உள்ளடக்கத்துக்குச் செல்

சாயங்கால மேகங்கள்/18

விக்கிமூலம் இலிருந்து



18

விஷப் பாம்பின் பிளந்த நாக்கைப் போல அதிகார பலமும், பணபலமுமே இன்று இரண்டு கொடிய நச்சு முனைகளாகி எந்த நியாயத்தையும் தீண்டி அழித்து விட முடிகிறது.


“எல்லாம் விவரமாகச் சொல்லி உங்களை அழைத்துப் போக வேண்டும் என்றுதான் வந்திருக்கிறோம். நீங்கள் வகுப்பை முடித்துவிட்டு அவர்களை எல்லாம் அனுப்பியபின் நான் விவரம் சொல்கிறேன்” என்றாள் தேவகி.

சித்ராவும் தேவகியும் அவன் முடித்துவிட்டு வருகிறவரை பொறுமையாகக் காத்திருந்தார்கள். ஏறக்குறைய அரை மணி நோத்துக்கு மேல் காத்திருந்தாக வேண்டியிருந்தது. கராத்தே உடையில் மின்னல் வீச்சாகப் பாய்ந்து பூமி அவர் அவர்களுக்குக் கற்பிப்பதைக் கண்கள் அகல வியப்போடு பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் சித்ரா. இரும்பாகவும், உருக்காகவும் இறுகியிருந்த அவன் உடல், திரும்பியும் பாய்ந்தும் நிமிர்ந்தும், வியர்வை மின்ன இயங்கிய துரிதகதி அற்புத மாயிருந்தது. மின்னலாகச் சுழன்றான் அவன்.

கற்றுக் கொண்டிருந்தவர்களில் இரண்டொருவர் மந்த புத்தியினால் நுட்பமான அந்தத் துரிதகதியை மட்டும் உடனே கற்க முடியாமல் திணறினார்கள். உடல் வலிமையோடு மட்டுமே தொடர்புடைய கலை என்றாலும் கராத்தே, குங்ஃபூ, ஜூடோ ஆகிய கலைகளுக்கும் மதி நுட்பத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது. மதிநுட்பமும் விரைந்துணரும் தன்மையும் இல்லாமல் அந்தக் கலைகளில் தேறவே முடியாது என்று தோன்றியது. காந்தத்தைப் போல் எதிர்ப்பட்ட பொருளை விரைந்து உணர்ந்து பற்றிக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாமல் இந்தக் கலைகளில் எதிலும் வெற்றி பெறமுடியாது என்பது உறுதியாகத் தெரிந்தது அவர்களுக்கு.

உடனே உணர்தல், உடனே தீர்மானித்தல், உடனே செயல்படுதல் என்ற தன்மைகளே இந்தக் கலையில் திறமையை நிர்ணயிக்கின்றன என்பதையும் அறிய முடிந்தது. அறிவுடனும் மதிநுட்பத்துடனும் சம்மந்தப்படாது தோன்றியபடி வலிமை யைப் பயன்படுத்தும் வேறு யுத்தக் கலைகள் பல இருக்கின்றன. கராத்தேயோ, குங்ஃபூவோ அப்படி இல்லை என்பதை அதன் துரிதகதியே உணர்த்தியது. வலிமையும் மதிநுட்பமும் கலந்தால்தான் இதில் வெற்றி என்ற அளவில் இவை இருந்தன. மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது மிகவும் மந்த உணர்வுடன் இருந்த மாணவனிடம் பூமியே இப்படிச் சொல்லிக் கண்டித்ததை அவர்கள் கேட்டார்கள்.

உள்ளே போய்ப் பயிற்சி மாணவர்களை அனுப்பிவிட்டுக் கராத்தே உடைகளை மாற்றி வழக்கமான உடைகளை அணிந்து வந்தான் பூமி. பேச வேண்டியதை வெளியே போய்ப் பேசலாம் என்பது போல் அவர்களையும் உடனழைத்துக் கொண்டு அங்கிருந்து பூமி வெளியேறினான்.

அந்த இடத்திற்கு மிக அருகிலிருந்த கார்ப்பரேஷன் பூங்கா ஒன்றில் போய் அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். முத்தக்காளை மட்டும் தனியே விட்டுவிட்டு வந்திருப்பதால் பூமி உடனே மெஸ் பக்கம் போயாக வேண்டுமென்று அவசரப்பட்டான். தேவகியை அவனுக்கு விவரங்களைச் சொல்லுமாறு அவசரப்படுத்தினாள் சித்ரா. தேவகி சொல்லத் தொடங்கினாள்:

எங்க வீட்டுப் பக்கத்திலே ஒரு ஸ்டோர்லே எனக்கு ரொம்பவும் வேண்டிய ஏழைக் குடும்பம் ஒண்ணு ஒண்டுக்குடித்தனம் இருக்கு. வீட்டிலே ஆண் பிள்ளைத் துணை கிடையாது. விதவையான அம்மா வேலைபார்த்துப் பெண்ணைப் படிக்க வைக்கிறாள். நடுத்தர வயதிலே கணவனை இழந்து ஒரே ஒரு பெண்ணுடன் அநாதரவாக வாழும் அந்த அம்மாள், தன் சொந்த முயற்சியாலே டைப்ரைட்டிங் எல்லாம் படித்து ஒரு கம்பெனி வேலையைத் தேடிக்கொண்டு படிப்படியா முன்னேறி இன்று மானேஜருக்கு ஸ்டெனோவாக இருக்கிறாள்.

மானமாகத் தன் வருமானத்திலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கிற அந்தக் குடும்பத் தலைவிக்கு இப்போ ஒருபுதுச் சோதனை வந்திருக்கு. அவளோட பெண் காலேஜிலே பி. ஏ. முதல் வருஷம் படிக்கிறா. ஆளும் கட்சியில் செல்வாக்குள்ள ஒரு பார்லிமெண்ட் மெம்பரோட மகன் ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்குத் தாங்க முடியாத தொல்லை கொடுக்கிறான். அந்தப் பெண் கொஞ்சம் அழகு அவ வீட்டை விட்டுக் காலேஜுக்குக் கிளம்பறப்போ காலேஜிலிருந்து வீடு திரும்பறப்போ விடாம அவளைத் துரத்தறான். இரட்டை அர்த்தமுள்ள சினிமாப் பாட்டை எல்லாம் பாடிக் கூப்பிடறான். தைரியமா வீட்டைத் தேடி வந்து “உனக்குப் பூ வாங்கிட்டு வந்திருக்கேன். புடவை வாங்கிட்டு வந்திருக்கேன்” னு நாலு பேர் முன்னாலே எடுத்து நீட்றான். போலீஸில் கம்ப்ளெய்ண்ட் கொடுத்துப் பார்த்தாங்க போலீஸ் ஏன்னே கேட்கல. ‘பார்லி மெண்ட் மெம்பரோட மகன்’ கிறதாலே மத்தவங்க தலையிடறதுக்கே பயப்படறாங்க...இந்தக் குடும்பத்துக்கு மானம் போகுது.

“அவன் பூவும், புடவையும் வாங்கிக் கொண்டு வந்து நீட்டற தைரியத்தையும், தோரணையையும் பார்த்தால் ‘இவனை எங்களுக்குப் பிடிக்கலே. இவனோட எங்களுக்குச் சம்பந்தம் இல்லே. இவன் வர்றதைப் போறதை நாங்க வெறுக்கிறோம்னு’ அம்மாவும், பொண்ணும் சத்தியம் பண்ணினாக்கூட மத்தவங்க நம்பமாட்டாங்க போலிருக்கு.”

“மூஞ்சியிலே காறித் துப்பிச் சீ போடா நாயே என்று சொல்லித் துரத்துவதுதானே?”

அந்தப் பையனுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமே இல்லீங்க...நாமஎன்ன சொன்னாலும், எப்படித்திட்டினாலும் அவன் பழையபடி வந்து பல்லை இளிச்சிக்கிட்டுத் தான் நிக்கறான்.”

“அந்தப் பையனின் தந்தையைச் சந்தித்து மகனைக் கண்டிக்கச் சொல்லிப் பேசிப் பார்ப்பது தானே? அப்போதாவது பையன் திருந்தலாமே.

பெண்ணின் அம்மாவும், நானும் வெகு சிரமப்பட்டு முயன்று அவரைச் சந்தித்தோம். அவரு டெல்லியிலும், மெட்ராஸிலுமா மாறி மாறி இருக்கிறதால பார்க்க முடியாதுன்னு தட்டிக் கழிச்சாங்க. கடைசியா எப்படியோ பார்த்துப் பேச முடிஞ்சுது. விஷயத்தை நாகரீகமா எடுத்துச் சொன்னோம். அவர் எல்லாத்தையும் கேட்டபின் ‘கூலா’ “என்ன செய்யறதும்மா; இந்தக் காலத்துப் பசங்க எல்லாருமே சின்ன வயசிலே இப்படித்தான் ஜாலியா அலையறாங்க... நாம் சொன்னா எங்க கேட்கப் போருங்க... உங்களுக்கு நான் என்ன செய்யணுமோ கூசாமக் கேளுங்க. பணம் கஷ்டம்னாக்கூட நீங்க சொல்லலாம். என்னாலே முடிஞ்சதைச் செய்ய முடியும்” என்பதாக ரேட் பேச ஆரம்பிப்பதுபோல் அவர் சொல்லிவிட்டார்.

“எங்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கஷ்டப்படும் ஏழைப் பெண்கள் எந்த ரேட்டுக்கும் கிடைப்பார்கள் என்று பார்க்கிற அப்பனிடம் போய் மகனின் இழி செயலுக்கு நியாயம் தேடமுயன்ற எங்கள் அறியாமைக்காக வருத்தப்பட்டுக் கொண்டே திரும்பி வந்து சேர்ந்தோம். உங்களிடம் சொல்லி அந்தப் பையனை எச்சரித்து வைக்கலாம் என்று சித்ரா யோசனை சொன்னாள். அந்தப் பையன் இப்படியே தொடர்ந்து தேடி வந்துகொண்டிருந்தால் பின்னால் தன் பெண்ணுக்கு எந்த நல்ல இடத்திலுமே கல்யாணம் ஆகாமற் போய்விடுமோ என்று அந்தம்மா பயப்படறாங்க! வேலையை விட்டு விட்டு இந்த ஊரிலிருந்தே, ஒழித்துக் கொண்டு போய்விடலாம்னு நினைக்கிற அளவுக்குக் கூட மனக்கஷ்டம் வந்தாச்சு அவங்களுக்கு” என்றாள் தேவகி.

இதைக் கேட்டு பூமி பெருமூச்சு விட்டான். பின்பு சொன்னான்,

"விஷப்பாம்பின் பிளந்த நாக்குப் போல அதிகார பலமும், பணபலமுமே இரண்டு கொடிய நச்சு முனைகளாகி எந்த நியாயத்தையும் தீண்டி அழிக்க முடிகிற காலம் இது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனி நான் அந்தப் பையனின் தந்தையைப் பார்த்துப் பேசிப் பயனில்லை. சிறு வயதில் அவர் பையன் ஆசைப்படுகிற விளையாட்டுப் பொம்மையை ஆகிற விலைக்கு வாங்கித் தருவதைப் போல் பெண்ணின் மனத்தையும் இன்று வாங்கித் தரலாம் என்று அவர் நினைக்கிறார் போலிருக்கிறது! நீங்கள் அந்தப் பையன் படிக்கிற கல்லூரி முகவரியைத் தாருங்கள்.”

கல்லூரியின் பெயரைச் சொன்னாள் தேவகி.

“இவர்கள் எல்லாம் அவனைப் பற்றி வர்ணிப்பதிலிருந்து, எப்போதும் அவனைச் சுற்றி ஒரு ரவுடிக் கூட்டம் இருக்கும். போலத் தெரிகிறது” என்று அதுவரை பேசாமலிருந்த சித்ரா குறுக்கிட்டுச் சொன்னாள். அவள் குரலில் கவலை தொனித்தது.

“ரௌடிகளுக்காக நான் பயப்படவில்லை. பரிதாபப்பட மட்டுமே செய்கிறேன்.”

என்று உடனே வெட்டினாற் போலப் பூமியிடமிருந்து பதில் வந்தது.

அந்தப் பெண்ணின் பெயர் என்ன? அவள் தாயின் பெயர் என்ன முதலிய விவரங்களையும் தேவகியிடம் கேட்டுக் குறித்துக் கொண்டான் பூமி. பையனைப் பற்றியும், அவன் தந்தையைப் பற்றியும் கூட மறுபடியும் விசாரித்த பின்,

“இதை நான் சரிப்படுத்த முடியுமா என்று பார்க்கிறேன்” என்று பூமி திடமான குரலில் கூறினான். அவன் அந்த அளவு உறுதி கூறியதே தேவகிக்கு அப்போது மலையளவு ஆறுதலளிப்பதாய் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/18&oldid=1028946" இலிருந்து மீள்விக்கப்பட்டது