சரிந்த சாம்ராஜ்யங்கள்/அடையாளங்கள்

விக்கிமூலம் இலிருந்து

 கிழவியின் அழுகுரல் மட்டிலும் கேட்க, நகரப் பரிசோதகன் கதவைத்தட்ட, அழுகையை நிறுத்தி அந்தப் பெரியவள் கதவைத் திறக்க, எங்கள் மன்னன் மானத்தை வாங்கவா இப்படி பெருங்குரலிட்டு அழுது கொண்டிருக்கின்றாய் என்று வந்த வேட்டைநாய் அந்த முதியவள் வாயில் குத்த, அடுத்த வினாடியே அவளும் பிணமாய்ச் சாக, அதைத் தங்கள் அதிர்ஷ்டமென நினைத்து வீட்டிலிருந்ததை வந்தவர்கள் சுருட்ட, விடிகிற வரையிலும்யாரும் அந்த வீட்டையணுகாமலிருக்க, வேந்தனிடம் இந்த விவகாரம் வழக்காக நிற்க, விலா வெடிக்கச் சிரித்துவிட்டு தன் பஞ்சணைக்குச் சென்றுவிட்ட பாதகர்கள்.

மக்கள் செலுத்தும் வரியிலேயே மருந்துகளையும் குண்டுகளையும் வாங்கி அதே மக்களை அதே ஆயுதங்களால் அடக்கியாண்ட சேனைத் தலைவர்கள். தீரர்களுக்கும் தீயர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் தீ மிதித்தவர் போலாடிய தறுக்கர்கள், தன்னையாதரித்தவனை வஞ்சனையால் கொன்று குவிக்க எதிரிகளுக்கு இருட்டில் ஆயுதங்களைக் கொடுத்துதவிய அற்பர்கள், உள் நாட்டில் புகப் பாதை தெரியாமல் திகைத்தப் பகைவரிடம் பேரம்பேசி பாதையைக் காட்டிய பாதகர்கள், ஜெகத்தைக் கட்டியாள தன் படைகள் புடைசூழ வந்த ஜென்ம விரோதிகளுக்கு துவஜாரோகணம் தூக்கிய ஜெகஜாலப் புரட்டர்கள். ஜெமீன்கள், இனாம்கள், சங்கீதத்தால் செங்கோலைத் தன் வசப்படுத்த ஜெகன் மோகினிகளைப் பந்தயப் பொருளாக வைத்து தூது சொக்கட்டானாடிய சோற்றுத் துருத்திகள், மோகனப் புன்னகையால் மன்னர்களின் சித்தத்தைச் சண்டைக் கிழுத்துத் தங்கள் காமக் கோடரியால் மன்னனின் சிரத்தை வெட்டி வீழ்த்தி சதி செய்த சண்டாளிகளின் பாதம்தாங்கிகள். அவன் ஏன் மன்னன்; நான் ஏன் மந்திரி நானே மன்னன் என்று பிரகடனப்படுத்திய அமைச்சனை வஞ்சம் தீர்க்கும் வெறியில் எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து எல்லாவற்றையும் இழந்து விட்ட ஏமாந்த சோணகிரிகள்.

நாட்டில் பஞ்சம் அதிகம், ஆகவே என் தந்கை செய்த சட்டங்களே நான் மாற்றுகிறேன். இனி சதுர் வேதி மங்கலங்கள், தரும ஸ்தாபனங்கள் செல்லாது என திருத்தஞ் செய்த தார்வேந்தர்களையொழிக்கப் பெண்களையேவிய புரோகிதக் கூட்டங்கள். அண்ணன் அரசைத் தம்பிக்கும், தம்பியின் உரிமையை மாற்றானுக்கும் ஆக்கி உளம் களித்த உதிரப் பிண்டங்கள்.

தந்தையை இப்படையிலும், தனையனை அப்படையிலும் நிறுத்தி வேடிக்கைப் பார்த்து உருளும் தலைகள் மேல் நின்று வெற்றிச் சங்கமுழங்கிய வீணர்கள், அவர்களுடைய அடாதச் செயலுக்கு ஒத்துதிய வேதியர்கள் அன்னமிட்டுக் காப்பாற்றியவனுக்கே ஐந்தாம் படை வேலை செய்துத் தங்கள் பஞ்சாங்கத்தின் அட்டைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிக்கொண்ட இரத்தம் உருஞ்சும் அட்டைகள்.

அரசபோகம் தனக்கும் வேண்டுமென்ற பேராசையால் எழுப்பிய அஜமேக யாகத்தின் புகை, அஸ்வமேத யாகத்தில் இரு துண்டாக்கப்பட்ட குதிரை, மண்டலத்தை ஒழிக்கிறேன் என்று குள் உரைத்து அவிழ்த்து விடப்பட்ட குடுமி, சோமபானத்தால் ஏற்பட்ட போதை, ஆற்றங்கரைகளிலே போடப்பட்ட தவளைக் கூச்சல், பல யாககுண்டங்களின் முன்னால் நிறுத்தி வெட்டப்பட்ட ஆடுகளின், உதிர்ந்த ரோமங் கள், உலர்ந்த மலர்கள், சோற்றுப்பருக்கைகள், அவிர்ப் பாகத்தை அளவில்லாமல் தின்று மயக்கமேறி மண்டபத்தின் படிகளிலே உருண்டுக்கிடந்த மாமிச மலைகள், மோப்பத்தால் வாலைக்குழைத்துக்கொண்டு வந்த நாய்கள், இருண்டவுடன் ஊளையிட்ட நரிகள் ஆகிய இவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்களாக ஏட்டில் இடம் பெற்றிருக்கும் எழுத்துருவங்கள்.