சமதர்மம்/மேடைப் பேச்சு
இந்நாட்களில் மேடைப் பேச்சு, நாடாளும் நற்பணியில் முக்கியமான கருவியாகிவிட்டது. இந்தக் கருவி ஒரு சிலருக்கு மட்டுமே உரியதுமல்ல. அங்ஙனம் இருத்தலும் ஆகாது. மணிமுடி, வாள், ஜெபமாலை இவைகளின் இடத்தை இப்போது மேடைப் பேச்சு கைப்பற்றி இருக்கிறது. ஜனநாயகம் வளர வளர, இதன் முக்கியத்துவமும் வளரும். இதன் முக்கியத்துவமும் வலியும் வளர வளர, இதனைக் கொண்டு தன்னலம் வளர்க்கும் ஆபத்தும் வளரக்கூடும். மக்களைத் தவறாக நடத்திச் செல்லுதற்கும் இதனைப் பயன் படுத்தும் தீய நோக்கமும் படரக்கூடும். திசை காட்டும் கருவி தீயோனிடம் சிக்கினால் கலம் பாறையில் மோதுதல் போல, அரசுகளை ஆட்டிவைக்கும் அளவுக்கு ஆற்றல் அமைந்த மேடைப் பேச்சு எனும் சக்தி, சாதனம், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்து, அவர்களும் அந்தச் சக்தியைத் தவறான காரியத்துக்குப் பயன் படுத்துவதால், மக்களின் நலன், பாறை மோதிய கலமாகும். எனவே இந்தச் சக்தியை மக்களில் பெருவாரியானவர்கள் பெறுவதற்கு முயலவேண்டும்.
எந்தக் காரியத்துக்கும் கால காரணம்கூற, மேடைப் பேச்சு, ஆள்பவர்கள் அடாது செய்து மக்களைப் பாடு படுத்தாதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ள மக்கள், மேடைப் பேச்சுக் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆக, ஆள்பவர், ஆளப்படுபவர் எனும் இருசாராருக்கும், மேடைப் பேச்சு, ஒரு சமயம் வாளாக, பிறிதோர் சமயம் கேடயமாக, ஒரு சமயம் விளக்கமாக, வேறோர் சமயம் தீப்பந்தமாகப் பயன்படுகிறது.
முன்னாளில் வெளியார் படை எடுப்பு, உள் நாட்டுக் குழப்பம், காட்டு மிருகங்கள் நாட்டிலே புகாதபடி பார்த்துக்கொள்வது போன்ற, சில அடிப்படைக் காரியங்கள் மட்டுமே ஆள்பவர்களுக்கு இருந்தன. மக்களின் அன்றாட வாழ்க்கையிலே, அவர்களின் ஆட்சி புகுந்ததில்லை இப்போது நிலைமை தலைகீழ் மாற்றம், அரிசி எந்த அளவு உண்ணலாம் என்று அளவிட ஆள்பவருக்கு அதிகாரம் இருக்கிறது. 'ஆஸ்திரேலியா சென்றாவது உணவுப் பொருள் கொண்டுவா, முடியாவிட்டால், ஆட்சிப் பீடத்தைவிட்டு வெளியே போ,' என்று கூறும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. மக்களின் தனி வாழ்க்கையிலே இப்போது ஆள்பவர்களுக்கு, அதிகமாக அளவு இடம் ஏற்பட்டுவிட்டது. எனவே, மக்களுக்கு, ஆள்பவர்களின் தன்மை, நோக்கம், திட்டம் இவைகனைப் பற்றிக் கண்காணிக்கும் பொறுப்பு அதிகரித்துவிட்டது. இந்தக் கண்காணிப்பு வேலைக்கு மேடைப் பேச்சு முக்கியமான துணையாகிறது. மேடைப் பேச்சு முக்கியம் என்பது சரி, ஆனால் முடியுமா? நம்மால் ஆகுமா? என்ற எண்ணம் பிறக்கக் கூடும்.
வானத்தில் வட்டமிடும் பறவைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு, பிறகு அதுபோன்று பறக்கும் சாதனம் கிடைத்தால் பயன் அதிகமாக இருக்குமே என்று மனிதன் எண்ணத் தொடங்கினான்--அந்த எண்ணத்தை ஆக்கித் தந்தது.
அலைகடலை அடக்கும் மரக்கலம் அமைத்தோர். ஆழ் கடலுக்குள்ளே செல்லும் கலம் அமைத்தோர் விண்ணில் பறக்கும் விமானம் அமைத்தோர், தொலைவிலுள்ளதைக் கேட்கவும் காணவும் கருவிகள் கண்டுபிடித்தோர், காட்டாறுகளைக் கட்டுக்குக் கொண்டுவந்தோர், நீரிலே நெருப்பின் சக்தியை கண்டறிந்தோர், அனைவரும் நம் போல் மனிதரே, அவர்களால் முடிந்தது, நம்மால் ஆகும் என்ற நினைப்பு அவர்களை ஊக்குவிக்கும் சக்தியாயிற்று. அவைகள் சாத்தியமானபோது மேடைப் பேச்சு சாத்தியமாகாது. பேசாமலிருப்பது வேண்டுமானால் சிரமம்--சிந்தையை அடக்கியே சும்மா இருப்பதரிது--பேசுவது எளிது--பேசுவதை, ஒழுங்குக்கும் முறைக்கும் கட்டுப் படுத்துவதுதான், மேடைப் பேச்சு.
எனவே, இந்நாளில் மேடைப் பேச்சுக்குத் தேவையும் பயனும் உள்ளது என்பது உணர்ந்து, அதனை நாமும் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் கொள்வது முதல் வேலை,
பிறகு மேடைப் பேச்சு எங்ஙனம் அமைதல் வேண்டும் என்பனவற்றைக் கவனிக்கவேண்டும். மேடைப் பேச்சு தென்றலா, புயலா? தீஞ்சுவையுள்ள இளநீரா, அல்லது வேம்பின் சாறு போன்றதா, எங்ஙனம் இருத்தல் வேண்டும் என்ற கேள்வி நிச்சயமாகத் தோன்றும்; இந்த எண்ணம், ஓரு சருக்குமேடை மேடைப் பேச்சுக்குத் தங்களைத் தயாரித்துக் கொள்வோர் மிக ஜாக்கிரதையாக ஊன்றி நடக்கவேண்டிய இடம் இது.
இனிமையாகப் பேசவேண்டும் என்ப தொன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மேடைச் பேச்சு முறை பயிலத் தொடங்குவது ஆகாதகாரியமட்டுமல்ல--தேவையுமற்றது, இதனால், கடுஞ் சொல் பேசுவதே சிலாக்கியம் என்பதல்ல பொருள், சொல் சுடுமா? சுவை பயக்குமா என்பதொன்றையே நோக்கமாகக் கொள்வது கூடாது என்பதைத்தான் கூறுகிறேன். அந்த முறையில் பேசுவது, ருக்மணி கலியாணம், ராமபட்டாபிஷேகம், சீமந்தனி கதை போன்ற காலட்சேபம் நடத்துபவருக்கு வேண்டுமானால், சாத்தியமாகக் கூடும்--பயனும் கிடைக்கக் கூடும்--படியை அரைக்காலாகக் காய்ச்சிய பால், அதிலே கற்கண்டுக் தூள் குங்குமட்பூவின் குழம்பு, இவ்வளவும் போதாதென்று பக்தியும் ஆசையும் கூட்டித் தரப்படக் கூடும். ஆனால் மேடைப் பேச்சு, காலட்சேபமல்ல விவாதத்துக்குரிய உயிர்ப் பிரச்னைகளைப்பற்றிய கருத்துக்களை வெளியிடுவது. இனிமையான எல்லோருக்கும் கிடைக்கும்படிசெய்யும் நாவாணியம் அல்ல, மேடைப் பேச்சு. வாய் பொத்தி, கைகட்டிக் கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமல்ல, அருள்வாக்கல்ல, பேசுபவர்கள். இன்ன பொருள்பற்றிப் பேசிடுக என்று பணித்திட, பேசுபவன் அது போலவே நடத்தும் வசனம் சங்கீதமு மல்ல, வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட பிரச்னைகளைப்பற்றி, மக்கள் குழப்பமான கருத்து கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது மக்கள் மருண்டிருந்தால் மருட்சியை நீக்குவது, மக்கள் கவலையற்று இருந்தால், பிரச்னையின் பொறுப்பை உணரச் செய்வது, போன்ற காரியம். மக்கள் கொண்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறானவற்றையே கூறியாகவேண்டிய நிர்பந்தமும் மேடைப் பேச்சாளனுக்குச் சில சமயம் ஏற்படக்கூடும். பேச்சைக் கேட்க வருபவர் அனைவரும் ஒத்த கருத்தினர் அல்லர், இந்நிலையில் மேடைப் பேச்சு இனிமை பயப்பது மட்டுவே குறிக்கோள் என்று கொண்டால் நடவாது--ஆகாது.
'சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்' அவன் நாவில் என்று புகழ்வதும், 'தம்பி என்னடா சண்டைப் பிரசண்ட மடிக்கிறார்--வீசு மலைப்பிஞ்சுகளை என்று ஏசுவதும், ஏககாலத்தில் நடைமெறும் விநோதபுபுரியிலே இருக்கிறார் மேடைப் பேச்சாளி எந்த பேச்சு பலருக்கு இனியதாய், பயனுடையதாய் அறிவு நிரம்பியதாய்த் தோன்றுகிறதோ, அதே பேச்சு வேறுசிலருக்குச், சுடு சொல்லாய், வெட்டிப் பேச்சாய், ஞான சூன்யமாய்த் தோன்றக்கூடும், அவரவர் அந்தந்த எண்ணத்திற்கு ஏற்ப நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடும். தென்றல் என்பர் சிலர்; புயல் என்பர் சிலர்; தேனினும் இனியதென்பர் சிலர்; கர்ணகடூரம் என்பர் சிலர்; வீணுரை என்பர் சிலர்; விவேக சிந்தாமணி என்பர் சிலர்; இதிலே கவனம் செலுத்தக்கூடாது; மேடைப் பேச்சு ஒரு பொறுப்புள்ள பணியாகவும், பயன் தரும் கவியாகவும் இருத்தல்வேண்டும் என்ற நோக்கமுடையோர் அச்சம், தயை, தாட்சணியத்துக்குக் கட்டுப்பட்டு கருத்தை அடகுவைக்கும் குணமும் இருத்தலாகாது; காட்டுக் குதிரை மீதேறிச் செல்லும் முரட்டுச் சுபாவக்காரனின் கைத்தடி போன்ற போக்குத்தான் வீரமுழக்கம் என்றும் கருதலாகாது. இந்த இரண்டு வழுப்புப் பாதைக்கும் இடையே உள்ள நல்வழி, இன்னது என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. அந்தப் பாதை. பாடுபட்டு அவரவர்கள் கண்டறியமட்டுமே முடியும். ஆனால் அதற்கு, பேசுபவர்களுக்குத் தாம் பேசும் பொருளின் ஆழ்ந்த நம்பிக்கையும் மதிப்பும் இருப்பதுபோலவே, மன்றம் வரும் மக்களிடம் மதிப்பும் நம்பிக்கையும் வேண்டும். பேச்சு இனிமையாக இருக்கவேண்டும், என்பதையே நோக்கமாகக் கொள்ளதை விட, மக்களையும் கொள்கையையும் மதித்து நம்பிக்கையுடன் பேசும் நோக்கம் சிறந்தது--மேலானது.
தீயினார் சுட்ட புண் ஆறும்--நாவினார் சுட்ட புண் ஆறாது என்ற வள்ளுவர் வாக்கு, தனிப்பட்ட உரையாடலுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்--பேச்சு மேடையிலே ஆறிய புண் அதிகம். நாவினால் சுட்டவடுப் பெற்றதாக எண்ணிக் கல் வீசினோர், 'நல்வழி கண்டோம்' அவர் உரையால் என்று, பிறிதோர் நாள் உணர்ந்து, கல் தூக்கிய கரத்தால் கனத்த மாலையைத் தூக்கிவரும் காட்சிகள் நிரம்பிய விசித்திரபுரி மேடை.
எனவே, பேசும் பொருள் பயன்படத் தக்கதாகவும், வீனான வீம்புக்கு வித்திடாத வகையிலும் அமைத்துக் கொள்வது நல்லது. இனித்தே ஆகவேண்டும் என்று முயன்றால், சதங்கையும் ஜாலரும் தேடித் தீரவேண்டிவரும்.
இனிமையுங்கூட கொள்கையின் உறுதியிலேயிருந்து பிறப்பதுதான்-- கொள்கையை விட்டுக் கொடுப்பதால் வராது.
வள்ளுவர் வாக்கின்படி பேச்சு அமைவதற்கு வள்ளுவர் வாக்கின்படி கேட்பவர்களும் அமையவேண்டும். பேசுபவருக்கு முறை கூறிய வள்ளுவர், கேட்பவருக்கும் முறை கூறி இருக்கிறார்.
"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு."
ஆனால் நடைமுறையில் இந்தக் குறள் இல்லை. மெய்ப் பொருள் காண்பதறிவு என்றார் திருவள்ளுவர். மெய்ப் பொருள் காண்பதரிது என்று ஆகிவிட்டது நிலைமை.
இனி, பேச்சு கருத்தின் தொகுப்பு, ஆகையால் பேச்சு பயனும், சுவையும் தருவதாக இருக்க, கருத்துக்களைக் கவனித்தாக வேண்டும். கருத்து சிந்தனையின் விளைவு; சிந்தனை காண்பன கேட்பனவற்றிலே தொடர்ந்து ஏற்படும் ஆர்வம், ஒரே பொருள் காண்போருக்கு, வெவ்வேறு சிந்தனையைக்கிளறி, வெவ்வேறு கருத்தைத் தூண்டி, அதற்கேற்ற முறையிலே, பேச்சுப் பிறக்கச் செய்யும்; வேப்பிலை வைத்தியர், பூசாரி எனும் இருவருக்கும் வேறு வேறான எண்ணம் தருவது போல.
ஒரு எடுத்துக் காட்டு, குதிரையைப் பற்றி பேசும்படி சிலருக்கு அழைப்பு விட்டுப் பார்ப்போம்--வேடிக்கையாக இருக்கும் அவர்கள் பேச்சு.
வரலாற்று வகுப்பு மானவர் பேசுவதானால், குதிரைகளுக்குக் கம்பீரமும் பெருமையும் ஏன் ஏற்படாது. மகாவீரன் அலெக்சாண்டர் ஏறி வந்தது, ப்யூசிபாலஸ் எனும் குதிரை மீது அல்லவா என்று சுவையுறச் சொல்வார்; தமிழக ஏடு படித்தோர், தேசிங்கு ராஜா கதையில் வரும் பாராசாரி, நீலவேணி பற்றிப் பேசாமலிரார்.
பழம் பாடல் படித்தோர், முன் இருவர் தொட்டிழுக்க பின்னிருந்து சிலர் தள்ள, மாதம் காதவழி பறந்த குதிரையைக் காளமேகம் கண்ட காட்சியைப்பற்றிக் கூறுவர். கிண்டி குதிரைப் பந்தயத்தின் கேடுகளை விளக்கும் நோக்க முடையோரோ, தாலி அறுக்கும் பிசாசே! தந்தைக்கும் தனயன்க்கும் பகை மூட்டும் சனியனே! சூழ்ச்சியிலே மக்களைச் சிக்க வைக்கும் சகுனியே! நேசர்களுக்கிடையே மனக்கிலேசத்தைக் கிளப்பிவிடும் மாபாவியே உன்னால் கெட்டன குடும்பங்கள். கொழுத்தனர் வட்டிக் கடைக்காரர். குடித்தனத்திலே தீ மூட்டினாய். கொலைக்கும் களவுக்கும் கூட காரணமானாய். குதிரையே கோரத்தின் சொரூபமே. பாவத்தின் கருவியே! பாதகத்தின் பங்காளியே! உன் குலம் அழிக, கூண்டோடு அழிக, பூண்டின்றி ஒழிக என்று கோபமாகக் கூறுவர். ஒரு சமயம் பிரம தேவனை இலட்சுமிதேவியார் கோட்டானாகப் பிறக்கும்படி சாபமிட்டார். பிரமன் கோட்டானாகப் பிறந்தான். அந்த கோட்டான் முட்டையிலே குதிரை பிறந்தது, என்றுள்ள பிராணத்தைக் கூறுவார் புராணிகர். சைவப் பிரசங்கியாரோ "குதிரைகளா, அடியேனுக்கு அடங்காக் கோபம் பிறக்கும் அவைகளைக் கண்டதும், என் மணிவாசகன் இந்தப் பாழான குதிரைகளாலன்றோ, சிறைப்பட்டான் துயருற்றான்" என்று துவங்கி இறுதியில் "தீர யோசிக்கும் போது பரியிடம் பரிவே பிறக்கிறது. ஏனெனில், மணிவாசகரின் பெருமை மாநிலம் அறியும் நிலை, குதிரையாலன்றோ ஏற்பட்டது. எனவே குதிரைக் குலம் வாழ்க" என்று முடிக்கக் கூடும்.
குதிரையைப் பற்றிப் பேசுவதிலே இவ்வளவு வேறுபாடுகள் தோன்றக் கூடுமானால், நாட்டு நடவடிக்கை நாடாள்வோரின் திட்டங்கள், ஏடுகளிலே உள்ள கருத்துக்கள் போன்ற பிரச்சினைகளைப்பற்றி பேசும்போது, வேறுபாடுகள் கொஞ்சமாகவா இருக்கும். எனவே மேடைப் பேச்சு பலதிறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் பலமும் ஆகிறது. களத்திலே பரிசும் உண்டு பகையும் உண்டல்லவா? கருவியும் கலங்கா உள்ளமும் வேண்டு மல்லவா?
கருத்துக்களை கொள்ளும்போது இந்த நிலை அறிந்து, தொகுக்க வேண்டும். மலர்கள் பலவகை--வர்ணத்தில் மணத்தில், இவைகளில் மணமுள்ள மலர், மாலையாக்கப் படலாம், செண்டு ஆக்கப்படலாம், சரம் ஆக்கப்படலாம்.
மலர் கொண்டு மாலை தொடுத்தலிலே கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழுவதும் காட்டி, காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? மாலைக்கு முதற்பொருள் மணமுள்ள மலர். அதுபோலப் பேச்சுக்கு முதற் பொருள் சுவையும் பயனும் உள்ள கருத்துக்கள். மாற்றான் வீட்டுத் தோட்டத்திலே பூத்திடினும் மல்லிகைக்கு மணம் உண்டல்லவா? ரசிக்கத்தானே செய்வோம், அதுபோலவே பேசுபவரின் கருத்து பயன் தருமாயின், கேட்பவரின் கூட்டுறவு எத்தன்மையதாக இருப்பினும், அவர்கள் ஏற்றுக் கொள்வர். எனவே மேடைப் பேச்சுக்குக், கருத்துக்களைச் சேகரிப்பது சிந்தனையில் விளையும்படிச் செய்வது மிக மிக முக்கியம். பூத்த மலரை அழகுறத்தொடுத்தல் போலக் கிடைத்த கருத்தை தொகுத்தும் வகுத்தும், பிரித்தும், சொல்லும் சொல், தெளிவான நடை, நம்பிக்கையூட்டும் போக்கு, இவைகளைக் கொண்டு பேச்சு அமைத்தல் வேண்டும் என்பதைவிட அமையும் நிலைபெற வேண்டும் என்பது பொருத்தமாக இருக்கும். தூய்மையான நோக்கமும் தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்குமானால். தட்டுத் தடுமாறி பேசும் பேச்சு நாளாவட்டத்தில் முழக்கமாகித் தீரும்.
"அவர்போலப் பேசவேண்டும். இவர் உபயோகித்த சொல்லை வீசவேண்டும். இரண்டோர் மேற்கோள் வேண்டும், எமர்சன், இங்கர்சால் ஆகிய யாரையாவது துணைக்கு அழைத்தே ஆக வேண்டும். இடையிடையே நகைச்சுவைக்காக விகடத்துணுக்குகளைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்கொண்டு பேச்சு அமைப்பது; ஒரு மல்லி, பக்கத்தில் தழை, பிறகோர் சாமந்தி, அடுத்துக் கொஞ்சம் தவனம் பிறகோர் மணமில்லா மலர், பிறகு தழை என்ற முறையில் தொடுக்கப் படும் கதம்ப மாலையாகும்--கதம்பம் மலர் குறைவாகவும் தழை அதிகமாகவும் இருப்பின் மாதர்கொள்ளார் அதுபோலவே பேச்சும், கருத்து அங்கொன்றும் இங்கொன்றுமாகி, சுவைக்குதவாதன அதிகமாக இருப்பின் எவரும் கொள்ளார். எனவே கருத்து மிக மிக முக்கியம். நடை வானவில் அதிக நேரம் அழகளிக்காது.
நீதீயை நிலைநாட்ட, நேர்மையை வலியுறுத்த, நாட்டிற் கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளைக் களைய, சிறுமைகளை சீரழிவுகளைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை, அழகுறத் தொடுத்து அளிப்பதே மேடைப் பேச்சு.
மலர்மாலை மதயானை முன் வீசப்பட்டுக் காலில் மிதிபடுவது போல, நல்ல பேச்சுக்கு பொல்லாத நிலை வருவதுமுண்டு; முகர்ந்து ரசித்து கூந்தலிற் செருகி, இன்புற்று மகிழும் மாதரிடம் மலர் சென்று பெருமையும் பயனும் கண்டறிந்து பெறக்கூடியவர்களிடம் போய்ச் சேர்வதும் உண்டு. ஆனால் என்ன ஆகுமா என்ற ஏக்கத்தை முதலில் கொள்ளாது, கருத்துக் கோவையான பேச்சை நாட்டுக்கு அளிப்பது நமது கடமை என்ற எண்ணத்தை முதலிற் கொள்ளுவரே மேடைப் பேச்சில் வெற்றி பெறும் வழி. அந்த வழி அனைவர்க்கும் பொது; அனைவருக்கும் உரிமை உண்டு. முயன்றால் யாரும் வெற்றி பெறலாம்.
முற்றும்
புதிய வெளியீடுகள்
நல்ல பரிசு | ... | 1—50 |
இதுதான் கலியாணப் பரிசு | ... | 1—25 |
அழகு எரிந்தது | ... | 1—25 |
புன்னகை | ... | 1—50 |
பொன்மொழிகள் | ... | 1—25 |
தம்பதிகள் இன்பமாய் வாழ்க | ... | 1—50 |
பாரதி கண்ட வாழ்க்கை | ... | 2—00 |
மல்லத்துறை மர்மம் | ... | 1—50 |
பம்பாய் எக்ஸ்பிரஸ் | ... | 2—00 |
சமதர்மம் | ... | 1—50 |
காமக்குளம் | ... | 2—00 |
திருமணம் | ... | 2—00 |
இல்லற வாழ்க்கை | ... | 1—50 |
கிடைக்குமிடம் :
K.R. நாராயணன்.
2, அப்துல் அஜீஸ் தெருவு, தியாகராயநகர், சென்னை-17.