சாயங்கால மேகங்கள்/11
சுயநலமும், சுரண்டலும், வெற்றுத் திமிரும் உள்ள தரங்கெட்ட அதிகார வர்க்கமே ஒரு தேசத்தின் ஆரோக்யமான ஜனநாயகத்தை அழிக்கப் போதுமானவை.
பூமி கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியைப் பார்த்து அவள் பதறிப் போனாள். ஒரு வேளை இரவில் வீடு தேடிச் சென்று கதவைத் தட்டி எழுப்பிப் பூமியைப் போலீஸார் கூட்டி கொண்டு போயிருப்பார்களோ என்று சந்தேகப்பட்டாள் அவள். என்ன நடந்தது என்ற விவரங்களை யாரிடம் கேட்பது என்றே அவளுக்குப் புரியவில்லை. உடனே புறப்பட்டுப் போய் பூமியின் வீட்டருகே விசாரிக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.
லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணாச்சி வீட்டிற்குத் தேடிப் போய் விசாரிக்கலாம் என்றால் முந்திய இரவு லஸ் கார்னரில் நடந்ததெல்லாம் அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ என்று சந்தேகமாகவும் இருந்தது. அரை நாள் லீவு எழுதி தேவகி மூலம் பள்ளிக்குக் கொடுத்தனுப்பி விட்டுப் பூமியின் வீட்டருகே போய் விசாரித்தால்தான் ஏதாவது விவரம் தெரிய முடியும் என்று பட்டது.
உடனே லீவு லெட்டர் எழுதித் தேவகியின் வீட்டில் போய்க் கொடுத்து விட்டு அப்பர் சாமி கோயில் தெருப் பக்கம் விரைந்து வீரப் பெருமாள் முதலி தெரு சந்து பொந்துகளில் பூமியைத் தெரிந்த ஆட்டோ டிரைவர்கள் யாராவது எதிர்பட்ட மாட்டார்களா என்று தேடி அலைந்தாள் அவள். அவள் எதிரே தற்செயலாகக் குப்பன் பையனும், கண்னையனும் எதிர்பட்டார்கள். சித்ரா அவர்களிடமே விசாரித்தாள். நடு இரவில் வந்து போலீசார் கதவைத் தட்டி எழுப்பிப் பூமியைக் கைது செய்து கொண்டு போனார்கள் என்ற விவரம் அவர்களிடமிருந்து தெரிந்தது. டாக்ஸி ஆட்டோ டிரைவர்கள் யூனியனின் காரியதரிசியையும், ஓர் அரசியல் பிரமுகரையும் அழைத்துக் கொண்டு பூமியை ஜாமீனில் விடுவித்துக் கொண்டு வருவதற்காகத்தான் அவர்கள் அப்போது போய்க் கொண்டிருந்தார்கள்.
சிந்தித்த போது, சித்ராவுக்கு ஒரு கணம் தயக்கமாகவும், கூச்சமாகவும் கூட இருந்தது, தான் அப்படி நெருக்கமும், அடையாளமும் காட்டிப் பூமியோடு சம்பந்தப்படுத்திக் கொண்டு அவனைத் தேடிப் போலீஸ் நிலையத்துக்குப் போவது சரியா என்று யோசித்தாள் அவள். பேச்சுக்கும், கவனத்துக்கும். வதந்திகளுக்கும் இடமாகப் போகிற ஒரு காரியத்தைத் தன்னைப் போல் திருமணமாகாத ஓர் இளம்பெண் செய்யலாமா என்ற தயக்கம் மேலெழுந்தவாரியாகத் தோன்றி உடனே மறைந்து விட்டது.
பூமியைப் பார்ப்பதற்காகவே அரை நாள் லீவு போட்டு விட்டுப் புறப்பட்டு வந்து இப்போது திரும்பிப் போவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக இருந்தது. அவள் அப்போது அவர்களோடு போலீஸ் நிலையத்திற்குச் சென்றாள். மெய்யான அன்பினால் தூண்டப் பெற்று எழும் உணர்ச்சியை எந்த மேலோட்டமான போலித் தயக்கமும் தடுத்துவிட முடியாது என்பதற்கு அவளே உதாரணமாகியிருந்தாள்.
போலீஸ் நிலைய வாயிலில் சாலையை மறித்துக் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான ஆட்டோ, டாக்ஸிகள் நின்று கொண்டிருந்தன. போக்குவரத்துச் சாலையின் இரு முனைகளிலும் நெடுந்தூரத்துக்கு ஸ்தம்பித்துப் போயிருந்தது. பூமி என்ற வலிமை வாய்ந்த இளைஞனுக்குப் பின் பலமாயிருந்த மாபெரும் சக்தி தெரிந்தது.. ஒற்றுமையும் நியாய் உணர்ச்சியும் இருந்தால் சாதாரணமாக மக்களால் யாரையும் எந்த அநீதியையும் தட்டிக் கேட்க முடியும் என்பது கண்முன்னே நிதரிசனமாகத் தெரிந்தது.
உடன் வந்தவர்களோடு அவள் போலீஸ் நிலைய காம்பவுண்டுக்குள் நுழைந்த போது இரு போலீஸ்காரர்களுக்கு நடுவே பூமி உள்ளே கூட்டிக் கொண்டு போகப்படுவதைப் பார்த்தாள். அவள் உள்ளே வருவதைப் பூமியும் பார்த்து விட்டான். முகமலர்ச்சியோடு அவளை நோக்கிக் கையை அசைத்தான் அவன்.
தான் அங்கு வந்திருப்பதை அவன் பார்த்து விட்டதில் அவள் மனம் திருப்தியடைந்தது. தான் வராவிட்டாலும் அவளைக் கவனித்து அவனுக்காகக் கவலைப்பட்டு, அவனை விடுவித்து அழைத்துச் செல்வதற்காக ஒரு பெரிய தோழமையுள்ள கூட்டம் அங்கே காத்திருப்பதைக் கண்டு அவளுக்குப் பெருமையாயிருந்தது.
அந்தச் சமயத்தில் பூமியைப் பற்றியும், அவளைப் பற்றியும் ஒரு விவரமும் தெரியாத யாரோ ஓர் அப்பாவி அவளிடமே வந்து, “நீ அந்த ஆளோட வூட்டுக்காரியாம்மா?” என்று வேறு கேட்டு விட்டான்.
சித்ராவுக்கு குப்பென்று பதட்டமும், வெட்கமுமாக முகம் சிவந்துவிட்டது. இப்படிக் கேட்டுவிட்டு எதிரே நின்றவனிடம் ஆமாம் என்றும் சொல்ல முடியாமல் இல்லையென்றும் சொல்ல முடியாமல் திகைத்து மலைத்துப் போய் நின்றாள் அவள்.
“இந்தம்மாவைப் பார்க்கப் பாவமா இருக்குதுப்பா” என்று பக்கத்தில் நின்ற வேறொருவர் பக்கம் திரும்பிச் சொல்லி அனுதாபப் பட்டுக்கொண்டான் அந்த ஆள்.
அறியாமையாலும், அளவுக்கதிகமான கற்பனை உணர்ச்சியாலும் அந்த ஆள் அப்படிச் சொல்லியதில் கூட உள்ளத்தின் அடி மூலையில் அவளுக்கு மகிழ்ச்சியாகவும், குறு குறுப்பாகவும் இருந்தது.
அங்கே போலீஸ் நிலையத்தில் கூடி நின்ற கூட்டத்திலிருந்து சித்ராவுக்கு மேலும் சில தகவல்கள் தானாகவே தெரிந்தன.
‘இதையெல்லாம் போய் பெரிது படுத்துவானேன்’ என்ற மெத்தனத்தில் முத்தக்காள் தன் மெஸ்ஸில் புகுந்து நிதி வசூல் என்ற பெயரில் கலாட்டா செய்ய முயன்றவர்களைப் பற்றிப் போலீஸில் புகார் எதுவும் கொடுக்காமல் மெத்தனமாக இருந்து விட்டாள்.
அதனால் தற்காப்புக்காக பூமி தன்னுடைய கராத்தே திறமையால் அவர்களைத் துரத்தி அடித்தவுடன் அவர்கள் முந்திக்கொண்டு போய்ப் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள். தாங்கள் வசூலுக்குப்போய் முத்தக்காளை வற்புறுத்திப் பணம் கேட்டதையும், அதனால் தகராறு மூண்டதையும் அறவே மறைத்து விட்டுச் சாப்பிடுவற்காகப் போன இடத்தில் பூமியை ஏவி விட்டுத் தங்களைத் தாக்கியதாகப் போலீசில் புகார் கொடுத்து விட்டார்கள் அவர்கள்.
போலீஸார் அதன் விளைவாக இரவோடு இரவாகப் பூமியைத் தேடிச் சென்றதோடு முத்தக்காள் மெஸ்ஸையும் ‘ரெய்டு’ என்ற பேரில் பந்தாடியிருந்தார்கள். அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் தலையீட்டாலும், ஆலோசனையாலும் காரியங்கள் முத்தக்காளுக்கும் பூமிக்கும் எதிராகவே நடந்திருந்தன.
பொது மக்களின் நண்பனாகவும் சட்ட நியாயங்களின் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டிய போலீஸ் அரசியல் செல்வாக்குள்ள சுரண்டல் பேர்வழிகளின் கையாள்களாகப் பயன்படும் நிலைமை வந்தால் அதைப் போல் மோசமானது வேறெதுவும் இல்லை. சுய நலமும்,. சுரண்டலும் வெற்றுத் திமிரும் உள்ள தரங்கெட்ட அதிகார வர்க்கமே ஒரு தேசத்தின் ஆரோக்கியமான் ஜனநாயகத்தை அழிக்கப் போதுமானவை. தனிமனிதர்கள் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சையளிக்கலாம்: ஒரு தேசத்தில் ஒழுங்கும் ஜனநாயகமுமே நோய்வாய்ப்பட்டு விட்டால் யாரால் திருத்த முடியும்?
நள்ளிரவில் கைது செய்யப்பட்ட பூமி’ ஜாமீனில் விடுதலையாகி வந்தான். அவனைச் சுற்றிலும் பெருங் கூட்டமாக டிரைவர்களும், நண்பர்களும், சூழ்ந்திருந்ததால், சித்ரா அருகில் நெருங்கிச் சென்று பேச முடியவில்லை.
அத்தனை கூட்டத்திலும் ஞாபகமாக அவனே அவள் பக்கம் தேடி வந்து, “நான். இப்போது இவர்களோடு கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கிறது. வக்கீலைப் பார்க்க வேண்டும். முத்தக்காள் மெஸ்ஸில் போய் இருந்தால் அங்கே வந்து பார்க்கிறேன். எப்படியும் சீக்கிரமாக வந்துவிடப் பார்க்கிறேன்” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டுப் போனான்.
சித்ரா தானாகவே மெஸ்ஸுக்குப் போக வேண்டுமென்றுதான் இருந்தாள்: போலீஸ் நிலைய வாயிலில் முத்தக்காள் மெஸ்ஸும் பழிவாங்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்ட போதே அவள் அங்கு போய்ப் பார்க்க வேண்டுமென்று தான் நினைத்திருந்தாள்.
தங்கள் அளவில் ஒரு வம்புக்கும் போகாமல் ஒதுங்கி வாழ்பவர்களைக்கூட அரசியல்வாதிகள் சீண்டிவிட்டு வம்புக்கு இழுத்து நஷ்டப்படுத்துவதைப் பார்த்து மிகவும் வருத்தமாய் இருந்தது!.
வாரிசு இல்லாத ஏழை நடுத்தர வயது விதவை ஒருத்தி காலஞ் சென்ற கணவனின் தொழிலில் அவனோடு அன்று தோழமை கொண்டு பழகியவர்களின் இன்றைய அநுதாபத்தோடு ஒரு மெஸ் நடத்திப் பிழைத்தால் அதற்கும் இடையூறு வருகிறது.
போலீஸ் நிலையத்திலிருந்து நேரே மெஸ்ஸுக்குத்தான் போனாள் சித்ரா. பூமி தன்னை அங்கே போகச் சொல்லியதில் ஏதோ குறிப்பு இருக்க வேண்டும் என்று. அவளுக்குத் தோன்றியது.
மெஸ் வாயிலில் இரும்புத் தொப்பிப் போலீஸ்காரர்கள் இருவர் தென்பட்டனர்: சாவு வீடு போல் அப்பகுதி களை இழந்து காணப்பட்டது. அருகே உள்ள வெற்றிலை பாக்குக் கடைகூட மூடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கல்லெறியும், சோடாபாட்டில் வீச்சும் நடந்திருப்பதற்கான அடையாளமாக தெருவிலும், பிளாட்பாரத்திலும் கற்கள், கண்ணாடி உடைசல்கள் நிரம்பிக் கிடந்தன. மெஸ் மட்டுமின்றி அக்கம் பக்கத்துக் கடைகள் உட்பட விளம்பரப் பலகைகளும், இரவில் அது தெரிவதற்காகப் போடப்பட்டிருந்த குழல் விளக்குகளும், பல்புகளும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
கலகலப்பாக இருக்க வேண்டிய பகுதி வெறிச்சோடிக் கிடந்தது. இரவு அரசியல் தூண்டுதலின் பேரில் நடந்த போலீஸ் ரெய்டுக்குப் பிறகு அதிகாலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்கும் நடுவே இந்தத் தாக்குதல் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. மெஸ்ஸுக்குள் நுழையும் பிரதான வாயிற்கதவுகள் கூட உடைக்கப்பட்டிருந்தன.
உள்ளே நுழைய முயன்ற அவளைப் போலீஸ்காரர்கள் ஏதோ சொல்லித் தடுக்க முயன்றனர். ‘மெஸ் நடத்துகிற அம்மாளுக்குத் தான் மிகவும் வேண்டியவள்’ என்று அவள் பதில் சொல்லியவுடன் அவர்கள் வேண்டா வெறுப்பாக அவளைத் தடுப்பதை நிறுத்திக்கொண்டனர்.
உள்ளே நுழைந்தால் அங்கேயும் பயங்கரமான சேதங்கள் தென்பட்டன. பாத்திரம் பண்டங்கள், மேஜை நாற்காலிகள், டவரா டம்ளர்கள் எல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு அங்கங்கே கிடந்தன, பால் தயிர் கொட்டப்பட்டிருந்தது. காய் கறிகள் முழுசாகவும் சமையலுக்கென்று நறுக்கப்பட்டவையுமாகச் சிதறிக் கிடந்தன. அடுப்பும், அடுப்பு மேடையும் இடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
அரிசி, பருப்பு, புளி என்று ஸ்டோர் ரூமில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த சாமான்கள் சூறையாடப்பட்டிருந்தன.
வசூலுக்கு பணம் தர மறுத்ததோடு பூமியிடம் வாங்கி கட்டிக் கொண்ட கோபமும் சேரவே பெருங் கூட்டமாகக் கம்பு கடப்பாரையுடன் வந்து தாக்கியிருக்க வேண்டுமென்று தோன்றியது, இடம் குரூரமானதொரு போர் நடந்து முடிந்து விட்ட ரணகளமாகக் காட்சியளித்தது.
எல்லாவற்றையும் சரிப்படுத்திப்போனது வந்ததை ஒழுங்கு செய்து மறுபடி மெஸ்ஸை நடத்த வேண்டுமானால் குறைந்தது ஒரு வார காலமாவது தேவைப்படும் போலத் தோன்றியது. முத்தக்காள் கூட உள்ளே இல்லை. முன் நெற்றியில் கட்டுடன் மாவரைக்கிற கிழவர் மட்டும் ஒரு மூலையில் படுத்திருந்தவர் சித்ராவைப் பார்த்ததும் எழுந்திருந்து வந்தார்.
“அம்மா எங்கேப்பா?”
“ராயப்பேட்டா ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகியிருக்காங்க... அங்கே போய்ப் பாருங்க...”
“இதெல்லாம் எப்போ நடந்தது?”
“ராத்திரி, ஒரு மணிக்குப் பூமி சாரைத் தேடி முதல்லே போலீஸ் இங்கே வந்து சோதனை பண்ணினாங்க....... அப்புறம் மூணு மணி சுமாருக்கு ஒரு பெரிய ரவுடிக் கூட்டம் வந்துதான் இந்தக் கூத்தெல்லாம் பண்ணிச்சுது!... அம்மாவுக்குப் பலமான காயம்... பாவம்...”
எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு அவள் வெளியே வரவும் பூமி அங்கே தேடிக் கொண்டு வரவும் சரியாயிருந்தது.
இருவருமாக உடனே இராயப்பேட்டை, ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.