சமதர்மம்/வீட்டிற்கோர் புத்தகசாலை
உலகிலே எங்கேனும் ஓரிடத்தில் ஏதோ ஓர் காரணத்தால் நேரிடும் ஏதோ ஓர் சம்பவம், உலகின் மற்றப் பாகங்களைப் பாதிக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம். பாஸ்தீனத்தில் போர்; அதுபற்றிய வாதப் பிரதிவாதம், பாளையங்கோட்டையில். இத்தாலியில்; எலக்ஷன் என்றால், இங்கு எந்தக் கட்சி அங்கு வெற்றி பெறவேண்டும் என்பது பற்றி விவாதம். உலகத் தொடர்பு அதிகரித்துவிட்ட வளர்ந்துகொண்டே போகும் நாட்களிலே நாம் வாழ்கிறோம். வாழ்கிறோம் என்றால் நமது வாழ்வையும் நாட்டின் வாழ்வையும் வளமாக்கும் பெரும் பொறுப்பை ஆயிரம் மைலுக்கப்பாலிருந்து வந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டல்ல, யார் சிரத்திலே மணிமுடி ஜொலிக்கிறது, எவர் கரத்திலே உடைவாள் மின்னுகிறது என்று பார்த்து ஆட்சி பொறுப்பை அப்படிப்பட்டவர்களிடம் ஒப்படைத்து விட்டுமல்ல, ஆட்சிப் பொறுப்பை மக்கள் ஏற்றுக்கொண்டு நாட்டில் நாயகர் நாங்கள் என்று மார்தட்டிக் கூறிக் கொண்டுள்ள நிலை இருக்கிறது. உலகுக்கு இது நன்கு தெரியும் உலகின் கவனம் நமது நாட்டின் பக்கம் நன்றாகத் திரும்பும்படியான முறையிலும், அளவிலும் நாம் நமது நாட்டின் சிறப்புப் பற்றியும், நமது ஆற்றலைப்பற்றியும் பாட்டு மொழியிலே பேசிவிட்டோம் சற்று அதிகமாகவே கூட, "என் நாடு பொன்னாடு, ஏது இதற்கோர் ஈடு" என்று திருப்புகழ் பாடினோம். இங்கு வானைமுட்டும் மலைகள். வற்றாத ஆறுகள் வளமான வயல்கள், கனி குலுங்கும் சோலைகள் ஏராளம்; முத்து உண்டு எமது கடலில்; தங்கம் உண்டு எமது பூமியில் என்று ஆனந்தக் களிப்புச் சிந்து பாடியிருக்கிறாம். எல்லாம் சரி; உமனது நாட்டுக் கல்வி நிலையைக் கூறு என்று கேட்டால், நாம் வெட்கித்தலை குனியும் நிலையில் இருக்கிறது. வேத வேதாந்திகள், தித்தாத்தி, சிரோமணிகள் திரு அருளைப் பெற்றவர்கள் எமது நாட்டிலே உண்டு என்று பேசலாம்; பேசுகிறோம். இன்னும் சிலர் பேசிக்கொண்டே இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் கண்ணனுக்குக் கையெழுத்துப் போடத் தெரியுமா என்றால், தலையை ஆட்டுகிறான்; முத்தனோ மறந்துவிட்டது என்று கூறுகிறான்; முனியன் கையெழுத்திடுகிறான். ஆனால் முன்னெழுத்தும் கடையெழுத்தும் சரியாக இருக்கிறது. இடையிலே உள்ள எழுத்துக்களோ சம்பந்த மற்றவையாக உள்ளன. இந்நிலை இருக்கிறது நாட்டு மக்களிலே மிகப் பெரும்பாலானவர்களுக்கு, கூரிய வாள் பலமான கேடயம், அஞ்சா நெஞ்சு; ஆனால் அந்த வீரனின் வழி பழுது. இந்நிலை நாட்டுக்குச் சிறப்பும் அளிக்காது. நல்லாட்சிக்கு வழி கிடைக்காது. நாட்டு நிலை உலக கிலைக்கு ஏற்ப வளர்ந்தாகவேண்டும். இதற்கு வீட்டு நிலை மாறவேண்டும்--"வீட்டிற்கோர் புத்தகசாலை" என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை. மலைகண்டு, நதிகண்டு, மாநிதிகண்டு அல்ல, ஒரு நாட்டை உலகம் மதிப்பது--அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே மாநிலம் மதிக்கும். மனவளம் வேண்டும்--மிக மிக விரைவில்--மிக மிக அதிகமாக எழுத்தறிவற்றவர் ஏராளம் இந்த நாட்டில் இது பெருங்கேடு. கல்வி பெற்றவர்கள் அனைவருக்குமாவது நற்பண்புகள் செழிக்கும் பண்ணைகளாக நாட்டுக்கு வலியும் வனப்பும் தேடித்தரும் கருத்துக்கள் மலரும் சோலையாக உள்ளனவா என்றால், இல்லை என்று பெருமூச்சுடன் கூறித்தான் ஆகவேண்டும்– உள்ளதை மறைக்காதிருக்க வேண்டுமானால், நாட்டு நிலை கண்டு உலகம் மதிக்கவேண்டுமானால், இந்தச் சூழ் நிலை மாறியாகவேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியத்தை நடைமுறைத் திட்டமாக்கி, சற்றுச் சிரமப்பட்டால் நமது நாட்டிலே நிச்சயமாக வனவளத்தைப் பெறமுடியும். நமது முன் சந்ததியார்களுக்டி இருந்ததை விட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம் அடவியில், ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில், ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க குரு, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து; பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம்; ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம்; இப்போதுள்ளது, உலகை நமது வீட்டுக்கு அழைத்துவந்து காட்டக்கூடிய காலம்--பாமர மக்கள் பாராளும் காலம். கனவளத்தை அதிகப்படுத்த மார்க்கம், முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம் இதோ நான் பேசுகிறேன்--நீங்கள் கேட்கிறீர்கள். இடையே--பலப்பல மைல்கள்--நானோ நீங்களோ, தவசிகளல்லர்-- அருளால் அல்ல இந்த ஒலி அங்கு கேட்பது அறிவின் துணைகொண்டு விஞ்ஞானி ஆக்கித் தந்த சாதனம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இவ்விதச் சாதனங்கள் இல்லாதிருந்த நாட்கள், நமது முன்னோர்கள் காலம்.
இவ்வளவு வசதிகள் நமக்கிருந்தும், ஏன், மன வளம் இவ்வளவு குறைவாக இருக்கிறது? வீடுகளிலே மனவளத்தை அதிகரிக்கவோ, பாதுகாக்கவோ, நாம் முயற்சி செய்வதல்லை--வழிவகை தேடிக் கொள்வதில்லை.
பெரும்பாலான வீடுகளின் அமைப்பையே பாருங்கள். கூடம் இருக்கும்; விசேஷ காரியங்களுக்குப் பயன்பட! கூடத்து அறை இரண்டிருக்கும்; அதிலொன்று பூட்டியே இருக்கும். சாவி வீட்டின் அதிபரிடமிருக்கும். மற்றோர் அறையிலே--தொட்டிலோ, ஏனையோ இருக்கும். அங்குத் தூங்கும் குழந்தையை வேறோர் தொல்லைப்படுத்தும்--அதைவிடப் பெரிய குழந்தை, இதனைச் சமையறையிலுள்ள தன் தாயிடம் சென்று கூறும். பூஜை அறையில் அப்பர் இருப்பார் போய்ச்சொல் என்று தாய் கூறுவாள், அங்கு அவர் இருக்கமாட்டார். மாட்டுத் தொழுவத்துக்குப் பக்கத்திலுள்ள திண்ணையில் படுத்துக் கொண்டிருப்பார். நாம் வீடு ஏறக்குறைய இதுபோலிருக்கும். கூடம் பாதுகாப்பான அறை--படுக்கை அறை சமையலறை--பூஜையறை--இவை எல்லாம் இருக்கும்--புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஒரு அறை தேடிப்பாருங்கள் மிகமிகக் கஷ்டம். பல வீடுகளிலே தூண்கனின் மீது சாளரங்களின் இடுக்கில், பிள்ளையார் மாடத்தில் சில புத்தகங்கள் இருக்கும். ஆனால் புத்தகசாலை உண்டா? என்று கேளுங்கள்--பதில் கூறமாட்டாக்கள்; ஒரு புன்னகைத் தோன்றும். பைத்தியக்காரா! இது வீடு நீ என்ன இங்கு வந்து புத்தகசாலை கேட்கிறாயே, என்று பொருள் அந்தப் புன்னகைக்கு.
வீடுகளில் மேஜை நாற்காலி சோபாக்கள் இருக்கும்; பீரோக்கள் இருக்கும்; அவைகளில் வெள்ளித் தரம்பாளமும், விதவிதமான வட்டில்களும், பன்னீர் சொம்பும் இருக்கும்; பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும்; உடைகள் சிறு கடை அளவுக்கு இருக்கும்; மருந்து வகைகள் சிறு வைத்தியசாலை அளவுக்கு இருக்கும், அப்படிப்பட்ட வசதியுள்ள வீடுகளிலேயுங்கூட புத்தகசாலை இராது--இருக்க வேண்டுமென்று எண்ணம் வருவதே இல்லை--அவசியமும் தோன்றுவது இல்லை.
இந்தச் செப்புக்குடம் சீரங்கத்தில் வாங்கியது. தேவர் கவியாணத்தின்போது திருப்பதியில் வாங்கினோம் இந்தத் தாம்பாளத்தை. பெல்லாரிக்குச் சென்றோமே பெண் பார்க்க, அப்போது வாங்கினோம் இந்த இரத்தின ஐமக்காளத்தை. கார்த்திகை தீபத்தின்போது திருவண்ணாமலையில் வாங்கினோம். சிதம்பரத்திலே ஆருத்திரா தரிசனத்தின்போது திருவண்ணாமலையில் வாங்கினோம், சிதம்பரத்திலே ஆருத்திரா தரிசனத்தின்போது இதை வாங்கினோம் என்று நமது வீடுகளில் பல சாமான்களைக் காட்டுவர். சாமான் ஒவ்வான்றுக்கும் ஒரு சரித்திரமே கூறுவார்கள். ஆனால் பத்து நல்ல புத்தகங்களைக் காட்டி இன்ன சந்தர்ப்பத்தில் இவைகளை வாங்கினோம் என்று கூற மாட்டார்கள்.
வீட்டில் அலங்காரத்தையும், விசேஷ கால உபயோகத்திற்கான சாதனங்களையும் கவனிப்பதுபோல, வீட்டிற்கோர் புத்தகசாலை. சிறிய அளவிலானது அமைக்க நிச்சயமாகக் கவனம் செலுத்தவேண்டும். அக்கறை காட்ட வேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம், இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது, நாட்டுக்கு மறைமுகமாகச் செய்யும் துரோகச் செயலாகும்.
வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும்--வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி, புத்தக சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை-- அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும்.
எவ்வளவு செலவு? ஏது அவ்வளவு பணம் என்று கேட்பர் பலருக்குத் தேவையான அளவு புத்தகம் வாங்கத்தான் முடியாது--அந்தக் குறையைப் போக்க பொது புத்தகசாலைகளை நடத்தி, சர்க்கார், நகரசபைகள், பொது நலக் கழகங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் சில அடிப் படை அறிவுக்குத் தேவையான புத்தகங்களையாவது, வீடுகளில் சேகரித்துப் பயன்படுத்தும் முறை இருக்கவேண்டும்.
பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள மட்டுமல்ல ஏற்கனவே நமது மக்களுக்குத் தெரிந்திருக்கிற பல விஷயங்களை மறந்துபோகச் செய்வதற்குப் பல புத்தகங்கள் தேவை நமது மக்களுக்குக் கைலாய காட்சிகள். வைகுந்த மகாத்மியம், வரலட்சுமி நோண்பின் மகிமை, நாரதரின் தம்பூரு. நந்தியின் மிருதங்கம் சித்ராபுத்திரரின் குறிப்பேடு நரகலோகம் அட்டைக்குழி அரணைக்குழிகள் மோட்சத்தின் மோகனம், இந்திர சபையின் அலங்காரம், அங்குப்பாடி ஆடும் மேனகையின் அழகு இவையெல்லாம் தெரியும். ஆறுமுகம் தெரியும்; அவர் ஏறும் மயில் தெரியும்; அம்மை வள்ளிக்கும், அழகி தெய்வயானைக்கும் ஏசல் நடந்தது தெரியும். இவையும் இவை போன்றவையும் ஏராளமாகத் தெரியும்.
நந்தி துர்க்கமலை எங்கே? தெரியாது என்பர். நிதி மந்திரியின் பெயர் என்ன? அறியோம் என்பார்கள். காவிரியின் பிறப்பிடம்? கவலை கொள்ளார். பாலாற்றில் நீர் ஏனில்லை? சொல்லத் தெரியாது. நூல் ஆலைகள் எவ்வளவு உள்ளன; கணக்கு அறிவார். தாராபுரம் எந்தத் திசையில் இருக்கிறது? தெரியாது. தாமிரபரணி எத்தனை மைல் நீளம் ஓடுகிறது? திகைப்பர் பதிலறியாமல். அவர்கள் வாழும் மாவட்டத்தின் அளவு என்ன? தெரியாது என்பர். மாகானத்தின் வருமானம் என்ன? அறியார்கள்--அறிந்து கொள்ளவும் முயலமாட்டார்கள். அனுமத் பிர பாவம் தெரியும்; அரச மரத்தைச் சுற்றினால் என்ன பயன் கிடைக்கும் என்பதைக் கூறத் தெரியும். பேய் பில்லி சூனியம் பற்றிய கதைகளைக் கூறத் தெரியும் அவர்கள் ஏறிச் செல்லும் ரயிலைக் கண்டு பிடித்தவர் யார் என்பது தெரி யாது. அதிலேறிச் செல்லும் இடத்திலே அவர்கள் தரிசிக்கப்போகும் கருணானந்த சுவாமிகளின் கால்பட்ட தண்ணீர் கர்ம நோய்களைப் போக்கும் என்ற கதை பேசத் தெரியும்.
இது நமது மக்களின் மனவளம். இவர்கள் பெரும்பாலோர், இவர்களைக் கொண்டுள்ள நம் நாடு அழிவுச் சக்தியில் அணுகுண்டு உற்பத்தியும் ஆக்க வேலைச் சக்தியில் சந்திர மண்டலத்திற்குச் சென்றுவரும் ஆராய்ச்சியும் நடத்திக்கொண்டுவரும் ஓர் பகுதி சரியா? நாட்டில் எதிர்காலத்தில் அக்கரைகொண்ட யாரும், இந்த நிலை சரியென்று கூற மாட்டார்கள். சரியல்லதான்; ஆனால் என்ன செய்வது என்று கேட்பர்? வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும்--மக்களின் மனதிலே உலக அறிவு புக வழி செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டை அறிய, உலகை அறிய, ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்கூட அல்ல--அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
வீடுகளிலே நடைபெரும் விசேஷங்களின் போது வெளியூர்கள் சென்று திரும்பும்போது. பரிசளிப்புகள் நடத்தும் போது புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு பழக்கத்தை கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சிலகாலதுக்காவது ஏற்படுத்திக் கொண்டால் சுலபத்தில் ஒரு சில புத்தகசாலையை அமைத்து விடலாம்.
புத்தகசாலை அமைக்கும்போது ஏற்கனவே நமது மக்களின் மனதிலே ஊறிப்போயுள்ள அர்த்தமற்ற அவசியமற்ற கேடே கூடச் செய்யக்கூடிய எண்ணங்களை நிலை நிறுத்தக்கூடிய ஏடுகளைச் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் மனவளம் ஏற்படாது. மனம் சதுப்பு நிலமாகும் பழமைப் புழுக்கள் நெளியுமிடமாகும்.
புத்தகசாலை அமைப்பது என்று திட்டமிட்டுப் புது வருஷப் பஞ்சாங்கத்தில் ஒரு மூன்று தினுசும், பழைய பஞ்சகங்கக் கட்டு ஒன்றும், பவளக்கொடி மாலையும் பஞ்சாமிர்தச் சிந்தும், பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதையும் பேய் பேசிய புராணமும், நல்ல தங்காள் புலம்பலும் அரிச்சந்திரன் மயாண காண்டமும், ஆகியவற்றை அடுக்கிவைத்தால், நாம் தோறும் மனவளம் ஏற்படாது. நமது நாட்டை வஞ்சகர்களுக்கு ஏற்ற வேட்டைக்காடு ஆக்கும் தீக்குச்சி சேர்ப்பது போலாகும்.
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து, அதற்குப் புத்தகசாலையென்று பெயரிடுவது, குருடர்களைக் கூட்டிவைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழி காட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும்.
ஒவ்வொர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும், அமைக்க வேண்டிய புத்தகசாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள், இவை முதலிடம் பெறவேண்டும். பொதுவாகவே, மக்களின் அறிவுக்குத் தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமேயொழிய, வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி, வான வீதிக்கு வழி காட்டும் நூல்களும் மாயா வாதத்தையும், மன மருட்சியையும் தரும் ஏடுகளும், தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூலும் இருத்தலாகாது.
பஞ்சாங்கம் அல்ல புத்தக சாலையில் இருக்கவேண்டியது அட்லாஸ்-- உலகப்படம் இருக்க வேண்டும்.
இந்த அடிப்படை பிரச்சினையிலே நேர்மையான முறையையும் நெஞ்சு உரத்தையும் காட்டியாக வேண்டும். அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழிசெய்யும்-- மனவளத்தை உண்டாக்கும்--நாட்டை வாழ வைக்கும். புலியை அழைத்துப் பூமாலை தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தன வாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.
நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டிற்று அந்த நாட்களில். நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று அந்த நாட்களில். நமது சரித்திர அறிவு பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச்சென்ற பத்தினியைப்பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.
அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாட்களிலே நாம், வீட்டில் புத்தகசாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும்.
பூகோள, சரித, ஏடுகள் இருக்கவேண்டும்--நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும், வாழ்வுக்காண வழிகளையும் காட்ட வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
நமது தழிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் சங்க இலக்கியச் சாரத்தை சாமான்யரும் அறிந்து வாசிக்கக் கூடிய முறையில் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்கவேண்டும். குறைந்த பட்ச மக்கள் முன்னேற்றத்துக்கும், வாழ்க்கை வசதிக்கும் உதவும் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளைப்பற்றிய முக்கியமான தகவலைத் தெரிவிக்கும் நூல் இருக்க வேண்டும்.
நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்களின் மன மாசு துடைத்தவர்கள்; தொலை தேசங்களைக் கண்டவர்கள் வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைத்துக் கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்யுடும். வீட்டிற்கோர் புத்தகசாலை தேவை--ஆனால் கேட்டினை நீக்கிடத் தக்க முறைகளைத் தரும் ஏடுகள் கொண்டதாக இருக்க வேண்டும் வீட்டிலே அமைக்கும் புத்தகசாலை.