என்ற ஆசை கிளம்பலாயிற்று. அதனைப் பூசாரிகள், சோதிடர்கள், மாந்திரீகர்கள் என்போர் பயன்படுத்திக் கொண்டனர், அவர்கள் வாழ்வு நடாத்த. பிறகு அவர்கள் அந்த வாழ்விலே கிடைக்கும் சுகத்தை இழக்க மனமின்றி விதியை மக்கள் நம்புவதற்காக. மேலும் மேலும் கற்பனைக் கதைகளைக் கட்டிவிடலாயினர்--கடவுளின் மீது ஆணையிட்டு எதையும் பேசினர்--ஏழை ஏமாளியானான்.
விதியை மதியால் வெல்லலாம் என்று வீம்பு பேசும் மனிதர்காள்! நான்முகன் ஒரு சிரம் இழந்தது எதனால்? விதியால் அவர் நான்மறை தந்தவராயிற்றே, அவரால் முடிந்ததா விதியைத் தடுக்க? அவர் பிச்சை எடுத்தார், கையில் சிரத்தைக் கொண்டு--என்று கதைகள் கட்டினர். வழுக்கு நிலத்தில் தவறிக் கீழேவீழ்ந்து கால் முறிந்தவன், மீண்டும் அந்த வழுக்கு நிலத்திலே ஆரம்பித்து மறுபடியும் மறுபடியும் வீழ்வது போலாயினர் பாமர மக்கள்.
ஆனால் உலகிலே மிகமிகச் சிறு தொகையினர்--பேரறிஞர்கள்-- சீர்திருத்தக் கருத்தினர்--உலகைத் திருத்தும் உத்தமர்கள். சித்தததைச் சிறையிட மறுத்தனர். சிந்திக்கத் தொடங்கினர் புத்தம் புதிய உண்மைகளைக் கண்டறிந்து கூறினர். உலகின் உருவம், இயல்பு, எண்ணம், ஏற்பாடு எல்லாம் மாற ஆரம்பித்தன. தட்டை உலகு, உருண்ட--ஆயிற்று, மேல் ஏழு, கீழ் ஏழு லோகம் என்பது வெறும் கட்டுக்கதை என்பது விளங்கலாயிற்று. சூரிய--சந்திர தேவன். இந்திர தேவன், வாயு, வருணன், அக்கினி என்ற தேவர்களெல்லாம் குடியிருந்துகொண்டு குதூகலமாக ஆடிப் பாடிக்கொண்டு, ஆரணங்குகளாம், அரம்மை, ஊர்வசி ஆகியோர் புடைசூழ வீற்றிருக்கிறார்கள் என்பதெல்லாம், சுவைமிக்க கற்பனை என்பது தெரியலாயிற்று. கண்ணுக்குத் தெரியாதிருந்த அமெரிக்கா போன்ற நாடுகளைக் கண்டுபிடிக்கவும், கருத்துக்கு எட்டாதிருந்த கருவிகளை அமைக்கவும் முடிந்தது. பஞ்சாங்கத்துக்குப் பக்கத்திலே, அட்லாஸ் வந்து சேர்ந்தது வெற்றிச்சிறப்புடன்.
"உலக அறிஞர்கள் பரப்பிய அறிவொளியினால் பழமை மூடுபனி விலக ஆரம்பித்து விட்டது. நாட்டின் நிலையை மாற்றியமைக்கும் மாவீரர்கள், சமுதாயத்தின் நிலையைத் திருத்தும் தீரர்கள், அறிவுப் புரட்சியை நடத்திக் காட்டும் ஆற்றல் மிக்கோர் தோன்றலாயினர்" என்று எழுதிய எழுத்து பலப்பல நாடுகளிலே அழித்தெழுதப் பட்டது. அதனால் அல்ல; ஆற்றல்மிக்க வீரர்களால். பிறகு இங்கும் என்று தீருமோ விதிக்கு அடிமைத்தனம் என்ற விசாரமாவது எப்படித் தோன்றாம் லிருக்கலாம்;
விதிக்கு அடிமைப் பட்டிருக்கும் நிலை நிச்சயமாக நாம் எதிர்பார்த்ததைவிட, விரைவில் ஒழியத்தான் போகிறது--அசைவும் ஆட்டமும் கொடுத்துவிட்டது.
இப்போது மட்டும், இந்நாட்டு எழுத்தாளரும் பேச்சாளரும் இசைவாணரும் படப்பிடிப்பாளரும்--அறிவுத்துறைக்கு துரோகம் இழைக்காமல், மீண்டும் மீண்டும் விதிக்கு அடிமையாகும் வேதனைக்கு எரு இடாமல், அதற்கு ஆதாரமாக உள்ள கற்பனைக் கதைகளைக் கருத்துக்களைப் பரப்பாமல் --விதி பற்றிய எண்ணத்தை விடவேண்டிய அவசியத்தை, விதிக்கு அடிமைப்படாமல் இருந்தால் எவ்வளவு நலன் நாட்டுக்குக் கிடைக்குமென்பதை, விதியை நம்பி, ஏழை எப்படி ஏமாளியானான் என்பதை எத்தன் எப்படி வஞ்சிக்கிறான் என்பதை விளக்கத் தமது அறிவையும், திறமையையும் ஒரு பத்து வருஷ காலத்துக்குப் பயன்படுத்த முன்வந்தால்...நிச்சயமாக, உறுதியாகக் கூறலாம், விதிக்கு அடிமைத்தனம் ஒழிந்தே தீரும் என்று.
விதி என்றும், சப்மரைன், டார்பிடோ, விமானம், விஷப்புகை வெடிகுண்டு இவைகளைப் போன்ற படைக் கலங்களைக் கொண்டு இல்லை. அப்படிப்பட்ட படைக்கலங்களைக் கொண்ட ஒரு ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட்ட நமக்கு, இந்த நாளில் சாதாரண ஏடுகள் அதிலும் காலமெனும் செல்லரித்த ஏடுகள், அவைகளிலே காணப்படும் கருத்துக்குக் குழப்பம் தரும் கற்பனைகள், அந்தக் கற்பனைகளை நம்பிப் பிழைக்கும் கபடர்கள் ஆகிய இவ்வளவு படைக் கருவிகளை மட்டுமே கொண்டுள்ள விதிக்கு அடிமைத்தனம் என்றும் பழமையை முறியடிப்பது முடியாத காரியமல்ல; ஒரு பலமான தாக்குதல்--அறிவுப் பணிபுரியும் பலரும் கொண்ட ஒரு கூட்டுப் படையினால் ஒரு அறப்போர்--ஒரு தன்னல மற்ற முயற்சி எடுத்தால் நமது நாட்களிலேயே மக்கள் வாழ்விலே நஞ்சு கலக்கும் இந்த அடிமைத் தளையை வீழ்த்த முடியும்--புதுவாழ்வு மலர முடியும். செய்வோமா?