சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/005-010

விக்கிமூலம் இலிருந்து


52. மகன் தந்தைக்காற்றும் கடன்

நோயாளி ஒருவருக்கு மருத்துவம் செய்ய மருத்துவர் ஒருவர் அழைக்கப்பட்டார். ஆய்வுக்குப் பின், நிலமை மிகவும் இழிநிலையில் இருப்பதைக் கண்டார் மருத்துவர். நோயாளியின் மகனின் தொடையிலிருந்து ஒரு துண்டு தசையினை வெட்டியெடுத்து நோயாளிக்கு உண்பதற்குக் கொடுத்தால்தான் குணமாகும் என்றார் மருத்துவர்.

நோயாளியின் மகன் இதோ தசையினை விரைவில் கொண்டு வருகிறேன் என்றான்.



மருத்துவர் சென்றபின், கத்தியை எடுத்துக் கொண்டு நோயாளியின் மகன் வெளியில் சென்றான். கோடைக்காலமானதால் வாசலின் வெளியே ஒரு மனிதன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த மனிதனின் தொடையிலிருந்து ஒரு துண்டு தசையினை வெட்டியெடுத்தான்.

பயந்து எழுந்த அந்த மனிதன் வேதனையில் கதறினான். கதறிய அந்த மனிதனைப் பார்த்து, அழாதே என்று தன் கைகளை அசைத்துச் செய்கை செய்து காண்பித்தான். பின்னர் அவன் சொன்னான், “உனது தசை சாகப்போகிற ஒரு தந்தையின் உயிரைக் காக்கப்போகிறது. ஒரு தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடமையின் இன்றியமையாமையை நீ அறிய மாட்டாயா?” என்று.


53. வேதனையிலிருந்து விடுபெற வழி

சீழ்க் கட்டி வளர்ந்து கால் ஒன்று புற்றுக்கழலை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். ஒரு நாள் அவர் தன் வீட்டுச் சுவரில் துளை ஒன்றினை ஏற்படுத்தி அதன் வழியாகப் பாதிக்கப்பட்ட காலை வீட்டை விட்டு வெளியே தெருவில் நீட்டிக் கொண்டிருந்தார். “ஏன்?” இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்ட போது தன் புருவத்தை உயர்த்தி அவர் சொன்னார், “என்னால் இந்த நோயின் படும் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நோய் என்னை விட்டு விலகிப் போகவே இவ்வாறு காலை வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று.

54. தவறான செயல்களால் ஏற்பட்ட விளைவு

போலி மருத்துவர் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். ஆனால் தன் மருத்துவத்தினால் மரித்துப்போன ஒரு குழந்தைக்கு ஈடாகத் தன் மகனை அவர் கொடுக்க வேண்டியது நேரிட்டது. தன் கவனக் குறைவினால் இறந்து போன மற்றொரு குழந்தைக்காகவும் தன் மகளையும் ஈடாகக் கொடுக்க வேண்டியது நேர்ந்தது. இதனால் வேதனையுற்ற அந்த மருத்துவர் தம் மனைவியுடன் பிள்ளைகள் இருவரையும் பிரிந்து மனக் கவலையுடன் வாழ்ந்து வந்தார்.



ஒருநாள் மருத்துவ ஆய்வினைப் பெறுவதற்காக ஒரு மனிதன் அவர் வீட்டுக் கதவினைத் தட்டினான். ‘நோயாளி யார்?’ என்று மருத்துவர் கேட்டார். ‘என் மனைவி’ என்றார் வந்தவன்.

இதனைக் கேட்ட மருத்துவர் விழிகளில் நீர் ததும்ப “ஆ! என்ன வேதனையிது. உன் மீது யாரோ ஒருவர் மையல் கொண்டுவிட்டார்” என்று மருத்துவர் தம் மனைவியைப் பார்த்துப் பதறிச் சொன்னார்.

55. பழக்கத்தின் விளைவு

எவ்வளவு குறைவான அளவு குடித்தாலும், மிதமிஞ்சிய குடியில் இருப்பது போல் பாவனை செய்து கீழ்த் தரமான செயல்களைச் செய்து வந்தான் குடிகாரன் ஒருவன். ஒருநாள் அவன் தன் மனைவியிடம் மது கேட்டான். அவன் செயலைக் கண்டு ஏற்கனவே வெறுப்புற்றிருந்த அவன் மனைவி சாராயத்துக்குப் பதிலாக சாயத் தண்ணீரை ஊற்றிக் கொடுத்தாள். அவனும் அதைக் குடித்து முடித்தான். சற்று நேரத்துக்குப் பின் போதை தலைகேறியவன் போல் நடிக்கத் தொடங்கினான். வியப்புற்ற மனைவி வேதனையிலும் வெறுப்பிலும் அவனை நன்றாகத் திட்டித் தீர்த்தாள். பின்னர் அவனிடம் “நான் உனக்குத் தந்தது சாயத் தண்ணீர் தான்; சாரயம் அன்று. பின் எப்படி உனக்குப் போதை ஏறும்; தாறு மாறாய் நடக்க முடியும்?” என்று கேட்டாள். அவனோ பொறுமையாக “நான் அப்போதே நினைத்தேன் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று ஆகவே தான் இன்னும் எனக்குப் போதை குறையவில்லை” என்றான்.

56. அதை அகற்ற ஆய்வுரை

செல்வன் ஒருவனுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டது. கடினமான முயற்சிக்கும் (உழைப்பிற்கு) பின் அது வெளியேற்றப்பட்டது. அவர்படும் வேதனையைக் கவனித்து வந்த ஒருவர் சொன்னார், “அன்றாடம் அவற்றை அகற்ற நீங்கள் அல்லல் படுகின்றீர்கள் ஏன்? உங்களிடம்தான் செல்வம் இருக்கிறதே ஒரு வேலைக்காரனை நியமித்து அந்த வேலையைச் செய்யச் சொல்லக்கூடாதா?” என்று ஆய்வுரை வழங்கினார்.

57. கழுத்துக்குமேல் துண்டிக்க
வேண்டுதல்

கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவன் தண்டனையை நிறைவேற்ற வந்த கொலையாளியிடம் “நான் சாகப்போகிறேன். அதை நீங்கள் செய்யுங்கள்; ஆனால் உங்கள் கொலை வாள் என் கழுத்தில் மேல் பகுதியில் விழும்படி துண்டியுங்கள்” என்று வேண்டிக்கொண்டான். ‘ஏன்?’ என்று கேட்டபோது அவன்

சொன்னான், “என் கழுத்தின் கீழ்பகுதியில் கொப்பளம் (புண்) ஒன்று உள்ளது. அதன் மீது வாள்முனைப் பட்டால் வேதனை அதிகமாகும் அல்லவா” என்று. 

58. தலைநகரத்தில் மட்டுமே
வட்ட நிலவு

தலைநகரைச் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய இளைஞன் ஒருவன் தன் தந்தையிடம் எப்போதும் தலைநகரின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வந்தான். ஒருநாள் மாலையில் தந்தையும் மகனும் நிலவொளியில் பொறுமையாய் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியாய் சென்ற வழிப்போக்கன் “ஆ! என்ன அழகான நிலவு இது!” என்று விண்ணை நோக்கிய வண்ணம் நிலவை வியந்து சொன்னான். இதனைக் கேட்ட மகன் சொன்னான் “இது என்ன அழகு தலைநகரத்தில் உள்ள நிலவு இதனினும் அழகிற் சிறந்தது” என்று.

தலைநகர் பெருமையைக் கேட்டுக் கேட்டுக் கிறுகிறுத்தத் தந்தை “முட்டாளே, வானில் உலவிவரும் நிலவு எங்கும் ஒன்றுதான். அது எப்படி தலைநகரத்து நிலவு இதனினும் அழகிற் சிறந்ததாயிருக்க முடியும்?” என்று கேட்டு ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார். அறைபட்டு அதிர்ந்த மகன் தேம்பித் தேம்பி அழுதவண்ணம் தன் தந்தையிடம் “தலைநகரில் நீங்கள் கொடுத்த அடி இதனினும் மிகக் கடினமாக இருந்ததே”என்றான்.

59. மகனின் பெருமை

தந்தையும் மகனும் ஒருநாள் நகரத்து வீதி வழியே உலா வந்தனர். பாதையில் சென்ற ஒருவர் தந்தையை

அணுகி “சிறுவன் யார்?” என்று கேட்டார். தந்தை சொன்னார் “அரசுக்கு மிகவும் வேண்டப்பட்ட உள்துறை அமைச்சர் ஒருவரின் குடும்பத்தின் நேரிடை வழி வந்த ஒன்பதாவது தலைமுறைப் பேரனின் மருமகனாக வாய்த்த இவன் என் மகன் ஆவான்” என்றார்.
60. பட்ட கடன் அத்தனையும்
மறுபிறவியில்

செல்வர் ஒருவரிடம் மிகப்பலர் கடன்பட்டிருந்தனர். தம்மிடம் கடன்பட்ட அனைவரையும் அழைத்து, மறுபிறவியில் தற்போது வாங்கிய கடனை தருவதாக வாக்களித்தால் இப்பிறவியில் அனைவரின் கடனையும் தள்ளுபடி

செய்வதாகச் சொன்னார் அந்தச்செல்வர். இதனைக் கேட்டு அவரிடம் கடன் பெற்றோர் அனைவரும் அகமகிழ்ந்தனர்.

முதலாம் ஆள் “அடுத்தப் பிறவியில் நான் குதிரையாகத் தோன்றி, உங்களைச் சுமந்து சென்று, நான்பட்ட கடனைத் தீர்க்கிறேன்” என்று வாக்களித்தான். உடனே செல்வர் அவன் கடன் ஆவணத்தை எதிரில் நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கினார்.

இரண்டாம் ஆள் சொன்னான் “இப்பிறவியில் நான் உங்களுக்குப்பட்ட பெரும் கடனுக்காக, மறுபிறவியில் காளையாய்ப் பிறந்து, உங்களுக்கு உழைத்து உழைத்து மடிவேன்” என்று. அவனது கடன் ஆவணத்தையும் நெருப்பிலிட்டார் செல்வர்.

இவ்வாறு ஒவ்வொருவராக வாக்களித்தனர். இறுதியில் ஒருவன் “பட்ட கடனைத் தீர்க்க அடுத்தப் பிறவியில் நான் உங்கள் தந்தையாகப் பிறக்க விரும்புகிறேன்” என்றான். இதனைக் கேட்டுத் திடுக்கிட்ட செல்வர். உனக்கு எவ்வளவு ஆணவம் இருந்தால் இப்படிக் கூறுவாய் நீ, வாங்கிய கடனோ அளவுக்கதிகமானது. என்னை அவமானப்படுத்தவே நீ முயல்கிறாய் என்று கூறி அவனை ஓங்கி அறையச் சென்றார். உடனே அந்த ஆள், “ஐயா, சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள். நான் உங்களுக்கு அதிகமாகக் கடன்பட்டிருப்பது உண்மைதான். மற்றவர்களைப் போல் குதிரையாகவோ காளையாகவோ பிறந்து உங்களுக்கு உழைத்து என் கடனைத் தீர்க்க முடியாது. எனவேதான் உங்கள் தந்தையாகத் தோன்றி, சிக்கனமாக வாழ்ந்து, செல்வத்தைச் சேமித்து ஒன்றையும் நுகராமல், வீடு, வாசல், நிலபுலம், காடு, கரை என்று ஏராளமாகத் தேடி வைத்து விட்டு நான் சாவேன். இப்படிச் செய்வதால் மட்டுமே நான் பட்ட முழுக்கடனையும் உங்களுக்கு நான் திரும்பவும் மறு பிறவியில் அடைக்க முடியும்” என்று விளக்கம் தந்தான். விளக்கம் கேட்டுச் சிந்தை குளிர்ந்தார் செல்வர்.