சாயங்கால மேகங்கள்/12

விக்கிமூலம் இலிருந்து



12

இன்றைய கவிதைகள் வெறும் காகிதங்களில் எழுதப்படுவதில்லை. அவை வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் கண்ணீரிலும் வரதட்சணைக் கொடுமையால் மணமாகாது தவிக்கும் யுவதிகளின் தவிப்பிலும் உழைப்பவர்களின் வறுமையிலும் எழுதப்படுகின்றன.


முத்தக்காளுக்குத் தன் மேல் கோபமாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சாதாரணமாகப் போயிருக்க வேண்டிய விஷயத்தைப் பெரிய சண்டையாக்கி மெஸ்ஸில் இவ்வளவு சேதமும் விளையத் தான் காரணமாக இருந்து விட்டதாக அவளுக்குத் தோன்றுமோ என்று பூமிக்குத் தயக்கமாக இருந்தது. அதிகம் படிப்பறிவில்லாத ஒரு சிறு வயது விதவைக்கு அத்தகைய மன நிலைதான் இருக்குமென்று அவனால் மிகவும் சுலபமாகவே அநுமானிக்க முடிந்தது. அளவு கடந்த தைரியத்தாலும், தன்மானத்தினாலும் வருகிற நிரந்தரப் பெருமையைவிடச் சுமாரான பணவினாலும் பயத்தினாலும் கிடைக்கிற தற்காலிக லாபமே போதுமென்றுதான் சராசரியானவர்கள் நினைப்பார்கள். ஒருவேளை முத்தக்காளும் அப்படிச் சராசரியமானவளாகவே இருக்கக்கூடும்.

அங்கே அநியாயமாகப் வசூலுக்கு வந்தவர்கள் மேல் தான் கொண்ட கோபம், எதிர்ப்பு, நியாயவாதப் பேச்சுக்கள் முடிவான அடிதடி சண்டை எல்லாமே இப்போது இவ்வளவு தூரம் நஷ்டப்பட்டுவிட்ட பின் முத்தக்காளுக்கு எரிச்சலூட்டியிருக்கலாம்.

ஓர் ஆறுதலுக்காகவாவது அவளை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துத்தான் ஆகவேண்டும். பார்க்காவிட்டால் அது இன்னும் தப்பாகப்படும். பார்க்கும்போது அவள் படலாம் என்று எதிர்பார்க்கப் பெறுகிற கோபத்தையும், எரிச்சலையும், வெறுப்பையும் தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும். சித்ராவே அவனைக் கேட்டான்:

“பாவம்! இது இத்தனை பெரிய கலவரத்திலும் நஷ்டத்திலும் கொண்டு போய்விடும் என்று அவங்க எதிர்பார்த் திருக்கவே மாட்டாங்க.”

“பாவிகள்! ஒரு வாரத்துக்கு மெஸ் நடக்க முடியாதபடி பண்ணி விட்டார்கள்.”

“நீங்கள் தலையிடாம விட்டிருந்தா வசூலுக்கு வந்தவங்களுக்கு ஏதாவது பணம் கொடுத்துச் சமாளிச்சிருப்பாங்கேளா என்னவோ?”

தன் மனத்தில் ஓடுகிறாற் போன்ற அதே நினைவுகள் அவள் மனத்திலும் ஓடுவது பூமிக்கு அப்போது புரிந்தது. லாபம் தருகிற தோல்வியைக் கூடப் பாமர மனிதர்கள் வரவேற்று மகிழ்ந்து விடுவார்கள். நஷ்டம் தருகிற வெற்றியை வரவேற்க மாட்டார்கள் என்பதை அவன் அறிவான்.

நஷ்டம் தந்து விட்ட, நஷ்டம் தான் தரும் என்று நிரூபித்து விட்ட அந்த அநாவசியமான வெற்றி முத்தக்காளுக்குப் பெரும் அதிருப்தியைத்தான் அளித்திருக்க முடியும். அதில் சந்தேகமில்லை. ஆஸ்பத்திரி வார்டில் முத்தக்காள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள்.. மண்டையில் கட்டுப் போட்டிருந்தது. இரண்டு முழங்கைகளாலும், தலைக்கு முட்டுக் கொடுத்தபடி கவலையே வடிவமாக இருந்தாள். சித்ராவும், பூமியும் படுக்கை அருகே வந்து நின்றதைக் கண்ட பின்னும் ஓரிரு விநாடிகள் எதுவும் பேசத் தோன்றாமலோ அல்லது வேண்டுமென்றே அவள் முகத்தைக் திருப்பிக் கொண்டாற் போலிருந்தது .

பூமிக்கோ சித்ராவுக்கோ முத்தக்காளின் போக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ஏற்கெனவே அவர்கள் எதிர் பார்த்ததுதான். பாமரர்களும், பெரும்பாலான நடுத்தர மக்களும் தங்களைக் காட்டிலும் வலிமையுள்ள தீயவர்களை நேரடியாக எதிர்த்துக் கொள்வதை விட அவர்களுக்கு விட்டுக் கொடுத்துத் தன்னைக் கட்டிக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்வதையே விரும்புவார்கள் என்பது பூமி ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். பூமிதான் பேச்சைத் தொடங்கினான்.

“நடந்து நடந்துவிட்டது, கவலைப்படாதீர்கள். உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.”

“பார்க்கிறத்துக்கு இனிமே என்ன மிச்சமிருக்குத் தம்பீ? அதான் எல்லாம் போயாச்சே”

முத்தக்காளின் குரலில் கோபமும் அதனோடு கலந்த விரக்தியும் இணைந்திருப்பது தெரிந்தது. ஏற்கனவே கணவனை இழந்ததால் ஏற்பட்டிருந்த விரக்தி இப்போது இன்னும் அதிகரித்திருப்பதாகத் தெரிந்தது.

“பாத்திரம் பண்டம், அம்மி, உரல் எல்லாத்தையுமே அடிச்சு நொறுக்கிப் போட்டுட்டாங்களே! எப்புடியப்பா இனிமே மெஸ்ஸை நடத்துவேன்? நான் தனிக்கட்டை. யார் உதவியோட எதை முதலாப் போட்டு இதை எல்லாம் சரிப்படுத்துவேன்?” என்று அழத் தொடங்கிவிட்ட முத்தக்காளை எப்படி ஆறுதல் கூறி அமைதியடையச் செய்வதென்று புரியாமல் அவர்கள் தயங்கினார்கள்.

முத்தக்காள் மிகவும் அதிர்ச்சியடைந்துதான் போயிருந்தாள். அவளிடம் பேசி ஆறுதல் கூறிக் கொண்டிருப்பதைவிடச் செயலில் காட்டுவதுதான் சரி என்று தோன்றியது பூமிக்கு. தன்மேல் அவளுக்கு நம்பிக்கையும் பற்றும் வருவதற்கு அது ஒன்றுதான் வழி என்பது தெரிந்தது.

சம்பிரதாயமாக’ உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு முத்தக்காளிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். சித்ரா பள்ளிக்குப் போக வேண்டிய நேரம் ஆகியிருந்தது. பஸ் பிடித்துப் போனால் சரியாயிருக்கும் என்றாள் அவள். அரை நாள் லீவுதான் போட்டிருக்கோம் என்பது வேறு நினைவுக்கு வந்தது அவளுக்கு.

“என் கூட வீடு வரை வந்தால் ஆட்டோவிலேயே கொண்டு போய் விட்டு விடலாம்” என்றான் பூமி. அவள் பஸ்ஸிலேயே போய்க் கொள்வதாகச் சொல்லி விட்டாள். அவளை அனுப்பி விட்டுப் பூமி மைலாப்பூர் சென்றான். ஆட்டோவைக் கன்னையன் மூலம் வேறு ஓர் ஆள் ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்து அனுப்பி விட்டு வீட்டுக்குள் சென்று தன்னுடைய சேவிங்ஸ் பாஸ் புத்தகத்தை எடுத்துக் கொண்டு லஸ் முனையிலிருந்த பாங்கின் அந்தப் பகுதிக் கிளைக்குச் சென்றான்.

பாங்க் கிளையலுவலகத்தின் முகப்பில் புரட்சிமித்திரனின் படகுக் கார் நின்று கொண்டிருந்தது. கார் ஏ.ஸி செய்யப் பட்டு மங்கலான குளிர்ச்சிக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.

பூமி காரைக் கடந்து மேலே பாங்கின் வாசலுக்காகப் படியேறியபோது கையில் ஒரு கற்றை புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக்களுடன் புரட்சிமித்திரன் படியிறங்கி வந்து கொண்டிருந்தான்.

பூமியை எதிரே பார்த்ததும் அவன் பிடித்துக்கொண்டு விட்டான்:

“நான் கொடுத்த இதழ்களைப் படிச்சீங்களா? என் புதுக்கவிதைங்க எல்லாம் எப்பிடி? உங்களைப் பார்க்கவே முடியலியே? லெட்டராவது போடுவீங்கன்னு பார்த்தேன், அதுவும் போடலே...”

அதைக் கேட்டுப் பூமிக்கு எரிச்சலாயிருந்தது. நிஜமாகவே பிரச்னைகளை எதிர்கொண்டு சமாளித்துக்கொண்டு திணறும் தன் போன்ற கடின உழைப்பாளிகளிடம் பிரச்னைகளைப் பற்றிய பிரசங்கங்களிலும் கவிதைகளிலும் காலம் கடத்துகிற புரட்சிமித்திரனைப் போன்ற தளுக்குப் பேர்வழிகள் இப்படி விசாரிப்பது பற்றிய போலித்தனமே பூமிக்குக் கோப மூட்டியது.

ஒரு தீவிரமான புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் முன்வை அதற்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் புரட்சியைப் பற்றி வரட்டுப் பிரசங்கம் பண்ணிக் கொண்டு நிற்கிறவனை முதலில் ஒழிக்க வேண்டும். புரட்சிமித்திரனும் அப்படிப்பட்டவர்களில் ஒருவனாகவே பூமிக்குத் தோன்றினான்.

“இன்றைய கவிதைகளை வெறும் காகிதங்களில் எழுத முடியாது. வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞனின் கண்ணிரையும், வரதட்சிணைக் கொடுமையால் கன்னி கழியாமலே நிற்கும் பெண்ணின் துயரத்தையும் உழைப்பவர்களின் சிரமங்களையும் சேர்த்துப் பார்த்தலே இன்றைய கவிதை எனக்குப் படிக்கக் கிடைத்து விடும்! அதைவிட அதிகமாக எதை உமது இதழ்களில் நான் படிக்கப் போகிறேன்?”

“அப்படியில்லை! என் இதழ்களை நீங்கள் படித்தே ஆக வேண்டும். இதோ அடுத்த இதழுக்காகவே, தயாரிப்புச் செலவுக்குப் பணம் எடுத்துக் கொண்டு போகிறேன்.”

“எதற்குப் பணத்தை வீணாக்குகிறீர்கள்? புசித்தவர்களுக்கு ஏட்டுச் சுரைக்காயாக வழங்குவதைவிடப் பணமாகவே கொடுத்துவிடலாம்.”

“சரி! அதிருக்கட்டும்! சித்ராவைச் சமீபத்தில் பார்த்தீங்களா?”

“ஏன்? சற்று முன்பு கூடப் பார்த்தேன். காலையிலிருந்து இதுவரை என்னோடு பேசிக் கொண்டிருந்து விட்டுச் சிறிது நேரத்துக்கு முன்புதான் பள்ளிக்குப் புறப்பட்டுப் போகிறாள்.”

இதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் ஒரு தினுசாகப் பூமியை முறைத்துப் பார்த்து விட்டுப் போய்ச் சேர்ந்தான். புரட்சிமித்திரன். பூமி பாங்குக்குள் சென்றான். தன் கணக்கிலிருந்து இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தான். நேரே மெஸ்ஸுக்குப் போனான், வேலையாட்களை ஒன்று சேர்த்து மறுநாள் காலையிலேயே மெஸ்ஸில் அடுப்புப் புகைய வேண்டும் என்ற பிடிவாதத்துடன் சீரமைப்புப் பணிகளில் இறங்கினான்.

முத்தக்காள் மேல் அநுதாபமுள்ள வேறு பல டிரைவர்களும் உடலுழைப்பை இலவசமாகத் தர முன் வந்தனர். புதிய சாமான்கள் வாங்கப்பட்டு ஸ்டோர் ரூம் நிறைக்கப்பட்டது. இடிந்த பகுதிகள் இரவோடிரவாகச் சரி செய்யப்பட்டன. வாசலில் மறுநாள் காலையிலிருந்து மெஸ் வழக்கம் போல் நடக்கும் என்று பெரிதாக போர்டு எழுதி வைக்கப்பட்டது. புதுப்பானைகள், சட்டிகள், பாத்திரங்கள் வாங்கப்பட்டன.

பூமி அன்றிரவு வீட்டுக்குப் போகவே இல்லை. மாவரைப்பவரைத் தூண்டி வேலைகளைக் கவனிக்கச் செய்தான். உடைந்த மேஜை நாற்காலிகளில் செப்பஞ் செய்ய முடிந்தவற்றைச் செப்பஞ் செய்தும் அறவே உடைந்து போனவற்றிற்குப் பதிலாகப் புதிது வாங்கிப் போட்டும் ஏற்பாடுகள் செய்தான்.

அந்த மெஸ்ஸின் வாழ்க்கையோடு தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்த பலர் பூமியோடு தோளோடு தோள் நின்று ஒத்துழைத்தனர். முத்தக்காள் என்ற தனி ஒருத்திக்கு வந்த துயரமாக அதை அவர்கள் நினைக்கவில்லை. தங்களுக்கே வந்த துயரமாக’ எண்ணிச் சீர் செய்தனர். புதிய ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினர்.

எல்லா வேலைகளும் முடிந்த போது அதிகாலை மூன்று மணி. ஒரு மணி நேரம் கண்ணயர முடிந்தது. ஆனால் அதிக உழைப்பின் காரணமாக உறக்க வேளை தப்பிய பின் அவர்களுக்கு உறக்கமே வரவில்லை. டாக்ஸி ஆட்டோ டிரைவர்களுக்குப் பயன்படுவதாக இருந்ததினால் காலை ஐந்து மணிக்கே மெஸ்ஸில் கலகலப்பு ஆரம்பமாகி விட்டது.

பூமி கல்லாவில் உட்கார்ந்து வியாபாரம் செய்தான். மற்றவர்களோடு பரிமாறவும் செய்தான். பார்சல் கட்டினான். அன்று பிற்பகல் முத்தக்காள் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகித் திரும்பிய போது மெஸ் இருந்த நிலைமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள்.

ரிக்க்ஷாவிலிருந்து இறங்கித் தன் கண்களையே நம்ப முடியாமல் “என்ன தம்பி இதெல்லாம்? அதுக்குள்ளாற எப்பிடி... இதெல்லாம் செய்ய முடிஞ்சுது?” என்று வியந்த முத்தக்காளை மலர்ந்த முகத்தோடு வரவேற்றுக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றான் பூமி..

முத்தக்காளுக்கு மெஸ்ஸிலேயே பின் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய அறைதான் இருப்பிடம். அங்கே அழைத்துச் சென்று கயிற்றுக் கட்டிலில் விரிப்பு விரித்துத் தலையணை போட்டு அவளைப் படுக்கச் செய்தான் பூமி.

“தம்பீ!...” என்று எதையோ உணர்ச்சி வசப்பட்டுச் சொல்ல ஆரம்பித்த அவளை “ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்! அப்புறம் பேசலாம்” என்று கூறி விட்டு வேலைகளைக் கவனிப் பதற்காகச் சென்றான் பூமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/12&oldid=1028940" இலிருந்து மீள்விக்கப்பட்டது