சிந்தனையாளன் மாக்கியவெல்லி/வாழ்க்கை வரலாறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


2. வாழ்க்கை வரலாறு

ன்னுடைய அரசியல் சிந்தனைகளை வெளியிட்டதன் காரணமாகத் தன் காலத்திலேயில்லாவிட்டாலும், பிற்காலத்திலே அரசியல் உலகிலே ஒரு பரபரப்பை உண்டு பண்ணிய மாக்கியவெல்லி இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவன். 1469-ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதியன்று பிளாரன்ஸ் நகரிலே மாக்கியவெல்லி பிறந்தான். அவன் பிறந்தபோது பிளாரன்ஸ், குடியாட்சி நடைபெற்று வந்த ஒரு நகர ராஜ்யமாக விளங்கியது மாக்கியவெல்லியின் முழுப்பெயர் நிக்கோலோ மாக்கியவெல்லி என்பதாகும். அவன் தந்தையின் பெயர் பெர்னார்டோ மாக்கியவெல்லி.

நிக்கோலோ மாக்கியவெல்லி தன் இளமைப் பருவத்தை எப்படிக் கழித்தான் என்பது தெரியவில்லை. எங்கு படித்தான், எப்படிப்பட்ட கல்வி பெற்றான் என்ற விவரமெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவனுடைய சிந்தனைக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவை, அவன் இளமைப் பருவத்திலே நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகள் தாம் என்று சொல்லலாம். அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சாதாரணமானவையல்ல.

அவற்றில் முதலாவது நிகழ்ச்சி எட்டாவது சார்லசின் தலைமையில் நடந்த பிரெஞ்சுப் படையெடுப்பாகும். ஒரு மிகச் சிறிய படையுடன் நடத்தப்பட்ட படையெடுப்புத்தான் என்றாலும் அது, இத்தாலிய ஆதிக்க முறைகளை, அட்டை வீடுகளைத் தட்டிக் குலைப்பது போல் தட்டுத் தடுமாறிக் குலைந்து போகும்படி செய்து விட்டது. இந்த நிகழ்ச்சி அந்த இளம் அரசியல்வாதியை அதிகார சக்தியின் அடிப்புறத்தை உற்று நோக்கும்படி செய்தது.

மற்றொரு நிகழ்ச்சி சாவனரோலாவின் உயர்ச்சியும் வீழ்ச்சியுமாகும். சாவனரோலா மதச் சீர்திருத்தம் ஒன்றைச் செய்ததன் காரணமாகப் பெருஞ் செல்வாக்கடைந்தார். எட்டாவது சார்லசின் ஆட்சிக்குட்பட்ட நகரத்தை எவ்வித தீங்கும் அடையாமல் காப்பாற்றினார். தமது பரிசுத்த பக்திக் கொள்கையை மிகத் தீவிரமாக அமுல் நடத்த அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். அவருடைய அதிகாரத்தின் கீழ் இயங்கிய அந்த நகர ராஜ்யத்தில் பெரும்பாலான மக்கள் உலக இன்பங்களைத் துறந்து, எளிய உடையணிந்து, பஜனைப் பாட்டுகளைத் தவிர, வேறு பாட்டுக்களைப் பாடாதவர்களாய் நடந்து வந்தார்கள். சாவனரோலாவின் கொள்கை வெறி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வளர்ந்து வந்தது. கடைசியில், சிற்றின்பம் பற்றிய புத்தகங்களையும் பாட்டுக்களையும். தீய காம உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய கலைகளையும் பாடல்களையும், தேடிப்பிடித்துத் தீயிலிட்டு அழிக்கும்படி தம் சீடகோடிகளுக்கு உபதேசம் செய்தார். மாயைகளை எரிக்க வேண்டுமென்ற இந்த இயக்கத்தால், உயர்ந்த மதிப்புக்குரிய பல கலைநூல்கள் அழிந்து போயின.

அவருடைய சீர்திருத்த வேகம் இந்த அளவுக்கு முற்றியதும், யாருடனும் இணங்கிப் போகாத அகம்பாவ குணமும் சாவனரோலாவுக்கு நாட்டிலே பல எதிரிகளை உண்டாக்கிவிட்டது. நகரமக்களுக்குப் பரிசுத்த பக்திக் கொள்கையிலே அலுப்புத் தட்டியது. அந்தச் சமயத்தில் பிளாரென்சில் ஒரு கொள்ளை நோய் பரவியது. மெடிசி பரம்பரையைப் பின்பற்றுவோர் பலர் இறந்தனர். இப்படிப்பட்ட பல துன்பங்களும் ஏற்பட்டதால் அந்தப் புதிய சீர்திருத்தவாதிக்கு எதிராக எங்கும் அதிருப்தி பரவியது. அவர் தம் போதனைகளை, ஆயுத பாணிகளான காவல்வீரர்கள் புடைசூழ நடத்தவேண்டி வந்தது. கடைசியில் தங்கள் கொள்கையை மெய்ப்பிப்பதற்காக அவருடன் தீப்புகுந்து காண்பிப்பதாக அவருடைய சீடகோடிகள் அறிவித்தார்கள். இது நடைபெறவில்லை. அவரை ஏமாற்றுக்காரன் என்றும் கோழையென்றும் தூற்றிக் கொண்டு கற்களையும் தீவட்டிகளையும் கொண்டு மக்களில் ஒரு சாரார் அவருடைய மடாலயத்தைத் தாக்கிக் கலகம் விளைவித்தார்கள். பிறகு அவர் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் வரை சித்திரவதை செய்யப்பட்டுக் கடைசியில் தூக்கிலிட்டுத் தீக்கிரையாக்கும்படி தண்டனை பெற்றார். இந்தக் கொடிய தண்டனை 1498-ம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

அவரைப் பற்றி மாக்கியவெல்லி குறிப்பிடும்போது, "அவர் புதிய முறைகளைப் பாழாக்கினார். எப்படியென்றால் மக்கள் கூட்டம் அவரை நம்பாதபோது, நம்பிக்கை உடையவர்களையேனும் உறுதியாக இருக்கும்படிச் செய்ய அவருக்கு வழியில்லை. அல்லது நம்பிக்கையற்றவனிடம் நம்பிக்கையைப் புகுத்தும் வழியும் அவருக்குத் தெரியவில்லை ” என்கிறான். முடிவாக படை பலமற்ற தீர்க்கதரிசிகள் எக்காலத்திலும் அழிக்கப்பட்டேயிருக்கிறார்கள்: படை பலமுள்ள தீர்க்கதரிசிகளே வெற்றி பெற்றிருக்கிறார்கள்" என்று அந்தக் கருத்துரைக்கு முத்தாய்ப்பு வைக்கிறான்.

மாக்கியவெல்லியின் இல்லற வாழ்க்கை நன்றாக நடந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அவன் அன்புடைய மனைவியைப் பெற்றிருந்தான். அவள் தன் கணவனை மிகவும் மேலாக மதித்து வந்தாள். அவள் பெயர் மாதியெட்டாகோர்சினி என்பது. மாக்கியவெல்லி அவளை அடிக்கடி வம்புக்கிழுத்து, அவள் கோபம் கொள்வதைப் பார்த்து மகிழ்வது வழக்கமாயிருந்து வந்திருக்கிறது.

மாக்கியவெல்லிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்திருக்கிறார்கள். மகன் பிறந்தபோது மாக்கியவெல்லி அரசாங்க அலுவலாக ரோமாபுரிக்குப் போயிருந்தான். அப்போது அவன் மனைவி அவனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து அவள் அவனை எவ்வளவு மதித்தாள் என்பதும், அவனிடம் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாள் என்பதும் புலப்படுகின்றன. அவள் தன் கடிதத்தில் குழந்தையைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறாள்.

"அவன் உங்களைப் போலவே இருக்கிறான். பனியைப் போன்ற வெண்மையான உடலும், கருப்பு வெல்வெட்டைப் போன்ற தலையும், உங்களுக்கிருப்பது போலவே உடல் முழுதும் மயிர் வளர்ந்தும் இருக்கிறான். அவன் அப்படியே உங்களை உரித்து வைத்தாற்போல் இருப்பதால் அவனை அழகான பையன் என்றே சொல்லத் தோன்றுகிறது. அவனைப் பார்த்தால் ஒரு வருஷத்துப் பிள்ளை என்று சொல்லுவீர்கள்! (அவ்வளவு ஊட்டமான பிள்ளை) அவன் பிறப்பதற்கு முன்னாலேயே கண்களைத் திறந்து கொண்டு விட்டான். பிறந்தவுடன் வீட்டை மேலும் கீழுமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டான்".

மாக்கியவெல்லி 1494 -ஆம் ஆண்டு தன் இருபத்தைந்தாவது வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்டான். பொது வாழ்வில் புகுந்த நான்கே ஆண்டுகளில் அவன் குடியரசு அரசாங்கத்தின் செயலாளன் (Secretary) ஆகவும், இரண்டாவது ஆலோசனைத் தலைவன் ஆகவும் வந்து விட்டான். 1498-ஆம் ஆண்டில் ஏற்ற இந்தப் பதவியில் 1512ஆம் ஆண்டுவரை, பதினைந்து ஆண்டுகள் நிலைத்து இருந்திருக்கிறான். இதற்கிடையே அவன் இத்தாலியில் உள்ள சிறிய ராஜ சபைகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள பல ராஜ்யத் தலைநகரங்களுக்கும் பிளாரென்ஸ் ராஜ்யத்தின் தூதனாகப் போயிருக்கிறான். அவனுடைய திறமையால் பிளாரென்ஸ் குடியரசு அரசாங்கம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறது. அவனும், இப்படிப் பல தேசங்களுக்கும் போய்வந்ததன் பலனாக அரசியலைப் பற்றியும், ஐரோப்பிய நாடுகளைப் பற்றியும் நன்றாக அறிந்து அவற்றைப் பற்றித் தனக்குள் ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. 1503-ஆம் ஆண்டு ரோமாக்னாகோமகன் சீசர் போர்ஜியாவிடம் தூது சென்று திரும்பியபோது. அவன் தன்னுடைய ஆர்வத்தை இராணுவத் துறையில் செலுத்த ஆரம்பித்தான். இராணுவத் துறையில் தன் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்ட பிறகு, 1506ஆம் ஆண்டில் அவனுக்குப் புதிய பதவியொன்றும் வழங்கப்பட்டது.

பிளாரென்ஸ் ராஜ்யத்திற்காகவென்று ஒரு மக்கள் படையமைப்பை ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட ஒரு விசேஷ இலாகாவிற்கு அவன் செயலாளராக நியமிக்கப்பட்டான். அடுத்த சில ஆண்டுகளில் அவன் மிகுந்த செல்வாக்கையடைந்தான். வெற்றிப்படியின் உச்சிக்கே சென்றுவிட்டான் என்று கூடக் கூறலாம். ஆனால், அதே சமயம் பல எதிரிகளையும் உண்டாக்கிக் கொண்டான். 1512-ஆம் ஆண்டில் பழைய ராஜ வமிசத்தினரான மெடிசி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திற்கு நகர ராஜ்யத்தின் ஆட்சியுரிமை திரும்பவும் உட்பட்டபோது, மாக்கியவெல்லி பதவியினின்றும் நீக்கப்பட்டான்.

மெடிசி குடும்பத்தினருக்கு எதிராக, அவர்கள் அரசுரிமையைக் கவிழ்ப்பதற்காக ஒரு சதி நடந்தது. அந்தச் சதியில் கலந்து கொண்டவர்களில் மாக்கியவெல்லியின் பெயரையும் அவனுடைய எதிரிகள் சேர்த்து விட்டார்கள். குடியரசுவாதிகளின் சதிக்கு மாக்கியவெல்லி உடந்தைக்காரனாகவோ அல்லது அனுதாபியாகவோ இருக்கக் கூடுமென்று சந்தேகப்பட்டார்கள். அதற்காக அவனைப் பிடித்து 1513-ஆம் ஆண்டில் ஒரு விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் அவன் குற்றமற்றவனென்று விடுவிக்கப்பட்டான்.

மாக்கியவெல்லி தன் பதவியிலிருந்து விலக்கப்பட்டதும், பிளாரென்ஸிலிருந்து பனிரெண்டு மைல் தூரத்தில் இருந்த சான்காசியானோ என்று ஊருக்கருகில் இருந்த தன் பண்ணைக்குச் சென்று விட்டான். அதுவரையில் அரசாங்கத்திலிருந்து வருவாய் வந்தது. அவனுடைய வாழ்க்கை எவ்விதமான கஷ்டமுமின்றிக் கழிந்தது. ஆனால், பதவியைத் துறந்து பண்ணைக்குச் சென்ற பிறகோ அவனை வறுமை பிடுங்கித் தின்ன ஆரம்பித்து விட்டது. தாங்க முடியாத வறுமையில் அவனும் அவன் குடும்பத்தினரும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.

அவன் தன் வாழ்க்கை நிலையை விளக்கி ரோமாபுரியில் தூதராயிருந்த அவனுடைய நண்பர் பிரான்செஸ்கோ விட்டோரி என்பவருக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதியிருக்கிறான். அந்தக் கடிதங்களிலிருந்து அவனுடைய தனிமைக் காலத்து அன்றாட நிகழ்ச்சிகளையும், வறுமையின் படப்பிடிப்பையும் அவன் கருத்தில் தோன்றிய எண்ணங்களையும் நாம் காண முடிகிறது.

"சூரியன் தோன்றும் பொழுதே நான் எழுந்து விடுவேன், எனக்குச் சொந்தமான சிறு காட்டுக்குப் போவேன். அங்கேயுள்ள மரங்களை வெட்டும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். அங்கு மரம் வெட்டியவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, நீரோடைப் பக்கமாகப் போவேன். நீரோடையை விட்டு, தோப்புப் பக்கமாகச் செல்வேன். என்னுடைய மேல் சட்டைக்கு அடியில் நான் வழக்கமாகக் கொண்டு செல்லக்கூடிய கவிதை நூலை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பிப்பேன். பெரும்பாலும் அவை மகாகவிகள் தாந்தே, பெட்ரியார்ச் ஆகியோரின் நூல்களாகவோ அல்லது கவிடி புல்லஸ், ஓவிட் ஆகியவர்களின் நூல்களாகவோ இருக்கும். அவர்களுடைய ஆசைக்கனவுகளையும், அவர்களுடைய காதற்கதைகளையும் படித்து, அவற்றை என்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே நீரோடைப்பக்கமாக உலவிக் கொண்டிருப்பேன்”.

இது மாக்கியவெல்லி தன் நாட்டு வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்பகாலத்து நிகழ்ச்சிகளிலே ஒன்று.

காலை நிகழ்ச்சி இது. மாலை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கலாம்.

"சாயங்காலம் வந்தவுடன் நான் வீட்டிற்குத் திரும்பிச் சென்று என் படிக்கும் அறைக்குள் நுழைவேன். அப்படி நுழையுமுன், நான் தினமும் பகலில் உடுத்திக் கொண்டிருக்கும் அழுக்கும் தூசியும் நிறைந்த ஆடைகளைக் களைந்து விட்டு, அரசாங்க உடைகளை அணிந்து கொண்டு, முன்னோர்களான அந்தப் பெரியோர்களின் ஆஸ்தானத்திற்குள்ளே {புத்தக சாலைக்குள்) நுழைவேன். அங்கே அவர்கள் என்னை அன்போடு வரவேற்பார்கள். அங்கே எனக்கே சொந்தமான உணவுகளை நான் உண்பேன்; எவற்றை உட்கொள்ளுவதற்காக நான் பிறந்திருக்கிறேனோ அவற்றை நான் உண்பேன். பிறகு நான் ஊக்கத்துடன் அவர்களோடு உரையாடுவேன். அவர்களுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் என்னவென்று கேட்பேன். அவர்கள் எனக்கு மரியாதை காட்டி விருப்பத்தோடு என் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். அந்த நான்கு மணி நேரமும் நான் என் மனக்கவலைகளையெல்லாம் மறந்திருப்பேன், அந்த நேரத்தில் நான் என் வறுமையைக் கண்டு பயப்படமாட்டேன். சாவும் என்னைப் பயமுறுத்தாது. நான் அவர்களோடு முழுக்க முழுக்க ஒன்றி விடுவேன்.”

மாக்கியவெல்லி, பழைய காலத்து நூல்களைப் படிப்பதைத்தான் இப்படிக் கற்பனையாகத் தம் நண்பருக்கு எழுதியிருக்கிறான். இவையெல்லாம் அவன் வறுமையின் ஆரம்பகட்டம். வறுமையின் உச்சக்கட்டத்திலே அவன் தன் நண்பருக்கு எழுதியுள்ள கடிதம் மிகவும் உருக்கமானது. "என் தொண்டின் பெருமையை அறியக் கூடியவர் யாரும் இல்லையே!" என்று வருந்துகிறான். "நான் எதற்காவது பயன்படுவேன் என்று நினைக்கக் கூடியவர் இல்லையே!” என்று ஏங்குகிறான்.

"என் வேலையின் சிறப்பை நினைத்துப் பார்க்கக் கூடியவர்கள் யாருமில்லை. நான் எதற்காவது பயன்படக் கூடியவன் என்று நினைப்பவர்களும் இல்லை. இப்படிப்பட்ட பேன் கூட்டத்தினிடையேதான் நான் தொடர்ந்து இருந்து வர வேண்டியிருக்கிறது. ஆனால் இதே நிலையில் நான் நீடித்து இருக்க முடியாது. என் கைப்பொருளெல்லாம் பெரும்பாலும் செலவழிந்து போய்விட்டது. எல்லாம்வல்ல அந்த இறைவன் என்னிடம் கருணைகாட்டி ஏதாவது செய்யவில்லையானால் நான் என்றாவது ஒருநாள் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட வேண்டித்தான் நேரிடும். என்னால் எதுவும் நல்லபிழைப்பாகப் பிழைக்க முடியவில்லையென்றால் எவனாவது காவல் வீரனுக்குக் கடிதம் வாசிப்பவனாகவோ அல்லது கணக்கு எழுதிக்கொடுத்தோ தான் காலத்தைக் கழிக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்காவது தொலையிலுள்ள இடத்திற்குச் சென்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான். இங்குள்ளவர்கள் நான் செத்துப்போய் விட்டதாக நினைத்துக் கொள்ளட்டும். நான் செலவாளியாக இருப்பதனால் இங்குள்ளவர்களுக்குப் பெரும் பாரமாக இருக்கிறேன். என்னால் செலவழிக்காமலும் இருக்க முடியவில்லை.

“நீங்கள் எனக்காக ஏதாவது சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இவ்வளவையும் சொல்லவில்லை. என் மனத்தில் இருக்கும் பாரத்தை இறக்குவதற்காகவே சொல்லுகிறேன். மறுபடியும் நான் உங்களிடம் இந்த விஷயங்களைக் கூறமாட்டேன்”

இந்தக் கடிதத்திலிருந்து அவன் கடைசி நாட்களில் பட்ட மன வேதனையை நாம் அப்படியே தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த வறுமைக் காலத்திலே தான் மாக்கியவெல்லி தன் கவிதைகளையும் இன்பியல் நாடகங்களையும் எழுதினான். மாக்கியவெல்லி எழுதிய கவிதைகள் அப்படியொன்றும் உயர்ந்தவை அல்ல. ஆனால், அவன் தான் ஒரு கவிஞன் என்று பெயர் எடுப்பதிலேதான் மிகவும் ஆசையுள்ளவனாக இருந்தான்.

பிரான்செஸ்கோ டீ சாஸ்டிஸ் என்ற இத்தாலிய இலக்கிய விமரிசகன். பத்தொன்பதாவது நூற்றாண்டிலே மிகப் பிரசித்தி பெற்று விளங்கியவன். அவன் மாக்கியவெல்லியைப் பற்றித் தான் எழுதியுள்ள கட்டுரையின் ஆரம்பத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான். ஓர்லாண்டோ பியூரியோசோ என்ற கவிதை நூல் வெளிவந்த சமயத்தில், மாக்கியவெல்லி ரோமில்தான் இருந்தான்.

கவிஞர் அரியோஸ்டோ எழுதியுள்ள அந்தக் கவிதை நூலின் கடைசிக் காண்டத்தில் இத்தாலியக் கவிஞர்களின் பெரிய பட்டியல் ஒன்றைச் சேர்த்திருக்கிறார். அதில் மாக்கியவெல்லியின் பெயரைச் சேர்க்காமல் விட்டுவிட்டது பற்றி மாக்கியவெல்லி குறை கூறினான். அந்தக் காலத்தில் ஏன் எல்லாக் காலத்திற்குமே. மிக ஆற்றல் வாய்ந்த அரசியல் சிந்தனையாளனான மாக்கியவெல்லி தன் அரசியல் நூல்களைக் காட்டிலும் கவிதை நூல்களைக் கொண்டே பெருமையடைய வேண்டுமென்று எண்ணியிருந்தான்.

மாக்கியவெல்லி ரோமிலிருந்து பிளாரென்சுக்கு வந்த பிறகு இதைக் குறித்துத் தன் நண்பரும் கவிஞருமான லோடோ விக்சோ அலாமானிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். அந்தக் கடிதம் கீழ்வருமாறு:

கவிஞர் லோடோவிக்சோ அலாமானி அவர்களுக்கு,

பிளாரென்ஸ், டிசம்பர் 17, 1517.

என் மதிப்பிற்குரிய லோடோவிக்சோ,

"கடந்த சில நாட்களாக நான் கவிஞர் அரியோஸ்டோவின் ஓர்லாண்டோ பியூரியோசோ என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் மொத்தத்தில் அது ஓர் அழகிய கவிதையே. ஒரு சில இடங்களில் மட்டும் அது முற்றும் பாராட்டக் கூடியதாயில்லை. நீங்கள் அவரை அங்கு ரோமாபுரியில் சந்தித்தால், என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். என்னுடைய ஒரே ஒரு வருத்தம், அவர் தம்முடைய கவிதையில் எல்லாக் கவிஞர்களையும் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு என்னை மட்டும் ஒன்றுமில்லாதவன் போல் விட்டு விட்டாரே என்பதுதான், என்பதையும் தெரிவியுங்கள். ஓர்லாண்டோ கவிதை நூலில் அவர் எனக்குச் செய்த இந்தக் காரியத்தை என்னுடைய நூலில் அவருக்குச் செய்யமாட்டேன். இந்த விஷயத்தில் நான் கவனமாக இருப்பேன்”.

மாக்கியவெல்லி, கவிஞர் அரியோஸ்டோ தன்னைச் சிறப்பிக்காததற்காக வருத்தப்படுகிறானே தவிர, அவரைச் சிறப்பாகவே மதித்துப் பேசுகிறான் என்பது அவனுடைய இந்தக் கடிதத்திலிருந்து தெரிகிறது.

அவனுடைய இன்பியல் நாடகங்களிலே மிகச் சிறந்தது 'மன்ட்ர கோலா' என்ற நூல்.

ஆரம்பத்தில் கவிதைகளும் நாடகங்களும் எழுதி வந்த மாக்கியவெல்லி பிறகு நூல் எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டான். அவன் வரும்படியில்லாமல் வறுமையில் உழன்று கொண்டிருந்த காலத்தில் மூன்று பெரிய நூல்களை எழுதி முடித்தான். அவை லீவியின் புத்தகங்களைப் பற்றி ஆராய்ச்சி, அரசன், போர்க்கலை என்பனவாகும்.

'அரசன்' என்னும் நூலை எழுதிய போது அதை அப்போது பிளாரென்ஸ் நகர ராஜ்யத்தின் அரசராயிருந்த மெடிசி குடும்பத்தைச் சேர்ந்த லாரென்சோவுக்குக் காணிக்கை செலுத்துவதற்காக ஒரு முன்னுரையும் . கூட எழுதியிருக்கிறான். அதைக் காணிக்கையாகச் செலுத்தினானா இல்லையா என்பது சரியாகத் தெரியவில்லை. பெரும்பாலும் காணிக்கை செலுத்தியிருக்க வேண்டும் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் மெடிசி அரசாங்கத்தினர் இவனுடைய வறுமையைக் கண்டு மனமிரங்கி ஏதாவது வேலை கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்பதற்காக, வருடாந்தர சம்பளமாக ஒரு சொற்பதொகையைப் பேசி பிளாரென்ஸ் நகர சரித்திரத்தை எழுதும்படி இவனைப் பணித்தார்கள். ராஜ்ய நிர்வாகத்தைச் சமாளிப்பது கஷ்டமாயிருந்த சமயத்தில், எப்படிப்பட்ட கொள்கையைப் பின்பற்ற வேண்டுமென்று இவனுடைய ஆலோசனையையும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

குடியரசு முறையில் அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று அவன் யோசனை கூறினான். அதற்காக ஓர் அரசியலமைப்புத் திட்டத்தையும் வகுத்தான். ஆனால், அவனுடைய யோசனை ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை; அவனுடைய திட்டம் அமுலுக்கு வரவுமில்லை.

1526-ஆம் ஆண்டில் பிளாரென்ஸ் நகரின் கோட்டை நிர்மாணத்தை மேற்பார்க்கும் வேலை அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

1527-ஆம் ஆண்டில் குடியரசு வாதிகளின் கை மேலோங்கியது. முடியரசு ஆதிக்கத்திலிருந்து பிளாரென்ஸ் விடுதலையுற்றது. குடியரசு வாதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மாக்கியவெல்லியைத் திரும்பவும் அரசாங்கச் செயலாளர் பதவியில் நியமிக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்தத் தீர்மானம் ஆதரிப்பாரில்லாமல் தோற்றுப் போய்விட்டது.

இந்நிகழ்ச்சி நடந்த சில வாரங்களுக்குப் பிறகு 1527ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதியன்று, பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளனான நிக்கோலோ மாக்கியவெல்லி வயிற்று வலியின் காரணமாகத் தன் வாழ்வை நீத்து விட்டான். அவனுடைய குடும்பத்துக்கு அவன் விட்டுச்சென்றது வறுமை ஒன்றுதான். அவன் சாவைப் பற்றி அவன் மகன் தன் நண்பனான பிரான்செஸ்கோ நெல்லோ என்பவனுக்கு சுருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறான்.

பீசா, ஜூன் 22, 1527

என் அன்பு மிகுந்த பிரான்செஸ்கோ,

என் தந்தை நிக்கோலோ இந்த 22-ம் தேதியன்று இறந்து போனார் என்ற செய்தியை உனக்குச் சொல்ல வேண்டியிருப்பதை முன்னிட்டு என்னால் அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. 20ம் தேதியன்று - அவர் குடித்த ஒரு மருந்து உண்டாக்கிவிட்ட வயிற்று வலி அவர் உயிரைக் குடித்து விட்டது. கடைசிவரை அவர் கூடவே இருந்த சகோதரர் மாத்யூவை அவர் தம் பாவமன்னிப்புப் பிரார்த்தனையைக் கேட்க அனுமதித்தார். எங்கள் தந்தை எங்களை மிகப் பயங்கரமான வறுமையில் விட்டுவிட்டுப் போய்விட்டார். இது உனக்குத் தெரிந்ததே. நீ இந்த வழியாகத் திரும்பி வரும்பொழுது நான் உன்னிடம் சொல்லவேண்டியது ஏராளமாயிருக்கிறது. இப்பொழுது. நான் மிக அவசரமான கட்டத்தில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் நான் சொல்லப் போவதில்லை. என் நல்வாழ்த்துக்கள்

உன் உறவினன்;
பியரோ மாக்கியவெல்லி.

நிக்கோலோ மாக்கியவெல்லிக்குப் பிறகு அவனுடைய குடும்பத்தில் அல்லது பரம்பரையில் யாரும் அவனைப் போல் சிறந்து விளங்கவில்லை.

உலகத்துப் பேரறிவாளிகள் பலர் தாங்கள் இறந்தபோது, தங்கள் ஆராய்ச்சியின் பயனாக விளைந்த கருத்துரைகளை உலகத்துக்குக் கொடுத்து விட்டுப் போனார்கள். ஆனால் தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கள் திறனறிவையும் கொடுத்து விட்டுப் போனதில்லை; அவர்கள் வாழ்வதற்காகப் பொருளும் வைத்து விட்டுப் போனதில்லை.

எத்தனையோ திறனறிவாளர்களின் பிள்ளைகளின் கதி இப்படித்தான் முடிந்திருக்கிறது. இதற்கு மாக்கியவெல்லியின் மகன் விதிவிலக்கல்ல!