உள்ளடக்கத்துக்குச் செல்

சாயங்கால மேகங்கள்/17

விக்கிமூலம் இலிருந்து

17

இரத்தத் திமிரைக் காட்டுவதற்காக உடல் வலிமையைப் பயன்படுத்துவது வன்முறை. நியாயமான காரணத்துக்காகப் பயன்படுத்துவது தற்காப்பு.

சித்ரா அவனுடைய அந்தத் தன்மான உணர்வை மிகவும் இரசித்தாள். தீமைக்கும் அநீதிக்கும் அடங்காத மடங்காத அந்தக் கம்பீரமான ஆண்மை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அவள் விரும்பினாள்.

தான் எப்படி மற்றவர்களிடம் நியாயமாக நடந்து கொண்டானோ அப்படி மற்றவர்களும் தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தான் பூமி. ஆனால் பல சமயங்களில் பல நியாயங்கள் ஒரு வழிப்பாதையாகவே இருந்தன. உடல் வலிமையாலும், மன வலிமையாலும் சேர்த்தே தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் எதிர்த்தான் பூமி.

அதனால் முத்தக்காள் மெஸ்ஸின் வளர்ச்சிக்கு ஏற்பட இருந்த பல இடையூறுகள் தவிர்க்கப்பட்டன. அந்த மெஸ்ஸுக்கு அவன் ஒரு பாதுகாப்பாக இருந்தான். அது பல படிகள் மேலே வளரக் காரணமாயிருந்தான்.

அந்த மெஸ்ஸுக்கு வாடிக்கையாளர்களான சில டாக்ஸி டிரைவர்கள் ஒரு புதிய பிரச்னையோடு பூமியை அணுகி அவன் உதவியை நாடினர். புதுவிதமான திருட்டுக்களும், கொள்ளைகளும் நகரில் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன.

ஓர் ஏழை டாக்ஸி டிரைவருக்கு நேர்ந்த அநுபவம் எல்லாருடைய கண்களையும் திறந்துவிடப் போதுமானதாயிருந்தது.

முத்துக்காளை என்ற பெயரையுடைய அந்த டாக்ஸி டிரைவர் அன்று பகல் முழுவதும் பல சவாரிகளுக்கு அலைந்து சம்பாதித்த பணத்தோடு இரவு பத்துவரை ஓட்டலாம் என்றெண்ணி மவுண்ட்ரோடு புகாரி வாசலில் டாக்ஸியோடு காத்திருந்தார். காக்கிபேண்ட் பாக்கெட்டில் மீட்டர் வசூல் பணம் இரு நூறு ரூபாய்க்கு மேல் இருந்தது. அன்று நல்ல முகூர்த்த நாள் சரியான வசூல்.

இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு மூன்று இளைஞர்கள் வந்து பல்லாவரத்துக்கு அவசரமாகப் போய்த் திரும்ப வேண்டும் என்றும் மீட்டருக்கு மேல் என்ன ஆனாலும் தருகிறோம் என்றும் கூறி வற்புறுத்தினார்கள். சவாரிகள் முடிந்து டாக்ஸி உரிமையாளரான சேட்டிடம் போய் மீட்டர் கணக்குத் தீர்த்துப் பணம் கொடுத்து விட்டுத் தனக்குச் சேர வேண்டிய தொகையை வாங்கிக்கொண்டு வீடு திரும்ப வேண்டிய நேரம் ஆகி விட்டது என்றாலும் குழந்தை குட்டிக்காரரான முத்துக்காளை கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பல்லாவரம் சவாரிக்கு இசைந்தார். அந்தச் சவாரியில் மோசடி எதுவும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.

அந்த இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் போல் தோன்றினர். அவர்கள் டிரஸ் செய்து கொண்டிருந்த விதம் எதுவுமே சந்தேகத்துக்கு உரியவையாகப்படவில்லை. அந்த அகாலத்தில் பல்லாவரம் ஜி. எஸ். டி. மெயின் ரோடிலிருந்து ஆள் நடமாட்டமற்ற ஓர் ஒதுக்குப்புறமான பகுதிக்கு டாக்ஸியைச் செலுத்தச் சொல்லி அவர்கள் கூறியபோதுகூட முத்துக்காலைக்குத் தவறாகப் படவில்லை.

டாக்ஸி மக்கள் புழக்கமில்லாத ஒரு மேட்டருகே சென்றபோது அவர்கள் அதை நிறுத்தச் சொன்னார்கள்.

மூவரில் ஒருவன் என்ஜினை ஆஃப் செய்து சாவியைப் பிடுங்கிக் கொண்டான். சற்ருெருவன் பின்பக்கமிருந்து கழுத்தில் உரசுகிறாற்போல ஒரு கத்தியைக் காட்டினான், மூன்றாமவன் “ஒழுங்காக உயிர் தப்ப வேண்டுமானால் பணத்தை எடு” என்று மிரட்டினான்.

முத்துக்காளை தயங்கவே மிரட்டியவன் தானே சோதனை போட்டு எடுக்க முற்பட்டான். இதை அறவே எதிர்பாராத முத்துக்காளை துணுக்குற்று இடிவிழுந்ததுபோல் இருந்தான். பணத்தை எடுத்துக் கொண்டு முன் பக்க டயர்கள் இரண்டிலும் காற்றைப் பிடுங்கிவிட்ட பின் அந்த இளைஞர்கள் ஓடி விட்டனர். முத்துக்காளை கூப்பாடு போடாமல் இருக்க வாயில் துணியைத் திணித்துப் பின் கைகளையும் கட்டிப் போட்டு விட்டுப் போயிருந்தார்கள் அவர்கள். மறு நாள் செய்தி பத்திரிகைகளில் பெரியதாக வெளியாயிற்று.

டாக்ஸி-ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரிய பரபரப்பை உண்டுபண்ணியிருந்தது. இரவு நேரங்களில் இரண்டு மூன்று பேர்களாக வந்து சவாரி கூப்பிடுகிறவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கண்டு பிடிப்பது சிரமமாயிருந்தது. நம்பிச் சவாரி, போகவும் முடியவில்லை. சந்தேகப்பட்டே எல்லாச் சவாரிகளையும் விட முடியவும் இல்லை. இந்தப் புதுவிதமான தொல்லையைச் சமாளிப்பதற்காக டாக்ஸி-ஆட்டோ டிரைவர்களின் அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.

பூமி தற்போது ஆட்டோ ஓட்டவில்லை என்றாலும் சாப்பிடுவதற்காக மெஸ்ஸுக்கு வந்த டிரைவர்கள் சிலர் பூமியை அந்தக் கூட்டத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்றுப் பூமியும் அங்கே போயிருந்தான். எல்லாரும் அவரவர்களுடைய யோசனைகளைச் சொன்னார்கள்.

பூமிக்கு மிகவும் வேண்டிய நண்பன் ஒருவன் நாலைந்து பேர்களை ஒருவனாக எதிர்த்து நின்று சமாளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆட்டோ டாக்ஸி டிரைவரும் கராத்தே ஜூடோ, குங்ஃபூ ஆகிய நவீன தற்காப்புப் போர்முறைகளைக் கற்றாக வேண்டும் என்றும், அதற்குப் பூமி உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினான். அந்த யோசனை எல்லாராலும் கரகோஷம் செய்து வரவேற்கப்பட்டது. குறிப்பாக இளம்வயது டிரைவர்கள் அந்த யோசனையை உற்சாகமாக வரவேற்றார்கள்.

“இந்த யோசனையை ஏற்கனவே என் நண்பர்களான டிரைவர்கள் சில பேருக்கு நானே தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறேன். டாக்ஸி-ஆட்டோ டிரைவர்கள் சவாரி செய்பவர்களிடம் பணம் பறிக்கிறார்கள் என்ற பழைய மாமூலான புகார் மறைந்து சவாரி செய்பவர்கள் தந்திரமாக டாக்ஸி ஆட்டோ டிரைவர்களை மறைவான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களைத் தட்டிப் பணம் பறிப்பது ஆரம்பமாகியிருக்கிறது. வலுச் சண்டைக்குப் போகக் கூடாது? வந்த சண்டையை விடவும் கூடாது. தற்காப்பு என்பது மிகமிக அவசியமானது. தற்காப்பு ஏற்பாடு செய்து கொள்ளாமல் இனிமேல் இந்தத் தொழிலில் காலந் தள்ள முடியாது” என்று பூமியும் அந்த யோசனையை ஆதரித்தான்.

அதன் விளைவாகக் காலையிலும் மாலையிலும் டாக்ஸி-ஆட்டோ தொழிலாளர்கள் சிலருக்கு அந்த வட்டாரத்தில் அவர்களே தேர்தெடுத்திருந்த ஒரு மெக்கானிக் ஷெட்டின் பின்புறமுள்ள பகுதியில் பூமி கராத்தே கற்றுத் தர வேண்டியதாயிற்று.

பூமியின் வேலைக்கு இடையூறு இல்லாமல் மெஸ்ஸிலேயே ஒரு மூலையில் கற்றுத் தருமாறுதான் அவர்கள் கூறினார்கள். மெஸ்ஸில் அவ்வளவு இடமில்லாததால் பூமிதான் அவர்களை வேறு இடம் பார்க்குமாறு சொல்லியிருந்தான். மெஸ் அதற்குச் சரியான இடமில்லை என்பது அவன் கருத்தாயிருந்தது. அவனிடம் கற்றுக் கொண்டவர்களுக்கு முதலில் வன்முறைக்கும், தற்காப்புக்கும் உள்ள வேறுபாட்டை அவன் விளக்கிக் கூற வேண்டியிருந்தது. இரண்டும் ஒன்று என்றே அவர்களில் பலர் எண்ணிக் கொண்டிருந்தனர்.

இரத்தத் திமிரைக் காட்டுவதற்காக உடன்வலிமையைப் பயன்படுத்துவது வன்முறை. நியாம்மான காரணத்துக்காக உடல் வலிமையைப் பயன்படுத்துவது தற்காப்பு தற்காப்பையும் வன்முறையையும் இனம் பிரித்துப் புரிந்து கொள்கிற அளவு கூட பலருக்குச் சிந்தனை வளர்ந்திருக்கவில்லை என்பது அவர்களிடம் பேசியபோது அவனுக்குப் புரிந்தது. லெண்டிங் லைப்ரரி பரமசிவம் போலப் பாரதியாரையும் திரு.வி.க.வைப் பற்றியும் உரையாடி விவாதிக்க முடிந்த அறிவுத் தரமுள்ள நண்பர்களோடு பழகும் போதும், மற்றவர்களிடம் பழகும் போதுதான் இரண்டு விதமான எல்லைகளில் நின்று பழக வேண்டியிருப்பதைப் பூமி உணர்ந்திருந்தான். வன்முறைக்கும், தற்காப்புக்கும் உள்ள வேறுபாட்டை சக டிரைவர்களுக்கு விளக்கும் போதும் அந்த நிலையைப் பூமி தெரிந்து கொண்டே அதற்கு ஏற்ப அவர்களிடம் பேச வேண்டி யிருந்தது.

பசு மாட்டுக்குக் கொம்பு இருக்கிறது. அது பெரும்பாலும் அதைத் தற்காப்புக்குப் பயன்படுத்துகிறதே ஒழியத் தன் வலிமையை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதேயில்லை. தற்காப்புக்கும் வன்முறைக்கும் உள்ள வேறுபாடு பகுத்தறியும் திறனே இல்லாத மிருகங்களுக்குக் கூடப் புரிந்திருக்கிறார் போலத் தெரிகிறது. ஆனால் பகுத்தறிவுள்ளவர்களாகச் சொல்லிக் கொள்ளும் மனிதர்களுக்குத்தான் அது புரியவில்லை. உறைக்கவில்லை.

இங்கு வன்முறையை வலிமை என்று நினைக்கிறார்கள். தன்னடக்கத்தைக் கையாலாகாத்தனம் என்று நினைக்கிறார்கள். கையாலாகாதனத்தைத் தன்னடக்கம் என்று நினைக்கிறார்கள், ஆணவத்தைத் தன்மானம் என்றும் தன்மானத்தை ஆணவம் என்றும் மாற்றிப் புரிந்து கொள்கிறார்கள். புரிய வைக்கிறார்கள்.

தான் பழகுகிற சந்திக்கிற மனிதர்களிடையே கூட இந்த முரண்பாடுகளைப் பூமி அடிக்கடி கண்டான்.

அவன் டாக்ஸி-ஆட்டோ டிரைவர்களுக்குக் கராத்தே கற்பிக்கத் தொடங்கி ஒரு மாத காலம் ஓடிவிட்டது. அவன் காலை மாலை வேளைகளில் எந்த நேரம் முதல் எந்த நேரம் முடிய அந்த வேலையில் ஈடுபட்டிருப்பான் என்பதுகூட அவனுக்கு வேண்டியவர்களுக்கு அத்துபடியாகிவிட்டது.

ஒருநாள் மாலை அவன் டிரைவர்களுக்குக் கராத்தே முறைகளையும் பாணிகளையும் கற்பித்துக் கொண்டிருந்தபோது சித்ராவும் அவள் தோழி தேவகியும் அவசரமாக அவனைத் தேடி அங்கே வந்தார்கள். பூமி அவர்களை அங்கே அந்த வேளையில் எதிர்பார்க்காததால் ஆச்சரிய மடைந்தான்.

“அவசரமாக உங்கள் உதவி தேவை! ஓர் ஏழைக் குடும்பத்துப் பெண்ணின் மானத்தைக் காப்பதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்” என்று பதற்றமான குரலில் அவனிடம் வேண்டினாள் சித்ரா.

“இங்கே போலீஸ், நீதி, சட்டம் எதுவுமே ஏழைகளின் மானத்தைக் காப்பாற்றாது போலிருக்கிறது என்று தேவகியும் அவனை நோக்கிக் கூறினாள்.

“சற்று விவரமாகத்தான் சொல்லுங்களேன்” என்றான் பூமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/17&oldid=1028945" இலிருந்து மீள்விக்கப்பட்டது