சிந்தனையாளன் மாக்கியவெல்லி/நிலையான அரசு ஏன்?
1. நிலையான அரசு ஏன்?
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்று அரசு நடத்துபவனின் கடமையைப் பற்றித் திருவள்ளுவர் கூறினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அரசியல் எப்படியிருக்க வேண்டுமென்று திருவள்ளுவர் சிந்தித்தார். திருவள்ளுவர் தமிழ் நாட்டிலே பிறந்தவர்.
மேல் நாட்டிலே சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் முன்னால் நிலையான அரசியல் எப்படி இருக்க வேண்டுமென்று முதன் முதலாகச் சிந்தித்தவன் நிக்கோலோ மாக்கியவெல்லிதான்.
மாக்கியவெல்லி என்ற பெயரைக் கேட்டவுடன் அரசியல்வாதிகளும் முடிமன்னர்களும் பேய் பிசாசுகளைக் கண்டவர்களைப்போல் அரண்டு போனதுண்டு. மதகுருமார்கள் மாக்கியவெல்லியையே பிசாசு என்று அழைத்ததும் உண்டு. மேனாட்டு மத நூல்களில் பிசாசுக்கு நிக் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாக்கியவெல்லியின் முதல் பெயரான நிக்கோலோ என்பதிலிருந்து தான், அந்தப் பழைய பிசாசு தனக்கு நிக் என்ற பெயரை எடுத்துச் சூட்டிக் கொண்டது என்று வெறுப்புக் கலந்த வேடிக்கையுடன் அவனைப் பற்றிப் பேசிக் கொள்வதுமுண்டு. மாக்கியவெல்லிசம் என்றாலே அரசியல் அயோக்கியத்தனம் அல்லது அரசியல் கொடுமை என்று பொருள் கூறுவோரும் உண்டு.
ஆனால், மாக்கியவெல்லி இவ்வளவு பழிப்புக்கும் ஆளாகும்படி என்ன செய்தான் என்றால், தன் மனத்தில் ஏற்பட்ட கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொன்னான். அவ்வளவுதான்.
மாக்கியவெல்லி, அரசர்கள் கொடுங்கோலர்களாக இருக்க வேண்டுமென்று கூறினான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் இருக்கிறார்கள். அரசர்கள் கொலை கொள்ளைகளை அஞ்சாமல் செய்யவேண்டுமென்று கூறினான் என்று பழிசுமத்துபவர்கள் இருக்கிறார்கள். மாக்கியவெல்லி எந்தச் சந்தர்ப்பத்தில் எதற்காக அப்படிச் சொன்னான் என்பதை ஆராயாமலோ, அல்லாது தெரிந்திருந்தும், அவன்மீது குறை சொல்வதே குறிக்கோளாக அதை மறைத்தோ கூறியவர்களின் வாய்மொழியாகத்தான் இந்த நிந்தனைகள் இருக்க வேண்டும். அவர்கள் கூறுகிறபடி பார்த்தால்,
- கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
- களைகட்டதனொடு நேர்.
என்று கூறிய திருவள்ளுவரும் கூடக் கொடுங்கோன்மையை ஆதரித்ததாகவே எடுத்துக் கொள்ள வேண்டி நேரிடும்.
மாக்கியவெல்லி பல இடங்களில் திருவள்ளுவரின் கருத்துக்கு மாறுபடுகிறான் என்றாலும் அவன் கூறுகின்ற கருத்துக்கள் ராஜதந்திரம் என்ற முறையிலே காலத்தையும் இடத்தையும் நோக்கி வரவேற்க வேண்டியவையாக இருக்கின்றன.
மாக்கியவெல்லியின் நோக்கம் ஒன்றே ஒன்று. அது பயன் நன்மையாக இருக்க வேண்டும். மக்கட்கு நன்மை செய்வதற்காக! அல்லது, மக்கள் நலமாக வாழக் கூடியபடி ஓர் அரசை நிலை நிறுத்துவதற்காக அந்த அரசன் ஆரம்பத்தில் நிலைமைக்குத் தகுந்தாற்போல் எவ்வளவு கொடுஞ் செயல்களை வேண்டுமானாலும் புரியலாம் என்பதேயாகும்.
உலகத்தில் எத்தனையோ அரசாங்கங்கள் எழுந்தன. அவற்றிலே நல்லனவும் தீயனவும் உண்டு. ஆனால் எந்த அரசாங்கமும் நீடித்து நிலைத்து நின்றதில்லை. இதன் காரணங்களைத் தான் மாக்கியவெல்லி ஆராய்ந்தான். அரசாங்கங்கள் அடிக்கடி மாறுவதால் அந்தந்த மக்கள் சமுதாயங்கள் அல்லலுற்றுத் தட்டுத்தடுமாறி ஒரு நிலையான வாழ்வைப் பெற முடியாமல் அலைக்கழித்து சீர்கெட்டு நசித்துப் போகின்றன. இந்த அவலநிலை அடிக்கடி ஏற்படாமல் இருக்க, நிலையான அரசாங்கங்கள் தேவை. அவை குடியரசாயினும் முடியரசாயினும் நிலைத்து நிற்கக் கூடியனவாக இருக்கவேண்டும். அப்படி அவை நிலைத்து நிற்கக் கூடிய வழிவகைகள் யாவை? இதைத்தான் சிந்தித்தான் மாக்கியவெல்லி.
குடியரசு, முடியரசு எதுவாயினும் அது மக்கள் நன்மை கருதும் அரசாக இருக்க வேண்டும்: மக்கள் நன்மை கருதும் அந்த அரசு நிலைத்து நிற்கவேண்டும் என்பதுதான் மாக்கியவெல்லியின் கொள்கை.
அப்படி ஓர் அரசு நிலைத்து நிற்கக் கூடிய வழிவகைகளைச் சிந்தித்துத்தான் அவன் தன் நூல்களிலே நமக்கு விளக்கிக் காட்டியிருக்கிறான்.
ஓர் அரசு நிலைப்பதற்காக ஒரு சிலரைக் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் கொல்வது தவறல்ல என்று குறிப்பிடுகின்றான். இப்படி அவன் துணிச்சலாகத் தன் கருத்தைக் கூறுவது தான் சிலர்க்குப் பிடிக்கவில்லை.
மாக்கியவெல்லியைத் தூற்றிய காலம் மறைந்துவிட்டது. அவன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. ஆனால், இன்று உலகெங்கும் குடியரசாதிக்கம் ஓங்கி வருகின்ற காலமாயிருக்கின்றபடியால், அவனுடைய முடியரசுக் கொள்கைகளை யொருபுறம் ஒதுக்கிவிட்டுக் குடியரசுக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வோமாக.