சரிந்த சாம்ராஜ்யங்கள்/இன்னும் பல

விக்கிமூலம் இலிருந்து

ஆயு தங்கள், போரில் மாண்ட மாவீரர்களின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்து, இன்று பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் வீரப் பட்டயங்கள், மிகப் பழைய போராயுதமான வில், அதில் நாணேற்றி அறுந்துவிட்ட கயிறுகள், வில்லிலிருந்து புறப்பட்டு குற்றவாளி கோட்டைச் சுவற்றில் முட்டி கூர்மழுங்கிப் போன அம்புகள், வில்லில் நாணேற்றும்போது ஏற்பட்ட ரீங்கார சத்தத்தை மண்டலமெல்லாம் பரவச்செய்த அணுக்களின் அணுக்கள். எதிரிகளின் குதிரைக் குளம்படிப்பட்டு உடைந்துபோன மண்டையோடுகள். சாம்ராஜ்யாதிபதிகள் கையொப்பமிடா முன்னம் களம்புகவேண்டி வந்ததால் அரை குறையாக விடப்பட்ட கையெழுத்தில்லாத சாசனங்கள், சமர்க்களத்தில் சலிக்காது போரிட்டும் வெற்றித் தோல்விகள் தெரியாததால் வெள்ளைக் கொடி காட்டி, விட்டனுப்பிய சமாதான அறிக்கையின் கையெழுத்துப் பிரதிகள், படைகள் எவ்வழி செல்ல வேண்டுமென்பதை சாலையின் மரங்களில் செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், தளகர்த்தனுக்கு சேதி சொல்ல அனுப்பட்ட புராவினங்களின் சந்ததிகள்.

ஆள்பவன் உயிரோடிருக்கும்போதே அவன் பாதுகையை வைத்தாண்டு, தம்பியை ஏமாற்றியதாகச் சொல்லும் பாடகனின் கற்பனையில் உதித்து இன்று தெய்வீகத் திருவிளயாடல் எனப் போற்றப்படும் ஏடுகள், நா வல்லோன் தன் கற்பனையால் உண்டாக்கிய காகிதக் கோட்டைகள், கற்பனை உலகங்கள், கருத்துக்கே எட்டாத கனவு உலக சாம்ராஜ்யங்கள். சென்னியில் கல்லேற்றி சினம் தீர்த்த மன்னன் மீண்டும் தன் பகைவரை மன்னித்து விருந்தளித்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகள்  ஆகியவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்கள்.

எதிரிகளின் குண்டுகளின் தாக்குதலால் வாய்பிளந்து தண்ணீரைக் குடித்துக் கடலின் அடிவாரத்திலே கண் கலங்கிக்கொண்டிருக்கும் மரக்கலங்கள், போர் மூண்டதால் நெடுநாட்கள் புகைவிட முடியாமல் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கும் புகைப் போக்கிகள்.

மக்கள் மடிந்தாலும் தங்கள் மகோன்னத வாழ்வுக்கு முடிவேற்பட்டால் செங்கோலைப் பிடிங்கி மன்னன் செல்லுயிரைப் போக்கும் சீலமற்றவர்கள் விதைத்தவினையால் வீழ்ந்து விட்ட சாம்ராஜ்யங்கள், மதக் கோட்டை ஆட்டங் காண்பதைக் கண்டு வாளாவிருந்த மன்னர்களின் மண்டையில் தேளெனக் கொட்டித் தங்கள் தோளை உயர்த்திக்கொண்ட சண்டாளர்கள் செய்த சதியால் சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், அவைக்களத்தில் ஏதோ அவசர வேலையாக இருந்த மன்னன் தன்னை அவமதித்தான் என்ற மன எரிச்சலால் அரசுரிமையை மாற்றானுக்கு ஆக்கித்தந்த மடையர்களால் மண் மேடுகளான கோட்டைக் கொத்தளங்கள், மருந்தடைக்கும் பீரங்கியின் வாயில் மண்ணையும் கல்லையும் அடைத்து வெடிக்க ஒட்டாமல் தடுத்து வேடிக்கைப் பார்த்த வேதியர்களால் வேதனைக் குள்ளான வேந்தர்களின் கல்லறைகள், காலத்தால் செய்த நன்றியை ஞாலத்திலும் பெரிதென எண்ணாமல் கண நேரத்தில் தன்னக் காப்பாற்றியவனைக் காட்டிக் கொடுத்த கயவர்களால் வீழ்ந்து விட்ட கற்கோட்டைகள் ஆகிய இவைகளே சரிந்த சாம்ராஜ்யங்களின் அடையாளங்கள்.